என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவில் தெப்ப திருவிழா வருகிற 11-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இதற்கான திருக்கால் நாட்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
    களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவில் தெப்ப திருவிழா வருகிற 11-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. முதல் நாளான 11-ந் தேதி மாலை சத்தியவாகீஸ்வரர்-கோமதி அம்மன் தெப்ப உற்சவமும், 2-ம் நாளான 12-ந்தேதி மாலை வரதராஜபெருமாள் கோவில் தெப்ப உற்சவமும், 3-ம் நாளான 13-ந்தேதி சந்தான கோபால கிருஷ்ணசுவாமி கோவில் தெப்ப உற்சவமும் நடக்கிறது.

    இதற்கான திருக்கால் நாட்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி கோவிலில் இருந்து திருக்கால் ரதவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது, விழா நடைபெறும் தெப்பக்குளத்தின் அருகில் மேளதாளம் முழங்க திருக்கால் நாட்டப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது.

    இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். தெப்ப திருவிழாவை முன்னிட்டு தெப்பக்குள பராமரிப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உபகோவிலான வெயிலுகந்தம்மன் கோவில் மாசி திருவிழாவின் 10- நாளில் தேரோட்டத்துக்கு பதிலாக, அம்மன் சிறிய தேரில் எழுந்தருளி, கோவில் வளாகத்தில் பவனி வந்தார்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உபகோவிலான வெயிலுகந்தம்மன் கோவில் மாசி திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, விழா நாட்களில் தினமும் அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்திற்குள் உலா வந்தார்.

    திருவிழாவின் 10-ம் நாளான நேற்று காலை தேரோட்டத்துக்கு பதிலாக, அம்மன் சிறிய தேரில் எழுந்தருளி, கோவில் வளாகத்தில் பவனி வந்தார்.

    விழாவில் கோவில் தக்கார் பிரதிநிதியும், ஓய்வு பெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
    புண்ணிய தலமாகவும், முக்தி தலமாகவும் போற்றப்படும் இந்த ஆலயம், காசியை விடவும், மிகவும் சக்தி வாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மணிமுக்தாற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ளது, விருத்தகிரீஸ்வரர் கோவில். இத்தல இறைவனுக்கு ‘பழமலைநாதர்’ என்ற பெயரும் உண்டு. பிரம்மதேவனும், அகத்தியரும் வழிபாடு செய்த இந்த ஆலயம், மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று பெருமைகளையும் கொண்ட சிறப்புமிக்கது. முன்காலத்தில் இத்தல இறைவன் மலையாக காட்சியளித்தவர் என்பதால் இவருக்கு ‘முதுகுன்றீஸ்வரர்’ என்ற பெயரும் உண்டு. இந்த ஊரும் முன்காலத்தில் ‘திருமுதுகுன்றம்’ என்றே அழைக்கப்பட்டுள்ளது.

    இத்தல அம்பாளின் திருநாமம், பெரியநாயகி என்பதாகும். ‘விருத்தாம்பிகை’ என்றும் அழைக்கப்படுகிறார். குரு நமச்சிவாயத்திற்கு இளமையாக காட்சி கொடுத்ததால், ‘பாலம்பிகை’, ‘இளையநாயகி’ என்ற பெயரும் உண்டு. புண்ணிய தலமாகவும், முக்தி தலமாகவும் போற்றப்படும் இந்த ஆலயம், காசியை விடவும், மிகவும் சக்தி வாய்ந்ததாக கூறப்படுகிறது.

    கோவில் அமைப்பு

    நான்கு புறமும் 26 அடி உயரமுள்ள மதில் சுவரையும், 660 அடி நீளமும், 390 அடி அகலமும் கொண்ட பரந்து விரிந்த ஆலயமாக, விருத்தகிரீஸ்வரர் கோவில் விளங்குகிறது. கோவிலின் நான்கு புறங்களிலும் விண்ணை முட்டும் உயரத்தில் 7 நிலை கோபுரங்கள் உள்ளன. இந்த ஆலயத்தில் தல விநாயகராக, ‘ஆழத்து விநாயகர்’ போற்றப்படுகிறார். இவரது சன்னிதி, கோவிலின் உள்ளே கிழக்கு நோக்கி சுமார் 18 அடி ஆழத்துக்குள் அமைந்து இருப்பதால், இந்தப் பெயர் வந்தது. விநாயகரின் ஆறு படைவீடுகளில் இது 2-வது படைவீடாகும். இதற்கு தனி மூன்று நிலை கோபுரமும், கொடிமரமும் உள்ளது.

    சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. இதை விளக்கும் விதமாக 28 லிங்கங்களை இத்தலத்தில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்ததாக தல வரலாறு சொல்கிறது. இந்த 28 லிங்கங்களும், தனித்தனி சன்னிதிகளாக அமைந்துள்ளன. இந்த லிங்கங்களுக்கு நடுவே விநாயகரும், வள்ளி- தெய்வானையுடன் முருகப்பெருமானும் காட்சி யளிக்கின்றனர். கோவிலில் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் காலபைரவர், காசியில் இருப்பது போன்ற வடிவமைப்பை கொண்டவர். இவரது கையில் வில் உள்ளது மற்றொரு தனிச் சிறப்பு.

    சிவபெருமானை வழிபடும் அடியார்களின் அடிப்படை மந்திரமாக திகழ்வது, ‘நமசிவாய.’ இதனை ‘பஞ்சாட்சரம்’ என்பார்கள். இதனை அடிப்படையாகக் கொண்டு, இங்கே ஐந்தாக அமைந்த விஷயங்கள் பல இருக்கின்றன. அவற்றில் 5 பிரகாரங்கள், 5 கோபுரங்கள், 5 கொடிமரங்கள், 5 நந்திகள், 5 தீர்த்தங்கள், 5 தேர்கள் முக்கியமானவை. மாசி மக பெருவிழாவின் போது, 5 கொடி மரங் களிலும் பெருவிழா கொடியேற்றம் நடைபெறும்.

    இவ்வாலயத்தின் தல விருட்சமாக வன்னி மரம் உள்ளது. இக்கோவில் திருப்பணி செய்த விபசித்து முனிவர் என்பவர், திருப்பணி செய்தவர்களுக்கு, வன்னி மரத்தின் இலையை ஒரு துணியில் வைத்து முடிந்து கொடுத்துள்ளார். அதை வேலை செய்தவர்கள் வீட்டிற்குச் சென்று பிரித்து பார்த்தபோது, அவர்களின் கூலித் தொகை அதில் இருந்ததாகவும், இத்தல புராணம் பதிவு செய்கிறது.
    மாசிமக திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் பகுதியில் உள்ள சிவன் கோவில்கள் மற்றும் வைணவ கோவில்களில் கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் விழா நடைபெறும்.
    கும்பகோணம் பகுதியில் உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோவில்களில் ஆண்டுதோறும் மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று மாசிமக திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவாக கொண்டாடப்படுகிறது. மாசிமக திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் பகுதியில் உள்ள சிவன் கோவில்கள் மற்றும் வைணவ கோவில்களில் கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் விழா நடைபெறும்.

    இந்த ஆண்டு மகாமகம் தொடர்புடைய ஆதிகும்பேஸ்வரர் கோவில், காசிவிஸ்வநாதர் கோவில், காளகஸ்தீஸ்வரர் கோவில், சோமேஸ்வரர்கோவில், அபிமுகேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் வருகிற 8-ந் தேதி மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் 11-ந் தேதி அறுபத்து மூவர் வீதி உலாவும், 12-ந் தேதி ஓலைச்சப்பரமும், 15-ந் தேதி தேரோட்டமும் நடக்கிறது.

    17-ந் தேதி மகாமக குளத்தில் காலை 12 மணி முதல் 1 மணிக்குள் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதேபோல் அபிமுகேஸ்வரர், காசிவிஸ்வநாதர், கவுதமேஸ்வரர் கோவில்களின் சார்பில் வருகிற 16-ந் தேதி மாலை மகாமக குளக்கரையில் தேரோட்டம் நடைபெற உள்ளது.

    இதேபோல் கும்பகோணம் பகுதியில் உள்ள வைணவ கோவில்களில் முதன்மையானதாக விளங்கும் சக்கரபாணி கோவில், ராஜகோபாலசுவாமிகோவில், ஆதிவராக பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் வருகிற 9-ந் தேதி பத்து நாள் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    தொடர்ந்து 12-ந் தேதி கருட வாகனத்தில் ஓலைச்சப்பரமும், 17-ந் தேதி காலை 7 மணிக்கு சக்கரபாணி கோவில் தேரோட்டமும் நடக்கிறது. தொடர்ந்து 12 மணியளவில் காவிரி ஆற்றங்கரை சக்கர படித்துறையில் வைணவ கோவில்கள் சார்பில் தீர்த்தவாரி நடக்கிறது.

    மாசிமகத்தையொட்டி சாரங்கபாணி கோவிலில் வரும் 17-ந் தேதி தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது.

    மாசிமக திருவிழாவுக்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருகிற 20-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது.
    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருகிற 20-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. 19-ந்தேதி மாலை அங்குரார்ப்பணம் நடக்கிறது.

    பிரம்மோற்சவ விழா வாகனச் சேவை விவரம் வருமாறு:-

    20-ந்தேதி மீன லக்னத்தில் கொடியேற்றம், இரவு பெரிய சேஷ வாகனம், 21-ந்தேதி காலை சிறிய சேஷ வாகனம், இரவு ஹம்ச வாகனம், 22-ந்தேதி காலை சிம்ம வாகனம், இரவு முத்துப்பந்தல் வாகனம், 23-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகனம், இரவு சர்வ பூபால வாகனம், 24-ந்தேதி காலை பல்லக்கு உற்சவம் (மோகினி அவதாரம்), இரவு கருட வாகனம், 25-ந்தேதி காலை அனுமந்த வாகனம், மாலை தங்கத்தேரோட்டம், இரவு யானை வாகனம், 26-ந்ேததி காலை சூரிய பிரபா வாகனம், இரவு சந்திர பிரபா வாகனம், 27-ந்தேதி மரத்தேரோட்டத்துக்கு பதிலாக சர்வ பூபால வாகனம், இரவு குதிரை வாகனம், 28-ந்தேதி சக்கர ஸ்நானம், இரவு கொடியிறக்கம். இத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

    வாகனச் சேவை தினமும் காலை 8 மணியில் இருந்து காலை 9 வரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது. மேற்கண்ட வாகனங்களில் கல்யாண வெங்கடேஸ்வரர் தனித்தும், ஸ்ரீதேவி, பூதேவியர்களுடன் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்கள்.

    முன்னதாக 15-ந்தேதி காலை 6 மணியில் இருந்து காலை 10 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது.
    6-ந் தேதி 7.15 மணியளவில் புதிய ராஜகோபுரம் மற்றும் விமான கும்பாபிஷேகமும், 8 மணியளவில் ரேணுகாம்பாள், சோமநாதீஸ்வரர் உள்பட பரிவாரங்கள் மகா கும்பாபிஷேகம், நடக்கிறது.
    கண்ணமங்கலம் அருகே படவேடு கிராமத்தில் புகழ்பெற்ற ரேணுகாம்பாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா வருகிற 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    விழாவையொட்டி புதிதாக ராஜகோபுரம் கட்டப்பட்டு, சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றது. இதையடுத்து கும்பாபிஷேக விழாவின் தொடக்கமாக நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக, லட்சுமி, கோபூஜை, கஜபூஜை நடந்தது. பின்னர் கோவில் யானை லட்சுமிக்கு சிறப்பு பூஜை செய்து, புதிய ராஜகோபுர வாசல் வழியாக பசு, யானையை பக்தர்கள் அழைத்து வந்தனர். மாலை 6 மணியளவில் வாஸ்து சாந்தி, ரக் ஷாபந்தனம், நேற்று முதல் கால யாகபூஜைகளும் நடந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை 2-ம் கால யாகபூஜைகளும், மாலை 3-ம் கால யாக பூஜைகளும் நடக்கிறது. 5-ந் தேதி காலை விசேஷசாந்தியுடன், 4-ம் கால பூஜை, மாலை 5-ம் கால பூஜையும் நடக்கிறது.

    தொடர்ந்து 6-ந் தேதி அதிகாலை 5 மணியளவில் 6-ம் கால பூஜை, 7.15 மணியளவில் புதிய ராஜகோபுரம் மற்றும் விமான கும்பாபிஷேகமும், 8 மணியளவில் ரேணுகாம்பாள், சோமநாதீஸ்வரர் உள்பட பரிவாரங்கள் மகா கும்பாபிஷேகம், நடக்கிறது. .மாலை 7 மணியளவில் அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது.

    கும்பாபிஷேக விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, துணை சபாநாயகர் பிச்சாண்டி, டி.வி.எஸ். தலைவர் வேணுசீனிவாசன் உள்பட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், இந்து சமய அறநிலையத்துறை செயலாளர், ஆணையர் உள்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மு.ஜோதிலட்சுமி, துணை ஆணையர், செயல் அலுவலர் (கூடுதல் பொறுப்பு) க.ராமு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவில் மூலவருக்கு பால் அபிஷேகம் செய்து வணங்கி, விபூதி பிரசாதம் சாப்பிட்டால், எவ்வித நோயாக இருந்தாலும் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.
    தேவாரப் பாடல்கள் பாடப்பெற்ற 274 சிவன் கோவில்களில், 258-வது தேவாரத் தலமாக இது விளங்குகிறது. 5 நிலைகளுடன் அமைந்த இவ்வாலயத்தின் மூலவர் வீற்றிருக்கும் விமானத்திற்கு ‘சதுர்வஸ்தம்’ என்று பெயர்.ஒரு முறை அபயதீட்சிதர் என்ற பக்தர், இறைவனை தரிசிக்க வந்தார். அப்போது பெரும் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோவிலுக்குள் செல்ல முடியவில்லை.

    அவர் சுவாமிக்கு பின்புறம் இருந்ததால், இறைவனின் முதுகுப்பகுதியைத்தான் தரிசிக்க முடிந்தது. “இறைவா.. உன் முகம் காட்டு’ என்று அவர் வேண்டியதன் பேரில், இறைவன் மேற்கு முகமாக திரும்பி தன் முக தரிசனத்தை வழங்கினார். இதனால் இத்தல இறைவன் மேற்கு நோக்கி அருள்கிறார்.கோவில் பிரகாரத்தில் அகத்தியருக்கும், வால்மீகிக்கும், சிவபெருமான் காட்சி கொடுத்த வன்னிமரம் உள்ளது.

    தினமும் அதிகாலையில் கோ பூஜை செய்யப்பட்ட பிறகே, இத்தல இறைவனான மருந்தீஸ்வரருக்கு, அபிஷேகம் செய்யப்படும்.அகத்தியர் இத்தலம் வந்து ஈசனை வழிபட்டார். அவருக்கு வன்னி மரத்தடியில் காட்சி தந்த ஈசன், உலகில் தோன்றியுள்ள நோய்கள் பற்றியும், அதற்கான மருந்துகளையும், மருந்துகளை தயார் செய்வதற்கான மூலிகைகளையும் பற்றி உபதேசித்தார்.

    எனவேதான் இத்தல இறைவன் ‘மருந்தீஸ்வரர்’ என்ற பெயர் பெற்றார்.மூலவருக்கு பால் அபிஷேகம் செய்து வணங்கி, விபூதி பிரசாதம் சாப்பிட்டால், எவ்வித நோயாக இருந்தாலும் நீங்கிவிடும் என்பது ஐதீகம், பாவங்களும் தீரும். வன்னி மரத்தை சுற்றி வந்து வணங்கினால் முக்தி கிடைக்கும்.

    சென்னை அடுத்த திருவான்மியூரில் அமைந்துள்ளது, மருந்தீஸ்வரர் திருக்கோவில்.

    இத்தல மூலவரான மருந்தீஸ்வரர், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவருக்கு வான்மீகிநாதர், வேதபுரீஸ்வரர், அமுதீஸ்வரர், பால்வண்ணநாதர் போன்ற பெயர்களும் உண்டு. உற்சவர் திருநாமம், ‘தியாகராஜர்’ என்பதாகும்.

    கொள்ளைக்காரனாக இருந்த வால்மீகி, மனம் திருந்திட எண்ணம் கொண்டு இத்தலம் வந்து சிவபெருமானை வழிபட்டார். அவருக்கு வன்னி மரத்தடியில் இறைவன் காட்சி கொடுத்தார். இதனால் இந்த ஊர் ‘திருவான்மீகியூர்’ என்று பெயர் பெற்றது. அதுவே மருவி ‘திருவான்மியூர்’ ஆனது.

    இவ்வாலயத்தில் திரிபுரசுந்தரி அம்மன், நடராஜர், அருணகிரியாரால் பாடப்பட்ட முத்துக்குமாரர், மூன்று சக்தி விநாயகர்கள், 108 சிவலிங்கங்கள், பஞ்ச லிங்கங்கள் ஆகிய தனித்தனி சன்னிதிகள் உள்ளன.
    திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவிலில் தெப்ப திருவிழா வருகிற 6-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் வெவ்வேறு வாகனங்களில் சாமி திருவீதி உலா நடக்கிறது.
    திருக்கோஷ்டியூரில் புகழ்பெற்ற சவுமியநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தெப்ப உற்சவ திருவிழா வருகிற 6-ந்தேதி மாலை 6 மணிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. மறுநாள்(7-ந்தேதி) காலை 7 மணிக்கு சுவாமி கல்யாண மண்டபத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பின்னர் காலை 9.18 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது.

    திருவிழா 10 நாட்கள் நடக்கிறது. ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் வெவ்வேறு வாகனங்களில் சாமி திருவீதி உலா நடக்கிறது.

    வருகிற 12-ந்தேதி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல் வைபவமும், 13-ந்தேதி மாலை சூர்ணாபிஷேகமும் தங்கத் தோளிக்கினியானில் சுவாமி திருவீதி புறப்பாடும் தெப்பக்குளத்தில் முகூர்த்தக்கால் நடுதல் விழாவும் நடைபெறுகிறது.

    14-ந்தேதி அரண்மனை மண்டகப்படியும், குதிரை வாகன புறப்பாடும், 15-ந்தேதி வெண்ணெய்த்தாழி சேவையும், பகல் 10.50 மணிக்கு தெப்பம் முட்டுத்தள்ளுதல் வைபவமும், 16-ந்தேதி தெப்பத்திருநாளன்று காலை 11.15 மணிக்கு பகல் தெப்பமும் இரவு 9 மணிக்கு தெப்பம் கண்டருளல் வைபவமும் நடைபெற உள்ளது. 17-ந்தேதி தீர்த்தவாரி வைபவமும் நடக்கிறது.

    தெப்பத்திருவிழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் ராணி டி.எஸ்.கே.மதுராந்தகநாச்சியார், தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சேவற்கொடியோன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
    கும்பகோணம் அருகே உள்ள சூரியனார்கோவிலில் ரதசப்தமி திருவிழாவில் 7-ம் நாள் விழாவாக நாளை (சனிக்கிழமை) மாலை சிவசூரியபெருமான் திருக்கல்யாணம் நடக்கிறது.
    கும்பகோணம் அருகே சூரியனார்கோவிலில் சாயாதேவி, உஷாதேவி உடனாகிய சிவசூரியபெருமான் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் ரதசப்தமி திருவிழாவில் 7-ம் நாளில் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம்.

    திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அறிவுரையின் பேரில் இந்த ஆண்டும் கடந்த மாதம் 30-ந் தேதி ரதசப்தமி திருவிழா தொடங்கியது.

    இதன் 7-ம் நாள் விழாவாக நாளை (சனிக்கிழமை) மாலை சிவசூரியபெருமான் திருக்கல்யாணம் நடக்கிறது.
    கருங்காலி மாலையை ஆண் பெண் என இருபாலரும் அணிந்து பயன்பெறலாம். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த மாலை அணிந்தால் தோஷம் நீங்கி திருமண தடைகளை நீக்கும்.
    நவகிரக நாயகர்களில் இது செவ்வாய் பகவானுக்குரியது.  இவர் கொடுக்கும் அனைத்து பலன்களும் இந்த கருங்காலி மாலை அணிவதன் மூலம் நமக்கு கிடைக்கும். கருங்காலி மரம் மின் கதிர்வீச்சுகளைத் தன்னுள் சேமிக்கும் தன்மை கொண்டது. இதனால் இதன் நிழலில் அமர்ந்தால் கூட நோய் நீங்கும் வல்லமை கொண்டது. தேகம் வலுவடைந்து, ஆன்மா பலமடைந்து ஆண்டவனைச் சரணடைய கருங்காலியைத் தொழுவோம்.

    கருங்காலி மாலையை ஆண் பெண் என இருபாலரும் அணிந்து பயன்பெறலாம். நமது உடலில் இரத்தத்தை சுத்தப்படுத்தும். ஜீரண கோளாறு நீங்கும் பெண்கள் மாதவிடாய் கோளாறு சரியாகும். ஆண்,பெண் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பேறுக்கு வழி வகுக்கும். உடலில் சோம்பல் நீங்கி சுறு சுறுப்பு உண்டாகும். மேலும் மாங்கல்ய பலத்தை பலப்படுத்தும். ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும். உடல் உறுதியடைய செய்யும். கோபங்கள் சிறிது சிறிதாக குறையும்.

    நம் மன பயத்தை நீக்கி தைரியத்தை வழங்கும். பேச்சுதிறமை அதிகரிக்கும். வியாபார தொழில் போட்டிகளில் வெற்றி கிட்டும். நிலபுலன்கள் வாங்க வழி வகுக்கும். நிலம் சம்மந்த பட்ட தொழில் செய்பவர்கள் இதை அணிந்து கொள்ள அத்துறையில் வெற்றி வாகை சூடலாம். விஷ பூச்சிகள் நம்மை அண்டாமல் பாதுகாக்கும். வாகன விபத்துகளை தடுத்து நமது பயணங்களை பாதுகாக்கும். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த மாலை அணிந்தால் தோஷம் நீங்கி திருமண தடைகளை நீக்கும். சகோதர் பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவி பிரச்சனை இருப்பின் பிரச்சனை நீங்கி கணவன் மனைவி உறவு மேம்படும்.

    கருங்காலிக் கட்டையை தண்ணீரில் ஊறவைத்தால் அந்நீரின் நிறம் மாறும். அந்த நீரைக் கொண்டு குளித்து வந்தால், உடலில் உண்டாகும் அனைத்து வலிகளும் நீங்கும்.

    கருங்காலி மரம் மேஷம், விருச்சிகம் ராசி, அஸ்வினி, பரணி, விசாகம், அனுஷம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், செவ்வாய்க்கிழமை அன்று பிறந்தவர்களுக்கும், மார்ச் 21 முதல் ஏப்ரல் 20 வரை பிறந்தவர்களுக்கும் நல்ல மருந்துமாகும்.

    நோய்கள் நீங்க கருங்காலி கட்டையை கையில் தாயத்தாக அணிந்துகொண்டாலும் நல்ல பலன் இருக்கும். எல்லா கோயில்களிலும் கும்பாபிஷேகத்தின் போது கருங்காலி கட்டைகளை கலசத்தின் உள்ளே போடுவார்கள். அதனால் இடி மின்னலால் எந்த பாதிப்பும் அந்த கோயிலை சுற்றி வசிக்கும் நபர்களுக்கு வருவதில்லை. கருங்காலி மரம் ரொம்ப அரிதான மரம். ஒரு சில ஆலயங்களில் மட்டுமே இப்போது இருக்கிறது. மூலிகை மருத்துவர்களின் ஆலோசனைப்படியும் கருங்காலி மரத்தைப் பயன்படுத்தலாம். வீட்டில் கருங்காலி கட்டை வைத்திருந்தால் மிகுந்த நற்பலன்களை அளிக்கும்.
    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சண்டிகேஸ்வரர் சிலை பிரதிஷ்டை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    சிவன் கோவில்களில் காவல் தெய்வமாக விளங்குபவர் சண்டிகேஸ்வரர். பிரசித்திப்பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் சன்னதியின் பின்னே சண்டிகேஸ்வரர் காவல் தெய்வமாக உள்ளார்.

    கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சண்டிகேஸ்வரர் சிலையின் கழுத்து பாகம் சேதம் அடைந்தது. இதனால் பக்தர்கள் தரிசனத்துக்கு கோவில் நிர்வாகம் தடை விதித்தது.

    இந்த நிலையில் பழைய சண்டிகேஸ்வரர் சிலைக்கு பதிலாக புதிய சிலை மயிலாடியில் வடிவமைக்கப்பட்டது. இந்த சிலையானது கடந்த மாதம் 21-ந் தேதி சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து 9 நாட்கள் தானிய வாசத்திலும், ஒரு நாள் ஜல வாசத்திலும், ஒரு நாள் சயனத்திலும் இருக்கும்படி வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    இதையடுத்து மாத்தூர் மடம் தந்திரி சங்கர நாராயணரூ தலைமையில் அவரது பேரன் சஜித் சங்கர நாராயணரூ முன்னிலையில் கடந்த 3 தினங்களாக பல்வேறு பூஜைகள் நடந்தது.

    இந்தநிலையில், நேற்று சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. முன்னதாக நேற்று அதிகாலையில் கணபதி ஹோமம், சிறப்பு பூஜை நடந்தது. காலை 10.45 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதலும், தொடர்ந்து சண்டிகேஸ்வரர் சிலைக்கு பிரதிஷ்டை வழிபாடும் நடந்தது. பின்னர் சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாக அலுவலக மேலாளர் தங்கம், பொறியாளர் ராஜ்குமார், கண்காணிப்பாளர்கள் சிவகுமார், ஆனந்த், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், அரசுமண்டல ஸ்தபதி செந்தில், சிலை வடிவமைத்த ஸ்தபதி சேகர் ஆச்சாரி, தொழில்நுட்ப உதவியாளர் செந்தில்குமார், தெற்கு மண்மடம் திலீபன் நம்பூதிரி, வட்ட பள்ளிமடம் பிரசாத் நம்பூதிரி, இயல், இசை நாடக சங்க தலைவர் குமரேச பிள்ளை, கோவில் மேல்சாந்திகள், கீழ்சாந்தி மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில், கண்காணிப்பாளர் சிவக்குமார், மேலாளர் ஆறுமுகதரன் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்திருந்தனர்.
    புதுவை காளத்தீஸ்வரர் கோவிலில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) 6-ம் கால யாக பூஜை நடத்தப்பட்டு கோவில் கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.
    புதுவை மிஷன் வீதியில் பிரசித்தி பெற்ற காளத்தீஸ்வரர் கோவில் (செட்டிக்கோவில்) உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் நடந்து வந்த நிலையில் வருகிற 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று மாலை முதல் கால யாக பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இன்றும், நாளையும் (வெள்ளி, சனிக்கிழமை) 5 கால பூஜைகள் நடக்கின்றன. அதைத்தொடர்ந்து நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) 6-ம் கால யாக பூஜை நடத்தப்பட்டு கோவில் கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.

    விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் மற்றும் திருப்பணி குழுவினர் செய்து வருகின்றனர்.
    ×