என் மலர்
வழிபாடு
- ஜெயந்தி நாதரின் பல்லக்கில் இருந்து சூரனின் பல்லக்குக்கு பட்டாசு விடப்படும். அது சூரனை சென்று தாக்கும்.
- பக்தர்கள் எழுப்பும் கந்தனுக்கு அரோகரா, குமரனுக்கு அரோகரா என்ற குரல் விண்ணை அதிர வைக்கும்.
சிக்கலில் வேல் வாங்கிய முருகப்பெருமான், சூரபத்மனை அழிப்பதற்காக போருக்கு கிளம்புகிறார். அருள் வடிவான முருகனுக்கு சூரனை வதைக்க மனமில்லை. அதனால், வீரபாகு தலைமையிலான நவவீரர்களை தூது அனுப்பினார். தேவர்களை சிறையிலிருந்து விடுவிக்கும்படி அறிவுரை கூறினார் வீரபாகு.
சூரனோ ஆணவம் என்னும் பேரிருள் வடிவம் கொண்டு யாவரையும் அழிக்க எண்ணினான். சூரபத்மனின் பிள்ளைகளாகிய பானுகோபன், அக்னி முகாசுரன், தம்பிகளான பானுகோபன், வரத்தினால் பெற்ற இந்திர ஞாலத்தேர், சிங்கவாகனம், சேனைகள் அனைத்தையும் சூரபத்மன் இழந்தான். இறுதியில் மாயப்போர் முறைகளை செய்ய தொடங்கினான். கடலில் சென்று உலகமெல்லாம் நிலை குலையும் வகையில் பெரிய மாமரமாக நின்றான். வீறுகொண்டு எழுந்த முருகன் வேலாயுதத்தை ஏவி விட்டார். அம்மாமரம் இரு கூறாக சிதைந்தது. ஒரு பாதியை மயிலாகவும், மறு பாதியை சேவலாகவும் மாற்றி ஏற்றுக்கொண்டார்.
சூரசம்ஹாரம் என்றால் அசுரனாகிய சூரபத்மனை முருகப்பெருமான் கொன்றார் என்று பொருள் கொள்ளக்கூடாது. உண்மையில் சூரனையும் ஆட்கொண்டு பெரு வாழ்வு தந்தருள்கிறார்.
முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் வென்று ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது.
இத்தகைய சிறப்புடைய முருகன்-சூரபத்மன் போர் எப்படி நடந்தது தெரியுமா?
மொத்தம் 6 நாட்கள் போர் நடந்தது. இந்த சூரசம்ஹாரம் நடந்த இடம் திருச்செந்தூர் ஆகும். ஆண்டுதோறும் கந்த சஷ்டி அன்று இங்கு கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும்.
திருச்செந்தூரில் ஐப்பசி மாத அமாவாசைக்கு மறுநாள் அதிகாலையில் மூலஸ்தானத்தின் பின்புறத்தில் வள்ளி, தெய்வானை சன்னதிகளுக்கு நடுவே உள்ள ஹோம மண்டபத்திற்கு மூலவரின் பிரதிநிதியாக வள்ளி, தெய்வானையுடன் ஜெயந்திநாதர் (முருகன்) எழுந்தருளுகிறார். ஆறுகோண வடிவில் அமைக்கப்பட்ட ஹோம குண்டத்தில் யாகம் தொடங்கும். குண்டத்தை சுற்றிலும் சிவன், அம்பிகை, நான்கு வேதங்கள், முருகன், வள்ளி, தெய்வானை, மகாவிஷ்ணு, விநாயகர், சப்தகுரு, வாஸ்து பிரம்மா, தேவர்கள், சூரியன், அஷ்ட திக்பாலகர்கள், துவாரபாலகர்கள் என அனைத்து தேவதைகளையும் கும்பத்தில் எழுந்தருளச் செய்கின்றனர். தினமும் உச்சிக்காலத்தில் யாகசாலை பூஜை முடிந்தவுடன் ஜெயந்திநாதர், சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். ஆறாம் நாளன்று சூரசம்ஹாரம் செய்வதற்காக வள்ளி, தெய்வானை இல்லாமல் முருகப்பெருமான் தனித்து கடற்கரைக்கு எழுந்தருளுகிறார்.
முன்னதாக சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் இருந்து புறப்படும் சூரன் திருச்செந்தூர் நகரில் ரத வீதிகளை வலம் வருவான்.
அப்போது சூரன் போருக்கு வருகிறேன் என்பது போலவும், போருக்கு வரவில்லை என்பது போலவும் தலையை அங்கும், இங்கும் அசைத்தபடி வருவான். சூரன் முன்னே முரசு ஒலித்தபடி செல்வார்கள்.
சூரன் கடற்கரைக்கு வந்ததும் லட்சக்கணக்கான பக்தர்கள் சூரனும், முருகனும் போர் செய்யும் காட்சியை காண ஒன்று திரண்டு நிற்பார்கள். விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் யாகசாலை பூஜை முடிவடைந்ததும் கடற்கரைக்கு வந்து விடுவார்கள். இந்த வேளையில் ஜெயந்தி நாதர், வேல்தாங்கிய படைத் தலைவராக சப்பரத்தில் கடற்கரைக்கு கம்பீரமாக எழுந்தருள்வார். அப்போது இயற்கை காட்சியில் கூட மாற்றங்கள் ஏற்படும். கடல், ஆகாயத்தின் செந்நிறமாக மாறும். கடற்கரையில் குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவுக்கு அசாதாரண அமைதி நிலவும்.
போர் தொடங்கியதும் சூரனின் சப்பரம், ஜெயந்தி நாதரின் சப்பரத்தை வலம் வரும். பின்னர் சூரன் பல்லக்கு, ஜெயந்தி நாதர் பல்லக்குக்கு முன்பு 3 முறை சென்று பின் வாங்கி செல்லும். இதைத் தொடர்ந்து ஜெயந்தி நாதரின் பல்லக்கில் இருந்து சூரனின் பல்லக்குக்கு பட்டாசு விடப்படும். அது சூரனை சென்று தாக்கும்.
சூரன் மொத்தம் 3 உருவங்கள் எடுத்து முருகனை எதிர்கொள்வான். முதலில் யானை முகன் எனும் உருவம் கொண்ட அசுரன் வலமிடமாக சாமியைச் சுற்றி வருவான். முருகன் சார்பாக அர்ச்சகர் அவன் நெற்றியில் குத்தி வீழ்த்துவார். இதைத்தொடர்ந்து உடலில் சிங்க முகா சுரன் தலை பொருத்த ப்படும். சிங்க முகன் நெற்றியிலும் வேலால் குத்தி வீழ்த்து வார்கள்.
அடுத்து சூரபத்மன் தலை அதே உடலில் பொருத்தப்படும். சூரபத்மனும் வீழ்த்தப்படுவான்.
இந்த போரின் போது பக்தர்கள் எழுப்பும் கந்தனுக்கு அரோகரா, குமரனுக்கு அரோகரா என்ற குரல் விண்ணை அதிர வைக்கும்.
சூரன் தனது தலை துண்டிக்கப்பட்டதும் வேறு தலையுடன் தோன்றி கொண்டே இருப்பான். அவனை ஜெயந்தி நாதர், வதம் செய்வதை பக்தர்கள் கண்டு களிப்பார்கள். போரின் போது ஜெயந்தி நாதருடன் தேவர் படையும், சூரனுடன் அசுரர் படையும் இருப்பது போல் பக்தர்கள் இரண்டு பிரிவாக எதிர் எதிரே வேல் மற்றும் ஆயுதங்களை வைத்து கொண்டு செல்வார்கள்.
இந்த போரின் போது ஒரு கட்டத்தில் சூரன், விநாயகர் தலையுடன், ஜெயந்தி நகர் முன்பு தோன்றுவான். அவனது மாயத்தை கண்டு சற்று தடுமாறும் ஜெயந்திநாதர், சூரனின் தந்திரத்தை புரிந்து கொண்டு அவனது யானை தலையையும் துண்டித்து விடுவார்.
நான்காவது மாமரமும், சேவலும் சூரனின் உடலில் பொருத்தப்படும். மாமரம் வெட்டுண்டதும் சேவல் பறந்து விடும். அத்துடன் சூர சம்ஹாரம் முடியும். சூரனை, ஜெயந்தி நாதர் வதம் செய்து சேவலும், மயிலுமாக ஆட்கொள்வார். பின்னர் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். சூரசம்கார நிகழ்ச்சி முடிவடைந்ததும் 6 நாட்களாக சஷ்டி விரதம் கடைபிடித்த பக்தர்கள் கடலில் குளித்து விட்டு விரதத்தை முடித்து உணவு உட்கொள்வார்கள்.
ஜெயந்திரநாதர், சூரனை சம்ஹாரம் செய்த பின்பு பிரகாரத்திலுள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுகிறார். அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும். அர்ச்சகர் கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வார். இதை சாயாபிஷேகம் என்பர். சாயா என்றால் நிழல் எனப்பொருள். போரில் வெற்றி பெற்ற தன்னை குளிர்விக்கும் விதமாக நடத்தும் அபிஷேகத்தை முருகப்பெருமானே கண்டு மகிழ்வதாக ஐதீகம். அதன்பின்பு சுவாமி, தன் சன்னதிக்கு திரும்புகிறார். அத்துடன் சூரசம்ஹாரம் நிறைவடைகிறது.
தெய்வானை திருக்கல்யாணம்:
சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு தேவமயிலாகவும் மாறி சேவை செய்தார். இவர்களது திருமணம் முதல் படைவீடான திருப்பரங்குன்றத் தில் நடந்தது. சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரிலும் கந்த சஷ்டிக்கு மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று காலையில் தெய்வானை தவம் செய்வதற்கு தபசு மண்டபத்திற்கு செல்கிறாள். முருகனை திருமணம் செய்வதற்காக தவம் இருக்கிறாள்.
மாலையில் குமரவிடங்கர், சண்முகப் பெருமானின் பிரதி நிதியாக தபசு மண்ட பத்திற்கு மயில் வாகனத்தில் சென்று தெய்வானைக்கு அருள் பாலித்து, மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்கிறார். நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள அங்கு திருமணம் நடக்கிறது. மறுநாள் சுவாமி தெய்வானையுடன் வீதி உலா செல்கிறார். அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருகிறார். 12-ம் நாளன்று மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது. அப்போது சுவாமி, அம்பாள் வீதி உலா செல்லும் போது, பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி சுவாமியை குளிர்ச்சிபடுத்துகின்றனர்.
- சூரசம்ஹாரத்தை காண பழனி கோவிலுக்கு இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வரத்தொடங்கினர்.
- பக்தர்கள் பாதுகாப்புக்காக கிரிவீதி மற்றும் மலைக்கோவிலில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பழனி:
முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த திங்கட்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. ஒரு வாரம் நடைபெறும் இத்திருவிழாவை முன்னிட்டு மலைக்கோவிலில் தினமும் உச்சிகாலத்தின்போது கல்பபூஜை, சண்முகர் தீபாராதனை, தங்கமயில் புறப்பாடு, தங்கச்சப்பரம் புறப்பாடு, வெள்ளி காமதேனு புறப்பாடு ஆகியவை நடைபெற்றன.
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு மலைக்கோவில், திருஆவினன்குடி கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் ஏராளமான பக்தர்கள் தங்கி சஷ்டி விரதம் மேற்கொண்டனர். 6-ம் நாளான இன்று பக்தர்கள் வாழைத்தண்டுடன் பழங்கள் கலந்த உணவை அருந்தி விரதத்தை முடித்துக்கொண்டனர்.
கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனையொட்டி நேற்று சூரன்களின் பொம்மை தயாரிக்கும் பணி நடைபெற்றது. இன்று நண்பகலில் உச்சிகால பூஜையை தொடர்ந்து சாயரட்சை பூஜை நடத்தப்பட்டு சூரர்களை வதம் செய்ய மலைக்கொழுந்து அம்மனிடம் சின்னக்குமாரசாமி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதன்பின் 3.15 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு சாமி பராசக்தி வேலுடன் அடிவாரம் வந்தடைவார். இதனை முன்னிட்டு இன்று காலை பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து தாரகசூரன் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணிக்குமேல் வடக்கு கிரிவீதியில் முதலாவதாக தாரகசூரவதமும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன் வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகசூரன் வதமும், மேற்குகிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடைபெறுகிறது.
பழனியின் 4 கிரிவீதிகளிலும் 4 சூரர்கள் வதம் செய்யப்படுவது தனிச்சிறப்பாகும். சூரசம்ஹாரத்திற்கு பிறகு ஆரியர் மண்டபத்தில் வெற்றிவிழா கொண்டாடப்பட்டு மலைக்கு வேல் கொண்டு செல்லப்படும். அங்கு பராசக்தி வேலுக்கு சம்ரோக்சன பூஜை செய்யப்பட்டு பின்னர் அர்த்தசாம பூஜை நடைபெறும்.
சூரசம்ஹாரத்தை காண பழனி கோவிலுக்கு இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வரத்தொடங்கினர். பகல் 12 மணிக்கு மேல் மலைக்கோவிலுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதால் அதற்கு முன்பாகவே சாமி தரிசனம் செய்ய நீண்டவரிசையில் காத்திருந்தனர். பக்தர்கள் பாதுகாப்புக்காக கிரிவீதி மற்றும் மலைக்கோவிலில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக நாளை காலை மலைக்கோவிலில் வள்ளி-தெய்வானை சமேத சண்முகருக்கும், மாலையில் பெரியநாயகி அம்மன் கோவிலில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர்(பொறுப்பு) லட்சுமி மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
- சூரசம்ஹார நிகழ்ச்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் காணும் வகையில் 6 இடங்களில் கோவில் நிர்வாகம் சார்பில் எல்.இ.டி. டி.வி.க்கள் அமைக்கப்பட்டுள்ளது.
- சூரசம்ஹாரம் நடைபெறும் திருச்செந்தூர் கடற்கரையில் 13 கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 13-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அன்று முதல் கோவிலில் பக்தர்கள் விரதம் இருக்க தொடங்கினர்.
விழா நாட்களில் தினமும் அதிகாலை நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், ஜெயந்திநாதர் யாகசாலை புறப்பாடு, மூலவர், சண்முகருக்கு உச்சிகால பூஜைக்கு பின்னர், யாக சாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு தீபாராதனை, பின்னர் தங்கச்சப்பரத்தில் சுவாமி எழுந்தருளல், மாலையில் ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதினம் கந்தசஷ்டி மண்டபத்துக்கு எழுந்தருளினார். அங்கு பல்வேறு அபிஷேகத்துக்கு பின், சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தங்க ரதத்தில் கிரிவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு நேற்று சில பக்தர்கள் சிவன், கிருஷ்ணர், விநாயகர், முருகர், ஔவையார், நாரதர் உள்ளிட்ட சுவாமி வேடங்கள் அணிந்து கோவில் கிரிபிரகாரத்தில் வலம் வந்தனர்.
கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடக்கிறது. இதையொட்டி இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகமும் நடந்தது. மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.
மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு கடற்கரையில் எழுந்தருள்கிறார். அங்கு சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. சூரசம்ஹாரம் முடிந்ததும் சுவாமி ஜெயந்தி நாதருக்கும் அம்பாளுக்கும் சந்தோஷ மண்டபத்தில் அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் கிரிப்பிரகார உலா வந்து கோவிலை சேர்ந்த பின் அங்கு சாயாபிஷேகம் நடக்கிறது.
சூரசம்ஹார நிகழ்ச்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் காணும் வகையில் 6 இடங்களில் கோவில் நிர்வாகம் சார்பில் எல்.இ.டி. டி.வி.க்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சூரசம்ஹாரம் நடைபெறும் திருச்செந்தூர் கடற்கரையில் 13 கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
மேலும் 80 இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. நகரை சுற்றி 20 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
சூரசம்ஹாரத்தை காண வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கடற்கரையில் கம்புகளால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருக்கிறது. சூரசம்ஹாரத்தை காண உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் அலை கடலென திரண்டு வருகிறார்கள்.
இன்று மாலை நடைபெறும் சூரசம்ஹாரத்தை காண வேண்டி நேற்று அதிகாலை முதலே உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். அவர்கள் கார், வேன், அரசு மற்றும் தனியார் பஸ்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் மூலமாகவும், பாதயாத்திரையாகவும் பக்தர்கள் அலைகடல் என கோவிலில் திரண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் திருச்செந்தூரில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்துள்ளனர். பக்தர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் மற்றும் திருச்செந்தூர் நகராட்சி, மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.
திருசெந்தூர் கடற்கரை பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்ட 21 தற்காலிக கூடாரங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து வரும் நிலையில் மேலும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகிறார்கள்.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
7-ம் திருநாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது. பின்னர் 5 மணிக்கு தெய்வானை அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படுகிறார். 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுக்கிறார். பின்னர் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
- சிகர நிகழ்ச்சியாக கார்த்திகை தேரோட்டம் வருகிற 26-ந்தேதி காலையில் நடைபெறுகிறது.
- விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம்:
முருகப்பெருமானின் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் கொண்டாடப்படும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா பிரசித்தி பெற்றது. கார்த்திகை மாதந்தோறும் 10 நாட்கள் கொண்டாடப்படும் இந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக காலை உத்தமர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு பால், பன்னீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு காலை 7:15 மணிக்கு கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான கொடியேற்றம் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது.
தொடர்ந்து தங்கமுலாம் பூசப்பட்ட கொடிக்கம்பத்தில் சந்தனம், பால், தயிர் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தர்ப்பை புல், மா இலை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீப ஆராதனைகள் நடைபெற்றன.
விழாவினை முன்னிட்டு நாள்தோறும் காலையில் தங்க சப்பரத்திலும் மாலையில் தங்கமயில் வாகனம், அன்னவாகனம், பூத வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகம் 25-ந்தேதி நடைபெற்றது. இதில் சுப்பிரமணிய சுவாமிக்கு நவரத்தினங்கள் பதித்த கிரீடம் செங்கோல் வழங்கி சிறப்பு ஆராதனை நடைபெறும். சிகர நிகழ்ச்சியாக கார்த்திகை தேரோட்டம் வருகிற 26-ந் தேதி காலையில் நடைபெறுகிறது. அன்று மாலையில் கோவிலில் பாலதீபம் ஏற்றப்பட்டு மலையில் மகாதீபம் ஏற்றப்படும்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- திருப்பதியில் நேற்று 67,140 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 26,870 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
- நேரடி இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர புஷ்ப யாகம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
புஷ்ப யாகத்தின்போது கோவிலில் ஏழுமலையான் சமேத ஸ்ரீதேவி பூதேவி உற்சவர்களுக்கு சம்பங்கி மண்டபத்தில் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.
இதில் பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள் உட்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.
நாளை மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை புஷ்பயாகம் நடத்தப்படுகிறது.
இதற்காக 7 டன் வரை பலவிதமான பூக்கள் கொண்டுவரப்படுகிறது. மாலையில் சகஸ்ரதீப அலங்கார சேவை முடிந்து ஏழுமலையான் கோவிலின் 4 மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.
இதையொட்டி இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை அங்குரார்ப்பணம் நடைபெற உள்ளது.
இன்று சகஸ்ரதீப அலங்கார சேவையை தேவஸ்தானம் ரத்து செய்தது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பஞ்சமி தீர்த்தத்தையொட்டி ஏழுமலையான் கோவிலில் இருந்து சீர்வரிசை கொண்டு செல்லப்பட்டது.
மேலும், புஷ்ப யாகத்தையொட்டி நாளை (ஞாயிறு) கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, பிரமோற்சவம் ஆகியன ரத்து செய்யப்பட்டுள்ளது. தோமாலை மற்றும் அர்ச்சனை சேவைகள் பக்தர்கள் இல்லாமல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் நேற்று 67,140 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 26,870 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கை ரூ.4.01 கோடி வசூலானது.
நேரடி இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- சகல சுப்பிரமணிய சுவாமி தலங்களில் கந்தசஷ்டி சூரசம்கார விழா.
- குச்சனூர் சனிபகவான் சிறப்பு அபிஷேகம்
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, கார்த்திகை-2 (சனிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: பஞ்சமி காலை 10.14 மணி வரை பிறகு சஷ்டி
நட்சத்திரம்: உத்திராடம் நண்பகல் 1.26 மணி வரை பிறகு திருவோணம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சகல சுப்பிரமணிய சுவாமி தலங்களில் கந்தசஷ்டி சூரசம்கார விழா. திருச்செந்தூர் முருகப் பெருமான் கடற்கரையில் சூரசம்கார அற்புதக் காட்சி. திருப்பரங்குன்றம், சுவாமிமலை தலங்களில் கார்த்திகை திருவிழா தொடக்கம். குச்சனூர் சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் ஸ்ரீ வரதராஜருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆதரவு
ரிஷபம்-கண்ணியம்
மிதுனம்-வெற்றி
கடகம்-நலம்
சிம்மம்-தாமதம்
கன்னி-விருத்தி
துலாம்- செலவு
விருச்சிகம்-அமைதி
தனுசு- பக்தி
மகரம்-வரவு
கும்பம்-உழைப்பு
மீனம்-பயணம்
- 54 ஆண்டுகளுக்கு பிறகு சூரசம்காரம் நிகழ்ச்சி.
- குன்றத்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
பூந்தமல்லி:
முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழாகடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகின்றன. இந்தநிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்கார விழா நாளை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்து முருகன் கோவில்களிலும் நடைபெற்று வருகிறது.
குன்றத்தூர் முருகன் கோவிலில் 54 ஆண்டுகளுக்கு பிறகு சூரசம்காரம் நிகழ்ச்சி மீண்டும் நடைபெற உள்ளது. இதையொட்டி மலை அடிவாரத்தில் உள்ள கந்தழீஸ்வரர் கோயிலில் இன்று மாலை 4 மணிக்கு முருகன் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து நாளை மாலை மலை அடிவாரத்தில் சூரசம்காரம் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. 54 ஆண்டுகளுக்குப் பிறகு சூரசம்கார நிகழ்ச்சி நடைபெறுவதை காண சென்னை சுற்று வட்டாரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சூரசம்காரம் நடைபெறும் இடம் இன்று பொக்லைன் எந்திரம் மூலம் சுத்தம் செய்து, சமன் செய்யும் பணிகள் நடை பெற்றது. மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. தீயணைப்பு, ஆம்புலன்ஸ் போன்ற உயிர்காக்கும் வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கோவிலுக்கு பக்தர்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் பூந்தமல்லி, பல்லாவரம், தாம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து குன்றத்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
திருப்போரூரில் உள்ள கந்தசாமிகோவிலில் கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளான நாளை சூரசம்ஹார நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற உள்ளது. இதையொட்டி பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாக அலுவலகம், கிழக்கு மாடவீதி, உள்ளிட்ட மூன்று இடங்களில் பெரிய எல்.இ.டி ஸ்க்ரீன் அமைக்கப்பட்டு கந்த சஷ்டி விழாவை பக்தர்கள் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்கள் கந்த சஷ்டி நிறைவு பெற்றவுடன் கோயில் உள்ளே முருகப்பெருமானை தரிசனம் செய்யும் வகையில் பல்வேறு சிறப்பு வசதிகளையும், தேவையான குடிநீர் உள்ளிட்டு அடிப்படை வசதி களையும் ஏற்படுத்தி உள்ளது. நாளை மதியம் ஒரு மணிக்கு மேல் பைபாஸ் சாலையில் இருந்து கோவிலுக்கு வரும் வழி மற்றும் மாட வீதியை சுற்றிலும் வாகனங்கள் கோயில் பகுதியில் உள்ளே வராதவாறு ஆங்காங்கே நிறுத்தப்பட்டு நடந்து சென்று தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
பக்தர்கள் விரதம் இருந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு சூரசம்ஹாரம் நடைபெறும் அன்று மாலை தங்களின் குழந்தைகளுக்கு முருகர் வேடமிட்டு வேலுடன் சூர பொம்மைகளை வதம் செய்வர். முருகர் வேடமிடும் குழந்தைகள் பயன்படுத்தும் கிரீடம், வேல் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்ய கோயில் அருகே தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
சோழவரம் அருகே சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரி பாலசுப்ரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு இன்று மதியம் ஸ்ரீசண்முகர் அபிஷேகமும், மாலை ஸ்ரீ சண்முகர்வேல் வாங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.பின்னர், பரதநாட்டிய நிகழ்ச்சியும் சுவாமி பிரகார புறப்பாடும் நடைபெறுகிறது.நாளை காலை யாகசாலை பூஜைகள், கலச பூஜைகள், மகா பூர்ணாகுதி,கலசபிஷேகம் உள்ளிட்டவை நடை பெறுகிறது.
மாலை 4 மணிக்கு மேல் கோவில் எதிரே சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பு அபிஷேகம்,சந்தன காப்பு அலங்காரம்,மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெறுகிறது.அன்று மாலை 6 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறதுஇரவு 8 மணிக்கு பூக்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் மங்கள வாத்தியம் முழங்க திருவீதி உலா வருகிறார். நேற்று நடைபெற்ற சத்ருசம்ஹார அர்ச்சனையில் சுற்று வட்டாரத்தைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவிலின் செயல் அலுவலர் செந்தில்கு மார் தலைமையில் ஊழி யர்களும், பணியா ளர்களும் செய்து உள்ளனர்.
பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்தில் உள்ள பாலசுப்பிரமணிய கோவிலில் நாளை சூரசம்காரம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. நாளை மறுநாள் மாலை திருக்கல்யாண நடைபெறுகிறது.
இதைப் போல் பொன்னேரி அடுத்த பெரும்பேடு ஸ்ரீ முத்துக்கு மாரசாமி கோயிலில் சாமி ஊர்வலதுடன் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருத்தணி முருகன் கோவிலில் மட்டும் நாளை சூரசம்காரம் நடைபெறாது. அன்று கோவிலில் புஷ்பா ஞ்சலி நடைபெறும். இதையொட்டி காலை 11 மணிக்கு மலைக்கோயில் உள்ள மூலவர் முருகப்பெ ருமா னுக்கு தங்க கவசமும், சிறப்பு அலங்காரமும் நடைபெறும்.
அதைத்தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு முருகன் கோயிலின் உபக்கோயிலான சுந்தர விநாயகர் கோவிலில் இருந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து கொ ண்டுவரப்பட்ட மலர்களை கோயில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் ஊர்வலமாக சரவணப்பொய்கை வழியாக மலைக்கோயிலுக்கு கொண்டு வருவார்கள்.
பின்னர் காவடி மண்டபத்தில் எழுந்தருளிய சண்முக பெருமானுக்கு அனைத்து வகையான மலர்களால் புஷ்பாஞ்சலி மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது.
விழாவில் ஆந்திரா, சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், அரக்கோணம், திருத்தணி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி முருகப்பெருமானுக்கு தினந்தோறும் லட்சார்ச்சனை நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான சூரசம்கார விழா நாளை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் மற்றும் தலைமை சிவாச்சாரியார் காமேஸ்வர குருக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர், கழிவறை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
- அறுபடை வீடுகளில் முதலாம் படைவீடு திருப்பரங்குன்றம்.
- அம்மனிடம் சக்தி வேல் பெறும் வேல் வாங்குதல் நிகழ்ச்சி.
திருப்பரங்குன்றம்:
முருகப்பெருமமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படைவீடாக போற்றப்படும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கந்தசஷ்டி விழாவும் ஒன்று. ஏழு நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 13-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குழந்தை பாக்கியம், திருமணம் உள் ளிட்ட பல்வேறு வேண்டுதல்களுக்காக காப்பு கட்டி கோவில் வளாகத்திலேயே தங்கி விரதம் இருந்து வருகின்றனர். விழாவினை முன்னிட்டு தினமும் காலை 11 மணி, மாலை 5.30 மணி என இருவேளைகளிலும் சண்முகா அர்ச்சனை நடைபெற்று வருகிறது.
மேலும் உற்சவர் சுப்பி ரமணிய சுவாமி தெய்வா னையுடன் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளி கோவில் திருவாச்சி மண்டபத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் ஐந்தாம் நாள் நிகழ்ச்சியாக இன்று மாலை 6.30 மணி அளவில் சூரனை வதம் செய்ய சுப்பிரமணிய சுவாமி அம்மனிடம் சக்தி வேல் பெறும் வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தொடர்ந்து நாளை மாலை 6.30 மணி அளவில் கோவில் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னி லையில் சூரசம்ஹார லீலை நடைபெறும். விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக நாளை மறுதினம் 19-ந்தேதி காலையில் தேரோட்டமும், மாலையில் பாவாடை தரிசனமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது.
- சிரத்தில் கொண்டு சிவனை மதியாது யாகம் செய்தான்.
- சிவனால் தோற்றுவிக்கப்பட்ட வீரபத்திர கடவுளால் கொல்லப்பட்டான்.
பிரம்மதேவனுக்கு தக்கன், காசிபன் என்னும் இரு மகன்கள் இருந்தார்கள். அவர்களுள் தக்கன் சிவனை நோக்கித் கடுந்தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றிருந்தான்.
ஆனால் வரத்தின் வலிமையைச் சிரத்தில் கொண்டு சிவனை மதியாது யாகம் செய்தான். இதனால் சிவனால் தோற்றுவிக்கப்பட்ட வீரபத்திர கடவுளால் கொல்லப்பட்டான்.
காசிபனும் கடுந்தவம் புரிந்து சிவனிடம் இருந்து மேலான சக்தியைப் பெற்றான். ஒருநாள் அசுரர்களின் குருவான சுக்கிரனால் (நவக்கிரகங்களுள் வெள்ளியாக கணிக்கப்பெறுபவர்) ஏவப்பட்ட "மாயை" என்னும் அரக்கப் பெண்ணில் மயங்கி தான் பெற்ற தவ வலிமை எல்லாவற்றையும் இழந்தான்.
இதனைத் தொடந்து காசிபனும் மாயை என்னும் அசுரப் பெண்ணும் இணைந்து மனித தலையுடன் கூடிய சூரபத்மனும், சிங்க முகம் கொண்ட சிங்காசுரனும், யானைமுகம் கொண்ட தாரகாசுரனும், ஆட்டின் முகம் கொண்ட அசமுகி என்ற அசுர குணம் கொண்ட பிள்ளைகளைப் பெற்றனர்.
இவர்களுள் சூரபத்மன் சர்வலோகங்களையும் அரசாளும் சர்வ வல்லமைகளைப் பெற எண்ணி சுக்கிலாச்சாரியாரிடம் உபதேசம் பெற்று சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்தான். அதன் மூலம் 108 யுகங்கள் உயிர் வாழவும், 1008 அண்டங்களையும் அரசாளும் வரத்தையும், இந்திரஞாலம் எனும் தேரையும், சிவசக்தியால் அன்றி வேரு ஒரு சக்தியாலும் அவனை அழிக்க முடியாது என்னும் வரத்தையும் பெற்றான்.
இவ்வரத்தின் பயனாக சூரன் தம்மைப்போல் பலரை உருவாக்கி அண்ட சராசரங்களை எல்லாம் ஆண்டு வந்தான்.
சூரபத்மன் பதுமகோமளை என்னும் பெண்ணை திருமணம் செய்தான். வீரமகேந்தி ரபுரியை ராசதானியாகக் கொண்டு ஆட்சி செய்து வந்தான்.
அவனுக்கு பதுமகோமளை மூலம் பானுகோபன், அக்கினிமுராசுரன், இரணியன், 10 தலை களைக் கொண்ட-வச்சிரவாகு ஆகிய நான்கு மகன்களும், வேறு மனைவியர் மூலம் மூவாயிரம் பேர் (3000) பிறந்தனர். இவர்களுடன் இன்னும் 120 பிள்ளைகள் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
சூரபத்மன் ஆணவமாக, அதர்மமாக நடந்து கொண்டதால் அவனை முருகன் அழித்தார். இதை சூரசம்ஹாரம் என்கிறோம்.
இந்த சம்ஹாரம் எங்கு நடந்தது? எப்படி நடந்தது? எத்தனை நாட்கள் நடந்தது? என்பன போன்றவற்றை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு நாம் புராண கால நிகழ்வுக்கு செல்ல வேண்டும்.
அசுரர்களில் நம்பர்-ஒன் அசுரனாக இருந்த சூரபத்மன் வீரமகேந்திரபுரி என்ற நாட்டில் வசித்து வந்தான். அந்த நாடு ஒரு குட்டித்தீவாகும்.
இலங்கைக்கும் தெற்கே அந்த தீவு இருந்தது. லெமூரியா கண்டம் அழிந்தபோது அந்த தீவும் கடலால் சூழப்பட்டது என்கிறார்கள். தற்போது அந்த தீவு கடலுக்குள் மூழ்கி உள்ளது.
அந்த தீவுக்கு செல்ல திருச்செந்தூர் ஏற்ற இடமாக இருந்தது. எனவே திருமால், பிரம்மன், இந்திரன் முதலான தேவர்கள் போற்ற முருகப் பெருமான் அத்தலத்தில் எழுந்தருளினார்.
வீரவாகுதேவர் தூது செல்லல்:
முருகப்பெருமான் புதிதாக கட்டப்பட்ட ஆலயத்தில் அமர்ந்து, தேவகுருவான குருபகவானிடம் சூரபத்மனின் முழுக் கதையையும் சொல்லுமாறு கேட்டார். அதன் பின்னரே வீரவாகுதேவரை மட்டும் சூரபத்மன் ஆட்சிசெய்யும் வீரமகேந்திரபுரத்திற்கு தூது அனுப்ப முடிவானது.
முருகப் பெருமான் வீரவாகுதேவரை சூரனிடம் தூது அனுப்பிச் சிறை வைத்த தேவர்களை விடுதலை செய்யுமாறு செய்தி அனுப்பினார். தூதின்போது, வீரவாகு சிறைப்பட்ட அமரர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு சூரனிடம் தூது உரைத்தார்.
ஆனால் முருகன் என்ற பாலகனுக்கு அடிபணிந்து நான் தேவர்களை விடுதலை செய்ய வேண்டுமா? அது நடக்காத காரியம் என்று கூறி சூரபத்மன் முழங்கலானான்.
சூரனின் ஆணவத்தால் தூது முறிந்தது. அது மாத்திரமன்றி தூது சென்ற வீரவாகு தேவரையும் சிறையிலடையுங்கள் என சூரன் உத்தரவிட்டான்.
வீரவாகுதேவரை சிறைப்பிடிக்க சென்ற அவுணப் படையுடன் வீரவாகுதேவர் போர்புரிந்தார். அப்போது நடந்த போரில் சூரனின் புத்திர னான வச்சிரவாகுவும் அசுரர் தலைவனான சகத்திர வாகு, ஆகிய இருவரும் வீரவாகு தேவரினால் சம்காரம் செய்யப்பட்டனர்.
திருச்செந்தூரில் திருமால், பிரமன், இந்திரன் முதலிய தேவர்கள் போற்ற சிங்காசனத்தில் எழுந்தருளி இருந்த முருகரிடம் வீரவாகுதேவர் தூது நிகழ்வுகளை எடுத்துரைத்தார். முருகனும் இனியும் தாமதம் செய்யக்கூடாது என்று முடிவு செய்து திருச்செந்தூரில் இருந்து சூரனின் ராசதானியாகிய வீரமகேந்திரபுரி செல்ல தீர்மானித்தார்.
கந்தப்பெருமான் வீரபாகு தேவரை நோக்கி "பாவங்களை அளவில்லாமல் புரிந்து கொண்டிருக்கும் சூரபத்மன் முதலான அசுரர்களை அழித்து, தேவர்கள் துன்பம் நீங்கி, உலகம் நலம் பெறுவதற்காக இப்பொழுதே படையெடுத்து வீரமகேந்திரபுரிக்குச் செல்ல வேண்டும். `நம் தேரைக் கொண்டுவா" என்று கட்டளை யிட்டார். பிரம்ம தேவர் அன்னப்பறவை மீதும், திருமால் கருடன் மீதும், இந்திரனும், வீரபாகு தேவரும் லட்சக்கணக்கான தெய்வ வீரர்களும் மற்றைய தேவர்களும் தத்தம் வாகனங்கள் மீதும் ஏறிக் கந்தவேளைச் சூழ்ந்து சென்றார்கள்.
நினைத்த மாத்திரத்திலேயே எல்லாப் புவனங்களையும் அழிக்கும் ஆற்றல் பெற்ற படைத்தலைவர்கள் நூற்றி யெட்டுப் பேரும் தொடர்ந்தார்கள். அதனை அடுத்து இரண்டாயிரம் பூதப்படைகளும் ஆரவாரத்துடன் புறப்பட்டன. வானவர்கள் பூ மழை பொழிந் தார்கள். பேரிகை, காளம், கரடிகை பல வாத்தியங்கள் முழங்கின. முருகப்பெருமானுடன் சென்ற பூதப்படைகளின் பேரொலி எங்கும் ஒலித்தது. அவர்கள் சென்றபோது ஏற்பட்ட புழுதி சூரிய சந்திரர்களுடைய ஒளியையும் மறைத்து விட்டதாம்.
கடலில் பூத சேனைகள் இறங்கினார்கள். அவர்களுக்கு கடலே கணுக்கால் அளவுதான் இருந்தது. கடலில் இருந்து பெரிய பெரிய மீன்களும் திமிங்கலங்களும் சிறு புழுக்கள் போன்று இருந்தன.
பூதப்படை இறங்கி கலக்கியதால் அது சேறானது. அந்த சேறு உலர்ந்தபின் புழுதியாகி எங்கும் பறந்தது. வீரமகேந்திரபுரி (சூரனின் ராசதானி) தென்கடலில் இருந்த ஒரு தீவு (தற்பொழுது அது நீரில் மூழ்கி உள்ளது). முருகப் பெருமான் வீரமகேந்திரபுரியை நோக்கி புறப்பட்டார். அப்போது பிரமன், திருமால், இந்திரன் ஆகிய மூவரும் சுவாமியை வணங்கி, "மகா பாவியாக உள்ள சூரபத்மன் இருக்கும் மகேந்திரபுரி தங்கள் திருப்பாதம் பதியத் தகுதி பெற்றதல்ல. அந்நகருக்கு அடுத்த எல்லையாகிய இங்கேயே தங்கியிருந்து போர்செய்வதற்குப் பாசறை அமைத்துக் கொள்ளலாம்" என்று வேண்டிக் கொண்டார்கள். முருகன் அந்த வேண்டு கோளை ஏற்றுக் கொண்டார்.
தேவதச்சனை அழைத்து `உடனே விரைந்து இங்கு ஒரு பாசறை ஏற்படுத்து" என்று எம்பெருமான் ஆணையிட்டார். தேவதச்சன் உடனே மாடகூடங்களும் மண்டபங்களும் சோலைகளும், வாவிகளும் கொண்ட பாசறை ஒன்றை மனத்தால் நிர்மாணம் செய்து அப்படியே அதை ஸ்தூல வடிவிலும் கட்டினான். அந்தப் பாசறைக்கு "ஏமகூடம்" என்று பெயர் வைத்தார்கள்.
எம்பெருமானின் தேர் கீழே இறங்கியது. சுவாமி ஏமகூடத்தின் வீதிகளில் பூத சேனை களை நிறுத்தினார். லட்சத்தொன்பது வீரர் களோடும், தேவர்களோடும் கோவிலினுள் சென்று அமர்ந்தார் முருகப் பெருமான். அந்த ஏமகூடமே கதிர்காமம் என்பது ஐதீகம்.
ஏமகூடத்தில் இருந்து (கதிர் காமத் தில்) போர் நடந்தது.
பானுகோபன் வதைப்படலம்:
தாரகனையும் அவனுக்குத் துணை நின்ற கிரவுஞ்சத்தை யும் பிளந்து அழித்துப் பின், தருமகோபன் (சூரனின் மந்திரி), சூரனின் மகன் அக்கினி முகாசுரன் உள்ளிட்ட மூவாயிரம் (3000) பேரும் இறந்தபின் சூரனின் மகனான பானுகோபன் போருக்குச் சென்றான்.
பானுகோபன் மாயாஜால வித்தைகள் செய்து போர்செய்யும் வல்லமை படைத்தவன். சிறந்த சிவ பக்தன். நீதியாக நடப்பவன். சிவனே முருகனாக அவதரித்து போருக்கு வந்துள்ளார், தேவர்களை விடு வித்தால் நாமும் நெடுநாட்கள் வாழலாம் என தந்தையாகிய சூரனுக்குக் கூறியும் அவன் ஆணவம் அதை ஏற்றுக்கொள்ள வில்லை.
அதனால் சூரன் தானே போருக்குச் சென்று முருகனை யும் அவன் சேனையையும் அழிக்கப் போவதாக வீராவேசம் கொண்டு போருக்குச் செல்ல ஆயத்தமானான். தான் மூத்தமகன் இருக்க தந்தை போருக்கு செல்வது சரியில்லை என கூறிய பானுகோபன் தான் போருக்குச் செல்ல அனுமதி தரும்படி சூரனிடம் வேண்டினான். சூரனும் மகனான பானுகோபனை ஆசீர்வதித்து போருக்கு அனுப்பி வைத்தான்.
பானுகோபன் நன்நீர்க் கடலில் முருகன் சேனையை ஆழ்த்த முருகன் அதை முறியடித்தார். அப்போது பானுகோபனும் முருகன் வேலுக்கு பலியானான்.
சூரன் சம்காரம்:
சூரன் அண்டம் விட்டு அண்டம் பாயும் வரம் பெற்றவன். சிறந்த சிவபக்தன். ஆணவமலத்தால் பீடிக்கப்பட்டு அதர்ம வழியில் சென்றான்.
தன் சொந்தபந்தங்களையும், துணை நின்ற படைச் சேனைகளையும் இழந்து செய்வதறியாது நின்ற சூரனின் ஆணவம் அப்போதும் அடங்கவில்லை. தானே போருக்கு செல்வதாக முடிவு செய்து முருகப் பெரூமான் முன் தோன்றி சரமாரியாக அம்புக்கணைகளைத் தொடுத்தான்.
அவையாவும் முருகவேளின் கடைக்கண் பார்வையால் அழிந்தன. சூரன் தனது மாயாஜாலங்களினால் பலவாறாக தோன்றி போர் செய்தான். அப்போது முருகன் சூரனை நோக்கி இப்போதும் நீ உயிர்வாழலாம் தேவர்களை சிறையில் இருந்து விடுவித்து விடு என்று அறிவுறுத்தினார்.
அப்போதும் அவனின் ஆணவம் அடங்க வில்லை. அதனால் போர் செய்யவே துடித்தான்.
வீரமகேந்திரபுரத்தில் பலப்பல மாயங்கள் செய்து போர் புரிந்தான் சூரன். கடலாய், இருளாய் மாறி மாறிச் செய்யும் போர் எதுவும் சூரனுக்கு உதவவில்லை. உதவிசெய்ய இருந்த உற்றமும் சுற்றமும் அழிந்து உறவும் அற்றுப் போனதினால் சூரனும் மயங்கித் தத்தளித்தான்.
தன்னுடன் போர் செய்ய வந்தது இறைவனே என அறிந்தும், அடிபணிய ஆணவம் விடவில்லை.
முருகன் சூரனின் ஆணவத்தை அடக்கும் பொருட்டு தன் விஸ்வரூபத்தைக் காட்டினார். எல்லாம் வல்ல பரம்பொருள் தாமே என பரமேசுவர வடிவம் காட்டினார். சிவனும், அவன் மகனும் மணியும் ஒலியும் போல ஒருவரே என்றுணர்த்தினார். தன் தன்மை மாறாது போர் செய்தார்.
சூரசம்காரம் என்றழைக்கப்படும் அந்த போர் எப்படி நடந்தது என்பதை நாளை காணலாம்.
- சிக்கலில் சிங்காரவேலவர் கோவில் உள்ளது.
- வேல்நெடுங்கன்னி அம்மனிடம், முருகன் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலவர் கோவில் உள்ளது. இந்த கோவில் புகழ்பெற்ற முருகன் தலங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் இந்த கோவிலில் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழா பிரசித்தி பெற்றது.
இக்கோவிலில் உள்ள வேல்நெடுங்கன்னி அம்மனிடம், முருகன் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் செய்ததாக கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
வேல்நெடுங்கன்னியிடம், வேல் வாங்கும் போது முருகனின் முகம் மற்றும் திருமேனி முழுவதும் வியர்வை சிந்தும் அற்புத காட்சி இன்றளவும் காணப்படுகிறது. இந்த காட்சியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த 13-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 7.30 மணிக்கு நடந்தது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் முருகபெருமான் வள்ளி, தெய்வானையுடன் தேரில் எழுந்தருளினார். இதை தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு முக்கிய வீதிகளில் சென்று தேர்நிலையை அடைந்தது. இதை தொடர்ந்து இரவு வேல் நெடுங்கன்னி அம்மனிடம், சிங்காரவேலவர் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
நாகை போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- துரட்டி மரம் என்ற மிகப் பழமையான மரம் ஒன்று உள்ளது.
- வள்ளி- தெய்வானை இரு திருவுருவங்களும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.
கந்தசஷ்டி கவசப் பாடல் வரிகள், பல வீடுகளில் ஒலிப்பதை நாம் கேட்டிருப்போம். இறைவழிபாட்டில் `காக்க..' என்று தொடங்கியோ அல்லது இறுதியாக முடித்தோ பாடும் பாடல்களை `கவச மாலை' என்று கூறுவது செய்யுள் மரபு. (கவசமாக இருந்து தங்களை காத்தருள வேண்டும் என்பதன் அடிப்படையில் பாடப் பெறுவதால் இப்படி கூறுவர்). பிற்காலத்தில் வழங்கப்பட்ட கவசமாலை நூல்களில் கந்தசஷ்டி கவசமே, பெரும்பான்மையினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு இன்றளவும் பாடப்பட்டு வருகிறது.
`ஞானப்பழத்தைப் பெற தனக்கு தகுதி இல்லையா' என்ற கேள்வியுடன், பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு பழனிமலை (திருஆவினன்குடி) மீது தனித்து அமர்ந்தவர் முருகப்பெருமான். அதைத்தவிர அவர் வீற்றிருக்கும் திருப்பரங்குன்றம், திருவேரகம் (சுவாமிமலை), திருச்செந்தூர், திருத்தணிகை, பழ முதிர்சோலை ஆகிய படைவீட்டு தலங்களும் சிறப்பு மிக்கதாக போற்றப் படுகிறது. அறுபடை தலங்களையும் சஷ்டி திரு நாளில் தரிசிக்கச் சென்ற ஒரு முருக பக்தர், தன்னை காத்திட வேண்டி முருகப்பெருமானைப் வேண்டிப்பாடியதே 'கந்தசஷ்டி கவசம்'. அந்த பக்தரின் பெயர், பாலதேவராயசுவாமி. இவரது காலம் 19-ம் நூற்றாண்டு.
கந்த சஷ்டி கவசத்தை பாலதேவராய சுவாமிகள் முதலில் பழனியில் ஆரம்பித்து, இதர ஐந்து படைவீடு களுக்கும் சென்று பாடி முடித்தார். கவசமாலை பாடுவோர் அப்பாடல்கள் யாருக்காக அல்லது யாரைக் குறித்து, யாரால் பாடப்பெற்றது என்பதை பாடல் வரி களிலேயே உட்புகுத்தி எழுதுவது வழக்கம். அதை இப்பாடலைக் கேட்கும்போது அறியலாம். கந்தசஷ்டி கவச பாடல் அடங்கிய நூலை, பாலதேவராய சுவாமி அரங்கேற்றிய திருத்தலம், ஈரோடு அருகில் உள்ள சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆகும். கந்தசஷ்டி கவசத்தில் வரும் `சிரகிரி வேலவன்' எனும் வரிகள், சென்னிமலை முருகப்பெருமானைக் குறிப்பதாகும்.
தலச்சிறப்பு
சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆறுபடை வீடுகளுக்கும் முந்தைய கோவிலாகவும், நிகரான பெருமையை உடையதாகவும் கூறப்படுகிறது. சிவபெருமான் திருமணத்தைக் காண, தென்கோடி மக்கள் அனைவரும் வடகோடியில் குவிந்தனர். அப்போது வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர்ந்தது. இதை சமன் செய்ய, அகத்தியரை தென்கோடிக்கு செல்லுமாறு சிவன் பணித்தார். இதனால் சிவன் - பார்வதியின் திருமணக் கோலத்தை காணமுடியாமல் போய்விடுமோ என அகத்தியர் வருந்தினார். இதை உணர்ந்த சிவபெருமான், `என் திருமணக் கோலத்தை நீ விரும்பும் இடத்தில் காட்டியருள்வேன்` என்று கூறினார்.
இதையடுத்து தென்திசை நோக்கி வந்த அகத்தியரை, அசுரர்களின் தலைவனான இடும்பாசுரன் சந்தித்து, தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி பணிந்தான். அகத்தியரும், இடும்பாசுரனை சீடனாக ஏற்றார். ஒருநாள், தென்திசை நோக்கிய அவசர பயணத்தால், தன் சிவ பூஜைக்குரிய பொருட்களை அருகில் உள்ள மலையில் இருந்து எடுத்து வரும்படி இடும்பாசுரனை பணித்தார். வடதிசை சென்ற இடும்பாசுரனுக்கு, அம்மலையில், சிவபூஜைக்குரிய பொருட்கள் எங்குள்ளது எனத்தெரியவில்லை. எனவே சிவகிரி, சத்யகிரி என்னும் இரு மலைகளையும் பெயர்த்து, காவடியாக எடுத்துக் கொண்டு சென்னிமலைக்கு வந்தார். அப்படி இடும்பன் கொண்டு வந்த மலைகளில் ஒன்றுதான் பழனி. அந்த வகையில் பழனி மலைக்கும் முந்தையது, சென்னிமலை என்கிறார்கள்.
தல வரலாறு
சென்னிமலையில் இருந்து 3 கி.மீட்டர் தொலைவில் உள்ள நொய்யல் ஆற்றங்கரையில் உள்ள கொடுமணல் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், நிறைய பசுக்களை வளர்த்து வந்தார். அவர் வளர்த்த பசுக்கள், தினந்தோறும் மேய்ச்சலுக்குச் சென்று திரும்புவது வழக்கம். அப்படி திரும்பிவரும் பசுக்களில் ஒன்று மடிவற்றி பாலின்றி நாள்தோறும் திரும்பியது. அதைக் கண்ட பசு வளர்ப்பாளர், ஒருநாள் மந்தையுடன் சென்று கண்காணித்தார். அப்பொழுது அந்த பசு திரும்பி வரும் வழியில் ஒரு புதர் அருகில் சென்று தானாக பால் சொரிவதைப் பார்த்தார். அந்த இடத்தை அகழ்ந்து பார்த்தபோது, முருகப்பெருமானின் சிலை இடுப்புக்கு மேல் அழகிய சிற்ப வேலைப்பாட்டுடனும், இடுப்புக்கு கீழே பாதம்வரை கரடு முரடாகவும் இருந்தது. அதை எடுத்து வந்து சிற்பி ஒருவரின் உதவியுடன் இடுப்புக்குக் கீழே உளிகொண்டு சீராக்க முனைந்தபோது, சிலையில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. உடனே அப்பகுதியில் வாழ்ந்த முனிவர் ஒருவரை அழைத்துக் காட்ட, அவரோ வேலவன் இப்படியே இருக்க விரும்புகிறார். அவர் விருப்பப்படி விட்டுவிடுவோம் என்று கூற, அதே நிலையில் பிரதிஷ்டை செய்து வழிபடலாயினர்.
மற்றொரு வரலாறாக அனந்தன் என்ற நாகராஜனுக்கும் வாயு பகவானுக்கும் இடையே `யார் பெரியவர்' என்பதில் பலப்பரீட்சை நடந்ததாகவும், மகாமேரு பர்வதத்தை உறுதியாக சுற்றிப் பிடித்துக் கொண்ட அனந்தனிடம் இருந்து அதை மீட்பதற்காக வாயுதேவன் எதிர்த்துத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அதுசமயம் மேருமலையின் சிகரப்பகுதி பெயர்ந்து பறந்துச் சென்று பூந்துறை நாட்டில் விழுந்ததாகவும் அதுவே சிரகிரி, புஷ்பகிரி, மகுடகிரி என்றெல்லாம் அழைக்கப்பட்டு தற்போது `சென்னிமலை' என்று அழைக்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.
இந்த ஆலயத்தில் உள்ள மூலவர் சுப்பிரமணியர் என்று அழைக்கப்படுகிறார். அம்பாளின் பெயர் அமுதவல்லி, சுந்தரவல்லி. தல விருட்சம் புளியமரம், தல தீர்த்தமாக இந்திர தீர்த்தம், இயமன் தீர்த்தம், காசிப தீர்த்தம், பட்சி தீர்த்தம், நிருதி தீர்த்தம், சிவகங்கை காசிக்கிணறு, மாமாங்க தீர்த்தம், வரடி தீர்த்தம், காளி தீர்த்தம், தேவி தீர்த்தம், செங்கழுநீர் வாவி, விஷ்ணு தீர்த்தம், நெடுமால் சுனை, பிரம்ம தீர்த்தம், தேவர் பாழி, நவவீர தீர்த்தம், சாரதா தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், தெப்பக்குளம் என இருபது தீர்த்தங்கள் காணப்படுகின்றன. ஆனால் சென்னிமலை முருகப்பெருமானின் நித்ய அபிஷேகம் மற்றும் நைவேத்திய பயன்பாட்டிற்கு திருமஞ்சன தீர்த்தம் எனப்படும் மாமாங்க தீர்த்தத்தில் இருந்து நீர் எடுத்துச் செல்லப்படுகிறது. இது கடும் கோடையிலும் வற்றாது பொங்கும் நீர் வளத்தைக் கொண்டது.

ஆலய அமைப்பு
சென்னிமலை அருகில் உள்ள இச்சிப்பாளையத்தில் உள்ள குன்றின் மீது அமைந்துள்ளது இக்கோவில். இதன் படிக்கட்டுகள் அடிவாரத்தில் இருந்து செங்குத்தாக இல்லாமல், பக்தர்கள் ஏறிச் செல்ல வசதியாக சரிவாக அமைக்கப்பட்டு அதன்மீது ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. படிகளில் ஏறிய உடனே கடம்பவனேசுவரர், கந்தர், இடும்பன் ஆகியோரை தரிசிக்கலாம். பின்னர் வள்ளியம்மன் பாதம் என்ற மண்டபத்தைக் கடந்து சென்றால், முத்துக்குமார சாவான் என்னும் மலைக்காவலர் சன்னிதியை பார்க்கலாம். படிக்கட்டில் நடக்கும் போது நீண்ட இலைகளுடன் கூடிய துரட்டி மரம் என்ற மிகப் பழமையான மரம் ஒன்று உள்ளது. துஷ்ட சக்திகளால் பீடிக்கப்பட்டவர்கள், இம்மரத்தை நெருங்கும்போது அவை விலகும் என்கிறார்கள். அதற்கடுத்து வரும் ஆற்றுமலை விநாயகரை தரிசித்து மேலே சென்றால் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை அடையலாம்.
கிழக்கு நோக்கிய சன்னிதியில் இருபுறமும் அம்மையும், அப்பனும் அரவணைக்க, சுவாமி தனிச் சன்னிதியில் இருந்து தனித்து அருள்பாலிக்கிறார். அவருக்கு முன்பாக விநாயகரும், வலதுபுறத்தில் உமையவல்லி உடனுறை மார்க்கண்டேசுவரரும், இடது புறத்தில் விசாலாட்சி உடனுறை விசுவநாதரும் குடும்ப சமேதராக சூழ்ந்திருந்து குமரனை மட்டுமின்றி, வழிபடும் பக்தர்களையும் ஆசீர்வதிக்கின்றனர். கருவறையின் பின்புறம் முருகனின் தேவியர்களான வள்ளி- தெய்வானை இருவரும் தனிச்சன்னிதியில் ஒன்றாக இருந்து அருள்பாலிக்கின்றனர்.
இவர்கள் இருவரது திருவுருவங்களும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பின்னால் பொன்நாக்கு சித்தரின் சன்னிதி வேல் கோட்டமாகக் காட்சியளிக்கிறது. மலைமீது நீண்டநாள் தவம் இருந்த இவர், பின்நாளில் 'புண்ணாக்கு சித்தர்' என்று அழைக்கப்பட்டதாகவும், சென்னிமலை வரலாற்றை இவரே இயற்றினார் என்றும் கூறப்படுகிறது. இவர் சன்னிதிக்கு பின்புறம் சரவண மாமுனிவர் வாழ்ந்த குகையும், சமாதியும் கோவிலாக காட்சியளிக்கிறது.
சஷ்டியில் விரதமிருப்போருக்கு சென்னிமலை ஆண்டவர் குழந்தை வரம் கொடுப்பது இன்றளவும் தொடரும் நம்பிக்கையாகும். திருமணம், விவசாயம், பிற தொழில் சார்ந்த செயல்களில் ஈடுபடும்போது, இத்தல முருகப்பெருமானுக்கு அர்ச்சனைசெய்து சிரசுப்பூ உத்தரவு கேட்டு செயல்களைத் தொடங்குவதும் மரபாக கடைப்பிடிக்கப்படுகிறது.
அமைவிடம்
ஈரோட்டில் இருந்து தாராபுரம் செல்லும் வழியில் 28 கிலோமீட்டர் தொலைவிலும், பெருந்துறையில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும் ஈங்கூர் ரெயில் நிலையத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னிமலை அமைந்துள்ளது.
- நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக்கொள் பவன்.
- நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்.
மனிதன் தன்னைப்பற்றி அறிந்துகொள்ள ஆசைப் படுவதை விட அடுத்தவர்களைப்பற்றி அறிந்து கொள்வதில்தான் அதிக நேரத்தை செலவளிக்கின்றான், அடுத்தவர்களைப் பற்றி அறிந்து கொள்வது தவறல்ல ஆனால் அது நல்லுறவுக்காக இருந்தால் தான் நல்லது, அடுத்தவர்களின் ரகசியங்களை தெரிந்து கொண்டு புறம் பேசுவதற்காக இருந்தால் அது நல்லதல்ல.
'யாரைப்பற்றியும் தவறான செய்திகளை என்னிடம் சொல்லாதீர்கள், நான் மன நிம்மதியுடன் இருக்கவே விரும்புகிறேன்' என்று நபிகள் நாயகம் சொன்னது அந்த அர்த்தத்தில் தான்.
அல்லாஹ் தனது திரு மறையில் கூறுகின்றான்: 'விசுவாசிகளே! (சந்தேகமான) பல எண்ணங்களில்இருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித்துருவி ஆராய்ந்து கொண்டிருக்காதீர்கள்; மேலும், உங்களில் சிலர் சிலரைப் பற்றி புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். மேலும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக்கொள் பவன்; மிக்க கிருபை செய்பவன்' (திருக்குர்ஆன் 49:12).
மேற்கண்ட இறை வசனம் சகமனிதர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நமக்கு தெள்ளத்தெளிவாக சொல்லிக்காட்டுகிறது. நாம் பிறரின் குறைகளை பார்க்கத் தொடங்கும் போது தான் நம்மை அது புறம் பேசத்தூண்டுகிறது. எனவே அடுத்தவர்களின் நிறைகளை காண்பதில் அதிக கவனம் செலுத்துவதற்கு நாம் பழகிக்கொள்ள வேண்டும்.
இதனால் தான் நபிகள் நாயகம் இப்படி சொன்னார்கள்: 'யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் நல்லதைப் பேசட்டும் அல்லது அவர் வாய் மூடி இருக்கட்டும்' (நூல்: புகாரி, முஸ்லிம்).
எனவே அடுத்தவர்களைப் பற்றி அவர் என்ன செய்கிறார், இவர் எங்கே போகிறார் என்று தேவையில்லாமல் துருவித்துருவி ஆராய்வது இறைவிசுவாசிக்கு நல்ல பழக்கமல்ல. சுப்யான் இப்னு அப்துல்லாஹ் என்ற நபித்தோழர் நபி களாரிடம், 'இறைத் தூதரே! நான் எதற்கு அதிகம் பயப்பட வேண்டும்? என்று கேட்ட போது, தமது நாவை பிடித்துக் காட்டி 'இதைத் தான்' என்று நபிகளார் சொன்னார்கள்'. (நூல்: திர்மிதி)
பின்வரும் நபிமொழி உண்மையில் புறம் என்பது என்ன என்பதைப் பற்றி கூறுகிறது.
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்:
புறம் என்றால் என்னவென்று நீங்கள் அறிவீர்களா?' என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, `அல்லாஹ்வும் அவனது தூதரும் தான் நன்கு அறிவார்கள்' என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபிகளார், உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் `புறம்' என்றார்கள். நான் கூறுவது எனது சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபிகளார் 'நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லை என்றால் நீ அவனைப் பற்றி அவதூறு கூறுகிறாய்' என்றார்கள். (நூல்: முஸ்லிம்)
எனவே நமது நண்பர்களிடம் குற்றங் குறைகள் இருந்தால் அவற்றை யாரோ ஒருவரிம் சொல்லிக் கொண்டிருக்காமல் குறையுடன் சம்பந்தப்பட்டவரையே நேரில் சந்தித்து அவரிடமுள்ள குறைகளை பக்குவமாக எடுத்துச் சொன்னால் நிச்சயம் அவர் ஏற்றுக்கொள்ளத் தான் செய்வார்.
அந்தக் குறைகளை வேறு ஒருவரிடம் பேசும் போது அது தெரியாதவர்களுக்கும் தெரிய வருகிறது, நாளடைவில் அது வீட்டுச் சண்டையாகவும் சில நேரங்களில் ஊர்ச் சண்டையாகவும் கூடமாறிவிடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே தான் வாயை திறக்கும் விஷயத்தில் நாம் ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டும். இதன் பாதிப்பு இம்மையில் மட்டுமல்ல மறுமையிலும், ஏன் நமது மண்ணறையிலும் கூட தொடரும் என்பதை பின்வரும் நிகழ்வு உணர்த்திக்காட்டுகிறது...
இப்னு அப்பாஸ் (ரலி) சொன்னார்கள்: "நபிகளார் இரண்டு மண்ணறைகளைக் கடந்துசென்றபோது 'இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய பாவத்திற்காக இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை. அவ்விருவரில் ஒருவர், தாம் சிறுநீர் கழிக்கும்போது (மர்ம உறுப்புக்களை) மறைப்பதில்லை. மற்றொருவர், புறம் பேசித்திரிந்தார்" என்று கூறிவிட்டு, ஒரு பசுமையான பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச்சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு குழியின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபிகளாரிடம் 'இறைத் தூதர் அவர்களே! நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?' என கேட்கப்பட்ட போது, 'அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் காலமெல்லாம் அவர்கள் இருவரின் மண்ணறை வேதனை குறைக்கப்படக் கூடும்' என்று நபிகளார் கூறினார்கள்" (நூல்: புகாரி)
புறம் பேசுவது என்பது எவ்வளவு கொடியது என்று இதன் மூலம் நாம் விளங்க முடிகிறது, ஆகவே தான் நபிகள் நாயகம் 'புறம் பேசுபவன் சுவனத்தில் நுழையமாட்டான்' என்று சொன்னார்கள். எனவே இனியேனும் நாம் அடுத்தவர்களைப் பற்றி புறம் பேசுவதைத் தவிர்த்து அறம் பேசுவோம். அது தான் இன்றைய அவசரத் தேவையும் கூட.
வாருங்கள் புறம் பேசுவதை தடுப்போம்...! அறம் பேசுவதை தொடுப்போம்...!!






