என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்ட விவகரம் தொடர்பாக அமெரிக்க ராணுவம் மீது அமேசான் வழக்கு தொடர்ந்துள்ளது.
அமெரிக்க ராணுவத்தின் தலைமையகமான பென்டகனை டிஜிட்டல் மயமாக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக 10 பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.71 ஆயிரம் கோடி) ஒப்பந்தம் விடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை பெற அமெரிக்காவை சேர்ந்த பிரபல பன்னாட்டு நிறுவனங்களான மைக்ரோசாஃப்ட்டும், அமேசானும் விண்ணப்பித்தன.
இந்த ஒப்பந்தம் அமேசானுக்கு கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில், திடீரென மைக்ரோசாஃப்ட்டுக்கு பென்டகன் ஒப்பந்தத்தை வழங்கியது. இது அமேசான் நிறுவனத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒப்பந்தத்தை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்ததாக பென்டகன் மீது அமேசான் குற்றம் சாட்டியது.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பென்டகன் மீது வாஷிங்டன் கோர்ட்டில் அமேசான் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் டுரூ ஹெர்டனர் கூறுகையில், “மதிப்பீட்டு செயல்முறையின் பல அம்சங்களில் குறைபாடுகள், பிழைகள் மற்றும் தெளிவற்ற சார்பு ஆகியவை உள்ளன. இந்த விஷயங்களை ஆராய்ந்து சரிசெய்ய வேண்டியது அவசியம்” என்றார்.
இதற்கிடையே அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே ஒப்பந்த ஒதுக்கீடு நடந்துள்ளதாகவும், நீதிதுறையுடன் சேர்ந்து, இந்த வழக்கை ஆய்வு செய்வோம் என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது.
ஒப்பந்தம் வழங்கப்படுவதற்கு தேவையான அனைத்து விதிமுறைகளையும் மைக்ரோசாஃப்ட் முழுமையாக பூர்த்தி செய்திருப்பது உரிய ஆய்வுக்கு பின் உறுதி செய்யப்பட்ட பின்னரே வழங்கப்பட்டுள்ளது என்பதை விசாரணை வெளிக்கொண்டு வரும் என நம்புவதாக மைக்ரோசாஃப்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் சோதனை செய்யப்பட்டு வந்த ஹைட் ரிப்ளைஸ் அம்சம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது.
ட்விட்டர் தளத்தில் கமென்ட்களை மறைக்கச் செய்யும் ஹைட் ரிப்ளைஸ் அம்சம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது.
முன்னதாக இந்த அம்சம் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சோதனை செய்யப்பட்டு வந்தது. தற்சமயம் இந்த அம்சம் வழங்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் ட்வீட்களில் உள்ள கிரே நிற ஐகானை க்ளிக் செய்து ஹைட் ரிப்ளைஸ் அம்சத்தை இயக்க முடியும்.
புதிய அம்சம் கொண்டு பயனர்கள் எதிர்மறை கருத்துக்களை மற்றவர்கள் பார்க்காதபடி மறைக்கச் செய்ய முடியும். எனினும், மறைக்கப்பட்ட ரிப்ளைக்களை புதிய ஐகானை க்ளிக் செய்து ஃபாளோவர்கள் மட்டும் பார்க்க முடியும்.

இந்த அம்சம்ட்விட்டர் தளத்தில் ஆரோக்கியமான உரையாடல்களுக்கு வழிசெய்யும். இந்த அம்சம் வழங்கப்பட்ட சில மணி நேரத்திலேயே, ஆண்ட்ராய்டு தளத்தில் புதிய அம்சம் சிறிது நேரத்திற்கு செயலிழக்கச் செய்யப்படுவதாக ட்விட்டர் தெரிவித்தது.
சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவை கேலி கிண்டல்கள், போலி செய்திகள் மற்றும் எதிர்மறை தகவல்கள் பரவ அதிகளவு காரணமாக மாறி வருக்கின்றன. இதுபோன்ற இன்னல்களை ட்விட்டரில் குறைக்கும் நோக்கில் புதிய அம்சம் வழங்கப்பட்டுள்ளது.
சியோமி நிறுவனத்தின் 100வாட் சூப்பர் சார்ஜ் டர்போ ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
சியோமி நிறுவனம் 100 வாட் சூப்பர் சார்ஜ் டர்போ வையர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை இந்த ஆண்டு அறிமுகம் செய்தது. அந்த வகையில் இந்த தொழில்நுட்பம் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் சாதனங்களில் வழங்கப்படும் என சியோமி அறிவித்துள்ளது. 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முதல் ஸ்மார்ட்போன் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
சீன சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களின் படி சியோமியின் 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் சியோமியின் டெவலப்பர்கள் நிகழ்வில் காண்பிக்கப்பட்டதாகவும், இது அடுத்த ஆண்டு வெளியாகும் சாதனங்களில் வழங்கப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

சியோமியின் 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரியை வெறும் 17 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடும். சியோமி தவிர விவோ நிறுவனம் ஏற்கனவே 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. இந்த தொழில்நுட்பம் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரியை வெறும் 13 நிமிடங்களில் சார்ஜ் செய்யும்.
அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், சியோமி மற்றும் விவோ நிறுவனங்கள் தங்களின் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை இதுவரை வணிக ரீதியில் வெளியிடவில்லை. சியோமி போன்று விவோ நிறுவனமும் தனது 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அடுத்த ஆண்டு வெளியிடலாம்.
இத்துடன் சியோமியின் Mi மிக்ஸ் 4 ஸ்மார்ட்போனில் 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் முதல் முறையாக வழங்கப்படும் என கூறப்படுகிறது. எனினும், இதுபற்றி இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.
பி.எஸ்.என்.எல். நிறுவனமும் தனது சேவை கட்டணங்களை டிசம்பர் 1 ஆம் தேதியில் இருந்து உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது.
பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது சேவை கட்டணங்களை டிசம்பர் 1 ஆம் தேதியில் இருந்து உயர்த்துவதாக அறிவித்துள்ளது. முன்னதாக ஏர்டெல், வோடபோன் மற்றும் ஜியோ நிறுவனங்களும் சேவை கட்டணத்தை உயர்த்தப் போவதாக அறிவித்தன. உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பை தொடர்ந்து டெலிகாம் நிறுவனங்கள் விலை உயர்வு பற்றி அறிவித்தன.
அந்த வரிசையில் தற்சமயம் பி.எஸ்.என்.எல். கட்டண உயர்வு பற்றி அறிவித்துள்ளது. டிசம்பர் 1 ஆம் தேதி முதல் விலை உயர்வு அமலாக இருக்கும் நிலையில், எத்தனை சதவிகிதம் கட்டணம் உயர்த்தப்படும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

சமீபத்திய தீர்ப்பில் உச்சநீதிமன்றம் டெலிகாம் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய ஸ்பெக்ட்ரம் நிலுவைத் தொகையை (ரூ. 92,000 கோடி) செலுத்த உத்தரவிட்டது. எனினும், நிலுவை தொகையை செலுத்தும் பட்சத்தில் டெலிகாம் நிறுவனங்களை மூட வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், தொகையை செலுத்த நிறுவனங்கள் சார்பில் சலுகை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
கோரிக்கையை பரிசீலனை செய்த மத்திய அரசு டெலிகாம் நிறுவனங்கள் நிலுவை தொகையை செலுத்த மார்ச் 2022 வரை அவகாசம் அளித்துள்ளது.
முன்னதாக பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். ஆகியவற்றை மறுசீரமைக்க மத்திய அரசு ரூ.29 ஆயிரத்து 937 கோடி ஒதுக்கும். இந்த மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு அங்கமாக, இரு நிறுவனங்களும் இணைக்கப்படும். அப்படி இணைக்கப்படும்வரை, பி.எஸ்.என்.எல்.லின் துணை நிறுவனமாக எம்.டி.என்.எல். செயல்படும். என மத்திய தொலைத்தொடர்பு மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
வோடபோன் ஐடியா, ஏர்டெல் நிறுவனங்களை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் தனது சேவை கட்டணங்களை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது.
நஷ்டத்தில் இயங்கி வருவதாக சொல்லப்படுகிற தொலைதொடர்பு சேவை நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகியவை செல்போன் சேவை கட்டணங்களை (அழைப்பு கட்டணம் மற்றும் இணையதள கட்டணம்) உயர்த்துவதாக அறிவித்துள்ளன.
அந்த வரிசையில் இப்போது ரிலையன்ஸ் ஜியோவும் இணைந்துள்ளது. இதையொட்டி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், மற்ற தொலைதொடர்பு சேவை நிறுவனங்களைப் போல தங்கள் நிறுவனமும் கட்டணங்களை மாற்றி அமைப்பது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருவதாக கூறி உள்ளது.

அடுத்த சில வாரங்களில் இந்த கட்டண உயர்வு அமலாக இருக்கிறது. இது குறித்து தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயுடன் ரிலையன்ஸ் ஜியோ ஆலோசனை நடத்த உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு இணையதள பயன்பாட்டையும், டிஜிட்டல்மய வளர்ச்சியையும் பாதிக்காத வகையிலும், முதலீடுகளை நிலைநிறுத்துகிற வகையிலும் அமையும் என கூறப்பட்டுள்ளது.
வோடபோன் ஐடியா நிறுவனம் தனது சேவை கட்டணங்களை டிசம்பர் மாதம் முதல் உயர்த்தப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது.
வோடபோன் ஐடியா நிறுவனம் தனது சேவை கட்டணங்களை டிசம்பர் 1, 2019 முதல் அதிகரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. டெலிகாம் துறையில் அந்நிறுவனம் சந்தித்து வரும் நஷ்டத்தை ஈடு செய்யும் விதமாக விலை உயர்வு பற்றி முடிவு எட்டப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
விலை உயர்வு பற்றி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், சேவை கட்டணம் எத்தனை சதவிகிதம் வரை உயரும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை. டிஜிட்டல் இந்தியா கனவை நிறைவேற்றும் முயற்சிகளில் இந்நிறுவனம் தொடர்ந்து இந்தியா முழுக்க சீரான மொபைல் சேவையை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

முன்னதாக வோடபோன் நிறுவனம் இந்திய வியாபாரத்தை விட்டு வெளியேற போவதாக தகவல்கள் வெளியாகின. எனினும், இவ்வாறு வெளியான தகவல்களில் உண்மையில்லை என வோடபோன் கூறியது. மேலும் இந்திய சந்தையை விட்டு வெளியேறும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அந்நிறுவனம் அறிவித்தது.
"வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் அனுபவங்களை வழங்க, வோடபோன் ஐடியா தனது சேவை கட்டணங்களை டிசம்பர் 1, 2019 முதல் உயர்த்த இருக்கிறது. அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய சேவைகளை துவங்கி 30 கோடி வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய தொடர்ந்து முதலீடு செய்வோம்," என அந்நிறுவனம் மேலும் தெரிவித்தது.
பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா 210 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. 210 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கும் புதிய சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.
புதிய சலுகையில் தினசரி டேட்டாவுடன், பிரத்யேக ரிங்பேக் டோன் இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். போன்று எவ்வித பலன்களும் வழங்கப்படவில்லை. இந்த சலுகையில் தினசரி டேட்டா அளவு தீர்ந்ததும் டேட்டா வேகம் 80Kbps ஆக குறைக்கப்பட்டுவிடும்.

முன்னதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ. 997 விலையில் பிரீபெயிட் சலுகையை அறிவித்தது. இதில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், டேட்டா மற்றும் தினமும் 100 எஸ்.எம்.எஸ். 180 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த சலுகையில் பயனர்களுக்கு தினமும் 3 ஜி.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 365 மற்றும் ரூ. 97 சலுகைகளையும் பி.எஸ்.என்.எல். முன்னதாக அறிவித்தது. இவற்றில் தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 399 சலுகையில் தினமும் 1 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 80 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
சாம்சங் நிறுவன ஸ்மார்ட்போன் மற்றும் சாதனங்களை வாங்குவோருக்கு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனம் சாம்சங் புளூ ஃபெஸ்ட் சேல் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. ஆறு நாட்கள் நடைபெறும் சிறப்பு விற்பனை நவம்பர் 19 ஆம் தேதி நிறைவு பெற இருக்கிறது. சிறப்பு விற்பனையின் கீழ் சாம்சங் ஸ்மார்ட்போன் மற்றும் அக்சஸரீக்களின் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.
அந்த வகையில் சாம்சங் கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 1000 குறைக்கப்பட்டு ரூ. 7,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் ரூ. 42,999 விலையிலும், கேலக்ஸி எஸ்9 ரூ. 29,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

விலை குறைப்பு தவிர தேர்வு செய்யப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்களை வாங்கும் ஹெச்.டி.எஃப்.சி. வாடிக்கையாளர்களுக்கு 10 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இத்துடன் சாம்சங் கேலக்ஸி எஸ்10 மற்றும் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன்களை வாங்குவோர் சாம்சங் அக்சஸரீக்களை சிறப்பு விலையில் வாங்கிட முடியும்.
சிறப்பு விலை சாம்சங் வயர்லெஸ் சார்ஜர், கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ், ஸ்டிராப் காம்போக்கள், ஏ.கே.ஜி. வை500 ஹெட்செட், கேலக்ஸி ஃபிரெண்ட்ஸ் கவர், க்ளியர் வியூ கவர் மற்றும் கேலக்ஸி டேப் எஸ்5இ போன்ற சாதனங்களுக்கு பொருந்தும். சாம்சங் புளூ ஃபெஸட் சேல் சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோரில் மட்டும் நடைபெறுகிறது.
இத்துடன் இரு ஸ்மார்ட்போன்களை வாங்கும் ஹெச்.டி.எஃப்.சி. வாடிக்கையாளர்களுக்கு 7.5 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. கேலக்ஸி வாட்ச் வாட்ச் 42 எம்.எம். மாடல் ரூ. 19,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
உச்சநீதிமன்ற தீர்ப்பால் பெரும் நஷ்டத்தில் தத்தளிக்கும் ஏர்டெல் வோடாபோன் நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
ஒரு காலத்தில் லாபத்தை அள்ளி கொட்டிய செல்போன் தகவல் தொடர்பு நிறுவனங்கள் இன்று பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சேவைகள் 2016-ம் ஆண்டு அறிமுகமானது. அந்த நிறுவனம் வழங்கிய அதிரடி சலுகைகள் மற்றும் வசதிகளால் வாடிக்கையாளர்கள் அந்த பக்கம் தாவினார்கள்.
எனவே அதை சமாளிக்க முடியாமல் மற்ற தனியார் செல்போன் நிறுவனங்கள் தத்தளித்தன. இதனால் அதன் வருமானம் பெருமளவு குறைந்தது. பல நிறுவனங்கள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டன. இதன் காரணமாக தற்போது வோடாபோன், ஏர்டெல், ஜியோ ஆகிய 3 தனியார் நிறுவனங்கள் மட்டுமே செல்போன் சேவையாற்றி வருகின்றன.
செல்போன் நிறுவனங்கள் 2 வகையான கட்டணங்களை மத்திய டெலிபோன் துறைக்கு வழங்க வேண்டும். அதாவது லைசென்சு கட்டணம், அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) கட்டணம் என செலுத்த வேண்டும். அந்த நிறுவனங்களின் செல்பாடு அடிப்படையில் இந்த இரு கட்டணங்களும் நிர்ணயிக்கப்படும்.
இந்த கட்டணங்களை நிறுவனங்கள் தாங்கள் வழங்கும் செல்போன் சேவை வருவாயில் இருந்து மட்டும் கட்டிவந்தன. ஆனால் மத்திய டெலிபோன் துறை அவர்கள் விற்கும் போன்கள், பங்கு சந்தை வருமானங்கள், பழைய பொருட்களை விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானங்கள் என அனைத்தையும் கணக்கிட்டு கட்டணங்களை நிர்ணயித்தது.
ஆனால் இவ்வாறு பணம் செலுத்த அந்த நிறுவனங்கள் முன்வரவில்லை. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 15 நிறுவனங்கள் இவ்வாறு பணத்தை செலுத்த வேண்டியிருந்தது. அந்த நிறுவனங்கள் டெலிபோன் துறை கூறிய கணக்கின் படியே பணத்தை கட்ட வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 24-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

இதன் காரணமாக இந்த நிறுவனங்கள் சுமார் 92 ஆயிரம் கோடி கட்ட வேண்டியது இருந்தது. அதாவது லைசென்சு கட்டணம், அலைக்கற்றை கட்டணம், 16 ஆண்டுகளாக இவை நிலுவையில் இருந்ததால் அதற்கான வட்டி, வட்டிக்கான அபராதம் மற்றும் அபராத தொகை என மொத்தமாக சேர்ந்து இவ்வளவு தொகையை கட்ட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
அந்த வகையில் வோடாபோன் நிறுவனம் ரூ.46,150 கோடியும், ஏர்டெல் நிறுவனம் ரூ. 28,450 கோடியும் கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. ஏற்கனவே ஜியோ நிறுவனத்தின் போட்டியை சமாளிக்க முடியாமல் திண்டாடிய இந்த நிறுவனங்கள் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் இன்னும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.
இந்த பணத்தை 3 மாத காலத்தில் திருப்பி செலுத்த வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு கூறியிருந்தது. எனவே நிறுவனங்கள் அந்த தொகையை கணக்கிட்டு கடந்த காலாண்டுக்கான லாப நஷ்ட விவரங்களை வெளியிட்டுள்ளது. அதாவது ஜூலையில் இருந்து செப்டம்பர் மாதம் வரை உள்ள காலாண்டில் அந்த நிறுவனங்கள் பெருத்த நஷ்டத்தை சந்தித்திருப்பதாக கூறியுள்ளது.
இதன்படி வோடாபோன் நிறுவனம் ரூ.50,921 கோடியும், ஏர்டெல் நிறுவனம் ரூ.23,405 கோடியும் நஷ்டமடைந்து இருப்பதாக கூறியுள்ளது. இதனால் இரு நிறுவனங்களையும் தொடர்ந்து நடத்த முடியாத அளவிற்கு நிலைமை சென்றுள்ளது.
எனவே மத்திய அரசு இதில் தலையிட்டு பல சலுகைகளை வழங்க வேண்டும் என்று அந்த நிறுவனங்கள் கூறியுள்ளன. அதாவது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி அவ்வளவு தொகையை எங்களால் கட்ட முடியாது. அதில் எங்களுக்கு விலக்கு தாருங்கள் என்று அவர்கள் கேட்கிறார்கள்.
மத்திய அரசு இதற்கு விலக்கி அளித்தால் அந்த நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட முடியும். இல்லை என்றால் செயல்படுத்துவது கடினம் என்று கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மேக் ப்ரோ மற்றும் 32 இன்ச் ரெட்டினா 6கே ப்ரோ டிஸ்ப்ளே XDR விரைவில் விற்பனைக்கு வருகிறது.
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற 2019 டெவலப்பர்கள் நிகழ்வில் புதிய மேக் ப்ரோ, 32 இன்ச் ரெட்டினா 6கே ப்ரோ டிஸ்ப்ளே எக்ஸ்.டி.ஆர். மாணிட்டர் உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்தது. அறிமுக நிகழ்வில் விற்பனை பற்றிய விவரங்களை ஆப்பிள் அறிவிக்கவில்லை.
அந்த வகையில், ஆப்பிள் தற்சமயம் வெளியிட்டிருக்கும் தகவல்களில் இரு சாதனங்களின் விற்பனை டிசம்பர் மாத வாக்கில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மேக் ப்ரோ வடிவமைப்பு முந்தைய மேக் ப்ரோவை தழுவியே உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய மேக் ப்ரோ ஸ்டீல் பாடி, முன்புறம் மெஷ் பேனல் மற்றும் மேல்புற கைப்பிடிகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் பயனர்களே இயக்கக்கூடிய வகையில் எட்டு PCIe ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளன.
இத்துடன் ஆப்பிள் புதிதாக MPX மாட்யூல் ஒன்றை வடிவமைத்துள்ளது. இது PCIe மற்றும் தண்டர்போல்ட் 3 கனெக்டிவிட்டியை இணைக்கிறது. இதன் மூலம் கம்ப்யூட்டர் மிக எளிதாக குளிர்ச்சி பெறும். மேக் ப்ரோ மாடலில் 8-கோர் 3.5 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் சியான் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.
இது 12 கோர், 16 கோர், 24 கோர் மற்றும் 28 கோர் போன்ற ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. இதன் மெமரி 1.5 டி.பி. (1500 ஜி.பி.) துவங்கி பயனர்கள் அதிகபட்சம் இரண்டு MPX மாட்யூல்களை கான்ஃபிகர் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இவற்றுடன் AMD ரேடியான் வீகா II ஜி.பி.யு.க்களும் அதிகபட்சம் 56 டெராஃபிளாப்கள் கிராஃபிக்ஸ் வழங்கப்படுகிறது.

இதன் கனெக்டிவிட்டியை பொருத்தவரை தண்டர்போல்ட் 3, யு.எஸ்.பி. டைப் ஏ, டூயல் 10 ஜிகாபிட் ஈத்தர்நெட் போர்ட்கள், வைபை, ப்ளூடூத் 5 உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இதன் எடை 18 கிலோ ஆகும். மேக் ப்ரோ பயனர்கள் ஆப்பிளின் புதிய ஆஃப்டர்-பர்னர் எனும் சாதனத்தை சேர்த்துக் கொள்ள முடியும். இது ஆட்-இன் வீடியோ அக்சல்லரேட்டர் கார்டு ஆகும். இதை கொண்டு 8K தரத்தில் வீடியோக்களை ஸ்டிரீம் செய்ய முடியும்.
இதன் பேஸ் மாடல் விலை 5,999 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.4,15,220) என நி்ர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலில் 32 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி. மற்றும் AMD ரேடியான் ப்ரோ 580X ஜி.பி.யு. வழங்கப்பட்டுள்ளது. விலை உயர்ந்த மாடல்களின் சிறப்பம்சங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
மேக் ப்ரோ சாதனத்துடன் ஆப்பிள் அறிமுகம் செய்த ப்ரோ டிஸ்ப்ளே XDR சிறப்பான வடிமைப்பை கொண்டிருக்கிறது. இது மேக் ப்ரோ சாதனத்திற்கு கச்சிதமாக பொருந்தும் வகையில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ப்ரோ டிஸ்ப்ளே XDR 32-இன்ச் 6K ரெட்டினா மாணிட்டர் ஆகும்.
இது அதிகபட்சம் 1600நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1,000,000:1 காண்டிராஸ்ட் ரேஷியோ கொண்டிருக்கிறது. இதனை ஆப்பிள் நிறுவனம் எக்ஸ்டிரீம் டைனமிக் ரேன்ஜ் என அழைக்கிறது. ஆப்பிள் நிறுவனம் புதிய மாணிட்டர் 10-பிட் கலர் மற்றும் சூப்பர் வைடு வியூவிங் ஆங்கில்களை வழங்கும் என தெரிவித்துள்ளது.
இந்த மாணிட்டரின் விலை 4999 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.3,45,933) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கிளாஸ் பேனல் கொண்ட ஆன்டி-கிளேர் ஆப்ஷன் விலை 5000 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கழற்றக்கூடிய ப்ரோ ஸ்டாண்டு விலை 999 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.69,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மேக் ப்ரோ சாதனம் அதிகபட்சம் ஆறு 6K ப்ரோ டிஸ்ப்ளே XDR மாணிட்டர்களை இயக்கும் வல்லமை கொண்டதாகும்.
வாட்ஸ்அப் செயலியில் பயனர் அனுப்பும் குறுந்தகவல்களில் மூன்று புளூ டிக் வந்தால் என்ன ஆகும் என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
வாட்ஸ்அப் செயலியில் மேற்கொள்ளப்படும் புதிய மாற்றங்களின் படி அரசாங்கம் பயனர் குறுந்தகவல்களை கண்காணிக்க இருப்பதாக தகவல் வேகமாக பரவுகிறது.
வேகமாக பரவும் குறுந்தகவல்களில் பயனர் அனுப்பும் குறுந்தகவல்களுக்கு மூன்று புளூ டிக்கள் வரும் பட்சத்தில் அதனை அரசு நிறுவனம் கண்காணித்து இருக்கும் என கூறப்பட்டது. மேலும் இரண்டு புளூ டிக் மற்றும் ஒரு சிவப்பு நிற டிக் வரும் பட்சத்தில் அரசு நடவடிக்கை எடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இத்துடன் இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த இதனை வேகமாக பகிரக்கோருகிறது.

ஆய்வில் வைரலாகும் குறுந்தகவல் முற்றிலும் போலி என தெரியவந்துள்ளது. மேலும் இதேபோன்ற குறுந்தகவல் ஏற்கனவே பகிரப்பட்டு இருக்கிறது. வைரல் பதிவுகளில் பி.பி.சி. செய்தி நிறுவனத்தின் செய்தி தொகுப்பு போன்ற படமும் சேர்க்கப்பட்டு இருப்பதால் இதனை பலர் பகிர்ந்து வருகின்றனர்.
வாட்ஸ்அப் செயலியில் புதிய டிக் பற்றிய விவரங்கள் அந்நிறுவன வலைத்தளத்தில் அப்டேட் செய்யப்படவில்லை. வலைத்தளத்தில் தற்சமயம் இருப்பது போன்று இரண்டு புளூ டிக் பற்றிய விவரங்களே இடம்பெற்றிருக்கின்றன. அந்த வகையில் வைரல் குறுந்தகவல்களில் துளியும் உண்மையில்லை என தெளிவாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத் தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
வாட்ஸ்அப் செயலியை கைரேகை மூலம் பாதுகாக்கும் அம்சத்தை இயக்குவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.
வாட்ஸ்அப் செயலியை டச் ஐ.டி. மற்றும் ஃபேஸ் ஐ.டி. மூலம் பாதுகாக்கும் வசதியை ஐபோன்களில் இந்த ஆண்டு துவக்கத்தில் வழங்கப்பட்டது. ஐபோனை தொடர்ந்து ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் இதேபோன்ற அம்சம் வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்பட்டு வந்தது.
ஆகஸ்ட் மாத வாக்கில் பீட்டா பதிப்பில் வழங்கப்பட்ட பாதுகாப்பு அம்சத்தை வாட்ஸ்அப் உலகம் முழுக்க அனைத்து பயனர்களுக்கும் சில தினங்களுக்கு முன் வழங்க துவங்கியது. அதன்படி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் கைரேகை மூலம் செயலியை அன்லாக் செய்து கொள்ள முடியும். இதன் மூலம் மற்றவர்கள் வாட்ஸ்அப் செயலியை ஊடுறுவ முடியாது.

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் கைரேகை லாக் அம்சத்தை செயல்படுத்துவது எப்படி?
– முதலில் வாட்ஸ்அப் செட்டிங்ஸ் -- அக்கவுண்ட் -- பிரைவசி ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும்
– இனி பிரைவசி ஆப்ஷனில் கைரேகை லாக் எனும் ஆப்ஷன் தெரியும்
– அடுத்து அம்சத்தை இயக்க கைரேகை மூலம் அன்லாக் செய்யக் கோரும் Unlock with fingerprint ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்
– ஸ்மார்ட்போனில் உள்ள கைரேகை சென்சார் அம்சத்தை உறுதிப்படுத்த வேண்டும்
செயலியை பாதுகாக்க வாட்ஸ்அப் மூன்று ஆப்ஷன்களை வழங்குகிறது. இவை தானாக லாக் செய்யக் கோரும் ஆப்ஷனில் காணப்படுகிறது. இவை செயலியை உடனே, ஒரு நிமிடத்திற்கு பின் மற்றும் முப்பது நிமிடங்களுக்கு பின் லாக் செய்யும் வசதியை வழங்குகிறது.
கைரேகை லாக் ஆன் செய்யப்பட்டதும், தரவுகள் தானாகவே மறைக்கப்பட்டு விடும். இந்த அம்சம் செயல்படுத்தப்பட்டு இருந்தாலும் வாட்ஸ்அப் அழைப்புகள் மற்றும் நோட்டிஃபிகேஷன்களில் இருந்து குறுந்தகவல்களுக்கு எப்போதும் போல் பதில் அளிக்க முடியும். புதிய பாதுகாப்பு அம்சம் பயனர்கள் செயலியை திறந்து அதனை பயன்படுத்த முயலும் போது தான் இயங்கும்.
எனினும், கைரேகை-லாக் ஆன் செய்யப்பட்ட நிலையில் நோட்டிஃபிகேஷன்களில் தரவுகள் தெரிய வேண்டாம் என நினைப்பவர்கள் அதனை Show content in notifications ஆப்ஷனில் மாற்றிக் கொள்ளலாம்.






