என் மலர்
வழிபாடு
- சிவன் கோபமுற்று நெற்றிக் கண்ணைத் திறந்து மன்மதனை எரித்தார்.
- பங்குனி மாதங்களில் காமன் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தொண்டி:
உலக நன்மைக்காக கைலாயத்தில் சிவபெருமான் கடும் தவம் இருந்தார். தேவலோகத்தில் தலைவனாக இருப்பவருக்கும், தேவர்களுக்கும் இந்த தவத்தால் நன்மை கிட்டாமல் போகலாம் என்று எண்ணிய இந்திரன் முதலானோர் சிவனின் தவத்தை கலைக்க வேண்டும் என்று பலரையும் நாடினர். ஆனால் சிவனின் கோபத்திற்கு பயந்து யாரும் முன்வரவில்லை.
இந்நிலையில் மன்மதனின் உதவியை நாடிய தேவர்கள், அவரது மனதை மாற்றி சிவனுக்குள் புகுந்து காம எண்ணத்தை தூண்டினால் தவம் கலைந்து விடும் என கூறினர். அதற்கு சம்மதித்த மன்மதனும் சிவனுக்கு அருகில் சென்று காம பானத்தை தொடுத்தான். தவத்தில் இருந்த சிவன் கோபமுற்று நெற்றிக் கண்ணைத் திறந்து மன்மதனை எரித்தார்.
இதனை அறிந்த மன்மதனின் மனைவியான ரதி தேவி சிவபெருமானிடம், தேவேந்திரனின் தூண்டுதலாலேயே மன்மதன் தங்களது தவத்தில் இடையூறு செய்தார். அவர் மீது எந்த தவறும் இல்லை. இந்த செயலால் நான் கணவனை இழந்து வாழ வேண்டுமா? என்று அழுது புலம்பி முறையிட்டாள். ரதிதேவியின் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான், அவரிடம் உன் கண்ணுக்கு மட்டுமே மன்மதன் தெரிவார் என்று கூறி மன்மதனின் உயிரை மீட்டு சாப நிவர்த்தி செய்தார்.
இந்த புராண சம்ப வத்தை நினைவு கூறும் வகையில் சுமார் 160 ஆண்டுகளுக்கு மேலாக தொண்டியில் உள்ள வெள்ளாளர் தெரு சொசைட்டியினரால் மாசி, பங்குனி மாதங்களில் காமன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும் காமன் பண்டிகையை யொட்டி காமன் மேடையில் காப்புக்கட்டுதல் நடந்தது. தினமும் மண்டகப்படி தாரர்களால் பூஜைகள் நடந்தது.
அதனைத் தொடர்ந்து மன்மதனை எரிக்கும் நிகழ்வாக காமன் மேடையில் எரியூட்டப்பட்டு தகனம் நடந்தது. முன்னதாக பெண்கள் மாவிளக்கு வழிபாடு செய்து பக்தர்களுக்கு மாவு உருண்டையை பிரசாதமாக வழங்கினர். மேலும் குழந்தை இல்லாத தம்பதியர் வேண்டுதல் நிறைவேறிய பின் கரும்பு தொட்டிலில் குழந்தையை வைத்து காமன் மேடையைச் சுற்றி வந்து நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
காம தகன ஏற்பாடுகளை தலைவர் பிச்சுமணி, பொருளாளர் சுந்தரமூர்த்தி, உறுப்பினர்கள் விடுதலை முரசு, பட்டாபிராமன், ராஜகோபால், ராமநாதன், ராம மூர்த்தி, நாகராஜ், ராஜாராமன் ஆகியோர் செய்திருந்தனர்.
- சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது.
- பக்தர்கள் நீண்ட வரிசயைில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருவாரூர்:
திருவாரூரில் மிகவும் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சைவ சமய தலங்களில் முதன்மை தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோ விலில் ஆழித்தேரோட்ட விழாவை போன்று திருவாதிரை திருவிழா, பங்குனி உத்திர திருவிழாவும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
அதன்படி, இன்று திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை முன்னிட்டு பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்களுக்கு வலது பாதத்தை காண்பித்து அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பூஜையில் இறைவன் சிதம்பரம் நடராஜர் கோவிலில் இடது பாதத்தையும், திருவாரூர் தியாகராஜர் கோவிலில் வலது பாதத்தையும் காட்டுவதாக பக்தர்களிடம் நம்பிக்கை நிலவுகிறது.
2 நாட்கள் நடைபெறும் இந்த பங்குனி திருவிழாவில் முதல்நாளாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தியாகராஜருக்கு முசுகுந்த அர்ச்சனையும், மகா அபிஷேகமும் நடைபெற்றது. அதனை, தொடர்ந்து, இன்று காலை தியாகராஜருக்கு முசுகுந்த அர்ச்சனை, மகா அபிஷேகம் நடைபெற்று, தியாகராஜர் வலது பாத தரிசனம் காண்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாத தரிசனம் கண்டால் பாவங்கள் நீங்கி புண்ணியம் பெறலாம் என்பார்கள்.
இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசயைில் காத்திருந்து வலது பாதத்தை தரிசனம் செய்தனர்.
- நேற்று பங்குனி உத்திர திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
- 108 மகாதேவர் முன்பு சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நேற்று பங்குனி உத்திர திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
இதை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து காலை 6 மணிக்கு கோவிலில் இருந்து வள்ளி அம்பாள் தபசுக்காக எழுந்தருளி புறப்பாடு நடைபெற்றது.
மாலை 4 மணிக்கு சாய ரட்சை தீபாரா தனையும், 5 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி சன்னதி தெரு வழியாக ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவகொழுந்தீஸ்வரர் கோவிலுக்கு வந்தார்.அங்கிருந்து சுவாமியும், அம்பாளும் கீழ ரதவீதி பந்தல் மண்டபம் முகப்பிற்கு வந்து அங்கு சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.
பின்னர் சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவில் சேர்நதுனர். இரவு 10 மணிக்கு 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது.
திருக்கல்யாணத்தில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர் குழு தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ் பாண்டியன், மாவட்ட பஞ்சாயத்து தலைவி பிரம்ம சக்தி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
- தீய பார்வைகளை தீய்த்துவிடும் நோன்பு.
- நோன்பின் புனிதம் காக்க முயலுங்கள்.
தீய பார்வைகளை தீய்த்துவிடும் நோன்பு
பார்வைகள் பலவிதம். அவற்றில் அழகிய பார்வையும் உண்டு. அன்பு பார்வையும் உண்டு. கருணைப் பார்வையும், கலங்கியப் பார்வையும் அடங்கும். சிந்திக்கும் பார்வையும், சீர்திருத்தும் பார்வையும், கண்டிக்கும் பார்வையும் வரவேற்கப்படுகின்றன. எனினும், காமப்பார்வையையும், சந்தேகப் பார்வையையும், பயமுறுத்தும் பார்வையையும், சீரழிக்கும் பார்வையையும், கவிழ்க்கும் பார்வையையும் இஸ்லாம் தடை செய்கிறது. தீய பார்வைகளை தீய்த்துவிடும் ஆயுதமாக நோன்பு அமைந்துள்ளதாக அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு தெரிவிக்கிறார்கள்.
"உங்களில் யார் திருமணத்திற்கான செலவினங்களுக்கு சக்தி பெற்றிருக்கிறாரோ, அவர் திருமணம் செய்யட்டும். ஏனெனில், திருமணம் (அன்னியப் பெண்களைப்பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும். யார் அதற்கு சக்தி பெறவில்லையோ, அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும் என நபி (ஸல்) கூறினார்கள்." (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் (ரலி), நூல்:புகாரி)
"(நபியே!) இறைவிசுவாசிகளான ஆடவர்களுக்கு நீர் கூறும்: அவர்கள் தங்களது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்." (திருக்குர்ஆன் 24:30)
"இன்னும் இறை விசுவாசிகளான பெண்களுக்கும் நீர் கூறும்: அவர்கள் தங்களது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண் டும்." (திருக்குர்ஆன் 24:31)
ஆண்கள், பெண்கள் தங்களது பார்வைகளை தாழ்த்தும்படி திருக்குர்ஆன் ஏன் பணிக் கிறது? அது விஷம் தடவப்பட்ட ஷைத்தானின் அம்புகளாகவும் அமைந்துள்ளதாக பின்வரும் நபிமொழி தெரிவிக்கின்றன. "பார்வை, ஷைத்தானின் விஷம் தடவப்பட்ட அம்புகளில் ஒன்றாகும் என நபி (ஸல்) கூறினார்கள்." (அறிவிப்பாளர்: மஸ் ஊத் (ரலி), நூல்: தப்ரானி)
இப்னு "பாதைகளின் மீது அமர்ந்து இருப்பதை உங்களுக்கு நான் எச்சரிக்கை செய்கிறேன்' என நபி (ஸல்) கூறிய போது, 'நபியே! நாங்கள் பாதையில் அமர்ந்து பேசும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் என்ன செய்வது?' என தோழர்கள் வேண்டியதும், 'பாதைக்குரிய உரிமைகளை கொடுத்திடுங்கள்' என நபி (ஸல்) பதில் கூறினார்கள்.
'பாதைக்குரிய உரிமைகள் என்ன?' என்பது பற்றி தோழர்கள் வினவினார்கள். அதற்கு நபியவர்கள் 'பார்வையை தாழ்த்திக் கொள்வது, நோவினை தரும் பொருட்களை அகற்றுவது, ஸலாமுக்கு பதில் கூறுவது, நன்மையை ஏவி தீயதை தடுப்பது' என்றார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஸயீத்,நூல்: திர்மிதி)
தகாத பார்வைகளை தவிர்த்து வாழ்பவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் சொர்க்கத்தில் நுழைவிக்க பொறுப்பேற்று இருக்கிறார்கள். எவர் தமது இரண்டு கண்களையும் தடுக்கப்பட்ட காட்சிகளை பார்ப்பதை விட்டும் தவிர்த்து, பார்வையை தாழ்த்தி நோன்பிருக்கிறாரோ, அவரின் நோன்பை எல்லாம் வல்ல அல்லாஹ் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டு, அவரை தன் கருணை பார்வையைக் கொண்டு பார்க்கிறான்.
"எதைப்பற்றி உமக்கு(த்தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடர வேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும், இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்." (திருக்குர்ஆன் 17:36) நோன்பாளிகளே! தடுக்கப்பட்ட பார்வைகளை விட்டும் தவிர்த்து, நோன்பின் புனிதம் காக்க முயலுங்கள்.
- துர்க்கையை குலதெய்வமாக நினைத்து வழிபடலாம்.
- குலதெய்வ வழிபாடு செய்வது மக்களிடையே பெருகி வருகிறது.
குல தெய்வம் எது? அதை வழிபடுவது எப்படி? எனத்தெரிந்து அதை வழிபட ஆரம்பிக்கும் வரை என்ன செய்வது என்று கவலைப்படாதீர்கள். கும்பகோணம் அருகில் 3 கி.மீ. தொலைவில், கதிராமங்கலத்தில் அமைந்துள்ள அகத்தியர் பூஜித்த துர்க்கை கோவிலுக்கு சென்று, அந்த துர்க்கையை குலதெய்வமாக நினைத்து வழிபடலாம். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமை ராகு காலங்களில் இந்த துர்க்கையை வழிபாடு செய்வது சிறப்பாகும். கவிச்சக்கரவர்த்தி கம்பர்தான் பாடல் எழுதும் முன்பாக இந்த துர்க்கையை வழிபாடு செய்தபின் தான் கவிதை எழுதுவாராம்.
குல தெய்வங்கள் என்பவை வெறும் கதைகளால் தோற்று விக்கப்பட்டதோ, ஆகாசத்தில் இருந்து குதித்தவையோ அல்ல. அவை நம் முன்னோர்கள். தங்களை காப்பாற்றியவர்களையோ, தங்கள் காலத்தில் வாழ்ந்த சிறந்த மனிதர்களையோ நம் பெரியவர்கள் நமக்கு ஞாபகம் செய்ய குலதெய்வங்களாக வழிபட்டு வந்திருக்கின்றார்கள்.
வெள்ளாளர்களின் வரலாறு சொல்லும் பழைய நூல்களில் எல்லாம் நீலி கதையும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்து மதத்தின் ஈடு இணையற்ற வரலாற்று சின்னங்களில் குலதெய்வங்களும் ஒன்று. தமிழர்களின் பழங்கால பண்பாடுகளை எடுத்து சொல்ல இன்னமும் வரலாற்று ஆய்வாளர்கள் குலதெய்வ வழிபாட்டை நம்பியிருக்கிறார்கள்.
சைவர்களும், வைணவர்களும் சில குலதெய்வங்களை சிவனாகவும், விஷ்ணுவாகவும் மாற்றி விட்டாலும் பெரும்பாலான குலதெய்வங்கள் தன்னிலை மாறாமல் இருக்கின்றன. அவற்றின் மகிமை உணர்ந்து வருடம் தோறும் குலதெய்வ வழிபாடு செய்வது மக்களிடையே பெருகி வருகிறது.
மதுரைவீரன், கருப்பு, பெரியசாமி, செல்லாயி, மருதாயி என நம் முன்னோர்களின் பெயர்கள் அனைத்தும் குலதெய்வத்தினை சார்ந்தே இடப்பட்டிருக்கின்றன. நம் முன்னோர்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த குலதெய்வ வழிபாட்டு முறைகளையும், கதைகளையும் பற்றி கிராமங்களில் வாழ்ந்தவர்களுக்குதான் தெரியும்.
- பழனி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோவில் தேரோட்டம்.
- ஸ்ரீ ரங்க மன்னார் யானை வாகனத்தில் திருக்கல்யாணம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, பங்குனி 12 (திங்கட்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: பவுர்ணமி நண்பகல் 1.16 மணி வரை பிறகு பிரதமை
நட்சத்திரம்: உத்திரம் காலை 11.19 மணி வரை பிறகு அஸ்தம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம். கங்கை கொண்டான் ஸ்ரீ வைகுண்டபதி சாற்றுமுறை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் தண்டியலில் ஸ்ரீ ரங்க மன்னார் யானை வாகனத்தில் திருக்கல்யாணம். மதுரை ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் குதிரை வாகனத்தில் வைகை எழுந்தருளல். பரமகுடி ஸ்ரீ முத்தாலம்மன், திருப்புல்லாணி ஸ்ரீ ஜெகந்நாதப் பெருமாள், பழனி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேரோட்டம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-தெளிவு
ரிஷபம்-பண்பு
மிதுனம்-களிப்பு
கடகம்-சாதனை
சிம்மம்-வரவு
கன்னி-செலவு
துலாம்- தாமதம்
விருச்சிகம்-சாந்தம்
தனுசு- லாபம்
மகரம்-பக்தி
கும்பம்-பாசம்
மீனம்-பயணம்
- முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடந்தன.
- திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
போரூர்:
பிரசித்தி பெற்ற வட பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரவிழா கடந்த 21-ந் தேதி தொடங்கியது. கடந்த 3 நாட்களாக தினசரி காலை மற்றும் மாலையில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடந்தன.
இந்த நிலையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வடபழனி முருகன்கோவிலில் இன்று அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு உச்சி காலத்துடன் தீர்த்தவாரி மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
விருகம்பாக்கம், சாலிகிராமம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கோவில்களில் இருந்து ஏராளமான பெண்கள், ஆண்கள் அலகு குத்தியும், காவடி சுமந்தும், பால் குடம் எடுத்தும் ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
இன்று இரவு 7மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் சாமி புறப்பாடு நடக்கிறது. இதைத்தொடர்ந்து நாளை முதல் வருகிற 27-ந்தேதி வரை 3 நாட்களும் இரவு 7 மணிக்கு திருக்குளத்தில் தெப்பத்திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது.
பாரிமுனை, ராசப்பா செட்டி தெருவில் உள்ள கந்தக்கோட்டை முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
குன்றத்தூர் முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. பூந்தமல்லியில் உள்ள திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜபெருமாள் கோவிலில் கருட சேவையுடன், கோபுர தரிசனமும், திருவீதி உலாவும் நடைபெற்றது.
மேலும் 3 பெருமாளும் கோவிலின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோவில் வளாகத்தை சென்றடைந்தனர். மற்ற கோவில்களில் ஒரு கருட சேவை மட்டும் நடைபெறும். ஆனால் இங்கு மட்டும் 3 கருட சேவை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மாலையில் 3 பெருமாளுக்கும், திருக்கச்சி நம்பிகளுக்கும் அலங்கார திருமஞ்சனமும், திருப்பாவை சாற்று முறை தீர்த்த பிரசாத விநியோகமும் நடைபெறுகிறது.
திருத்தணி முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, தங்கவேல், தங்கக் கீரிடம், வைர ஆபரணங்கள் அணி விக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடு முறை மற்றும் பங்குனி உத்திரம் என்பதால் மலைக்கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்து இருந்தனர். இதனால் பொது வழியில் மூலவரை தரிசிக்க பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.
- குலதெய்வ கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தனர்.
- சில கோவில்களில் கிடா வெட்டுதல், படையல் நடைபெற்றது.
நெல்லை:
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பங்குனி உத்திரம் எனப்படும் சாஸ்தா கோவில் குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் இன்று பங்குனி உத்திர திருவிழாவையொட்டி வெளியூர்களில் வசிக்கும் ஏராளமானோர் குடும்பத்துடன் தங்களது குலதெய்வ கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தனர்.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் இன்று சில கோவில்களிலும், நாளை (திங்கட்கிழமை) பெரும்பாலான கோவில்களிலும் பங்குனி உத்திரம் கொண்டாடப்படு கிறது. அதன்படி இன்று சில கோவில்களில் கிடா வெட்டுதல், படையல் நடைபெற்றது. முக்கிய சாஸ்தா கோவில்களில் அன்னதானம், தொடர் கச்சேரிகள் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.
பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் நாளை பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. எனினும் இன்று விடுமுறை தினம் என்பதால் பெரும்பா லான பக்தர்கள் அங்கு புறப்பட்டு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பாபநாசம் பகுதியில் வனத்துறையினரின் சோதனைக்கு பின்னர் அங்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதுபோல வள்ளியூர் அருகே உள்ள சித்தூர் சாஸ்தா கோவில், தென்கரை மகாராஜா சாஸ்தா கோவில், வீரவ நல்லூர் அருகே உள்ள பொட்டல் பாடலிங்க சாஸ்தா கோவில், மறுகால்தலை பூலுடையார் சாஸ்தா கோவில், பிராஞ்சேரி கரையடி மாடசாமி கோவில் ஆகிய கோவில்களில் ஏராளமான பக்தர்கள் வெளியூர்களில் இருந்து வந்ததால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நாளை பங்குனி உத்திரத்தை யொட்டி இந்த கோவில்களில் மேலும் அதிகமான பக்தர்கள் கூடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையொட்டி அந்தந்த கோவில் நிர்வாகம் சார்பாக அனைத்து பக்தர்களும் சாமி தரிசனம் செய்யும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
மேலும் தாழையூத்து, சீவலப்பேரி சாஸ்தா கோவில்கள், சேரன்மகா தேவி செங்காடு சாஸ்தா கோவில், நாங்குநேரி செம்பு குட்டி சாஸ்தா கோவில், ஆழ்வார் குறிச்சி காக்கும் பெருமாள் கோவில், அம்பை மன்னார் கோவில் மெய்யப்ப சாஸ்தா கோவில், அருணாபேரி மரத்தடி மேகம் திரை கொண்ட சாஸ்தா கோவில் உள்பட பல்வேறு கோவில்க ளிலும் இன்றும், நாளையும் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடக்கிறது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டம் மேலபுதுக்குடி அய்யனார் கோவிலிலும் இன்று பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. மாவட்டத்தில் உள்ள மணக்கரை, மணத்தேரி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள முக்கிய சாஸ்தா கோவில்களிலும் இன்று வெளியூர் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இன்று காலையில் கணபதி ஹோமம் தொடர்ந்து சாஸ்தா மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனையும் நடந்தது.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு கலெக்டர்கள் நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளனர். இதனால் நாளை சாஸ்தா கோவில்களில் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரித்து காணப்படும்.
இதனால் பெரும்பாலான சாஸ்தா கோவில்களுக்கு போக்குவரத்து கழகம் சார்பிலும் சிறப்பு பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
நெல்லை பஸ் நிலையத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு, அதிகமாக பக்தர்கள் செல்கிறார்களோ, அந்த ஊர்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுதவிர இன்று ஏராளமான வெளியூர் பக்தர்கள் நெல்லை வந்து, வாடகை கார் மற்றும் வேன்களிலும் தங்கள் குலதெய்வ கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் இன்று வாடகை கார், வேன்கள் கூடுதலாக இயக்கப்பட்டது. முக்கிய கோவில்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நெல்லை மாநகர பகுதி யில் மட்டும் சுமார் 40 சாஸ்தா கோவிலுக்கும், நெல்லை மாவட்ட பகுதியில் 120 கோவில்களுக்கும் சிறப்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல் தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் தலா 100-க்கும் மேற்பட்ட கோவில்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
- 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
பழனி:
முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் ஆண்டுதோறும் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில் `தீர்த்தக்காவடி திருவிழா' என அழைக்கப்படும் பங்குனி உத்திரம் தனி சிறப்பு வாய்ந்தது. அதாவது கோடை காலமான பங்குனி, சித்திரை மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். பழனி முருகன் சிலை நவபாஷாணத்தால் ஆனது என்பதால், இந்த காலத்தில் முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு, பக்தர்கள் கொடுமுடியில் இருந்து தீர்த்தம் எடுத்து முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள். இது பங்குனி உத்திர விழாவின் சிறப்பு ஆகும்.
இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த 18-ந்தேதி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை, மாலையில் வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவிழாவின் 6-ம் நாளான நேற்று மாலை முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக காலை 9 மணிக்கு சன்னதி வீதி, கிரிவீதிகளில் தந்தப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. மதியம் 3 மணிக்கு அடிவாரம் சவுமிய நாராயண கவர நாயக்கர் மண்டபத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் மாலை 5 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து புண்ணியாக வாஜனம், கலசபூஜை, மாங்கல்ய பூஜை, கந்த யாகம், சுப்பிரமண்யா யாகம், பூர்ணாகுதி நடைபெற்றது. அதையடுத்து திருக்கல்யாண சடங்குகள் நடைபெற்றன. தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
மாலை 7 மணிக்கு முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் 'வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா', 'வீர வேல் முருகனுக்கு அரோகரா', 'ஞான தண்டாயுதபாணிக்கு அரோகரா' என்று விண்ணே அதிரும் வகையில் கோஷமிட்டனர். தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி, 16 வகை தீபாராதனை நடந்தது. மகா தீபாராதனைக்குப் பின்னர் ஓதுவார்கள் தேவாரம் பாடி, கோவில் குருக்கள் வேத பாராயணம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.
திருக்கல்யாண நிகழ்ச்சிகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் மற்றும் குருக்கள்கள் செய்தனர். நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, கோவில் அலுவலர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
பங்குனி உத்திர திருவிழாவில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடந்ததை தொடர்ந்து, மண கோலத்தில் சுவாமி வெள்ளித்தேரில் எழுந்தருளினார். முன்னதாக திருஆவினன்குடி கோவில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் வெள்ளிதேருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தேர்பவனி தொடங்கியது. சன்னதி வீதி, வடக்கு, கிழக்கு, மேற்கு கிரிவீதிகள் வழியாக சென்று நிலை வந்து சேர்ந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேரோட்டம் இன்று மாலை நடக்கிறது. இதனை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே பழனி நோக்கி குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் தீர்த்தம் எடுத்து வந்தும், காவடி சுமந்தும் ஆடிப்பாடியும் மலைக்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் பழனி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
- நேற்று இரவு பெண்கள் வள்ளி கும்மி ஆட்டம் நடைபெற்றது.
- தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து வந்தனர்.
தருமபுரி:
தருமபுரி அன்னசாகரம் ஸ்ரீ விநாயகர் சிவசுப்பிரமணியசுவாமி கோவில் பங்குனி உத்திரவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது.
9-ம் நாளான நேற்று மாலை விநாயகர் ரதம் புறப்பாடு சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு ஈரோடு சிவகிரி செங்குந்தர் சமூகத்தினர் பெண்கள் வள்ளி கும்மி ஆட்டம் நடைபெற்றது. இதை ஏராளமான பக்தர்கள் கண்டுரசித்தனர்.
இதனைத்தொடர்ந்து இன்று காலை தேரோட்டம் விழா நடைபெற்றது. சிவ சுப்பிரமணிய சாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் பவனி வந்தார். தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து வந்தனர். அப்போது அவர்கள் அரோகரா, அரோகரா என்று கோஷங்களை எழுப்பினர். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி, அன்னசாகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏரளாமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து சென்றனர்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை செங்குத்த மரபினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
- மக்கள் ஓசன்னா... ஓசன்னா.. என்று பாடல் பாடி அவரை வரவேற்றனர்.
- கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று குருத்தோலை பவனி நடை பெற்றது.
சென்னை:
இயேசு 40 நாட்கள் உபவாசம் இருந்து ஜெபித்து வந்த காலத்தை தவக்காலமாக கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது. சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு இயேசு ஜெருசலேம் நகரில் கோவேறு கழுதையின் மீது பவனியாக அழைத்து செல்லப்பட்டார்.
அப்போது குருத்தோலை களை பிடித்தவாறு ஜெருசேலம் மக்கள் ஓசன்னா... ஓசன்னா.. என்று பாடல் பாடி அவரை வரவேற்றனர். அந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) குருத்தோலை பவனி நடை பெற்றது.
சென்னையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் இருந்து குருத்தோலைகளில் சிலுவையை செய்து கையில் பிடித்தவாறு கிறிஸ்தவர்கள் ஆலயத்தை சுற்றியும், தெருக்கள், வீதிகளிலும், பவனியாக சென்றனர்.
சென்னையில் உள்ள கத்தோலிக்க திருச்சபைகள், தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ) ஆலயங்கள், மெத்தடிஸ்ட், லுத்தரன், பெந்தே கோஸ்தே, இ.சி.ஐ. உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது.
சென்னை சாந்தோம் பேராலயம், பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயம், எழும்பூர் தூய இருதய ஆண்டவர் ஆலயம், பெரம்பூர் லூர்து அன்னை ஆலயம், மாதவரம் புனித அந்தோணியார் ஆலயம், சின்னமலை தேவாலயம், கத்தீட்ரல் பேராலயம், புதுப்பேட்டை புனித அந்தோ ணியார் ஆலயம் உள்ளிட்ட சென்னையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆல யங்களிலும் இன்று குருத்தோலை பவனி நடந்தது.

குருத்தோலை பவனியில் சென்ற கிறிஸ்தவர்கள் ஓசன்னா... ஓசன்னா.. என்ற பாடலை பாடியபடி சென்ற னர். பின்னர் ஆலயங்களில் பேராயர்கள், பாதிரியர்கள், போதகர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள்.
- சங்கிலி கருப்பராயன் கோவில் அமைந்துள்ளது.
- கடந்த 2 மாதங்களுக்கு இதே பகுதியில் உள்ள ஒரு அம்மன் கோவிலில் அம்மன் கண் திறந்ததால் பரபப்பு ஏற்பட்டது.
ஈரோடு மூலப்பட்டறை அருகே உள்ள காந்திபுரம் மில் வீதி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியின் எல்லையில் சங்கிலி கருப்பராயன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவில் புணரமைக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் புதிய சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இந்த கோவிலில் உள்ள சங்கிலி கருப்பராயன் காவல் தெய்வமாக இருந்து வருவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று மாலை பக்தர்கள் பலர் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து விட்டு சென்றனர். இரவு திடீரென காவல் தெய்வம் சிலை வழக்கம் போல் இல்லாமல் கண் திறந்து காணப்பட்டது. இதை கண்ட பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர்.

இது பற்றிய தகவல் அந்த பகுதி முழுவதும் பரவலாக பரவியது. இதை பற்றி தகவல் கிடைத்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு குவிந்தனர். மேலும் வேலைக்கு சென்று திரும்பி மக்களும் ஏராளமானோர் கோவிலில் திரண்டனர். இதையடுத்து மக்கள் காவில் தெய்வமே என மனமுருகி வழிபட்டனர்.
தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து இரவு முழுவதும் பக்தர்கள் வந்து கொண்டே இருந்தனர். பெண்கள், குழந்தைகள் என பலர் வந்த வண்ணம் இருந்தனர். மேலும் இதை செல்போன்களில் படம் பிடித்து மற்றவர்களுக்கு அனுப்பினர்.
நேற்று பெரியமாரியம்மன கோவிலில் கம்பம் நடப்பட்டது. அந்த நேரத்தில் சாமி கண் திறந்ததால் பக்தர்கள் பலர் பக்தி பரவசமாக பேசி கொண்டனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. இதே போல் கடந்த 2 மாதங்களுக்கு இதே பகுதியில் உள்ள ஒரு அம்மன் கோவிலில் அம்மன் கண் திறந்ததால் பரபப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சாமிகள் கண் திறந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார்கள். இதனால் பொதுமக்கள் உடல் சிலிர்த்து காவல் தெய்வமே, தாயே அம்மா என்றும் கருப்பராயன் காவல் தெய்வமே என மெய் சிலிர்த்து கொண்டனர். அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது.






