என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல் செய்திகள்

    டெஸ்லா நிறுவனம் தனது மாடல் 3 மற்றும் மாடல் எஸ் கார்களை திரும்ப பெற்று இருக்கிறது.


    டெஸ்லா நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட மாடல் 3 மற்றும் மாடல் எஸ் எலெக்ட்ரிக் கார்களில் 4.75 யூனிட்களை திரும்ப பெற்றுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக மாடல்கள் திரும்ப பெறப்படுவதாக டெஸ்லா அறிவித்து இருக்கிறது.

    அமெரிக்காவில் 2017 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட 3,56,309 மாடல் 3 யூனிட்களும், 2014 முதல் 2021 வரை விற்பனை செய்யப்பட்ட 1,19,009 மாடல் எஸ் யூனிட்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன. டெஸ்லா மாடல் 3 ரியர்-வியூ கேமராவில் குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. 

     டெஸ்லா மாடல் எஸ்

    மாடல் எஸ் பொனெட் பிரச்சினையை டெஸ்லா சரி செய்ய இருக்கிறது. இந்த குறைபாடு குறித்து இதுவரை எந்த விபத்துகளோ, உயிரிழப்புகளோ நடைபெறவில்லை என டெஸ்லா அறிவித்துள்ளது. டெஸ்லா நிறுவனம் விரைவில் மாடல் வை மற்றும் மாடல் 3 யூனிட்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. 
    வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்கள் விலையை மாற்றுவதாக அறிவித்து இருக்கிறது.


    ஸ்வீடன் நாட்டு கார் உற்பத்தியாளரான வால்வோ தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. அதன்படி கார் மாடல்கள் விலை ரூ. 1 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 3 லட்சம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. 

    அந்நிய செலாவணி நிலையற்ற தன்மை, சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள சிப்செட் குறைபாடு போன்ற காரணங்களால் கார் மாடல்கள் விலை உயர்த்தப்படுவதாக வால்வோ அறிவித்து இருக்கிறது. விலை உயர்வு இன்று (ஜனவரி 1, 2022) அமலுக்கு வந்தது. 

     வால்வோ கார்

    புதிய விலை விவரங்கள்

    வால்வோ எக்ஸ்.சி.40 டி4 ஆர் டிசைன் பெட்ரோல் ரூ. 43.25 லட்சம்

    வால்வோ எக்ஸ்.சி.60 பி5 இன்ஸ்க்ரிப்ஷன் பெட்ரோல் மைல்டு ஹைப்ரிட் ரூ. 63.50 லட்சம்

    வால்வோ எஸ்90 பி5 இன்ஸ்க்ரிப்ஷன் பெட்ரோல் மைல்டு ஹைப்ரிட் ரூ. 64.90 லட்சம்

    வால்வோ எக்ஸ்.சி.90 பி6 இன்ஸ்க்ரிப்ஷன் பெட்ரோல் மைல்டு ஹைப்ரிட் விலை ரூ. 90.90 லட்சம்

    முன்னதாக வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது டீசல் மாடல்களின் விற்பனையை நிறுத்தியது. தற்போதைய விலை உயர்வில் வால்வோ எஸ்60 செடான், பிளக்-இன் ஹைப்ரிட் எக்ஸ்.சி.90 டி8 போன்ற மாடல்கள் பாதிக்கப்படவில்லை.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ சி.என்.ஜி. மாடலுக்கான டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ சி.என்.ஜி. மாடலுக்கான டீசரை வெளியிட்டுள்ளது. முன்னதாக டியாகோ சி.என்.ஜி. மற்றும் டிகோர் சி.என்.ஜி. மாடல்களின் சோதனை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. தற்போது ஹூண்டாய் மற்றும் மாருதி சுசுகி நிறுவனங்கள் சி.என்.ஜி. வாகனங்களை விற்பனை செய்து வருகின்றன.

    இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக மாற்று எரிபொருள் கொண்டு இயங்கும் மாடல்களின் விற்பனை கணிசமாக அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக மாருதி சுசுகி மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் சி.என்.ஜி. கிட் கொண்ட மாடல்களை அறிமுகம் செய்ய துவங்கின. அந்த வரிசையில் தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது. 



    புதிய டாடா டியாகோ சி.என்.ஜி. மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் சி.என்.ஜி. கிட் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் செயல்திறன் பெட்ரோல் யூனிட்டை விட குறைவாகவே இருக்கும் என தெரிகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம்.

    பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் ஐ4 மற்றும் ஐ.எக்ஸ். எலெக்ட்ரிக் கார் மாடல்கள் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.


    பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆலிவர் சிப்சி ஐ4 மற்றும் ஐ.எக்ஸ். கார்கள் விற்றுத்தீர்ந்ததாக அறிவித்துள்ளார். 'ஐ.எக்ஸ். போன்றே ஐ4 மாடலும் மாத கணக்கில் விற்றுத்தீர்ந்தது. இதனால் பணி திறனை ஐந்து மடங்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்,' என அவர் மேலும் தெரிவித்தார். 

    ஐ4 மற்றும் ஐ.எக்ஸ். எலெக்ட்ரிக் கார்கள் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் ஐந்தாம் தலைமுறை எலெக்ட்ரிக் கார் தொழில்நுட்பத்தை பரைசாற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இதுவரை பி.எம்.டபிள்யூ. நிறுவனம் சுமார் பத்து லட்சத்திற்கும் அதிக பிளக்-இன் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது. 2025 ஆண்டிற்குள் மற்றொரு பத்து லட்சம் யூனிட்களை விற்பனை செய்ய பி.எம்.டபிள்யூ. இலக்கு நிர்ணயித்துள்ளது.

     பி.எம்.டபிள்யூ. ஐ.எக்ஸ். 4

    பி.எம்.டபிள்யூ. ஐ.எக்ஸ். டிரைவ் 50 மாடலை முழு சார்ஜ் செய்தால் 521 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. ஐ4 இ-டிரைவ் 40 மாடலை முழு சார்ஜ் செய்தால் 484 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.
    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எஸ்1 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களின் வினியோகம் பற்றிய புது தகவலை தெரிவித்துள்ளது.


    ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால், ஓலா எஸ்1 சீரிஸ் டிசம்பர் மாதத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட யூனிட்கள் அனைத்தும் வினியோகம் செய்யப்பட்டு விட்டதாக அறிவித்தார். 

    'பெரும்பாலான யூனிட்கள் டெலிவரி மையங்களை சென்றடைந்துள்ளன. இவற்றுக்கான ஆர்.டி.ஓ. வழிமுறைகள் நடைபெற்று வருகின்றன. சில யூனிட்கள் வாடிக்கையாளர் வீடுகளுக்கு சென்று கொண்டிருக்கின்றன. வாகன பதிவிற்கான நேரம் ஏற்கனவே திட்டமிட்டதை விட தாமதமாகிவிட்டது,' என பாவிஷ் அகர்வால் தெரிவித்தார். 

     ஓலா எஸ்1

    மும்பை, பூனே, ஆமதாபாத் மற்றும் விசாகபட்டினம் போன்ற நகரங்களில் அடுத்த வாரம் முதல் ஓலா ஸ்கூட்டர்களின் வினியோகம் துவங்குகிறது. இந்தியாவில் ஓலா ஸ்கூட்டர்களின் வினியோகம் டிசம்பர் 16 ஆம் தேதி துவங்கியது. முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்ய பெங்களூரு மற்றும் சென்னையில் சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

    ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கின்றன. இவற்றின் விலை முறையே ரூ. 1 லட்சம் மற்றும் ரூ. 1.30 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
    அமெரிக்காவில் பெட்ரோல் வாகனங்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    பெட்ரோல் என்ஜின் கொண்ட வாகனங்களின் விற்பனைக்கு 2035 முதல் தடை விதிக்க அமெரிக்க அரசு திட்டமிட்டு வருகிறது. காற்று மாசை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கான நிர்வாக உத்தரவில் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். 

    2027 ஆண்டு முதல் அரசு சார்பில் வாங்கப்பட இருக்கும் இலகு ரக வாகனங்கள் அனைத்தும் புகை விதிகளுக்கு ஆதரவானதாக இருக்கும். பெடரல் அரசாங்க பணிகளில் 2030 ஆண்டு காற்று மாசை 65 சதவீதம் வரை குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

    ஜோ பைடன்

    எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மின்சாரமும், மாசில்லா முறைகளில் இருந்தே பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 2050 ஆம் ஆண்டுக்குள் மாசில்லா நிலையை அடைய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. முன்னதாக ஆகஸ்ட் மாத வாக்கில் அமெரிக்காவின் புதிய வாகனங்களில் 50 சதவீதம் எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்ற திட்டமிடப்பட்டது.

    கியா இந்தியா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேரன்ஸ் எம்.பி.வி. மாடலின் முன்பதிவு தேதியை அறிவித்து இருக்கிறது.


    கியா இந்தியா நிறுவனம் கேரன்ஸ் எம்.பி.வி. மாடலுக்கான முன்பதிவு ஜனவரி 14, 2022 அன்று துவங்கும் என அறிவித்து இருக்கிறது. இதுபற்றிய அறிவிப்பு கியா இந்தியாவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் அக்கவுண்டில் வெளியிடப்பட்டது. 

    இந்திய சந்தையில் புதிய கேரன்ஸ் எம்.பி.வி. மாடல் ஹூண்டாய் அல்கசார், மாருதி சுசுகி எக்ஸ்.எல்.6, டாடா சபாரி, டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா மற்றும் மஹிந்திரா மராசோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய கேரன்ஸ் எம்.பி.வி. இந்தியாவில் கியா நிறுவனத்தின் நான்காவது மாடல் ஆகும்.

     கியா கேரன்ஸ்

    புதிய கேரன்ஸ் மாடல் கியா செல்டோஸ் மாடலில் பயன்படுத்தப்பட்ட பிளாட்பார்மிலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஸ்ப்லிட் ரக லைட்டிங், எல்.இ.டி. டி.ஆர்.எல்., மெல்லிய எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், அலாய் வீல்கள், பின்புறம் ராப்-அரவுண்ட் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் உள்ளன.

    கியா கேரன்ஸ் மாடலில் 1.4 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், டர்போ பெட்ரோல் என்ஜினுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷனும் டீசல் என்ஜினுடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.
    2022 ஆடி கியூ7 மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    ஜெர்மன் நாட்டு ஆடம்பர் கார் உற்பத்தியாளரான ஆடி, கியூ7 பேஸ்லிப்ட் மாடலை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடலில் பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் புதிய 6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது அதிக அப்டேட்களுடன் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் கியூ7 பேஸ்லிப்ட் மாடல் ஆகும்.

    2022 ஆடி கியூ7 மாடலில் 2995சிசி, வி6 டுவின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 335 பி.ஹெச்.பி. திறன், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என தெரிகிறது. இது முந்தைய மாடலை விட 90 பி.ஹெச்.பி. அதிகம் ஆகும்.

     ஆடி கியூ7

    இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 5.6 நொடிகளில் எட்டிவிடும். இதன் 3 லிட்டர் வி6 பெட்ரோல் என்ஜினுடன் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. 
    ராயல் என்பீல்டு நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஸ்கிராம் 411 உற்பத்தி விரைவில் துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.


    ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஸ்கிராம் 411 மோட்டார்சைக்கிள் உற்பத்திக்கு தயாரான நிலையில் சோதனை செய்யப்படுகிறது. ஹிமாலயன் மாடலை தழுவி உருவாகி இருக்கும் புதிய மோட்டார்சைக்கிள் ரோட்-சார்ந்த மாடல் ஆகும். இந்த மாடலின் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. 

    ஸ்பை படங்களின் படி புதிய ஸ்கிராம் 411 மாடலில் டூயல் டோன் பியூவல் டேன்க் உள்ளது. இதன் ஹெட்லேம்ப் கவுல் கிரே நிறம் கொண்டிருக்கிறது. முன்புற இண்டிகேட்டர்கள் வேறு இடத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இத்துடன் டுவின் டையல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.

     ராயல் என்பீல்டு ஸ்கிராம் 411

    மேலும் இந்த மாடலின் சைடு பேனல்கள் மாற்றப்பட்டுள்ளன. புதிய கிராப் ஹேண்டில், பின்புற மட்கார்டு மாடிபை செய்யப்பட்டு உள்ளது. முன்புறம் 18 இன்ச் அல்லது 19 இன்ச் அளவு சக்கரங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. புதிய ஸ்கிராம் 411 மாடலிலும் ஹிமாலயன் மாடலில் உள்ளதை போன்றே 411சிசி என்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த என்ஜின் 24.3 பி.ஹெச்.பி. திறன், 32 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் புதிய ஸ்கிராம் 411 மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம். இதன் விலை ஹிமாலயன் மாடலை விட சற்றே குறைவாக நிர்ணயிக்கப்படும் என தெரிகிறது.
    பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனம் பூனேவில் புதிய எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலையை கட்டமைக்க இருக்கிறது.


    பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனம் ரூ. 300 கோடி முதலீட்டில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலையை பூனேவின் அகுர்டி பகுதியில் கட்டமைக்கிறது. இந்த ஆலையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. 

    இந்த ஆலையில் அதிநவீன ரோபோடிக் மற்றும் தானியங்கி உற்பத்தி முறைகள் நிறுவப்பட இருக்கின்றன. இங்கு நடைபெறும் பெரும்பாலான பணிகள் தானியங்கி முறையில் செயல்படுத்தப்பட இருக்கின்றன. இந்த ஆலை 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படுகிறது. இந்த ஆலையில் மொத்தம் 800 பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

     பஜாஜ் செட்டாக்

    புதிய ஆலையில் இருந்து முதல் எலெக்ட்ரிக் வாகனம் அடுத்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் வெளியிடப்பட இருக்கிறது. தற்போதைய முதலீடு மட்டுமின்றி மேலும் சில விற்பனையார்கள் இணைந்து ரூ. 250 கோடி முதலீடு செய்ய இருக்கின்றனர்.
    ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் 2022 கோடியக் பேஸ்லிப்ட் மாடலின் உற்பத்தியை துவங்கி இருக்கிறது.


    ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் 2022 கோடியக் பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடல் அடுத்த மாதம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2022 ஸ்கோடா கோடியக் பேஸ்லிப்ட் மாடல் இந்தியாவில் ஜனவரி 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

    இந்தியாவில் புதிய ஸ்கோடா கோடியக் பேஸ்லிப்ட் மாடல் சி.பி.யு. (completely knocked down) யூனிட் வடிவில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் அவுரங்காபாத் ஆலையில் அசெம்பில் செய்யப்படுகிறது. இந்த காரில் பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.

     ஸ்கோடா கோடியக்

    சர்வதேச சந்தையில் இந்த மாடல் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. இதன் விற்பனை சில நாடுகளில் நடைபெற்று வருகிறது. எனினும், தற்போது இந்தியா வரும் பேஸ்லிப்ட் மாடலில் சிறு மாற்றங்கள் செய்யப்படுகின்றன. 

    புதிய ஸ்கோடா கோடியக் பேஸ்லிப்ட் மாடலில் 2 லிட்டர், 4 சிலிண்டர் டி.எஸ்.ஐ. என்ஜின் வழங்கப்படுகிறது. இதே என்ஜின் ஸ்கோடா நிறுவனத்தின் சூப்பர்ப் மற்றும் ஆக்டேவியா போன்ற மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 187 பி.ஹெச்.பி. திறன், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 
    டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஹிலக்ஸ் பிக்கப் டிரக் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


    டொயோட்டா நிறுவனத்தின் ஹிலக்ஸ் மாடல் விளம்பர படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் படப்படிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஹிலக்ஸ் மாடல் விற்பனையகம் வரத்துவங்கி இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    விற்பனையகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் ஹிலக்ஸ் மாடல் வெள்ளை நிறம் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் ஃபாக் லேம்ப்கள் இல்லாமல், வீல் ஆர்ச்களை சுற்றி பிளாஸ்டிக் கிளாடிங் காணப்படுகிறது. அந்த வகையில் விற்பனையகம் வந்துள்ள ஹிலக்ஸ் மாடல் பேஸ் வேரியண்ட் ஆக இருக்கும் என தெரிகிறது. 

     டொயோட்டா ஹிலக்ஸ்

    இதுதவிர ஹிலக்ஸ் மாடலில் கருப்பு நிற அலாய் வீல்கள், சைடு ஸ்டெப், ஓ.ஆர்.வி.எம்.கள், இண்டிகேட்டர்கள், குரோம் அம்சங்கள் உள்ளன. தற்போது வெளியாகி இருக்கும் படங்களில் காரின் உள்புறம் காணப்படவில்லை. புதிய ஹிலக்ஸ் மாடலில் 2.4 லிட்டர் டீசல் அல்லது 2.8 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம். 

    இதே என்ஜின்கள் இன்னோவா க்ரிஸ்டா மற்றும் பார்ச்சூனர் மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு என்ஜின்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்தியாவில் அறிமுகமானதும் டொயோட்டா ஹிலக்ஸ் மாடல் இசுசு வி கிராஸ் மாடலுக்கு போட்டியாக அமையும்.
    ×