என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வி நிறுவனங்களை ஏர்டெல் முந்தி அசத்தி இருக்கிறது.


    இந்திய டெலிகாம் சந்தையில் அக்டோபர் மாதத்தில் புதிய வாடிக்கையாளர்களை இணைப்பதில் ஏர்டெல் நிறுவனம் அசத்தி இருக்கிறது. மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

    2020 அக்டோபர் மாத அடிப்படையில் ஏர்டெல் நிறுவனம் 36.7 லட்சம் வயர்லெஸ் சந்தாதாரர்களை இணைத்துள்ளது. இதே காலக்கட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ 14.5 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்து இருக்கிறது. அக்டோபர் மாத நிலவரப்படி ஏர்டெல் நிறுவனம் சுமார் 33.02 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

     கோப்புப்படம்

    ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 2020 அக்டோபர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் 40.63 கோடியாக உள்ளது. ஏர்டெல் மற்றும் ஜியோ போன்று இல்லாமல் வி நிறுவன வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அக்டோபர் மாதத்தில் கணிசமான அளவு குறைந்து இருக்கிறது.
    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களில் வழங்கி இருக்கும் ரகசிய அம்சம் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    ஆப்பிள் ஐஒஎஸ் தளம் ஐபோன் பயன்படுத்துவோருக்கு ரிமைண்டர், நோட்ஸ் மற்றும் காலண்டர் என சில பொதுவான அம்சங்களை வழங்கி வருகிறது. இவை அனைத்திற்கும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிகப்படியான மூன்றாம் தரப்பு செயலிகள் கிடைக்கின்றன.

    பெரும்பாலான ஐபோன் பயனர்கள் தங்களது மாடலில் உள்ள மறைக்கப்பட்டு இருக்கும் ரகசிய அம்சங்களை இயக்க தவறிவிடுகின்றனர். அந்த வகையில் ஐபோன் கால்குலேட்டர் செயலியில் மறைக்கப்பட்ட அம்சம் உள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

     ஐபோன் 12

    அதன்படி கால்குலேட்டர் செயலியில் அறிவியல் கால்குலேட்டர் மோட் மறைக்கப்பட்டு ரகசியமாக வழங்கப்படுகிறது. எனினும், கால்குலேட்டர் செயலிக்கு சென்று பயனர்கள் இதனை ஆக்டிவேட் செய்ய வேண்டும். ஐபோனில் கால்குலேட்டர் செயலியை திறந்ததும், போனினை கிடைமட்ட வடிவில் வைக்க வேண்டும். 

    இவ்வாறு செய்யும் போது சாதாரண கால்குலேட்டர் செயலி அறிவியல் அம்சங்கள் நிறைந்த கால்குலேட்டராக மாறிவிடும். ஒருவேளை ஐபோனில் டில்ட் அம்சத்தை ஆஃப் செய்து இருப்பவர்கள், அதனை கண்ட்ரோல் சென்ட்டரில் இருந்து Portrait Orientation Lock அம்சத்தை ஆஃப் செய்ய வேண்டும்.
    சியோமி நிறுவனம் மூன்றுவித மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    சியோமி நிறுவனம் மூன்று மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவை மூன்றும் வெவ்வேறு வடிவமைப்புகளை கொண்டிருக்கும் என்றும் இவை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. 

    இதுகுறித்து டிஸ்ப்ளே வடிவமைப்பு வல்லுநரான ரோஸ் யங் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் சியோமி நிறுவனத்தின் மூன்று மாடல்கள் - வெளிப்புறம் மடிக்கும் தன்மை, உள்புறம் மடிக்கும் தன்மை மற்றும் கிளாம்ஷெல் வடிவமைப்பு கொண்டிருக்கும் என குறிப்பிட்டு இருக்கிறார். 

     சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

    இதில் வெளிப்புறம் மடிக்கும் தன்மை கொண்ட மாடல் ஹூவாய் மேட் எக்ஸ் போன்று காட்சியளிக்கும் என்றும் இந்த ஸ்மார்ட்போன் 8 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

    முன்னதாக ரோஸ் யங் ஒப்போ, விவோ மற்றும் சியோமி நிறுவனங்கள் ஒன்றிணைந்து நான்கு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை 2021 ஆண்டு வெளியிடும் என ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

    சமீபத்தில் சியோமி நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கான காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருந்தது. இது குவாட் கேமரா செட்டப் மற்றும் சுழலும் தன்மை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    சாம்சங் கேலக்ஸி பட்ஸ் ப்ரோ மாடல் விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி பட்ஸ் ப்ரோ மாடல் விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதன்படி புதிய சாம்சங் கேலக்ஸி பட்ஸ் ப்ரோ விலை 199 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 14,600 வரை நிர்ணயம் செய்யலாம் என கூறப்படுகிறது.

    இது உண்மையாகும் பட்சத்தில் இது சாம்சங் நிறுவனத்தின் விலை உயர்ந்த வயர்லெஸ் இயர்போனாக இருக்கும். புதிய கேலக்ஸி பட்ஸ் ப்ரோ மாடல் ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ மற்றும் சோனி WF-1000XM3 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. 

     சாம்சங் கேலக்ஸி இயர்பட்ஸ்

    முன்னதாக சாம்சங் நிறுவனம் கேலக்ஸி பட்ஸ் லைவ் எனும் பெயரில் புதிய இயர்போன் மாடலை அறிமுகம் செய்தது. சாம்சங் கேலக்ஸி பட்ஸ் லைவ் விலை சர்வதேச சந்தையில் 169 டாலர்கள் என்றும் இந்தியாவில் இது ரூ. 14,900 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. 

    அந்த வகையில் புதிய கேலக்ஸி பட்ஸ் ப்ரோ விலை இந்திய சந்தையில் ரூ. 20 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. தற்சமயம் சோனி WF-1000XM3 மாடல் ரூ. 19,990 என்றும் ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடல் விலை ரூ. 19,990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றன.
    பிஎஸ்என்எல் நிறுவனம் குறைந்த விலை பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    பிஎஸ்என்எல் ரூ. 199 பிரீபெயிட் சலுகை இந்தியாவில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சலுகையில் பயனர்களுக்கு 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ், 250 நிமிடங்கள் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

    புதிய சலுகை தவிர பிஎஸ்என்எல் ரூ. 998 விலை சலுகை பலன்களை மாற்றுவதாக அறிவித்து உள்ளது. அதன்படி பிஎஸ்என்எல் ரூ. 998 சலுகையில் தினமும் 3 ஜிபி டேட்டா, வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு இருந்தது. 

     கோப்புப்படம்

    பிஎஸ்என்எல் ரூ. 998 விலை சலுகை 240 நாட்கள் வேலிடிட்டி கொண்டது ஆகும். இந்த சலுகை மாற்றம் பிஎஸ்என்எல் கேரளா வட்டாரத்திற்கான ட்விட்டர்பக்கத்திலும், ரூ. 199 பிஎஸ்என்எல் சலுகை அறிவிப்பு ராஜஸ்தான் வட்டாரத்திற்கான ட்விட்டர் பக்கத்திலும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    அந்த வகையில் புதிய பிஎஸ்என்எல் ரூ. 199 சலுகை மற்றும் ரூ. 998 சலுகை மாற்றம் அந்தந்த வட்டாரங்களில் முதற்கட்டமாக வழங்கப்படுகிறது. விரைவில் இவை நாடு முழுக்க அனைத்து வட்டாரங்களிலும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் சீரிஸ் ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இந்நிலையில், புதிய ஒன்பிளஸ் 9 சீரிஸ் விவரங்கள் கடந்த சில மாதங்களாக இணையத்தில் வெளியாகி வருகின்றன. 

    அந்த வரிசையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் 50 எம்பி அல்ட்ரா விஷன் வைடு ஆங்கில் கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 20 எம்பி சினி கேமரா, அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் 12 எம்பி டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 

     கோப்புப்படம்

    ஒன்பிளஸ் 9 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080x2400 பிக்சல் ஹோல் பன்ச் டிஸ்ப்ளே,  ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இத்துடன் ஆக்சிஜன் ஒஎஸ் சார்ந்த ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ்,  50 எம்பி அல்ட்ரா விஷன் வைடு ஆங்கில் லென்ஸ்,  20 எம்பி சினி கேமரா, அல்ட்ரா வைடு லென்ஸ்,  12 எம்பி டெலிபோட்டோ கேமரா, கைரேகை சென்சார், 4500 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம். 

    அமேசான் நிறுவன ஊழியர்கள் ரூ. 1 கோடி மதிப்புள்ள மொபைல் போன்களை திருடி வசமாக சிக்கியயுள்ளனர்.


    அமேசான் நிறுவனத்தின் குருகிராம் கிடங்கில் இருந்து மொபைல் போன்களை திருடிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கிடங்கில் கொரோனாவைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கிடங்கில் பாதுகாப்பு குறைக்கப்பட்டதை ஊழியர்கள் பயன்படுத்திக் கொண்டதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    குருகிராம் கிடங்கில் இருந்து ஊழியர்கள் மொத்தம் 78 மொபைல் போன்களை திருடி உள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ. 1 கோடி ஆகும். வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்ய ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த அனுமதியை தவறாக பயன்படுத்தி திருட்டு சம்பவம் அரங்கேற்றப்பட்டு இருக்கிறது.

    கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ. 50 லட்சம் மதிப்புள்ள 38 ஸ்மார்ட்போன்கள் மீட்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள 40 போன்கள் தொடர்ந்து மாயமாக உள்ளது. கைதான ஊழியர்கள் நாள் ஒன்றுக்கு ஒரு ஐபோன் என இரண்டு மாதங்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    இந்த சம்பவம் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வெளிச்சத்திற்கு வந்தது. பின் அமேசான் நடத்திய ஆய்வில் இரு ஊழியர்கள் மொபைல் போன்களை திருடி சென்று விற்றதை ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனையை அதிகப்படுத்த அசத்தல் திட்டம் தீட்டியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ஆப்பிள் நிறுவனம் 2021 ஆண்டு இந்திய சந்தையில் விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கில் அசத்தல் திட்டம் தீட்டி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2020 ஆண்டு இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவனம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.

    ஐபோன் 11 மற்றும் ஐபோன் 12 மாடல்கள் அதிக பிரபலமாக இருந்ததோடு ஐபோன் XR போன்ற மாடல்களின் விலை குறைப்பு காரணமாக அதிகளவு விற்பனையாகி இருந்தது. 

    முன்னணி ஆய்வு நிறுவனமான இந்திய டேட்டா கார்ப்பரேஷன் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி அக்டோபர் மாதத்தில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரூ. 35 ஆயிரம் முதல் ரூ. 51 ஆயிரம் விலை கொண்ட ஸ்மார்ட்போன்கள் விற்பனை பலமடங்கு அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இதற்கு ஐபோன் XR மற்றும் ஐபோன் 11 மாடல்களுக்கு அதிரடி விலை குறைப்பு மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மேலும் அக்டோபர் மாதத்தில் பிரீமியம் சந்தை 16 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. இதில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவின் 50 இல் 49 நகரங்களில் முன்னிலை வகித்து இருக்கிறது.

    இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் அசுர வளர்ச்சிக்கு ஐபோன் 11 மற்றும் 12 வெளியீடு, ஐபோன் எஸ்இ2 வெளியீடு மற்றும் கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோன்களுக்கு அறிவிக்கப்பட்ட விலை குறைப்பு உள்ளிட்டவை முக்கிய காரணம் என கூறப்படுகிறது. 

    அந்த வகையில் 2021 ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் பிரியர்கள் மட்டுமின்றி மிட்-பிரீமியம் வாடிக்கையாளர்களை குறி வைத்து புது சலுகைகள் மற்றும் அறிவிப்புகளை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ. 399 விலையில் புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ. 399 விலையில் பிரத்யேக டிஜிட்டல் சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகை வலைதளத்தில் புதிய சிம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இது பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் இணைப்புகளுக்கு பொருந்தும்.

    ரூ. 399 விலை பிரீபெயிட் சலுகையில் டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் ரூ. 297 சலுகையை விட அதிக வேலிடிட்டி வழங்கப்படுகிறது. மேலும் வி திரைப்படங்கள் மற்றும் டிவி சேவை உள்ளிட்டவை கூடுதலாக வழங்கப்படுகின்றன. போஸ்ட்பெயிட் சலுகையில் 150 ஜிபி டேட்டா, ரோல் ஓவர் வசதி, எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்கள் கிடைக்கிறது.

    வி வலைதளத்தில் புதிய சிம் வாங்குவோர் ரூ. 399 சலுகையை தேர்வு செய்யலாம். இது பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் கனெக்ஷன்களில் வழங்கப்படுகிறது. ரூ. 399 பிரீபெயிட் சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

    போஸ்ட்பெயிட் ரூ. 399 சலுகையில் 40 ஜிபி டேட்டா, மாதம் 100 எஸ்எம்எஸ், ஆறு மாதங்களுக்கு 150 ஜிபி டேட்டா, 200 ஜிபி ரோல் ஒவர், வி திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    வாட்ஸ்அப் வெப் தளத்தில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதி வழங்கப்படுகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் டெஸ்க்டாப் மூலமாக வாட்ஸ்அப் அழைப்புகளை மேற்கொள்ளலாம். இதுவரை வாட்ஸ்அப் கால் வசதி மொபைல் சாதனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி வாட்ஸ்அப் அழைப்புகள் டெஸ்க்டாப் வெர்ஷனிலும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. தற்சமயம் இந்த அம்சம் பீட்டா பதிப்பில் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம்.

    வாட்ஸ்அப் வெப் தளத்தில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் சேவை வழங்கப்பட்டாலும், முதற்கட்டமாக இது தேர்வு செய்யப்பட்ட சிலருக்கு மட்டுமே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.  

    இதே அம்சம் பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்படுகிறது. அந்த வகையில், இந்த அம்சம் செயலியின் ஸ்டேபில் வெர்ஷனுக்கு விரைவில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கலாம்.

    பப்ஜி மொபைல் கேம் இந்திய வெளியீட்டில் திடீர் திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    இந்தியாவில் பப்ஜி கேம் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் பப்ஜி கேம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் பப்ஜி மொபைல் கேமிற்கான டீசர் வெளியிடப்பட்டது. எனினும், இந்த கேமின் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    இந்நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பப்ஜி மொபைல் கேம் மீண்டும் இந்தியாவில் வெளியாகுமா என  நவம்பர் 30ஆம் தேதி மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. 

    இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சகம் இந்தியாவில் பப்ஜி மொபைல் கேம் மீண்டும் வெளியிடப்படுவதற்கான அனுமதி இதுவரை வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளது. பப்ஜி மொபைல் தாய் நிறுவனம் சீனாவின் டென்சன்ட் நிறுவனத்துடனான தனது ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டது. 

    தற்போது பப்ஜி மொபைல் கேம் மீண்டும் புது அம்சங்களுடன் இந்தியாவில் வெளியிடப்படும் என்று பப்ஜி நிறுவனம் தெரிவித்து இருந்தது.

    கூகுள் நிறுவனம் மீது அமெரிக்க மாகாணங்கள் வழக்கு தொடர்ந்து இருக்கின்றன.


    உலகின் முன்னணி இணைய தேடுபொறி நிறுவனமான கூகுள், இணைய விளம்பர சந்தையில் தனது தனி ஆதிக்கத்தை பாதுகாப்பதற்காக சட்டவிரோத நடவடிக்கைளை மேற்கொண்டதாக குற்றம்சாட்டி, அமெரிக்காவில் டெக்சாஸ் தலைமையில் 10 மாகாணங்கள் வழக்கு தொடர்கின்றன.

    இந்த மாகாணங்களின் பட்டியலில் டெக்சாஸ், ஆர்கன்சாஸ், இண்டியானா, கென்டக்கி, மிசவுரி, மிசிசிப்பி, தென் டகோட்டா, வட டகோட்டா, உட்டா மற்றும் இடாஹோ ஆகியவை இடம் பிடித்துள்ளன.

    கூகுள் நிறுவனத்தின் விளம்பர வருமானம் அதன் வருவாயில் 80 சதவீதத்துக்கும் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இணைய விளம்பர சந்தையில் விளம்பர ஏலங்களை கையாள்வதற்காக இந்த நிறுவனம், பேஸ்புக் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    ஆனால் தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை கூகுள் மறுத்துள்ளது. இதுபற்றி அந்த நிறுவனம் கூறும்போது, “வணிகங்களுக்கு உதவுவதுடன், பொது மக்களுக்கு பயனளிக்கும் அதிநவீன விளம்பர தொழில்நுட்ப சேவைகளில் நாங்கள் முதலீடு செய்துள்ளோம். கடந்த தசாப்தத்தில் டிஜிட்டல் விளம்பர கட்டணங்கள் குறைந்து விட்டன” 

    “விளம்பர தொழில்நுட்ப கட்டணங்களும் குறைந்து வருகின்றன. கூகுள் விளம்பர தொழில்நுட்ப கட்டணங்கள், சராசரியை விட குறைவாக உள்ளன. எனவே கோர்ட்டில் எங்களை நாங்கள் தற்காத்துக்கொள்வோம்” என தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக பேஸ்புக் நிறுவனம் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது.

    ×