search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஊஞ்சல் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்
    X
    ஊஞ்சல் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்

    நவராத்திரி விழா: ஊஞ்சல் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவின் 2-ம் நாளான நேற்று மீனாட்சி அம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் கொலு வீற்றிருந்தார்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் மீனாட்சி அம்மனுக்கு என்று தனியாக ஆடி முளைக்கொட்டு, நவராத்திரி விழா, ஐப்பசி கோலாட்ட உற்சவ விழா போன்ற திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை. இந்த ஆண்டு நவராத்திரி உற்சவ விழா 17-ம் தொடங்கியது. இந்த விழா வருகிற 15-ந் தேதி வரை நடக்கிறது.

    நவராத்திரி திருவிழா நாட்களில் தினசரி மாலை 6 மணி இரவு 8.30 மணி வரை மூலஸ்தான சன்னதியில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் ஆகி கல்பபூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற விஷேச பூஜைகள் நடைபெறும். அந்த நேரத்தில் அர்ச்சனைகள் மூலஸ்தான அம்மனுக்கு நடத்தப்படாது. எனவே பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனை மட்டும் தரிசித்து சென்றனர். மேலும் அர்ச்சனை கொலு மண்டபத்தில் எழுந்தருளும் அலங்கார அம்மனுக்கு செய்யப்பட்டது.

    நவராத்திரி திருவிழாவையொட்டி அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் உற்சவர் மீனாட்சி அம்மன் எழுந்தருளி ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் காட்சி தருவார்.

    நவராத்திரி விழாவின் 2-ம் நாளான நேற்று மீனாட்சி அம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் கொலு வீற்றிருந்த காட்சி.

    அரசு அறிவித்தப்படி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆனால் வழக்கம் போல் கோவிலுக்குள் அம்மனுக்கு அபிஷேக அலங்காரம் நடைபெறும். கோவில் திறந்து பக்தர்களை அனுமதிக்கும் நாட்களில் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலஸ்தான அம்மன் அலங்காரத்தை பக்தர்கள் நேரில் தரிசனம் செய்யலாம்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×