என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மாசி தெப்பத்திருவிழாவையொட்டி நம்பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் வீதி உலா வந்தார்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத் திருவிழா கடந்த 4-ந்தேதி தொடங்கி வருகிற 12-ந்தேதி வரை நடைபெறுகிறது. தெப்பத்திருவிழாவின் முதல் நாள் ஹம்ச வாகனத்திலும், 2-ம்நாள் ஹனுமந்த வாகனத்திலும், 3-ம்நாள் கற்பகவிருட்ச வாகனத்திலும் நம்பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    தெப்பத்திருவிழாவின் 4-ம்நாளான நேற்று மாலை நம்பெருமாள் வெள்ளி கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு உள்திருவீதிகளில் வலம் வந்து ரெங்கவிலாசம் மண்டபம் வந்தடைந்தார். பின்னர் மாலை 6 மணிக்கு நம்பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் புறப்பட்டு உள்திருவீதிகளில் வலம் வந்து இரவு 8.30 மணிக்கு வாகன மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    திருவிழாவின் 5-ம் நாளான 8-ந்தேதி இரட்டை பிரபை வாகனத்திலும், 9-ந்தேதி யானை வாகனத்திலும் உள்திருவீதிகளில் வலம் வருகிறார். தெப்பத்திருவிழாவின் 7-ம் நாளான 10-ந்தேதி மாலை 6.30 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு நெல்லளவு கண்டருளி உள்வீதிகளில் வலம் வந்து மூலஸ்தானம் சேருகிறார்.

    முக்கிய திருநாளான தெப்பத்திருவிழா 8ம் நாளான 11-ந்தேதி நடைபெறுகிறது. அன்று மாலை 3 மணியளவில் மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 4.30 மணிக்கு வந்து சேருகிறார். இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணிவரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு மூலஸ்தானம் சேருகிறார்.

    9-ம் திருநாளான 12-ந்தேதி காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி காலை 8 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். இரவு 7 மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்த காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது.
    திருப்பதியில் கடந்த 2 ஆண்டுகளாக ரதசப்தமி விழா கொரோனா தொற்று காரணமாக கோவிலுக்குள்ளேயே நடத்தப்பட்டு வருகிறது. விழாவில் பக்தர்களுக்கு அனுமதி வழங்காததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மினி பிரம்மோற்சவமான ரதசப்தமி விழா இன்று அதிகாலை தொடங்கி நடந்து வருகிறது. காலை சூரிய உதயம் தொடங்கி இரவு வரை ஏழுமலையான் அடுத்தடுத்து 7 வாகனங்களில் எழுதருளிகிறார்.

    கொரோனா விதிமுறை முன்னெச்சரிக்கையால் கோவிலுக்குள்ளேயே காட்சி தருகிறார். கோவில் வளாகத்தில் உலா வந்தார்.

    இன்று காலை 6 மணி முதல் 8 மணி வரை ஏழுமலையான் சூரிய பிரபை வாகனத்தில் அருள்பாலித்தார். 9 மணி முதல் 10 மணி வரை சின்ன சே‌ஷ வாகனத்திலும், 11 மணி முதல் 12 மணி வரை கருட வாகனத்திலும், மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அம்ச வாகனத்திலும், 2 மணி முதல் 3 மணி வரை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடக்கிறது.

    மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்ப விருட்ச வாகனத்திலும், 6 மணி முதல் 7 மணி வரை சர்வ பூபால வாகனத்திலும், இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திர பிரபை வாகனத்திலும் காட்சியளிக்கிறார்.

    ரதசப்தமி விழாவில் அர்ச்சகர்கள் தேவஸ்தான அதிகாரிகள் ஊழியர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

    ரதசப்தமி விழா அன்று மாடவீதிகளில் சாமி உலா வருவதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் மாட வீதியில் குவிவார்கள்.

    கடந்த 2 ஆண்டுகளாக ரதசப்தமி விழா கொரோனா தொற்று காரணமாக கோவிலுக்குள்ளேயே நடத்தப்பட்டு வருகிறது. விழாவில் பக்தர்களுக்கு அனுமதி வழங்காததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
    ஒரு சமூகத்தில் ஏமாற்று, மோசடி, நம்பிக்கைத் துரோகம், வஞ்சனை என்று கெட்ட செயல்கள் குடிகொண்டிருந்தால் அந்த சமூகத்திற்கு இறைவனின் அருள் எவ்வாறு கிடைக்கும்?
    ஒவ்வொரு மனிதர்களும் வணக்க வழிபாடுகளில் மட்டுமல்ல, நற்பண்புகளையும் பேண வேண்டும் என்பதையும் இஸ்லாம் வலியுறுத்துகிறது. இஸ்லாத்தின் சிறப்பே நற்குணம் தான்.

    ஒரு முஸ்லிமிடம் இருக்க வேண்டிய குணநலன்களை இஸ்லாம் விரிவாக விவரிக்கிறது.

    இத்தகைய குணங்கள் இருந்தாலே அவன் முஸ்லிம் என்று, நற்பண்புகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறது இஸ்லாம்.

    தன்னுடைய வருகையின் நோக்கத்தைக் குறித்து நபிகள் நாயகம் குறிப்பிடும்போது இவ்வாறு கூறுகிறார்: ‘நற்குணங்களைப் பரிபூரணம் செய்வதற்காகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்’ (மாலிக்).

    ஒரு சமூகத்தில் ஏமாற்று, மோசடி, நம்பிக்கைத் துரோகம், வஞ்சனை என்று கெட்ட செயல்கள் குடிகொண்டிருந்தால் அந்த சமூகத்திற்கு இறைவனின் அருள் எவ்வாறு கிடைக்கும்?

    அல்லது, ஒரே குடும்பத்தில் இருக்கும் உறுப்பினர்கள் ஒருவரோடு ஒருவர் வெறுப்புடனும், பொறாமையுடனும் நடந்து கொண்டால் அந்த குடும்பத்திற்கு அல்லாஹ்வின் அருள் எவ்வாறு கிடைக்கும்?

    ஆக, இங்கே நாம் புரிந்துகொள்வது என்னவென்றால் ஆண்டவனின் அருளுக்கும் நற்குணங்களுக்கும் நெருங்கிய சம்பந்தம் உள்ளது என்பதே.

    இஸ்லாம் கூறும் வணக்க வழிபாடுகளின் நோக்கமே நற்குணங்கள் தான் என்பதை அருள்மறை குர் ஆனைப் புரட்டினால் புரிந்துகொள்ளலாம்.

    நோக்கங்களைச் சரியாக புரிந்து கொள்ளாவிடில் வணக்கங்கள் அனைத்தும் வெறும் உடற்பயிற்சிகளாகவே மாறிவிடும்.

    ‘நற்குணங்களில் பலவீனமாக இருப்பவன் இறை நம்பிக்கையிலும் (ஈமான்) பலவீனமானவனாகவே இருப்பான்’ என்று இஸ்லாம் கூறுகின்றது.

    நபிகள் நாயகம் கூறினார்கள்: ‘இறைவன் மீது ஆணை! அவன் இறை நம்பிக்கையாளன் அல்ல, இறைவன் மீது ஆணை! அவன் இறை நம்பிக்கையாளன் அல்ல, இறைவன் மீது ஆணை! அவன் இறை நம்பிக்கையாளன் அல்ல!’.

    மூன்று தடவை இவ்வாறு இறைவனின் தூதர் கூறவும் நபித்தோழர்கள் கேட்டனர்: ‘அல்லாஹ்வின் தூதரே! யாரைக் குறித்து இவ்வாறு கூறுகின்றீர்கள்?’.

    அதற்கு அண்ணலார் கூறினார்: ‘எவனுடைய தீங்கிலிருந்து அண்டை வீட்டார் பாதுகாப்பு பெறவில்லையோ அவன்’. (முஸ்லிம், அஹ்மத்)

    மேலும், நபிகள் நாயகம் கூறினார்கள்: ‘வெட்கமும் இறை நம்பிக்கையும் இரண்டு கொம்புகள். ஒன்று போனால் மற்றொன்றும் போய்விடும்’. (தபரானி, ஹாகிம்)

    முழுமையாக இறை நம்பிக்கை கொண்ட ஒருவர், ஒருநாளும் வெட்கம் கெட்ட செயலை செய்ய மாட்டார் என்பதையே அண்ணல் நபி இங்கே சுட்டிக்காட்டுகிறார்கள்.

    நற்குணங்களைப் பேணுபவனுக்கு இவ்வுலகிலும் நன்மை, மறுமையிலும் நன்மையே. இதன் சிறப்புக்களைக் குறித்து நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

    ‘மறுமையில் நன்மை தீமை நிறுக்கப்படும் தராசில் அதிக கனம் தருவது நற்குணங்களே’. (அபூதாவூத், திர்மதி)

    ‘நற்குணங்களில் பரிபூரணம் பெற்றவரே இறை நம்பிக்கையில் பரிபூரணம் பெற்றவராவார்’. (அபூதாவூத், அஹ்மத்)

    ‘நான் அதிகம் நேசிப்பவரும், என்னோடு மறுமை நாளில் மிக நெருக்கமாக இருப்பவரும் யார் எனில், சிறந்த நற்குணங்கள் கொண்டவரே!’. (திர்மதி, அஹ்மத்)

    ‘சுவனத்தில் மனிதன் அதிகம் நுழைவதற்குக் காரணமாக அமைவது இறையச்சமும், நற்குணமும் தான்’ (திர்மதி, இப்னு மாஜா)

    ‘இரவெல்லாம் நின்று வணங்கி, பகலெல்லாம் நோன்பு நோற்பவனுக்கு கிடைக்கும் பாக்கியத்தைவிட நற்குணத்தால் சிறந்தவனுக்கு அதிக பாக்கியம் கிடைக்கும்’. (அபூதாவூத், அஹ்மத்).

    இம்மையிலும், மறுமையிலும் பல்வேறு நன்மைகள் தரும் நற்குணத்தில் சிறந்துவிளங்கி இறைவனின் அருளை நாம் அனைவரும் பெறுவோம், ஆமீன்.

    குளச்சல் நூஹ் மஹ்ழரி.
    திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் மாசி பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், 13-ந் தேதி நடைபெறுகிறது. 15-ந் தேதி கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் நடக்கிறது.
    சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சாமி உடனுறை வடிவுடையம்மன் கோ‌வில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மாசி பிரம்மோற்சவ விழா, நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக தியாகராஜ சாமி சன்னதி மண்டபத்தில் கலசங்கள் நிர்மாணிக்கப்பட்டு விசேஷ பூஜைகள், யாகங்கள் நடந்தன. விநாயகர் உற்சவர், தியாகராஜ சாமி சிறப்பு மலர் அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பின்னர் வேத மந்திரங்கள், மங்கல வாத்தியங்கள் முழங்க, கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் ஒற்றீசா, தியாகேசா' என விண்ணதிர முழங்கினர்.

    விழாவில் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை உற்சவர் சந்திர சேகரர் சூரிய பிரபை, மாலையில் சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளி மாடவீதி உலா வருவார். இதேபோல் விழா நாட்களில் பூதம், சிம்மம், நாகம், ரிஷபம், அதிகார நந்தி, அஸ்தமானகிரி விமானம், யானை, புஷ்ப பல்லக்கு, குதிரை, இந்திர விமானத்தில், உற்சவ சந்திரசேகரர் எழுந்தருளி மாடவீதி உலா வருவார்.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், வருகிற 13-ந் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 9 மணியளவில் உற்சவர் வடிவுடையம்மன், சந்திரசேகரர் திருத்தேரில் எழுந்தருளி வீதி உலா வருவார்கள். 15-ந் தேதி கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று இரவு குழந்தை ஈஸ்வரர், கல்யாணசுந்தரம் மற்றும் சங்கிலி நாச்சியாருக்கும் மகிழ மரத்தடியில் காட்சி தரும் மகிழடி சேவை நடைபெறுகிறது.

    வருகிற 17-ந்தேதி இரவு தியாகராஜ சாமி பந்தம் பறிஉற்சவம், 18 திருநடனத்துடன் விழா நிறைவுபெறுகிறது.

    தியாகராஜ சாமி கோவிலின் மிக முக்கிய திருவிழா என்பதால் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். எனவே விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக கோவில் உதவி கமிஷனர் சித்ரா தேவி தெரிவித்தார்.
    தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, சபரிமலை தரிசனத்திற்கு தினசரி 15 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் தரிசன அனுமதி அளிக்கப்படுகிறது.
    மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 12-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது. மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வழக்கம்போல் அதிகாலை 5 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    தந்திரி கண்டரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜைகளை நிறைவேற்றுவார்.

    5 நாட்கள் நடைபெறும், சிறப்பு பூஜைகள், வழிபாடுகளுக்கு பிறகு 17-ந்தேதி இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜைக்கு பின்னர் அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, கோவில் நடை அடைக்கப்படுகிறது.

    தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, சபரிமலை தரிசனத்திற்கு தினசரி 15 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் தரிசன அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கான ஆன்லைன் முன் பதிவு நேற்று தொடங்கியது.
    பிப்ரவரி மாதம் 8-ம் தேதியில் இருந்து பிப்ரவரி மாதம் 14-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    8-ம் தேதி செவ்வாய் கிழமை :

    * ரதசப்தமி
    * சூரிய சந்திரர் விரதம்
    * சித்தயோகம்
    * பீஷ்மாஷ்டமி
    * குரங்கனி முததுமாலையம்மன் பவனி
    * சந்திராஷ்டமம் - உத்திரம், ஹஸ்தம்

    9-ம் தேதி புதன் கிழமை :
     
    * கார்த்திகை விரதம்
    * பெருவயல், திருத்தணி தலங்களில் முருக பெருமான் பவனி
    * சந்திராஷ்டமம் - சித்திரை
     
    10-ம் தேதி வியாழக்கிழமை :

    * திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் மரத் தோளுக்கினியானில் பவனி
    * திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டாள் தெப்பம்
    * சந்திராஷ்டமம்-சுவாதி

    11-ம் தேதி வெள்ளிக்கிழமை  :

    * சுபமுகூர்த்தம்
    * சித்தயோகம்
    * நத்தம் மாரியம்மன் பால்காவடி உற்சவம்
    * திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாள் கருட வாகன பவனி
    * சந்திராஷ்டமம் - விசாகம்

    12-ம் தேதி சனிக்கிழமை :

    * சர்வ ஏகாதசி
    * பெருவயல் முருகப்பெருமான் மயில் வாகன பவனி
    * காரமடை அரங்கநாதர் சிம்ம வாகன பவனி
    * வளர்பிறை ஏகாதசி
    * சந்திராஷ்டமம் - அனுஷம்

    13-ம் தேதி ஞாயிற்று கிழமை :

    * சித்தயோகம்
    * விஷ்ணுபதி புண்ணியகாலம்
    * வராகத்துவாதசி
    * திருமெய்யம் ஆண்டாள் முத்துக்குறி கண்டருளல்
    * மதுரை கூடலழகர் எடுப்பு சப்பரத்தில் பவனி
    * சந்திராஷ்டமம் - கேட்டை

    14-ம் தேதி திங்கள் கிழமை  :

    * வராக கல்பாதி
    * சுபமுகூர்த்தம்
    * பிரதோஷம்
    * நத்தம் மாரியம்மன் பவனி
    * சந்திராஷ்டமம் -மூலம்
    தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் ஆண்டு தோறும் மாசித் திருவிழா 11 நாட்கள் ஒவ்வொரு சமுதாயத்தினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில், பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலும் ஒன்றாகும். இங்கு ஆண்டு தோறும் மாசித் திருவிழா 11 நாட்கள் ஒவ்வொரு சமுதாயத்தினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், 5.15 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.

    முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும் நடைபெற்றது. கொடியேற்றத்தையொட்டி பாவூர்சத்திரம் பகுதியில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பால்குட ஊர்வலம் கோவிலை வந்தடைந்தவுடன் மதியம் 12 மணிக்கு பாலாபிஷேகம், உச்சிகால பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மாலை வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. பின்னர் இசை கச்சேரி நடைபெற்றது. முதல் நாள் திருவிழா பாவூர்சத்திரம் காமராஜ் நகர் பொதுமக்கள் சார்பில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக் குழுவினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
    விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டுக்கான மாசிமக பெருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ஐந்து கோபுரங்கள், ஐந்து பிரகாரங்கள், ஐந்து தீர்த்தங்கள், ஐந்து நந்திகள், ஐந்து கொடிமரங்கள் என அனைத்தும் ஐந்தால் ஆன சிறப்புடைய இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான மாசிமக பெருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அப்போது சிறப்பு பூஜைகள் செய்து, ஐந்து கொடி மரங்களிலும் கொடி ஏற்றப்படும். அதைத்தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழாவின்போது தினந்தோறும் காலை, மாலை சாமிக்கு சிறப்பு பூஜைகள், சிறப்பு அலங்காரம் மற்றும் வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    அதில் முக்கிய விழாக்களில் 6-ம் நாள் விழாவான விருத்தகிரீஸ்வரர் விபத்து முனிவருக்கு காட்சி தரும் ஐதீக விழா 13-ந் தேதியும், 9-ம் நாள் விழாவாக வருகிற 16-ந் தேதி தேரோட்டமும், 17-ந் தேதி சிகர நிகழ்ச்சியான மாசிமக தீர்த்தவாரி திருவிழாவும் நடக்கிறது. 18-ந் தேதி தெப்ப திருவிழாவும், 19-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும், 20-ந் தேதி விடையாற்றி உற்சவம் ஆரம்ப நிகழ்ச்சியும், (அடுத்த மாதம்) மார்ச் 1-ந் தேதி விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
    ரத சப்தமி அன்று விரதம் மேற்கொண்டு, எருக்கன் இலைகளைத் தலையில் வைத்துக்கொண்டு சாஸ்திரத்தில் சொல்லியபடி நீராடினால் தெரிந்தோ, தெரியாமலோ, செய்த பாவங்கள் நீங்கும்.
    ரத சப்தமியன்று காலை குளிக்கும்போது சூரியனுக்குப் பிடித்த எருக்கன் இலைகளை ஏழு அல்லது ஒன்பது எண்ணிக்கையில் எடுத்து அடுக்கி, அதன்மீது அட்சதை, எள் வைக்க வேண்டும். ஆணுக்கு அதனுடன் விபூதியும், பெண்ணுக்கு அதனுடன் மஞ்சள் பொடியும் வைக்க வேண்டும். இவ்விலை அடுக்கைத் தலைமீது வைத்து ஸ்நானம் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால், மின்சாரம் எப்படி உலோகக் கம்பி வழியே பாய்கிறதோ, அப்படி சூரியனின் ஏழு வகைக் கதிர்கள் அன்று மட்டும் எருக்கன் இலை வழியே இழுக்கப்பட்டு விரைவில் நம் உடலில் பாய்ந்து, உடல் உபாதைகளையும் நோய்களையும் நீக்குகிறது என்றுதான் நம் முன்னோர்கள் இதைச் செய்தனர். நாமும் அதையே பின்பற்றி மேற்கூறிய பலனை அடையலாமே.

    இப்படிக் குளித்தபின் வீட்டில் சூரியஒளி படும் சுத்தமான இடத்தில் செம்மண்ணால் மெழுகி சூரிய ரத கோலமிட்டு, அதில் சூரிய- சந்திரர்களை வரைய வேண்டும். பின் வண்ண மலர்களால் அலங்கரித்துப் பூஜை செய்ய வேண்டும். இதற்குமுன் கிண்ணங்களில் அரிசி, பருப்பு, வெல்லம் வைத்து, நைவேத்தியத்திற்கு சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடையும் வைக்க வேண்டும். அதன்பின் முதலில் கணபதி பூஜை, பின் சூரிய நாராயண பூஜை செய்ய வேண்டும். ஷோடச உபசாரத்துடன் இப்பூஜையைச் செய்தால் சூரியன் சாந்தியடைந்து உலகிற்கு நன்மை செய்வதுடன், பூஜிப்பவர்களுக்கும் வளமும் நலமும் தந்து சிறப்பாக வாழ வைப்பான்.

    ரத சப்தமி அன்று விரதம் மேற்கொண்டு, எருக்கன் இலைகளைத் தலையில் வைத்துக்கொண்டு சாஸ்திரத்தில் சொல்லியபடி  நீராடினால் தெரிந்தோ, தெரியாமலோ, செய்த பாவங்கள் நீங்கும் அதற்காக மேன்மேலும் பாவங்கள் செய்து, அடுத்து வரும் ரத சப்தமியில்  போக்கிக் கொள்ளலாம் என்று நினைக்கக்கூடாது, தவிர ரத சப்தமிக்கு அடுத்த நாள் அஷ்டமி திதி. இந்த அஷ்டமி திதியை பீஷ்மாஷ்டமி  என்பர். அன்று புனிதநீர் நிலைக்குச் சென்று பீஷ்மருக்கான தர்ப்பணமும் நம்மில் வாழ்ந்த முன்னோர்களுக்காக பித்ரு பூஜையும்  செய்தால், சுகமான வாழ்வு நிரந்தரமாகக் கிட்டும் என்பது நம்பிக்கை.

    இந்நாளில் விரதம் மேற்கொள்வதால் ஆரோக்கியம், நோய் இல்லாமை, செல்வம், புத்திரப்பேறு, நீண்ட ஆயுள், பகைவர்களை வெல்லும் சக்தி, வெற்றி, நிலம், தானியம், புண்ணியம் ஆகியவை கிடைக்கும். மனக்கவலை, வியாதி நீங்கும்.

    சூரிய வழிபாடு ஆதிகாலம் முதல் உள்ளது. சூரிய வழிபாட்டிற்கு மந்திரம் தெரியாவிடில் பரவாயில்லை. எளிமையாக, "ஓம் நமோ ஆதித்யாய புத்திர் பலம் தேஹிமே சதா' என்று காலை சூரியனைப் பார்த்துக் கூறி, மூன்று முறை வணங்க வேண்டும்.
    இரவு முழுவதும் பக்தர்கள் தரிசனம் வழங்கி நாளை (8-ந்தேதி) புறப்பட்டு உற்சவர் சந்திரசேகரர் மற்றும் அம்பாள் மீண்டும் கோவிலுக்கு திரும்புவார்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை முதல் பங்குனி வரையிலான 12 மாதங்களில் நடக்கும் முக்கிய தீர்த்தவாரிகளில் தை மாதம் அமாவாசை முடிந்து 7-ம் நாள் நடக்கும் ரதசப்தமி தீர்த்தவாரியும் ஒன்று.

    இந்த நாளில்தான் சூரியன் 7 குதிரைகள் பூட்டிய ரதத்தில் வடக்கு நோக்கி திரும்புவதாக ஐதீகம். இந்த புனித நாளின் சிறப்பை பக்தர்களுக்கு உணர்த்த தீர்த்தவாரி நடைபெறும்.

    அதன்படி உற்சவர் சந்திரசேகரர் அம்பாளுடன் இன்று அதிகாலை 5 மணியளவில் கோவிலில் இருந்து புறப்பட்டு கலசபாக்கம் செய்யாற்றுக்கு புறப்பட்டு சென்றார்.

    முன்னதாக தனகோட்டிபுரம் கோவிலுக்கு சொந்தமான வயலுக்கு சென்று அங்குள்ள விளைநிலங்களை பார்வையிட்டார். அப்போது அங்கு அறுவடை செய்யப்பட்ட நெல்லில் பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்.

    இதையொட்டி சுவாமி- அம்பாள் செல்லும் வழிகளில் பக்தர்கள் திரண்டு வழிபட்டனர். தொடர்ந்து மேல செய்யாற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் திருமாமுடீஸ்வரர், அம்பாளுடன் பங்கேற்றார். இரவு முழுவதும் பக்தர்கள் தரிசனம் வழங்கி நாளை (8-ந்தேதி) புறப்பட்டு உற்சவர் சந்திரசேகரர் மற்றும் அம்பாள் மீண்டும் கோவிலுக்கு திரும்புவார்.
    திருப்பதி ஏழுமலையானை கீழ் திருப்பதியில் இருந்து நடந்து மலையேறிச் சென்று தரிசிப்பவர்கள் செல்லும்போது சொல்ல வேண்டிய சுலோகம் ஒன்று உள்ளது. அதை இங்கே பார்க்கலாம்.
    திருப்பதி ஏழுமலையானை கீழ் திருப்பதியில் இருந்து நடந்து மலையேறிச் சென்று தரிசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். அப்படிச் செல்லும்போது சொல்ல வேண்டிய சுலோகம் ஒன்று உள்ளது. அதை இங்கே பார்க்கலாம்.

    ஸ்வர்ணாசல மஹாபுண்ய ஸர்வதேவ நிஷேவித
    ப்ரம்மாதயோபி யம்தேவா: ஸேவந்தே ஸ்ரத்தயாஸஹ
    தம் பவந்தம் அஹம் பதத்ப்யாம் ஆக்ரமேயம் நகோத்தம
    க்ஷமஸ்வ ததகம் மேசத்ய தயயா பாபசேதஸ:
    த்வன்மூர்த்தநி க்ருதாவாஸம் மாதவம் தர்ஸயஸ்வமே.

    பொருள்:-

    பிரம்மதேவன் முதலான தேவர்கள், எந்த வேங்கட மலையை வணக்கத்துடன் வந்தடைந்து சேவிக்கின்றனரோ, அப்படிப்பட்ட தங்க மயமான, அளவு கடந்த புண்ணியம் உள்ளதும், சர்வ தேவர்களாலும் வணங்கப்பட்டதுமான, ஸ்ரீநிவாசனுக்கு இருப்பிடமான பர்வதமே.. என் கால்களால் தங்கள் மீது ஏறுகிறேன். அதனால் உண்டாகும் பாவங்களை கருணையினால் தாங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். தங்களின் சிகரத்தில் வசிக்கும் லட்சுமிபதியான ஸ்ரீவேங்கடவனை தாங்கள் எனக்குத் தரிசனம் செய்து வைக்க வேண்டும்.
    திருமலை திருப்பதி தேவஸ்தானம் சென்னையில் கட்டி வரும் பத்மாவதி தாயார் கோவிலில் வருகிற அக்டோபர் மாதம் கும்பாபிஷேகம் நடக்கிறது என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்தார்.
    திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் சென்னை தியாகராயநகரில் வெங்கடேச பெருமாள் கோவில் செயல்பட்டு வருகிறது. இங்கு உள்ளூர் ஆலோசனைக்குழு துணைத்தலைவர்களாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பி.யுமான கதிர் ஆனந்த், வேலூரைச் சேர்ந்த லட்சுமணன் வெங்கட சுப்பிரமணியன் மற்றும் பிரபாகர் ரெட்டி மற்றும் உறுப்பினர்களாக ஆனந்தகுமார், கிருஷ்ணராவ், கார்த்திகேயன் உள்ளிட்ட 24 பேரை தேவஸ்தானம் அறிவித்து இருந்தது.

    இவர்களுக்கான பதவி ஏற்பு விழா தியாகராயநகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடேச பெருமாள் கோவிலில் நேற்று நடந்தது. விழாவிற்கு தமிழ்நாடு, புதுச்சேரி மாநில ஆலோசனைக்குழு தலைவர் சேகர் ரெட்டி தலைமை தாங்கினார்.

    திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவர் ஓய்.வி.சுப்பா ரெட்டி, புதிய உறுப்பினர்களுக்கான ஆணைகளை வழங்கி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    பின்னர் ஒய்.வி.சுப்பா ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் ஓரிரு மாதங்களில் முழுமையாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வாய்ப்பு உள்ளது.

    சென்னை தியாகராயநகரில் உள்ள பத்மாவதி தாயார் கோவில் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்து வருகிற அக்டோபர் மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. அதேபோல், ராயப்பேட்டையில் உள்ள காலி இடத்திலும் கோவில் மற்றும் திருமண மண்டபம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. உளுந்தூர்பேட்டையில் புதிதாக கட்டப்பட உள்ள வெங்கடேச பெருமாள் கோவில் கட்டுமானத்திற்கான ஒப்பந்தப்புள்ளி வருகிற 28-ந்தேதி கோரப்பட்டு விரைவில் பணிகள் தொடங்க இருக்கிறது.

    சென்னையில் இருந்து பாதயாத்திரையாக திருமலைக்கு செல்லும் பக்தர்கள் நலன் கருதி ஊத்துக்கோட்டை மற்றும் சீத்தமாஞ்சேரி ஆகிய இடங்களில் பக்தர்களுக்கான தங்கும் இடம், குளியலறை வசதிகள் கட்டப்பட்டு வருகிறது. அதேபோல், புதுச்சேரியில் வெங்கடேச பெருமாள் கோவில் கட்டுவதற்காக புதுச்சேரி அரசிடம் மாற்று இடம் வழங்கவும், திட்டங்களுக்கு அனுமதி பெற மாநகராட்சியிடம் அனுமதி பெறவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மதுரையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தகவல் மைய வளாகத்தில் காலியாக உள்ள இடத்தில் கோவில் கட்டுவதற்காக கட்டிட கலைஞரை அடையாளம் காணுதல் மற்றும் திட்ட ஒப்புதலுக்கு நிறுவனத்திடம் அனுமதி பெறுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீரில் அரசு வழங்கிய 66 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டு வரும் வெங்கடேச பெருமாள் கோவில் இந்த ஆண்டு இறுதியில் பணிகள் நிறைவடையும். சென்னை தீவுத்திடல் மற்றும் கன்னியாகுமரியில் பிரம்மாண்டமான முறையில் சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் அடுத்த மாதம் (மார்ச்) நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×