search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் யாகசாலை பூஜையில் பங்கேற்க வந்த பக்தர்களை படத்தில் காணலாம்.
    X
    விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் யாகசாலை பூஜையில் பங்கேற்க வந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

    20 ஆண்டுகளுக்கு பிறகு நாளை விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: விழாக்கோலம் பூண்ட விருத்தாசலம்

    20 ஆண்டுகளுக்கு பிறகு விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நாளை கோலாகலமாக நடக்கிறது.
    விருத்தாசலத்தில் பிரசித்திபெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2002-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்துவது வழக்கம். அதன்படி கடந்த 2017-ம் ஆண்டு கோவிலில் திருப்பணி தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடந்து வந்தது. பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கும் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு நாளை(ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேகம் கோலாகலமாக நடக்கிறது. இதையொட்டி கோவில் மின்னொளியில் ஜொலிக்கிறது. விருத்தாசலம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    கும்பாபிஷேக விழா கடந்த 27-ந் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு ஹோமங்கள் நடந்தன. கடந்த 2-ந் தேதி மணிமுக்தாற்றில் இருந்து யாகசாலை பூஜைக்கு யானைகளில் தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. இதனை தொடர்ந்து யாகசாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    நேற்று காலை 2-ம் கால பூஜையும், மாலையில் 3-ம் கால பூஜையும் நடந்தது. இதில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன், கடலூர் முதன்மை மாவட்ட நீதிபதி ஜவஹர், தலைமை குற்றவியல் நீதிபதி பிரபாகரன், விருத்தாசலம் கூடுதல் அமர்வு மாவட்ட நீதிபதி பிரபாகர், சார்பு நீதிபதி ஜெயசூர்யா, கூடுதல் சார்பு நீதிபதி மகாலட்சுமி, மாஜிஸ்திரேட்டுகள் ஆனந்த், வெங்கடேஷ் குமார் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    நாளை காலை 6-ம் கால பூஜை முடிந்ததும் காலை 8.30 மணிக்கு கோபுரங்கள், விமானங்கள், மூலவருக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது.

    கும்பாபிஷேகத்தின்போது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்க நவீன மின்மோட்டார் மற்றும் நீர் தூவும் எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கோவில் வெளிப்பகுதியில் 53 கண்காணிப்பு கேமராக்களும், உள்பகுதியில் 42 கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளன. விழாவிற்கான ஏற்பாடுகளை கும்பாபிஷேக கமிட்டி குழு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×