என் மலர்
நீங்கள் தேடியது "Family Problem"
- ஈகோ கொண்ட கணவர்மார்களிடம் மன்னிப்பை எதிர்பார்க்கக்கூடாது.
- எந்தவொரு காரியத்தையும் துணையிடம் அனுமதி கேட்டுவிட்டு செயல்படுவதில் தவறில்லை.
கணவன் - மனைவி இருவரிடமும் ஒருமித்த கருத்தும், புரிதலும் இருந்தால்தான் இல்லறம் நல்லறமாக அமையும். ஒரு சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். அதில் யாருடைய கருத்து சரியானது என்பதை நிதானமாக சிந்தித்து அதன்படி செயல்படுவதுதான் சிறப்பானது. 'நீ சொல்வதை நான் கேட்க வேண்டுமா?' என்ற எண்ணம் மனதில் கூட தோன்றுவதற்கு இடம் கொடுக்கக்கூடாது. அது 'ஈகோ'வுக்கு வழிவகுத்துவிடும்.
ஏனெனில் ஈகோ புகுந்துவிட்டால் துணையின் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கு மனம் ஒப்புக்கொள்ளாது. ஏதேனும் ஒரு விஷயத்தை மனைவி சிறப்பாக செய்து முடிக்கும்போது கணவர் மனம் திறந்து பாராட்ட வேண்டும். அவர்தான் சிறந்த வாழ்க்கை துணையாக இருக்க முடியும். அதை விடுத்து, ஈகோவுக்கு இடம் கொடுத்து, மட்டம் தட்டி பேசுவது மனைவியை மனம் நோக செய்துவிடும். மற்ற சமயங்களில் அன்பும், ஆதரவும் காட்டும் கணவர் ஒரு சில விஷயங்களுக்கு மட்டும் ஈகோ பார்த்தால் அவரது சுபாவத்தை சரி செய்து விடலாம்.
மற்றவர்கள் முன்னிலையில் துணை தன்னை விட சிறந்தவராக வெளிப்பட்டுவிடுவாரோ என்ற எண்ணம்தான் ஈகோவுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. எந்தவொரு சூழலிலும் மனைவி தன்னை விட்டுக்கொடுக்கமாட்டார் என்ற நிலைப்பாட்டில் கணவர் உறுதியாக இருக்க வேண்டும். ஒரு சில விஷயங்களில் மனைவி தன்னை விட சிறப்பாக செயல்படுவதை கணவர் பார்க்கும்போது அவருக்குள் தாழ்வு மனப்பான்மை எட்டிப்பார்க்கும்.
தானும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற உந்துதலையும் ஏற்படுத்தும். அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார். அதனை மனைவி புரிந்து கொண்டு கணவரின் செயல்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும். சிறப்பாக செயல்படும்போது பாராட்ட வேண்டும். அதனைதான் கணவர் எதிர்பார்ப்பார். தன்னுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ப மனைவி நடக்காதபோது அவருக்குள் ஈகோ தலைதூக்க தொடங்கும்.
பொதுவாகவே ஈகோ கொண்ட மனிதர்களுக்கு அவர்களை புகழ்வதும், பாராட்டுவதும் ரொம்ப பிடிக்கும். அவரிடம் நல்ல குணாதிசயங்கள் வெளிப்படும்போது அந்த நிமிடமே மனமார பாராட்டுங்கள். அவரை ஊக்கப்படுத்தும் விதமான வார்த்தைகளை பேசுங்கள். அது அவருக்கு பிடித்து போய் விட்டால் அது போன்ற செயல்பாடுகளில் அடிக்கடி ஈடுபடுவார். மனைவி தன்னிடம் நல்ல எண்ணத்துடனே பழகுகிறார். அவருக்குள் ஈகோ இல்லை என்பதை உணர்ந்துவிடுவார். அதற்காக எல்லாவற்றிற்கும் பாராட்டக்கூடாது. ஏனென்றால் ஒவ்வொரு முறையும் பாராட்டை எதிர்பார்ப்பார். அதனால் அதிகமாகவும் பாராட்டிவிடக்கூடாது.
சில சமயங்களில் துணையின் செயல்பாடுகள் பிடிக்காமல் போகும்போது அதனை நேரடியாக வெளிப்படுத்தாமல் வார்த்தைகளால் காயப்படுத்தக்கூடும். அப்படி மன காயத்திற்கு ஆளாக நேர்ந்தால் வெளிப்படையாக பேசிவிடுவது நல்லது. மனைவியின் உணர்வுகளுக்கு கணவர் நிச்சயம் மதிப்பு கொடுப்பார். இல்லாவிட்டால் அப்படி பேசுவதையே வழக்கமாக்கிவிடக்கூடும். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது.
ஈகோ கொண்ட கணவர்மார்களிடம் மன்னிப்பை எதிர்பார்க்கக்கூடாது. அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டவும் தயங்கக்கூடாது. அந்த சமயத்தில் கோபம் கொள்வதில் தவறு இல்லை. அது அவர்கள் செய்த தவறுகளை புரிய வைக்கும் விதமாக வெளிப்பட வேண்டும். அவர்களே தவறுகளை உணரும்போது மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது.
எந்தவொரு காரியத்தை செய்வதற்கு முன்பும் ஒருவருக்கொருவர் கலந்தாலோசித்து செயல்படுவதுதான் நல்லது. துணையிடம் அனுமதி கேட்டுவிட்டு செயல்படுவதில் தவறில்லை. 'இதையெல்லாம் அவரிடம் கேட்க வேண்டுமா?' என்ற எண்ணம்தான் ஈகோ தோன்றுவதற்கு இடம் கொடுத்துவிடும் என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.
- இருவருக்குமிடையேயான நம்பிக்கைத்தான் வாழ்க்கையை நிம்மதியாக்கும்.
- மூன்றாம் நபரின் தலையீடு உருவாகுவதற்கும் இடம் கொடுத்துவிடக்கூடாது.
திருமண பந்தத்தில் கணவரின் ஆதிக்கமே தலை தூக்கி நிற்கிறது. அப்படி ஆதிக்கம் செலுத்துவது தம்பதியர் இடையே அன்பை குறைத்துவிடும். மனைவிக்கு போன் செய்யும்போது இணைப்பு பிசியாக இருந்தால் வேறொருவருடன் பேசுவதாக சந்தேகிப்பது, சமூகவலைத்தளங்களில் வேறொருவருடன் அரட்டை அடிப்பதாக சந்தேகிப்பது, நடத்தையில் குறை கூறுவது போன்றவை குடும்பத்தின் நிம்மதியை கெடுத்து விடும்.
எந்தவொரு சூழலிலும் மனைவி மீது கணவர் சந்தேகம் கொள்ளக்கூடாது. அந்த அளவிற்கு துணை மீது கணவர் நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். இருவருக்குமிடையேயான நம்பிக்கைத்தான் வாழ்க்கையை நிம்மதியாக்கும்.
கணவன்-மனைவி இருவருக்குள் சந்தேக எண்ணம் தலைதூக்கினால் உடனடியாக பேசி தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். இருவருக்கும் தனிப்பட்ட விருப்பங்கள், அபிலாஷைகள் இருக்கும். அவர்களின் தனிப்பட்ட உணர்வுகளுக்கு உரிய மதிப்பு கொடுக்க வேண்டும். ஒருவர்மீது ஒருவர் ஆணித்தரமான நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த நம்பிக்கையை எந்தவொரு சூழலிலும் சிதைப்பதற்கு இடம் கொடுத்துவிடவும் கூடாது.
குடும்ப நலன் குறித்து எந்தவொரு முடிவு எடுப்பதாக இருந்தாலும் இருவரும் கலந்து பேச வேண்டும். வெளி இடங்களுக்கு செல்வது, ஆடை அணி வது, விருப்பமான உணவு சாப்பிடுவது, செலவு செய்வது எதுவாக இருந்தாலும் கணவர் ஆதிக்கம் செலுத்தக்கூடாது. தன் விருப்பத்தின்படிதான் மனைவி செயல்பட வேண்டும் என்று பிடிவாதம் கொள்ளக்கூடாது.
வீட்டில் கணவர் மட்டுமே ஆதிக்கம் செலுத்துபவராக இருந்தால் அந்த உறவில் நேசமும், பாசமும் குறைவாகத்தான் இருக்கும். அந்த சமயத்தில் மனைவி தன் உணர்வுகளை கணவர் புரிந்துகொள்ளும் படி பக்குவமாக பேச வேண்டியது அவசியம். அதனை கேட்கும் மனநிலையில் கணவர் இல்லாமல் இருந்தால் மன நல நிபுணரின் ஆலோசனையை நாடலாம்.
கணவர் தொடர்ந்து சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்து கொண்டாலோ, அதிகாரம் செலுத்தினாலோ, உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தினாலோ அதற்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும். அதேவேளையில் மூன்றாம் நபரின் தலையீடு உருவாகுவதற்கும் இடம் கொடுத்துவிடக்கூடாது.
தம்பதியர் ஒருவரையொருவர் எந்த அளவுக்கு புரிந்து கொள்கிறார்கள் என்பதை பொறுத்துதான் தாம்பத்ய பந்தம் வலுவாக இருக்கும். இருவருக்குமிடையே சந்தேக குணமோ, ஈகோ பிரச்சினையோ, சர்வாதிகார மனபாவமோ தோன்றுவதற்கு இடம் கொடுத்துவிடக்கூடாது. அது தாம்பத்ய வாழ்க்கையை சிதைத்துவிடும்.
- தம்பதியர் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும்.
- மன்னிப்பு கேட்கவும், சமாதானம் செய்யவும் தயங்கக்கூடாது.
இல்லற வாழ்க்கையில் இனிமையையும், மன நிம்மதியையும் தக்க வைத்துக்கொள்வதற்கு தம்பதியரிடையே புரிதல் இருக்க வேண்டும். ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் இருவருக்குமிடைய கருத்து மோதல், வாக்குவாதம் எழக்கூடும். அந்த சமயத்தில் சாதுர்யமாக செயல்படாவிட்டால் சின்ன மனஸ்தாபம், கருத்து வேறுபாடு கூட பெரும் சண்டைக்கு அடித்தளம் அமைத்துவிடும்.
கருத்து மோதல் தலைதூக்கும்போது ஒருசில வார்த்தைகளை உச்சரிப்பதை அறவே தவிர்த்துவிட வேண்டும். ஒருவருக்கு சாதாரணமாக தோன்றும் வார்த்தை மற்றொருவருக்கு மன வேதனையை உண்டாக்கக்கூடும். அதனால் தம்பதியர் தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்கும்போது வார்த்தை பிரயோகத்தை கவனமாக கையாள வேண்டும்.
'உன்னால் என்ன செய்ய முடியும்? நான் சொல்வதை நீ கேட்டுத்தான் நடந்தாக வேண்டும்' என்ற ரீதியில் வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது. அது துணையின் கோபத்தை அதிகரிக்கச் செய்துவிடும். அவருடைய ஆழ்மனதில் அந்த வார்த்தை ஆழமாக பதிந்துவிடும். அது ஆறாத மன காயமாக மாறிவிடவும் கூடும். அதனால் தன்னை சார்ந்திருந்துதான் ஆக வேண்டும் என்ற ரீதியில் வார்த்தைகளை உபயோகிக்கக்கூடாது. அது ஆணாதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடாகவும் அமைந்துவிடும். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது.
எதிர்பாராதவிதமாக நிகழும் தவறுக்கு துணை காரணமாக இருக்கலாம். அது அவருக்கு தெரியாமலேயே நடந்திருக்கலாம். அதனால் ஏற்படும் பின்விளைவுகளை அவர் முன்கூட்டியே அறியாமல் இருந்திருக்கலாம். ஆனால் செய்த தவறுக்காக அவர் நிச்சயம் வருத்தப்படுவார். அதனை வெளிக்காட்டிக்கொள்ளாவிட்டாலும் கூட 'தன்னால் இப்படியொரு தவறு நடந்துவிட்டதே' என்ற வேதனை அவரை ஆட்கொண்டிருக்கும். அதனை புரிந்து கொள்ளாமல் 'நீதான் காரணம்' என்று துணை மீது குற்றம் சாட்டக்கூடாது. அது மோதல் போக்கை உண்டாக்கிவிடும். தவறை திருத்துவதற்கு முயற்சி மேற்கொள்வதற்கு பதிலாக திசை திருப்பும் நடவடிக்கையாக மாறிவிடும்.
எதேச்சையாக தவறுகள் நடக்கும்போது 'நீ ஒரு முட்டாள், உன்னால் அதற்கேற்பத்தான் செயல்பட முடியும்', 'நீ எதற்கும் பிரயோஜனம் இல்லாதவள்' என்பன போன்ற வார்த்தைகளை உபயோகித்து திட்டுவது துணையின் தன்மானத்தை சீண்டுவதாக அமையும். அவரது சுய கவுரவத்தை சிதைப் பதாகவும் அமைந்துவிடும். நன்றாக ஆராய்ந்து பார்த்தால் துணையை விட கணவர் அதிக தவறுகளை செய்திருக்கக்கூடும். அவரது தவறான வழி நடத்தல்தான் தவறுக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்திருக்கும். அதனால் தவறுகள் நிகழும் பட்சத்தில் இருவரும் நிதானம் இழக்காமல் அதனை திருத்துவதற்கான முயற்சியில்தான் கவனம் செலுத்த வேண்டும். துணை வருத்தப்படும் அளவிற்கு சம்பவம் நிகழ்ந்திருந்தால் மன்னிப்பு கேட்கவும், சமாதானம் செய்யவும் தயங்கக்கூடாது.
அதேபோல் தவறு நிகழும்போது, 'நீ கடந்த முறையும் அப்படித்தானே செய்தாய்? இதுவே உனக்கு வாடிக்கையாகி விட்டது' என்றும் பேசக்கூடாது. அது உறவுக்குள் விரிசலை அதிகப்படுத்திவிடும். கணவர் தன் மீது எப்போதும் குறை கூறுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறார் என்ற எண்ணத்தை துணையிடம் விதைத்து விடும். குடும்ப மகிழ்ச்சியையும் சிதைத்துவிடும்.
மேலும் தவறு நடந்துவிட்டால், 'எதனால் அந்த தவறு நிகழ்ந்தது?' என்பதை கண்டறி வதற்கே நேரத்தை செலவிட வேண்டியிருக்கும். அதனை புரிந்து கொள்ளாமல் 'ஏன் இப்படி நடந்தது. எனக்கு உடனே பதில் சொல்' என்று கடுமையாக திட்டுவதும் கூடாது.
நடந்த தவறை நினைத்து துணை வருத்தப்பட்டுக்கொண்டிருப்பதை உணராமல், 'ஏன் எதுவும் பேசாமல் 'உம்'மென்று இருக்கிறாய்? வாயை திறந்து பதில் சொல்' என்று கட்டாயப்படுத்தக்கூடாது. அதற்குப் பதிலாக ''நான் சொல்வதை கொஞ்சம் பொறுமையாக கேள். இருவரும் உட்கார்ந்து பேசி முடிவெடுப்போமா?" என்று சொல்லிப் பாருங்கள்.
துணை முக மலர்ச்சியுடன் செயல்பட தொடங்கிவிடுவார். தவறுகளையெல்லாம் திருத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார். தேவையற்ற கருத்து மோதல்கள் எழுவதற்கு இடமிருக்காது. இல்லற வாழ்வில் நிம்மதியும் குடிகொள்ளும்.
- சிவக்குமார் சமையல் தொழிலாளி என்பதால் அடிக்கடி வெளியூருக்கு சென்று விடுவார்.
- சில நாட்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினை தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சேலம்:
சேலம் கிச்சிப்பாளையம் அப்பர் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 28), சமையல் தொழிலாளி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டவுன் அண்ணாநகரை சேர்ந்த கவுசல்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
சிவக்குமார் சமையல் தொழிலாளி என்பதால் அடிக்கடி வெளியூருக்கு சென்று விடுவார். இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினை தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் வேலைக்கு சென்று வருவதாக சிவக்குமார் கூறி சென்றார். ஆனால் இரவு நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்தநிலையில், எருமாபாளையம் பகுதியில் உள்ள குருவிபனை ஏரியில் மாயமான சிவக்குமார்் பிணமாக கிடப்பதாக நேற்று பிற்பகல் கிச்சிப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஏரியில் பிணமாக கிடந்த சிவக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மனைவியுடன் தகராறு ஏற்பட்டு வெளியே சென்ற அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தது எப்படி?, தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அவரது சாவில் மர்மம் நீடிக்கிறது. பிரேத பரிசோதனை செய்த பிறகு தான் அவரது சாவுக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
- பெண்கள் தைரியமானவர்களாக இருந்தாலும், அவர்களுடைய சமூக அந்தஸ்து குறைந்துவிடும்.
- பெண்கள்தான் விவாகரத்தில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
- மணவாழ்க்கையை முறித்துக்கொள்ளாமல், பொருந்திப்போவதே சிறந்தது.
மனிதர்களின் அடிப்படை குணாதிசயங்களில் இருந்து இந்த நூற்றாண்டில் காணாமல்போன விஷயங்கள் மூன்று. அவை: பொறுமை, நிதானம், சகிப்புத்தன்மை. இவைகள் இல்லாமல் போனதால்தான், கணவன்-மனைவி இடையே ஏற்படும் எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு விவாகரத்துதான் என்ற நிலை சமூகத்தில் ஏற்பட்டிருக்கிறது. விவாகரத்துக்கு மாற்றாக வேறு எதையும் அவர்கள் கருத்தில்கொள்வதில்லை. முறித்துக்கொள்வது மட்டுமே முடிவானது என்று கருதுகிறார்கள்.
ஆணும், பெண்ணும் சரி சமம் என்று தலைநிமிர்ந்து நிற்கும் இன்றைய தலை முறையினரிடம் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் எந்த சிக்கலுக்கும் சரியான தீர்வு காணும் பொறுமை இல்லை. பொறுமையின்றி, நிதானமின்றி அதிரடியும் ஆவேசமுமாக களத்தில் இறங்கி சண்டையிட்டுக்கொண்டு விவாகரத்து வாங்கிவிடுகிறார்கள். ஆனால் விவாகரத்துக்குப் பிறகு வாழும் வாழ்க்கை மிகவும் கொடுமையானது. அதைப் பற்றி பலரும் யோசிப்பது இல்லை. கையில் பணம் இருந்தால் எதையும் சாதித்து விடலாம் என்ற மனோபாவத்தில் விவாகரத்து முடிவு எடுக்கப்படுகிறது. ஆனால் இழந்த எதையும் பணத்தால் வாங்கமுடியாது என்பதை உணரும்போது அவர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கும், விரக்திக்கும் உள்ளாகிவிடுகிறார்கள்.
மனிதர்கள் எல்லோருமே தவறு செய்யக்கூடியவர்கள்தான். அதை திருத்திக்கொள்ளும் முயற்சிதான் வாழ்க்கை. திருமணத்துக்கு முன்பு செய்யும் தவறுகளுக்காக பெற்றோர் பிள்ளைகளை தூக்கி எறிவது இல்லை. ஆனால் திருமணத்துக்கு பிறகு செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் கணவன், மனைவி இருவரில் யாராவது ஒருவரை தூக்கி எறியும் முடிவுக்கு இன்னொருவர் வந்துவிடுகிறார்.
திருமணத்துக்கு முன்பு - திருமணத்துக்கு பின்பு என்று ஒருவருடைய வாழ்க்கையை இரண்டாக பிரித்துப் பார்த்த காலம் போய், இப்போது விவாகரத்துக்கு முன்பு - பின்பு என்று பிரித்துப் பார்க்கிறார்கள். அதில் பிந்தைய காலம் அநேகமாக பெண்களுக்கு இருண்ட காலம் ஆகிவிடுகிறது.
விவாகரத்துக்கு பிறகு ஆண்களும் அதிகமான மனநெருக்கடிக்கு உள்ளாகி விடுகிறார்கள். இதனால் அவர்களுடைய தொழில் பாதிப்படைகிறது. 'தன்னைப் பற்றி தனக்கு பின்னால் என்ன பேசிக்கொள்வார்களோ!' என்ற எண்ணம் அவர்களுடைய நட்பு வட்டாரத்தை குறைக்கிறது அல்லது சிதைக்கிறது. அப்போது, தான் செய்யும் சின்னச் சின்ன தவறுகள் கூட, பெரிதாகி தன் கண்முன்னே வந்து நின்று மிரட்டும். அந்த நேரத்தில் தன் மீதே தனக்கு கோபமும், வருத்தங்களும் ஏற்பட்டு மன அழுத்தம் எல்லைமீறும். இதனால் காரை வேகமாக ஓட்டி தாறுமாறாக செல்வது, மது அருந்துவது, உறவுகளை புறக்கணிப்பது என்று முரண் பாடான பாதையில் அவர்கள் பயணிக்க தொடங்கிவிடுவார்கள்.
அதனால் அவர்களது மாண்பும், மரியாதையும் சிறிது சிறிதாக அவர்களுடைய வாழ்க்கை யில் இருந்து விடைபெற்று சென்றுகொண்டே இருக்கும். இந்த இழப்பை பணத்தாலும், பதவியாலும் ஈடு செய்ய முடியாது என்பதை உணரும்போது, வாழ்க்கையில் தவறு செய்துவிட்டதை புரிந்துகொள்வார்கள்.
பெண்கள்தான் விவாகரத்தில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். என்னதான் மனதளவில் பெண்கள் தைரியமானவர்களாக இருந்தாலும், அவர்களுடைய சமூக அந்தஸ்து குறைந்துவிடும். அதற்குதக்கபடி பெண்கள் தங்கள் மனதை பக்குவப்படுத்திக் கொள்ளாவிட்டால், மனதளவில் உடைந்துபோவார்கள். அப்போது தங்களுக்கு முன்னால் இருக்கும் உலகம் வேறு, தங்களுக்கு பின்னால் இயங்கும் உலகம் வேறு என்பதை உணர்வார்கள்.
அப்படி உணர்கிறபோது அவர்களுக்குள் இன்னொரு கேள்வி எழும். அது, 'நாம் மற்றவர்களுக்கு பாரமாக இருக்கிறோமோ?' என்ற கேள்வி! அப்போது விவாகரத்து என்பது தான் எடுத்த தவறான முடிவு என்ற குற்ற உணர்வு தோன்றும். தனது எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற கவலையும் தோன்றும். தன் வயதை ஒத்தவர்கள் வாழும் சந்தோஷ வாழ்க்கையும் கண்களை உறுத்தி, கண்ணீர் வரச்செய்யும். அதனால் மணவாழ்க்கையை முறித்துக்கொள்ளாமல், பொருந்திப்போவதே சிறந்தது.
- இவர்களுக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
- தாக்குதலில் காயமடைந்த வசந்தியை அருகில் இருந்த வர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சையை அடுத்துள்ள செங்கிப்பட்டி கீழத்தெருவை சேர்ந்தவர் நடராஜன் மனைவி வசந்தி(வயது51). அதே பகுதியை சேர்ந்தவர் புகழேந்தி (24). வசந்திக்கு புகழேந்திக்கு மருமகன் ஆவார்.
இவர்களுக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வசந்திக்கும், புகழேந்திக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த புகழேந்தி, வசந்தியை தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் காயமடைந்த வசந்தியை அருகில் இருந்த வர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து புகழேந்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குடும்பம் என்பது அதிகாரம் தூள்பறக்கும் நிறுவனமல்ல. அன்பும், அருளும் தவழும் கோவில். குடும்பம் என்பது உருவங்கள் நடமாடும் இடம் அல்ல, உள்ளங்கள் உறவாடும் இடம். வீடு என்பது தங்குமிடமல்ல. இன்பம் பொங்குமிடம். எல்லா நாடுகளுக்கும் ஒவ்வொரு வகையான பெருமை உண்டு என்றால் இந்தியாவின் பெருமை இனிய குடும்பம்.
தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வந்திருந்த ஒரு வெளிநாட்டு தம்பதியிடம் ஒரு நிருபர் பேட்டி எடுத்தார். “இங்குள்ள கோவில்களையெல்லாம் பார்த்தீர்களா?” “பார்த்தோம். அதிசயமாக இருந்தது. அதைவிட அதிசயம் இங்குள்ள குடும்பங்களெல்லாம் கோவிலாக இருப்பது” இதுதான் நமக்குப் பெருமை. அந்தப் பெருமையைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். கால ஓட்டத்தில் நிலைமை மாறி வருவதாகச் சொல்லப்படுகிறது. முன்பெல்லாம் உடைந்த வீடுகள் உடையாத உள்ளங்கள்.
இப்போது உடையாத வீடுகள் ஆனால் உடைந்த உள்ளங்கள். இல்லறத்தில் மகிழ்ச்சி எப்போது வரும்? புடவை, பட்டுக் கொடுத்தால் வருமா? நகை நட்டு கொடுத்தால் வருமா? பணக்கட்டு கொடுத்தால் வருமா? சீர்வரிசை தட்டு கொடுத்தால் வருமா? அப்போதெல்லாம் விட ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தால் வரும். விட்டுக் கொடுப்பதென்பது வீழ்ச்சியல்ல விதைப்பது. உலகின் மிக உன்னதமானது கணவன் மனைவி உறவு. முன்பின் அறிமுகம் இல்லாத, ரத்த உறவாகப் பிறந்திடாத இரண்டு பேருக்கு இடையே அறிமுகம் முளைத்து, அது நட்பாக வளர்ந்து, இனிய அன்பாகப் பிரவாகம் எடுத்து, இரண்டு உடல்களில் ஓர் உயிர் இருப்பது போல நெருக்கமாகி, ஆயுள் முழுவதும் இணைந்திருக்கும் இனிய பந்தம். அது அழகாக இருக்க சில உறுதிமொழிகளை எடுத்துக்கொள்வது அவசியம்.
கணவனுக்கும், மனைவிக்கும் நடக்கும் விவாதங்களில் ஜெயிப்பதற்கு ஆர்வம் காட்டாதீர்கள். யார் ஜெயித்தாலும், தோற்றவர் வாழ்க்கைத் துணைதானே. ஒருவர் தோல்வியின் விரக்தியில் இருக்கும்போது, மற்றவர் வெற்றியைக் கொண்டாட முடியுமா? விட்டுக்கொடுங்கள். அன்பை வெளிப்படுத்தவும், ஆறுதல் சொல்லவும் அவ்வப்போது அரவணைப்பையும் அன்பான வார்த்தைகளையும் பயன்படுத்துங்கள். நெடுநாள் இனிமையாக உறவு நீடிக்க இந்த “மந்திரச் செயல்” அவசியம்.
பணம்தான் பல குடும்பங்களில் உறவை உடைக்கும் கருவியாக இருக்கிறது. வருமானம், கடன், செலவுகள், வீடு வாங்குவது போன்ற உங்கள் பொருளாதார இலக்குகள் என எதையும் வாழ்க்கைத்துணையிடம் மறைக்காதீர்கள். வாழ்க்கையில் யாராவது ஒருவரிடமாவது ஒளிவு மறைவின்றி உண்மையாக நடந்து கொள்ள வேண்டும். அது உங்களது வாழ்க்கைத்துணையாக இருக்கட்டும்.
எந்த உறவிலும் பாசமும், பரிவும், அன்பும் ஒருவழிப் பாதை அல்ல! நீங்கள் என்ன கொடுக்கிறீர்களோ அதையே பெறுவீர்கள். ஆகவே, நிறைய அன்பைக் கொடுங்கள். வாழ்க்கைத்துணை கச்சிதமான நபரான, எல்லாவற்றையும் ஒழுங்காகச் செய்பவராக, நூறு சதவீதம் உங்கள் எதிர்பார்ப்பை நிறைவு செய்பவராக இருக்க வேண்டும் என நினைக்காதீர்கள். பலங்களும், பலவீனங்களும் இணைந்தவர்களே ஒவ்வொருவரும். நீங்களும் அப்படித்தானே. வாழ்க்கைத் துணையிடம் மட்டும் நூறு சதவீத கச்சிதத்தை எதிர்பார்ப்பது நியாயமா?
யாரோடும் உங்களை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். ஒப்பிட்டால் அந்த நிமிடத்தில் இருந்து நிம்மதியைத் தொலைத்துவிடுவீர்கள். ஒவ்வொரு தனிநபரும் தனிப்பட்ட குணங்களின், திறமைகளின், விருப்பங்களின் கலவை. அந்தத் தனித் திறமையைக் கண்டறிந்து, அதை வளர்த்துக் கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் பல சிந்தனைகளில் மூழ்காதீர்கள். “டைனிங் டேபிளில்” அமர்ந்து சாப்பிட்டபடி அலுவலகத்தில் முடிக்க வேண்டிய வேலையை மனதில் நினைத்துக்கொண்டு, உதட்டளவில் வாழ்க்கைத் துணையிடம் பேசாதீர்கள். நீங்கள் உதிர்க்கும் வார்த்தைகளில் அக்கறை குறைவதை, வேறு யாரையும்விட வாழ்க்கைத் துணையால் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்.
வாழ்க்கைத்துணையின் உறவினரோ, நண்பரோ, உங்களை ஏமாற்றி இருக்கலாம்; ஏதாவது நஷ்டத்துக்கு ஆளாக்கி இருக்கலாம். அதை மனதில் வைத்துக்கொண்டு உங்கள் வாழ்க்கைத்துணையை விமர்சிக்காதீர்கள். யாரோ செய்த தவறுக்கு அவர் எப்படி பொறுப்பாக முடியும்? உங்கள் உடன்பிறந்தவர்களே கூட உங்களைப் போல இருக்க முடியாது என்கிறபோது, யாரோ ஒருவர் எப்படி உங்களின் வாழ்க்கைத் துணைபோல அக்கறையாக இருப்பார்?
வாழ்க்கைத்துணை மீது கோபமோ, வருத்தமோ ஏற்படும்போது என்ன செய்யலாம்? எதுவுமே செய்யாமல் அமைதியாக இருப்பதுதான் நல்லவழி. கோபத்தில் திட்டுவதோ, போனில் கத்துவதோ பிரச்சினைகளைத் தீர்க்காது. அவசரத்தில் உதிர்க்கும் வார்த்தைகள், இன்னொரு புது பிரச்சினையை உருவாக்கிவிடும். உணர்ச்சிவசப்பட்டு மனதால் முடிவு எடுக்காதீர்கள்; நிதானமாக யோசித்து அறிவால் முடிவெடுங்கள். இன்றைய கோபத்தை இன்றே மறந்துவிடுங்கள். அதை சுமந்துகொண்டு படுக்கைக்குப் போகாதீர்கள். மனதில் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்காதீர்கள். கோபத்தில் வரும் யோசனைகள், பலூன் மாதிரி பிரச்சினைகளை ஊதிப் பெரிதாக்கிவிடும். அன்பு எனும் ஊசியால் அதை உடைத்துவிடுங்கள். கருத்து வேறுபாடுகளும், விவாதங்களும் பிரச்சினையை பெரிதாக்காமல் தீர்க்கும் போக்கில் அமைய வேண்டும். சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது?
ஒருவர், தன் மகள் திருமணத்துக்காக ஒரு ஜோசியரைப் பார்த்து, இரண்டு ஜாதகங்களைக் கொடுத்து பொருத்தம் பார்க்கச் சொன்னார். இரண்டும் பெண்களின் ஜாதகமாயிருந்தால் அதிர்ச்சியடைந்த ஜோசியர் காரணம் கேட்டார். “ஒன்று என் மகள் ஜாதகம், இன்னொன்று அவளுக்கு மாமியாராக வரப்போறவங்க ஜாதகம். இரண்டும், பொருந்தி வருதா பாருங்க”.
இந்த நிலைமை ஏன்? தன்னுடைய மகள் கட்டிக்கொடுத்த இடத்தில் கண்கலங்காமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிற தாய், தன்னை நம்பி வந்திருக்கும் ஒரு பெண்ணை கண்கலங்காமல் காப்பாற்ற வேண்டாமா? தன் அம்மாவை நேசிக்கும் ஒரு பெண், தனது மாமியாரும் தாய்மாதிரித்தான் என்று எண்ணத் தொடங்கினால் குடும்பம் கோவிலாகி விடும். மாமியாரின் அனுபவத்தை மருமகளும், படித்த மருமகளின் அறிவாற்றலை மாமியாரும் மதிக்கத் தொடங்கிவிட்டால் பிரச்சினை தீர்ந்து விடும்.
நமது குடும்பத்தின் வலிமையே கூட்டுக்குடும்பம்தான். அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, அக்கா, தங்கை, அண்ணன், தம்பி, அத்தை, மாமா, சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா அடடா? எத்தனை உறவுமுறைகள். தாய்மாமன் உறவு என்பது தனித்துவமானது. தாத்தா சரித்திரம் சொல்ல, பாட்டி கதைகள் சொல்ல, அத்தையும், மாமாவும் அரவணைக்க அந்த வளர்ப்பின் அனுபவமே அற்புதமானது. நட்ட நடுநிசியில் தொட்டில் குழந்தை, நிதானத்துக்கு அதிகமாக அழுது துடித்தால் எந்த டாக்டரிடம் கொண்டு செல்வது? இருக்கவே இருக்கிறது பாட்டி வைத்தியம்.
இப்போது அவசர உலகத்தில் இந்த கூட்டுக்குடும்ப தத்துவம் தகர்ந்து கொண்டிருக்கிறது. தனிக்குடித்தனம் என்ற சுயநலத் தேவை அதிகரித்துவிட்டது. வேலை நிமித்தம் தவிர்க்க முடியாத சூழ்நிலை தவிர, மற்ற காலகட்டத்தில் ஒன்றாக வாழ்வதே நல்லது. அப்போதும் இல்லறங்கள் வேறாக இருந்தாலும் இதயங்கள் நெருங்கியிருந்தால் உறவுகள் மேம்படும். “வீட்டுக்குப் பெயர் அன்னை இல்லம். அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்” என்ற நிலையும் உள்ளது. ஒரு பெரியவர் சொன்னார்: எனக்கு ஐந்து சன்ஸ் உண்டு. ஆனால் நான் பெற்றெடுக்காத இன்னொரு சன்தான் என்னைக் காப்பாற்றுகிறான். அவன்தான் பென்சன்.
பெரியவர்கள் வீட்டில் இருந்தால் பெருமை என்று கருதுவோம். அவர்களை வழிபடுவதே சிறந்த ஆன்மிகம் என்ற நிலை வந்தால் குடும்பம் கோவிலாகிவிடும். குடும்ப தினத்தில் அதைப்பற்றி அதிகம் யோசிப்போம்.
முனைவர் இளசை சுந்தரம், வானொலி நிலைய முன்னாள் இயக்குனர், மதுரை.
செந்துறை:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சிறுகுடி இந்திரா நகரைச் சேர்ந்தவர் ரவி. இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரோசி (வயது 42). இவர்களது மகள் பிரனீதா (17). பிளஸ்-2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.
தாய் மகளுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று காலையிலும் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ரோசி தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்தார். இதை பார்த்ததும் அவரது மகளும் தாயை கட்டிப்பிடித்தார்.
இருவரும் பலத்த தீக்காயங்களுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டனர். ஆனால் ரோசி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து நத்தம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜாக்கமங்கலத்தை அடுத்த தாராவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜபாண்டியன் (வயது 59). தொழிலாளி.
இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். இதில் 2-வது மனைவி இறந்துவிட்டார். முதல் மனைவிக்கு ஒரு மகனும், 2-வது மனைவிக்கு ஒரு மகனும், ஒரு மகளும், 3-வது மனைவிக்கு ஒரு மகளும் உள்ளனர்.
இவர் குடித்துவிட்டு சரியாக வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதில் 3-வது மனைவி சவரியம்மாளுக்கும் ராஜபாண்டியனுக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்த அவர் நேற்று வீட்டின் அருகே விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக்கிடந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜபாண்டியன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மீனா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில் எறும்புக்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (30). இவர் குடித்து விட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.
இதனை அவரது உறவினர்கள் கண்டித்து உள்ளனர். இதில் மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்த அவர் விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக்கிடந்தார். அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து நேசமணி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை தண்டல்காரன் பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 56). மதுரை மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
முருகேசனுக்கும், குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் வேதனை அடைந்த முருகேசன் கருவேலம் பட்டியில் உள்ள சகோதரர் வீட்டுக்குச் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் மதுரை மேலூர் அருகேயுள்ள வெள்ளிமலைப் பட்டியைச் சேர்ந்தவர் செல்வம் (40). இவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
செல்வத்துக்கு குடிப்பழக்கம் உண்டு. இதன் காரணமாக அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் மேலும் தகராறு அதிகரித்தது.
இதில் வாழ்க்கையில் விரக்தியடைந்த செல்வம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துறையூர்:
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பச்சமலை தாளூர் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம்(வயது 45).அ.தி.மு.க. நிர்வாகியான இவர் விவசாயம் செய்து வந்தார். இவரது மனைவி மலர்விழி (43). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். பரமசிவத்திற்கு குடி பழக்கம் இருந்து வந்தது. தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். குடிபழக்கத்தை கைவிடுமாறு மலர்விழி பலமுறை வற்புறுத்தியும் பரமசிவம் கை விடவில்லை.
இந்தநிலையில் நேற்றிரவும் அவர் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதனை மலர்விழி தட்டிக்கேட்டதால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்த பரமசிவம் வீட்டில் இருந்த பிளாஸ்டிக் சேரை எடுத்து மலர்விழியை சரமாரி தாக்கினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்தநிலையில் தாயை தந்தை தாக்கியது தொடர்பாக பரமசிவத்தின் மகன் ராஜதுரை, அவரது தாத்தாவும், பரமசிவத்தின் தந்தையுமான நடேசனிடம் தெரிவித்தார். இதையடுத்து நடேசன் , ஆஸ்பத்திரியில் இருந்து நேராக வீட்டிற்கு சென்று அங்கிருந்த பரமசிவத்திடம் ஏன் மலர்விழியை தாக்கினாய் என்று தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த நடேசன், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மகன் என்றும் பாராமல் பரமசிவத்தை சரமாரியாக வெட்டினார். இதில் அவருக்கு கழுத்து பகுதியில் பலத்த வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த பரமசிவம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மலர்விழியும் இறந்தார்.
குடும்ப தகராறில் கணவன்-மனைவி இருவரும் கொலை செய்யப்பட்ட சம்ப வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த தகவல் அறிந்ததும் துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பரமசிவம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மலர்விழியின் உடலும் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நடேசனை கைது செய்தனர்.