search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்கவுண்டர்"

    • சஜித்தை பிடிக்க முயன்ற போது சஜித் போலீசாரை தாக்க முயன்றார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் படாவுன் மாவட்டத்தில் உள்ள பாபா காலனியை சேர்ந்தவர் சஜித். முடி திருத்தும் கடை நடத்தி வந்த இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வினோத் என்பவருக்கும் இடையே ரூ.5 ஆயிரம் கடன் பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று மாலை சஜித், வினோத்தின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வினோத்தின் குழந்தைகளான ஆயுஷ் (வயது11), அஹான் (7), பியூஸ் (6) ஆகியோர் மொட்டை மாடியில் விளையாடி கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு சென்ற சஜித் திடீரென ஆவேசம் அடைந்து ஆயுஷ், அஹான் ஆகிய 2 குழந்தைகளையும் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பியூஸ் சத்தம் போடவே அவனையும் கொலை செய்ய முயன்றுள்ளார். எனினும் பியூஸ் காயங்களுடன் தப்பினார். உடனடியாக அங்கிருந்து சஜித் தப்பி ஓடினார்.

    இதற்கிடையே சத்தம் கேட்டு அப்பகுதியில் பொது மக்கள் திரண்டனர். அவர்கள் ஆவேசம் அடைந்து சஜித்தின் கடையை சூறையாடி தீ வைத்தனர். மேலும் அவரை மடக்கி பிடிக்க முயன்றனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் சஜித்தை பிடிக்க முயன்ற போது சஜித் போலீசாரையும் தாக்க முயன்றார்.

    அப்போது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் சஜித் என்கவுண்டரில் பலியானார். இந்த சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் ஐ.ஜி. ராகேஷ் குமார் கூறுகையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குற்றவாளியை பிடிக்க துரத்தினர். அப்போது அவர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். எனவே போலீசார் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

    • ரகசிய தகவல் அடிப்படையில் பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டை.
    • பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் வீரர்கள் பதிலுக்கு தாக்குதல்.

    ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகர் பகுதிகளில் பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிக அளவில் இருந்து வருகிறது. பயங்கரவாதிகளை ஒடுக்கும் வகையில் பாதுகாப்புப்படையினர் உள்ளூர் போலீசார் உதவியுடன், அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்து ரகசிய தகவல் கிடைத்ததும், அந்த இடத்திற்கு சென்று, அப்பகுதியை சுற்றிவளைத்து அவர்களை முடிக்க முயற்சி செய்வார்கள். இப்போது இருதரப்பினருக்கும் இடையில் துப்பாக்கிச்சூடு நடைபெறுவது வழக்கமாக உள்ளது.

    இந்த வகையில் தெற்கு காஷ்மீர் மாவட்டமான ஷோபியானின் சோட்டிகாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை அந்த பகுதியை வீரர்கள் சுற்றி வளைத்துள்ளனர்.

    அந்த பகுதியில் தீவிரவாதிகள் இருக்கிறார்களா? என வீரர்கள் தேடிப்பார்க்கும்போது பயங்கரவாதிகள் வீரர்கள் நோக்கி துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். இதனால் வீரர்களும் பதில் தாக்குதல் நடத்த தொடங்கினர். இதனால் அப்பகுதியில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.

    துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகின்ற நிலையில், உயிரிழப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

    • நேற்று பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ஓடஓட விரட்டிக் கொலை.
    • சுற்றி வளைத்தபோது போலீசார் மீது தாக்குதல் நடத்தியதால் சுட்டுக்கொலை.

    காஞ்சிபுரத்தில் நேற்று பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபாகரன் என்ற சரவணன் மர்ம நபர்களால் ஓடஓட விரட்டி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

    மர்ம நபர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அவர்களை பிடிப்பதற்காக தீவிரமாக தேடிவந்தனர். இந்த கொலை வழக்கும் பிரபல வசூல் ராஜா ரவுடியின் கூட்டாளிகள் ஈடுபட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    ரகு மற்றும் அசேன் ஆகிய இருவரும் முக்கிய குற்றவாளி எனத் தெரியவந்தது. இருவரும் ரெயில் நிலையம் அருகே பதுங்கியிருந்த நிலையில் போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது இருவரும் தப்பியோட முயற்சி செய்த நிலயில், தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களால் சிறப்பு காவல் உதவியாளர் ராமலிங்கம், காவலர் சசிகுமார் இருவரையும் அரிவாளால் தாக்கியுள்ளனர்.

    உடனே உதவி ஆய்வாளர் சுதாகர், இருவரையும் துப்பாக்கியால் சுட்டு பிடிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது குண்டு பாய்ந்து இருவரும் சரிந்தனர். உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் உயிரிழந்ததாக அறிவித்தனர்.

    ரவுடி கொலையில் இருவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.

    • பார்த்திபன் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் முத்து சரவணன், சண்டே சதீஷ் ஆகிய 2 பேரும் தலைமறைவாக இருந்தனர்.
    • ரவுடிகள் சுட்டதில் போலீஸ்காரர்கள் கிருஷ்ண மூர்த்தி, ராஜேஷ், லிவி பிரபு ஆகியோர் மீது குண்டு பாய்ந்தது.

    பொன்னேரி:

    சென்னை செங்குன்றம் அருகேயுள்ள பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். அ.தி.மு.க பிரமுகரான இவர் ஏற்கனவே பஞ்சாயத்து தலைவராகவும் இருந்துள்ளார்.

    இவர் கடந்த ஆகஸ்டு மாதம் பாடியநல்லூர் அங்காளம்மன் கோவில் திடல் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் அவரை கொலை செய்தது.

    இந்த திடல் எப்போதும் பரபரப்பாக காணப்படும். அங்காளம்மன் கோவிலும் அந்த பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த பகுதியில் பார்த்திபன் கொலை செய்யப்பட்டதால் அந்த கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அ.தி.மு.க. பிரமுகர் பார்த்திபன் கொலை தொடர்பாக செங்குன்றம் போலீசார் 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.

    பார்த்திபன் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் முத்து சரவணன், சண்டே சதீஷ் ஆகிய 2 பேரும் தலைமறைவாக இருந்தனர். இவர்களில் முத்து சரவணன் செங்குன்றம் எடப்பாளையத்தை சேர்ந்தவர். சண்டே சதீஷ் செங்குன்றம் ஞாயிறு கிராமத்தை சேர்ந்தவர்.

    பார்த்திபன் கொலை தொடர்பாக அவர்கள் இருவரையும் போலீசார் தேடி வந்தனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தனர்.

    மேலும் தலைமறைவாக இருந்தபடி அவர்கள் பலரை மிரட்டி பணம் பறிக்கும் செயலிலும் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் அ.தி.மு.க. பிரமுகர் பார்த்திபன் கொலை தொடர்பாக செங்குன்றம் போலீசார் விசாரணையை தொடங்கினார்கள். ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர், செங்குன்றம் துணை கமிஷனர் பால கிருஷ்ணன் ஆகியோரின் மேற்பார்வையில் போலீசார் அவர்கள் இருவரையும் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் முத்து சரவணன், சண்டே சதீஷ் இருவரும் மீஞ்சூர்-வண்டலூர் சாலையில் மீஞ்சூர் சுங்கச்சாவடி அருகே மாரம்பேடு கண்டிகை கும்மனூர் வயல்வெளி பகுதியில் பதுங்கி இருந்தனர். இது பற்றி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி கமிஷனர் ஜவஹர், இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் அசோக் மற்றும் போலீஸ்காரர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜேஷ், லிவி பிரபு ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    ரவுடிகள் பதுங்கி இருந்த இடத்தை அடைந்த போலீசார், ரவுடிகள் முத்து சரவணன், சண்டே சதீஷ் இருவரிடமும் உங்களை கைது செய்ய வந்திருக்கிறோம், வெளியில் வாருங்கள் என்று எச்சரித்தனர். ஆனால் அதை மீறி ரவுடிகள் முத்து சரவணன், சண்டே சதீஷ் இருவரும் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.

    ரவுடிகள் சுட்டதில் போலீஸ்காரர்கள் கிருஷ்ண மூர்த்தி, ராஜேஷ், லிவி பிரபு ஆகியோர் மீது குண்டு பாய்ந்தது. இதனால் போலீசார் தங்களை தற்காத்துக்கொள்வதற்காக பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர். இன்ஸ்பெக்டர் ரமேஷ் 3 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டார். அந்த 3 குண்டுகளும் ரவுடி முத்து சரவனன் மீது பாய்ந்தது. இதில் அவருக்கு 3 இடங்களில் குண்டு காயம் ஏற்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் அசோக் சுட்டதில் ரவுடி சண்டே சதீஷ் மீது குண்டு பாய்ந்தது.

    இதில் 2 ரவுடிகளும் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தனர். போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்ப முயன்றதால் அதிரடியாக போலீசார் அவர்களை சுட்டு வீழ்த்தினார்கள்.

    இந்த நிலையில் ரவுடிகள் சுட்டதில் காயம் அடைந்த 3 போலீஸ்காரர்களையும், போலீசார் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    என்கவுண்டரில் பலியான ரவுடிகள் முத்து சரவணன், சண்டே சதீஷ் ஆகியோரின் உடல்களும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளன.

    என்கவுண்டரில் கொல்லப்பட்ட ரவுடிகள் முத்து சரவணன், சண்டே சதீஷ் ஆகிய இருவர் மீதும் தனித்தனியாக 25 வழக்குகள் உள்ளன. இதில் 6 கொலை வழக்குகளும் அடங்கும்.

    இவர்கள் செங்குன்றம், பாடியநல்லூர், சோழவரம், பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் மிரட்டி பணம் பறிப்பதை தொழிலாக செய்து வந்தனர். பார்த்திபனிடமும் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர் பணம் கொடுக்காததால் தான் அவரை கொலை செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில் 2 ரவுடிகளும் போலீஸ் என்கவுண்டருக்கு பலியாகி உள்ளனர்.

    • சென்னை சோழவரம் அருகே 2 ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    • இவர்கள் அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்.

    சென்னை:

    சென்னை சோழவரம் அருகே பிரபல கூலிப்படை தலைவன் முத்துசரவணன் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    இவர்கள் இருவரும் அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டவர்கள்.

    டெல்லியில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்த நிலையில் 2 ரவுடிகளும் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர் என தகவல் வெளியானது.

    • பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
    • முழு நாடும் நமது துணிச்சலான வீரர்களால் பெருமை கொள்கிறது.

    ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அம்மாவட்டத்தின் ஹலன் பகுதியில் நேற்று இரவு ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலுக்கு ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

    இதில், பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 3 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர்.

    இந்நிலையில், பயங்கரவாதிகளுடனான என்கவுண்டரில் உயிரிழந்த 3 ராணுவ வீரர்களுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அஞ்சலி செலுத்தினார்.

    இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், " பயங்கரவாதிகளுடனான மோதலில் நாட்டைக் காத்த நமது துணிச்சலான வீரர்களின் அழியா தியாகத்திற்கு எனது அஞ்சலிகள். நமது வீரர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து நம்மைக் காக்கிறார்கள். முழு நாடும் நமது துணிச்சலான வீரர்களால் பெருமை கொள்கிறது" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரவுடி சோட்டா வினோத் மீது 10 கொலை வழக்கு உள்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன
    • ரமேஷ் மீது 5 கொலை வழக்கு உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன

    சென்னை வண்டலூர் அடுத்துள்ள கூடுவாஞ்சேரி அருகே போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற 2 ரவுடிகள் என்கவுண்டரில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    இன்று அதிகாலையில் நடைபெற்ற இந்த போலீஸ் வேட்டை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

    தாம்பரம் புறநகர் பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் தினமும் இரவு ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் நேற்று இரவு கூடுவாஞ்சேரியை அடுத்த காரணை புதுச்சேரி அருங்கல் சாலையில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது.

    கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் 10-க்கும் மேற்பட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    இன்று அதிகாலையிலும் போலீசாரின் வாகன சோதனை நீடித்தது. அப்போது 3.30 மணியளவில் அந்த வழியாக ஸ்கோடா கார் ஒன்று வேகமாக வந்தது. மின்னல் வேகத்தில் வந்த காரை பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார் அதனை தடுத்து நிறுத்தினர். ஆனால் காரில் இருந்தவர்கள் வேகத்தை குறைக்காமல் போலீசாரை இடித்து தள்ளுவதுபோல சென்றனர்.

    போலீசிடமிருந்து தப்பிவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் காரை ஓட்டி வந்தவர்கள் அதனை தாறுமாறாக இயக்கினார்கள். இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. பின்னர் அங்கு நின்றிருந்த போலீஸ் வாகனத்தின் மீது மோதி அதனை இடித்து தள்ளி நின்றது. இதைத்தொடர்ந்து போலீசார் காரை நோக்கி விரைந்து சென்றனர். அப்போது காரில் இருந்து 4 பேர் இறங்கினர். அவர்களில் 2 பேர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

    அவர்களின் கையில் பயங்கர ஆயுதங்கள் இருந்தன. இதைத்தொடர்ந்து போலீசார் 4 பேரையும் மடக்கி பிடிக்க நினைத்து அருகில் சென்றனர். ஆயுதங்களை கீழே போடுங்கடா? என்று எச்சரித்துக் கொண்டே போலீசார் அவர்களின் அருகில் சென்றனர். ஆனால் ரவுடிகள் அதனை கேட்கவில்லை.

    அவர்களில் ஒருவன் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதனை அரிவாளால் வெட்டி பயங்கர தாக்குதலில் ஈடுபட்டான். அவரது இடது கையில் முதலில் வெட்டிய அவன் பின்னர் தலையிலும் வெட்டினான். ஆனால் சிவகுருநாதன் குனிந்து கொண்டார். இதனால் தொப்பியில் வெட்டு விழுந்தது.

    ரவுடிகளின் தாக்குதலால் அதிர்ச்சி அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் இன்ஸ்பெக்டர் முருகேசன் இருவரும் தங்களது துப்பாக்கியை தூக்கினர். தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள இருவரும் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

    இதில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய ரவுடி, இன்னொரு ரவுடி ஆகிய இருவர் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. இதில் அலறி துடித்த இருவரும் அங்கேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தனர். உடனடியாக இருவரையும் ஆஸ்பத்திரிக்கு போலீசார் தூக்கிச் சென்றனர். ஆனால் வழியிலேயே இருவரும் உயிரிழந்து விட்டனர்.

    போலீஸ் என்கவுண்டரில் சுட்டுத்தள்ளப்பட்ட 2 ரவுடிகளும் பயங்கர ரவுடிகள் என்பது தெரியவந்தது. ஒருவனது பெயர் சோட்டா வினோத். இவனுக்கு 35 வயதாகிறது. இன்னொருவன் பெயர் ரமேஷ். இவனுக்கு வயது 32. இருவரும் ஓட்டேரி போலீஸ் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ஆவர்.

    இவர்கள் தங்களது கூட்டாளிகளுடன் நேற்று இரவு காரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நோக்கில் ஆயுதங்களுடன் காரில் சுற்றி திரிந்துள்ளனர். அப்போதுதான் வாகன சோதனையின்போது போலீசில் சிக்கி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர்.

    சிறுவயதிலேயே தவறான பழக்க வழக்கங்கள் காரணமாக சோட்டா வினோத்தும், ரமேசும் ரவுடிகளாக மாறி விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    சோட்டா வினோத் ஏ-பிளஸ் ரவுடியாக வலம் வந்துள்ளான். ஓட்டேரி, மண்ணிவாக்கம் பகுதியில் வசித்து வந்த இவன் அப்பகுதியில் பெரிய தாதாவாக வலம் வந்துள்ளான். தொழில் அதிபர்கள் மற்றும் பெரிய நிறுவன உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிப்பது, அடிதடியில் ஈடுபடுவது உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த சோட்டா வினோத் மீது 10 கொலை வழக்குகளும், 15 கொலை முயற்சி வழக்குகளும் உள்ளன.

    ரவுடியான இவன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு கொள்ளையில் ஈடுபட்டு அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுபோன்று 10 இடங்களில் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்ட வழக்கும், 15 இடங்களில் அடிதடியில் ஈடுபட்டு பொதுமக்களை பயமுறுத்திய வழக்கும் உள்ளது. இதுபோன்று 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் சோட்டா வினோத் மீது உள்ளன.

    என்கவுண்டரில் பலியான இன்னொரு ரவுடியான ரமேஷ் ஏ-வகையை சேர்ந்த ரவுடி ஆவான். இவன் மீதும் ஓட்டேரி போலீஸ் நிலையத்தில் சரித்திர பதிவேடு பராமரிக்கப்பட்டு வந்தது.

    இவன் மீது 5 கொலை, 7 கொலை முயற்சி, 8 அடிதடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்குகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    2 ரவுடிகளின் உடல்களும் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் இன்னும் திருமணமாக வில்லை. பிரேத பரிசோதனை முடிந்து அவர்களது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட உள்ளது. அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக ஆஸ்பத்திரி மற்றும் ஓட்டேரி சுற்று வட்டார பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    ரவுடிகள் அரிவாளால் வெட்டியதில் காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயர் போலீஸ் அதிகாரிகள் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

    அதிகாலையில் போலீசாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு 2 ரவுடிகள் இரையான சம்பவம் சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ரவுடிகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • காயமடைந்தவர்கள் அல்லது கொல்லப்பட்டவர்களை நக்சலைட்டுகள் காட்டுக்குள் இழுத்துச் சென்றனர்.
    • அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே இன்று கடுமையான துப்பாக்கிச்சூடு சண்டை நடந்தது. இதில், 4 முதல் 6 நக்சலைட்கள் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. ஆனால், இதில் இவர்கள் உயிருடன் இருக்கிறார்களா அல்லது படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனரா என்று தெரியாமல் அதிகாரிகள் குழம்பியுள்ளனர்.

    காரணம், துப்பாக்கிச்சூடுக்கு பிறகு அந்த இடத்தில் நக்சலைட்களின் உடல்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    காயமடைந்தவர்கள் அல்லது கொல்லப்பட்டவர்களை நக்சலைட்டுகள் காட்டுக்குள் இழுத்துச் சென்றதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    சிந்தாகுஃபா மற்றும் கிஸ்டாரம் காவல் நிலைய எல்லையில் உள்ள மாவோயிஸ்டுகளின் கோட்டையான சோடேகெட்வால் கிராமத்தின் வனப்பகுதியில் நடந்த இந்த என்கவுண்டரில் மாநில காவல்துறையின் மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி) மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் எலைட் கமாண்டோ பட்டாலியன் ஃபார் ரெசல்யூட் ஆக்ஷன் (கோப்ரா) ஆகியவற்றைச் சேர்ந்த பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ரஜோரிக்கு அருகிலுள்ள தஸ்சல் குஜ்ரான் வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக பயங்கரவாதிகளின் நடமாட்டம்.
    • என்கவுன்டரை அடுத்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் நேற்று நள்ளிரவில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ரஜோரிக்கு அருகிலுள்ள தஸ்சல் குஜ்ரான் வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக பயங்கரவாதிகளின் நடமாட்டத்தைக் கண்டறிந்ததை அடுத்து ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    பின்னர், பாதுகாபு்பு படையினர் பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தனர். அப்போது, பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. 

    இந்நிலையில், பயங்கரவாதிகளை நோக்கி பாதுகாப்பு படையினர் என்கவுன்டர் நடத்தினர்.

    இதில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார் என்றும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஜம்மு காஷ்மீரின் உரி செக்டார் பகுதியில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளுக்கும், இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை.
    • குப்வாராவில் ஊடுருவல் முயற்சியை முறியடித்தது மற்றும் இரண்டு பயங்கரவாதிகளை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அன்ட்வான் சாகம் பகுதியில் இன்று காலை என்கவுன்டர் நடந்தது. ஜம்மு காஷ்மீர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதேபோல், நேற்று அதிகாலையில் ஜம்மு காஷ்மீரின் உரி செக்டார் பகுதியில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளுக்கும், இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. பாகிஸ்தான் தரப்பில் குவாட்காப்டரை பறக்கவிட முயன்றபோது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதில், இந்திய ராணுவ வீரர்கள் என்கவுண்டர் நடத்தி பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை முறியடித்தனர்.

    கடந்த மே 3ம் தேதி அன்று, இந்திய ராணுவம் குப்வாராவில் ஊடுருவல் முயற்சியை முறியடித்தது மற்றும் இரண்டு பயங்கரவாதிகளை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.

    • அவர்கள் குறித்து துப்பு கொடுத்தால் 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என காவல்துறை அறிவித்திருந்தது.
    • குற்றவாளிகளிடம் இருந்து வெளிநாட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக சட்டம் ஒழுங்கு பிரிவு சிறப்பு டிஜிபி தெரிவித்தார்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2005-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. ராஜூ பால் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் எம்.பி.யும், முன்னாள் ரவுடியுமான அத்திக் அகமது உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இந்த கொலை வழக்கின் முக்கிய சாட்சியான வக்கீல் உமேஷ் பால் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் அத்திக் அகமது மற்றும் அவரது மகன் ஆசாத், கூட்டாளி குலாம் ஆகியோர்  குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். ஆசாத், குலாம் ஆகியோர் குறித்து துப்பு கொடுத்தால் 5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை அறிவித்திருந்தது.

    இந்நிலையில், அத்திக் அகமதுவின் மகன் ஆசாத் மற்றும் அவரது கூட்டாளி குலாம் ஆகியோர் இன்று போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜான்சியில் அவர்களை மாநில அதிரடிப்படை போலீசார் பிடிக்க முயன்றபோது ஏற்பட்ட சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். குற்றவாளிகளிடம் இருந்து வெளிநாட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக சட்டம் ஒழுங்கு பிரிவு சிறப்பு டிஜிபி தெரிவித்தார்.

    உமேஷ் பால் கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட வழக்கில் அத்திக் அகமது மற்றும் அவரது கூட்டாளிகள் கான் சவுலத், தினேஷ் பாசி ஆகியோருக்கு சமீபத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • போலீசாருக்கும் ரவுடிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.
    • ரவுடி உஸ்மான் சவுத்ரி சுட்டுக் கொல்லப்பட்டான்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் (மேற்கு) பகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராஜ்பால்.

    பதவியேற்ற ஒரு மாதத்தில் இவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். விசாரணையில் தேர்தலில் அவரிடம் தோல்வி அடைந்த அஸ்ரப் என்பவர் இதில் தொடர்புடையவராக இருப்பது தெரியவந்தது.

    அஸ்ரப்பின் அண்ணன் அதிக் அகமது பிரபல தாதா ஆவார். ரவுடியான இவர், சமீபகாலமாக தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார். அவரது தலைமையிலான ரவுடிகள்தான் ராஜ்பால் எம்.எல்.ஏ.வை சுட்டுக்கொன்றது தெரியவந்தது.

    இதையடுத்து, அதிக் அகமதும், அவரது சகோதரரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான அஸ்ரப் உள்பட 40 பேர் கைதாகி சிறையில் உள்ளனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டில் முக்கிய சாட்சியாக இருந்து வந்தார்.

    கடந்த வாரம் உமேஷ்பால் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதிக் அகமதின் கும்பல்தான் அவரை கொன்றது என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

    இதையடுத்து, பிரயாக் ராஜ் மாவட்டத்தில் போலீசார் நடத்திய வேட்டையில் குற்றவாளிகளில் ஒருவரான அர்பாஸ் என்பவன் சுட்டுக் கொல்லப்பட்டான். மற்ற குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில், முக்கிய சாட்சி உமேஷ்பாலை மிக அருகில் நின்று சுட்டுக்கொன்ற குற்றவாளியான விஜயக்குமார் என்ற உஸ்மான் சவுத்ரி பிரயாக் ராஜ் நகரில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. நேற்று இரவு அந்த பகுதியை போலீசார் சுற்றி வளைத்தனர்.

    போலீசாருக்கும் ரவுடிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் ரவுடி உஸ்மான் சவுத்ரி சுட்டுக் கொல்லப்பட்டான். இன்று அதிகாலை 5.30 மணிக்கு அவன் சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    உஸ்மான் பற்றி தகவல் தெரிவித்தால், ரூ.2.5 லட்சம் பரிசு தருவதாக உத்தரபிரதேசம் போலீசார் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×