search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில்
    X
    ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில்

    ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா அடுத்த மாதம் 13-ந்தேதி நடக்கிறது

    மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைவதையொட்டி ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் அடுத்த மாதம் 13-ந் தேதி குருப்பெயர்ச்சி விழா நடக்கிறது.
    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. நவக்கிரகங்களில் குருபகவானுக்குரிய கோவிலான இந்த கோவில் திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற தலமாகும். குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் நாளில் ஆலங்குடி குருபகவான் கோவிலில் குருபெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெறும்.

    இந்த விழாவை முன்னிட்டு குருபகவானுக்கு லட்சார்ச்சனை விழாவும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு அடுத்த மாதம் (நவம்பர்) 13-ந் தேதி (சனிக்கிழமை) குரு பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். குருபெயர்ச்சியை முன்னிட்டு ஆலங்குடி குருபகவான் கோவிலில் குருபெயர்ச்சி விழாவும், லட்சார்ச்சனையும் நடக்கிறது. ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் மற்றும் இதர ராசிக்காரர்கள் லட்சார்ச்சனையில் பங்கேற்று பரிகாரம் செய்து கொள்ளலாம்.

    லட்சார்ச்சனை கட்டணம் ரூ.400 ஆகும். லட்சார்ச்சனை பிரசாதமாக குருபகவான் உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளி டாலர் வழங்கப்படும். காசோலைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. வரைவோலை அல்லது மணியார்டர் மூலம் தொகை அனுப்புபவர்கள் உதவி ஆணையர், செயல்அலுவலர், ஆபத்சகாயேஸ்வரர் கோவில், ஆலங்குடி, வலங்கைமான் வட்டம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

    வரைவோலை எடுப்போர் கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கி கிளையில் மாற்றத்தக்க வகையில் எடுத்து அனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இந்த தகவலை கோவில் தக்காரும் உதவி ஆணையருமான செ.சிவராம்குமார் மற்றும் உதவி ஆணையரும் செயல் அலுவலருமான பி.தமிழ்ச்செல்வி ஆகியோர் தெரிவித்தனர்.
    Next Story
    ×