search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திரன்"

    • அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள்.
    • எண்திசை நாயகர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

    அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள் ஆவர். இவர்கள் எண்திசை நாயகர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். அஷ்டதிக் பாலகர்களில் அஷ்டம் என்றால் எட்டு, திக் என்றால் திசை, பாலகர்கள் என்றால் காப்பவர்கள் என்பது பொருளாகும். கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு ஆகியவை எண்திசைகள் ஆகும். இந்த எண்திசைகளுக்குரிய அதிபதிகளாக முறையே இந்திரன், அக்னி தேவன், யமன், நிருதி, வருண தேவன், வாயு தேவன், குபேரன், ஈசானன் விளங்குகின்றனர்.

    அஷ்டதிக் பாலகர்கள் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் கண்காணிக்கின்றனர் என்று கருதப்படுகிறது. மேலும் இவர்கள் உயிர்களின் செயல்களுக்கு சாட்சியாகவும் இருப்பதாகவும் இந்துமதத்தில் நம்பப்படுகிறது. இவர்களை வணங்கினால் எல்லா வளங்களும் கிடைப்பதாக கருதப்படுகிறது. அஷ்டதிக் பாலகர்கள் கோபுரங்கள், வாயில்கள், சுவர்கள், கூரைகள் ஆகியவற்றில் ஓவியங்களாகவும், சிலைவடிவிலும் காணப்படுகின்றனர். இனி ஒவ்வொருவரையும் பற்றிக் காண்போம்.

    இந்திரன்

    இவர் கிழக்கு திசையின் அதிபதியாகக் கருதப்படுகிறார். தேவர்களின் தலைவனாகவும் உள்ளார். இவரின் துணைவியார் இந்திராணி அல்லது சசிதேவி என்று அழைக்கப்படுகிறார். இவர் ஐராவதம் என்னும் வெள்ளை யானையினை வாகனமாகக் கொண்டவர். இவரின் ஆயுதம் மின்னலைப் போன்ற வலிமையுள்ள வஜ்ராயுதம் ஆகும். இவரே அஷ்டதிக் பாலகர்களின் தலைவர் ஆவார். இவரை வழிபட எல்லா வளங்களையும், ஆரோக்கியத்தையும் அருளுவார்.

    அக்னி தேவன்

    இவர் தென்கிழக்கு திசையின் அதிபதியாகக் கருதப்படுகிறார். நெருப்பிற்கான அதிகாரம் இவருடையது. வேள்வின்போது இடப்படும் நிவேதானப் பொருட்களை அக்னி மற்ற தெய்வங்களுக்கு எடுத்துச் செல்வதாக கூறப்படுகிறது. இவருடைய துணைவியார் சுவாகா தேவி ஆவார். இவருடைய வாகனம் ஆட்டுகிடா ஆகும். இவருடைய ஆயுதம் தீச்சுவாலையுடன் கூடிய வேல் ஆகும். இவரை வழிபட தேக வனப்பு மற்றும் பலம், மனஅமைதி, குடும்ப மேன்மை கிடைக்கும்.

    யமன்

    இவர் தெற்கு திசையின் காவலர் ஆவார். இவர் எமதர்மன், தருமராஜா, தருமதேவன், காலதேவன் என அழைக்கப்படுகிறார். அவர் இறப்பின் கடவுள் ஆவார். சூரியதேவனின் மகனாகவும், சனிபகவானின் சகோதரராகவும் இவர் குறிப்பிடப்படுகிறார். யமனின் சகோதரி யமி அல்லது யமுனை என்ற நதியாகவும் கூறப்படுகிறார். இவர் தேவர்களில் மிகவும் மதிநுட்பம் வாய்ந்தவராகக் கருதப்படுகிறார். இவருடைய துணைவியார் குபேர ஜாயை ஆவார். இவர் எருமைகிடா வாகனத்தினைக் கொண்டவர். இவருடைய ஆயுதம் பாசக்கயிறு ஆகும். யமனை வழிபட்டால் தீவினைப்பயன்களை அகற்றி நல்வினைப் பயன்களை பெறலாம்.

    நிருதி

    இவர் தென்மேற்கு திசையின் அதிபதி ஆவார். இவரின் துணைவியார் கட்கி ஆவார். இவருடைய வாகனம் பிரேதம். இவருடைய ஆயுதம் கட்கம் என்னும் வாள் ஆகும். இவரை வழிபட எதிரிகள் பயம் நீங்கி வீரம் உண்டாகும்.

    வருண பகவான்

    இவர் மேற்கு திசையின் காவலர் ஆவார். இவர் மழைக்கான கடவுள் ஆவார். ஆறு, குளம், ஏரி, கடல் நீர்நிலைகள் இவரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதாகக் கருதப்படுகின்றன. ஐவகை நிலங்களில் ஒன்றான நெய்தல் நிலத்திற்கு உரிய தெய்வமாக வருணன் போற்றப்படுகிறார். இவருயைட துணைவியார் வாருணி ஆவார். இவருடைய வாகனம் மரகம் என்ற மீன் ஆகும். இவர் வருணாஸ்திரம் என்ற ஆயுதத்தைக் கொண்டுள்ளார். இவரை வழிபட தேவையான மழை கிடைத்து உணவு பஞ்சம் தீரும்.

    வாயு பகவான்

    வாயு வடிவமற்றவர். மக்களின் உயிர் மூச்சு, பிராணனுக்கு ஆதாரமாக உள்ளவர். இவர் வடமேற்கு திசையின் காவலர் ஆவார். இவர் உலக இயக்கத்திற்குக் காரணமான காற்றிற்கான கடவுள் ஆவார். அனுமானும், பீமனும் வாயு புத்திரர்கள் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. இவரின் துணைவியார் வாயுஜாயை ஆவார். இவருடைய வாகனம் மான் ஆகும். இவர் அங்குசம் என்னும் ஆயுதத்தைக் கொண்டுள்ளார். இவரை வழிபட்டால் நீண்ட ஆயுளையும் பலத்தையும் பெறலாம்.

    குபேரன்

    இவர் வடக்கு திசையின் அதிபதியாவார். செல்வத்தின் அதிபதியாகவும் இவரைக் கூறுவோர் உண்டு. இவர் சிவனை நோக்கி தவம் இருந்து வடக்கு திசையின் அதிபதியானதாக புராணங்கள் கூறுகின்றன. இவரின் துணைவியார் யட்சி ஆவார். இவர் மதுஷனை வாகனமாக கொண்டுள்ளார். இவரின் ஆயுதம கதை ஆகும். இவரை வழிபட சகல செல்வங்களுடன் சுக வாழ்வு கிடைக்கும்.

    ஈசானன்

    இவர் வடகிழக்குத் திசையின் அதிபதியாவார். இவர் மங்களத்தின் அதிபதியாவார். இவர் மங்களத்தின் வடிவம் ஆவார். சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஈசானமும் ஒன்று. இவரின் துணைவியார் ஈசானயஜாயை ஆவார். இவர் எருதினை வாகனமாகக் கொண்டவர். திரிசூலம் இவரின் ஆயுதமாகும். இவரை வழிபட அறிவும், ஞானமும் கிடைக்கும். நாமும் அஷ்டதிக் பாலகர்களை வழிபட்டு எல்லா வளமும் பெறுவோம்.

    • இங்குள்ள கடல் தீர்த்தத்தில் “கங்கை பூஜை” நடைபெறும்.
    • திருச்செந்தூர் முருகனும் புத்தாடை அணிகிறார்.

    திருச்செந்தூரில் தினமும் செந்திலாண்டவரை, உச்சிக்காலத்தில் கங்காதேவி வழிபடுவதாக ஐதீகம்.

    இந்த வேளையில் இங்குள்ள கடல் தீர்த்தத்தில் "கங்கை பூஜை" நடைபெறும்.

    முருகனுக்கு பூஜை முடிந்ததும், ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் நைவேத்திய அன்னத்தை எடுத்துக் கொண்டு, மேள தாளம் முழங்க கடற்கரைக்குச் செல்லும் அர்ச்சகர்கள், அன்னத்தை கடலில் கரைத்து விட்டு சந்நிதி திரும்புபவர்.

    கடல் தீர்த்தத்தில் ஆவிர்பவித்திருக்கும் கங்காதேவிக்கு, முருகப் பெருமானே இவ்வாறு பிரசாதம் கொடுத்து அனுப்புவதாகச் சொல்கின்றனர்.

    தீபாவளிப் பண்டிகை அன்று நாம் புத்தாடை அணிந்து கொண்டாடுவது போல், திருச்செந்தூர் முருகனும் புத்தாடை அணிகிறார்.

    தீபாவளி அன்று காலையில், முருகனுக்கும், கோவிலில் உள்ள அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் சந்தனக் காப்பு இடுவார்கள்.

    ஸ்ரீ கிருஷ்ணர், நரகாசுரனை அழித்த நாளில் உடலும் உள்ளமும் குளிர வேண்டும் என்பதாலும், தீபாவளிக்கு மறுநாள் சஷ்டி விரதம் துவங்குவதாலும், இவ்வாறு சந்தனக் காப்பு இடுகிறார்கள்.

    இந்த தினத்தில் முருகன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கான புத்தாடைகளை, வெள்ளிப் பல்லக்கில் ஊர்வலமாக எடுத்துச் சென்று அணிவிக்கிறார்கள்.

    திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்த முருகனுக்கு,

    இந்திரன் தன் மகள் தெய்வானையை திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொடுத்தார்.

    திருச்செந்தூர், தன் மருமகன் போரிட்டு வென்ற தலம் என்பதால் இங்கு இந்திரனே, தீபாவளிக்கு புத்தாடை சீர் கொடுப்பதாக ஐதீகம்.

    • குகைக்குள்ளே ஏற்கனவே இன்னும் பலர் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.
    • தேவசேனா தேவியைத் திருமணம் செய்த நாள் பங்குனி உத்திர நன்னாள்.

    திருமுருகன் சீரலை வாயில் சூரபத்மனையும், அசுரர்களையும் அழித்துத் தேவர்களின் துயரைத் துடைத்தார்.

    துயர் நீங்கப் பெற்ற தேவர் தலைவன் இந்திரன் அதற்கு நன்றி செலுத்தும் வகையில் தன் புதல்வியாகிய தேவசேனா தேவியை முருகப் பெருமானுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பினான்.

    திருமாலின் இரு கண்களிலிருந்து தோன்றிய அமிர்தவல்லி, சுந்தரவல்லி என்ற இரு பெண்கள், திருமுருகனது அழகில் மயங்கி அவனையே அடைய வேண்டுமெனத் தவமிருந்தார்கள்.

    அவர்களுள் அமிர்தவல்லி இந்திரனின் மகளாக தேவசேனை என்ற பெயரில் வளர்ந்தாள்.

    தேவர்கள் சேனைக்கு அதிபதியான செந்தமிழ் முருகன் தேவசேனையைத் திருப்பரங்குன்றத்தில் வைத்துத் திருமணம் முடித்துக் கொண்டார்.

    தேவசேனைக்குத் திருமணம் நடந்த இத்திருத்தலத்தில் மற்றொரு அற்புதத்தையும் நிகழ்த்திக் காட்டியிருக்கின்றான் திருமுருகன்.

    பெரும்புலவர் நக்கீரர் தலயாத்திரை செய்து வருகின்ற போது திருப்பரங்குன்றத்தில் ஒரு குளக்கரையில் உட்கார்ந்து நித்ய பூஜா அனுஷ்டானங்களை செய்து கொண்டிருந்தார்.

    குளக் கரையிலிருந்த அரசமரத்து இலை ஒன்று உதிர்ந்து பாதி நீரிலும் பாதி தரையிலும் விழுந்தது.

    நீரில் விழுந்த பகுதி மீனாகவும், தரையில் விபந்த பகுதி பறவையாகவும் மாறின.

    ஒன்றையன்று இழுத்துக் கொள்ள ஆரம்பித்தன.

    இந்த சலசலப்பால் நக்கீரனது அனுஷ்டானம் கலைந்து போயிற்று.

    உடனே கற்கிமுகி என்ற பூதம் நக்கீரரை மலைக்குகை ஒன்றில் சிறை வைத்தது.

    குகைக்குள்ளே ஏற்கனவே இன்னும் பலர் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

    ஆயிரம் பேர் சிறையில் சேரக் காத்திருந்த கற்கிமுகி ஒருசேர அத்தனை பேரையும் விழுங்கிப் பசியாறக் காத்திருந்ததாம்.

    நக்கீரர் திருமுருகனை மனத்திலிருந்து திருமுருகாற்றுப் படையைப் பாடியவுடன் அக்குகையைப் பிளந்து அத்துணை பேருக்கும் விடுதலை நல்கி, பூதத்தையும் திருமுருகன் அழித்ததாகத் திருமுருகாற்றுப்படையில் பதிவு செய்துள்ளார் நக்கீரர்.

    திருப்பரங்குன்றத்துப் பதியிலே நடந்த தேவசேனா தேவியின் திருமணத்திற்கு பிரம்மா திருமணச் சடங்குகளை முன்னின்று நடத்தவும், சூரியனும், சந்திரனும், ரத்தின தீபங்கள் தாங்கி நிற்கவும்,

    உமையம்மையும், தென்னவர்கோன் பரமேசுவரனும் இணையாக நின்று வாழ்த்திக் களிக்கவும், ஆயிரங் கண்ணுடைய இந்திரன் தகப்பனார் கடமையாக தாரை நீர் வார்த்துக் கொடுக்கவும், தேவியைக் கரம் பிடித்தான் பரகுன்றத்துக் குமரன்.

    திருமுருகன் திருப்பரங்குன்றத்தில் தேவசேனா தேவியைத் திருமணம் செய்த நாள் பங்குனி உத்திர நன்னாள்.

    எனவேதான் இவ்விழாவைப் பெரிய திருவிழாவாக, பிரமோத்சவமாக இன்றும் கொண்டாடி மகிழ்கின்றனர்.

    • மூலவருக்கு அபிஷேகம் செய்வது கிடையாது. எண்ணெய், புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது.
    • வேலவனின் கையில் உள்ள வேலுக்கு மட்டுமே அபிஷேகம் நடக்கிறது.

    திருப்பரங்குன்றம் முதல் படைவீடு

    தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமான் குன்றிருக்கும் இடமெல்லாம் வீற்றிருந்தாலும், அவரது படைவீடுகளாக 6 தலங்கள் சிறப்பித்து கூறப்படுகின்றன.

    திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் கிழக்கு பக்கம் சரவணப்பொய்கை அமைந்துள்ளது. இந்த தீர்த்தம் முருகனின் கைவேலினால் உண்டானது என்றும் இந்த தீர்த்தத்தைக் கண்டாலும், அதில் நீராடினாலும் பாவங்கள் நீங்கிவிடும், வேண்டுதல் சட்டென்று நிறைவேறும் என்றும் சொல்கிறார்கள்.

    இக்கோவில் கருவறை மற்ற கோவில்களைப் போன்று அல்லாமல் பெரிய அளவில் ஐந்து தெய்வத் திரு உருவங்களின் இருப்பிடமாக காணப்படுகிறது. மூலவரான முருகப்பெருமானுக்கு என தனியாக கருவறை இல்லாமல், பாறையில் இடது புறம் முருகப் பெருமான் தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் காட்சி தர... அவர்களை அடுத்து, பக்கத்தில் பிற தெய்வ உருவங்கள் உள்ளன. அதாவது, முருகப் பெருமானின் திருமணக்கோலத்தை அனைத்து தெய்வங்களும் காணுமாறு இங்குள்ள கருவறை அமைந்துள்ளது.

    கருவறையின் இடது புறத்தில் கிழக்கு நோக்கியவாறு மலையைக் குடைந்து சத்திய கிரீசுவரர் என்னும் பெயர் கொண்டவராக சிவபெருமான் லிங்கத் திருமேனியுடன் அருள் பாலிக்கிறார்.

    இக்கோவில் மூலவரை, பாறையினை குடைந்து உருவாக்கி உள்ளதால், அதாவது தனியாக சிலை வடித்து வைக்காத காரணத்தால், இந்த மூலவருக்கு அபிஷேகம் செய்வது கிடையாது. எண்ணெய், புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது. அதேநேரம், இந்த வேலவனின் கையில் உள்ள வேலுக்கு மட்டுமே அபிஷேகம் உள்ளிட்ட மற்ற எல்லாவற்றையும் செய்கிறார்கள்.

    கருவறையில் முருகப் பெருமான் காலடியில் யானை ஒன்று காணப்படுகிறது. இது, இந்திரனுடைய ஐராவதம் என்றும், இந்திரனின் மகள் என்பதால் தெய்வயானையைப் பிரிய மனமில்லாது முருகனுக்குத் தொண்டாற்ற அது வந்தது என்றும் கூறுகிறார்கள்.

    கருவறையில் முருகப் பெருமானை வழிபட்டுவிட்டு, இடது புறம் உள்ள வாயில் வழியாக கீழே இறங்கினால் கீழ் பகுதியில் குகைக்கோவில் ஒன்று அமைந்துள்ளது. அங்கே அன்னபூரணி, உலக உயிர்களை உணவு அளித்து காக்கும் தெய்வமாக காட்சித் தருகிறாள்.

    கோவில் சிறப்புகள்:

    * முருகப் பெருமான் தெய்வயானையை திருமணம் செய்து கொண்ட தலம் இது என்பதால், இந்த தலத்தில் திருமணம் செய்து கொள்வது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    * இக்கோவிலில் மற்ற கோவில்களைப் போன்று சுற்றுப் பிரகாரங்கள் கிடையாது. மூலவரை தரிசிக்க வேண்டும் என்றால் படிக்கட்டுகள் வழியாக மேலே... மேலே... என்று ஏறிக்கொண்டே போக வேண்டும். அத்துடன், கருவறை, மூலவர், உற்சவர் ஆகியோரை வலம் வருவதும் இங்கு முடியாது.

    * இக்கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் செய்தால் செல்வம் பெருகி வாழ்வில் வளம் சேரும் என்பது நம்பிக்கை. அதனால், செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானை நினைந்து வீட்டில் தயிர் சாதம் செய்து இங்கே கொண்டு வந்து ஏழை மக்களுக்கு வழங்குவதைப் பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    விழாக்கள் விவரம்:

    தைப்பூசம், கார்த்திகைத் திருநாள், தெய்வயானையை மணந்து கொண்ட பங்குனி உத்திர நாள் ஆகியவை சிறப்பான விழாக்களாக இங்க கொண்டாடப்படுகின்றன.

    மேலும், இந்த குன்றத்து முருகப் பெருமான் உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவில் அன்னை மீனாட்சி திருக்கல்யாணத்தை காண மதுரை சென்று திரும்புவதும் முக்கிய விழாவாகும்.

    திருக்கார்த்திகை தீபம் அன்று இங்குள்ள குன்றின் உச்சியில் ஏற்றப்படும் பிரம்மாண்ட தீபத்தை சுற்று வட்டார மக்கள் கண்டு தரிசனம் செய்வது மறக்க முடியாத நிகழ்ச்சியாகும். மதுரை மாநகர் மக்களும் இந்த கார்த்திகை தீபத்தை தரிசனம் செய்யலாம்.

    • மழைக்கு வருணன் தலைவன், அவனுக்கு இந்திரன் தலைவன், அதனால் அவனை வழிபடுகிறோம் என்றனர் ஆயர்கள்.
    • கண்ணன் இது இந்திரன் செயல் என்று அறிந்து கோவர்த்தனை மலையையே குடையாகப் பிடித்தான்.

    கிருஷ்ணருக்கும், அவரது கூட்டாளிகளுக்கும் கோவர்த்தன கிரி மேய்ச்சல் நிலமாக பயன்பட்டது. அதன் சாரலிலே அவர்கள் நித்தம் திரிந்து விளையாடினர். ஒரு நாள் ஆயர்கள் கூட்டம் கூட்டமாய் திரண்டு சென்று கொண்டிருந்தனர்.

    எங்கே போகிறீர்கள்? என்று கிருஷ்ணர் கேட்க, பொங்கல் இட, இந்திரனுக்கு வழிபாடு செய்ய செல்கிறோம் என்றனர்.

    ஞாயிறு, திங்கள், மழைநீர் இவற்றையே வழிபடுவது வழக்கம். இவற்றை விட்டுவிட்டு இந்திரனை வழிபடுவது புதுமையாய் இருக்கிறது என்றான் கண்ணன்.

    மழைக்கு வருணன் தலைவன், அவனுக்கு இந்திரன் தலைவன், அதனால் அவனை வழிபடுகிறோம் என்றனர் ஆயர்கள்.

    பசுவே நாம் வழிபட வேண்டிய தெய்வம், செய்யும் தொழிலே தெய்வம் என்பது தெரியாதா என்று கேட்டான் கண்ணன்.

    அவர்கள் அவன் சொல்லியதை ஏற்றுக்கொண்டனர். எந்தத்தெய்வத்தின் பெயரும் கூறாமல் பொங்கல் இட்டுத்தம் பசுக்களை மதித்து வழிபட்டனர். இந்திரன் இதனை அறிந்து கோபம் கொண்டான். ஆயர்களை அடக்குவதற்காகக் கடுமையாக மழை தொடர்ந்து பெய்ய செய்தான். இடியும் மின்னலும் உடன் சேர்ந்தன. ஆயர்களும் பசுக்களும் தவிப்புக்குள்ளானார்கள்.

    கண்ணன் இது இந்திரன் செயல் என்று அறிந்து கோவர்த்தனை மலையையே குடையாகப் பிடித்தான். அதன் நிழலில் கன்றுகளும், பசுக்களும், இடையர் சிறுவர்களும், பெரியோர்களும் தஞ்சம் அடைந்தனர்.

    கண்ணனின் பேராற்றலைக் கண்டு வியந்த இந்திரன் தரைக்கு வந்து கண்ணனை வணங்கித்தன்னை மன்னிக்கும்படி வேண்டினான். கண்ணனை அவன்தன் தம்பியாக ஏற்றுக்கொண்டான். அதனால், கண்ணனுக்கு உப இந்திரன் என்ற பெயர் வழங்கலாயிற்று, பசுக்களைக் காத்தமையின் கோவிந்தன் என்னும் பெயரும் நிலைத்துவிட்டது. துன்பம் வரும்போது அனைவரும் கோவிந்தன் பெயரைச் சொல்லி அழைப்பதும் வழக்கமாகி விட்டது.

    ×