என் மலர்
வழிபாடு

கந்த சஷ்டி விரதம் 5-ம் நாள்: முருகன் நடத்திய போர்
- சிரத்தில் கொண்டு சிவனை மதியாது யாகம் செய்தான்.
- சிவனால் தோற்றுவிக்கப்பட்ட வீரபத்திர கடவுளால் கொல்லப்பட்டான்.
பிரம்மதேவனுக்கு தக்கன், காசிபன் என்னும் இரு மகன்கள் இருந்தார்கள். அவர்களுள் தக்கன் சிவனை நோக்கித் கடுந்தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றிருந்தான்.
ஆனால் வரத்தின் வலிமையைச் சிரத்தில் கொண்டு சிவனை மதியாது யாகம் செய்தான். இதனால் சிவனால் தோற்றுவிக்கப்பட்ட வீரபத்திர கடவுளால் கொல்லப்பட்டான்.
காசிபனும் கடுந்தவம் புரிந்து சிவனிடம் இருந்து மேலான சக்தியைப் பெற்றான். ஒருநாள் அசுரர்களின் குருவான சுக்கிரனால் (நவக்கிரகங்களுள் வெள்ளியாக கணிக்கப்பெறுபவர்) ஏவப்பட்ட "மாயை" என்னும் அரக்கப் பெண்ணில் மயங்கி தான் பெற்ற தவ வலிமை எல்லாவற்றையும் இழந்தான்.
இதனைத் தொடந்து காசிபனும் மாயை என்னும் அசுரப் பெண்ணும் இணைந்து மனித தலையுடன் கூடிய சூரபத்மனும், சிங்க முகம் கொண்ட சிங்காசுரனும், யானைமுகம் கொண்ட தாரகாசுரனும், ஆட்டின் முகம் கொண்ட அசமுகி என்ற அசுர குணம் கொண்ட பிள்ளைகளைப் பெற்றனர்.
இவர்களுள் சூரபத்மன் சர்வலோகங்களையும் அரசாளும் சர்வ வல்லமைகளைப் பெற எண்ணி சுக்கிலாச்சாரியாரிடம் உபதேசம் பெற்று சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்தான். அதன் மூலம் 108 யுகங்கள் உயிர் வாழவும், 1008 அண்டங்களையும் அரசாளும் வரத்தையும், இந்திரஞாலம் எனும் தேரையும், சிவசக்தியால் அன்றி வேரு ஒரு சக்தியாலும் அவனை அழிக்க முடியாது என்னும் வரத்தையும் பெற்றான்.
இவ்வரத்தின் பயனாக சூரன் தம்மைப்போல் பலரை உருவாக்கி அண்ட சராசரங்களை எல்லாம் ஆண்டு வந்தான்.
சூரபத்மன் பதுமகோமளை என்னும் பெண்ணை திருமணம் செய்தான். வீரமகேந்தி ரபுரியை ராசதானியாகக் கொண்டு ஆட்சி செய்து வந்தான்.
அவனுக்கு பதுமகோமளை மூலம் பானுகோபன், அக்கினிமுராசுரன், இரணியன், 10 தலை களைக் கொண்ட-வச்சிரவாகு ஆகிய நான்கு மகன்களும், வேறு மனைவியர் மூலம் மூவாயிரம் பேர் (3000) பிறந்தனர். இவர்களுடன் இன்னும் 120 பிள்ளைகள் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
சூரபத்மன் ஆணவமாக, அதர்மமாக நடந்து கொண்டதால் அவனை முருகன் அழித்தார். இதை சூரசம்ஹாரம் என்கிறோம்.
இந்த சம்ஹாரம் எங்கு நடந்தது? எப்படி நடந்தது? எத்தனை நாட்கள் நடந்தது? என்பன போன்றவற்றை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு நாம் புராண கால நிகழ்வுக்கு செல்ல வேண்டும்.
அசுரர்களில் நம்பர்-ஒன் அசுரனாக இருந்த சூரபத்மன் வீரமகேந்திரபுரி என்ற நாட்டில் வசித்து வந்தான். அந்த நாடு ஒரு குட்டித்தீவாகும்.
இலங்கைக்கும் தெற்கே அந்த தீவு இருந்தது. லெமூரியா கண்டம் அழிந்தபோது அந்த தீவும் கடலால் சூழப்பட்டது என்கிறார்கள். தற்போது அந்த தீவு கடலுக்குள் மூழ்கி உள்ளது.
அந்த தீவுக்கு செல்ல திருச்செந்தூர் ஏற்ற இடமாக இருந்தது. எனவே திருமால், பிரம்மன், இந்திரன் முதலான தேவர்கள் போற்ற முருகப் பெருமான் அத்தலத்தில் எழுந்தருளினார்.
வீரவாகுதேவர் தூது செல்லல்:
முருகப்பெருமான் புதிதாக கட்டப்பட்ட ஆலயத்தில் அமர்ந்து, தேவகுருவான குருபகவானிடம் சூரபத்மனின் முழுக் கதையையும் சொல்லுமாறு கேட்டார். அதன் பின்னரே வீரவாகுதேவரை மட்டும் சூரபத்மன் ஆட்சிசெய்யும் வீரமகேந்திரபுரத்திற்கு தூது அனுப்ப முடிவானது.
முருகப் பெருமான் வீரவாகுதேவரை சூரனிடம் தூது அனுப்பிச் சிறை வைத்த தேவர்களை விடுதலை செய்யுமாறு செய்தி அனுப்பினார். தூதின்போது, வீரவாகு சிறைப்பட்ட அமரர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு சூரனிடம் தூது உரைத்தார்.
ஆனால் முருகன் என்ற பாலகனுக்கு அடிபணிந்து நான் தேவர்களை விடுதலை செய்ய வேண்டுமா? அது நடக்காத காரியம் என்று கூறி சூரபத்மன் முழங்கலானான்.
சூரனின் ஆணவத்தால் தூது முறிந்தது. அது மாத்திரமன்றி தூது சென்ற வீரவாகு தேவரையும் சிறையிலடையுங்கள் என சூரன் உத்தரவிட்டான்.
வீரவாகுதேவரை சிறைப்பிடிக்க சென்ற அவுணப் படையுடன் வீரவாகுதேவர் போர்புரிந்தார். அப்போது நடந்த போரில் சூரனின் புத்திர னான வச்சிரவாகுவும் அசுரர் தலைவனான சகத்திர வாகு, ஆகிய இருவரும் வீரவாகு தேவரினால் சம்காரம் செய்யப்பட்டனர்.
திருச்செந்தூரில் திருமால், பிரமன், இந்திரன் முதலிய தேவர்கள் போற்ற சிங்காசனத்தில் எழுந்தருளி இருந்த முருகரிடம் வீரவாகுதேவர் தூது நிகழ்வுகளை எடுத்துரைத்தார். முருகனும் இனியும் தாமதம் செய்யக்கூடாது என்று முடிவு செய்து திருச்செந்தூரில் இருந்து சூரனின் ராசதானியாகிய வீரமகேந்திரபுரி செல்ல தீர்மானித்தார்.
கந்தப்பெருமான் வீரபாகு தேவரை நோக்கி "பாவங்களை அளவில்லாமல் புரிந்து கொண்டிருக்கும் சூரபத்மன் முதலான அசுரர்களை அழித்து, தேவர்கள் துன்பம் நீங்கி, உலகம் நலம் பெறுவதற்காக இப்பொழுதே படையெடுத்து வீரமகேந்திரபுரிக்குச் செல்ல வேண்டும். `நம் தேரைக் கொண்டுவா" என்று கட்டளை யிட்டார். பிரம்ம தேவர் அன்னப்பறவை மீதும், திருமால் கருடன் மீதும், இந்திரனும், வீரபாகு தேவரும் லட்சக்கணக்கான தெய்வ வீரர்களும் மற்றைய தேவர்களும் தத்தம் வாகனங்கள் மீதும் ஏறிக் கந்தவேளைச் சூழ்ந்து சென்றார்கள்.
நினைத்த மாத்திரத்திலேயே எல்லாப் புவனங்களையும் அழிக்கும் ஆற்றல் பெற்ற படைத்தலைவர்கள் நூற்றி யெட்டுப் பேரும் தொடர்ந்தார்கள். அதனை அடுத்து இரண்டாயிரம் பூதப்படைகளும் ஆரவாரத்துடன் புறப்பட்டன. வானவர்கள் பூ மழை பொழிந் தார்கள். பேரிகை, காளம், கரடிகை பல வாத்தியங்கள் முழங்கின. முருகப்பெருமானுடன் சென்ற பூதப்படைகளின் பேரொலி எங்கும் ஒலித்தது. அவர்கள் சென்றபோது ஏற்பட்ட புழுதி சூரிய சந்திரர்களுடைய ஒளியையும் மறைத்து விட்டதாம்.
கடலில் பூத சேனைகள் இறங்கினார்கள். அவர்களுக்கு கடலே கணுக்கால் அளவுதான் இருந்தது. கடலில் இருந்து பெரிய பெரிய மீன்களும் திமிங்கலங்களும் சிறு புழுக்கள் போன்று இருந்தன.
பூதப்படை இறங்கி கலக்கியதால் அது சேறானது. அந்த சேறு உலர்ந்தபின் புழுதியாகி எங்கும் பறந்தது. வீரமகேந்திரபுரி (சூரனின் ராசதானி) தென்கடலில் இருந்த ஒரு தீவு (தற்பொழுது அது நீரில் மூழ்கி உள்ளது). முருகப் பெருமான் வீரமகேந்திரபுரியை நோக்கி புறப்பட்டார். அப்போது பிரமன், திருமால், இந்திரன் ஆகிய மூவரும் சுவாமியை வணங்கி, "மகா பாவியாக உள்ள சூரபத்மன் இருக்கும் மகேந்திரபுரி தங்கள் திருப்பாதம் பதியத் தகுதி பெற்றதல்ல. அந்நகருக்கு அடுத்த எல்லையாகிய இங்கேயே தங்கியிருந்து போர்செய்வதற்குப் பாசறை அமைத்துக் கொள்ளலாம்" என்று வேண்டிக் கொண்டார்கள். முருகன் அந்த வேண்டு கோளை ஏற்றுக் கொண்டார்.
தேவதச்சனை அழைத்து `உடனே விரைந்து இங்கு ஒரு பாசறை ஏற்படுத்து" என்று எம்பெருமான் ஆணையிட்டார். தேவதச்சன் உடனே மாடகூடங்களும் மண்டபங்களும் சோலைகளும், வாவிகளும் கொண்ட பாசறை ஒன்றை மனத்தால் நிர்மாணம் செய்து அப்படியே அதை ஸ்தூல வடிவிலும் கட்டினான். அந்தப் பாசறைக்கு "ஏமகூடம்" என்று பெயர் வைத்தார்கள்.
எம்பெருமானின் தேர் கீழே இறங்கியது. சுவாமி ஏமகூடத்தின் வீதிகளில் பூத சேனை களை நிறுத்தினார். லட்சத்தொன்பது வீரர் களோடும், தேவர்களோடும் கோவிலினுள் சென்று அமர்ந்தார் முருகப் பெருமான். அந்த ஏமகூடமே கதிர்காமம் என்பது ஐதீகம்.
ஏமகூடத்தில் இருந்து (கதிர் காமத் தில்) போர் நடந்தது.
பானுகோபன் வதைப்படலம்:
தாரகனையும் அவனுக்குத் துணை நின்ற கிரவுஞ்சத்தை யும் பிளந்து அழித்துப் பின், தருமகோபன் (சூரனின் மந்திரி), சூரனின் மகன் அக்கினி முகாசுரன் உள்ளிட்ட மூவாயிரம் (3000) பேரும் இறந்தபின் சூரனின் மகனான பானுகோபன் போருக்குச் சென்றான்.
பானுகோபன் மாயாஜால வித்தைகள் செய்து போர்செய்யும் வல்லமை படைத்தவன். சிறந்த சிவ பக்தன். நீதியாக நடப்பவன். சிவனே முருகனாக அவதரித்து போருக்கு வந்துள்ளார், தேவர்களை விடு வித்தால் நாமும் நெடுநாட்கள் வாழலாம் என தந்தையாகிய சூரனுக்குக் கூறியும் அவன் ஆணவம் அதை ஏற்றுக்கொள்ள வில்லை.
அதனால் சூரன் தானே போருக்குச் சென்று முருகனை யும் அவன் சேனையையும் அழிக்கப் போவதாக வீராவேசம் கொண்டு போருக்குச் செல்ல ஆயத்தமானான். தான் மூத்தமகன் இருக்க தந்தை போருக்கு செல்வது சரியில்லை என கூறிய பானுகோபன் தான் போருக்குச் செல்ல அனுமதி தரும்படி சூரனிடம் வேண்டினான். சூரனும் மகனான பானுகோபனை ஆசீர்வதித்து போருக்கு அனுப்பி வைத்தான்.
பானுகோபன் நன்நீர்க் கடலில் முருகன் சேனையை ஆழ்த்த முருகன் அதை முறியடித்தார். அப்போது பானுகோபனும் முருகன் வேலுக்கு பலியானான்.
சூரன் சம்காரம்:
சூரன் அண்டம் விட்டு அண்டம் பாயும் வரம் பெற்றவன். சிறந்த சிவபக்தன். ஆணவமலத்தால் பீடிக்கப்பட்டு அதர்ம வழியில் சென்றான்.
தன் சொந்தபந்தங்களையும், துணை நின்ற படைச் சேனைகளையும் இழந்து செய்வதறியாது நின்ற சூரனின் ஆணவம் அப்போதும் அடங்கவில்லை. தானே போருக்கு செல்வதாக முடிவு செய்து முருகப் பெரூமான் முன் தோன்றி சரமாரியாக அம்புக்கணைகளைத் தொடுத்தான்.
அவையாவும் முருகவேளின் கடைக்கண் பார்வையால் அழிந்தன. சூரன் தனது மாயாஜாலங்களினால் பலவாறாக தோன்றி போர் செய்தான். அப்போது முருகன் சூரனை நோக்கி இப்போதும் நீ உயிர்வாழலாம் தேவர்களை சிறையில் இருந்து விடுவித்து விடு என்று அறிவுறுத்தினார்.
அப்போதும் அவனின் ஆணவம் அடங்க வில்லை. அதனால் போர் செய்யவே துடித்தான்.
வீரமகேந்திரபுரத்தில் பலப்பல மாயங்கள் செய்து போர் புரிந்தான் சூரன். கடலாய், இருளாய் மாறி மாறிச் செய்யும் போர் எதுவும் சூரனுக்கு உதவவில்லை. உதவிசெய்ய இருந்த உற்றமும் சுற்றமும் அழிந்து உறவும் அற்றுப் போனதினால் சூரனும் மயங்கித் தத்தளித்தான்.
தன்னுடன் போர் செய்ய வந்தது இறைவனே என அறிந்தும், அடிபணிய ஆணவம் விடவில்லை.
முருகன் சூரனின் ஆணவத்தை அடக்கும் பொருட்டு தன் விஸ்வரூபத்தைக் காட்டினார். எல்லாம் வல்ல பரம்பொருள் தாமே என பரமேசுவர வடிவம் காட்டினார். சிவனும், அவன் மகனும் மணியும் ஒலியும் போல ஒருவரே என்றுணர்த்தினார். தன் தன்மை மாறாது போர் செய்தார்.
சூரசம்காரம் என்றழைக்கப்படும் அந்த போர் எப்படி நடந்தது என்பதை நாளை காணலாம்.






