என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    கொரோனா பரவல் காரணமாக மலை மாதேஸ்வரா கோவிலில் பக்தர்களுக்கான அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டு இருந்தது. கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
    சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா மாதேஸ்வரன் மலையில் பிரசித்தி பெற்ற மலை மாதேஸ்வரா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்தெல்லாம் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். கொரோனா பரவல் காரணமாக மலை மாதேஸ்வரா கோவிலில் பக்தர்களுக்கான அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டு இருந்தது. கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதற்கிடையே மலை மாதேஸ்வரா கோவிலில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு முடி காணிக்கை, லட்டு பிரசாதம் உள்ளிட்ட சேவைகள் ஆரம்பமாகுமா என்று பக்தர்களிடையே கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக சாம்ராஜ்நகர் மாவட்ட கலெக்டர் எம்.ஆர்.ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

    சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பிரசித்தி பெற்ற மலை மாதேஸ்வரா கோவிலில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அதன்படி கோவிலில் அன்னதானம், முடிகாணிக்கை, பக்தர்கள் வேண்டி இழுக்கும் ருத்ராக்‌ஷி தேர் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் இன்று(நேற்று) முதல் ஆரம்பமாகிறது. மேலும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வினியோகிக்கிப்படும். ஆனாலும் பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
    காணிப்பாக்கம் விநாயகர் கோவிலில் 4 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    சித்தூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில். இக்கோவிலுக்கு சித்தூர் மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், கர்நாடகா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.

    நேற்று புரட்டாசி மாதம் கடைசி நாள் என்பதாலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அதிகாலை 4 மணி முதலே வந்து நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அதிகாலை 4.30 மணியளவில் மூலவர் விநாயகருக்கு அபிஷேகம், கல்யாண உற்சவம் நடந்தது. இதையடுத்து 4 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    பிரதோஷ நாளில் சிவன் கோவிலுக்கு சென்று நந்திதேவருக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையைக் கண்ணார தரிசித்துப் பிரார்த்தனை செய்தால் இல்லத்தில் சுபிட்சம் உண்டாகும்.
    ஓம் அன்பின் வடிவே போற்றி
    ஓம் அறத்தின் உருவே போற்றி
    ஓம் அகிலத்தைக் காப்பாய் போற்றி
    ஓம் அரனுக்குக் காவலனே போற்றி
    ஓம் அரியாய்வந்து அமர்ந்தவனே போற்றி
    ஓம் அம்பலக் கூத்தனே போற்றி
    ஓம் ஆலயத்தின் முன் இருப்பாய் போற்றி
    ஓம் இருளை ஒழிப்பவனே போற்றி
    ஓம் இடபமே போற்றி
    ஓம் இடர்களைத் தடுப்பவனே போற்றி

    ஓம் இகாபரசுகம் அளிப்பவனே போற்றி
    ஓம் ஈகை உடையவனே போற்றி
    ஓம் உலக ரட்சகனே போற்றி
    ஓம் உபதேச காரணனே போற்றி
    ஓம் ஊக்க முடையவனே போற்றி
    ஓம் எருது உருவம் கொண்டவனே போற்றி
    ஓம் எங்களுக்கு வரம் தருபவனே போற்றி
    ஓம் ஏவல்களை ஒழித்தவனே போற்றி
    ஓம் ஐயன் பால் அமர்ந்த வனே போற்றி
    ஓம் ஒப்பில்லாதவனே போற்றி

    ஓம் ஓங்கார வடிவானவனே போற்றி
    ஓம் ஒளடதமாய் இருப்பவனே போற்றி
    ஓம் கணநாயகனே போற்றி
    ஓம் கஷ்டங்களைப் போக்குவாய் போற்றி
    ஓம் கல்யாண மங்களமே போற்றி
    ஓம் கலைகள் பலதெரிந்தோய் போற்றி
    ஓம் கற்பகத் தருநிழல் அமர்ந்தாய் போற்றி
    ஓம் கஸ்தூரி நிறம் ஒளி அணிந்தாய் போற்றி
    ஓம் கவலைகளை ஒழிக்கும் வல்லவனே போற்றி
    ஓம் காலனுக்கும் காவலனே போற்றி

    ஓம் கிரிவல்லயன் துணையே போற்றி
    ஓம் கீர்த்திகள் பல பெற்றாய் போற்றி
    ஓம் குணநிதியே போற்றி
    ஓம் குற்றம் களைவாய் போற்றி
    ஓம் கூத்தனுக்கு மத்தளம் அடித்தாய் போற்றி
    ஓம் கோலங்கள் பல செய்வாய் போற்றி
    ஓம் கைலாச வாகனனே போற்றி
    ஓம் கந்தனைக் கையால் அமர்த்தினாய் போற்றி
    ஓம் காலமெல்லாம் ஈசன் சிந்தனையே போற்றி
    ஓம் பஞ்சாக்ஷர ஜெபம் செய்பவனே போற்றி

    ஓம் பஞ்சலிங்கத்தில் ஒருவன் ஆனாய் போற்றி
    ஓம் பரமசிவன் தன்மை தெரிந்தோய் போற்றி
    ஓம் பார்வதிக்கும் வாகனமாய் நின்றாய் போற்றி
    ஓம் பிரதோஷ காலம் உடையவனே போற்றி
    ஓம் பிறவிப் பிணி தீர்ப்பாய் போற்றி
    ஓம் பிஞ்ஞகன் ஏவல் செய்வாய் போற்றி
    ஓம் புகழ்கள் பல பெற்றோய் போற்றி
    ஓம் பூத கணங்களுக்குத் தலைவனே போற்றி
    ஓம் பூத பிசாசுகளை அடக்குவாய் போற்றி
    ஓம் மகாதேவனே போற்றி

    ஓம் மகிமை பல செய்வாய் போற்றி
    ஓம் மஹேஸ்வரன் தூதனே போற்றி
    ஓம் மங்கள நாயகனே போற்றி
    ஓம் மதோன் மத்தம் தடுப்பாய் போற்றி
    ஓம் மஞ்சள் மகிமை கொடுப்பாய் போற்றி
    ஓம் மணங்கள் செய்காரணனே போற்றி
    ஓம் மந்திர மகிமை உனக்கே போற்றி
    ஓம் அகிலமெல்லாம் உன் அருள் போற்றி
    ஓம் தட்சனுக்கு உபதேசம் செய்தாய் போற்றி
    ஓம் தண்டங்களின் மேல் அமர்ந்தாய் போற்றி

    ஓம் தன்மை களெல்லாம் அறிந்தோய் போற்றி
    ஓம் தயாபரன் அருள் பெற்றவனே போற்றி
    ஓம் தஞ்ச மென்றவர்க்கருள் செய்வாய் போற்றி
    ஓம் நஞ்சுண்டவனை நாயகனாய் அடைந்தாய் போற்றி
    ஓம் நாக நந்தனின் நயனம் தெறிந்தவனே போற்றி
    ஓம் நாதமும் பிந்துவும் ஆனாய் போற்றி
    ஓம் பழமும் சுவையும் நீயே போற்றி
    ஓம் பண்புகள் பல செய்வாய் போற்றி
    ஓம் பாரெல்லாம் உன்புகழ் போற்றி
    ஓம் பிறவிப் பிணி அறுப்பாய் போற்றி

    ஓம் அடியவர்க்கெல்லாம் அன்பே போற்றி
    ஓம் ஆண்டவனிடம் அன்பு கொண்டாய் போற்றி
    ஓம் ஆதாரசக்தி மயம் பெற்றாய் போற்றி
    ஓம் சிவனின் வாகனம் ஆனாய் போற்றி
    ஓம் இன்னல் தீர்க்கும் இறைவனே போற்றி
    ஓம் நீண்ட கொம்புடையவனே போற்றி
    ஓம் நீலாயதாட்சி அருள் பெற்றாய் போற்றி
    ஓம் நீலகண்டன் முன் நின்றாய் போற்றி
    ஓம் வேதங்களை காலாய் உடையவனே போற்றி
    ஓம் வேள்விக்குத் தலைவனே போற்றி

    ஓம் வித்யா காரணனே போற்றி
    ஓம் விவேகம் எனக்குத் தருவாய் போற்றி
    ஓம் விண்ணுலகம் செல்லும் வழியே போற்றி
    ஓம் வில்வத்தின் மகிமையே போற்றி
    ஓம் விஸ்வே உன் வல்லமையே போற்றி
    ஓம் வேல்உடையவனே போற்றி
    ஓம் மகா காளனே போற்றி
    ஓம் மக்கள் பேறு தருவாய் போற்றி
    ஓம் மாயைகளை அகற்றுவாய் போற்றி
    ஓம் வெள்ளை நிறம் உடையாய் போற்றி

    ஓம் உலகம் அறிந்த உத்தமனே போற்றி
    ஓம் உன்மகிமை உலகமெல்லாம் போற்றி
    ஓம் ஊஞ்சல் ஆட்டுபவனே போற்றி
    ஓம் ஊடலுக்குதவியனே போற்றி
    ஓம் உபதேசம் பெற்றவனே போற்றி
    ஓம் உலகுக்கு அருள்வாய் போற்றி
    ஓம் பிழைகள் பொறுப்பாய் போற்றி
    ஓம் பிள்ளையார் சோதரனே போற்றி
    ஓம் மாயை ஏடுக்கும் மாடாய் நின்றாய் போற்றி
    ஓம் மாமன்னநம் உன்பனி செய்வார் போற்றி

    ஓம் மகாதேவன் கருணையே போற்றி
    ஓம் பரப்பிரம்மமே போற்றி
    ஓம் விண்ணோர்க்கு அரிய மருந்தே போற்றி
    ஓம் கண்டனின் வாகனமானாய் போற்றி
    ஓம் சிவனின் பாதியை சுமந்தாய் போற்றி
    ஓம் கையிலையின் காவலனே போற்றி
    ஓம் மக்கள் குறைதீர்ப்பாய் போற்றி
    ஓம் பிரதோஷ நாயகனே போற்றி போற்றி…
    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைவு காரணமாக வழிபாட்டு தலங்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு கடந்த 15-ந்தேதி முதல் தளர்வுகள் அளிக்கப்பட்டது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையைச் சுற்றி 14 கிலோ மீட்டர் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம்செல்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தருவார்கள்.

    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது.

    தொற்று பரவல் குறைவு காரணமாக வழிபாட்டு தலங்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு கடந்த 15-ந்தேதி முதல் தளர்வுகள் அளிக்கப்பட்டது.

    இந்த மாதத்துக்கான பவுர்ணமி நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 7.56 மணிக்கு தொடங்கி மறுநாள் (புதன்கிழமை) இரவு 8.54 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலையில் 19-வது மாதமாக இந்த மாதமும் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும். இதனை கருத்தில் கொண்டு பவுர்ணமி தினங்களான நாளை காலை 6 மணி முதல் 21-ந்தேதி இரவு 12 மணிவரை திருவண்ணாமலை மலைச்சுற்றும் பாதையில் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுகிறது. எனவே, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வரவேண்டாம்.

    பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்தின் தொற்று பரவலை தடுக்கும் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு முற்றிலும் இல்லை என்ற நிலையை அடைய அனைவரின் ஒத்துழைப்பும் அவசியமாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இஞ்சிமேடு ஸ்ரீ பெருந்தேவிதாயார் சமேத வரதராஜபெருமாள் கோவிலில் பல்வேறு கோரிக்கைகளை பெருந்தேவி தாயாரிடம் வைத்து மண் அகல்விளக்கில் தீபம்ஏற்றி 48 நாள் மஞ்சள் வைத்து வணங்கி வந்தால் நன்மைகள் நடக்கும்.
    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா, பெரணமல்லூர் ஒன்றியம், இஞ்சிமேடு கிராமத்தில், ஸ்ரீ பெருந்தேவிதாயார் சமேத வரதராஜபெருமாள் கோவில் உள்ளது.

    பிரதி மாதம் சுவாதி நட்சத்திரம், மூல நட்சத்திரம் ஆகிய நட்சத்திர நாட்களில் 27 நட்சத்திர தோஷங்கள் நீங்குவதற்கு மகாயாகம் நடத்தப்படுகிறது. இதில் திருமணத்தடை, வேலை வாய்ப்பு, குழந்தை பாக்கியம், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் பல்வேறு நன்மைக்காகவும் யாகம் நடத்தப்படுகிறது.

    பிரதிமாதம் உத்திரம் நட்சத்திரத்தில் கோ சாலையில் உள்ள பசுக்களுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இதில் வியாபாரம், திருமணநாள், பிறந்த நாள், குழந்தை வரம், பெயர் சூட்டுதல், நோய் நொடி இல்லாமல் வாழ்வதற்கும் முன்பதிவு செய்து கொண்டு கோ பூஜையில் கலந்து கொண்டு வழிபடலாம்.

    பல்வேறு கோரிக்கைகளை பெருந்தேவி தாயாரிடம் வைத்து மண் அகல்விளக்கில் தீபம்ஏற்றி 48 நாள் மஞ்சள் வைத்து வணங்கி வந்தால் நன்மைகள் நடக்கும்.

    சென்னையில் இருந்து 148, 208, 422, 341, 130, 247 காஞ்சீபுரத்திலிருந்து மேல்மலையனூர் செல்லும் வழி, வந்த வாசி-பெங்களூரு அரசு பஸ்சில் இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோவிலுக்கு செல்லலாம்.
    தசராவையொட்டி கோவிலை சுற்றி கடைகள் அனைத்தும் கடந்த 12 நாட்களாக அடைக்கப்பட்டிருந்தன. இன்று அவை அனைத்தும் திறக்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
    பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தராம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 6-ந்தேதி தொடங்கியது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 15-ந் தேதி நள்ளிரவு பக்தர்களின்றி எளிமையாக நடந்தது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருவிழாவில் 12 நாட்களில் கொடியேற்றம், சூரசம்ஹாரம், கொடியிறக்கம், வெள்ளி, சனி, ஞாயிறு தவிர்த்து 5 நாட்கள் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    நேற்று முன்தினம் மாலை கொடி இறக்கப்பட்டு அம்மன் காப்பு களையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து வேடம் அணிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களது ஊர்களில் உள்ள கோவில்களில் காப்புகளை அவிழ்த்து, வேடங்களை களைந்து விரதத்தை முடித்துக் கொண்டனர். நேற்று சிறப்பு பாலாபிஷேகத்துடன் தசரா விழா நிறைவு பெற்றது.

    திருவிழா முடிந்தததையடுத்து இன்று முதல் பக்தர்கள் வாரஇறுதிநாட்கள் உள்பட அனைத்து நாட்களிலும் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனால் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் குலசேகரன்பட்டினத்தில் குவியத் தொடங்கினர்.

    வேடமணிந்த பக்தர்கள் தாங்கள் காணிக்கையாக பெற்ற பணத்தை கோவிலில் செலுத்துவதற்காக அணி அணியாக திரண்டு வந்தனர். 3 நாட்களுக்கு பின்னர் இன்று அனுமதி வழங்கப்பட்டதால் பல்லாயிரக்கணக்கானோர் மோட்டார் சைக்கிள், கார், வேன், தனியார் பஸ்கள் மூலம் கோவிலுக்கு வந்தனர். இதனால் திருவிழா போல காணப்பட்டது.

    தொடர்ந்து அவர்கள் குடும்பத்துடன் கடற்கரைக்கு சென்றனர். இதனால் எங்கு பார்த்தாலும் பக்தர்களாகவே காட்சி யளித்தனர்.

    மேலும் தசராவையொட்டி கோவிலை சுற்றி கடைகள் அனைத்தும் கடந்த 12 நாட்களாக அடைக்கப்பட்டிருந்தன. இன்று அவை அனைத்தும் திறக்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    கட்டுக் கடங்காத கூட்டம் திரண்டதால் கோவில் முன்பிருந்து நாகர்கோவில் செல்லும் சாலை வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.
    தென்காசி மாவட்டத்தில் அருள்வாக்கிற்கு பெயர் பெற்ற கடைய நல்லூர் தாலுகா, புளியங்குடி நகரில் அரசு மருத்துவமனை அருகில் கோபுர நகரில் அமைந்துள்ள முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயம்.
    உலகமே சக்தி மயமானது என்பதை மனிதர்களுக்கு உணர்த்தும் ஆன்மீக சொருபங்கள். இத்தகைய அருட் திறம் வாய்ந்த ஆலயங்களில் ஒன்று தான் தென்காசி மாவட்டத்தில் அருள்வாக்கிற்கு பெயர் பெற்ற கடைய நல்லூர் தாலுகா, புளியங்குடி நகரில் அரசு மருத்துவமனை அருகில் கோபுர நகரில் அமைந்துள்ள முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயம்.

    கோவில் உருவாக காரணம்

    சுமார் 11 வருடங்களுக்கு முன் சாதாரண ஒரு மொட்டை மாடியில் உள்ள ஒரு சிறு அறையையே கோவிலாக கொண்டு இத்தேவியர் தங்களை நாடி வரும் பக்தர்களின் கண்கண்ட தெய்வமாக விளங்கினர். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு புற்றுக்கோவில் இருந்து பக்தர்கள் வழிபட்டு வந்தனர். அதனால் அந்த இடம் வாங்கப்பட்டு, சென்னை பெரியபாளையத்தில் இருந்து பிடிமண்கொண்டு வரப்பட்டு, ஒரு நன்நாளில் பூமிபூஜை போட்டு கட்டிட வேலை ஆரம்பிக்கப்பட்டது.

    வருடந்தோறும் சித்திரை மாதம் 2ம் செவ்வாய்க் கிழமை நாள்கால் நட்டி 10 நாட்கள் பெருந்திருவிழா நடைபெறும். இதில் 500க்கும் மேற்பட்ட அக்னிச்ட்டிகள், பால்குடம், தீர்த்தக்குடம், முளைப்பாரி ஊர்வலம் சிறப்பு அறுசுவை அன்னதானம் நடைபெறுவது இப்பகுதியில் பிரசித்தி பெற்றது.

    ஆடி மாத சிறப்புகள்

    ஆடி மாதம் வரும் பூரம் திருவிழா இங்கு மிகவும் பிரசித்தி பெற்றது. இந் நாளில் அம்மாக்களிடம் குழந்தை வரம் வேண்டி வரும் கன்னியர்களுக்கும், நீண்ட நாள் குழந்தை வரம் இல்லாதவர்களுக்கும், குழந்தை பாக்கியம் பெற்றவர்களுக்கும் இக்கோவிலில் வளையல் வளைகாப்பும், 21 வகையான சாதங்களும், பிரசாதமாக வழங்கப்படும். இந்த அருட்பிரசாதத்தை பெற்றவர்களுக்கு குழந்தைச் செல்வம் கட்டாயம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    அருள்வாக்கு

    ஒவ்வொரு ஐப்பசி மாதமும் முதல் வெள்ளிக் கிழமையன்று பெரும்பூஜை என்னும் சிறப்புப் பூஜை நடைபெறுகிறது. ஆன்மிக வாழ்க்கையில் 28ம் ஆண்டாக தொடர் புனித பயணம் மேற்கொள்ளும் குருநாதர் சக்தியம்மாளின் உடம்பிற்குள் ஸ்ரீ பெரிய பாளையத்து பவானி அம்மன் குடி கொண்ட நாளையே பெரும்பூஜையாக கொண்டாடப்படுகிறது.

    அன்றைய தினம் அம்மாக்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும் காலை 8 மணி முதல் குருநாதர் சக்தியம்மா சேலை அணிந்து முழு பெண் உருவத்தில் ஒரு கையில் தீச்சட்டியுடன் மகாசக்தி வாய்ந்த பவானி அம்மாவாக பக்தர்களுக்கு தலையில் கை வைத்து சொல்லும் அருள் வாக்கு என்னும் சிறப்பு நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

    இப்பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்படும் பவானி அம்மன் அருள்வாக்கு 100 சதவீதம் பலித்து வருகிறது. பவானி அம்மாவாக அருள் வாக்கு தரும் சக்தியம்மாவே அனைத்து மக்களுக்கும் ஆன் மீகம் போதிக்கும் குருவாக விளங்குகிறார். இக்கோவிலில் கொடுக்கப்படும் மஞ்சள் காப்பு பிரசாதத்தை ‘ஜெய்பவானி’ என்று சொல்லி நெற்றியில் பூசிக் கொண்டால் அனைத்து செயல்களும் நன்மையாக நடக்கும்.
    பிரதோ‌ஷமான இன்று மலையேற அதிகாலை முதலே ஏராளமானோர் தாணிப்பாறை அடிவாரத்திற்கு திரண்டனர். காலை 7 மணிக்கு அவர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.
    விருதுநகர் மாவட்டம், வத்ராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. மலைமேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு பக்தர்கள் செல்ல மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு 4 நாட்களுக்கு மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

    சதுரகிரி மலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் மலையேறும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா 3-ம் அலையை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 3 மாதங்களாக சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் கோவிலில் பக்தர்கள் இன்றி பூஜைகள் நடந்து வந்தன.

    கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. அதன்படி, இன்று பிரதோ‌ஷம், 20-ந்தேதி பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

    இன்று முதல் 21-ந் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். காலை 7 மணி முதல் 10 மணிக்குள் மலையேற அனுமதி வழங்கப்படும். இரவு கோவிலில் தங்க அனுமதி இல்லை. மாலை 4 மணிக்குள் மலையடி வாரத்திற்கு பக்தர்கள் வந்து சேர வேண்டும்.

    பக்தர்கள் கட்டாயம் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    பிரதோ‌ஷமான இன்று மலையேற அதிகாலை முதலே ஏராளமானோர் தாணிப்பாறை அடிவாரத்திற்கு திரண்டனர். காலை 7 மணிக்கு அவர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். வனத்துறையினரும், போலீசாரும் பக்தர்களின் உடமைகளை சோதனை செய்து அனுமதித்தனர்.

    பிரதோ‌ஷத்தை முன்னிட்டு சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு ஆராதனைகள் நடந்தன.

    தற்போது கேரளாவை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருகிறது. இதன் தாக்கம் தமிழகத்திலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சதுரகிரிமேற்கு தொடர்ச்சி மலையிலும் மழை பெய்தால் கோடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்.

    எனவே மலை மேல் உள்ள ஓடைப்பகுதிகளில் பக்தர்கள் பாதுகாப்புடன் கடக்க வனத்துறையினர், போலீசார், தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

    இதையும் படிக்கலாம்...
    நவராத்திரி திருவிழாவையொட்டி கிருஷ்ணகிரியில் 9 கோவில் சாமிகள் திருவீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்செய்தனர்.
    கிருஷ்ணகிரியில் ஆண்டு தோறும் நவராத்திரி திருவிழாவையொட்டி சைவ மற்றும் வைணவ கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சாமி திருவீதி உலா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி விழாவையொட்டி அம்மன் கோவில்களில் தினமும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. விழாவின் கடைசி நாளான நேற்று இரவு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சாமி வீதி உலா நடந்தது.

    இதில், பழையபேட்டை மாரியம்மன் கோவில், கிருஷ்ணர் கோவில், மலையடிவாரத்தில் உள்ள கவீஸ்வரர் கோவில், சோமேஸ்வரர் கோவில், திருநீலகண்டர் கோவில், பழையபேட்டை சீனிவாசர் கோவில், தஞ்சாவூர் மாரியம்மன் கோவில், காட்டிநாயனப்பள்ளி சுப்பிரமணியசாமி கோவில் மற்றும் கார்வேபுரம் கல்கத்தா காளிக்கோவில் ஆகிய 9 கோவில்களில் இருந்து மின் விளக்குகளாலும், வண்ணமலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சாமிகள் எழுந்தருளி திருவீதி உலா வந்தன.

    இந்த ஊர்வலம், கிருஷ்ணகிரி பழையபேட்டை, நரசிம்மசாமி கோவில் தெரு, பாண்டுரங்கர் தெரு, மீன் மார்க்கெட், நேதாஜி சாலை, காந்தி சாலை, பழைய சப்-ஜெயில் சாலை மற்றும் சேலம் சாலை ஆகிய பகுதிகளில் 9 சாமிகள் சப்பரங்களுடன் ஊர்வலமாக வந்தன. இரவு முழுவதும் நடந்த தேரோட்டம் நேற்று காலை கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலை அருகில் ஒரே இடத்தில் அணிவகுத்து நின்றன. அவ்வாறு அணிவகுத்து நின்ற தேர்களில் உள்ள சாமிகளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடி வழிபட்டனர். இதனை தொடர்ந்து அனைத்து தேர்களும் மீண்டும் அந்தந்த கோவில்களுக்கு ஊர்வலமாக எடுத்துசெல்லப்பட்டன.
    மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் புரட்டாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    சென்னை மணலி புதுநகர், அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் புரட்டாசி மாதம் நடைபெறும் 10 நாள் திருவிழா, கடந்த 8-ந் தேதி திருநாம கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் காளை, அன்னம், கருடர், மயில், ஆஞ்சநேயர், சர்ப்பம், மலர்முக சிம்மாசனம் உள்ளிட்ட வாகனங்களில், அய்யா எழுந்தருளி பதிவலம் வந்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு பணிவிடை-உகப்படிப்பும், பின்னர் திருத்தேர் அலங்காரம் செய்தல், பணிவிடை நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு அய்யா வைகுண்ட தர்மபதி அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார்.

    முன்னதாக தேர் புறப்படுவதை குறிக்கும் வகையில் நாதஸ்வரம், செண்டை, உருமி மேளம் முழங்கப்பட்டது. பின்னர் இலுப்பை, தேக்கு மரங்களை கொண்டு செய்யப்பட்ட 36 அடி உயரம், 36 டன் எடைகொண்ட திருத்தேரில் அய்யா வைகுண்ட தர்மபதி, மணலி புதுநகர் பகுதிகளில் வீதி உலா வந்தார்.

    தேரோட்டத்தை சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், திருநெல்வேலி எம்.பி. ஞானதிரவியம், முன்னாள் எம்.பி. ஜெயதுரை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, ஆதிகுருசாமி, நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் பத்மநாபன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

    அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், “அய்யா அரகர சிவ சிவ, அய்யா உண்டு” என பக்தி பரவசத்துடன் விண்ணதிர முழங்கியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் ஆங்காங்கே முககவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    மாலையில் அய்யா இந்திர விமானத்திலும், இரவு பூம்பல்லக்கு வாகனத்திலும் பதிவலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து திருநாமக்கொடி அமர்வுடன் திருவிழா நிறைவு பெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருப்பதி கோவிலில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு உற்சவர்களுக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா முடிந்ததும் மறுநாள் பாக் சவாரி உற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் பாக் சவாரி உற்சவம் நடந்தது. அன்று மாலை 4 மணியளவில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு உற்சவர்களுக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது.

    முன்னதாக திருமலையில் உள்ள நந்தவனத்தில் அனந்தாழ்வாரின் வம்சத்தினரும், அர்ச்சகர்களும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தைப் பாடினர். பாக் சவாரி நிகழ்ச்சியில் கோவில் துணை அதிகாரி ரமேஷ்பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    பிரதோஷ நேரத்தில் நந்தி பகவானுக்கு அருகம்புல் அல்லது வில்வ இலை மாலை சாற்றி நெய் விளக்கு ஏற்றி, பச்சரிசி, வெல்லம் வைத்து பூஜை செய்வது வழக்கம்.
    ஐப்பசி மாதம் என்பது தமிழ் மாதங்களிலே விசேஷமான மாதம். இந்த மாதத்தில் வருகிற பிரதோஷம் மகத்துவமானது. இன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை. அதுமட்டுமல்லாமல் ஐப்பசியை துலா மாதம் என்பார்கள். காவிரியில் துலா ஸ்தானக் கட்டம் என்றே உள்ளது. மயிலாடுதுறையில் காவிரிக்கரையில் துலா ஸ்தானக் கட்டம் என்ற ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மாதத்தில், காவிரியில் நீராடி, சிவபெருமானை தரிசிப்பது மகா புண்ணியம் ஆகும். அதனால் தனம், தானியம் பெருகும். குடும்பத்தில் நல்லது நடக்கும். கடன் தொல்லையில் இருந்து மீட்டெடுக்கும்.

    பிரதோஷ நாளில் காலையில் இருந்து விரதம் இருந்து பிரதோஷ வேளையில், மாலையில், சிவன் கோவிலுக்குச் செல்ல வேண்டும். நந்திதேவருக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையைக் கண்ணார தரிசித்துப் பிரார்த்தனை செய்தால் இல்லத்தில் சுபிட்சம் உண்டாகும். பலர் பிரதோஷ தினத்தில் விரதமிருந்து, பிரதோஷ தரிசனம் கண்ட பின்னர் தங்களின் விரதத்தை முடிப்பது உண்டு.

    பிரதோஷ நேரத்தில் நந்தி பகவானுக்கு அருகம்புல் அல்லது வில்வ இலை மாலை சாற்றி நெய் விளக்கு ஏற்றி, பச்சரிசி, வெல்லம் வைத்து பூஜை செய்வது வழக்கம்.
    ×