என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் ரத சப்தமி விழாவை முன்னிட்டு ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சூரிய பிரபை வாகனத்திலும், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சப்பரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) ரத சப்தமி விழா நடக்கிறது. அதையொட்டி ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் உள்ள (மூன்றாவது கோபுரம்) திருமஞ்சன கோபுரம் அருகில் உள்ள சாயா உஷா தேவி சமேத சூரிய நாராயணசாமிக்கு காலை 7 மணியளவில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் காலை (2-வது கால அபிஷேகத்துக்கு பின்) காலை 8 மணியளவில் உற்சவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சூரிய பிரபை வாகனத்திலும், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சப்பரத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    மேற்கண்ட தகவலை கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தெரிவித்துள்ளார்.
    16 வாரங்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள், பிடிக்காத தம்பதிகள் அன்யோன்யமாக மாறுவார்கள்! மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்ளவும், இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம்.
    தம்பதியர்கள் மனம் ஒருமித்து வாழ சோமவார விரதத்தை 16 வாரங்கள் கடைபிடித்தால் நல்ல பலன் கிடைக்கும். சோமவாரம் என்பது திங்கள் கிழமையை குறிக்கிறது. 16 திங்கள் கிழமைகள் சிவபார்வதியை நினைந்து விரதமிருந்து பிரார்த்தனை செய்தால் எவ்வளவு மன கஷ்டங்களும் உங்களிடம் இருந்து சுலபமாக நீங்கி விடும்.

    சோமவார விரதத்தை மேற்கொள்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் எந்த திங்கட் கிழமையிலும் துவங்கலாம். திங்கட்கிழமை அன்று அதிகாலையில் நீராடி மாலை வரை உபவாசம் இருந்து சிவபார்வதி பூஜைகள் மேற்கொள்ள வேண்டும். ரொம்பவே எளிமையான விரதமுறை தான் இது. ஆனால் பலனை பார்த்தால் அதிசயிக்கும் வண்ணம் பெரிதாகவே இருக்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் சூழ்நிலைகளை இந்த விரதம் மேற்கொள்பவர்களுக்கு நிச்சயம் உருவாக்கித் தருவார்.

    அன்றைய நாளில் சிவபெருமான் பார்வதி தேவியுடன் இணைந்த படத்திற்கு வில்வ அர்ச்சனை செய்து லிங்காஷ்டகம் படிக்கலாம். அல்லது சிவபெருமான் மற்றும் பார்வதி தேவிக்கு உரிய மந்திரங்களை ஜபிக்கலாம். முழுமையாக விரதம் இருக்க முடியாதவர்கள் நீர் ஆகாரத்தை உணவாக எடுத்துக் கொள்ளலாம். பழச்சாறுகள், பால், பழம் போன்றவற்றை உட்கொண்டு விரதம் மேற்கொள்ளலாம். வில்வ இலைகள் கிடைக்காதவர்கள் தோஷம் போக்கும் செவ்வரளி மலர்கள், சங்கு பூக்கள் அல்லது உங்கள் வீட்டில் பூக்கும் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்ய உகந்த மலர்கள் எதுவாயினும் அர்ச்சனை செய்ய பயன்படுத்தலாம்.

    நைவேத்தியமாக பழங்களையும் உங்களால் முடிந்த பாயாசம், சர்க்கரைப் பொங்கல் போன்ற ஏதாவது ஒரு நிவேதனத்தையும் படைக்கலாம். அன்றைய நாளில் சிவன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வரலாம். மாலை வரை சிவ ஸ்லோகம் மனதிற்குள் உச்சரித்து வரவேண்டும். பின்னர் மாலையில் விளக்கேற்றி தூப, தீப ஆரத்தி காண்பித்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம். இது போல் தொடர்ந்து 16 திங்கட்கிழமைகள் விரதம் மேற்கொண்டு சிவ பார்வதியை வணங்கினால் நிச்சயம் உங்களுடைய வேண்டுகோள்கள் நிறைவேறும். இந்த விரதத்தை நீங்கள் முடிப்பதற்குள் கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் உண்டாகும், அன்னோன்யம் அதிகரிக்கும்.
    இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த சுவரோவியம் புதுப்பிக்கும் பணி கொரோனா பெருந்தொற்று காரணமாக மூன்று மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
    108 வைணவத்திருப்பதிகளில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவிலில் 2004-ம் ஆண்டு கேரளாவைச்சேர்ந்த பிரபல ஜோதிடர் உன்னிகிருஷ்ண பணிக்கர் தலைமையில் தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ரூ.6.5 கோடி செலவில் திருப்பணிகள் நடந்து வருகிறது.

    பழுதடைந்த விளக்கணி மாடங்கள் தனியார் பங்களிப்புடன் ரூ39 லட்சம் செலவில் சீரமைக்கப்படுகிறது.

    கோவிலில் உள்ள சுவரோவியம் ரூ.99 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. கோவில் கருவறையில் இருந்து உற்சவ மூர்த்தி சிலைகள் பாலாலயத்திற்கு மாற்றப்பட்டு அங்கு நான்கு ஆண்டுகளாக பூஜைகள் நடந்து வருகிறது. விளக்கணி மாடம் அமைத்தல் வேலை பெரும்பாலானவை முடிவடைந்து விட்டன.

    இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த சுவரோவியம் புதுப்பிக்கும் பணி கொரோனா பெருந்தொற்று காரணமாக மூன்று மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து, ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் சுவரோவியம் புதுப்பிக்கும் பணிகள் கடந்த வாரம் தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து கோவிலின் ஓவியர் உண்ணி கூறியதாவது:- ”கருவறையைச்சுற்றியுள்ள சிதலமடைந்த சுவரோவியங்கள் அதன் பழமை மாறாமல் இயற்கை வர்ணம் பூசப்பட்டு புதுப்பிக்கப்படுகிறது. புதுதாக ஓவியங்கள் வரைவதற்கு தொல்லியல் துறை கூறவில்லை. பழைய ஓவியங்கள் அதன் தன்மை மாறாமல் அப்படியே புதுப்பித்து வரைந்துகொண்டிருக்கிறோம். சாதாரண ஓவியம் வரைவது போல் சுவரோவியங்கள் வரைய முடியாது. இந்த பணிகள் முடிய மூன்று மாதங்களுக்கு மேலாகும்”

    இவ்வாறு அவர் கூறினார்.

    தற்போது கருவறையின் மேற்கு, வடக்கு, தெற்கு பகுதி ஓவியங்கள் புதுப்பிக்கப்படுகிறது. அதே வேளை கிழக்குப்பகுதியில் முன்னரே ஓவியங்கள் சிதலமடைந்துள்ளதால் கிழக்குப்பகுதியில் சுண்ணாம்பு பூசி வைத்துள்ளனர். மூன்று பகுதிகளில் ஓவியங்கள் இடம்பெறும் போது ஒரு பகுதியில் மட்டும் ஓவியங்கள் இல்லாமல் இருப்பது நல்லதல்ல. எனவே கருவறையின் கிழக்குப்பகுதி சுவற்றிலும் சுவரோவியம் வரைய அறநிலையத்துறை முன்வர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஸ்ரீவைகுண்டம் அய்யா வைகுண்டர் தை திருவிழாவின் நிறைவு நாளில் தாமிரபரணி ஆற்றில் இருந்து பதம் எடுத்து வருதல், சந்தனகுடம் எடுத்து நிழல்தாங்கலை வலம் வந்து அய்யாவுக்கு நேமித்தல் நடந்தது.
    ஸ்ரீவைகுண்டம் மேல கோட்டைவாசல் தெருவில் உள்ள அய்யா வைகுண்டர் நிழல்தாங்கலில் தை திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் அய்யாவுக்கு பணிவிடை, உகப்பெருக்கு, தர்மம், உச்சிப்படிப்பு போன்றவை நடந்தது.

    விழாவின் நிறைவு நாளான நேற்று அதிகாலையில் அய்யாவுக்கு பணிவிடை, காலையில் உகப்பெருக்கு, பால்தர்மம், தாமிரபரணி ஆற்றில் இருந்து பதம் எடுத்து வருதல், சந்தனகுடம் எடுத்து நிழல்தாங்கலை வலம் வந்து அய்யாவுக்கு நேமித்தல் நடந்தது.மதியம் உச்சிப்படிப்பு, சிறப்பு அன்னதானம் நடந்தது. மாலையில் அய்யாவுக்கு பணிவிடை, உகப்பெருக்கு நிகழ்ச்சி, இரவில் பள்ளி உணர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    எண்ணிய யாவையும் அருளும் ஆழத்து விநாயகர் 2-வது படைவீட்டு நாயகராக விருத்தாசலத்திற்கு பெருமை சேர்க்கும் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் அமர்ந்து ஆட்சி புரிகிறார்.
    முருகருக்கு எப்படி அறுபடை வீடுகள் உண்டோ அதே போன்று, விநாயகருக்கும் அறுபடை வீடுகள் உள்ளது. அந்த வகையில் திருவண்ணாமலை வினை தீர்க்கும் விநாயகர், விருத்தாசலம் ஆழத்து விநாயகர், திருக்கடவூர் கள்ளவாரணப் பிள்ளையார், மதுரை சித்தி விநாயகர் , காசி துண்டி ராஜகணபதி, திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார் ஆவார்கள்.

    எண்ணிய யாவையும் அருளும் ஆழத்து விநாயகர் 2-வது படைவீட்டு நாயகராக விருத்தாசலத்திற்கு பெருமை சேர்க்கும் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் அமர்ந்து ஆட்சி புரிகிறார். கோவில் உள்ளே முதல் வெளிப்பிராகாரத்தில் சுமார் 20 அடி ஆழத்திற்குள், இவர் அமர்ந்து இருப்பதால், ஆழத்து விநாயகர் என்று அழைக்கிறார்கள்.

    அங்குள்ள படிகளின் வழியாக இறங்கி இவரை வழிபடலாம். கல்வியும் செல்வமும் அளிக்கும் இந்த விநாயகர் ஆயிரம் ஆண்டு பழைமை கொண்டவர். சிவன் ஆலயத்தில் இருந்தாலும் இவருக்குத் தனி கொடிமரமும் தனியான விழாவும்(மாசிமக பெருவிழாவுக்கு முன்பாக இவருக்கு 10 நாட்கள் விழா நடைபெறும்) நடத்தப்படுகிறது.

    சதுர்த்தி மற்றும் சங்கடஹர சதுர்த்தி தினங்களின் போது, ஆழத்து விநாயகரை வேண்டி சிதறு தேங்காய் நேர்த்திக் கடன் செலுத்தினால் எண்ணியதெல்லாம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
    ரதசப்தமி விழா நடைபெறுவதையொட்டி திருப்பதிகோவில் வளாகம் முழுவதும் வண்ண மலர்கள், பழவகைகள் கொண்டு அலங்காரம் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் ரதசப்தமி விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் சூரிய உதயம் தொடங்கி இரவு வரை ஏழுமலையான் அடுத்தடுத்து 7 வாகனங்களில் மாடவீதிகளில் உலா வருவார்.

    சாமி வீதி உலா வருவதை காண்பதற்காக மாடவீதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். இந்தாண்டு ரதசப்தமி விழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு உள்ளேயே ஏழுமலையான் உலா நடைபெறுகிறது.

    செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் 8 மணி வரை ஏழுமலையான் சூரிய பிரபை வாகனத்திலும், 9 மணி முதல் 10 மணி வரை சின்ன சே‌ஷ வாகனத்திலும், 11 மணி முதல் 12 மணி வரை கருட வாகனத்திலும், மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அம்ச வாகனத்திலும், 2 மணி முதல் 3 மணி வரை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியும், மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்ப விருட்ச வாகனத்திலும், 6 மணி முதல் 7 மணி வரை சர்வ பூபால வாகனத்திலும், இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திர பிரபை வாகனத்திலும் காட்சியளிக்கிறார்.

    ரதசப்தமி விழா நடைபெறுவதையொட்டி கோவில் வளாகம் முழுவதும் வண்ண மலர்கள், பழவகைகள் கொண்டு அலங்காரம் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    மேலும் கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின்விளக்கு அலங்காரம் செய்யும் பணியில் தேவஸ்தான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
    கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மாசித்திருவிழா கொடியேற்றம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது..

    காலை 5.20மணிக்கு கோவில் செப்பு கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து கொடி மரத்திற்கு பல்வேறு அபிசேக பொருட்களால் அபிஷேகம், நடைபெற்று அலங்காரமாகி மகா தீபாராதனை நடைபெற்றது.

    கொடியேற்ற நிகழ்ச்சியில் திருவாவடுதிரை ஆதினம் அருணாச்சல தம்பிரான் சுவாமிகள், தக்கார் பிரதிநிதி டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் அக்தார் கருத்தபாண்டி நாடார்,இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், தாசில்தார் சுவாமிநாதன், கோவில் உதவி ஆணையர் வெங்கடேஷ், கண்காணிப்பாளர்கள் ராஜ்மோகன், சொர்ணம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மாசித்திருவிழா கொடியேற்றம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருவதால் மாசித்திருவிழாவில் அனைத்து நாட்களிலும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அரோகரா கோ‌ஷம் எழுப்பி பக்தி பரவசத்துடன் சாமியை தரிசித்தனர். தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    திருவிழாவின் முக்கிய விழாவான 5-ம் திருநாள் (11-ந் தேதி) இரவு 7.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவகொழுந்தீஸ்வரர் கோவிலில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது.

    7-ம் திருநாளான (13-ந்தேதி) அதிகாலை 4.30 மணிக்கு உருகு சட்டசேவை நடக்கிறது. காலை 8.30 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளுகிறார். மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

    8-ம் திருநாள் அதிகாலை சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி கோலத்தில் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது.

    அன்று பகல் 12 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் எழுந் தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம் (16-ந்தேதி) நடக்கிறது. அன்று காலை 6.30 மணிக்கு மேல் விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி நான்கு ரதவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.

    11-ம் திருநாளான (17-ந் தேதி) தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்று இரவு சுவாமியும் அம்மாளும் 11 முறை தெப்பத்தில் சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். மேலும் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.

    இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் மட்டுமின்றி முகூர்த்த தினம் என்பதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் பலர் தனித்தனியாக கிரிவலமும் சென்றனர்.
    கூட்டம் குவிந்ததால் பழனி மலைக்கோவிலில் வெளிப்பிரகாரத்திலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
    பழனி முருகன் கோவிலில் கடந்த மாதம் தைப்பூச திருவிழா நடைபெற்றது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் திருவிழா முடிவடைந்த பின்னரும் பல்வேறு பகுதிகளில் பக்தர்கள் பல்வேறு காவடி எடுத்து பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் நேற்று வார விடுமுறை என்பதால் பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது.

    இதனால் அதிகாலை முதலே பழனி பஸ்நிலையம், அடிவாரம், கிரிவீதிகள், சன்னதிவீதி, பாதவிநாயகர் கோவில், திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்லும் பிரதான பாதையான படிப்பாதையில் பக்தர்கள் கூட்டத்தை காண முடிந்தது. அதேபோல் ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில்நிலையத்திலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.

    கூட்டம் குவிந்ததால் மலைக்கோவிலில் வெளிப்பிரகாரத்திலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

    இந்நிலையில் நேற்று பகல் முழுவதும் கடும் வெயில் இருந்ததால் பக்தர்களின் நலனுக்காக வெளிப்பிரகாரத்தில் கயிற்றால் ஆன விரிப்புகள் விரிக்கப்பட்டு அதில் தண்ணீர் தெளிக்கப்பட்டது. மேலும் ஆங்காங்கே தொட்டிகளில் குடிநீர் வைக்கப்பட்டு இருந்தது.
    படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் நேற்று நடந்த கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனையொட்டி பக்தர்கள் மீது டிரோன் மூலம் புனிதநீர் தெளிக்கப்பட்டது.
    திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள படவேடு ரேணுகாம்பாள் கோவில் பிரசித்தி பெற்றதாகும். இந்து சமய அறநிலைய துறைக்கு உட்பட்ட இந்த கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வந்து தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

    சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் நேற்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு கடந்த 2-ந் தேதி தொடங்கி நேற்று காலை வரை 6 கால யாகபூஜைகள் நடந்தன. யாக பூஜைகள் முடிந்ததும் அதில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் கலசங்கள் ராஜகோபுரம், அம்மன் மூலஸ்தான கோபுரம், சோமநாதீஸ்வரர் கோவில் உள்பட பரிவாரமூர்த்திகள் விமானங்களுக்கு மேளதாளங்கள் முழங்க எடுத்துச்செல்லப்பட்டன.

    அதனை தொடர்ந்து கோபுரங்கள், விமானங்கள் மீது காலை 8.15 மணிளவில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மீது டிரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.

    பின்னர் கருவறை ரேணுகாம்பாள் அம்மன், சோநாதீஸ்வரர், உமாமகேசுவரி அம்மன் உள்பட அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் புனித நீர் அபிஷேகம் செய்து தீபாராதனை நடைபெற்றது. விழாவில் உள்ளூர் பக்தர்கள் உபயதாரர்கள் மட்டும் 3 ஆயிரம் பேர் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

    எனினும் அதிகாலை முதலே பல்வேறு ஊர்களிலிருந்து வந்த பக்தர்கள் மாடவீதியில் குவிந்து கும்பாபிஷேகம் நடந்ததை தரிசனம் செய்தனர். இரவில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
    விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    டலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்றது.

    பஞ்ச பூதங்களை மையமாக கொண்டு பல்வேறு சிறப்புகளை விளக்கும் இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த 2017-ம் ஆண்டு திருப்பணிகள் தொடங்கி நடைபெற்றது.

    பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் புதுப்பொலிவுடன் ஜொலிக்கும் விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் 20 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேக நாளான நேற்று காலை 6-ம் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி நடந்தது.

    தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசம் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, காலை 8 மணியளவில் கோவில் மூலவர், ராஜ கோபுரங்கள், பரிவார தெய்வங்கள், கொடி மரம் என அனைத்து கோபுர கலசத்திற்கும் ஒரே நேரத்தில் புனித ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர், மூல மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.

    இதற்கிடையே கும்பாபிஷேகம் நடைபெற்றவுடன் மலர் தூவுவதற்காக கொண்டு வரப்பட்ட ஹெலிகாப்டர் வானுயர பறந்து கோவிலை 3 முறை வலம் வந்தது. தொடர்ந்து 5 கோபுரங்கள் மற்றும் விமானங்கள் மீதும், 4 கோட்டை வீதிகள், விருத்தாசலம் மணிமுக்தாறு, பாலக்கரை ஆகிய இடங்களில் வானில் இருந்தவாறு கும்பாபிஷேகத்தை தரிசித்த பக்தர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. மேலும் நவீன எந்திரங்கள் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

    கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மேலும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.10-ம் திருநாளான 16-ந் தேதி (புதன்கிழமை) காலை தேரோட்டம் நடக்கிறது.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா இன்று (திங்கட்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கி, வருகிற 18-ந் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் சுவாமி, அம்பாள் காலை மற்றும் மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான 7-ம் திருநாள் 13-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்திலும், 8-ம் திருநாள் அன்று அதிகாலையில் சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி கோலத்திலும், பின்னர் பகலில் பச்சை சாத்தி கோலத்திலும் எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

    10-ம் திருநாளான 16-ந் தேதி (புதன்கிழமை) காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

    மாசித்திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று மாலை கொடிப்பட்டம் வீதி உலா நடந்தது. இதையொட்டி திருச்செந்தூர் வடக்கு ரதவீதியில் உள்ள 14 ஊர் செங்குந்தர் 12-ம் திருவிழா மண்டபத்தில் சிதம்பர தாண்டவ விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கொடிப்பட்டத்துக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

    பின்னர் யானை மீது அரிஹர சுப்பிரமணியன் அய்யர் அமர்ந்து பிடித்தவாறு கொடிப்பட்டம் 8 வீதிகளிலும் உலா வந்தது.
    ×