search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சூரபத்மன் கதை!
    X

    சூரபத்மன் கதை!

    • அவனது துன்பங்களை சகிக்க முடியாத தேவர்கள் சிவபெருமானை சரணடைந்தனர்.
    • அதை பார்வதி தேவியாலும் தாங்க முடியவில்லை.

    சூரபத்மன் கதை

    காசிபர் என்ற முனிவருக்கும், மாயை என்ற அசுரக் குலப்பெண்ணிற்கும் பிறந்தவர் சூரபத்மன்.

    தன் தாயின் உபதேசப்படி சூரபத்மன் சிவபெருமானை நோக்கிக் கடும் தவம் புரிந்தான். அப்படியும் சிவபெருமான் காட்சி அளிக்காததால் உயிரை மாய்த்துக் கொள்கிறான்.

    சூரபத்மனின் தவ வலிமையையும், தியாகத்தையும் மெச்சிய சிவபெருமான் சூரபத்மன் வேண்டியபடி அவனுக்கு தேவர்கள் அனைவரையும் வெல்லும் படையாற்றலும், படைக்கலங்களும், நினைத்த உடன் எல்லா இடங்களுக்கும் செல்லும் வல்லமையையும் அளித்தார்.

    இதில் உச்சக்கட்டமாக சிவபெருமானைத் தவிர வேறு எவராலும் தன்னை அழிக்க முடியாது என்ற வரத்தையும் பெற்றான்.

    இப்படி மிகவலுவான வரங்களைப் பெற்ற சூரபத்மனால் அமைதியாக இருக்க முடியவில்லை.

    தேவர்களுக்குப் பல வழிகளிலும் துன்பத்தைக் கொடுத்தான். அவனது துன்பங்களை சகிக்க முடியாத தேவர்கள் வரம் கொடுத்த சிவபெருமானை சரணடைந்தனர்.

    இந்த அசுரனை ஒழிக்க ஒரு சேனாதிபதி வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர். சிவபெருமானும் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க தனது ஸத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம், ஈசானம், அகோரம் என்ற ஐந்து முகங்களோடு ஞானிகளுக்கு மட்டும் புலப்படும் அதோமுகத்தையும் கொண்டு திகழ்ந்தார்.

    அப்போது ஒவ்வொரு திருமுகத்திலும் உள்ள நெற்றிக்கண்ணிலிருந்து ஜோதிப்பொறி தோன்றியது. அதை பார்வதி தேவியாலும் தாங்க முடியாததால் வாயு பகவான் ஏந்திச் சென்று கங்கையில் விழச் செய்தார்.

    கங்கையாலும் அதைத் தாங்க முடியாததால் அக்னி பவான் அதைத் தானே எடுத்து சரவணப் பொய்கையில் தாமரை மலர்களில் சேர்த்தார். அவை ஆறு குழந்தைகளாகத் தோன்றின.

    பார்வதி தேவி பாசத்துடன் அக்குழந்தைகளை ஒன்றாக வாரிச் சேர்த்து அணைக்கவே ஆறுமுகங்களுடனும், பன்னிரண்டு கைகளுடனும் முருகப் பெருமான் தோன்றினார். அவர் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டார்.

    சிவபெருமான் முருகனுக்கு அசுரனுடன் போர் செய்ய சேனைத் தளபதியாக வீரவாகுவையும், மற்ற சிவகணங்களையும் சிருஷ்டித்தார். அம்பிகையும் தனது சக்தி எல்லாவற்றையும் ஒன்று திரட்டி ஒரு வேலாயுதத்தை முருகனிடம் கொடுத்தாள்.

    சகல சக்திகளுடனும், பரிவாரங்களுடனும் முருகன் அசுரரர்களை அழிக்க புறப்பட்டுச் சென்றார். முதலில் சூரபத்மனின் சகோதரர்களான கஜமுகாசுரன், சிம்மமுகாசுரன், அவன் மகன் பத்மகேசரி ஆகியோரை அழித்தார்.

    பின்னர் தன் படைகளுடன் திருச்செந்தூர் வந்து அங்கு விஸ்வகர்மாவினால் அமைக்கப்பட்ட ஆலயத்தில் தங்கி தேவகுருவாகிய வியாழ பகவானால் பூஜிக்கப்பட்டார். வியாழ பகவானால் பூஜிக்கப்பட்ட காரணத்தால் திருச்செந்தூர் புகழ்பெற்ற குரு தலமாக விளங்குகிறது.

    இங்கிருந்து முருகப் பெருமான் வீரவாகு தேவரை சூரபத்மனிடம் தூது அனுப்பி நல்ல அறிவுரைகளைக் கூறச் சொன்னார். ஆனால் வீரவாகுவின் பேச்சினை சூரபத்மன் கேட்கவில்லை.

    அவன் மீது போர்தொடுத்தார். பெரும் யுத்தகம் ஆரம்பமானது.

    முருகப்பெருமானின் பூதசேனைகளும், சூரனின் அசுர சேனைகளும் தொடர்ந்து யுத்தம் செய்தனர். சூரபத்மனின் பிள்ளைகளான பானுகோபன், இரணியன், அக்னிமுகம் மற்றும் தம்பியான சிங்கமுகாசுரன் ஆகியோர் முருகப்பெருமானிடம் போரிட்டு மடிந்தனர்.

    கடைசியாக திருச்செந்தூரில் ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் சூரனை அழித்து தன் அவதார காரணத்தை முருகப்பெருமான் முற்றுப்பெற செய்தார். இதுவே கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

    உண்மையில் முருகன் சூரனை சம்ஹாரம் செய்யவில்லை. சூரன் முருகனை சரணாகதி அடைந்தான். அவன் வேண்டுகோளை ஏற்று அவனை இரு கூறாக்கி சேவலாகவும், மயிலாகவும் மாற்றினார்.

    தானே அவைகளை கொடியாகவும், வாகனமாகவும் வைத்துக் கொண்டு அவனை தன்னுடனேயே சேர்த்துக் கொண்டார். இப்படி பகைவனுக்கும் அருளியது கந்தன் கருணை எனப்படுகிறது.

    இப்படி சேவற்கொடியோன் ஆன மயில்வாகனனை வணங்கும்போது பகவானுடைய மயில், வேல், சேவல், கடல், கடலை ஒட்டிய பகுதி ஆகியவற்றையும் நாம் வணங்க வேண்டும்.

    Next Story
    ×