search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Sivan Parvathi"

  • ஒருமுறை நாரதர் ஒரு மாம்பழத்தை சிவபெருமானுக்குக் கொடுத்தார்.
  • அது முதல், ஆவணி சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக்கூடாது என்ற மரபு தோன்றியது.

  ஒருமுறை நாரதர் ஒரு மாம்பழத்தை சிவபெருமானுக்குக் கொடுத்தார்.

  உடனே சிவபெருமான் அந்த மாம்பழத்தை தம் மகன்களில் யாருக்கு கொடுப்பது என பிரம்மனிடம் யோசனை கேட்டார்.

  உடனே பிரம்மன் முருகப்பெருமானுக்கு அளிக்கலாம் என்று சொல்ல அதனைக் கேட்ட விநாயகர் கோபம் கொண்டார்.

  அந்த நிகழ்ச்சிகளைக் கண்டு சந்திரன் சிரித்தான். இதனால் விநாயகருக்கு மேலும் கோபம் வந்து விட்டது.

  "பெரியோர் முன்னிலையில் என்னை சிரித்து கேலி செய்த உனது ஒளி உலகில் பரவாதிருக்கக் கடவது" என சபித்தார்.

  பிறகு அவர் அதற்கொரு பரிகாரமும் சொன்னார்.

  ஆவணி சதுர்த்தியன்று சந்திரனைப் பாராமல் தன்னை சிறப்பாக பூஜிக்கின்றவர்கள் தம் அருளை பூரணமாகப் பெற்றுக் கொள்ளலாம் எனக்கூறி அருளினார்.

  அது முதல், ஆவணி சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக்கூடாது என்ற மரபு தோன்றியது.

  • குகைக்குள்ளே ஏற்கனவே இன்னும் பலர் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.
  • தேவசேனா தேவியைத் திருமணம் செய்த நாள் பங்குனி உத்திர நன்னாள்.

  திருமுருகன் சீரலை வாயில் சூரபத்மனையும், அசுரர்களையும் அழித்துத் தேவர்களின் துயரைத் துடைத்தார்.

  துயர் நீங்கப் பெற்ற தேவர் தலைவன் இந்திரன் அதற்கு நன்றி செலுத்தும் வகையில் தன் புதல்வியாகிய தேவசேனா தேவியை முருகப் பெருமானுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பினான்.

  திருமாலின் இரு கண்களிலிருந்து தோன்றிய அமிர்தவல்லி, சுந்தரவல்லி என்ற இரு பெண்கள், திருமுருகனது அழகில் மயங்கி அவனையே அடைய வேண்டுமெனத் தவமிருந்தார்கள்.

  அவர்களுள் அமிர்தவல்லி இந்திரனின் மகளாக தேவசேனை என்ற பெயரில் வளர்ந்தாள்.

  தேவர்கள் சேனைக்கு அதிபதியான செந்தமிழ் முருகன் தேவசேனையைத் திருப்பரங்குன்றத்தில் வைத்துத் திருமணம் முடித்துக் கொண்டார்.

  தேவசேனைக்குத் திருமணம் நடந்த இத்திருத்தலத்தில் மற்றொரு அற்புதத்தையும் நிகழ்த்திக் காட்டியிருக்கின்றான் திருமுருகன்.

  பெரும்புலவர் நக்கீரர் தலயாத்திரை செய்து வருகின்ற போது திருப்பரங்குன்றத்தில் ஒரு குளக்கரையில் உட்கார்ந்து நித்ய பூஜா அனுஷ்டானங்களை செய்து கொண்டிருந்தார்.

  குளக் கரையிலிருந்த அரசமரத்து இலை ஒன்று உதிர்ந்து பாதி நீரிலும் பாதி தரையிலும் விழுந்தது.

  நீரில் விழுந்த பகுதி மீனாகவும், தரையில் விபந்த பகுதி பறவையாகவும் மாறின.

  ஒன்றையன்று இழுத்துக் கொள்ள ஆரம்பித்தன.

  இந்த சலசலப்பால் நக்கீரனது அனுஷ்டானம் கலைந்து போயிற்று.

  உடனே கற்கிமுகி என்ற பூதம் நக்கீரரை மலைக்குகை ஒன்றில் சிறை வைத்தது.

  குகைக்குள்ளே ஏற்கனவே இன்னும் பலர் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

  ஆயிரம் பேர் சிறையில் சேரக் காத்திருந்த கற்கிமுகி ஒருசேர அத்தனை பேரையும் விழுங்கிப் பசியாறக் காத்திருந்ததாம்.

  நக்கீரர் திருமுருகனை மனத்திலிருந்து திருமுருகாற்றுப் படையைப் பாடியவுடன் அக்குகையைப் பிளந்து அத்துணை பேருக்கும் விடுதலை நல்கி, பூதத்தையும் திருமுருகன் அழித்ததாகத் திருமுருகாற்றுப்படையில் பதிவு செய்துள்ளார் நக்கீரர்.

  திருப்பரங்குன்றத்துப் பதியிலே நடந்த தேவசேனா தேவியின் திருமணத்திற்கு பிரம்மா திருமணச் சடங்குகளை முன்னின்று நடத்தவும், சூரியனும், சந்திரனும், ரத்தின தீபங்கள் தாங்கி நிற்கவும்,

  உமையம்மையும், தென்னவர்கோன் பரமேசுவரனும் இணையாக நின்று வாழ்த்திக் களிக்கவும், ஆயிரங் கண்ணுடைய இந்திரன் தகப்பனார் கடமையாக தாரை நீர் வார்த்துக் கொடுக்கவும், தேவியைக் கரம் பிடித்தான் பரகுன்றத்துக் குமரன்.

  திருமுருகன் திருப்பரங்குன்றத்தில் தேவசேனா தேவியைத் திருமணம் செய்த நாள் பங்குனி உத்திர நன்னாள்.

  எனவேதான் இவ்விழாவைப் பெரிய திருவிழாவாக, பிரமோத்சவமாக இன்றும் கொண்டாடி மகிழ்கின்றனர்.

  • திருப்பரங்குன்றத்தின் அடிவாரத்தில் சரவணப் பொய்கை அமைந்துள்ளது.
  • பொய்கை முருகப் பெருமான் திருக்கரத்து வேலினால் உண்டாக்கப்பட்டது என்று கூறுவர்.

  பொய்கையில் வழிந்தோடும் நீர் நிலைகள் அருவியும் சுனையும் மிகுந்து இயற்கைப் பொலிவோடு அன்றைய திருப்பரங்குன்றம் விளங்கியது.

  திருப்பரங்குன்றத்தில் கோவில் கொண்டு எழுந்தருளியுள்ள குமரப் பெருமான் போகத்துக்குரிய மாலையாகிய கடம்பினையும், வீரத்திற்குரிய மாலையாகிய காந்தளையும் அணிந்து விளங்குவதாகத் திருமுருகாற்றுப் படையில் ஒரு செய்தி வருகிறது.

  சீரலைவாய் போரில் திருமுருகன் சூரபத்மனை அழித்து ஆட்கொண்டு "பணிப்பகை மயிலும் சேவற் பதாகையும்" போலே கந்தவேளின் வாகனமான மயிலாகவும் கொடியில் நிமிர்ந்து நிற்கும் சேவலாகவும் கொண்டு, தனது தொண்டனாக ஏற்றுக் கொண்டான்.

  பிறகு திருச்செந்தூரிலிருந்து திருப்பரங்குன்றம் வந்தமர்ந்தான் குமரன்.

  குன்றின் வட பாகத்தில் குமரப் பெருமானது திருக்கோவில் அமைந்துள்ளது.

  திருக்கோவிலின் நுழைவு வாயில் உள்ள ஆஸ்தான மண்டபம் சுந்தர பாண்டியன் கட்டியது.

  அறுபத்தாறு கற் தூண்களைக் கொண்ட பெரிய மண்டபம்.

  மண்டபத்தின் தூண்களில் நுண்ணிய வேலைப்பாடு அமைந்த யாளிகள் & குதிரை வீரர்கள் & சிவனாரின் திரிபுரத கற்பக விநாயகருக்கருகில் உள்ள குடைவரைக் கோவிலில் சத்யகிரீசுவரர் என்னும் சிவபெருமான் சிவலிங்கத் திருமேனியாகத் திருக்காட்சி தருகின்றனார்.

  இக்கோவிலின் உட்புறச் சுவர்களில் சோமாஸ்கந்தரின் உருவமும், வெளிப்புறச் சுவரில் சிவபெருமான் பார்வதி உருவங்களும் காட்சியளிக்கின்றன.

  அர்த்த மண்டபத்தின் கிழக்குப் பக்கத்தில் உள்ள குகைக் கோவிலில் அன்னபூரண தேவி தன் பரிவாரங்களுடன் காட்சி தருகின்றாள்.

  திருமணக் கோலம் கொண்ட திருமுருகன் உயர்ந்த இடத்தில் எல்லா தெய்வங்களும் புடைசூழத் திருக்காட்சியளிப்பது ஓர் அற்புதக் காட்சி.

  அந்த அருட்காட்சியைக் காண ஆயிரம் கண்கள் போதாது.

  திருப்பரங்குன்றத்தின் அடிவாரத்தின் கீழ்த்திசையில் சரவணப் பொய்கை அமைந்துள்ளது.

  இந்தப் பொய்கை முருகப் பெருமான் திருக்கரத்து வேலினால் உண்டாக்கப்பட்டது என்று கூறுவர்.

  திருமுருகன் திருப்பரங்குன்றம் வந்தடைந்த போது தேவதச்சனை அழைத்துத் தனக்கொரு திருக்கோவில் அமைத்துக் கொடுக்க செய்து அங்கே இருந்து அருளாட்சி செய்வதாக ஒரு செய்தியும் உண்டு.

  மலைச்சுவரோடு பதிந்திருக்கிற படியால் மூலவருக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை.

  திருப்பரங்குன்றத்து நாயகன் திருக்கரத்தில் உள்ள வேல் படைக்கு அபிஷேகமும் முருகனுக்கு புனுகும், எண்ணெய்க் காப்பும்தான் சாத்துபடி செய்யப்படுகன்றன.

  • அவனது துன்பங்களை சகிக்க முடியாத தேவர்கள் சிவபெருமானை சரணடைந்தனர்.
  • அதை பார்வதி தேவியாலும் தாங்க முடியவில்லை.

  சூரபத்மன் கதை

  காசிபர் என்ற முனிவருக்கும், மாயை என்ற அசுரக் குலப்பெண்ணிற்கும் பிறந்தவர் சூரபத்மன்.

  தன் தாயின் உபதேசப்படி சூரபத்மன் சிவபெருமானை நோக்கிக் கடும் தவம் புரிந்தான். அப்படியும் சிவபெருமான் காட்சி அளிக்காததால் உயிரை மாய்த்துக் கொள்கிறான்.

  சூரபத்மனின் தவ வலிமையையும், தியாகத்தையும் மெச்சிய சிவபெருமான் சூரபத்மன் வேண்டியபடி அவனுக்கு தேவர்கள் அனைவரையும் வெல்லும் படையாற்றலும், படைக்கலங்களும், நினைத்த உடன் எல்லா இடங்களுக்கும் செல்லும் வல்லமையையும் அளித்தார்.

  இதில் உச்சக்கட்டமாக சிவபெருமானைத் தவிர வேறு எவராலும் தன்னை அழிக்க முடியாது என்ற வரத்தையும் பெற்றான்.

  இப்படி மிகவலுவான வரங்களைப் பெற்ற சூரபத்மனால் அமைதியாக இருக்க முடியவில்லை.

  தேவர்களுக்குப் பல வழிகளிலும் துன்பத்தைக் கொடுத்தான். அவனது துன்பங்களை சகிக்க முடியாத தேவர்கள் வரம் கொடுத்த சிவபெருமானை சரணடைந்தனர்.

  இந்த அசுரனை ஒழிக்க ஒரு சேனாதிபதி வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர். சிவபெருமானும் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க தனது ஸத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம், ஈசானம், அகோரம் என்ற ஐந்து முகங்களோடு ஞானிகளுக்கு மட்டும் புலப்படும் அதோமுகத்தையும் கொண்டு திகழ்ந்தார்.

  அப்போது ஒவ்வொரு திருமுகத்திலும் உள்ள நெற்றிக்கண்ணிலிருந்து ஜோதிப்பொறி தோன்றியது. அதை பார்வதி தேவியாலும் தாங்க முடியாததால் வாயு பகவான் ஏந்திச் சென்று கங்கையில் விழச் செய்தார்.

  கங்கையாலும் அதைத் தாங்க முடியாததால் அக்னி பவான் அதைத் தானே எடுத்து சரவணப் பொய்கையில் தாமரை மலர்களில் சேர்த்தார். அவை ஆறு குழந்தைகளாகத் தோன்றின.

  பார்வதி தேவி பாசத்துடன் அக்குழந்தைகளை ஒன்றாக வாரிச் சேர்த்து அணைக்கவே ஆறுமுகங்களுடனும், பன்னிரண்டு கைகளுடனும் முருகப் பெருமான் தோன்றினார். அவர் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டார்.

  சிவபெருமான் முருகனுக்கு அசுரனுடன் போர் செய்ய சேனைத் தளபதியாக வீரவாகுவையும், மற்ற சிவகணங்களையும் சிருஷ்டித்தார். அம்பிகையும் தனது சக்தி எல்லாவற்றையும் ஒன்று திரட்டி ஒரு வேலாயுதத்தை முருகனிடம் கொடுத்தாள்.

  சகல சக்திகளுடனும், பரிவாரங்களுடனும் முருகன் அசுரரர்களை அழிக்க புறப்பட்டுச் சென்றார். முதலில் சூரபத்மனின் சகோதரர்களான கஜமுகாசுரன், சிம்மமுகாசுரன், அவன் மகன் பத்மகேசரி ஆகியோரை அழித்தார்.

  பின்னர் தன் படைகளுடன் திருச்செந்தூர் வந்து அங்கு விஸ்வகர்மாவினால் அமைக்கப்பட்ட ஆலயத்தில் தங்கி தேவகுருவாகிய வியாழ பகவானால் பூஜிக்கப்பட்டார். வியாழ பகவானால் பூஜிக்கப்பட்ட காரணத்தால் திருச்செந்தூர் புகழ்பெற்ற குரு தலமாக விளங்குகிறது.

  இங்கிருந்து முருகப் பெருமான் வீரவாகு தேவரை சூரபத்மனிடம் தூது அனுப்பி நல்ல அறிவுரைகளைக் கூறச் சொன்னார். ஆனால் வீரவாகுவின் பேச்சினை சூரபத்மன் கேட்கவில்லை.

  அவன் மீது போர்தொடுத்தார். பெரும் யுத்தகம் ஆரம்பமானது.

  முருகப்பெருமானின் பூதசேனைகளும், சூரனின் அசுர சேனைகளும் தொடர்ந்து யுத்தம் செய்தனர். சூரபத்மனின் பிள்ளைகளான பானுகோபன், இரணியன், அக்னிமுகம் மற்றும் தம்பியான சிங்கமுகாசுரன் ஆகியோர் முருகப்பெருமானிடம் போரிட்டு மடிந்தனர்.

  கடைசியாக திருச்செந்தூரில் ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் சூரனை அழித்து தன் அவதார காரணத்தை முருகப்பெருமான் முற்றுப்பெற செய்தார். இதுவே கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

  உண்மையில் முருகன் சூரனை சம்ஹாரம் செய்யவில்லை. சூரன் முருகனை சரணாகதி அடைந்தான். அவன் வேண்டுகோளை ஏற்று அவனை இரு கூறாக்கி சேவலாகவும், மயிலாகவும் மாற்றினார்.

  தானே அவைகளை கொடியாகவும், வாகனமாகவும் வைத்துக் கொண்டு அவனை தன்னுடனேயே சேர்த்துக் கொண்டார். இப்படி பகைவனுக்கும் அருளியது கந்தன் கருணை எனப்படுகிறது.

  இப்படி சேவற்கொடியோன் ஆன மயில்வாகனனை வணங்கும்போது பகவானுடைய மயில், வேல், சேவல், கடல், கடலை ஒட்டிய பகுதி ஆகியவற்றையும் நாம் வணங்க வேண்டும்.

  • முருகப் பெருமான் அவதாரமாக உதித்தவர். பிறந்தவர் இல்லை.
  • முருகன் நமக்கு வீடு பேற்றை அளிக்க வல்லவன்.

  ஆறுமுகக் கடவுள் முருகப் பெருமான்!

  தமிழ்க் கடவுள் என்று போற்றப்படும் முருகப்பெருமான், அழகு, வீரம், ஞானம் ஒருங்கே அமையப் பெற்றவர்.

  முருகப் பெருமான் அவதாரமாக உதித்தவர். பிறந்தவர் இல்லை.

  சத்து, சித்து, ஆனந்தம் சச்சிதானந்தமாக முருகப்பெருமான் கைலாச மலையில் வீற்றுள்ளார். முருகனை வணங்கினால் மும்மூர்த்திகளை வணங்கிய பலன் கிடைக்கும்.

  இந்தப் பிறவியில் கைமேல் பலன் தருவது முருகன் திருவருள். ஞானவடிவான முருகனை நினைத்தால் ஞானம் கைகூடும் கவலைகள் நீங்கும். வினைகளும், பயமும் நீங்கும்.

  மலையும், மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி எனப்படும். இக்குறிஞ்சி நிலக்கடவுளாக முருகன் கருதப்படுகிறான். இதன் காரணமாக "குன்று தோறாடும் குமரன்" என்று முருகனை வழிபடுகிறோம்.

  முருகன் என்ற சொல்லுக்கு அழகு, இளமை, மணம், கடவுள் தன்மை என்ற பல பொருள் உண்டு. முருகன் வடிவம் தமிழ் வடிவமாக அமைந்தது.

  தமிழ்மொழியில் மெய்யெழுத்துகள் கண்களாகவும், வல்லினம், மெல்லினம், இடையினம் என வழங்கும் எழுத்துக்கள் ஆறு திருமுகங்களாகவும், அகர முதலிய எழுத்துகள் பன்னிரண்டும் தோள்காளாகவும், ஆயுத எழுத்து ஞான வேலாகவும் விளங்குகிறது.

  முருகன் சிவந்த மேனியும், அபயவரதத்துடன் கூடிய கரங்களும், மார்பில் சாய்ந்த வேலும், திருவடியில் மயிலும், தாமரை ஏந்திய கரத்துடன் வள்ளிதேவி வலது பக்கத்திலும், நீலோத்பலம் ஏந்திய கரத்துடன் தெய்வானை இடது பக்கத்திலும் அமைய காட்சித் தருவார்.

  முருகப்பெருமானை உள்ளன்புடன் உபாசனை செய்யும் பக்தர்களின் வாழ்வு என்றும் மலர்ந்திருக்கும்.

  சிவபெருமானின் ஈசானம், சத்யோஜாதம், வாமேதேவம், அகோரம், தற்புருடம் என்ற ஐந்து முகங்களுடன் அதோமுகம் சேர ஆறுமுகங்களாயின.

  எப்பொழுதெல்லாம் நம் உள்ளத்தில் பயம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் முருகனை நினைத்தால் ஆறுமுகம் தோன்றி நம் அச்சத்தைப் போக்கும்.

  முருகனின் ஆறுமுகத்தின் செய்கைகள்

  ஏறுமயில் ஏறி விளையாடுவது ஒரு முகம்.

  அடியவர்களின் வினைகளைத் தீர்ப்பது ஒருமுகம்.

  சூரபத்மனை வதைத்து அழியாத பேரின்ப வாழ்வினைத் தருவது ஒருமுகம்.

  உயிர்களின் மன இருளைப் போக்கி ஒளிபடர்வது ஒருமுகம்.

  வள்ளி, தெய்வானைக்கு மோகம் அளிப்பது ஒருமுகம்.

  வேத, ஆகமங்களை முற்றுப் பெறச் செய்வது ஒரு முகம்.

  முருகன் நமக்கு வீடு பேற்றை அளிக்க வல்லவன். ஆனால் இந்த வீடு பேற்றை நாம் பெறுவதை தடுக்கும் வகையில் நம்முள் ஆறு பகைவர்கள் உள்ளனர். காம, குரோத, லோப, மோக, மத, மாற்சரியங்கள் என்ற ஆறும்தான் அவை.

  ஆறுமுகனுக்குரிய ஆறெழுத்தான "சரவணபவ" என்பதை கூறியபடி ஆறு படை வீடுகளுக்கும் சென்று நல்ல எண்ணங்களுடன் நம்மிடம் உள்ள ஆறு பகைவர்களும் நம்மை விட்டு நீங்க வேண்டும் என்று வேண்டி வணங்க வேண்டும்.

  இந்த ஆறு பகைவர்களின் உருவகமாகத்தான் சூரபத்மன் கருதப்படுகிறான். அவனை சம்காரம் செய்ததன் மூலம் முருகப்பெருமான் அவன் ஆணவத்தை ஒழித்ததாக சொல்வார்கள்.

  சூரபத்மன் கதையை அடுத்த பதிவில் காணலாம்.

  ×