என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாய்ஸ் கால்களுக்கு கட்டணம் வசூலிக்க துவங்கியதைத் தொடர்ந்து புதுவித சலுகைகளை அறிவித்துள்ளது.



    ரிலையன்ஸ் ஜியோ நிறுவன வாடிக்கையாளர்கள் மற்ற நெட்வொர்க்களுக்கு மேற்கொள்ளும் வாய்ஸ் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டண அறிவிப்பு அமலாகி சில நாட்களாகிவிட்டது. 

    இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ சார்பில் புதுவித சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய சலுகைகளில் ஏற்கனவே வழங்கிய பலன்களுடன் கூடுதலாக ஆஃப்நெட் ஐ.யு.சி. நிமிடங்கள் வழங்கப்படுகின்றன. 

    அதன்படி புதிய ஆல் இன் ஒன் சலுகைகளில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ்., செயலிகள் மற்றும் 1000 நிமிடங்களுக்கான ஆஃப்நெட் ஐ.யு.சி. காலிங் சேவை வழங்கப்படுகிறது. ஐ.யு.சி. காலிங் மதிப்பு ரூ. 80 ஆகும்.

    ரிலையன்ஸ் ஜியோ ஆல் இன் ஒன் சலுகை

    ஏற்கனவே மூன்று மாதங்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கும் சலுகைக்கு வாடிக்கையாளர்கள் தற்சமயம் ரூ. 444 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. முன்னதாக இந்த சலுகைக்கான கட்டணம் ரூ. 448 ஆக இருந்தது. தற்சமயம் புதிய சலுகை ரூ. 444 விலையில் 1000 நிமிடங்களுக்கான ஐ.யு.சி. அழைப்புகளுடன் வழங்கப்படுகின்றன.

    இரண்டு மாதங்களுக்கான சலுகை ரூ. 333 விலையில் வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த சலுகைக்கான கட்டணம் ரூ. 396 என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த சலுகையிலும் வாடிக்கையாளர்களுக்கு 1000 நிமிடங்களுக்கான ஐ.யு.சி. அழைப்புகள் வழங்கப்படுகின்றன.

    புதிய சலுகைகள் போட்டி நிறுவன சலுகைகளுடன் ஒப்பிடும் போது 20 முதல் 50 சதவிகிதம் வரை விலை குறைவு தான் என ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் 82 நாட்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கும் சலுகையை ரூ. 499 விலையில் வழங்கி வருகிறது.

    ஆஃப் நெட் டாக்டைம் தேவைப்படாதவர்கள் தொடர்ந்து ரூ. 399 சலுகையை பயன்படுத்தலாம். ரிலையன்ஸ் ஜியோவின் ஆஃப்நெட் அழைப்புகளுக்கான கட்டணம் ரூ. 10 முதல் துவங்குகிறது.
    ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோஃபைபர் சேவைக்கு வாடிக்கையாளர்கள் மற்றொரு மாதமும் கட்டணம் செலுத்த வேண்டியிருக்காது என தகவல் வெளியாகியுள்ளது.



    ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜியோஃபைபர் சேவைகள் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜியோஃபைபர் சேவைகள் படிப்படியாக வழங்கப்பட்டு வருகின்றன. ஜியோஃபைபர் சேவையுடன் அதற்கான கட்டண விவரங்களையும் ரிலையன்ஸ் அறிவித்தது.

    இத்துடன் விருப்பமுள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ரிலையன்ஸ் ஜியோஃபைபர் அறிமுக சலுகை வழங்கப்பட்டது. சேவைகள் அதிகாரப்பூர்வமாக துவங்கப்படும் முன்பே ஜியோஃபைபர் சேவைக்கான சோதனை துவங்கி நடைபெற்று வந்தது.

    ஜியோஃபைபர் கட்டண விவரம்

    இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஜியோஃபைபர் வாடிக்கையாளர்களிடம் ரிலையன்ஸ் ஜியோ மேலும் ஒரு மாதத்திற்கு கட்டணம் வசூலிக்க இயலாது என கூறப்படுகிறது. தற்சமயம் ஜியோ தனது ஜியோஃபைபர் சேவைக்கான கட்டண முறைகளை உருவாக்கி வருவதாக தெரிகிறது.

    இதற்கான பணிகள் முழுமை பெற இன்னும் சிலகாலம் ஆகும் என்பதோடு, இதுபற்றி ஜியோ தனது விற்பனை மற்றும் விளளம்பர பிரிவு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இதன்பின்னரே ஹோம் பிராட்பேண்ட் சேவையை சரியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய முடியும்.

    ஜியோஃபைபர் சலுகைகள் ரூ. 699 எனும் மாத கட்டணத்தில் துவங்கி அதிகபட்சமாக மாதம் ரூ. 8,499 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றின் இணைய வேகம் 100Mbps இல் துவங்கி 1 Gbps வரை கிடைக்கிறது. இத்துடன் ஒவ்வொரு சலுகையிலும் தனிப்பட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.
    டிக்டாக் செயலி சார்பில் கல்வி சார்ந்த புதிய திட்டம் எட்யுடாக் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



    டிகாட்க் சார்பில் எட்யுடாக் (Edutok) எனும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய திட்டத்தின் மூலம் பயனர்கள் செயலியில் இருந்தபடி தங்களுக்கு தெரியாத தகவல்களை கற்றுக் கொள்ள முடியும்.

    புதிய திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான தரவுகள் உருவாக்கப்பட்டு அவை #Edutok எனும் ஹாஷ்டேக் மூலம் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. இவை இதுவரை சுமார் 4800 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. மேலும் இவை 180 கோடிக்கும் அதிக முறை பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.

    எட்யுடாக் திட்டத்தின் கீழ் டிக்டாக் நிறுவனம் ஜோஷ் டாக்ஸ் மற்றும் தி / நட்ஸ் பவுன்டேஷன் போன்ற நிறுவனங்களுடன் இணைந்திருக்கிறது. இதன் மூலம் டிக்டாக் பயனர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் சார்பில் உருவாக்கப்படும் உயர் ரக கல்வி சார்ந்த தகவல்களை முதல்முறை டிக்டாக் பயனர்களுக்கு கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

    டிக்டாக்

    இத்துடன் டிக்டாக் நிறுவனம் முன்னணி தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான டாப்பர், மேட் ஈசி மற்றும் கிரேடு அப் போன்றவற்றுடன் இணைந்து பாடங்கள் தொடர்பான தரவுகளை செயலியில் வழங்க முடிவு செய்துள்ளது. இதனால் செயலியிலேயே பயனர்கள் கல்வி சார்ந்த பல்வேறு தகவல்களை வெவ்வேறு பிரிவுகள் மற்றும் மொழிகளில் பெற முடியும்.

    பயனர்கள் புதிய #Edutok அனுபவத்தை டிக்டாக் செயலியில் பெற முடியும். டிக்டாக் செயலி ஆப் ஸ்டோர் மற்றும் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது.
    விவோ நிறுவனத்தின் தீபாவளி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சலுகையின் கீழ் வாடிக்கையாளர்கள் ரூ. 101 செலுத்தி புதிய விவோ ஸ்மார்ட்போனினை பெற முடியும்.



    விவோ நிறுவன வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் தீபாவளி சலுகையை அறிவித்துள்ளது. புதிய சலுகை ஆஃப்லைன் சந்தையை குறிவைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி இன்று (அக்டோபர் 18) துவங்கி அக்டோபர் 31 ஆம் தேதி வரை வாடிக்கையாளர்கள் விவோ ஸ்மார்ட்போன்களை வாங்கும் போது சிறப்பு சலுகைகளை பெற முடியும். ஆஃப்லைன் சலுகை விவோ நிறுவனத்தின் வி17 ப்ரோ, வி15 ப்ரோ, இசட்1எக்ஸ் (8 ஜி.பி.), வி15, எஸ்1, வை17, வை15 மற்றும் வை12 போன்ற மாடல்களுக்கு வழங்கப்படுகின்றன.

    விவோ தீபாவளி சலுகையின் படி வாடிக்கையாளர்கள் ரூ. 101 மட்டும் செலுத்தி புதிய விவோ ஸ்மார்ட்போனினை வாங்கிட முடியும். பின் ஸ்மார்ட்போனிற்கான மீதித் தொகையை தவணை முறையில் செலுத்தலாம்.

    விவோ வி17 ப்ரோ

    இவைதவிர ஹெச்.டி.பி. வங்கி சேவைகளை பயன்படுத்தும் போது 10 சதவிகித கேஷ்பேக், ஹெச்.டி.எஃப்.சி., ஐசிஐசிஐ வங்கி கிரெடிட், டெபிட் கார்டு பயன்படுத்தும் போது 5 சதவிகித கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஹெச்.டி.எஃப்.சி. குறைந்த பட்ச மாத தவணை ரூ. 926 முதல் துவங்குகிறது.

    விவோ வி17 ப்ரோ மற்றும் எஸ்1 ஸ்மார்ட்போனினை விவோ கேஷிஃபை அப்கிரேடு செயலி மூலம் வாங்கும் போது ரூ. 1,999 மதிப்புள்ள ப்ளூடூத் ஹெட்போன்கள் வழங்கப்படுகிறது.

    இத்துடன் வட்டியில்லா மாத தவணை முறை வசதி, முன்பணமில்லாமல் சாதனங்களை வாங்கும் வசதி போன்றவையும் வழங்கப்படுகின்றன.
    இன்ஸ்டாகிராம் செயலி பயனர்கள் தங்களின் தனிப்பட்ட விவரங்களை இயக்குவதற்கான கூடுதல் வசதிகளை அந்நிறுவனம் வழங்கியுள்ளது.



    ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனது பயனர்கள் அவர்களின் தனிப்பட்ட விவரங்களை இயக்குவதற்கென கூடுதல் வசதிகளை வழங்கியுள்ளது. இன்ஸ்டாகிராம் பயனர் விவரங்கள் மூன்றாம் தரப்பினருடன் பகிர்ந்து கொள்ளப்படுவதை இனி வாடிக்கையாளர்கள் தீர்மானிக்க முடியும்.

    இதனை இயக்க இன்ஸ்டாகிராமில் செட்டிங்ஸ் -- செக்யூரிட்டி -- ஆப்ஸ் மற்றும் வெப்சைட்ஸ் ஆப்ஷன் சென்று எந்தெந்த மூன்றாம் தரப்பு சேவைகள் பயனர் விவரங்களை இயக்குகின்றன என்பதை அறிந்து கொள்ள முடியும்.

    "பயனர்கள் எங்களிடம் பகிர்ந்து கொள்ளும் விவரங்களை நாங்கள் பாதுகாப்பது முக்கியமான விஷயம் ஆகும். இதேபோன்று பயனர்கள் பகிர்ந்து கொள்ளும் விவரங்களை இயக்க அவர்களுக்கு அதிகளவு வசதியை வழங்க வேண்டும்," என இன்ஸ்டாகிராம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போன் பயன்பாடு - கோப்புப்படம்

    இத்துடன் மூன்றாம் தரப்பு சேவை பயனர் விவரங்களை கோரும் போது அவர்களுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் மேம்பட்ட ஆத்தரைசேஷன் ஸ்கிரீன் இன்ஸ்டாகிராம் செயலியில் விரைவில் வழங்கப்பட இருக்கிறது. 

    "எந்தெந்த விவரங்களை மூன்றாம் தரப்பு கோருகிறது என்பதை தெரிவிக்கும் வகையில், மேம்பட்ட ஆத்தரைசேஷன் ஸ்கிரீனினை அறிமுகம் செய்ய இருக்கிறோம். இதனை அனுமதிக்கவும், நிராகரிக்கும் வசதி நேரடியாக ஆத்தரைசேஷன் ஸ்கிரீனிலேயே வழங்கப்படும்," என இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.
    ரிலையன்ஸ் ஜியோ சேவையில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புக் கட்டணம் இவர்களுக்கு மட்டும் இலவசமாக வழங்கப்படுகிறது.



    ரிலையன்ஸ் ஜியோ நிறுவன வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக மற்ற நெட்வொர்க்களுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கப் போவதாக அந்நிறுவனம் அறிவித்தது.

    இந்நிலையில், ஜியோ எண்ணில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகள் அக்டோபர் 9 ஆம் தேதி மற்றும் அதற்கு முன் ரீசார்ஜ் செய்தவர்களுக்கு தொடர்ந்து இலவசமாக வழங்கப்படுகிறது. வாய்ஸ் கால் கட்டணம் டிராய் உத்தரவின் பேரில் இன்டர்கனெக்ட் பயன்பாட்டு கட்டணத்திற்காக (ஐ.யு.சி.) வசூலிக்கப்படுவதாக ஜியோ தெரிவித்தது.

    புதிதாக வாய்ஸ் கால் கட்டணம் வசூலிக்கப்படுவதால் ஜியோ சார்பில் கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. ரூ. 10 கட்டணத்திற்கு 1 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. ஜியோ புதிய அறிவிப்பின் படி அக்டோபர் 9 மற்றும் அதற்கு முன் ரீசார்ஜ் செய்தவர்கள் தொடர்ந்து வாய்ஸ் கால்களை இலவசமாக மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜியோ அறிக்கை

    இலவச வாய்ஸ் கால் சேவை வேலிடிட்டி இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படும். ஏற்கனவே ரீசார்ஜ் செய்த சலுகைக்கான வேலிடிட்டி தீர்ந்ததும், வழக்கமான ரீசார்ஜ் மற்றும் ஐ.யு.சி. டாப் அப் வவுச்சர்களை சேர்த்து வாங்க வேண்டும். இதை கொண்டு மற்ற நெட்வொர்க்களுக்கு வாய்ஸ் கால்களை மேற்கொள்ள முடியும்.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நான்கு ஐ.யு.சி. டாப் அப் வவுச்சர்களை அறிவித்தது. இவற்றின் விலை ரூ. 10-இல் துவங்கி அதிகபட்சம் ரூ. 100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வவுச்சர்களில் அதிகபட்சம் 1362 நிமிடங்களும், 20 ஜி.பி. டேட்டாவும் வழங்கப்படுகிறது. இவற்றை ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவன வாடிக்கையாளர்கள் வாய்ஸ் கால்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க்கில் சேவைகள் அனைத்தும் இலவசம் என்ற பெயரில் ரிலையன்ஸ் நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. 

    அளவுக்கு அதிகமான டேட்டா, அன்லிமிட்டட் வாய்ஸ் கால் போன்றவைகளை குறிப்பிட்ட தொகைக்குள் வழங்க, மற்ற நிறுவனங்களின் வளர்ச்சி மெல்ல மெல்ல பாதிக்க துவங்கியது. அதே நேரத்தில் ஜியோவில் இணையும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    ஜியோ அறிக்கை ஸ்கிரீன்ஷாட்

    இந்நிலையில் டிராயின் புது விதிப்படி, ஜியோ எண்ணிலிருந்து வேறு நெட்வோர்க்கிற்கு கால் செய்தால் நிமிடத்திற்கு 6 பைசா வசூலிக்கப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. கால் செய்வதற்கு என இனி 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை தனியாக ரிசார்ஜ் செய்ய வேண்டும் என ஜியோ அறிவித்துள்ளது. 

    புதிதாக வாய்ஸ் கால் சேவைக்கு கட்டணம் வசூலிப்பதால், வாடிக்கையாளர்கள் வழங்கும் கூடுதல் தொகையில் கூடுதலாக இலவச டேட்டா வழங்கப்படும் என ஜியோ தெரிவித்துள்ளது.

    ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு இலவச அவுட் கோயிங் வசதியை செய்து கொடுப்பதற்காக கடந்த 3 ஆண்டுகளில் மற்ற நிறுவனங்களுக்கு (இண்டெர்கனைக்ட் யூசேஜ் சார்ஜ்) என்று ரூ.13 ஆயிரத்து 500 கோடியை செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    இந்திய ஆன்லைன் தளங்களில் சமீபத்தில் நடைபெற்ற பண்டிகை கால விற்பனையில் ஆறு நாட்களில் ரூ. 19,000 கோடி மதிப்பிலான பொருட்கள் விற்பனையாகி இருக்கின்றன.



    அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களுடன் மற்ற வலைத்தளங்கள் சேர்ந்து நடத்திய ஆன்லைன் சிறப்பு விற்பனையில் ஆறே நாட்களில் சுமார் ரூ. 19,000 மதிப்பிலான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

    இந்திய ஆன்லைன் தளங்கள் நடத்திய சிறப்பு விற்பனையில் 90 சதவிகிதம் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் ஆக்கிரமித்திருந்தன. செப்டம்பர் 29 ஆம் தேதி துவங்கிய சிறப்பு விற்பனை அக்டோபர் 4 ஆம் தேதி வரை நடைபெற்றது. பெங்களூருவை சேர்ந்த ரெட்சீர் கன்சல்டன்சி எனும் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் விற்பனை விவரம் இடம்பெற்றிருக்கிறது.

    இதுதவிர அக்டோபர் மாதத்தில் மட்டும் ரூ. 39,000 கோடி மதிப்பிலான பொருட்கள் ஆன்லைன் தளங்களில் விற்பனை செய்யப்பட இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற ஆன்லைன் விற்பனையில் ப்ளிப்கார்ட் மட்டும் 60 முதல் 62 சதவிகித பங்கு பெற்றிருக்கிறது.

    ஆன்லைன் ஷாப்பிங்

    இந்த விற்பனையில் அமேசான் இந்தியா பங்குகள் 22 சதவிகிதம் ஆகும். எனினும், இதன் வளர்ச்சி முந்தைய ஆண்டை விட 30 சதவிகிதம் அதிகம் ஆகும். விற்பனை விவரம் பற்றி அமேசான் இந்தியா சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. முன்னதாக நடைபெற்ற கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது அமேசான் 51 சதவிகித பங்குகளை பெற்றிருந்தது.

    ப்ளிப்கார்ட் நடத்திய பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது அந்நிறுவனம் முந்தைய ஆண்டை விட 50 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்ததாக தெரிவித்தது. இந்த விற்பனையின் போது ஆறே நாட்களில் சுமார் 7000 கோடி பார்வையாளர்களை பெற்றிருந்தது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மீண்டும் விற்பனைக்கு வருகிறது.



    சாம்சங் நிறுவனம் இந்தியாவில் முப்பது நிமிடங்களில் 1600 கேலக்ஸி ஃபோல்டு யூனிட்களை விற்பனை செய்து அசத்தியது. அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெற்ற விற்பனையை தொடர்ந்து அக்டோபர் 11 ஆம் தேதி மீண்டும் முன்பதிவு நடைபெற இருக்கிறது.

    இந்தியாவில் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. சாம்சங்கின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 7.3 இன்ச் டிஸ்ப்ளே, ஆறு கேமராக்கள், 12 ஜி.பி. ரேம் மற்றும் 512 ஜி.பி. மெமரி கொண்டிருக்கிறது. 

    கேலக்ஸி ஃபோல்டு

    புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை வாங்குவோருக்கு ஒரு வருடத்திற்கான கேலக்ஸி ஃபோல்டு பிரீமியர் சர்வீஸ் வழங்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு 12 ஜி.பி. + 512 ஜி.பி. மெமரி மாடல் விலை இந்தியாவில் ரூ. 1,64,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிரீமியம் காஸ்மோஸ் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. 

    கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனுடன் கேலக்ஸி பட்ஸ் ஹெட்போன்களும் வழங்கப்படுகின்றன. இத்துடன் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்டுள்ள இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டிஸ்ப்ளேவுக்கான பாதுகாப்பு சலுகை ரூ. 10,500 விலையில் வழங்கப்படுகிறது. 
    ஸ்மார்ட்போன் வாங்கும் போது அதில் குறைந்தபட்சம் எத்தனை அளவு ரேம் இருக்க வேண்டும் என்பது பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    பேசுவதற்கு மட்டும் கைபேசி என்பது பழங்கதை. பாட்டு கேட்பது, புகைப்படம் எடுப்பது, வங்கியில் பணம் போடுவது எடுப்பது, பொருட்களை வாங்குவது விற்பது, சமூக வலைத்தளங்களில் நண்பர்களுடன் பேசுவது, வருமான வரி முதல் பல கட்டணங்களை இணையதளம் மூலம் கட்டுவது என்று லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டரில் செய்யும் எல்லா வேலைகளையும் நாம் இன்று நம் மொபைல் போன் மூலம் செய்கிறோம். 

    இப்படி பல வேலைகளை இடையூறு இல்லாமல் செய்ய நமக்கு தேவையானது தான் 'ரேம்' எனப்படும் 'ரேன்டம் ஆக்சஸ் மெமரி' நாம் டவுன்லோடு செய்யும் ஆப்களும், கேம்களும் நம் சிபியு (சென்ரல் ப்ராசசிங் யூனிட்) வில் தானே சேமிக்கப்படுகிறது. அப்படியிருக்கையில் 'ரேம்' என்பது எதற்கு என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் நாம் நம் போனில் ஒரு ஆப்பை திறந்து பார்த்துக் கொண்டிருக்கும் போது, மற்றொரு ஆப்பை திறக்க நேர்ந்து, மீண்டும் பழைய ஆப்பிற்கு போக நேர்ந்தால், ரேம் அந்த ஆப்பில் செய்துக் கொண்டிருந்த வேலை உடனடியாக விட்ட இடத்திலிருந்து தொடரும் வகையில் திறக்கப்படும். இது தான் 'ரேம்' செய்யும் வேலை. 

    நாம் மொத்தமாக ஒரு பொருளை வாங்கி வைத்திருக்கும் போது, அதிலிருந்து கொஞ்சத்தை எடுத்து கைக்கெட்டும் வகையில் டக்கென்று எடுக்கும் வகையில் வைத்துக் கொள்வோம் இல்லையா. அது போல் தான் சிபியு, ஜிபியூ வில் சேமிக்கப்பட்டிருக்கும் ஆப்பை 'ரேம்' மில் எடுத்து வைத்து உபயோகப்படுத்துவது.

    ஸ்மார்ட்போன் பயன்பாடு

    ரேம்மின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்

    முதன் முதலில் வந்த போன்களில் 192 எம்.பி. ரேம் தான் கொடுக்கப்பட்டிருந்தது. முதலில் வந்த ஐபோனில் 128 எம்.பி. ரேம் தான் இருந்தது. இது ஆண்டு தோறும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டு தற்போதைய போன்களில் 8 ஜிபி ரேம் கொடுக்கப்பட்டுள்ளது. 

    ஸ்மார்ட்போன் மூலம் பல வேலைகளை ஒரே நேரத்தில் துரிதமாக செய்ய வேண்டுபவர்களுக்கு 8 ஜிபி ரேம் என்பது தேவைப்படுகிறது. 8 ஜிபி என்பது எல்லோருக்கும் தேவைப்படக்கூடியது என்று சொல்ல முடியாது, பொதுவாக 4 ஜிபி ரேம் என்பது பெரும்பான்மையானவர்களுக்கு போதுமானதாக இருக்கும். பொதுவாக ஒரு ஸ்மார்ட் போனில் ஒரு நாளைக்கு 10 ஆப் என்ற அளவிற்கு திறக்கிறார் என்றும், ஒரு மாதத்திற்கு கிட்டத்தட்ட 30 வெவ்வேறு ஆப்களை உபயோகிக்கிறார் என்றும் வைத்துக் கொண்டால், அதற்கு கிட்டத்தட்ட 3 ஜிபி அளவிற்கான மெமரி உபயோகப்படுத்தப்பட்டிருக்கும்.

    ஸ்மார்ட்போன் ரேம்

    ஏன் அதிக ரேம் தேவை

    தற்போதைய போன்களில் பெரிய அளவிலான மென்பொருட்களுடன் வருகிறது. பல சிக்கலான பணிகளை ஸ்மார்ட்போன் மூலமாகவே செய்கிறோம். கேமராக்கள் மூலம் பெரிய படங்களை 'ஆர்.ஏ.டபிள்யூ' (RAW) ஃபார்மெட்டில் படமாக்கும் செயல்பாடுகள் போனில் இருக்கிறது. பெரிய தொடு திரைகள் வந்துள்ளன. 

    ஒரு ஆப்பை திறந்து வைத்துவிட்டு மற்றொரு ஆப்பில் ஒரு வேலையை முடித்து விட்டு திரும்பும் போது பழைய ஆப் மூடியிருந்தால், திரும்பவும் முதலிலிருந்து திறக்க அதிக நேரம் ஆகும். இதனால் துரிதமாக வேலை செய்ய முடியாது. பல பேர் இன்று மெயில் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வாட்ஸ்அப்பில் மற்றொருவருடன் பேசிக் கொண்டிருப்பார். 

    வாட்ஸ்அப்பில் பேசிக் கொண்டிருப்பவர் அனுப்பும் ஒரு புகைப்படத்தையோ, ஆவணத்தையோ, டவுன்லோட் செய்து, மெயிலில் வேறொருவருக்கு அனுப்ப வேண்டியிருக்கலாம். அதே நேரம் இந்த வேலை பற்றிய விவரத்தை மற்றொரு சமூக வலைத்தளத்தில் பதிவிட வேண்டியிருக்கலாம். 

    இம்மாதிரி தருணத்தில் ஒரே நேரத்தில் பல ஆப்களுக்கு மாற்றிக்கொண்டேயிருக்க வேண்டி இருக்கும். இதற்கு அதிக ரேம் உள்ள போன்கள் வசதியாகவும், மென்மையாகவும் தொடர்ந்து இயக்கக் கூடியதாகவும் இருக்கும். எனவே தற்போதைய பலருடையப் பயன்பாட்டிற்கு 4 ஜிபி ரேம் உள்ள ஸ்மார்ட்போன்கள் உகந்ததாக இருக்கின்றன.
    இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் விற்பனையகம் திறக்கப்பட இருக்கும் இடம் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது.



    இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் விற்பனையகம் பற்றிய விவரங்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் சொந்த விற்பனையகம் மும்பையில் அடுத்த ஆண்டு திறக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மும்பையின் பந்த்ரா குர்லா வளாகத்தில் ஆப்பிள் நிறுவனம் தனது முதல் விற்பனையகத்தை திறக்க இருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் முதல் விற்பனையகம் சுமார் 20,000 முதல் 25,000 சதுர அடி பரப்பளவு கொண்ட இடத்தில் அமைக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய ஆப்பிள் ஸ்டோராக இருக்கும் என தெரிகிறது.

    ஆப்பிள்

    தற்சமயம் முதல் ஆப்பிள் விற்பனையகத்திற்கான வடிவமைப்பு, உள்புற மரச்சாமான்களை இறக்குமதி செய்வதற்கான பணிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விற்பனையகம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    ஆப்பிள் நிறுவனம் விரைவில் இரண்டு முதல் மூன்று சில்லறை விற்பனையகங்களை இந்தியாவில் திறக்க திட்டமிட்டுள்ளது. தற்சமயம் ஆப்பிள் நிறுவனம் தனது சாதனங்களை ப்ளிப்கார்ட், அமேசான், பே.டி.எம். மால் மற்றும் ஆஃப்லைன் விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.
    மைக்ரோசாஃப்ட் நிறுவனம் புதிய சர்ஃபேஸ் லேப்டாப் 3 சீரிஸ் மற்றும் சர்ஃபேஸ் ப்ரோ 7 மாடல்களை அறிமுகம் செய்தது.



    மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சர்ஃபேஸ் 2019 நிகழ்வில் பல்வேறு புதிய சாதனங்களை அறி்முகம் செய்தது. நியூ யார்க் நகரில் நடைபெற்ற நிகழ்வில் சர்ஃபேஸ் ப்ரோ எக்ஸ், சர்ஃபேஸ் நியோ, சர்ஃபேஸ் டுயோ மற்றும் விண்டோஸ் 10 எக்ஸ் உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்தது.

    மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் 3 விவரங்கள்:

    மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் 3 மற்றும் சர்ஃபேஸ் ப்ரோ 7 டேப்லெட் உள்ளிட்டவையும் அறிமுகம் செய்யப்பட்டன. புதிய சர்ஃபேஸ் லேப்டாப் 3 சிரிஸ் 13.5 இன்ச் மற்றும் 15-இன்ச் டிஸ்ப்ளேக்களில் கிடைக்கின்றன. இவற்றுடன் 10 ஆம் தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர்கள் வழங்கப்படுகின்றன.

    இதுதவிர சேன்ட்ஸ்டோன் மற்றும் கோபால்ட் என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது. இவை மெஷின்டு அலுமினியம் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் புதிய ஏ.எம்.டி. ரைஸன் சர்ஃபேஸ் எடிஷனும் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய சர்ஃபேஸ் லேப்டாப் 3 மாடல்களில் ஒற்றை யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளன.

    சர்ஃபேஸ் ப்ரோ 7

    புதிய லேப்டாப்களில் டிராக்பேட் அளவு 20 சதவிகிதம் வரை அதிகரிக்கப்பட்டு, ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் லேப்டாப்களை 0 முதல் 80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய ஒரு மணி நேரம் மட்டுமே போதும். இத்துடன் முன்புற கேமராக்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

    இத்துடன் ஆம்னிசோனிக் ஸ்பீக்கர்கள், டூயல் ஃபார் ஃபீல்டு ஸ்டூடியோ மைக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் 13 இன்ச் மாடல் விலை 999 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 71,151) என்றும் 15 இன்ச் மாடல் விலை 1199 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 85,395) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

    சர்ஃபேஸ் லேப்டாப் 3 சீரிஸ் போன்றே ப்ரோ 7 மாடல்களிலும் 10 ஆம் தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் யு.எஸ்.பி. டைப்-ஏ, யு.எஸ்.பி. டைப்-சி போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் 4K மாணிட்டர்களுடன் இணையும் வசதி கொண்டிருக்கிறது. இதன் விலை 749 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 53,345) முதல் துவங்குகிறது.
    ×