
எண்ணிய யாவையும் அருளும் ஆழத்து விநாயகர் 2-வது படைவீட்டு நாயகராக விருத்தாசலத்திற்கு பெருமை சேர்க்கும் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் அமர்ந்து ஆட்சி புரிகிறார். கோவில் உள்ளே முதல் வெளிப்பிராகாரத்தில் சுமார் 20 அடி ஆழத்திற்குள், இவர் அமர்ந்து இருப்பதால், ஆழத்து விநாயகர் என்று அழைக்கிறார்கள்.
அங்குள்ள படிகளின் வழியாக இறங்கி இவரை வழிபடலாம். கல்வியும் செல்வமும் அளிக்கும் இந்த விநாயகர் ஆயிரம் ஆண்டு பழைமை கொண்டவர். சிவன் ஆலயத்தில் இருந்தாலும் இவருக்குத் தனி கொடிமரமும் தனியான விழாவும்(மாசிமக பெருவிழாவுக்கு முன்பாக இவருக்கு 10 நாட்கள் விழா நடைபெறும்) நடத்தப்படுகிறது.
சதுர்த்தி மற்றும் சங்கடஹர சதுர்த்தி தினங்களின் போது, ஆழத்து விநாயகரை வேண்டி சிதறு தேங்காய் நேர்த்திக் கடன் செலுத்தினால் எண்ணியதெல்லாம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.