என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    முற்கால சோழ அரசர்களால் வெற்றியின் தெய்வமாக நிர்மாணிக்கப்பட்டு திருவிழாக்கள் பல எடுத்து வழிபட்ட உக்கிரகாளியம்மன் தான் இங்கே தென்னூரில் வீற்றிருந்து அருள்பாலிப்பதாக கூறப்படுகிறது.
    திருச்சியில் உள்ள தென்னூரில் பிரசித்தி பெற்ற உக்கிர மாகாளியம்மன் கோவில் உள்ளது. மகிஷாசுரனை வதம் செய்த கோலத்தில் எட்டு கரங்களுடன் அம்மன் வடக்கு திசையை நோக்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ‘உக்கிர காளியம்மன்’ என்று அழைக்கப்பட்டாலும், கருணையின் வடிவமாகவும், பக்தர்களின் மனக்குறையை தீர்க்கும் காவல் தெய்வமாகவும் அன்னை விளங்குவது சிறப்பு.

    அம்பாளின் வலது புறத்தில் சந்தன கருப்பண்ணசாமியும், இடது புறத்தில் உற்சவ அம்பாள் சன்னிதியும் அமைந்துள்ளன. மேலும் விஷ்ணு துர்க்கை, சங்கட விமோசன ஆஞ்சநேயர், சப்த கன்னியர், மதுரைவீரன், சாம்புகமூர்த்தி, நவக்கிரகங்களுக்கு தனித்தனி சன் னிதிகள் அமைந்துள்ளன. உற்சவ காலங்களில் அம்பாள் உலா வருகையில் அவருக்கு முன்னும், பின்னுமாக அரணாக செல்வதே கருப்பண்ணசாமியும், சாம்புகமூர்த்தியும் தான்.

    இந்தக் கோவிலின் தல விருட்சம் வன்னி மரமாகும். மேலும், இங்கு திருவோடு மரம் இருப்பது தனிச்சிறப்பு. இந்தக் கோவில் தினமும் காலை 6.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடை திறந்து இருக்கும்.

    முற்கால சோழ அரசர்களால் வெற்றியின் தெய்வமாக நிர்மாணிக்கப்பட்டு திருவிழாக்கள் பல எடுத்து வழிபட்ட உக்கிரகாளியம்மன் தான் இங்கே தென்னூரில் வீற்றிருந்து அருள்பாலிப்பதாக கூறப்படுகிறது. இதற்கு சான்றாக இவ்விரு கோவில்களிலும் கருவறையில் காட்சியளிக்கும் அம்பிகையின் ஒரே மாதிரியான உருவமைப்பு முன் வைக்கப்படுகிறது.

    மேலும், சோழ அரசர்களால் வழிபட்ட உக்கிரமாகாளியம்மன் சிலை காலப்போக்கில் ஆற்றில் அடித்துவரப்பட்டு தென்னூரில் கரை ஒதுங்கியது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் அம்மனுக்கு கோவில் அமைத்து கடந்த 5 தலைமுறைகளாக வழிபட்டு வருகிறார்கள்.

    உக்கிர மாகாளியம்மனை மனமுருகி வழிபட்டால் எதிரி தொல்லை, கடன் தொல்லை நீங்கும். மேலும், குழந்தைப்பேறு இல்லாத தம்பதியினர் அம்மனை மடியேந்தி வழிபட்டால் விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் அதீத நம்பிக்கையாக உள்ளது. கண் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்கள் தீர்ந்தவுடன் அம்மனுக்கு புடவை சாத்தி பக்தர்கள் வழிபடுவார்கள்.

    மேலும், தங்களுடைய வேண்டுதல் நிறைவேறியவுடன் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, பொங்கல் வைத்து வழிபடுவார்கள். ஒரு சில பக்தர்கள் அம்மனுக்கு ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டு வழிபாடு செய்வார்கள். அமாவாசை, பவுர்ணமி மற்றும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஆடு, கோழி ஆகியவை பலியிடப்படாது.

    கோவில் திருவிழாக்கள்

    சித்திரை:- சித்ரா பவுர்ணமியையொட்டி உக்கிர மாகாளியம்மனுக்கு தென்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பால்குடம், தீர்த்தக் குடம் மற்றும் அக்னி சட்டியுடன் ஊர்வலமாக வந்து வழிபடுவார்கள். அதன்பிறகு அம்பாளுக்கு ராஜ மகா அபிஷேகம் நடைபெறும்.

    ஆடி:- ஆடி மூன்றாம் வெள்ளியன்று 1,008 திருவிளக்கு வழிபாடு மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    ஆவணி:- ஆவணி மாதத்தில் கூடிவரும் மிருக சீரிட நட்சத்திரத்தன்று சதகண்டி ஹோமம் நடைபெறும்.

    மார்கழி:- அம்பிகை திருப்பள்ளி எழுச்சி.

    தை:- பவுர்ணமி அன்று அம்மனுக்கு சிறப்பு பூஜை.

    பங்குனி:- பங்குனி மாதம் இரண்டாம் வாரத்திற்குப்பின் அம்பாளுக்கு காப்பு கட்டுதல் நடைபெறும். அதன் பின்பு 15 நாட்களுக்கு அம்பாள் விரதம் இருப்பதாக ஐதீகம். அந்த நாட்களில் எவ்வித பூஜைகளும் நடைபெறாது. மேலும் அம்மாதத்தின் கடைசி செவ்வாய் அன்று அம்பாள் புறப்பாடு நடைபெறும். இந்நிகழ்வு காளிவட்டம் என அழைக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் பக்தர்கள் அம்பாளை தரிசிப்பது போல், தனது பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பதற்காக அவள் கிளம்புவதாக ஐதீகம். புதன்கிழமை சுத்த பூஜை, சப்பரத்தில் பவனி மறுதினம் திருத்தேர் ஊர்வலம் நடைபெறும். அதன்பின்னர் கருப்பசாமி அருள்வாக்கு (குட்டி குடித்தல்) நிகழ்வு, வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராட்டும், சனிக்கிழமையன்று அம்பாள் குடிபுகுதலுடன் விழா நிறைவுபெறும்.
    ஆரல்வாய்மொழி அருகே உள்ள முப்பந்தல் (கிழக்கு) இசக்கியம்மன் கோவில் மலர் முழுக்கு விழா வருகிற 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
    ஆரல்வாய்மொழி அருகே உள்ள முப்பந்தல் (கிழக்கு) இசக்கியம்மன் கோவில் மலர் முழுக்கு விழா வருகிற 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 7 மணி முதல் கும்பாபிஷேகமும், பின்னர் 11.30 மணிக்கு பஜனையும், மதியம் 1 மணிக்கு உச்ச கால பூஜையுடன் அம்மனுக்கு அலங்கார தீபாராதனை மற்றும் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    இரவு 7.30 மணி முதல் மலர் முழுக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிறகு வாணவேடிக்கை நிகழ்ச்சியும் இடம்பெறுகிறது. முன்னதாக 7-ந் தேதி மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாட்டை முப்பந்தல் (கிழக்கு) இசக்கியம்மன் கோவில் பக்தர்கள் சேவா சங்க நிறுவன தலைவர் கோலப்பன் மற்றும் நிர்வாகிகள், விழா குழுவினர் செய்துள்ளனர்.
    படவேடு ரேணுகாம்பாள் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வெளியூர் பக்தர்கள் காலை 10 மணிக்கு பின்னர் அனுமதிக்கப்படுவார்கள் என்று ஆலோசனை கூட்டத்தில் உதவி கலெக்டர் கவிதா கூறினார்.
    கண்ணமங்கலம் அருகே படவேடு ரேணுகாம்பாள் கோவில் கும்பாபிஷேக விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    இதையொட்டி ஆரணி உதவி கலெக்டர் கவிதா விழா ஏற்பாடுகள் குறித்து நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் ராஜகோபுரம் உள்பட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார். துணை ஆணையர், செயல் அலுவலர் (கூடுதல் பொறுப்பு) ராமுவிடம், கும்பாபிஷேக ஏற்பாடுகளை கேட்டறிந்தார்.

    பின்னர் கோவில் தங்கும் விடுதியில் உதவி கலெக்டர் கவிதா தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் செயல் அலுவலர் (கூடுதல் பொறுப்பு) ராமு, போளூர் தாசில்தார் சண்முகம், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்குமார், படவேடு ஊராட்சி தலைவர் சீனிவாசன், சந்தவாசல் சப்-இன்ஸ்பெக்டர் தரணி, வருவாய் ஆய்வாளர் உதயகுமார், கிராம நிர்வாக அலுவலர் சம்பத், ஒன்றிய கவுன்சிலர் தஞ்சிம்மாள்லோகநாதன், முன்னாள் அறங்காவலர்கள் ஆர்.வி சேகர், முத்துக்கண்ணு, காளசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மணிகண்டன், போளூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் உதவி கலெக்டர் கூறுகையில், கும்பாபிஷேக விழாவில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக உள்ளூர் பக்தர்கள், உபயதாரர்கள் உள்பட சுமார் 3 ஆயிரம் பேர் மட்டும் கலந்து கொள்ள வேண்டும். காலை 10 மணிக்கு பின்னர் வெளியூர் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

    சந்தவாசல் சாலை, வீரகோவில் சாலை, அனந்தபுரம் சாலையில் போலீசார் வாகனங்கள் கட்டுப்படுத்தி போக்குவரத்து நெரிசல் இல்லாமல், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஊராட்சி சார்பில் குடிநீர் வசதி உள்பட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். சுகாதாரத்துறை சார்பில் முககவசம், சானிடைசர் வழங்கவேண்டும். மின்துறை சார்பில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். 2 தீயணைப்பு வண்டிகள் கோவில் அருகே நிறுத்த வேண்டும் என்றார்.

    கும்பாபிஷேக விழா மற்றும் யாக சாலை பூஜைகளை https://www.youtube.com/c/templelivestream என்ற யூடியூப் நேரலையில் ஒளிபரப்ப இந்து சமய அறநிலையத்துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    முடிவில் கோவில் மேலாளர் மகாதேவன் நன்றி கூறினார்.
    20 ஆண்டுகளுக்கு பிறகு விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நாளை கோலாகலமாக நடக்கிறது.
    விருத்தாசலத்தில் பிரசித்திபெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2002-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்துவது வழக்கம். அதன்படி கடந்த 2017-ம் ஆண்டு கோவிலில் திருப்பணி தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடந்து வந்தது. பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கும் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு நாளை(ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேகம் கோலாகலமாக நடக்கிறது. இதையொட்டி கோவில் மின்னொளியில் ஜொலிக்கிறது. விருத்தாசலம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    கும்பாபிஷேக விழா கடந்த 27-ந் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு ஹோமங்கள் நடந்தன. கடந்த 2-ந் தேதி மணிமுக்தாற்றில் இருந்து யாகசாலை பூஜைக்கு யானைகளில் தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. இதனை தொடர்ந்து யாகசாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    நேற்று காலை 2-ம் கால பூஜையும், மாலையில் 3-ம் கால பூஜையும் நடந்தது. இதில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன், கடலூர் முதன்மை மாவட்ட நீதிபதி ஜவஹர், தலைமை குற்றவியல் நீதிபதி பிரபாகரன், விருத்தாசலம் கூடுதல் அமர்வு மாவட்ட நீதிபதி பிரபாகர், சார்பு நீதிபதி ஜெயசூர்யா, கூடுதல் சார்பு நீதிபதி மகாலட்சுமி, மாஜிஸ்திரேட்டுகள் ஆனந்த், வெங்கடேஷ் குமார் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    நாளை காலை 6-ம் கால பூஜை முடிந்ததும் காலை 8.30 மணிக்கு கோபுரங்கள், விமானங்கள், மூலவருக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது.

    கும்பாபிஷேகத்தின்போது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்க நவீன மின்மோட்டார் மற்றும் நீர் தூவும் எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கோவில் வெளிப்பகுதியில் 53 கண்காணிப்பு கேமராக்களும், உள்பகுதியில் 42 கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளன. விழாவிற்கான ஏற்பாடுகளை கும்பாபிஷேக கமிட்டி குழு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
    பெண் சாபம் அவர்கள் முற்பிறவியில் அல்லது மூதாதையர்கள் காலத்தில் பெண்களை அவமானப்படுத்துவதால் தொடரும் தோஷமாகும். இந்த பெண் சாபம், தோஷமாகி பரம்பரையாகத் தொடரும்.
    பெண் சாபம்:- ஜாதகத்தில் பெண் கிரகங்களான சுக்கிரன், சந்திரன் பாதிக்கப்பட்டாலும் 4, 7, 11-ம் இடங்கள் வலுகுன்றிய நிலையில் இருந்தாலும்,  கேதுவோடு சம்பந்தப்பட்டாலும்,  இவர்கள் முற்பிறவி கர்மாவால் தெரிந்தோ தெரியாமலோ பெண்களின் சாபம் பெற்றிருக்கலாம். இவர்களுக்கு பெண்களால்  நன்மை ஏற்படும் வாய்ப்பு குறைவு. இந்த பெண் சாபம், தோஷமாகி பரம்பரையாகத் தொடரும்.

    இந்த வகை சாபம் அவர்கள் முற்பிறவியில் அல்லது மூதாதையர்கள் காலத்தில் பெண்களை அவமானப்படுத்துவதால் தொடரும் தோஷமாகும். லக்னம் எனும் ஒன்றாம் இடத்தோடு அதிக பெண் கிரகம் சம்பந்தம் பெற்றால் ஜாதகர்  பெண்களை ஏமாற்றிய குற்றம் ஆகும். 5-ம் இடத்தோடு அதிக பெண் கிரகம் இணைவு பெற்றால் ஜாதகரின் தாத்தா பெண்களை ஏமாற்றிய குற்றம். 9-ம் இடத்தோடு அதிக பெண் கிரகம் சேர்க்கை பெற்றால் ஜாதகரின் தந்தை பெண்களை ஏமாற்றிய குற்றம்.

    சுக்ரன் மாந்தியுடன் இணைவு
    சுக்ரன் பாவகத்தாரி தோஷம் அடைதல்
    சுக்ரன் நீசம், அஸ்தமனம், வக்ரம்.
    சுக்ரன் பகை கிரகங்களுடன் சேர்ந்து இருப் பது
    சுக்கிரன் மிகக் குறைந்த பாகையில் இருப்பது
    சூரியன்-சுக்கிரன் இடைவெளி 40 டிகிரிக்கு மேல் இருப்பது.
    2, 7-ல் மாந்தியுடன் சந்திரன்+சுக்ரன் சேர்க்கை
    1, 7-ல் சனி
     6-7-ம் அதிபதி இணைவு

    மேற்சொன்ன அமைப்பை வைத்து ஜாதகத் தில் பெண் சாபத்தை அறியலாம். இவர்களுக்கு பெண்ணால் கிடைக்கக்கூடிய எந்த நன்மையும் முழுதாக கிடைக்காது.பெண்கள் என்றாலே வெறுப்பாக இருக்கும்.

    ‘பிரசன்ன ஜோதிடர்’
    ஐ.ஆனந்தி
    செல்: 98652 20406
    ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மக பெருவிழாவின்போது, தமிழ்ப் பதிகம் பாடி திருக்கதவு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இதில் ஏராளமான பக்தர்கள், சிவனடியார்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்
    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தரும் தேவாரத் தமிழ்ப் பதிகம் பாடியதால் கதவு மீண்டும் திறந்ததாகவும் இதில் அப்பர் சுவாமிகள் பாடலில் கதவைத் திறக்கவும், சம்பந்தர் பாடலில் கதவை மீண்டும் திருக்காப்பு செய்ததாகவும் ஐதீகம்.

    இதை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மக பெருவிழாவின்போது, தமிழ்ப் பதிகம் பாடி திருக்கதவு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று தமிழ்ப்பதிகம் பாடி ததவு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    அப்போது ஓதுவா மூர்த்திகளான முத்துக்குமாரசுவாமி, பரஞ்ஜோதி தேசிகர் கொண்ட குழுவினர் தேவாரத் தமிழ்ப் பதிகம் பாடினர். பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட திருக்கதவு திறக்கப்பட்டடு மணவாள சுவாமிக்கு தீபாரதரனை காண்பிக்கப்பட்டது.

    இதில் கோவில் செயல் அலுவலர் ஜெயச்சந்திரன், யாழ்ப்பானம் வரணி ஆதீனம் செவ்வந்திநாத பண்டார சன்னதி குடும்பத்தினர், ஸ்தலத்தார் கயிலை மணி வேதரத்னம், நகராட்சி பொறியாளர் மோகன் உள்பட ஏராளமான பக்தர்கள், சிவனடியார்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
    கொரோனா பரவல் குறைந்து வருவதால், வரும் 15-ந்தேதி முதல் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் நேரடியாக வழங்குவது குறித்து தேவஸ்தான அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 15-ந் தேதி முதல் நேரடி இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நடந்தது.

    கூட்டத்தில் திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் ஜவகர் ரெட்டி மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்திற்கு பின்னர் ஜவகர் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த மாதம், பிப்ரவரி மாதத்திற்கான ரூ 300 தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. 15-ந் தேதி வரை மட்டுமே ஆன்லைனில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது.

    கொரோனா பரவல் குறைந்து வருவதால், வரும் 15-ந்தேதி முதல் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் நேரடியாக வழங்குவது குறித்து தேவஸ்தான அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    திருப்பதியில் ஆகாச கங்கை அருகேயுள்ள அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் கோவில் விரிவாக்க பணிகளுக்காக வரும் 16-ந்தேதி பூமி பூஜை நடைபெற உள்ளது.

    கோவிலில் சிதலமடைந்த பகுதிகள் சீரமைக்கப்படும். அஞ்சனாத்ரி ஆஞ்சநேயர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு மலைப்பாதைகள் சீரமைக்கப்படும் என்றார்.

    திருப்பதியில் 28,410 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 14,831 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.08 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
    உலகத்தில் உயிர்களைப் படைத்த பிரம்ம தேவன், தன் படைப்புத் தொழிலில் சோர்வு ஏற்பட, அதை நீக்கிக் கொள்ளும் வகையில் வசந்த பஞ்சமி நாளன்றுதான் சரஸ்வதிதேவியைப் படைத்ததாகக் கூறப்படுகிறது.
    தமிழகத்தைப் பொறுத்தவரையில் சரத் நவராத்திரி எனப்படும் புரட்டாசி மாத நவராத்திரியின் ஒன்பதாவது நாளான நவமியன்று சரஸ்வதி பூஜை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் மாகமாதத்தில் (ஜனவரி- பிப்ரவரி) வருகின்ற சுக்ல பட்ச (வளர்பிறை) பஞ்சமி திதி பசந்த் (வசந்த) பஞ்சமி என்ற பெயரில் சரஸ்வதி தேவிக்குரிய நாளாகக் கொண்டாடப்படுகிறது.

    இந்த வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி வழிபாடு நடைபெற்றதாக வேதங்களிலும் புராணங்களிலும் குறிப்புகள் காணப்படுகின்றன. உலகத்தில் உயிர்களைப் படைத்த பிரம்ம தேவன், தன் படைப்புத் தொழிலில் சோர்வு ஏற்பட, அதை நீக்கிக் கொள்ளும் வகையில் வசந்த பஞ்சமி நாளன்றுதான் சரஸ்வதிதேவியைப் படைத்ததாகக் கூறப்படுகிறது. சரஸ்வதி தேவியின் கையில் வீணையைக் கொடுத்து அதன்மூலம் உலக மக்களுக்குப் பேசும் சக்தியை பிரம்மா அளித்ததாகப் புராணம் கூறுகிறது.  

    நல்லொழுக்கம், அறிவு, ஞானம், இசை, அறிவு, வாக்கு வன்மை, கவித்திறன் போன்ற குணநலன்கள் மக்களுக்குக் கிட்ட இந்த நாளில் வட மாநிலத்தவர் சரஸ்வதிதேவியை வழிபடுகின்றனர். ஸ்ரீ கிருஷ்ணர்கூட இந்த வசந்த பஞ்சமி நாளில்தான் சாந்தீபனி குருகுலத்தில் சேர்ந்து பதினாறு கலைகளைக் கற்றதாகக் கூறப்படுகிறது.

    தென்மாநிலங்களில் விஜயதசமி நாளன்று குழந்தைகளுக்கு வித்யாரம்பம் துவக்குவது போன்று, மேற்கு வங்கத்தில் இந்த வசந்த பஞ்சமி நாளன்றுதான் வித்யாரம்பம் துவக்கப்படுகிறது. இந்நாளில் கல்வியைத் துவக்கவுள்ள குழந்தைகள் முன்பாக, பென்சில், பேனா, சிறிய இசைக் கருவிகள், தொழிற் கருவிகள் போன்றவற்றை வைத்து அவற்றில் ஏதாவது ஒன்றை எடுக்கச் சொல்வர்.

    குழந்தை எடுக்கும் பொருளின் அடிப்படையில் அதன் எதிர்காலம் அமையும் என்று நம்பிக்கை. உதாரணமாக பேனாவை எடுத்தால் பெரிய அறிவாளியாக ஆவர் என்றும், சங்கீத உபகரணங்களை எடுத்தால் சங்கீத மேதையாவான் என்றும், தொழிற் கருவியினை எடுத்தால் தொழில் முனைவராக ஆவான் என்றும் நம்பப்படுகிறது.

    இந்த வசந்த பஞ்சமி நாளன்று பூஜை அறையில் சரஸ்வதி தேவியின் சிலை அல்லது படம் மஞ்சள் மலர்களால் அலங்கரிக்கப்படுகிறது. மஞ்சள் சாமந்தி மலர்கள் வட மாநிலங்களில் பூஜைக்கும், மலர் மாலைகளுக்கும் உரிய முக்கிய மலராகத் திகழ்கிறது. சரஸ்வதிதேவி சிலைக்கும் மஞ்சள் ஆடை அணிவிக்கப்படுகிறது. வீடுகளில் மக்களும் அன்று மஞ்சள் ஆடைகள் அணிகின்றனர். பூஜையில் வைக்கும் விநாயகர் கூட மஞ்சள் பிள்ளையார்தான்! மஞ்சள் நிறச் சேலைகள், சல்வார் கமீஸ், துப்பட்டாக்கள், ஜரிகை மற்றும் கோட்டாவினால் அலங்கரிக்கப்பட்டு, பளிச்சென்று எங்கு பார்த்தாலும் மஞ்சள் நிறம் கண்களைப் பறிக்கிறது.

    பஞ்சாப் மாநிலத்தில் மிகச்சிறப்பாக வசந்த பஞ்சமி கொண்டாடப்படுகிறது. "வசந்த பஞ்சமி' என்றாலே வட மாநிலங்களில் இது சரஸ்வதிதேவியை வழிபடும் நாள் என்பதோடு பங்குனி உத்திர நாளில் வட மாநிலங்களில் கொண்டாடப்படுகின்ற வண்ணமயமான ஹோலிப் பண்டிகைக்குக் கட்டியம் கூறும் ஒரு இனிய விழாவாக இந்த பஞ்சமி விளங்குகிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்பத்திருவிழாவின் முதல் நாளில் நம்பெருமாள் ஹம்ச வாகனத்தில் வீதி உலா வந்தார். முக்கிய திருநாளான தெப்பத்திருவிழா 11-ந்தேதி நடைபெறுகிறது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத் திருவிழா நேற்று தொடங்கியது. இந்த விழா வருகிற 12-ந்தேதி வரை நடைபெறுகிறது. தெப்பத்திருவிழாவின் முதல் நாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து தோளுக்கினியான் பல்லக்கில் காலை 7.30 மணிக்கு புறப்பட்டு ரெங்கவிலாஸ் மண்டபத்திற்கு 8 மணிக்கு வந்து சேர்ந்தார். அதன் பின் அங்கிருந்தவாறு நம்ெபருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    மாலை 6.30 மணிக்கு ஹம்ச வாகனத்தில் புறப்பாடாகி உள்வீதிகளில் வலம் வந்து இரவு 7.45 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைந்தார். வாகன மண்டபத்தில் இருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    தெப்பத்திருவிழாவின் 2-ம் நாளான இன்று (சனிக்கிழமை) ஹனுமந்தவாகனத்திலும், 6-ந்தேதி கற்பகவிருட்ச வாகனத்திலும், 7-ந் தேதி வெள்ளி கருட வாகனத்திலும், 8-ந்தேதி இரட்டை பிரபை வாகனத்திலும், 9-ந்தேதி யானை வாகனத்திலும் உள்திருவீதிகளில் வலம் வருகிறார். தெப்பத்திருவிழாவின் 7-ம் நாளான 10-ந்தேதி மாலை 6.30 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு நெல்லளவு கண்டருளி உள்வீதிகளில் வலம் வந்து மூலஸ்தானம் சேருகிறார்.

    முக்கிய திருநாளான தெப்பத்திருவிழா 8-ம் நாளான 11-ந்தேதி நடைபெறுகிறது. அன்று மாலை 3 மணியளவில் மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 4.30 மணிக்கு வந்து சேருகிறார். இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணிவரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு மூலஸ்தானம் சேருகிறார்.

    9-ம் திருநாளான 12-ந்தேதி காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி காலை 8 மணிக்கு தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் இரவு 7 மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்த காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது.

    மதுரை கோ.புதூர் லூர்து அன்னை ஆலய கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் தேர்பவனி 12-ந்தேதி நடக்கிறது.
    மதுரை கோ.புதூர் பகுதியில் புனித லூர்து அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழாவிற்கான கொடியேற்றம் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. பங்குத்தந்தை தாஸ் கென்னடி முன்னிலை வகித்தார். திருச்சி சலேசிய மாநில உதவித் தலைவர் அருள்மாறன் தலைமை தாங்கி கொடி ஏற்றி வைத்து விழாவினை தொடக்கி வைத்தார்.

    இதனைத்தொடர்ந்து "குடும்பம் நம்பிக்கையின் அடித்தளம்" என்ற தலைப்பில் ஜெபமாலை நிகழ்ச்சி. ஆடம்பர திருப்பலி உள்ளிட்டவைகள் விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் உதவி பங்குத்தந்தைகள் டேவிட், ஜெரால்டு, பிரபு, நோயல்ராஜ், சலேசியர்கள், அருள்சகோதரிகள், பங்கு அருள்பணி பேரவை, பங்கு இறைமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    திருவிழாவை தொடர்ந்து ஒவ்வொரு நாளும், பல்வேறு தலைப்புகளில் காலை மற்றும் மாலையில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 11-ந்தேதி நற்கருணை பவனி நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் தேர் பவனி விழா வருகிற 12-ந் தேதி (சனிக்கிழமை) இரவு 8 மணிக்கு நடக்கிறது. மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி கலந்துகொண்டு அன்னையின் தேர் பவனியை தொடங்கி வைக்கிறார். திருச்சி சலேசிய மாநில தலைவர் அகிலன் தலைமை தாங்குகிறார்.

    மறுநாள் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற இருக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தல நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.
    தைமாத வெள்ளிக்கிழமையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    தலைஞாயிறை அடுத்த சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் தை மாத வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், தேன், திருநீறு உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    வாய்மேட்டை அடுத்த வண்டுவாஞ்சேரி வண்டுறை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், பன்னீர்.இளநீர், சந்தனம், நெய், தேன் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதபோல் வாய்மேடு பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வருகிற 7-ந்தேதி தொடங்கி 18-ந்தேதி வரை 12 நாட்கள் நடைபெற உள்ளது. விழாவிற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு மாசி திருவிழா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் நடைபெற உள்ளது.

    விழா முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோவில் வளாகம், கடற்கரை, நாழிக்கிணறு பஸ்நிலையம், திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறும் மண்டபங்களை பார்வையிட்டார். தொடர்ந்து தேர்கள் மற்றும் தேரோட்டம் நடைபெறும் வீதிகளையும் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வருகிற 7-ந்தேதி தொடங்கி 18-ந்தேதி வரை 12 நாட்கள் நடைபெற உள்ளது. விழாவிற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.

    தேரை ஆய்வு செய்த காட்சி

    திருவிழாவிற்கு என்னென்ன முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கோவில் பகுதி, திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் நேரில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

    அதன்படி சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் செல்லும் வரிசை முறைப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்கள் அமர்ந்து செல்வதற்கு வசதியாக ஒரே நேரத்தில் 100 நபர்கள் அமரக்கூடிய வகையில் அறை அமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் முதலுதவி மையமும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    பக்தர்கள் கடலில் நீராடும்போது ஆழமான பகுதிக்கு செல்லாமல் இருக்க கடலில் தடுப்பு மிதவைகள் அமைக்கப்படும்.

    இந்த ஆண்டு மாசி திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் வழக்கம்போல் நடைபெற அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. எல்லா நிகழ்ச்சிகளிலும் பக்தர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படிக்கலாம்....தோஷம், பிரச்சனைகளை தீர்க்கும் கருங்காலி மாலை
    ×