என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முருகன் நடத்திய போர்"

    • சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து, 108 யுகம் உயிர் வாழவும், 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாக பெற்றான்.
    • 6 குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர்.

    படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு தட்சன், காசிபன் என்ற இரு புதல்வர்கள் உண்டு. இவர்களுள் தட்சன், சிவனை நோக்கி தவம் புரிந்து பல வரங்களை பெற்று சிவபிரானுக்கே மாமனாராகியும் அகந்தை காரணமாக இறுதியில் சிவனால் உருவாக்கப்பட்ட வீரபத்திரரால் கொல்லப்பட்டான்.

    அடுத்து காசிபனும் கடும் தவம் புரிந்து சிவனிடம் பல வரங்களை பெற்றான். ஒரு நாள் அசுர குரு சுக்கிரனால் ஏவப்பட்ட மாயை எனும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவ வலிமையை இழந்தான்.

    இதைத்தொடர்ந்து காசிபனும் மாயை எனும் அசுரப் பெண்ணும் முதலாம் சாமத்தில் மனித உருவத்தில் இணைந்து மனிதத் தலையுடைய சூரபத்மனும், இரண்டாம் சாமத்தில் சிங்க உருவில் இருவரும் இணைந்து சிங்கமுகமுடைய சிங்கனும், மூன்றாம் சாமத்தில் யானை உருவில் இணைந்து யானை முகமுடைய தாரகனும், நான்காம் சாமத்தில் ஆட்டுஉருவத்தில் இணைந்து ஆட்டுத் தலையுடைய அஜமுகி எனும் அசுரப் பெண்ணும் பிறந்தனர். மாயை காரணமாகத் தோன்றிய இந்த 4 பேரும் ஆணவ மிகுதியால் மிதந்தனர்.

    காஷ்யபர் தன் பிள்ளைகளிடம், குழந்தைகளே! வடதிசைநோக்கி சென்று சிவபெருமானை நோக்கி தவம் செய்யுங்கள். வேண்டிய வரங்களை பெற்று வாழுங்கள்! என்று உபதேசம் செய்தார். இவர்கள் கடும் தவமிருந்து சிவபெருமானிடம் பல வரங்களை பெற்றனர்.

    இவர்களுள் சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து, 108 யுகம் உயிர் வாழவும், 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாக பெற்றான். மேலும் தனக்கு சாகாவரம் வேண்டும் என சூரபத்மன் சிவனிடம் கேட்டான். பிறந்தவன் மடிந்தே தீர வேண்டும் என்ற சிவன், எந்த வகையில் அவனுக்கு அழிவு வர வேண்டும் எனக் கேட்டார். சூரபத்மன் புத்திசாலித்தனமாக, ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் தனக்கு அழிவு வர வேண்டும், என கேட்டான்.

    பெண்ணையன்றி வேறு யாரால் ஜீவர்களை உற்பத்தி செய்ய முடியும் என்பது அவனது கணக்கு. இந்த வரத்தை பெற்ற சூரபத்மனும் அவனுடன் பிறந்தவர்களும் தன் குலகுருவான சுக்ராச்சாரியரிடம் ஆசி பெற்று தம்மை போல் பலரை உருவாக்கி அண்டசராசரங்கள் எல்லாவற்றையும் ஆண்டு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலடைத்தனர். இந்திரன் சூரபத்மனுக்கு பயந்து பூலோகம் வந்து ஒளிந்து கொண்டான்.

    அசுரர்களின் இந்த கொடுமையை தாங்க முடியாத தேவர்கள், கயிலாயம் சென்று சிவபெருமானிடம் சூரபத்மனிடம் இருந்து தங்களைக் காக்கும்படி முறையிட்டனர். சிவனும் அவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் பார்வதியின் தொடர்பின்றி, தனது 6 நெற்றிக் கண்களைத் திறக்க (சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஞானிகளுக்கு மட்டும் தெரியக்கூடிய அதோ முகம் (மனம்) என்று ஆறுமுகங்கள் உண்டு) அவற்றில் இருந்து தோன்றிய 6 தீப்பொறிகளையும் வாயு பகவான் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்கள் மீது சேர்த்தான்.

    அந்த தீப்பொறிகள் ஆறும் 6 குழந்தைகளாக தோன்றின. அந்த 6 குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் எனும் 6 குணங்களை குறிக்கிறது. பிரணவ சொரூபியான முருகனிடம் காக்கும் கடவுள் முகுந்தன், அழிக்கும் கடவுள் ருத்ரன், படைக்கும் கடவுள் கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடங்குவர். மேலும் முருகப்பெருமான் சிவாக்னியில் தோன்றியவராதலால் ஆறுமுகமே சிவம்-சிவமே ஆறுமுகம் என்பதுண்டு. அந்த 6 குழந்தைகளையும் பார்வதி கட்டி அணைக்க… அவர்கள் ஒரு மேனியாக வடிவம் கொண்டு 6 முகங்களும் இரு கரங்களும் கொண்ட முருகப்பெருமானாகத் தோன்றினர்.

    இத்திருவுருவை பெற்றதால் ஆறுமுகசுவாமி என்ற பெயர் முருகப் பெருமானுக்கு ஏற்பட்டது. அத்துடன் இந்த 6 குழந்தைகளையும் பார்வதி ஒரே குழந்தையாக ஸ்கந்தம் (சேர்த்தல்) செய்ததால் முருகன் ஸ்கந்தப்பெருமான் ஆனார். முருகன் என்றால் அழகன். கோடி மன்மதர்களை விட அழகாக இருந்தான் அவன். முருகப்பெருமான் தேவகுரு பிரகஸ்பதி மூலம் அசுரர்களின் வரலாற்றினை அறிந்தார்.

    திருக்கரத்தில் வேலேந்திக் கொண்டு முருகப்பெருமான், இந்திராதி தேவர்களே! நீங்கள் அசுரர்களுக்குச் சிறிதும் அஞ்சத்தேவையில்லை. அஞ்சும் முகம் தோன்றும்போது இந்த ஆறுமுகத்தை எண்ணுங்கள். உங்கள் குறைகளை சீக்கிரமே போக்கி அருள்செய்வது என் வேலை, என்றார். அசுரர்களை அழிக்க நினைத்த முருகன் முதலில் சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என எல்லா சேனைகளையும் 5 நாட்களில் அழித்தார். 6-ம் நாள் எஞ்சியவன் சூரபத்மன் தான்.

    தனது சேனைத்தலைவரான வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பி அவனைத் திருந்தும்படி எச்சரித்தார். ஆனால், சூரபத்மன், பாலகன் முருகனா எனக்கு எதிரி! யார் வந்தாலும் இந்திராதி தேவர்களைக் காக்க யாராலும் முடியாது, என்று வீராவேசமாகக் கூறினான். உடனே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் முருகப் பெருமானை சூரனுடன் போர் புரிய அனுப்பினர். சூரனோ, கடலின் நடுவில் வீரமகேந்திரபுரி என்ற பட்டணத்தை எழுப்பி அங்கே வசித்து வந்தான். அங்கே செல்வது அவ்வளவு எளிதல்ல.

    ஆனால், உலகாள வந்த முருகனுக்கு இது சாதாரண விஷயம். அவர் அந்த நகரை அடைந்தார். சூரன் அவரைப் பார்த்து ஏளனம் செய்தான். ஏ சிறுவனே! நீயா என்னைக் கொல்ல வந்தாய். பச்சை பிள்ளையப்பா நீ! உன்னைப் பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது. பாலகா! இங்கே நிற்காதே, ஓடி விடு, என்று பரிகாசம் செய்தான். முருகன் அசரவில்லை. தன் உருவத்தைப் பெரிதாக்கி அவரைப் பயமுறுத்தினான். அதன் மீது சக்தி வாய்ந்த 7 பாணங்களை எய்தார் முருகன். உடனே அவன் மகாசமுத்திரமாக உருமாறினான்.

    மிகப்பெரிய அலைகளுடன் முருகனை பயமுறுத்திப் பார்த்தான். உடனே 100 அக்னி அம்புகளை கடல் மீது ஏவினார் முருகன். கடல் பயந்து பின் வாங்கியது. இருப்பினும், முருகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் சூரனுக்கு வரவில்லை. காரணம், ஒரு சிறுவனை கொல்வது தன் வீரத்துக்கு இழுக்கு என்றும், அது பாவமென்றும் அவன் கருதினான். அந்தக் கல்லுக்குள்ளும் இருந்த ஈரத்தைக் கண்டு தான், கருணாமூர்த்தியான முருகனும் அவனைக் கொல்லாமல் ஆட்கொள்ள முடிவெடுத்தார். தன் விஸ்வரூபத்தை அவனுக்குக் காட்டினார். அதைப் பார்த்தவுடனேயே சூரனின் ஆணவம் மறைந்து ஞானம் பிறந்தது. முருகா! என் ஆணவம் மறைந்தது. தெய்வமான உன் கையால் மடிவதை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். உன்னை பயமுறுத்த கடலாய் மாறினேன். அந்தக் கடலின் வடிவாகவே நான் இங்கு தங்குகிறேன். உன்னை வணங்க வரும் பக்தர்கள் என்னில் நீராடியதுமே, ஆணவம் நீங்கி, உன் திருவடியே கதி என சரணமடையும் புத்தியைப் பெற வேண்டும், என்றான். முருகனும் அந்த வரத்தை அவனுக்கு அளித்தார். அதன் பிறகு, தன் ரூபத்தை சுருக்கி, சூரனுக்கு ஞாபகமறதியை உண்டாக்கினார். சூரனுக்கு ஆணவம் தலை தூக்கவே அவன் மாமரமாக மாறி அவரிடமிருந்து தப்ப முயன்றான்.

    முருகப்பெருமான் தன் தாய் உமாதேவியிடம் ஆசிபெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமரத்தின் மீது விடுத்தார். (நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் தலத்தில்தான் முருகப் பெருமான் தன் தாயிடம் வேலைப் பெற்றார். சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் என்பர். சஷ்டியின் ஐந்தாம் நாள் விழாவன்று, வேல் வாங்கும் உற்சவ முருகனுக்கு முகமெங்கும் வியர்வைத் துளிகள் அரும்பும் அதிசயத்தை ஆண்டுதோறும் காணலாம்.)வேல் பட்டதும் மாமரம் இரண்டாகப் பிளந்தது. அதன் ஒருபாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றிய முருகன் தனது வாகனமாகவும், கொடிச்சின்னமாகவும் ஆக்கினார்.

    சூரன் மாமரமான இடம் மாம்பாடு எனப்படுகிறது. இன்றும் இங்கு மாமரம் தழைப்பதில்லை. பகைவனுக்கும் அருளும்பரமகா

    ருண்ய மூர்த்தியான அவர், சூரனை வதம் செய்யாமல் அவனை ஆட்கொண்டார். இச்செயலால்வை

    தாரையும் வாழவைப்பவன் என்ற சிறப்புப் பெயர் பெற்றார். சூரசம்ஹாரம் முடிந்தபின் முருகன் சிவபூஜை செய்ய விரும்பினான். அதற்காகக் கடற்கரையில் கட்டப்பட்ட கோவில்தான் திருச் செந்தூர் கோவில். இங்கு மூல ஸ்தானத்தின் பின்பகுதியில் முருகன் பூஜை செய்த சிவலிங்கத்தைக் காணலாம். சூரசம்ஹாரத்தோடு விழா முடிவதில்லை. தேவர்களுக்கு முருகன் செய்த உதவிக்கு கைம் மாறாக, இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்து வைத்தான். எனவே மறுநாள் முருகன்- தெய்வானை திருமண வைபவத்தோடுதான் விழா நிறைவு பெறுகிறது.

    கிருத்திகை என்றால் திருத்தணி. (இங்கு மட்டும் சூரசம்ஹார விழா நடைபெறாது). தைப்பூசம் என்றால் பழனி. கந்தசஷ்டி என்றால் திருச்செந்தூர். வேல் என்றால் கொல்லும் ஆயுதமல்ல. அது ஆணவத்தை அழித்து நற்கதி தரும் பரமானந்தமான வழிபாட்டுப் பொருள். அதனால் தான், வேல் வேல் வெற்றி வேல் என்று முழங்குகிறார்கள் பக்தர்கள். அந்த வேல் பிறவித்துன்பத்தை அழித்து, முருகனின் திருவடியில் நிரந்தரமாக வசிக்கும் முக்தி இன்பத்தைத் தரக்கூடியது. சூரசம்ஹாரம் கந்தனால் ஐப்பசி சஷ்டி திதியில் நிகழ்த்தப்பட்டதால் இது கந்தசஷ்டி ஆயிற்று. முருகப் பெருமான் அசுரர்களான சூரபத்மன் மற்றும் அவனது தம்பியரை அழிக்கப் போர் புரிந்த திருவிளையாடலையே நாம் கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடி மகிழ்கிறோம்.

    • சிரத்தில் கொண்டு சிவனை மதியாது யாகம் செய்தான்.
    • சிவனால் தோற்றுவிக்கப்பட்ட வீரபத்திர கடவுளால் கொல்லப்பட்டான்.

    பிரம்மதேவனுக்கு தக்கன், காசிபன் என்னும் இரு மகன்கள் இருந்தார்கள். அவர்களுள் தக்கன் சிவனை நோக்கித் கடுந்தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றிருந்தான்.

    ஆனால் வரத்தின் வலிமையைச் சிரத்தில் கொண்டு சிவனை மதியாது யாகம் செய்தான். இதனால் சிவனால் தோற்றுவிக்கப்பட்ட வீரபத்திர கடவுளால் கொல்லப்பட்டான்.

    காசிபனும் கடுந்தவம் புரிந்து சிவனிடம் இருந்து மேலான சக்தியைப் பெற்றான். ஒருநாள் அசுரர்களின் குருவான சுக்கிரனால் (நவக்கிரகங்களுள் வெள்ளியாக கணிக்கப்பெறுபவர்) ஏவப்பட்ட "மாயை" என்னும் அரக்கப் பெண்ணில் மயங்கி தான் பெற்ற தவ வலிமை எல்லாவற்றையும் இழந்தான்.

    இதனைத் தொடந்து காசிபனும் மாயை என்னும் அசுரப் பெண்ணும் இணைந்து மனித தலையுடன் கூடிய சூரபத்மனும், சிங்க முகம் கொண்ட சிங்காசுரனும், யானைமுகம் கொண்ட தாரகாசுரனும், ஆட்டின் முகம் கொண்ட அசமுகி என்ற அசுர குணம் கொண்ட பிள்ளைகளைப் பெற்றனர்.

    இவர்களுள் சூரபத்மன் சர்வலோகங்களையும் அரசாளும் சர்வ வல்லமைகளைப் பெற எண்ணி சுக்கிலாச்சாரியாரிடம் உபதேசம் பெற்று சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்தான். அதன் மூலம் 108 யுகங்கள் உயிர் வாழவும், 1008 அண்டங்களையும் அரசாளும் வரத்தையும், இந்திரஞாலம் எனும் தேரையும், சிவசக்தியால் அன்றி வேரு ஒரு சக்தியாலும் அவனை அழிக்க முடியாது என்னும் வரத்தையும் பெற்றான்.

    இவ்வரத்தின் பயனாக சூரன் தம்மைப்போல் பலரை உருவாக்கி அண்ட சராசரங்களை எல்லாம் ஆண்டு வந்தான்.

    சூரபத்மன் பதுமகோமளை என்னும் பெண்ணை திருமணம் செய்தான். வீரமகேந்தி ரபுரியை ராசதானியாகக் கொண்டு ஆட்சி செய்து வந்தான்.

    அவனுக்கு பதுமகோமளை மூலம் பானுகோபன், அக்கினிமுராசுரன், இரணியன், 10 தலை களைக் கொண்ட-வச்சிரவாகு ஆகிய நான்கு மகன்களும், வேறு மனைவியர் மூலம் மூவாயிரம் பேர் (3000) பிறந்தனர். இவர்களுடன் இன்னும் 120 பிள்ளைகள் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

    சூரபத்மன் ஆணவமாக, அதர்மமாக நடந்து கொண்டதால் அவனை முருகன் அழித்தார். இதை சூரசம்ஹாரம் என்கிறோம்.

    இந்த சம்ஹாரம் எங்கு நடந்தது? எப்படி நடந்தது? எத்தனை நாட்கள் நடந்தது? என்பன போன்றவற்றை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு நாம் புராண கால நிகழ்வுக்கு செல்ல வேண்டும்.

    அசுரர்களில் நம்பர்-ஒன் அசுரனாக இருந்த சூரபத்மன் வீரமகேந்திரபுரி என்ற நாட்டில் வசித்து வந்தான். அந்த நாடு ஒரு குட்டித்தீவாகும்.

    இலங்கைக்கும் தெற்கே அந்த தீவு இருந்தது. லெமூரியா கண்டம் அழிந்தபோது அந்த தீவும் கடலால் சூழப்பட்டது என்கிறார்கள். தற்போது அந்த தீவு கடலுக்குள் மூழ்கி உள்ளது.

    அந்த தீவுக்கு செல்ல திருச்செந்தூர் ஏற்ற இடமாக இருந்தது. எனவே திருமால், பிரம்மன், இந்திரன் முதலான தேவர்கள் போற்ற முருகப் பெருமான் அத்தலத்தில் எழுந்தருளினார்.

    வீரவாகுதேவர் தூது செல்லல்:

    முருகப்பெருமான் புதிதாக கட்டப்பட்ட ஆலயத்தில் அமர்ந்து, தேவகுருவான குருபகவானிடம் சூரபத்மனின் முழுக் கதையையும் சொல்லுமாறு கேட்டார். அதன் பின்னரே வீரவாகுதேவரை மட்டும் சூரபத்மன் ஆட்சிசெய்யும் வீரமகேந்திரபுரத்திற்கு தூது அனுப்ப முடிவானது.

    முருகப் பெருமான் வீரவாகுதேவரை சூரனிடம் தூது அனுப்பிச் சிறை வைத்த தேவர்களை விடுதலை செய்யுமாறு செய்தி அனுப்பினார். தூதின்போது, வீரவாகு சிறைப்பட்ட அமரர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு சூரனிடம் தூது உரைத்தார்.

    ஆனால் முருகன் என்ற பாலகனுக்கு அடிபணிந்து நான் தேவர்களை விடுதலை செய்ய வேண்டுமா? அது நடக்காத காரியம் என்று கூறி சூரபத்மன் முழங்கலானான்.

    சூரனின் ஆணவத்தால் தூது முறிந்தது. அது மாத்திரமன்றி தூது சென்ற வீரவாகு தேவரையும் சிறையிலடையுங்கள் என சூரன் உத்தரவிட்டான்.

    வீரவாகுதேவரை சிறைப்பிடிக்க சென்ற அவுணப் படையுடன் வீரவாகுதேவர் போர்புரிந்தார். அப்போது நடந்த போரில் சூரனின் புத்திர னான வச்சிரவாகுவும் அசுரர் தலைவனான சகத்திர வாகு, ஆகிய இருவரும் வீரவாகு தேவரினால் சம்காரம் செய்யப்பட்டனர்.

    திருச்செந்தூரில் திருமால், பிரமன், இந்திரன் முதலிய தேவர்கள் போற்ற சிங்காசனத்தில் எழுந்தருளி இருந்த முருகரிடம் வீரவாகுதேவர் தூது நிகழ்வுகளை எடுத்துரைத்தார். முருகனும் இனியும் தாமதம் செய்யக்கூடாது என்று முடிவு செய்து திருச்செந்தூரில் இருந்து சூரனின் ராசதானியாகிய வீரமகேந்திரபுரி செல்ல தீர்மானித்தார்.

    கந்தப்பெருமான் வீரபாகு தேவரை நோக்கி "பாவங்களை அளவில்லாமல் புரிந்து கொண்டிருக்கும் சூரபத்மன் முதலான அசுரர்களை அழித்து, தேவர்கள் துன்பம் நீங்கி, உலகம் நலம் பெறுவதற்காக இப்பொழுதே படையெடுத்து வீரமகேந்திரபுரிக்குச் செல்ல வேண்டும். `நம் தேரைக் கொண்டுவா" என்று கட்டளை யிட்டார். பிரம்ம தேவர் அன்னப்பறவை மீதும், திருமால் கருடன் மீதும், இந்திரனும், வீரபாகு தேவரும் லட்சக்கணக்கான தெய்வ வீரர்களும் மற்றைய தேவர்களும் தத்தம் வாகனங்கள் மீதும் ஏறிக் கந்தவேளைச் சூழ்ந்து சென்றார்கள்.

    நினைத்த மாத்திரத்திலேயே எல்லாப் புவனங்களையும் அழிக்கும் ஆற்றல் பெற்ற படைத்தலைவர்கள் நூற்றி யெட்டுப் பேரும் தொடர்ந்தார்கள். அதனை அடுத்து இரண்டாயிரம் பூதப்படைகளும் ஆரவாரத்துடன் புறப்பட்டன. வானவர்கள் பூ மழை பொழிந் தார்கள். பேரிகை, காளம், கரடிகை பல வாத்தியங்கள் முழங்கின. முருகப்பெருமானுடன் சென்ற பூதப்படைகளின் பேரொலி எங்கும் ஒலித்தது. அவர்கள் சென்றபோது ஏற்பட்ட புழுதி சூரிய சந்திரர்களுடைய ஒளியையும் மறைத்து விட்டதாம்.

    கடலில் பூத சேனைகள் இறங்கினார்கள். அவர்களுக்கு கடலே கணுக்கால் அளவுதான் இருந்தது. கடலில் இருந்து பெரிய பெரிய மீன்களும் திமிங்கலங்களும் சிறு புழுக்கள் போன்று இருந்தன.

    பூதப்படை இறங்கி கலக்கியதால் அது சேறானது. அந்த சேறு உலர்ந்தபின் புழுதியாகி எங்கும் பறந்தது. வீரமகேந்திரபுரி (சூரனின் ராசதானி) தென்கடலில் இருந்த ஒரு தீவு (தற்பொழுது அது நீரில் மூழ்கி உள்ளது). முருகப் பெருமான் வீரமகேந்திரபுரியை நோக்கி புறப்பட்டார். அப்போது பிரமன், திருமால், இந்திரன் ஆகிய மூவரும் சுவாமியை வணங்கி, "மகா பாவியாக உள்ள சூரபத்மன் இருக்கும் மகேந்திரபுரி தங்கள் திருப்பாதம் பதியத் தகுதி பெற்றதல்ல. அந்நகருக்கு அடுத்த எல்லையாகிய இங்கேயே தங்கியிருந்து போர்செய்வதற்குப் பாசறை அமைத்துக் கொள்ளலாம்" என்று வேண்டிக் கொண்டார்கள். முருகன் அந்த வேண்டு கோளை ஏற்றுக் கொண்டார்.

    தேவதச்சனை அழைத்து `உடனே விரைந்து இங்கு ஒரு பாசறை ஏற்படுத்து" என்று எம்பெருமான் ஆணையிட்டார். தேவதச்சன் உடனே மாடகூடங்களும் மண்டபங்களும் சோலைகளும், வாவிகளும் கொண்ட பாசறை ஒன்றை மனத்தால் நிர்மாணம் செய்து அப்படியே அதை ஸ்தூல வடிவிலும் கட்டினான். அந்தப் பாசறைக்கு "ஏமகூடம்" என்று பெயர் வைத்தார்கள்.

    எம்பெருமானின் தேர் கீழே இறங்கியது. சுவாமி ஏமகூடத்தின் வீதிகளில் பூத சேனை களை நிறுத்தினார். லட்சத்தொன்பது வீரர் களோடும், தேவர்களோடும் கோவிலினுள் சென்று அமர்ந்தார் முருகப் பெருமான். அந்த ஏமகூடமே கதிர்காமம் என்பது ஐதீகம்.

    ஏமகூடத்தில் இருந்து (கதிர் காமத் தில்) போர் நடந்தது.

    பானுகோபன் வதைப்படலம்:

    தாரகனையும் அவனுக்குத் துணை நின்ற கிரவுஞ்சத்தை யும் பிளந்து அழித்துப் பின், தருமகோபன் (சூரனின் மந்திரி), சூரனின் மகன் அக்கினி முகாசுரன் உள்ளிட்ட மூவாயிரம் (3000) பேரும் இறந்தபின் சூரனின் மகனான பானுகோபன் போருக்குச் சென்றான்.

    பானுகோபன் மாயாஜால வித்தைகள் செய்து போர்செய்யும் வல்லமை படைத்தவன். சிறந்த சிவ பக்தன். நீதியாக நடப்பவன். சிவனே முருகனாக அவதரித்து போருக்கு வந்துள்ளார், தேவர்களை விடு வித்தால் நாமும் நெடுநாட்கள் வாழலாம் என தந்தையாகிய சூரனுக்குக் கூறியும் அவன் ஆணவம் அதை ஏற்றுக்கொள்ள வில்லை.

    அதனால் சூரன் தானே போருக்குச் சென்று முருகனை யும் அவன் சேனையையும் அழிக்கப் போவதாக வீராவேசம் கொண்டு போருக்குச் செல்ல ஆயத்தமானான். தான் மூத்தமகன் இருக்க தந்தை போருக்கு செல்வது சரியில்லை என கூறிய பானுகோபன் தான் போருக்குச் செல்ல அனுமதி தரும்படி சூரனிடம் வேண்டினான். சூரனும் மகனான பானுகோபனை ஆசீர்வதித்து போருக்கு அனுப்பி வைத்தான்.

    பானுகோபன் நன்நீர்க் கடலில் முருகன் சேனையை ஆழ்த்த முருகன் அதை முறியடித்தார். அப்போது பானுகோபனும் முருகன் வேலுக்கு பலியானான்.

    சூரன் சம்காரம்:

    சூரன் அண்டம் விட்டு அண்டம் பாயும் வரம் பெற்றவன். சிறந்த சிவபக்தன். ஆணவமலத்தால் பீடிக்கப்பட்டு அதர்ம வழியில் சென்றான்.

    தன் சொந்தபந்தங்களையும், துணை நின்ற படைச் சேனைகளையும் இழந்து செய்வதறியாது நின்ற சூரனின் ஆணவம் அப்போதும் அடங்கவில்லை. தானே போருக்கு செல்வதாக முடிவு செய்து முருகப் பெரூமான் முன் தோன்றி சரமாரியாக அம்புக்கணைகளைத் தொடுத்தான்.

    அவையாவும் முருகவேளின் கடைக்கண் பார்வையால் அழிந்தன. சூரன் தனது மாயாஜாலங்களினால் பலவாறாக தோன்றி போர் செய்தான். அப்போது முருகன் சூரனை நோக்கி இப்போதும் நீ உயிர்வாழலாம் தேவர்களை சிறையில் இருந்து விடுவித்து விடு என்று அறிவுறுத்தினார்.

    அப்போதும் அவனின் ஆணவம் அடங்க வில்லை. அதனால் போர் செய்யவே துடித்தான்.

    வீரமகேந்திரபுரத்தில் பலப்பல மாயங்கள் செய்து போர் புரிந்தான் சூரன். கடலாய், இருளாய் மாறி மாறிச் செய்யும் போர் எதுவும் சூரனுக்கு உதவவில்லை. உதவிசெய்ய இருந்த உற்றமும் சுற்றமும் அழிந்து உறவும் அற்றுப் போனதினால் சூரனும் மயங்கித் தத்தளித்தான்.

    தன்னுடன் போர் செய்ய வந்தது இறைவனே என அறிந்தும், அடிபணிய ஆணவம் விடவில்லை.

    முருகன் சூரனின் ஆணவத்தை அடக்கும் பொருட்டு தன் விஸ்வரூபத்தைக் காட்டினார். எல்லாம் வல்ல பரம்பொருள் தாமே என பரமேசுவர வடிவம் காட்டினார். சிவனும், அவன் மகனும் மணியும் ஒலியும் போல ஒருவரே என்றுணர்த்தினார். தன் தன்மை மாறாது போர் செய்தார்.

    சூரசம்காரம் என்றழைக்கப்படும் அந்த போர் எப்படி நடந்தது என்பதை நாளை காணலாம்.

    ×