என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உள்ளாட்சி தேர்தல்"

    • தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக இறந்தார்.
    • முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த ஹசீனா என்பவர் நேற்றுமுன்தினம் இரவு பிரசாரம் முடிந்து வீட்டுக்கு வந்தபோது மயங்கிவிழுந்து இறந்தார்.

    கேரளாவில் முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் இறந்ததால் 2 இடங்களில் இன்று நடக்க இருந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. திருவனந்தபுரம் மாநகராட்சியில் உள்ள விழிஞ்சம் வார்டை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் ஜஸ்டின் பிரான்சிஸ்(வயது60) நேற்று முன்தினம் இரவு விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக இறந்தார். இதனால் அவர் போட்டியிட்ட விழிஞ்சம் வார்டுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் அதிகாரியான துணை ஆட்சியர் ஆல்பிரட் அறிவித்தார்.

    இதேபோல் மலப்புரம் மாவட்டம் மூத்தேடம் பஞ்சாயத்து 7-வது வார்டில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளராக போட்டியிட்ட முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த ஹசீனா(49) என்பவர் நேற்றுமுன்தினம் இரவு பிரசாரம் முடிந்து வீட்டுக்கு வந்தபோது மயங்கிவிழுந்து இறந்தார். இதனால் அவர் போட்டியிட்ட வார்டிலும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    • முதல்கட்ட தேர்தலில் மொத்தம் 36,630 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் ஆண்கள் 17,056 பேர். பெண் வேட்பாளர்கள் 19,573 பேர் ஆவர்.
    • பல வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே ஏராளமான வாக்காளர்கள் வந்துவிட்டனர்.

    கேரள மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் முடிவடைவதையடுத்து இன்று மற்றும் நாளை மறுநாள் (11-ந்தேதி) இரண்டு கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.

    திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம் பத்தினம்திட்டா, இடுக்கி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள 595 உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று தேர்தல் நடத்தப்பட்டது. 471 கிராம பஞ்சாயத்துகள், 75 தொகுதி பஞ்சாயத்துகள், 7 மாவட்ட பஞ்சாயத்துகள், 39 நகராட்சிகள், 3 மாநகராட்சிகளில் உள்ள 11,168 வார்டுகளில் வாக்குப்பதிவு நடந்தது.

    இன்று நடந்த முதல்கட்ட தேர்தலில் மொத்தம் 36,630 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் ஆண்கள் 17,056 பேர். பெண் வேட்பாளர்கள் 19,573 பேர் ஆவர். மொத்தம் 15,432 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. முதலில் காலை 6 மணிக்கு மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது.

    அதன்பிறகு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து ஓட்டுப்போட்டு சென்றனர். காலையில் வாக்குப்பதிவு மந்தமாகவே நடந்தது. அனைத்து மாவட்டங்களிலும் முதல் இரண்டு மணி நேரத்தில் மிகக்குறைவான சதவீதமே வாக்குகள் பதிவாகியிருந்தது.

    பல வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே ஏராளமான வாக்காளர்கள் வந்துவிட்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று வாக்களித்தனர். மத்திய மந்திரி சுரேஷ்கோபி காலையிலேயே தனது மனைவி ராதிகா நாயருடன் திருவனந்தபுரத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் காத்து நின்று ஓட்டு போட்டார்.

    இதேபோல் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் காலையிலேயே தங்களது பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்தனர். வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வரக்கூடிய வாக்காளர்கள் அனைவரும் ஓட்டுப்போடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    ஓட்டுப்பதிவு நடைபெற்ற அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பதட்டமான வாக்குச்சாவடிகள் என்று கண்டறியப்பட்ட இடங்களில் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இன்று தேர்தல் நடைபெற்ற 7 மாவட்டங்களிலும் 70 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கேரள மாநிலத்தில் இரண்டாம் கட்டமாக திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள்(11-ந்தேதி) உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    • டிச. 9 மற்றும் 11 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது.
    • மொத்தம் 25 இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர்.

    கேரளாவில் வரும் டிச. 9 மற்றும் 11 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் அதிமுக போட்டியிடுவதாக கடந்த மாதம் அறிவித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வேட்பாளர்கள் பெயரையும் அறிவித்தார். இந்நிலையில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

    முன்னாள் அமைச்சர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம். ஆனந்தன் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இடுக்கி மாவட்டத்தில் 19 இடங்கள், பாலக்காடு மாவட்டத்தில் 4 இடங்கள், திருவனந்தபுரம் மாநகராட்சியில் 2 இடங்கள் என மொத்தம் 25 இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர். 

    கேரள மாநிலத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கட்சியின் தொண்டர்களும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, சிறந்த முறையில் தேர்தல் பணியாற்றி, கட்சி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  

    • தனியொரு மனிதனாக வெள்ளைச் சட்டை, வேட்டியுடன் கையில் ஒரு கருப்பு கைப்பையுடன் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்கிறார்.
    • எந்தக் காரியத்துக்கும் வயது ஒரு தடையில்லை என்று கூறினார்.

    கேரளாவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் 90 வயதான ஓய்வுபெற்ற அரசு ஊழியர் நாராயணன் நாயர் போட்டியிடுவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

    எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள ஆஷமன்னூர் கிராமப் பஞ்சாயத்தின் இரண்டாவது வார்டில் சுயேச்சை வேட்பாளராக நாராயணன் போட்டியிடுகிறார். இதுவே இவருக்கு முதல் தேர்தல் களம் ஆகும்.

    அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் ஆதரவாளர்களுடன் கூட்டமாகச் செல்ல, வேட்பாளர் நாராயணன் நாயர் தனியொரு மனிதனாக வெள்ளைச் சட்டை, வேட்டியுடன் கையில் ஒரு கருப்பு கைப்பையுடன் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்கிறார்.

    தனது முதுமை குறித்துக் கேட்கப்பட்டபோது, எந்தக் காரியத்துக்கும் வயது ஒரு தடையில்லை என்று நாராயணன் நம்பிக்கையுடன் கூறுகிறார். தனது வார்டு வளர்ச்சிக்காக நிறைய செய்ய வேண்டும் என்பதே தனது இலக்கு என்று அவர் குறிப்பிடுகிறார்.

    போஸ்டர்கள், பேனர்கள் ஆகியவற்றை விட மக்களை நேரடியாகச் சந்தித்தால் தான் பலன் கிடைக்கும். திருமண அழைப்பிதழ்கள் கூட நேரில் சென்று கொடுத்தால் தான் திருமணத்துக்கு வருவார்கள் என நாராயணன் தெரிவிக்கிறார்.

    இவரது நேர்மையான அணுகுமுறைக்கு வாக்காளர்கள் மத்தியிலும் வரவேற்பு நிலவுகிறது.

    கேரளாவில் டிசம்பர் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடதப்பட்டு டிசம்பர் 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.   

    • முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவின் ரோஹ்தக் தொகுதியிலும் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டது.
    • உள்ளாட்சித் தேர்தலில் 41 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின

    அரியானா உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் படி 10 நகராட்சிகளில் ஒன்பது மாநகராட்சிகளை பாஜக வென்றுள்ளது.

    மீதமுள்ள ஒரு இடமான மானேசரில் பாஜகவில் இருந்து விலகிய அதிருப்தி தலைவர் இந்திரஜித் யாதவ் வெற்றி  பெற்றார்.

    குருகிராம், பரிதாபாத், ரோஹ்தக், ஹிசார் மற்றும் மூன்று நகராட்சிகள்  உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மார்ச் 2 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மேலும், மார்ச் 9 ஆம் தேதி பானிபட் நகராட்சிக்கு தனி வாக்குப்பதிவு நடைபெற்றது.

    இவை தவிர, அம்பாலா மற்றும் சோனிபட் மேயர் பதவிகளுக்கான இடைத்தேர்தல்களும், 21 நகராட்சி குழுக்களின் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல்களும் மார்ச் 2 ஆம் தேதி அன்றே நடத்தப்பட்டன.

    இதில் பதிவான வாக்குகள் இன்று (புதன்கிழமை) காலை முதல் எண்ணப்பட்டன. கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் பாஜக முன்னிலை பெற்றதால், கட்சித் தலைவர்கள் கொண்டாட்டத்தில் மூழ்கினர்.

    காங்கிரஸ் எங்கும் வலுவான போட்டியை அளிக்க முடியவில்லை. காங்கிரஸ் முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவின் ரோஹ்தக் தொகுதியிலும் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டது. மறுபுறம், 26 வார்டு உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    முன்னதாக கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டது தெரிந்ததே. சட்டமன்றத் தேர்தலில் 68 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் 41 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.

    • கணக்கெடுப்பு முடிந்தவுடன் அதனடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.
    • புதுவையில் ஓ.பி.சி. கணக்கெடுப்பு முடியும் வரை உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை.

    புதுச்சேரி:

    புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது.

    இதற்கான அறிவிப்பில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கவில்லை. இது அரசியல் கட்சிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக எதிர்கட்சித்தலைவர் சிவா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஐகோர்ட்டில் அரசு உறுதியளித்ததுபோல ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் கமிஷன் அமைத்தது.

    இந்த கமிஷன் பிற்படுத்தப்பட்டோர் குறித்த தகவல், புள்ளிவிபரங்கள், ஆவணங்களை சேகரித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது. அனைத்து ஆய்வு பணிகளையும் முடித்த தனிநபர் கமிஷன் உள்ளாட்சி தேர்தலில் ஓ.பி.சி. பிரிவுக்கு இடஒதுக்கீடு செய்ய வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்த பரிந்துரை செய்துள்ளது.

    இந்த கணக்கெடுப்பு நடத்த கவர்னர் தமிழிசையும் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் விரைவில் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளில் வார்டு வாரியாக உள்ள பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்யும் பணி தொடங்கப்பட உள்ளது.

    இந்த கணக்கெடுப்பு முடிந்தவுடன் அதனடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. இதனால் புதுவையில் ஓ.பி.சி. கணக்கெடுப்பு முடியும் வரை உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை.

    எனவே உள்ளாட்சி தேர்தல் மீண்டும் தள்ளிப்போகிறது.

    • இலங்கையில் வருகிற மார்ச் 9-ந்தேதி உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டது.
    • உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.

    கொழும்பு:

    இலங்கை நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டால் மக்கள் அவதியடைந்து உள்ளனர்.

    இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து கடன் உதவி பெற்று இலங்கை அரசு நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளித்து வருகிறது.

    இதற்கிடையே இலங்கையில் வருகிற மார்ச் 9-ந்தேதி உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டது. இந்த நிலையில் நிதி பற்றாக்குறை காரணமாக இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    வாக்கு சீட்டு அச்சடிக்கவும், வாகனங்களுக்கு எரிபொருள் மற்றும் வாக்குசாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புக்கு நிதி வழங்க கருவூலம் மறுத்து விட்டது. போதுமான பணம் இல்லாததால் தேர்தலுக்கு நிதி ஒதுக்க முடியாத சூழல் நிலவுகிறது.

    இதுகுறித்து தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் நிமல் கூறும்போது, உள்ளாட்சி தேர்தல் குறித்த நேரத்தில் நடத்தப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் உறுதியளித்திருந்தேன். ஆனால் தேவையான நிதியை அரசாங்கம் விடுவிக்காததால் தேர்தலை எங்களால் நடத்த முடியாது என்று தற்போது கோர்ட்டில் தெரிவித்து உள்ளேன் என்றார்.

    இதனால் இலங்கை உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.

    இந்த தேர்தலுக்கு சுமார் ரூ.228 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. சம்பளம் ஓய்வூதியம் மற்றும் அத்தியாசிய சேவைகளை வழங்குவதற்கு அரசு வருமானம் போதுமானதாக இல்லாததால் தேர்தல் சாத்தியமற்றது என்று அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் 11-ந் தேதி எண்ணப்பட உள்ளது.
    • திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    மேற்குவங்க மாநிலத்தில் காலியாக உள்ள 63 ஆயிரத்து 229 உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 8-ந் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் 11-ந் தேதி எண்ணப்பட உள்ளது. இதையொட்டி அம்மாநிலத்தில் தேர்தல் தீவிரமடைந்துள்ளது. மாநில முதல்-மந்திரியும், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இதில் ஒரு பகுதியாக ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள மால்பஜார் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அவர் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

    அப்போது, பெண் ஒருவர் நடத்தி வரும் டீக்கடைக்கு சென்ற முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, அங்கிருந்த டீத்தூளை எடுத்து கிளாஸ்களில் டீ போட்டு பொது மக்களுக்கும், கட்சியினருக்கும் கொடுத்தார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களுக்க ‘நோட்டா’ விருப்பம் வழங்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
    • ஒரு நகராட்சியில் அதிகபட்சமாக 52 வார்டுகளும் ஒரு டவுண் பஞ்சாயத்தில் 21 வார்டுகளும் இருக்க வேண்டும்.

    சென்னை:

    சட்டசபை, பாராளுமன்ற தேர்தல்களில் மின்னணு எந்திரத்தில் வேட்பாளர்களின் சின்னம் தவிர கூடுதலாக ஒரு வசதியை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது.

    போட்டியிடும் வேட்பாளர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற கருத்தை தனது உரிமையாக பதிவு செய்யும் வசதி உள்ளது. அந்த விருப்பத்திற்கு 'நோட்டா' என குறிப்பிடப்படுகிறது.

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களுக்க 'நோட்டா' விருப்பம் வழங்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இனிவரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நோட்டா இடம்பெறும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் நோட்டா ஒரு பகுதியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    மாநில முனிசிபல் நிர்வாகம் ஏப்ரல் மாதம் வெளியிட்ட, அறிவிப்பு மூலம் நோட்டா நடைமுறை சாத்தியமாகியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கெடுப்பில் நோட்டா விருப்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையை மாநில அரசு நிறைவேற்ற உள்ளது.

    ஏறக்குறைய 9 ஆண்டுகளாக மாநில தேர்தல் ஆணையம் நோட்டாவை அறிமுகப்படுத்துமாறு மாநில அரசுக்கு அழுத்தம் கொடுத்தது.

    இதுகுறித்து மாநில தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இந்த நோட்டா விருப்பத்தை நீட்டிக்க அரசு அழைப்பு விடுக்க வேண்டும் என்றார்.

    நகராட்சி விதிகளின்படி ஒரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 80 லட்சத்துக்கும் அதிகமாக மக்கள் தொகை கொண்டிருந்தால் அது 230 வார்டுகளாக இருக்கலாம். ஒரு நகராட்சியில் அதிகபட்சமாக 52 வார்டுகளும் ஒரு டவுண் பஞ்சாயத்தில் 21 வார்டுகளும் இருக்க வேண்டும்.

    • தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்று இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கும்படி ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலருக்கு உத்தரவிட்டார்.
    • புகாரின் பேரில் குரும்பூர் போலீசார் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குரும்பூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 27-ந் தேதி உள்ளாட்சி தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.

    ஆழ்வார்திருநகரி ஒன்றியத்துக்கு உட்பட்ட குரும்பூர் அருகே உள்ள நாலுமாவடி பஞ்சாயத்து தேர்தலில் 7-வது வார்டில் போட்டியிட்ட நாலுமாவடி தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 48) என்ப வர் வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து ராஜேஷ் பஞ்சாயத்து துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்து வந்தார்.

    இதற்கிடையே நாலு மாவடியை சேர்ந்த அழகேசன் என்பவர், பஞ்சாயத்து துணைத்தலைவர் ராஜேசுக்கு எதிராக மதுரை ஐகோர்ட்டு கிளையில் 2021-ம் ஆண்டு டிசம்பரில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், பஞ்சாயத்து துணைத் தலைவர் ராஜேஷ் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டபோது தாக்கல் செய்த வேட்புமனு சத்திய பிரமாண பத்திரத்தில் கொலை வழக்கில் அவர் அனுபவித்த 7 ஆண்டு சிறை தண்டனையை மறைத்து 2 ஆண்டு சிறை தண்டனை என்று குறிப்பிட்டிருந்தார்.

    இவ்வாறு தேர்தலில் முறைகேடாக போட்டியிட்டு வெற்றி பெற்ற ராஜேஷ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி, தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்று இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கும்படி ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலருக்கு உத்தரவிட்டார்.

    இதனைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் ராஜேசின் வார்டு உறுப்பினர் பதவியையும், துணைத் தலைவர் பதவியையும் நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் ராஜேஷ் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாலுமாவடி தெற்கு தெருவை சேர்ந்த சுதாகரன் மனைவி அன்னலெட்சுமி (43). இவர் கடந்த ஆகஸ்டு 31-ந்தேதி ஆடுகளுக்கு இலை பறிப்பதற்காக உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பஞ்சாயத்து துணைத்தலைவராக இருந்த ராஜேஷ் வீட்டிலிருந்து வெளியே வீசப்பட்ட குப்பை பையும், மதுபாட்டில்களும் அன்ன லெட்சுமி மீது விழுந்துள்ளது. இதனை தட்டிக்கேட்ட அவருக்கு, ராஜேஷ் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வாட்ஸ்-அப்பில் அன்னலெட்சுமியை அவதூறாக பேசி ஆடியோ வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் குரும்பூர் போலீசார் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவுக்காக எந்திரங்கள் தெலுங்கானா மாநிலத்திலிருந்தும், கர்நாடக மாநிலத்திலிருந்தும் வந்தன.
    • தற்போதைக்கு உள்ளாட்சி தேர்தல் நடை பெறும் வாய்ப்பு இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த 2006-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடந்தது. உள்ளாட்சி தேர்தலில் தேர்வாவான பிரதிநிதிகள் 2011-ம் ஆண்டு வரை பதவியில் இருந்தனர். அதன்பிறகு 12 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

    இதையடுத்து கடந்த 2021 ஆகஸ்டு மாதத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தல் பணிகள் நடந்தன.

    உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவுக்காக எந்திரங்கள் தெலுங்கானா மாநிலத்திலிருந்தும், கர்நாடக மாநிலத்திலிருந்தும் வந்தன.

    இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் புதுவை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்ககோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதனை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போனது. பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் எந்திரங்கள் வைக்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும் உள்ளாட்சித்தேர்தல் நடக்கவில்லை. இதனால், மாணவிகள் இடப்பற்றாக் குறையால் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

    இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி பாரதிதாசன் மகளிர் அரசு கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் வாக்குப்பதிவு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் 3 கண்டெய்னர் லாரிகளில் நேற்று இரவு ஏற்றப்பட்டன.

    அந்த லாரிகள் 2 தெலுங்கானாவுக்கும், ஒரு லாரி கர்நாடகத்துக்கும் சென்றது.

    தற்போது பாரதிதாசன் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த எந்திரங்கள் எடுக்கப்பட்டதால், ஏற்கெனவே இடநெருக்கடியில் சிக்கி தவித்த மாணவிகள் தற்போது மீண்டுள்ளனர்.

    அதே நேரத்தில் புதுவையில் தற்போதைக்கு உள்ளாட்சி தேர்தல் நடை பெறும் வாய்ப்பு இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. வாக்குபதிவு எந்திரங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதால் புதுவையில் மீண்டும் உள்ளாட்சி தேர்தல் நடை பெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    • கவுன்சிலர்களை தேர்வு செய்ய உள்ளாட்சி தேர்தல் நடந்தது.
    • உள்ளாட்சித் தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றியை பெற்றுள்ளது.

    இங்கிலாந்தில் சமீபத்தில் கவுன்சிலர்களை தேர்வு செய்ய உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லண்டன் மேயர் தேர்தலில் தொழிலாளர் கட்சியின் சாதிக் கான் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார். ஆளும் கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர் சூசன் ஹாலை 11 புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். சுயேட்ச்சையாக போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தருண் குலாட்டியும் தோல்வியை சந்தித்தார்.

    அதேபோல் இங்கிலாந்து உள்ளாட்சித் தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றியை பெற்றுள்ளது. அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது. ஆளும் கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. பல இடங்களில் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.மேலும் இங்கிலாந்தின் வடமேற்கில் உள்ள பிளாக்பூல் சவுத் பாராளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலும் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது.

    ×