search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடமாநில வாலிபர்"

    • நாயக்கன் பேட்டையை சேர்ந்த 30 வயது பெண்ணையும், பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தாங்கி அருகே அரிசி ஆலையில் வேலை செய்து வந்த இனர்ஜூட் முகியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    செங்கல்பட்டு:

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 49 வயது பெண். இவருக்கு திருமணம் ஆகவில்லை. ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏரிக்கரையில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த அவரை பீகார் மாநிலத்தை சேர்ந்த இனர்ஜூட் முகியா (வயது 28) தாக்கி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார்.

    அதே நாளில் நாயக்கன் பேட்டையை சேர்ந்த 30 வயது பெண்ணையும், பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது அவர் கத்தி கூச்சலிட இனர்ஜூட் முகியா அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.

    இதுகுறித்து வாலாஜாபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாங்கி அருகே அரிசி ஆலையில் வேலை செய்து வந்த இனர்ஜூட் முகியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் இனர்ஜூட் முகியாவின் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உறுதி ஆனதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.31 ஆயிரம் அபராதமும் விதித்து செங்கல்பட்டு மகிளா கோர்ட்டு நீதிபதி எழிலரசி தீர்ப்பளித்தார். அரசு தரப்பு வக்கீலாக சசிரேகா ஆஜரானார்.

    • இரவு நேரத்தில் தூங்கிகொண்டிருந்த தம்பதி இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.
    • உங்கள் ஊரில் பிழைக்க வழியில்லை என தமிழகத்திற்கு வந்துவிட்டு எங்கள் ஊரை தரக்குறைவாக பேசுவதா என அவரை சத்தம் போட்டனர்.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் ஆத்துமேடு பயணிகள் நிழற்குடையில் பச்சைகுத்தும் தொழிலாளிகளான தம்பதிகள் இரவு நேரத்தில் தங்குவது வழக்கம். அதன்படி இரவு நேரத்தில் அங்கு தூங்கிகொண்டிருந்த தம்பதி இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு குடிபோதையில் வந்த வடமாநில ஆசாமி ஒருவர் அவர்களது சண்டையை தனது செல்போனில் படம் பிடித்தார்.

    அதனை வீடியோ எடுத்து கொண்டிருந்தபோதே தமிழகத்தில் இதுபோல்தான் அனைத்து இடங்களிலும் நடக்கிறது. எங்கள் ஊரில் இதுபோல் நடக்காது என பேசினார். இதைபார்த்ததும் அங்கிருந்தவர்கள் அவரை சத்தம்போட்டனர். இருந்தபோதும் அந்த வாலிபர் கேட்காமல் தமிழகத்தில் இதுபோல்தான் நடக்கிறது என்று பேசிக்கொண்டே இருந்தார்.

    இதனால் அங்கிருந்த வியாபாரிகள் அவரை சரமாரியாக தாக்கினர். மேலும் இதை வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டனர். உங்கள் ஊரில் பிழைக்க வழியில்லை என தமிழகத்திற்கு வந்துவிட்டு எங்கள் ஊரை தரக்குறைவாக பேசுவதா என அவரை சத்தம் போட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • சித்தோடு போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய தலராமை தேடி வருகின்றனர்.
    • குட்கா விற்பனையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த சமத்துவபுரம் மேடு பகுதியில் ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட போதை பொருளான குட்கா பதுக்கி வைத்திருப்பதாக சித்தோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது குடோனில் வடமாநில வாலிபர் ஒருவர் காரில் சில மூட்டைகளை ஏற்றிக்கொண்டு இருந்தார். போலீசார் குடோனுக்குள் அதிரடியாக நுழைந்த போது அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார். போலீசார் அந்த காரை சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. சுமார் 1000 கிலோ குட்கா அதாவது ஒரு டன் குட்கா இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1.50 லட்சமாகும்.

    இதனையடுத்து சித்தோடு போலீசார் அந்த வடமாநில வாலிபர் குறித்து விசாரணை நடத்திய போது அவர் ஈரோடு பிருந்தா வீதியை சேர்ந்த தலராம் (35) என்பது தெரிய வந்தது.

    இவர் கடந்த 2 மாதமாக இந்த பகுதியில் பழைய துணிகளை வியாபாரம் செய்வதாக கூறி குடோன் வாடகைக்கு எடுத்து குட்காவை பல்வேறு இடங்களில் இருந்து வாங்கி அதனை ஈரோடு மாவட்டம் முழுவதும் விற்பனைக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது.

    இதனையடுத்து சித்தோடு போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய தலராமை தேடி வருகின்றனர். மேலும் 1000 கிலோ குட்கா, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    மேலும் குட்கா விற்பனையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஓடும் ெரயிலில் இருந்து குதித்த வடமாநில வாலிபர் பலியானார்.
    • அந்த வாலிபர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவரா?

    மதுரை

    சென்னையிலிருந்து செங்கோட்டை வரை செல்லும் பொதிகை ெரயிலில் சென்னையை சேர்ந்த அருண்சுந்தர் என்பவரின் மனைவி மாலதி (48), தனது மாமனார் மாமியார் மற்றும் குடும்பத்தினருடன் கடையநல்லூர் பகுதியில் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார்

    அப்போது மதுரை கூடல் நகர் ெரயில்வே ஜங்ஷன் முன்பாக அடையாளம் தெரியாத நபர் ஓடும் ரெயிலில் மாலதியிடமிருந்து செயினை பறித்துக் கொண்டு ெரயிலில் இருந்து குதித்துள்ளார். இதில் அவர் அணிந்திருந்த நாலு பவுன் செயினில் ஒரு பாதியை தன் கையில் பிடித்ததினால் இரண்டு பவுன் மட்டும் பறிக்கப்பட்டது.

    இது குறித்து மாலதி மதுரை ெரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையில் அதே ெரயிலில் இருந்து வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கீழே விழுந்து இரண்டு கால்களும் உடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை பெற்றார்.

    அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அந்த வாலிபர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • அமெரிக்க நிறுவனத்தினர் கேட்ட தரச்சான்றுகளுடன் மருத்துவ உபகரணங்களை சப்ளை செய்ய ஆர்டர் கொடுத்தார்.
    • போலி சான்றிதழ் தயாரித்து ஆடைகளை அனுப்பி வைத்து மோசடி செய்தது தெரியவந்தது.

    திருப்பூர்:

    திருப்பூரை சேர்ந்த பின்னலாடை ஏற்றுமதியாளர் பிரபுதரன். தொழிலதிபரான இவர் கடந்த 2019-ம் ஆண்டு கொரோனா காலத்தில் அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு கையுறை, முககவசம் உள்ளிட்ட மருத்துவ கவச உடைகளை சர்வதேச தரச்சான்றுடன் கொடுப்பதற்கு ஆர்டர் எடுத்தார். பின்னர் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த பனியன் வர்த்தகரான சினேகாஷிஸ் முகர்ஜி (வயது 36) என்பவர் மூலமாக அமெரிக்க நிறுவனத்தினர் கேட்ட தரச்சான்றுகளுடன் மருத்துவ உபகரணங்களை சப்ளை செய்ய ஆர்டர் கொடுத்தார்.

    இதைத்தொடர்ந்து சினேகாஷிஸ் முகர்ஜி, சம்பந்தப்பட்ட ஆடைகளை பிரபுதரனுக்கு அனுப்பி வைத்தார். கடந்த 2019 முதல் 2020-ம் ஆண்டு காலகட்டத்தில் இதற்காக ரூ.4 கோடியே 10 லட்சத்தை பிரபுதரன், சினேகாஷிஸ் முகர்ஜிக்கு அனுப்பிவைத்ததாக தெரிகிறது.

    இந்தநிலையில் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கையுறை, முக்கவசம் உள்ளிட்ட மருத்துவ ஆடைகள் உரிய தரத்தில் இல்லை என்றும், அவை போலியான சான்றிதழ் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி அமெரிக்காவை சேர்ந்த நிறுவனத்தினர் பிரபுதரனுக்கு ஆடைகளை திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபுதரன், சினேகாஷிஸ் முகர்ஜியை தொடர்பு கொண்டபோது அவர் முறையாக பதில் அளிக்கவில்லை. அதன்பிறகே போலி சான்றிதழ் தயாரித்து ஆடைகளை அனுப்பி வைத்து மோசடி செய்தது தெரியவந்தது.

    இதுகுறித்து பிரபுதரன் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் கடந்த 2022-ம் ஆண்டு புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, சினேகாஷிஸ் முகர்ஜி, அவரது மனைவி, தந்தை உள்பட 4 பேர் மீது மோசடி வழக் குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

    இந்தநிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக் டர் பிரகாஷ் தலைமையிலான தனிப்படையினர் கொல்கத்தா சென்று முகாமிட்டு, மோசடி சம்பவம் தொடர்பாக சினேகா ஷிஸ் முகர்ஜியை கைது செய்தனர். பின்னர் அவரை திருப்பூர் அழைத்து வந்து விசாரித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர்.

    • 10 நாட்களுக்கு முன் வாலிபர் குணமடைந்து பழைய நினைவுகள் திரும்பியது.
    • ஜிதேந்தரின் அண்ணன் தேவேந்திர நிஷாந்த், சத்தீஸ்கர் மாநில காவல் துறையில் பணியாற்றி வருவது தெரியவந்தது.

    குனியமுத்தூர்:

    கோவை பொள்ளாட்சி சாலை மயிலேரிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் உதவும் கரங்கள் என்ற தன்னார்வ அமைப்பு மனநலம் பாதிக்கப்பட்டு சாலைகளில் சுற்றித்திரியும் ஆதரவற்ற நபர்களை மீட்டுசிகிச்சையளித்து வருகிறது.

    கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தனக்கு தானே பேசியவாறு சாலையில் சுற்றித்திரிந்த வட மாநில வாலிபர் ஒருவரை இந்த அமைப்பினர் மீட்டு மையத்திற்கு அழைத்து சென்று அவருக்கு உணவு, உடை வழங்கி மருத்துவ குழுவினர் சிகிச்சையளித்து வந்தனர்.

    10 நாட்களுக்கு முன் அந்த வாலிபர் குணமடைந்து பழைய நினைவுகள் திரும்பியது. விசாரித்ததில் அவர் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், அவர் கோபால் நிஷாத் என்பவரது மகன் ஜிதேந்தர் (34). என்பதும் தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து இந்த தன்னார்வ அமைப்பினர் இணையதளம் மூலம் ஜிதேந்தர் கூறிய அடையாளங்களை வைத்து சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் பகுதியில் உள்ள வணிக வளாகத்திற்கு அழைத்து பேசியபோது, ஜிதேந்தரின் அண்ணன் தேவேந்திர நிஷாந்த், சத்தீஸ்கர் மாநில காவல் துறையில் பணியாற்றி வருவது தெரியவந்தது.

    தேவேந்திர நிஷாந்தை தொடர்பு கொண்டு பேசிய போது ஜிதேந்தர் அவரது சகோதரர் என்பதும், கடந்த 2015-ல் வீட்டில் இருந்த ஜிதேந்தர் திடீரென மாயமானதும், இது குறித்து உள்ளூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டு தேடி வந்ததாகவும் கூறினார். தேவேந்திர நிஷாந்த் நேற்று தனது தம்பியை அழைத்து செல்ல கோவை மயிலேரிபாளையத்தில் செயல்பட்டு வரும் மையத்திற்கு வந்தார். அங்கு ஜிதேந்தரை கண்டதும் கட்டிப்பிடித்து அழுதார். அண்ணன் அழுவதை பார்த்து ஜிதேந்திரனும் அழுதார். இதனால் அங்கு சிறிது நேரம் பாச போராட்டம் நடந்தது. பின்னர் அங்கிருந்தவர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி கூறிவிட்டு சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு தனது அண்ணனுடன் ஜித்தேந்தர் சொந்த ஊரான சத்தீஸ்கர் மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றார்.

    • பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
    • வழக்கில் தொடர்புடைய 2 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

    பல்லடம் :

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் மண்டல் என்பவரை கடந்த 20-ந் தேதி ஒரு கும்பல் கடத்தி அவரிடம் இருந்த ரூ.40 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு அங்கேயே விட்டுவிட்டு சென்று விட்டனர். இது குறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வந்தனர். இதில் முக்கிய குற்றவாளியான சென்னையைச் சேர்ந்த சுசிதரன் என்பவரது மகன் டாட்டூ தினேஷ் (வயது 28) என்பவரை போலீசார் சின்னக்கரை அருகே வைத்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

    இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

    • காரில் வந்த மர்ம நபர்கள் ஷாஜி மண்டலை கடத்திச் சென்றுள்ளனர்.
    • ஏடிஎம் கார்டு, பணம் ரூ. 5 ஆயிரம் மற்றும் வெள்ளி பிரேஸ்லெட் ஆகியவற்றை பறித்துக்கொண்டனர்.

    பல்லடம் :

    மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பஜூலு மண்டல் என்பவரது மகன் ஷாஜி மண்டல்(35) இவர் தற்போது பல்லடம் அருகே உள்ள அருள்புரம் செந்தூரான் காலனியில் வசித்துக் கொண்டு, தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட வட மாநிலப் பெண் ஒருவர் வேலையில்லாமல் கஷ்டப்படுவதாகவும் வேலை இருந்தால் சொல்லுமாறும், தற்போது மிகவும் சிரமமாக இருப்பதால் பண உதவி செய்யுமாறு கூறியுள்ளார். இதனால் அவருக்கு உதவி செய்வதற்காக அந்தப் பெண் வரச் சொன்ன சின்னக்கரை பஸ் நிறுத்தம் அருகே சென்றுள்ளார். அப்போது அங்கு காரில் வந்த மர்ம நபர்கள் ஷாஜி மண்டலை கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவரை திருப்பூர் கொண்டு சென்று அங்கு உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்து, அவரை அடித்து மிரட்டி ரூ.10லட்சம் பணம் கேட்டுள்ளனர். தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக்கூறி ஷாஜி மண்டல் அழுதுள்ளார். மீண்டும் அவரை தாக்கிய கடத்தல்காரர்கள், அவர் வைத்திருந்த ஏடிஎம் கார்டு, பணம் ரூ. 5 ஆயிரம், மற்றும் வெள்ளி பிரேஸ்லெட் ஆகியவற்றை பறித்துக்கொ ண்டனர். பின்னர் திருப்பூரில் உள்ள ஏடிஎம் மையத்தில் ஷாஜி மண்டலின் ஏடிஎம் கார்டு பயன்படுத்தி ரூ. 56 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளனர். பின்னர் அவரை திருப்பூர் அரசு மருத்துவமனை அருகே இறக்கி விட்டு, சீக்கிரமாக பணத்தை ரெடி செய், இது குறித்து புகார் செய்ய போலீசுக்கு போனால் குடும்பத்தையே கொலை செய்து விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து தன்னை கடத்தி பணம் பறித்த பெண் உள்ளிட்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர் பல்லடம் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பல்லடம் போலீசார் அவரிடம் பேசிய ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அஜித்குமார் என்பவரது மனைவி சுகுலா சர்தார்(35) என்பவரை பிடித்து விசாரணை செய்த போது, அவரும் இன்னும் 4 நபர்களும் சேர்ந்து இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த நிலையில் பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் தனி படை அமைக்கப்பட்டு, தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • தனிப்படை போலீசார் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒரு வாலிபர் மற்றும் 3 சிறுவர்களை பிடித்து விசாரித்தனர்.
    • வேலை தேடி வந்து மதுரையில் தங்கியிருந்த நிலையில் வடமாநில வாலிபர் கொள்ளையில் ஈடுபட்டது வியாபாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை:

    மதுரை சின்ன கண்மாய் தெருவை சேர்ந்தவர் முருகவேல். இவர் அம்மன் சன்னதி விட்டவாசல் பகுதியில் கண்ணாடி கடை நடத்தி வருகிறார். இங்கு தினமும் பல லட்ச ரூபாய்க்கு வியாபாரம் நடைபெறும்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு முருகவேல் கடையை பூட்டி விட்டு சென்றுவிட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கடையின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அங்கு கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சம் ரொக்க பணத்தை திருடி சென்று விட்டனர்.

    இதுபற்றி அறிந்த முருகவேல் அதிர்ச்சி அடைந்தார். அவர் கடையில் ரூ.10 லட்சம் கொள்ளை போனது பற்றி விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் கொள்ளையர்கள் கண்காணிப்பு கேமராக்களை அடித்து நொறுக்கி விட்டு கைவரிசையை காட்டியது தெரிய வந்தது. இருந்தபோதிலும் ஒரு கேமராவில் கொள்ளையனின் உருவம் பதிவாகி இருந்தது.

    கொள்ளையில் ஈடுபட்ட வாலிபரின் முகம் மற்றும் உடல் பகுதியை மறைக்கும் வகையில் ஆடை அணிந்து சென்று திருடியது கண்டறியப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் மாநகர தெற்கு துணை கமிஷனர் சாய் பிரனீத் தலைமையில் மீனாட்சி கோவில் போலீஸ் சரக உதவி கமிஷனர் காமாட்சி மேற்பார்வையில் விளக்குத்தூண் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படை போலீசார் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒரு வாலிபர் மற்றும் 3 சிறுவர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள்தான் கொள்ளையில் ஈடுபட்டது உறுதியானது.

    பிடிபட்ட வாலிபர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இர்ஷாத் என்பவரின் மகன் ஷபாஸ் (வயது 21) என்பதும், அவருக்கு உடந்தையாக செயல்பட்டவர்களில் 2 பேர் அவரது சகோதரர்கள் என்பதும், இன்னொருவர் உறவினர் என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இதுதொடர்பாக கொள்ளையன் ஷபாஸ் அளித்துள்ள வாக்குமூலத்தில், வேலை தேடி மதுரைக்கு வந்ததாகவும், அப்போது திருட்டில் ஈடுபட முடிவு செய்து திரிந்தபோது சம்பந்தப்பட்ட கண்ணாடி கடையில் தினமும் பல லட்ச ரூபாய்க்கு வியாபாரம் நடைபெறுவதை பார்த்ததும் அங்கு கொள்ளையடிக்க திட்டமிட்டதாகவும், இதற்காக அவர் தனது சகோதரர்கள் மற்றும் உறவினரை அழைத்து வந்து கொள்ளை திட்டத்தை அரங்கேற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

    வேலை தேடி வந்து மதுரையில் தங்கியிருந்த நிலையில் வடமாநில வாலிபர் கொள்ளையில் ஈடுபட்டது வியாபாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பஞ்சாராம் ராய் தனது நண்பருடன் மது அருந்திவிட்டு பி.பி. அக்கரகாரம் பகுதியில் உள்ள காலிங்கராயன் வாய்க்காலுக்கு குளிக்க சென்றனர்.
    • இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன

    ஈரோடு:

    நேபால் மாநிலம் ராவுத்தார் பகுதியைச் சேர்ந்தவர் பஞ்சாராம் ராய் (29). இவர் ஈரோடு மாவட்டம் சோலார் பகுதியில் தங்கி அங்குள்ள ஒரு பிராசசிங் மில்லில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று பஞ்சாராம் ராய் தனது நண்பருடன் மது அருந்திவிட்டு பி.பி. அக்கரகாரம் பகுதியில் உள்ள காலிங்கராயன் வாய்க்காலுக்கு குளிக்க சென்றனர்.

    வாய்க்காலில் குளித்துக் கொண்டிருக்கும் போது பஞ்சாராம் ராய் திடீரென நீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர் மில்லில் வேலை பார்க்கும் நபர்களிடம் இது குறித்து கூறினார்.

    இதனை அடுத்து அனைவரும் அக்ரஹாரம் வாய்க்கால் பகுதிக்கு சென்று பஞ்சாராம்ராயை தேடிப் பார்த்தனர்.

    இந்நிலையில் ஈரோடு வைரா பாளையம் பகுதியில் வி.எம்.பி. தோட்டம் அருகே காலிங்கராயன் வாய்க்கால் கரையோரம் பஞ்சாராம் ராய் உடல் ஒதுங்கியது.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்ப ட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பஞ்சாராம் ராய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன

    • தனிப்படை போலீசார் முக்கிய குற்றவாளிகளை தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • 170 பவுன் கொள்ளை போன நிலையில் ஒரு பவுன் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    குஜிலியம்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே தனியார் சிமெண்ட் ஆலை உள்ளது. இந்த ஆலையின் மேலாளராக இருப்பவர் திருநாவுக்கரசு (வயது 55). இவர் அதே பகுதியில் உள்ள குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இவர் கடந்த மாதம் 22ந் தேதி தனது மனைவியுடன் வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 170 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போனது.

    இதே போல் அருகில் வசிக்கும் உதவி பொது மேலாளர் செந்தில் (42) என்பவர் வீட்டில் ரூ.10 ஆயிரம், பாஸ்கர் வீட்டில் ரூ.40 ஆயிரம் பணம் திருடு போனது.

    அதற்கு அடுத்து வசிக்கும் வேல்முருகன் என்பவர் வீட்டிலும் கொள்ளையர்கள் உள்ளே புகுந்த போது அங்கு எதுவும் கிடைக்காததால் விட்டுச் சென்றனர்.

    இது குறித்து மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவின் பேரில், டி.எஸ்.பி. துர்காதேவி வழிகாட்டுதலின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் இசக்கிராஜா, சரத்குமார் அடங்கிய தனிப்படை போலீஸ் குழு அமைக்கப்பட்டது.

    தனியார் சிமெண்ட் ஆலையில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணியில் இருப்பதால் அவர்கள் யாரேனும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடத்தினர். மேலும் அரியலூர் உள்ளிட்ட சிமெண்ட் கம்பெனிகள் உள்ள இடங்களில் இதேபோல் அதிக அளவு நகை பணம் கொள்ளை போன சம்பவத்தில் தொடர்புடையவர்கள் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் விசாரணை நடத்தப்பட்டது.

    முக்கிய கைரேகைகளை வைத்து ஆய்வு செய்ததில் மத்தியபிரதேசத்தை சேர்ந்த கொள்ளையர் இதில் கைவரிசை காட்டியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் மத்தியபிரதேசம் விரைந்தனர்.

    அங்குள்ள தார் மாவட்டம் பசோலி பகுதியில் அம்மாநில போலீசார் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தற்போது அதே பகுதியை சேர்ந்த பாயாமெர்சின் பாப்ரியா (30) என்பவரிடம் இருந்த நகையை பரிசோதனை செய்தனர். அந்த நகையை கொள்ளைபோன உரிமையாளரிடம் செல்போன் மூலம் காட்டியதில் அது தனது நகை என உறுதி செய்தார். இதனை தொடர்ந்து அந்த வாலிபரை குஜிலியம்பாறை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர். இதில் கொள்ளைக்கு மூளையாக இருந்த நபர் பல்வேறு இடங்களில் நகைகளை கொடுத்து வைத்திருப்பதும், அதில் ஒரு பவுன் மட்டும் தனக்கு கிடைத்ததும் தெரிய வந்துள்ளது.

    அதன்பேரில் அந்த வாலிபரை கைது செய்து வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளிகளை தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    170 பவுன் கொள்ளை போன நிலையில் ஒரு பவுன் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஒடிசாவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் வடமாநில வாலிபர்களுக்கு விற்பனை.
    • 21கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கரடிவாவி செங்கோடம்பாளையம் பகுதியில் பஸ் நிறுத்தம் அருகே வட மாநில வாலிபர் ஒருவர் மூட்டையுடன் நின்றுகொண்டிருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை மடக்கி விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து அவரை காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் அவர் ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தை சேர்ந்த பரமான்மாலிக் மகன் நீலு குமார் மாலிக் (35) என்பதும் ஒடிசாவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் வடமாநில வாலிபர்களுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து அவரிடம் இருந்து 21கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் பரிந்துரையின் பேரில், திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத், கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நீலு குமார் மாலிக்கை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து சிறையில் உள்ள அவரிடம் குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.

    ×