என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
சமீபத்தில் 5ஜி சேவைகளை வழங்கிய சீனா தற்சமயம் 6ஜி தொழில்நுட்பத்திற்கான பணிகளை துவங்கி இருக்கிறது.
உலக நாடுகளில் 5ஜி சேவை வழங்கும் பணிகளே துவக்க கட்டத்தில் இருக்கும் நிலையில், சீனா 6ஜி சேவைக்கான பணிகளை துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் 5ஜி சேவை வழங்க துவங்கி ஒரு மாதம் நிறைவுறாத நிலையில் 6ஜி சேவைக்கான துவக்க பணிகளில் சீனா ஈடுபட துவங்கி விட்டது.
சீனா, கொரியா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா என சில நாடுகளில் மட்டும் 5ஜி சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் 5ஜி சேவையை வழங்கவதற்கான பணிகளில் ரிலையன்ஸ் ஜியோ ஈடுபட்டுள்ளது. 5ஜி சேவையை முழுமையாக பயன்படுத்த வல்லுநர்கள் திணறும் நிலையில் சீனா 6ஜி சேவைக்கான தொழில்நுட்ப ஆய்வுகளை துவங்கி இருக்கிறது.

சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் 6ஜி சேவைக்கான துவக்க பணிகளை கவனிக்க இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அரசு வல்லுநர்கள் அடங்கிய முதல் குழு 6ஜி சேவைக்கான பயன்களை பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கின்றனர்.
இரண்டாவது குழு 37 பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களில் இருந்து ஆய்வாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு 6ஜி சேவைக்கான தொழில்நுட்ப பிரிவில் ஆய்வு செய்து தேவையான அறிவுரைகளை வழங்கும் பணிகளை மேற்கொள்ள இருக்கிறது.
செப்டம்பர் மாதத்தில் ஹூவாய் நிறுவனம் 6ஜி சேவைக்கான பணிகளை துவங்கிவிட்டதாக அறிவித்தது. எனினும், இது வெறும் துவக்க பணிகள் தான் என்பதால் 6ஜி வணிக மயம் பெற இன்னும் நீண்ட காலம் ஆகும்.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு ஏற்படும் நஷ்டத்தை குறைக்கும் நோக்கில் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பண பயன்களுடன் பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை 80,000 பேர் பயன்படுத்திக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 1½ லட்சம் பேர் பணியாற்றி வருகிற பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் அதன் ஊழியர்களுக்கு பணப்பயன்களுடன் கூடிய விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி அந்த நிறுவனத்தின் தலைவர் பி.கே. புர்வார், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு இது மிகச்சிறப்பான விருப்ப ஓய்வுத்திட்டம் ஆகும். இந்த திட்டம் அடுத்த மாதம் 3 ஆம் தேதி வரையில் அமலில் இருக்கும். இதையொட்டி ஊழியர்களுக்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணியில் உள்ள 1½ லட்சம் ஊழியர்களில் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் விருப்ப ஓய்வுக்கு தகுதி பெறுகிறார்கள்.

50 வயதை அடைந்தவர்கள், அதற்கு கூடுதலான வயதினர் விருப்ப ஓய்வு வரம்புக்குள் வருகிறார்கள். 80 ஆயிரம் ஊழியர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தி விருப்ப ஓய்வு பெற முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இதனால் நிறுவன ஊழியர்களுக்கான சம்பள செலவு ரூ.7000 கோடி குறையும் என அவர் கூறினார்.
விருப்ப ஓய்வு பெற விரும்புகிற பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கான பண பயன்கள்:
- பணி நிறைவு செய்த ஒவ்வொரு ஆண்டுக்கும் தலா 35 நாட்கள் ஊதியம் கருணைத்தொகையாக வழங்கப்படும்.
- பணி ஓய்வு காலம் வரையிலான எஞ்சிய காலத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு 25 நாள் ஊதியம் அளிக்கப்படும்.
இதே போன்று எம்.டி.என்.எல். ஊழியர்களுக்கும் விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான விருப்ப ஓய்வு திட்டமும் அடுத்த மாதம் 3 ஆம் தேதிவரை நடைமுறையில் இருக்கும்.
நஷ்டத்தில் இயங்கி வருகிற பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்களை இணைத்து புத்துயிரூட்டவும், அவற்றின் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அமல்படுத்தவும் ரூ.69 ஆயிரம் கோடி வழங்க மத்திய அரசு கடந்த மாதம் முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
ஃபேஸ்புக் நிறுவனம் தனது லோகோவை மாற்றியமைத்து இருக்கிறது. இதுகுறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஃபேஸ்புக் நிறுவனம் தனது லோகோவை மாற்றியமைத்துள்ளது. நிறுவனம் துவங்கி 15 ஆண்டுகள் கழித்து ஃபேஸ்புக் தனது லோகோவை மாற்றியுள்ளது. புதிய லோகோ நிறுவனத்திற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய லோகோ நிறுவனம் மற்றும் செயலியை தோற்றத்தின் அடிப்படையில் வித்தியாசப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய லோகோ ஃபேஸ்புக் வழங்கும் அனைத்து சேவைகளிலும் மாற்றப்படுகிறது. அந்த வகையில் ஃபேஸ்புக் ஆப், மெசஞ்சர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ஆகுலஸ், வொர்க்பிளேஸ், போர்டல் மற்றும் கலிப்ரா போன்றவற்றுக்கு புதிய லோகோ காப்படுகிறது.

ஃபேஸ்புக் நிறுவன சேவைகளில் ஃபேஸ்புக்கில் இருந்து (from Facebook) என குறிப்பிடும் வழக்கத்தை இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் துவங்கியது. வரும் வாரங்களில் புதிய லோகோவினை தனது சேவைகளில் அறிமுகம் செய்ய ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது. புதிய லோகோ ஒற்றை நிறத்தில் இல்லாமல் ஃபேஸ்புக் வழங்கும் சேவைகளை குறிப்பிடும் வகையில் பல்வேறு நிறங்களில் இருக்கும்.
எல்லாவற்றுக்கும் இ-மெயில் பயன்படுத்துபவர்கள், இனி அந்தமாதிரியான சேவைகளுக்கு இதுபோன்ற இ-மெயில் பயன்படுத்தலாம்.
இ-மெயில் இல்லாமல் இணையவாசிகள் இல்லை என்ற காலக்கட்டத்தில் பல்வேறு இடங்களில் இ-மெயில் முகவரியை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. முக்கியமான விஷயத்திற்காக தனிப்பட்ட இ-மெயில்களை பயன்படுத்துவதில் தவறில்லை.
ஒருசில தற்காலிக தேவைகளுக்கு அதாவது சினிமா டிக்கெட் எடுப்பது உள்பட ஒருசில விஷயங்களுக்கு நாம் தனிப்பட்ட இ-மெயில்களை பயன்படுத்தினால் பின்னர் அதனால் வரும் ‘ஸ்பேம்’ இ-மெயில்களின் தொல்லை தாங்க முடியாத அளவில் இருக்கும்.
நமக்கு வரும் தனிப்பட்ட இ-மெயில்கள் எப்படி, எங்கு போகும் என்றே நமக்கு தெரியாது. பல இடங்களில் இருந்து வரும் தேவையில்லாத இ-மெயில்கள் நம்முடைய இன்பாக்சை அடைத்து கொண்டு எரிச்சலை ஏற்படுத்தும்.
இந்த மாதிரியான பிரச்சினைகளை தவிர்க்க தனிப்பட்ட இ-மெயில்களுக்கு பதிலாக, தற்காலிக இ-மெயில்களை உபயோகிக்கலாம். அந்த வகை இ-மெயில்கள் என்ன என்பதையும், அவை உபயோகிக்கும் முறை குறித்தும் தற்போது பார்ப்போம்.

10 நிமிட மெயில் (10 minute mail) என்பது உபயோகிக்க மிக எளிதான ஒன்று. ஒவ்வொரு முறையும் இந்த இணையதளத்திற்கு நீங்கள் சென்றால் உங்களுக்கு ஒரு இ-மெயில் ஐ.டி. கிடைக்கும். ஆனால் அது வெறும் பத்து நிமிடங்களுக்கு மட்டுமே செல்லுபடி ஆகும். இந்த இணையதளத்திற்கு நீங்கள் சென்ற உடனே நேரம் ‘கவுண்ட்’ ஆக ஆரம்பித்துவிடும்.
சரியாக பத்து நிமிடத்திற்குள் நீங்கள் அந்த இ-மெயிலை தற்காலிகமாக பயன்படுத்தி கொள்ளலாம். தேவையென்றால் மீண்டும் அந்த பக்கத்தை ரீஃபிரஷ் செய்தால் மேலும் பத்து நிமிடங்கள் தோன்றும். இதன் மூலம் தற்காலிக தேவைகளுக்கு இந்த மெயிலை பயன்படுத்தி கொள்ளலாம்.
இதனால் உங்களுடைய தனிப்பட்ட இ-மெயில் பாதுகாக்கப்படும். மேலும் இதில் உள்ள ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் உங்களை தவிர வேறு யாரும் இந்த இ-மெயிலை ஓப்பன் செய்து படிக்க முடியாது என்பதுதான்.

இணையத்தில் இருக்கும் மற்றொரு தற்காலிக இ-மெயில் மெயிலினேட்டர் (mailinator) . இதில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட பெயரை கொண்டு தற்காலிக இ-மெயிலாக கிரியேட் செய்து கொள்ளலாம். அதன் மூலம் ஏதாவது ஒரு விஷயத்திற்கு பயன்படுத்தி அதில் வரும் இ-மெயில்களையும் படித்து நமது வேலையை முடித்து கொள்ளலாம். இந்த இணையதளத்தில் ஏதாவது ஒரு யூசர் பெயரை பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த இ-மெயிலை பயன்படுத்தியவுடன் டிஸ்போஸ் செய்து கொள்ளவும் வசதி உண்டு. ஆனால் 10 நிமிட இமெயில் போல இதை யாரும் படிக்க முடியாது என்று உறுதி கூற முடியாது.
தற்காலிக இமெயில்களில் கொஞ்சம் சக்திவாய்ந்தது குயரில்லா மெயில் (guerrilla mail). இதனால் புகைப்படங்கள் உள்பட ஏதாவது ஃபைல்கள் வேண்டுமானாலும் இதில் உபயோகிக்கலாம். இந்த மெயிலை நீங்கள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ உங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்தி கொள்ளலாம்.
ஆனால் நமக்கு வரும் இ-மெயில்கள் ஒருமணி நேரத்தில் டெலிட் ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இந்த குயரில்லா இ-மெயில் வேறு டொமைன்களிலும் பயன்படுத்தும் வகையில் உள்ளது.
மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் செல்போன்களில் இன்கமிங் அழைப்புகளுக்கான ஒலி நேர அளவில் மாற்றம் செய்துள்ளது.
செல்போன்களுக்கு வரும் அழைப்புகளின் ஒலி நேரத்துக்கு இந்தியாவில் இது வரை வரையறை இல்லாமல் இருந்தது. ஒவ்வொரு செல்போன் நிறுவனங்களும் 30 வினாடிகள் முதல் 45 வினாடிகள் வரை அழைப்பு ஒலி நேரத்தை வழங்கி வந்தன.
இந்த நிலையில் அழைப்பு ஒலி நேரத்தை முறைகேடாக பயன்படுத்தி ஆதாயம் அடைவதாக செல்போன் நிறுவனங்களுக்குள் சர்ச்சை நிலவி வந்தது. இதைத் தொடர்ந்து அழைப்பு ஒலி நேரம் தொடர்பாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை நிறுவனமான டிராய் புதிய நடைமுறையை தெரிவித்துள்ளது.

அதன் படி செல்போனில் அழைப்பு ஒலி நேரம் 30 வினாடியாகவும், லேண்ட்லைன் போனில் அழைப்பு ஒலி நேரம் 60 வினாடியாகவும் இருக்க வேண்டும் என்று டிராய் உத்தரவிட்டுள்ளது. இது இன்னும் 15 நாட்களில் அமலுக்கு வர உள்ளது.
முன்னதாக அழைப்பு ஒலி நேரத்தை 20 முதல் 5 வினாடியாக நிர்ணயிக்க வேண்டும் என்று ஜியோ நிறுவனம் வலியுறுத்தி இருந்தது. ஆனால் ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்கள் 30 வினாடியில் இருந்து 70 வினாடிக்குள் நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன. அதன் அடிப்படையில் அழைப்பு ஒலி நேரத்தை 30 வினாடியாக டிராய் நிர்ணயித்து புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.
லட்சக்கணக்கான இந்தியர்களின் டெபிட், கிரெடிட் கார்டு விவரங்கள் இணையத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்ட விவகாரத்தில் வங்கிகள் விளக்கமளிக்க மத்திய ரிசர்வ் வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜோக்கர்ஸ் ஸ்டாஷ் என்ற நிழல் உலக வலைத்தள சந்தையில், இணைய குற்றவாளிகளுக்கு சாதகமான தகவல்கள் இடம் பெறுவது வழக்கம். தற்போது, இந்த வலைத்தள சந்தையில், உலகம் முழுவதும் சுமார் 13 லட்சம் பேரின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியானது.
இந்த விவரங்களை பெற்று, ஆன்லைன் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தலாம். அல்லது, போலி கார்டு தயாரித்து பயன்படுத்தலாம். எனவே, வாடிக்கையாளர்களின் பணம் பறிபோகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வாடிக்கையாளர்களின் விவரங்கள் வெளியான சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கவும், தகவல்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும் இந்திய வங்கிகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
நிழல் உலக வலைத்தள சந்தையில் ஒரு கார்டு பற்றிய விவரத்திற்கான விலை 100 டாலர்கள் (இந்திய மதிப்பில், ரூ.7, 100) என நிர்ணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மொத்த கார்டு விவரங்களின் மதிப்பு 13 கோடி டாலர் ( இந்திய மதிப்பில் ரூ.923 கோடி). இந்த கார்டுகளில், 98 சதவீத கார்டுகள், இந்தியாவை சேர்ந்தவர்களின் கார்டுகள் ஆகும்.
இந்தியாவில் புழக்கத்தில் உள்ள மொத்த டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை 97 கோடியே 17 லட்சம் ஆகும். இவற்றில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட கார்டு விவரங்கள் திருடு போயுள்ளன.

ஏ.டி.எம். எந்திரத்திலும், பாயிண்ட் ஆப் சேல் கருவியிலும் கார்டுகளை பயன்படுத்தும்போது, அவற்றில் பொருத்தப்பட்ட ‘ஸ்கிம்மர்’ கருவி மூலம் இந்த விவரங்கள் திருடப்பட்டுள்ளதாக சிங்கப்பூரை சேர்ந்த ‘குரூப் ஐபி’ என்ற நிறுவனம் கூறியுள்ளது. இது, இணைய குற்றங்களை தடுப்பதிலும், கண்டறிவதிலும் அனுபவம் பெற்ற நிறுவனம் ஆகும்.
அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இலியா சச்கோவ் கூறியதாவது:-
நிழல் உலக சந்தையில் இந்த பிராந்தியத்தை சேர்ந்த கார்டுகளின் விவரங்கள் மிகவும் அரிதாகவே கிடைக்கும். ஆனால், கடந்த 12 மாதங்களில் இந்திய வங்கிகளை சேர்ந்த கார்டு விவரங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம்.
விற்பனைக்கு உள்ள கார்டு விவரங்களில், 18 சதவிகித கார்டு விவரங்கள், ஒரே ஒரு இந்திய வங்கியின் கார்டுக்கு உரியவை. பலதரப்பட்ட வங்கிகளின் கார்டு விவரங்கள் திருடப்பட்டதால், ஒரே ஒரு வங்கியை குறிவைத்து நடத்தப்பட்ட இணைய தாக்குதலாக தோன்றவில்லை. பரவலான பாதுகாப்பு குளறுபடியாகவே தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த பிப்ரவரி மாதம், அமெரிக்கர்களின் 21 லட்சம் கார்டுகளின் விவரங்கள், இதே வலைத்தள சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, இந்தியர்களின் கார்டு விவரங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 32 லட்சம் டெபிட் கார்டுகளின் விவரங்கள் திருடப்பட்டன. இதையடுத்து, சம்பந்தப்பட்ட வங்கிகள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ‘சிப்’ பொருத்தப்பட்ட கார்டுகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் நிறுவனம் 2019 ஆம் ஆண்டு நான்காவது காலாண்டு வருவாய் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதுபற்றிய முழு விவரங்களை பார்ப்போம்.
2019 ஆம் ஆண்டு நான்காவது காலாண்டில் இந்தியா போன்ற சந்தைகளில் ஆப்பிள் நிறுவனம் வருவாய் வரலாறு காணாத வகையில் அதிகரித்து உள்ளது. 2019 நான்காவது காலாண்டில் ஆப்பிள் நிறுவன வருவாய் 6,400 கோடி டாலர்களாக இருக்கிறது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது இரண்டு சதவிகிதம் அதிகம் ஆகும்.
இந்த காலாண்டு வருவாயில் 60 சதவிகிதம் சர்வதேச விற்பனையில் இருந்து கிடைத்திருப்பதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவன பொருட்கள் விற்பனையில் இருந்து மட்டும் சுமார் 5,150 கோடி டாலர்களும், சேவைகள் பிரிவில் இருந்து 1,250 கோடி டாலர்கள் வருவாய் கிடைத்திருக்கிறது.

ஐபோன் விற்பனையில் இருந்து 3,360 கோடி டாலர்கள் வருவாய் கிடைத்திருக்கிறது. ஐபோன் வருவாய் திட்டம் மேம்பட்டு இருந்தாலும், இதன் மூலம் கிடைத்த வருவாய் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 9 சதவிகிதம் குறைவு ஆகும். மேக் சாதனங்களால் கிடைத்த வருவாய் சரிந்துள்ளது.
இதே காலாண்டில் ஐபேட் மற்றும் அணியக்கூடிய சாதனங்களின் விற்பனை முந்தைய ஆண்டை விட அதிகரித்துள்ளது. ஐபேட் வருவாய் 465 கோடி டாலர்களாகவும், ஹோம் மற்றும் அக்சஸரீக்கள் மூலம் கிடைத்த வருவாய் 650 கோடி டாலர்களாக இருக்கிறது.
உலகின் சிறந்த தலைமை செயல் அதிகாரிகள் பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மூன்று பேர் முதல் பத்து இடங்களுக்குள் தேர்வாகியுள்ளனர்.
ஹார்வர்டு பல்கலைகழகத்தின் பொது மேலாண்மை இதழான, ஹார்வர்டு பிஸ்னஸ் ரிவ்யூ 2019ஆம் ஆண்டின் உலகளவில் சிறந்து விளங்கும் 100 தலைமை செயல் அதிகாரிகளின் பட்டியலை தயார் செய்து வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்களில் ஆய்வு செய்து வெளியாகியுள்ள இதில், இந்திய வம்சாவளியை சேர்ந்த மூன்று பேர் முதல் பத்து இடங்களுக்குள் தேர்வாகி இருக்கின்றனர்.

அந்த வகையில், அடோப் நிறுவனத்தை சேர்ந்த சாந்தனு நாராயண் 6ஆவது இடத்திலும், மாஸ்டர்கார்டு நிறுவனத்தை சேர்ந்த அஜய் பங்கா 7 ஆவது இடமும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தை சேர்ந்த சத்ய நாதெல்லா, 9 ஆவது இடமும் பிடித்துள்ளனர்.
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான என்விடியாவை சேர்ந்த ஜென்சன் ஹாங் முதலிடம் பிடித்துள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை மற்றும் விவரங்களை பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் ப்ரோ இயர்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. மேம்பட்ட அம்சங்களுடன் அறிமுகமாகி இருக்கும் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலில் புதிய இன்-இயர் வடிவமைப்பு, ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
முன்னதாக ஆப்பிள் நிறுவனம் வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் கொண்ட புதிய ஏர்பாட்ஸ் இயர்போனினை அறிமுகம் செய்தது. அந்த வகையில் தற்சமயம் அறிமுகமாகி இருக்கும் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலும் வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் உடன் வழங்கப்படுகிறது.
புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ ஐ.ஒ.எஸ். 13.2, ஐபேட் ஒ.எஸ். 13.2, வாட்ச் ஒ.எஸ். 6.1, டி.வி. ஒ.எஸ். 13.2, மேக் ஒ.எஸ். கேட்டலினா 10.15.1 அல்லது அதற்கு பின் வெளியான இயங்குதளங்களுடன் வேலை செய்யும் என ஆப்பிள் தெரிவித்தது.

ஏர்பாட்ஸ் ப்ரோ இயர்போன் ப்ளூடூத் 5.0 மற்றும் H1 சிப் மற்றும் 10 ஆடியோ கோர்களை கொண்டிருக்கிறது. இத்துடன் ஒவ்வொரு இயர்பட்களும் காதுகளில் சவுகரியத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மோட் இரு மைக்ரோபோன்களை பயன்படுத்துகிறது.
இதனால் பயனர் இருக்கும் சூழலில் அதிகப்படியான சத்தத்தை குறைத்து, பயனர்களை அலாதியான இசையை அனுபவிக்க வழி செய்யும். இதில் உள்ள அடாப்டிவ் இ.கியூ. அம்சம் தானாக இயங்கி பயனர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்குகிறது. இத்துடன் IPX4 தரச்சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.
இந்தியாவில் ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ விலை ரூ. 24,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ விற்பனை அக்டோபர் 30 ஆம் தேதி துவங்குகிறது. இந்திய விற்பனை விரைவில் துவங்கும் என எதி்ர்பார்க்கப்படுகிறது.
கனடா நாட்டில் ஆபத்தில் சிக்கிய பெண்மணியின் உயிரை ஆப்பிள் வாட்ச் காப்பாற்றி இருக்கிறது.
ஆப்பிள் வாட்ச் மூலம் ஆபத்தில் சிக்கி உயிர்பிழைத்தவர்கள் ஏராளம் எனலாம். பலரின் உயிரை காப்பாற்றிய பெருமை கொண்ட ஆப்பிள் வாட்ச் சமீபத்தில் பெண்மணியின் உயிரை காப்பாற்றி இருக்கிறது.
கனடாவின் கல்கரி பகுதியை சேர்ந்த பெண்மணி தன்வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் மர்ம நபர் மறைந்திருப்பதை அவர் கண்டு அதிர்ந்தார். வீட்டில் யாரும் இல்லாததை உணர்ந்ததும், அவர் உதவிக்கு போன் அழைக்க முயன்றார். எனினும் அவர் அருகில் போன் இல்லாததால் அவரால் யாருக்கும் அழைப்பை மேற்கொள்ள இயலவில்லை.

பின் அவர் அணிந்து இருந்த ஆப்பிள் வாட்ச் கொண்டு தான் ஆபத்தில் சிக்கியிருக்கும் தகவலை தனது நண்பருக்கு தெரியப்படுத்தினார். இதை அறிந்த நண்பர் உடனே காவல்துறைக்கு தகவல் கொடுத்துவிட்டார். அதிரடியாக ஆபத்தில் சிக்கிய பெண்மணி வீட்டிற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் மர்ம நபரிடம் இருந்து அவரை மீட்டனர்.
பின் வீட்டில் மறைந்து இருந்த ஜான் ஜோசப் மசின்டோ என்பவரை கைது செய்தனர். விசாரணையில் பெண்மணியை பாலியில் ரீதியில் அச்சுறுத்தும் நோக்கில் வீட்டிற்குள் நுழைந்ததாக ஒப்புக் கொண்டார். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பையில் கத்தி, கயிறு, ஆணுறை மற்றும் பல்வேறு பொருட்கள் இருந்தன.
மேலும் கைது செய்யப்பட்டவரிடம் பெண்மணியின் வீட்டு நுழைவு அட்டை, போலி சாவிகள் உள்ளிட்டவையும் இருந்ததாக தகவல் கூறப்படுகிறது. எனினும், ஆப்பிள் வாட்ச் உதவியுடன் பெண்மணி எவ்வித பாதிப்பும் இன்றி காப்பாற்றப்பட்டார்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ போன் வாடிக்கையாளர்களுக்கு ஆல் இன் ஒன் சலுகைகளை அறிவித்துள்ளது.
ஜியோ போன் வாடிக்கையாளர்களுக்கு ஆல் இன் ஒன் சலுகைகளை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது. புதிய பிரீபெயிட் சலுகைகளில் ரிலையன்ஸ் ஜியோ முன்பை விட 25 சதவிகிதம் கூடுதல் பலன்களை வழங்குகிறது.
மேலும் இந்த சலுகைகளில் 500 நிமிடங்களுக்கு ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு வாய்ஸ் கால் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. ஜியோ போன் வாடிக்கையாளர்களுக்கு என அந்நிறுவனம் மொத்தம் நான்கு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.
இவற்றின் விலை ரூ. 75 துவங்குகிறது. இதில் 28 நாட்களுக்கு 56 ஜி.பி. டேட்டா வழங்குகிறது. 500 ஜியோ அல்லாத அழைப்புகளுடன் அன்லிமிட்டெட் ஜியோ-ஜியோ மற்றும் லேண்ட்லைன் அழைப்புகள் வழங்கப்படுகின்றன.

ரூ. 75 துவக்க விலை சலுகையில் 3 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் ஜியோ-டு-ஜியோ மற்றும் லேண்ட்லைன் அழைப்புகளும், 500 நிமிடங்களுக்கு ஜியோ அல்லாத அழைப்புகள் 28 நாட்களுக்கு வழங்கப்படுகின்றன. இத்துடன் 50 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகின்றன.
இத்துடன் ரூ. 125, ரூ. 155 மற்றும் ரூ. 185 விலையில் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில் விலை உயர்ந்த சலுகையில் அதிகபட்சம் 56 ஜி.பி. டேட்டா, 500 நிமிடங்களுக்கு ஜியோ அல்லாத அழைப்புகள் 28 நாட்களுக்கு வழங்கப்படுகின்றன.
அமெரிக்காவின் வர்த்தக தடையை தகர்த்து ஹூவாய் நிறுவனம் குறுகிய காலக்கட்டத்தில் 20 கோடி ஸ்மார்ட்போன்களை விற்றிருக்கிறது.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹூவாய் 20 கோடி ஸ்மார்ட்போன்களை விற்றிருக்கிறது. விற்பனையில் இத்தகைய யூனிட்களை மிகக் குறுகிய காலக்கட்டத்தில் ஹூவாய் கடந்திருக்கிறது. ஹூவாய் சார்பில் வெளியிடப்பட்ட ஸ்மார்ட்போன் விற்பனை நிலவர அறிக்கையில், அமெரிக்க வர்த்தக தடையால் ஹூவாய் எவ்வித பாதிப்பையும் எதிர்கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.
ஹூவாய் நுகர்வோர் வியாபார குழு கடந்த ஆண்டு விற்பனையுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு விற்பனையில் 20 கோடி யூனிட்களை 64 நாட்களுக்கு முன்னதாக கடந்துள்ளது. அமோக விற்பனை காரணமாக ஸ்மார்ட்போன் சந்தையில் ஹூவாய் நிறுவனம் இரண்டாவது இடத்தை தக்கவைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூவாய் ஸ்மார்ட்போன் விற்பனை பற்றிய அறிவிப்பு வெளியாகியிருக்கும் நிலையில், இந்நிறுவனத்தின் ஹானர் பிராண்டு எத்தனை ஸ்மார்ட்போன்களை விற்றிருக்கிறது என்பது பற்றி எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. அமெரிக்க வர்த்தக தடை விதிக்கப்பட்டதும், ஹூவாய் நிறுவன விற்பனை சரியும் என வல்லுநர்கள் கணித்திருந்தனர்.

எனினும், வல்லுநர் கணிப்பை புறந்தள்ளி, ஹூவாய் நிறுவனம் கடந்த ஆண்டு விற்றதை விட அதிக ஸ்மார்ட்போன்களை இந்த ஆண்டு விற்பனை செய்யும் என தெரிகிறது. ஹூவாய் நிறுவன சாதனங்கள் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் அறிமுகம் செய்யப்படுகின்றன. புதிய ஹூவாய் பி30 மற்றும் மேட் 30 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் புகைப்பட பிரிவில் முன்னணி நிறுவனம் என பெயர் பெற்றிருக்கிறது.
இதுதவிர கடந்த மாதம் நடைபெற்ற ஐ.எஃப்.ஏ. விழாவில் ஹூவாய் உலகின் முதல் தனித்துவ 5ஜி சிப்செட் ஒன்றை அறிமுகம் செய்தது. இந்த சிப்செட் ஹூவாய் மேட் 30 ப்ரோ 5ஜி மாடலில் வழங்கப்படும் என ஹூவாய் தெரிவித்துள்ளது. இத்துடன் ஹூவாய் மேட் 30 ப்ரோ 5ஜி மாடலின் கமோமெரேட்டிவ் எடிஷனையும் அறிவித்தது.
லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனில் 8 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஃபாரஸ்ட் கிரீன் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் வெஜன் லெதர் உடன் வருக்கிறது. சீனாவில் இதன் விற்பனை நவம்பர் 1 ஆம் தேதி துவங்குகிறது.






