search icon
என் மலர்tooltip icon

  பெண்கள் உலகம்

  இன்றைய தலைமுறையினரிடையே விவாகரத்து அதிகரித்து வருவதற்கான காரணங்கள்...
  X

  இன்றைய தலைமுறையினரிடையே விவாகரத்து அதிகரித்து வருவதற்கான காரணங்கள்...

  • விவாகரத்தை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.
  • ஒரு பெண் தன் கணவனை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன.

  இன்றைய அவசர உலகில் குடும்ப வாழ்க்கையில் இருக்கும் இளம் தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமலும், விட்டு கொடுத்து வாழத் தெரியாமலும், சிறிய விஷயங்களுக்கு எல்லாம் கோபப்பட்டு, சண்டை போட்டுக் கொண்டு விவாகரத்து வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக 30 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகம் இந்த முடிவை எடுக்கின்றனர்.

  சாதி, மதம், இனம் என்று வேறுபாடு இல்லாமல் அனைத்து தரப்பினரும் விவாகரத்தை தேடிச்செல்கின்றனர்.

  சகிப்பு தன்மையும், புரிதலும் இல்லாததே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

  கணவன்-மனைவி இருவருக்கும் விவாகரத்து பெறுவதற்கான சம உரிமை இருந்தாலும், விவாகரத்து கோருவதற்கு சில காரணங்கள் சட்டரீதியாக இருக்கின்றன என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

  அதுபற்றிய விவரத்தைக் காண்போம்.

  'மணம் என்ற சொல்லுக்குக் 'கூடுதல்' என்பது பொருள். இதன் வேர்ச்சொல் மண் என்பதாகும். இன்று பொது நிலையில் மணம் என்பது நறுமணத்தைக் குறிப்பிடுகிறது. சிறப்பான, மேன்மையான ஒன்றைக் குறிப்பிட 'திரு' என்ற அடைமொழி கொடுத்து அழைப்பது தமிழர் மரபு. அந்த வகையில் இல்லற வாழ்வின் அடிப்படையாக அமையும் மணம் ''திருமணம்'' என்று அழைக்கப்படுகிறது. திருமணம் என்றாலே அனுசரித்து வாழ்வது தான். இதில் தம்பதிகள் நம்முடைய வாழ்க்கை தத்துவமான ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு வாழ்வதன் மூலம் இல்லறம் நிலைத்து நிற்கும். இந்தியாவின் அடையாளங்களில் ஒன்று குடும்ப அமைப்பு. இவை சிதறாமல் பேணிக்காப்பது இன்றைய இளைஞர்களின் கைகளில்தான் உள்ளது. பொதுவாக பெண்கள் உணர்வு பூர்வமாகவும், ஆண்கள் அறிவு பூர்வமாகவும் சிந்திப்பார்கள். குடும்ப உறவுக்கு இவை இரண்டும் தேவைப்படுகிறது. அப்பாவின் அரவணைப்பும், அம்மாவின் அன்பும் தேவை. இதில் சுயநலம் என்பது இருக்க கூடாது. 'விட்டு கொடுப்பதால் கெட்டு போவதில்லை' என்பதற்கு ஏற்ப அனைவரும் வாழ்க்கையில் விட்டு கொடுத்து வாழ பழக வேண்டும்.

  'விவாகரத்துக்கு நிதி நிலைமை, சுதந்திரமாக இருக்க முடியாத நிலை முக்கியமான காரணியாக பார்க்கப்படுகிறது. அத்துடன் சமூக ஊடகங்களில் நிறைய விஷயங்களை பார்ப்பதன் மூலம் கிடைத்த வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளாமல் பிறருடைய வாழ்க்கையை நம் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பேசுவது, வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளாதது போன்ற காரணங்களும் கூறப்படுகிறது. இதனால் எங்களிடம் வருபவர்களுக்கு முதலில் நாங்கள் கூறுவது பிறருடைய வாழ்க்கையை ஒப்பிட்டு பேச கூடாது. அத்துடன், தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, கிடைத்த வாழ்க்கையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு சண்டை சச்சரவுகள் இன்றி விட்டு கொடுத்து சந்தோஷமாக வாழ பழக வேண்டும்.

  வாய்ப்பும் நேரமும்

  விவாகரத்து என்பது தம்பதிகள் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமே இல்லை. அவர்களுக்கு பெற்றோர்கள், குழந்தைகள் இருந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை சம்பந்தப்பட்டதாகும். மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்டு இருந்தால் மட்டுமே குடும்பத்தினரையும் தாண்டி விவாகரத்து என்ற முடிவை எடுப்பார்கள். விவாகரத்தை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும். 'விவாகரத்து' என்ற வார்தையை சண்டை போடும்போது மிரட்டுவதற்கான கருவியாக பயன்படுத்த வேண்டாம். நாளடைவில் இந்த வார்த்தைகள் நம் மனதில் ஆழமாக பதிந்து அதனை செய்வதற்கு தூண்டலாம். சின்ன, சின்ன விஷயத்துக்கு எல்லாம் விவாகரத்து என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் இருக்கலாம். 'குரங்கில் இருந்து மனிதன் வந்தான்' என்பது நமக்கு கற்று தந்த பெரிய விஷயம் என்னவென்றால், மனிதன் மாறுவான் என்பதுதான். எனவே மனிதன் நிலையாக இருப்பதில்லை. எனவே விவாகரத்து என்ற முடிவை தம்பதிகள் எடுக்காமல் மாறுவதற்கான வாய்ப்பையும், நேரத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும்.

  விவாகரத்து வழக்குகள் குறித்து சென்னை ஐகோர்ட்டு வக்கீல் தேவி நட்ராஜ் கூறும்போது, 'ஒரு துணையை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துவது, பொது வெளியில் அவர்களின் நற்பெயருக்கு தீங்கு விளைவிப்பது போன்றவை கொடூர செயலகளாக கருதப்படுகின்றன. அதேபோல், பொதுவெளியில் தங்கள் துணையின் குணத்தை அவமானப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. பெரும்பாலான குடும்ப வன்முறை வழக்குகளில் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக மனைவியைப் பழிவாங்கும் எண்ணம் இருப்பது ஒரு பொதுவான நடைமுறையாகி விட்டது.

  ஒரு பெண் தன் கணவனை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. விவாகரத்து முடிவு எடுப்பது எந்த மனைவிக்கும் எளிதானது அல்ல. ஆனால் அவர்கள் அந்த முடிவை எடுப்பதற்கு பின்னணியில் பல கஷ்டமான சூழ்நிலைகள் உள்ளன. பெண்கள் ஏன் விவாகரத்து முடிவு எடுக்கிறார்கள்? குறிப்பாக எவ்வளவுதான் நெருங்கிய உறவாக இருந்தாலும், ஏமாற்றினால் அந்த உறவு முறிந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. திருமணத்திற்கு புறம்பான உறவுகள் விவாகரத்துக்கான முக்கிய காரணமாகும். திருமணத்திற்குப் பிறகும் ஆண்கள் மற்ற பெண்களுடன் தொடர்பில் இருந்தால், அது தெரிய வரும் போது பெண்கள் விவாகரத்து முடிவுக்கு வருகிறார்கள். தன் வாழ்வில் பிறர் வந்திருப்பதை துளியும் விரும்பாத பெண்கள், இந்த முடிவை எடுக்கிறார்கள்.

  குறிப்பாக தன் கணவர் குணத்தை சந்தேகிப்பது, அலுவலகத்திற்குச் செல்வது, அவர்களுடன் சண்டை போடுவது, சக ஊழியர்களுடன் பாலியல் உறவு வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டுவது ஆகியவை இந்து திருமண சட்டப் பிரிவின் கீழ் வருவதால் இத்தம்பதிக்கு விவாகரத்து வழங்கப்படுகிறது. இந்தச் செயல்கள் கணவரின் நற்பெயருக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று கோர்ட்டு கூறுகிறது. அத்துடன், மனைவி தனது தாலியை கழற்றுவது கணவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் செயலாக கருதலாம் என்று கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. தாலியை அகற்றுவது திருமண உறவைத் தொடர்வதில் விருப்பமின்மையை வெளிப்படுத்துகிறது என்பதை கோர்ட்டு தெளிவாக தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளது. அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விவாகரத்து பெற்றுத்தரப்படுகிறது. ஆனால் இப்படியே போகாமல் வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து வாழ்வதன் மூலம் குடும்ப உறவை மேம்படுத்த முடியும். இதற்கு தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்பு வேண்டும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சிறப்பாக வாழ வேண்டும்' என்றார்.

  Next Story
  ×