என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஸ்பெயின் நாட்டில் பார்செலோனாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் தனுஷ் படத்திற்கு விருது கிடைத்திருக்கிறது. #Dhanush
    ஆங்கிலத்தில் உருவான ‘தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆப் தி பகிர்’ திரைப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் ஆங்கிலத்தில் தனுஷ் அறிமுகமானார்.

    படத்தில், தெருக்களில் மந்திரக் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் கலைஞர் வேடத்தில் தனுஷ் நடித்திருந்தார். தனக்கு பிரத்யேகமான மந்திர சக்திகள் இருப்பதாக மக்களை நம்பவைத்து அவர்களை வஞ்சிக்க முயற்சி செய்கிறார் தனுஷ்.



    இந்தியா, பிரான்ஸ், இத்தாலி, லிப்யா ஆகிய நாடுகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. ஸ்பெயின் நாட்டில் பார்செலோனாவில் சண்ட் ஜோர்டி சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆப் தி பகிர் படமும் திரையிடப்பட்டது.

    சிறந்த நகைச்சுவை திரைப்படத்துக்கான விருதை இந்தப் படம் தட்டிச் சென்றுள்ளது. ஏற்கெனவே இந்தியாவில் தேசிய விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்தவர் தனுஷ். தற்போது ஆங்கிலத்தில் முதல் படத்திலேயே விருதினை கைப்பற்றிவிட்டார்.
    எம்.ஸ்ரீநிவாஸ் ரவீந்திரா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா - பூஜா சவேரி நடிப்பில் வெளியாகி இருக்கும் `அர்ஜுன் ரெட்டி' படத்தின் விமர்சனம். #ArjunReddy #VijayDevarakonda
    சிறிய அளவில் திருடி பிழைப்பு நடத்தி வரும் விஜய் தேவரகொண்டா, பெரியதாக ஒருமுறை திருடி செட்டிலாக வேண்டும் என்று திட்டமிடுகிறார். இதற்காக கோயிலில் ஒன்றை தேர்வு செய்து திருட சென்ற இடத்தில் பூஜா சவேரியை பார்த்து காதல் வயப்படுகிறார்.

    விஜய்யை பார்க்கும் பூஜா, திருடன் என்று கத்த அங்கிருந்து தப்பித்து ஓடி ஒளிகிறார். அந்த இடத்தின் சொந்தக்காரர் விஜய் தேவரகொண்டாவை சக்திவாய்ந்த சாமியார் என நினைத்துக் கொண்டு அங்கேயே தங்க வைக்கிறார். வசதியான வாழ்க்கை கிடைக்க, விஜய்யும் அங்கேயே செட்டிலாகிவிட எண்ணுகிறார். சாமியார் என்ற முகமூடியுடன் பிரபலமாகும் விஜய்யை பார்க்க மக்கள் கூட்டம் வருகிறது. 



    ஆனால் விஜய் யார் என்பது தெரிந்த அந்த பகுதி ரவுடிகள், விஜய்யை வைத்து பணம் சம்பாதிக்க முயற்சிக்கின்றனர். விஜய் அவர்களிடம் இருந்து தப்பிக்க எண்ணும் போது, மீண்டும் பூஜாவை பார்க்க அங்கேயே இருந்துவிடுகிறார். 

    ஒருகட்டத்தில் விஜய் - பூஜா இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். தன்னை கரம்பிடிக்க வேண்டுமென்றால், விஜய் திருட்டுத்தனத்தை விட்டு நல்ல மனிதனாக திருந்தி வாழ வேண்டும் என்று வற்புறுத்துகிறார்.

    கடைசியில், விஜய் நல்ல வழிக்கு திரும்பினாரா? விஜய் - பூஜா இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே அர்ஜுன் ரெட்டியின் மீதிப்பாதி.



    விஜய் தேவரகொண்டாவின் ஆரம்ப காலத்தில் வெளியான படமாக இருந்தாலும், இதிலும் ரசிகர்களை கவரும்படியாகவே நடித்திருக்கிறார். பூஜா சவேரி அழகு தேவதையாக வந்து செல்கிறார். பல்லிரெட்டி பிருத்விராஜ், பிரபாகர், பிரகாஷ்ராஜ், ரகுபாபு எர்ரா, ஷக்கலக்க ஷங்கர், சுரேகா வாணி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.

    எம்.ஸ்ரீநிவாஸ் ரவீந்திரா இயக்கியிருக்கும் இந்த படம் காதல், காமெடி கலந்த படமாக உருவாகி இருக்கிறது. படம் ஓரளவுக்கு விறுவிறுப்பாக நகர்கிறது. ஆங்காங்கே திரைக்கதையில் தொய்வு ஏற்படும்படி இருக்கிறது.

    சாய் கார்த்திக்கின் இசையும், ஷியாம் கே நாயுடுவின் ஒளிப்பதிவும் அர்ஜுன் ரெட்டிக்கு பலம் சேர்த்திருக்கின்றன.

    மொத்தத்தில் `அர்ஜுன் ரெட்டி' ஒரிஜினல் இல்லை. #ArjunReddy #ArjunReddyReview #VijayDevarakonda #PoojaJhaveri

    சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தின் படப்பிடிப்பில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. #SyeraaNarasimhaReddy
    சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, நயன்தாரா, தமன்னா, சுதீப் என முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் சயீரா நரசிம்ம ரெட்டி என்ற படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

    தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தை சிரஞ்சீவியின் மகனும் தெலுங்கு நடிகருமான ராம்சரண் தயாரிக்கிறார். ஆந்திர மாநிலம் ரங்காரெட்டி பகுதியிலுள்ள கோக்கா பேட்டை என்ற இடத்தில் இருக்கும் சிரஞ்சீவிக்குச் சொந்தமான பண்ணை தோட்டத்திலேயே பிரமாண்ட கோட்டை அரங்கு அமைக்கப்பட்டு அதில் படத்தின் பெரும்பகுதி படமாக்கப்பட்டு வருகிறது.



    கடந்த ஒரு மாத காலமாக சிரஞ்சீவி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருப்பதால் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தின் படப்பிடிப்பு நடத்தப்படாமல் இருந்தது.

    சிரஞ்சீவி திரும்பியதால் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டது. இன்று காலை திடீர் என்று படப்பிடிப்பு நடந்து வரும் படப்பிடிப்புத் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



    தீ விபத்துக்கான காரணம் மற்றும் உயிர்ச்சேதம் குறித்து அறியப்படாத நிலையில், காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

    நேற்று மதியம் சென்னை மீனம்பாக்கம் பின்னி மில்லில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை சயீரா நரசிம்ம ரெட்டி படப்பிடிப்பில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. #SyeraaNarasimhaReddy #VijaySethupathi #Chiranjeevi #AmitabhBachchan

    தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Nayanthara #VigneshShivn
    தமிழின் முன்னணி கதாநாயகியாக வலம் வரம் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். நயன்தாரா சினிமாவில் உச்சத்தில் இருப்பதால் இருவரும் திருமணத்தை தள்ளிப்போட்டு வருகின்றனர்.

    ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் வசிப்பதாகவும் செய்தி வெளியானது. சமீபத்தில் விக்னேஷ் சிவனின் குடும்பத்தினருடன் நயன்தாரா தமிழ் புத்தாண்டை கொண்டாடிய படம் வைரல் ஆனது.



    இந்த சந்திப்பில் இருவரது திருமணம் குறித்து பேசப்பட்டதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் நிச்சயதார்த்தத்துக்கு நயன்தாரா சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் தகவல் வருகிறது. இதனால் விக்னேஷ் சிவன் உற்சாகம் அடைந்து இருக்கிறார். #Nayanthara #VigneshShivn

    அட்லி இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வரும் நிலையில், அடுத்த கட்டமாக படக்குழு டெல்லி செல்லவிருக்கிறது. #Thalapathy63 #Vijay
    அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். மகளிர் கால்பந்து போட்டியை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். இதனால் கால்பந்து வீராங்கனைகளாக இளம் நடிகைகளான இந்துஜா, ஆத்மிகா, ரெபா மோனிக்கா ஜான், வர்ஷா பொலம்மா உள்ளிட்டடோர் நடிக்கின்றனர்.

    இந்த படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் அரங்குகள் அமைத்து நடந்து வருகிறது. இதற்காக தேவாலயம், ஆஸ்பத்திரி, மருந்தகங்கள், பள்ளிக்கூடம் என பல படப்பிடிப்பு அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு கடந்த சில தினங்களாக படப்பிடிப்பு நடந்து வந்தது. 



    இந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு டெல்லி செல்கிறது. அங்கு தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

    இந்த படத்தில் கதிர், யோகி பாபு, ஞானசம்பந்தம், ஆனந்த்ராஜ், சாய் தீனா, தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். #Thalapathy63 #Vijay #Nayanthara

    திருஞானம் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் உருவாகி வரும் `பரமபதம் விளையாட்டு' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #Trisha #ParamapadhamVilaiyattu
    திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 96, இந்த ஆண்டு வெளியான `பேட்ட' படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. திரிஷா நடிப்பில் அடுத்ததாக `சதுரங்கவேட்டை 2', `கர்ஜனை' உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கின்றன. திரிஷா தற்போது `1818', `பரமபதம் விளையாட்டு', ராங்கி, சிம்ரனுடன் ஆக்ஷன் அட்வஞ்சர் படம் என பிசியாக நடித்து வருகிறார்.

    இதில் த்ரிஷாவின் பரமபதம் விளையாட்டு திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் டிரைலர் திரிஷா பிறந்நாளான நாளை (மே 4) வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.


    இந்த படத்தின் டிரைலரை 96 படத்தில் திரிஷாவுடன் இணைந்து நடித்த விஜய் சேதுபதி வெளியிடுகிறார். 

    திருஞானம் இயக்கும் இந்த படத்தில் த்ரிஷா மருத்துவராகவும், மருத்துவரின் தாயாகவும் நடிக்கிறார். நந்தா, ரிச்சர்ட், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

    24 Hrs நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, அம்ரீஷ் கணேஷ் இசையமைக்கிறார். #Trisha #ParamapadhamVilaiyattu #Trisha60

    பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி - காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி வரும் ‘கோமாளி’ படத்தின் போஸ்டர் நேற்று வெளியாகிய நிலையில், படத்தில் ஜெயம் ரவி 9 வேடங்களில் நடிக்கிறார். #Comali #JayamRavi
    அடங்கமறு படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு ‘கோமாளி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டது.

    இந்த படத்தில் ஜெயம் ரவி 9 வேடங்களில் நடித்து வருகிறார். இதில், ஜெயம் ரவியுடன் முதல் முறையாக காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்திருக்கிறார்.



    படத்தை இயக்கி வரும் பிரதீப் ரங்கநாதன் படத்தை பற்றி கூறியதாவது:-

    ‘‘இது, ஜெயம் ரவி நடிக்கும் 24-வது படம். இதில் ராஜா, ஆதிவாசி, பிரிட்டீஷ் காலத்து அடிமை, 1990-களில் வாழ்ந்த இளைஞர் உள்பட 9 வேடங்களில் அவர் நடிக்கிறார். இந்த 4 வேடங்கள் தவிர மற்ற வேடங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

    படத்தின் இன்னொரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடிக்கிறார். கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.


    தொழில்நுட்ப துறையில் வளர்ச்சி அடைந்துள்ள இன்றைய உலகையும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் சித்தரிக்கும் படம், இது. இதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறோம். பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்தது.’’ என்றார். #JR24 #Comali #JayamRavi #KajalAggarwal

    அதர்வா நடிப்பில் உருவாகி இருக்கும் 100 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சாம்.சி.எஸ். த்ரில்லர் கதையை சொல்லி இயக்குநர் சாம் ஆண்டன் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறினார். #100TheMovie #Atharvaa
    ஆரா சினிமாஸ் சார்பில் காவியா வேணுகோபால் தயாரிப்பில், சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 100. அதர்வா, ஹன்சிகா மோத்வானி இணைந்து நடித்துள்ளனர். முதன்முறையாக அதர்வா இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்கும் இந்த படம் வருகிற மே 9-ந் தேதி திரைக்கு வருகிறது. குரு ஸ்ரீ மிஷ்ரி எண்டர்பிரைசஸ் சார்பில் சிஎஸ் பதம்சந்த் ஜெயின் இந்த படத்தை தமிழகம் முழுக்க வெளியிடுகிறார். 

    இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் பேசும் போது,



    விக்ரம் வேதா, அடங்க மறு, 100, அயோக்யா என அடுத்தடுத்து போலீஸ் படங்களாக நான் இசையமைத்து வருகிறேன். வெளியில் இருந்து பார்த்தால் எல்லா படங்களும் ஒரே மாதிரியாக தோன்றும். ஆனால் திரைக்கதையில் ஒவ்வொன்றும் வித்தியாசமானது. திரைக்கதை தான் பின்னணி இசையை கோரும். எனக்கு காமெடி படங்கள் பண்ணனும்னு ஆசை, சாம் எனக்கு கதை சொல்ல வந்தபோது எனக்கு ஒரு நல்ல காமெடி படம் மாட்டிகிச்சு என சந்தோஷப்பட்டேன். ஆனால் இதுவும் ஒரு போலீஸ் படம், சீரியஸ் படமாகவே இருந்தது. 

    அவர் காமெடியை விட திரில்லர் படங்களை தான் மிகச்சிறப்பாக எடுக்கிறார். என்னை சுதந்திரமாக வேலை பார்க்க விட்டது என் வேலையை ஊக்கப்படுத்தியது. சண்டைக்காட்சிகளில் அதர்வா கலக்கி இருக்கிறார். இது சமூகத்தில் தற்போது நடக்கிற விஷயங்களை பேசும், கண்டிப்பாக இன்றைய காலகட்டத்துக்கு தேவையான ஒரு படம். இந்த படத்தின் பாடல்கள் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. நிச்சயம் அனைவருக்கும் பிடித்த ஒரு படமாக அமையும் என்றார். #100TheMovie #Atharvaa #Hansika #SamAnton #SamCS

    கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் நடிகை சோனியா அகர்வால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். #SoniaAgarwal #GauthamMenon
    தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைப் படத்தை இயக்குவதில் இயக்குநர்கள் பலரிடையே போட்டி நிலவுகிறது. பெண் இயக்குனர் பிரியதர்ஷினி, லிங்குசாமி, பாரதிராஜா, விஜய் உள்ளிட்ட இயக்குநர்கள் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க போட்டி போடுகிறார்கள். இவர்கள் ஜெயலலிதாவின் வாழ்க்கையை ஒரே நேரத்தில் இயக்கி வருகின்றனர்.

    கவுதம் மேனன் ஜெயலலிதா வாழ்க்கையை இணைய தொடராக இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இதில் ஜெயலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.



    சசிகலாவாக விஜி சந்திரசேகர் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நடிகை சோனியா அகர்வால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறியுள்ளார்.

    சோனியா அகர்வால் நடிப்பில் தனிமை என்ற படம் இன்று திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #JayalalithaaBiopic #GauthamMenon #RamyaKrishnan #SoniaAgarwal

    சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் அரவிந்த்சாமி நாயகனாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் பூஜை நேற்று நடந்தது. #AravindSwami #SanthoshPJayakumar
    இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் ஹர ஹர மஹாதேவி, இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களை கவுதம் கார்த்திக்கை வைத்து இயக்கினார். இந்த இரு படங்களுக்கும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்ததாக ஆர்யாவை வைத்து கஜினிகாந்த் என்ற படத்தை கொடுத்தார்.

    பின்னர் மீண்டும் கவுதம் கார்த்திக்குடன் தீமை தான் வெல்லும் என்ற படத்தில் இணையவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த படம் தொடங்கப்படுவதற்கு முன்பாகவே இயக்குநர் - தயாரிப்பாளர் கருத்து வேறுபாட்டால் கைவிடப்பட்டதாக தகவல் வெளியானது.



    இந்த நிலையில், சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கிறார்.

    எக்ஸட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் மதியழகன் தயாரிக்கும் இந்த படத்தின் பூஜை நேற்று நடந்தது. படத்தின் பூஜையில் நடிகர் கவுதம் கார்த்திக், தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு, பல்லு ஒளிப்பதிவையும், பிரசன்னா படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். #AravindSwami #SanthoshPJayakumar #DImman

    ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ படத்தின் மூலம் ராபர்ட் டவுனி ஜூனியருக்கு ஒட்டுமொத்தமாக ரூ.521 கோடியே 70 லட்சத்து 75 சம்பளம் கிடைத்திருப்பதாக ‘ஹாலிவுட் ரிப்போர்ட்டர்’ பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Avengers #RobertDowney
    வாஷிங்டன்:

    ஹாலிவுட்டில் வெளியாகும் சூப்பர் ஹீரோ படங்களில் மிக பிரபலமானவை ‘அயன் மேன்’ தொடர் திரைப்படங்கள். இதுவரை 3 பாகங்கள் வெளிவந்துள்ளன. அத்துடன் சூப்பர் ஹீரோக்களை ஒன்றிணைக்கும் ‘அவெஞ்சர்ஸ்’ திரைப்படங்களில் ‘அயன் மேன்’ கதாபாத்திரம் முக்கிய பங்கு வகிக்கும்.

    ‘அயன் மேன்’ கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரபல நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியருக்கு இந்தியா உள்பட உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் ஹாலிவுட் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருந்து வருகிறார்.



    2008-ம் ஆண்டு வெளியான ‘அயன் மேன்’ படத்தின் முதல் பாகம் பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ராபர்ட் டவுனி ஜூனியர் தனது சம்பளத்தை 10 மில்லியன் டாலராக (இந்திய மதிப்பில் ரூ.70 கோடி) உயர்த்தினார். அத்துடன் ‘அவெஞ்சர்ஸ்’ திரைப்படங்களில் நடிக்க, 10 மில்லியன் டாலர் போக, படத்தின் ஒட்டுமொத்த லாபத்தில் 2.5 சதவீதம் சம்பளமாக கிடைக்கும்படி ஒப்பந்தம் போட்டார்.

    அந்த வகையில், கடந்த ஆண்டு வெளியான ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ படத்தின் மூலம் ராபர்ட் டவுனி ஜூனியருக்கு ஒட்டுமொத்தமாக 75 மில்லியன் டாலர் (ரூ.521 கோடியே 70 லட்சத்து 75 ஆயிரம்) சம்பளம் கிடைத்திருப்பதாக அமெரிக்காவின் ‘ஹாலிவுட் ரிப்போர்ட்டர்’ பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.14 ஆயிரம் கோடி வசூல் செய்தது. அண்மையில் வெளியான அவெஞ்சர்ஸ் படத்தின் கடைசி பாகமான ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ 7 நாட்களில் ரூ.9,000 கோடி வசூல் குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.   #Avengers #RobertDowney
    மேற்கு வங்காள முதல்- மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜியின் வாழ்க்கையை வரலாறு படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. #Baghini
    மேற்கு வங்காள முதல்- மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜியின் வாழ்க்கையை மையமாக வைத்து “பாகினி” என்ற சினிமா படம் எடுக்கப்பட்டது. இப்படத்தை நாளை வெளியிட தயாரிப்பு நிர்வாகம் முடிவு செய்து இருந்தது.

    பாராளுமன்ற தேர்தல் நடந்து கொண்டிருப்பதால் மம்தா சினிமா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டன.

    மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு பொலிட் பீரோ உறுப்பினர்கள் டெல்லி சென்று தேர்தல் ஆணையத்திடம் மம்தா படத்தின் டிரெய்லரை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.



    இதே போல் பா.ஜனதா மாநில துணைத் தலைவர் ஜாய்பிரகாஷ் மஜும்தர் அளித்துள்ள கடிதத்தில், பிரதமர் மோடியின் வாழ்க்கை படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்ட நடைமுறையை மம்தா படத்துக்கும் கடை பிடிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

    இந்த நிலையில் மம்தா பானர்ஜியின் வாழ்க்கை சினிமா படத்தை ஓட்டுப்பதிவு நிறைவு பெறும் நாளான மே 19-ந்தேதி வரை வெளியிட தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது.

    மேலும் படத்தின் அனைத்து விளம்பர நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும் என்றும் கூறி உள்ளது.
    ×