என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • மதுபான ஊழலை விசாரித்து வரும் சிறப்பு விசாரணை குழு, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.பி. மிதுன் ரெட்டியை கைது செய்தது.
    • முதல் குற்றவாளியாக காசிரெட்டி ராஜசேகர் ரெட்டி என்பவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

    அமராவதி:

    ரூ.3 ஆயிரத்து 500 கோடி மதுபான ஊழலில் கிடைத்த லஞ்சப்பணம் ஜெகன்மோகன் ரெட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட ஆந்திர போலீஸ் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

    எம்.பி. கைது

    ஆந்திர மாநிலத்தில், கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து 2024-ம் ஆண்டு வரை ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அரசு நடந்து வந்தது.

    அப்போது, மதுபான விற்பனையில் ரூ.3 ஆயிரத்து 500 கோடி ஊழல் நடந்ததாக ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு ஆந்திர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மதுபான ஊழலில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை கடந்த மே மாதம் தனியாக ஒரு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இதற்கிடையே, மதுபான ஊழலை விசாரித்து வரும் சிறப்பு விசாரணை குழு, நேற்று முன்தினம் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.பி. மிதுன் ரெட்டியை கைது செய்தது. பல மணி நேர விசாரணைக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து, அமராவதி கோர்ட்டில் ஆந்திர போலீசார் இவ்வழக்கு தொடர்பாக 305 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். அதில், முன்னாள் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை. இருப்பினும், அவர் மதுபான ஊழல் பணத்தை பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

    முதல் குற்றவாளியாக காசிரெட்டி ராஜசேகர் ரெட்டி என்பவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

    குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் புதிய மதுபான கொள்கையை கொண்டு வந்தனர். மதுபான சப்ளை, விற்பனை ஆகியவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதன் மூலம், லஞ்சம், கமிஷன் பெறும் நோக்கத்தில் இருந்தனர்.

    அதற்கேற்ப மதுபான கொள்கையில் திருத்தம் கொண்டு வந்தனர். லஞ்சத்தின் பெரும்பகுதி, ரொக்கமாகவும், தங்க கட்டிகளாகவும் பெறப்பட்டன.

    ரூ.3,500 கோடி ஊழலின் மூளையாக முதல் குற்றவாளி காசிரெட்டி ராஜசேகர் ரெட்டி செயல்பட்டார். லஞ்சமாக வசூலிக்கப்பட்ட பணம், ராஜசேகர ரெட்டியிடம் ஒப்படைக்கப்படுவது வழக்கம்.

    அந்த லஞ்சப்பணத்தை 5-வது குற்றவாளி விஜய் சாய் ரெட்டி, 4-வது குற்றவாளி மிதுன் ரெட்டி, 33-வது குற்றவாளி பாலாஜி ஆகியோருக்கு ராஜசேகர் ரெட்டி அனுப்பி வைப்பார். அதை அப்போதைய முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டிக்கு பாலாஜி அனுப்பி வைப்பார். மாதந்தோறும் சராசரியாக ரூ.50 கோடி முதல் ரூ.60 கோடி வரை லஞ்சமாக வசூலிக்கப்பட்டது.

    ராஜசேகர் ரெட்டி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் செலவுக்காக ரூ.250 முதல் ரூ.300 கோடியை திருப்பி விட்டார். சட்டவிரோத பண பரிமாற்றத்துக்காக 30 போலி மதுஆலைகள் உருவாக்கப்பட்டன.

    லஞ்சம் கொடுக்க விரும்பாத மது ஆலைகளுக்கு உரிய அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டது. துபாய், ஆப்பிரிக்கா ஆகிய இடங்களில் நிலம், தங்கம், ஆடம்பர சொத்துகள் ஆகியவற்றை வாங்க ஊழல் பணம் பயன்படுத்தப்பட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருப்பதியில் அடிக்கடி மழை பெய்து வருவதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அவதி அடைந்தனர்.
    • லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் தங்கும் அறைகள் கிடைக்காமல் திறந்த வெளியில் உணவு சாப்பிட்டு தூங்கினர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில நாட்களாக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    இன்று காலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் தங்கி தரிசனத்திற்கு செல்லும் வைகுந்தம் அறைகள் மற்றும் நாராயணகிரி கொட்டைகைகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    திருப்பதி மலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் அதிக அளவில் காணப்படுகின்றனர். லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் தங்கும் அறைகள் கிடைக்காமல் திறந்த வெளியில் உணவு சாப்பிட்டு தூங்கினர்.

    தற்போது திருப்பதியில் அடிக்கடி மழை பெய்து வருவதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அவதி அடைந்தனர்.

    இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள சீலா தோரணம் வரை வரிசையில் காத்திருந்தனர். 24 மணிநேரத்துக்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    வார இறுதி விடுமுறை நாட்களில் அதிக அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வருவதால் இலவச தரிசன டிக்கெட்டுகளை கூடுதலாக வழங்க வேண்டும் என பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பதியில் நேற்று 73,093 பேர் தரிசனம் செய்தனர். 31,570 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.21 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • பீகாரில் தேர்தலுக்கு 4 மாதத்திற்கு முன்னதாக வாக்காளர் பட்டியல் தீவிர சரிபார்ப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது.
    • ஜூலை 25ஆம் தேதிக்குள் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

    பீகார் மாநிலத்தில் நவம்பர் மாதத்திற்குள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், வரும் நவம்பர் மாதத்திற்குள் வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் செய்யப்படும் என்று கடந்த ஜூன் 24-ந்தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    அதன்படி தீவிர சிறப்பு திருத்தம் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. தேர்தலுக்கு முன்னதாக இதை பணியை செய்வதால் எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்புகின்றன. மேலும், வாக்காளர் பட்டியலில் தொடர்ந்து இருக்க குடியுரிமைச் சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பதால், லட்சகணக்கான வாக்காளர்கள் பெயர் நீக்கப்படும் அபாயம் உள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன. மேலும், ஆவணங்களை வருகிற 25ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் ஆணையத்தின் ஆய்வின்படி, சுமார் 12.5 லட்சம் வாக்காளர்கள் உயிரிழந்திருந்தும், அவர்களின் பெயர்கள் இன்னும் பட்டியலில் உள்ளன. 17.5 லட்சம் வாக்காளர்கள் பீகாரை விட்டு நிரந்தரமாக வெளியேறிவிட்டனர். 5.5 லட்சம் வாக்காளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பதிவு செய்துள்ளனர். நேபாளம், வங்கதேசம் மற்றும் மியான்மர் போன்ற வெளிநாட்டவர்களும் வாக்காளர் பட்டியலில் கண்டறியப்பட்டுள்ளனர்.

    இதனால் 40 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு "பீகாரில் தேர்தலுக்கு முன்பு வாக்காளர் பட்டியல் தீவிர சரிபார்ப்பின் உண்மையான நோக்கம் என்ன?. எந்த ஒரு தேர்தலுக்கு முன்பும் போதிய அவகாசம் அளித்தே இதுபோன்ற சரிபார்ப்பை நடத்த வேண்டும்" என தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    • இந்தியை கற்றுக் கொள்வதால் எந்த தீங்கும் ஏற்படாது.
    • பவன் கல்யாண் பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

    ஆந்திராவில் மாநில மொழித்துறை பொன்விழா கூட்டத்தில் துணை முதல்- மந்திரி பவன் கல்யாண் கலந்து கொண்டார். இதில் அவர் பேசியதாவது:-

    தெலுங்கு எங்கள் தாய்மொழியாக இருக்கலாம், ஆனால் எங்கள் தேசிய மொழி இந்தி. வீட்டில் தொடர்பு கொள்ள தெலுங்கு உள்ளது.

    ஒரு வங்காளப் பாடல் தேசிய கீதமாக மாறியது. பஞ்சாபி பகத் சிங் நாட்டிற்காகப் போராடிய புரட்சியாளராக ஆனார். ராஜஸ்தானைச் சேர்ந்த ராணா பிரதாப் துணிச்சலின் அடையாளமாக ஆனார்.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த அப்துல் கலாம் இந்தியாவின் ஏவுகணை நாயகன் ஆனார். ஒவ்வொரு மொழியும் ஒரு வாழும் மொழி. இந்தி கற்கவேண்டும் இதில் எந்த தவறும் இல்லை. அதிக அளவில் தென் மாநில மொழிப்படங்கள் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகின்றன. இந்தியை கற்றுக் கொள்வதால் எந்த தீங்கும் ஏற்படாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த பேச்சுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் இந்த அளவுக்கு விற்கீறீர்களா? ச்சீ... அச்சச்சோ... எவ்வளவு வெட்கக்கேடானது என பதிவிட்டார். மேலும் பவன் கல்யாண் பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

    பிரகாஷ்ராஜின் இந்த பதிவு பவன் கல்யாண் ரசிகர்களை கோபமுடைய செய்துள்ளது. அவர்கள் எக்ஸ்தளத்தில் பிரகாஷ்ராஜிக்கு கடுமையான பதிலடி கொடுத்து வருகின்றனர்.

    ஏய் அயோக்கியனே, உன்னைப் பார்த்தால் செருப்பால் அடிப்போம். படத்தில் நடித்த போது உண்மையிலேயே பவன் கல்யாண் உன்னை அடித்தாரா ஜாக்கிரதை என ரசிகர்கள் பதிவிட்டனர்.

    நடிகர்கள் பவன் கல்யாண்- பிரகாஷ்ராஜ் மோதல் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



    • கிராமத்தில் உள்ள பள்ளியில் 5 வகுப்புகளுக்கும் சேர்ந்து 4 மாணவர்கள் படித்து வந்தனர்.
    • ஒரே ஒரு மாணவருக்கு ஒரு ஆசிரியர் பாடம் நடத்தி வருகிறார்.

    ஆந்திர மாநிலம் மடிகேரா பொம்மன பள்ளியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 170 மாணவ, மாணவிகள் படித்தனர். கிராமத்தில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வேலை தேடி ஐதராபாத்திற்கு புலம் பெயர்ந்து சென்றனர்.

    இதனால் கிராமத்தில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்தது. மேலும் மாணவர்களின் பெற்றோர்கள் தனியார் பள்ளி மோகத்தால் பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வைத்து வருகின்றனர். இதனால் கிராமத்தில் உள்ள பள்ளியில் 5 வகுப்புகளுக்கும் சேர்ந்து 4 மாணவர்கள் படித்து வந்தனர்.

    ஒரு சில காரணங்களால் 3 மாணவர்கள் பள்ளிக்கு வருவதே இல்லை. இந்த பள்ளியில் தற்போது ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார். ஒரே ஒரு மாணவருக்கு ஒரு ஆசிரியர் பாடம் நடத்தி வருகிறார்.

    • காரில் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர் காரை வெங்கடேஸ்வர ராவ் ஓட்டி சென்றார்.
    • ஜஸ்வந்த் சாய் மற்றும் ஹேமலதா படுகாயம் அடைந்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விஜயவாடா, சிண்டிகேட் வங்கி காலனியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வர ராவ். இவரது மனைவி பத்மாவதி (வயது 38). மகன் ஜஸ்வந்த் சாய் மற்றும் சகோதரி ஹேமலதா.

    இவர்கள் 4 பேரும் காரில் திருப்பதி வந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர். பின்னர் திருவண்ணாமலைக்கு வந்தனர். அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று காலை தரிசனம் செய்தனர். பின்னர் காரில் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர் காரை வெங்கடேஸ்வர ராவ் ஓட்டி சென்றார்.

    இவர்கள் சென்ற கார் திருப்பதி அடுத்த சந்திரகிரி, தோண்டவாடா என்ற இடத்தில் சென்றபோது முன்னால் சென்ற பால் டேங்கர் லாரி மீது மோதியது.

    இந்த விபத்தில் பத்மாவதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஜஸ்வந்த் சாய் மற்றும் ஹேமலதா படுகாயம் அடைந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த பாஹரா பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ரூயா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜஸ்வந்த் சாய் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதிய நடைமுறையால் நகராட்சி பகுதிகளில் குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட்டு வருகின்றன.
    • செல்போன் ஆப் ஆந்திர முழுவதும் தற்போது பரவி வருகிறது.

    ஆந்திராவில் பொதுமக்கள் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்வதற்காக நகராட்சி நிர்வாகத் துறை புரமித்ரா என்ற செல்போன் ஆப் அறிமுகம் செய்துள்ளது.

    பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏதேனும் குறைகள் இருந்தால் ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுத்து இந்த ஆப் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். நகராட்சி ஊழியர்கள் 24 மணி நேரத்திற்குள் பிரச்சினையை ஆய்வு செய்ய வருகிறார்கள். சிறிய பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படுகின்றன. பெரிய பிரச்சினைகள் 3 முதல் 15 நாட்களுக்குள் தீர்க்கப்படுகின்றன. இதன் மூலம் 3 மாதங்களில் மக்கள் 10,421 பிரச்சினைகளுக்கு பதிலளித்தனர். இவற்றில் இதுவரை 9889 தீர்வு ஏற்பட்டுள்ளது.

    குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தீர்க்கப்படாவிட்டால், அதிகாரிகளே பொறுப்பு என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையால் நகராட்சி பகுதிகளில் குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட்டு வருகின்றன. இந்த செல்போன் ஆப் ஆந்திர முழுவதும் தற்போது பரவி வருகிறது.

    • பெண்டேகல்லு கிராமத்தில் ஒரு பெண் தொழிலாளி விவசாய வேலை செய்து கொண்டிருந்தார்.
    • அதிகாரிகள் வைரத்தை பறிமுதல் செய்ய பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் துக்காலி மண்டலத்தின் பெண்டேகல்லு கிராமத்தில் ஒரு பெண் தொழிலாளி விவசாய வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது 15 காரட் வைரம் வயலில் கிடந்தது. அதனை எடுத்த பெண் மகிழ்ச்சி அடைந்தார். இது கிராம மக்களிடம் பரவியது. அதிகாரிகள் வைரத்தை பறிமுதல் செய்ய பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆந்திராவில் விவசாய நிலங்களில் தொடர்ந்து வைரம் கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கடற்கரையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.
    • படகுகளில் வந்து காலை முதல் மாலை வரை யர்ரைய்யா உடலை தேடினர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், அச்சுதபுரம், புடி மடகா மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் யர்ரையா (வயது 26). இவர் நேற்று கடலில் மீன் பிடிக்க தனது சகோதரர் கோர்லய்யா, வாசு பள்ளியை சேர்ந்த யெல்லாஜி, கனக்கல்லா அப்பல ராஜு ஆகியோருடன் கடலுக்குள் சென்றார்.

    கடற்கரையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது இவர்களது மீன்பிடி வலையில் 100 கிலோ எடை கொண்ட கொம்முக்கோணம் மீன் சிக்கியது. வலையில் சிக்கிய மீனை யர்ரைய்யாவால் இழுக்க முடியவில்லை. அப்போது மீன் யர்ரைய்யாவை கடலுக்குள் இழுத்துச் சென்றது. தங்கள் கண்ணெதிரிலேயே சகோதரரை மீன் கடலுக்குள் இழுத்துச் செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதில் அவர் மூழ்கி இறந்தார்.

    இதுகுறித்து கொர்லைய்யா மீனவ கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் படகுகளில் வந்து காலை முதல் மாலை வரை யர்ரைய்யா உடலை தேடினர். ஆனால் அவரது உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.இந்த சம்பவம் மீனவ கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • இரவு நேரத்தில் ஆட்கள் இல்லாத வீட்டில் விளக்கு எரிவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர்.
    • மதுபோதையில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் பொப்பிலி அடுத்த கொல்லப்பள்ளியை சேர்ந்தவர் சீனிவாச ராவ். விவசாயி. இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களது மகன் விசாகப்பட்டினத்தில் உள்ள ஐ.ஏ.எஸ் அகாடமியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.

    சீனிவாச ராவ் தனது மனைவியுடன் வீட்டை பூட்டிக் கொண்டு கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்று விவசாய பணிகளை செய்வது வழக்கம். கடந்த 5 நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை பூட்டிக்கொண்டு விவசாய நிலத்திற்கு சென்றனர்.

    வீடு பூட்டப்பட்டு இருந்ததை அறிந்த பிடரி கிராமத்தை சேர்ந்த திருடன் ஒருவன் சீனிவாச ராவின் வீட்டிற்கு சென்றார். வீட்டில் உள்ள வெள்ளி பொருட்கள் மற்ற பொருட்களை திருடிக் கொண்டு வெளியே செல்வார். திருடப்பட்ட பொருட்களை விற்றுவிட்டு அதில் கிடைக்கும் பணத்தில் மது அருந்துவார்.

    பகல் முழுவதும் வெளியே சுற்றி திரியும் திருடன் இரவு நேரங்களில் திருடப்பட்ட அதே வீட்டில் தங்கி இருந்தான். கடந்த 5 நாட்களாக இதே வேலையை செய்து வந்தான். இரவு நேரத்தில் ஆட்கள் இல்லாத வீட்டில் விளக்கு எரிவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர்.

    இதுகுறித்து சீனிவாச ராவின் மகனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சீனிவாச ராவ் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மதுபோதையில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது நீண்ட நாட்களாக பூட்டப்பட்ட வீடுகளை நோட்டமிட்டு பொருட்களை திருடி சென்று மது குடித்துவிட்டு மீண்டும் அதே வீட்டில் தங்குவதை வழக்கமாகக் கொண்டு இருப்பதாக கூறுகிறார். இதனைக் கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    • காரை பிளாஸ்டிக் கவரால் மூடிவிட்டு காருக்குள் சென்று இருவரும் அதிக அளவு மது குடித்தனர்.
    • காரில் காற்றோட்டம் இல்லாததால் இருவரும் மூச்சு திணறி இறந்தனர்.

    ஆந்திர மாநிலம், கோவிந்தப்பா கண்டிகையை சேர்ந்தவர் திலீப் (வயது 25). கியாஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். இவரது சகோதரர் வினய் (20). இவர் திருச்சானூரிலுள்ள சகோதரர் வீட்டில் தங்கி இருந்து திருப்பதி தேவஸ்தானத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார்.

    இருவரும் நேற்று முன்தினம் இரவு திருச்சானூர் அடுத்த கலுவ கட்டா பகுதிக்கு காரில் வந்தனர். அப்போது காரை பிளாஸ்டிக் கவரால் மூடிவிட்டு காருக்குள் சென்று ஏ.சியை ஆன் செய்தனர். பின்னர் இருவரும் அதிக அளவு மது குடித்தனர்.

    ஏ.சி இரவு முழுவதும் ஓடிக்கொண்டு இருந்ததால் காரில் இருந்த பெட்ரோல் தீர்ந்து போனது. இதனால் ஏ.சி வேலை செய்யவில்லை. இருவரும் அதிக மது போதையில் இருந்ததால் ஏசி வேலை செய்யவில்லை என்பது தெரியவில்லை. காரில் காற்றோட்டம் இல்லாததால் இருவரும் மூச்சு திணறி இறந்தனர். கார் முழுவதும் பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டு இருந்ததால் காரில் இருப்பவர்கள் வெளியே தெரியவில்லை.

    நேற்று காலை திலீப்பின் தந்தை சந்தேகத்தின் பேரில் காரின் மீது இருந்த கவரை அகற்றினார். அப்போது மகன்கள் இருவரும் காரிலேயே இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    திருச்சானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரின் பிணங்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரில் ஏசியை ஆன் செய்து விட்டு மதுபோதையில் தூங்கினால் இது போன்ற விளைவுகளை சந்திக்க நேரிடும் குடிமகன்கள் உஷாராக இருக்க வேண்டும்என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

    • தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருப்பதி:

    கர்நாடக மாநிலம் பாகே பள்ளியை சேர்ந்த 13 பேர் திருப்பதி கோவிலுக்கு வந்தனர். நேற்று மாலை தரிசனம் முடித்து பின்னர் வேனில் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.

    அவர்கள் வந்த வேன் இன்று அதிகாலை அன்னமைய்யா மாவட்டம், குரு பல கோட்டா, சென்ன மாரி மிட்டா தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்தது. அப்போது எதிரே வந்த லாரி வேன் மீது நேருக்கு நேர் மோதியது.

    இந்த விபத்தில் வேன் இரண்டாக பிளந்தது. வேனில் இருந்த மேகர்ஸ் (வயது 17), சரண் (17), ஸ்ரவாணி(28) ஆகியோர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மதனப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விபத்தில் சிக்கிய வேனை மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர்.

    ×