என் மலர்
வழிபாடு
- பக்தர்கள் நாள்கணக்கில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன்.
- குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் மிக கம்பீரமாக காட்சி அளித்து வருகிறது. சுற்றுலா தலமான இக்கோயிலுக்கு ஈரோடு, திருப்பூர் கோவை, நீலகிரி மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடை பெறுவது வழக்கம். இத்திருவிழாவில் லட்சக்கணக்காண பக்தர்கள் வரிசையில் நாள்கணக்கில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.
இந்நிலையில் இந்த ஆண்டு குண்டம் திருவிழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த 11-ந் தேதி இரவு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் குண்டம் திருவிழா தொட ங்கியது. இதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் திரு வீதி உலா புறப்பட்டு பவானிசாகர் மற்றும் சத்தியமங்கலம், உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் திருவீதி உலா நடைபெற்றது. இதை தொடர்ந்து 19-ந் தேதி இரவு அம்மன் சப்பரம் கோவிலை வந்தடைந்தது.
அதைத்தொடர்ந்து அன்றிரவு நிலக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் தினமும் இரவு கோவிலில் தினமும் மலைவாழ் மக்கள் தாரை, தப்பட்டை, பீனாட்சி வாத்தியத்துடன் அம்மன் புகழ்பாடும் களியாட்டமும், நித்தியப்படி பூஜையும் நடைபெற்றது. விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து எரி கரும்புகளை காணிக்கை யாக செலுத்தி வந்தனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் மாலை பரிவார தெய்வங்களான மாதேஸ்வரன், சருகுமாரியம்மன், வண்டிமுனியப்பன் மற்றும் ராகு, கேது தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. நேற்று அதிகாலை 4 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜையும், காலை 5 மணிக்கு குண்டத்திற்கு தேவையான கரும்பு வெட்ட செல்லும் நிகழ்ச்சியும் காலை 6 மணிக்கு அம்மன் மெரவணை ஊர்வலம் நடைபெற்றது. மாலையில் குண்டத்திற்கு எரிகரும்புகள் அடுக்கும் பணியும் இரவு 8 மணிக்கு குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அக்னி இடப்பட்டு குண்டம் வளர்க்கப்பட்டது. தொடர்ந்த இரவு மழுவதும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து இன்று அதிகாலை 2 மணிக்கு சகல வாத்தியங்களுடன் தெப்பக்குளம் சென்று அம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சி நடை பெற்றது. அப்போது குண்டத்திற்கு இடப்பட்ட நெருப்பினை சிக்கரசம்பாளையம், இக்கரை நெகமம் புதூர் மற்றும் வெள்ளியம்பாளையம் கிராமங்களை சேர்ந்த பெரியவர்கள் மூங்கில் கம்புகளால் தட்டி நெருப்பினை சீராக பரப்பி 11 அடி நீளம் 5 அடி அகலத்தில் குண்டத்தை தயார் செய்தனர்.
தெப்பக்குளம் சென்ற அம்மன் சரியாக 3.15 மணிமுதல் 3.30 மணிக்குள் குண்டத்தின் முன்புறம் அம்மன் சப்பரம் வந்து சேர்ந்தபின் குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. குண்டத்தை சுற்றிலும் கற்பூரம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது. குண்டம் இறங்குவ தற்கான லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இதையடுத்து சரியாக அதிகாலை 3.45 மணிமுதல் 4 மணிக்குள் பூசாரி பார்த்திபன் குண்டம் இறங்கினார். அப்போது பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்து தாயே.. பண்ணாரி, அம்மா... காவல் தெய்வமே.. எங்களை காக்கு தெய்வமே என பக்தி கோஷம் மிட்டனர். விண்ணை முட்டும் அளவுக்கு பக்தி கோஷம் எழுப்பப்பட்டது.
இதையடுத்து வீதி உலா கொண்டு செலல்ப்பட்ட சப்பரம் படைக்கலத்துடன் வந்த பக்தர்கள் உற்சவரை சப்பரத்தில் சுமந்தபடி குண்டம் இறங்கினர்.
அதை த்தொடர்ந்து வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அம்மனை வழி பட்டபடி குண்டம் இறகினர். இதில் சுமார் லட்சக்கண க்கான பக்தர்கள் தொடர்ந்து குண்டம் இறங்கி கொண்டே இருந்தனர். குண்டம் திருவிழாவில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்திலிருந்து 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று மதியம் 1 மணி வரை பக்தர்கள் குண்டம் இறங்குவர். அதனை தொடர்ந்து மதியத்திற்கு மேல் சுற்றுவட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கால்நடைகளை குண்டத்தில் இறக்குவர்.
நாளை மதியம் மாவிளக்கு பூஜையும், இரவு புஷ்பரத ஊர்வலமும் நடைபெறுகிறது. 28-ந் தேதி மஞ்சள் நீராடுதலும், 29-ந் தேதி மாலை சுமங்கலி பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை மற்றும் தங்க தேர் ஊர்வலமும் நடைபெறுகிறது. ஏப்ரல் 1-ந் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.
- மனதை உருகச் செய்யும் செய்யுள்களால் இறைவனை போற்றிப் பாடி உள்ளார்.
- பன்னிரு திருமுறைகளில் 8-ம் திருமுறையாக வைத்து போற்றப்படுகிறது.
மனதை உருகச் செய்யும் செய்யுள்களால் இறைவனை போற்றிப் பாடிய மாணிக்கவாசகர், அதனை 'திருவாசகம்' என்ற பெயரில் தொகுத்தார். இந்த திருவாசகம், பன்னிரு திருமுறைகளில் 8-ம் திருமுறையாக வைத்து போற்றப்படுகிறது. இந்த நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
பாடல்:-
விலங்கும் மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே.
பொருள்:
மாசில்லாத சிவபெருமானே... ஒருமைப்படாமல் சிதறு கின்ற சிந்தனைகளை கொண்ட மனதால், உன்னிடம் கலந்து நிற்கின்ற அன்பு நிறைந்து, அந்த நிறைந்த அன்பால் கசிந்தும், உள்ளம் உருகியும் நிற்கின்ற நல்ல தன்மை இல்லாத சிறுமையுடையவன் நான். அப்படிப்பட்ட எனக்கும் அருள்செய்து, இந்த உலகில் உணரத்தக்க வண்ணம் கருணையாக வந்து, உன்னுடைய நீண்ட அழகிய கழல் அணிந்த திருவடிகளைக் காட்டி, நாயினும் கேவலமான நிலையில் கிடந்த அடியேனுக்கு, பெற்ற தாயை விடவும் அதிகமான அன்பை செலுத்தும் தத்துவப் பொருளே.
- 28-ந்தேதி சங்கடஹர சதுர்த்தி.
- 29-ந்தேதி புனித வெள்ளி.
26-ந்தேதி (செவ்வாய்)
* பட்டுக்கோட்டை நாடியம்மனுக்கு காப்பு கட்டுதல்.
* ராமகிரி கல்யாண நரசிங்கப் பெருமாள் ரத உற்சவம்.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் வீதி உலா.
* சமநோக்கு நாள்.
27-ந்தேதி (புதன்)
* முகூர்த்த நாள்.
* மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், கள்ளர் திருக்கோலமாய் காட்சி தருதல்.
* உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாசப் பெருமாள் விழா தொடக்கம்.
* சமநோக்கு நாள்.
28-ந்தேதி (வியாழன்)
* சங்கடஹர சதுர்த்தி.
* திருநெல்வேலி டவுண் லட்சுமி நரசிங்கப் பெருமாள் கோவிலில் எண்ணெய்க் காப்பு.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் திருக்கல்யாணம், மதுரை மீனாட்சி- சுந்த ரேஸ்வரர் திருப்பரங் குன்றம் எழுந்தருளல்.
* திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் கற்பக விருட்ச வாகனத்தில் பவனி.
* சமநோக்கு நாள்.
29-ந்தேதி (வெள்ளி)
* புனித வெள்ளி.
* திருக்குறுங்குடி 5 நம்பிகள் 5 கருட வாகனத்தில் பவனி.
* மன்னார்குடி ராஜ கோபால சுவாமி அம்ச வாகனத்தில் வீதி உலா.
* திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பெரிய வைரத்தேரில் பவனி.
* கீழ்நோக்கு நாள்.
30-ந்தேதி (சனி)
* தாயமங்கலம் முத்துமாரி அம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பாடு.
* திருவெள்ளறை சுவேதாத்திரி நாதர் கருட வாகனத்தில் பவனி.
* சென்னை மல்லீஸ்வரர், மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமான் கோவில்களில் விடையாற்று உற்சவம்.
* சமநோக்கு நாள்.
31-ந்தேதி (ஞாயிறு)
* மன்னார்குடி ராஜ கோபால சுவாமி, பஞ்சமுக அனுமனுடன் ராமர் திருக்கோலக் காட்சி.
* உப்பிலியப்பன் திருப்பல்லக்கிலும், இரவு தாயார் வெள்ளி கமல வாகனத்திலும் புறப்பாடு.
* திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் காலை சிம்ம வாகனத்திலும், இரவு சேஷ வாகனத்திலும் பவனி.
* சமநோக்கு நாள்.
1-ந்தேதி (திங்கள்)
* தாயமங்கலம் முத்துமாரி அம்மன் காமதேனு வாகனத்தில் வீதி உலா.
* உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாசப் பெருமாள் காலை வெள்ளி திருப்பல்லக்கில் பவனி.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* கீழ்நோக்கு நாள்.
- புனித ரமலானில் உம்ரா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்.
- உம்ராவை எத்தனை தடவை வேண்டுமானாலும் நிறைவேற்றலாம்.
புனித ரமலானில் உம்ரா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
புனித ரமலான் மாதம் நோன்புக்கானது (மாதம்) மட்டுமல்ல. நோன்புக்கும் உரியது. நோன்பு அல்லாத பிற வழிபாட்டுக்கும் ஏற்றமானது. புனித ரமலானில் உயர்வான, முதன்மையான வழிபாடு நோன்பாகும். நோன்பை விடுத்து இன்னும் ஏராளமான வழிபாடுகள் புனித ரமலானில் நிரம்பி வழிகின்றன. நிறைவேற்றப்படவும் செய்கின்றன. அவற்றில் நோன்புக்கு அடுத்த அந்தஸ்தில் இடம் பெறுவது புனிதரமலானில் புனித கஅபா ஆலயம் சென்று, அதை தரிசனம் செய்து (உம்ரா செய்து) வருவதாகும்.
உம்ரா செய்வது என்றால், அதற்கென்று தனி மாதங்களோ, தனி காலங்களோ கிடையாது. ஆண்டு முழுவதும் புனித கஅபா ஆலயம் சென்று தரிசனம் செய்து வரலாம். ஆனால், இவ்வாறு ஹஜ் செய்யமுடியாது. ஹஜ் செய்வ தற்கென்று சில குறிப்பிட்ட மாதங்கள் உண்டு. அவை, ஷவ்வால், துல்கஅதா, துல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களாகும். இம்மூன்று மாதங்களை தவிர்த்து வேறுமாதங்களில் ஹஜ்ஜை நிறைவேற்ற முடியாது. எனினும், உம்ராவை நிறைவேற்ற முடியும்.
உம்ரா செய்ய ஒருவர் நாடினால், அவர் முதலில் தைக்கப்படாத இரண்டு ஆடைகளை அணிந்து புனித கஅபாவில் நுழைய வேண்டும். (இதற்கு இஹ்ராம் ஆடை என்று பெயர்), புனித கஅபாவில் நுழைந்ததும் 7 சுற்றுக்கள் சுற்றி வர வேண்டும், ஸபாவில் ஆரம்பித்து - மர்வா ஆகிய இரண்டு குன்றுகளுக்கு மத்தியில் ஏழு தடவை விரைந்தோட வேண்டும். தலைமுடியை அகற்ற வேண்டும். இவ்வாறு செய்வதுதான் உம்ரா ஆகும்.
உம்ராவை எத்தனை தடவை வேண்டுமானாலும் நிறைவேற்றலாம். ஆனால் புனித ஹஜ் என்பது வாழ்க்கையில் ஒரு தடவைதான் கடமை. புனித ஹஜ்ஜை ஒரு தடவை மட்டும் நிறைவேற்றினால் போதும். உம்ராவை பல தடவை நிறைவேற்றலாம். இதுதான் நபி வழி.
கதாதா (ரஹ்) அறிவித்தார். 'நபி (ஸல்) அவர்கள் எத்தனை உம்ராக்கள் செய்தார்கள்? என நான் அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்டதற்கு அவர், 'நான்கு உம்ராக்கள் செய்தார்கள். அவை: ஹூதைபிய்யா எனுமிடத்தில் துல்க அதா மாதத்தில், இணை வைப்போர் தடுத்த போது செய்யச் சென்றது. இணைவைப்பருடன் செய்த சமாதான ஒப்பந்தப்படி, அடுத்த ஆண்டு துல்கஅதா மாதத்தில் செய்தது. 'ஜிஇர்ரானா' என்ற இடத்திலிருந்து ஒரு போரில் (அது ஹூனைன் போர் என்று கருதுகிறேன்) வெற்றி கொள்ளப்பட்ட பொருட்களை பங்கிட்ட பொழுது செய்தது.
நபி (ஸல்) அவர்கள் தமது ஹஜ்ஜில் அடங்கியிருந்த உம்ராவையும் சேர்த்து நான்கு உம்ராக்களாகும்' என்றார். பிறகு 'எத்தனை ஹஜ் செய்தார்கள்?" என்று கேட்டதற்கு 'ஒரு ஹஜ் தான், என்றார்கள்.' (நூல்:புகாரி)
உம்ராவை எந்த மாதத்திலும் நிறைவேற்றலாம். எனினும், புனித ரமலான் மாதத்தில் உம்ராவை நிறைவேற்றுவது நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்வதற்கு நிகரானதாகும். 'ரமலானில் செய்யப்படும் ஓர் உம்ரா என்னோடு ஹஜ் செய்வதற்கு நிகராகும்' என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி)
ஹஜ் வேறு வணக்கம். உம்ரா வேறு வணக்கம். உம்ரா செய்வதினால் மட்டுமே ஹஜ் கடமை நீங்கிவிடாது. எனினும், ரமலானில் உம்ரா செய்தால், ஹஜ் செய்வதால் எந்த நன்மை கிடைக்குமோ அதே நன்மை கிடைக்கும். 'ஓர் உம்ராச் செய்வது, மறு உம்ரா வரை (ஏற்படும் சிறு) பாவங்களுக்குப் பரிகாரமாகும். (பாவச்செயல் கலவாத) ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜூக்குச் சொர்க்கத்தைத் தவிர வேறு கூலி இல்லை' (அறிவிப்பாளர்: ஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்) அபூஹரைரா (ரலி ), நூல் :முஸ்லிம்
- திருவரங்கம் கோயிலின் புரோகிதராக, தர்ம கர்த்தாவாகவும் இருந்தவர்.
- ராமானுஜ நூற்றந்தாதி எனும் சிறந்த நூலை இயற்றினார்.
நயந்தரு பேரின்ப மெல்லாம் பழுதென்று நண்ணினர்பால்
சயந்தரு கீர்த்தி இராமா னுசமுனி தாளிணைமேல்
உயர்ந்த குணத்துத் திருவரங் கத்தமுது ஓங்கும்அன்பால்
இயம்பும் கலித்துறை அந்தாதி ஓத இசைநெஞ்சமே!
திருவரங்கத்து அமுதனார் திருவரங்கக் கோயிலின் புரோகிதராகவும் தர்ம கர்த்தாவாகவும் இருந்தவர் புரோகிதம் என்பது கோயிலில் பஞ்சாங்கம் புராணம் வாசித்தல் வேத விண்ணப்பம் செய்தல் திருவரங்கத்தின் கோவில் சாவி அவரிடம் தான் இருந்தது அவர் ஸ்ரீ ராமானுஜரின் பிரதம சீடராகி ராமானுஜரின் மீது ராமானுஜ நூற்றந்தாதி எனும் மிகச் சிறந்த நூலை இயற்றினார்.
அது மேலோட்டமாக பார்த்தால் ராமானுஜரின் புகழ் பாடுவதாக இருந்தாலும், ஆழ்வார்களின் புகழையும், அவர்கள் அருளிய அருளிச்செயலின் புகழையும், வைணவ தத்துவங்களையும் உள்ளடக்கிய நூல் என்பதால், அதை ஆழ்வார்களின் நூலோடு சேர்ந்து வைணவர்கள் கோயில்களில் முறையாக ஒதுவார்கள். அப்படிப்பட்ட திருவரங்கத்து அமுதனாரின் அவதார நட்சத்திரம் பங்குனி மாதம் அஸ்த நட்சத்திரம் அதாவது இன்று திருமால் ஆலயங்களிலும் வைணவர்கள் வீடுகளிலும் இந்த நட்சத்திர வைபவத்தை மிகவும் சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.
பங்குனி பிரம்மோற்சவம் பத்தாம் நாள் அமுதனார் அவதரித்த ஹஸ்த நட்சத்திரத்தில் நம்பெருமாள் கண்டருளும் சப்தாவரணம் அமைந்து விசேஷமாகும்!
இதில், நம்பெருமாள் வீதி புறப்பாட்டில் அத்யாபக கோஷ்டியில் இராமாநுச நூற்றந்தாதி பாசுரங்களை சேவிக்க, தாமும் மற்றும் அடியார்களும் காதுகுளிர கேட்பதற்காக சப்தமில்லாமல் (மேள ஒசையே இதில் இல்லாமல்) எழுந்தருள்வார்! இந்த காரணத்தினால் இந்த பத்தாம் திருநாள் சப்தாவரணம் எனப்படுகிறது!
நம்பெருமாள் வீதி புறப்பாடு முடித்து, தாயார் சந்நிதியில் திருவந்திக்காப்பு கண்டருளி, உடையவர் சந்நிதிக்கு எழுந்தருள்வார்!
இராமாநுசரும் கைத்தலமாக சந்நிதி முற்றத்தில் எழுந்தருளி, நம்பெருமாளை கண்குளிர சேவிப்பார் பெருமாள் இராமாநுசருக்கு தாம் உடுத்திக் களைந்த பீதக ஆடை, மாலை, சாத்துப்படி சடாரிசாதிப்பார்.
- முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
- சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, பங்குனி 13 (செவ்வாய்க்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: பிரதமை பிற்பகல் 3.06 மணி வரை பிறகு துவிதியை
நட்சத்திரம்: அஸ்தம் நண்பகல் 1.42 மணி வரை பிறகு சித்திரை
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருப்பரங்குன்றம் ஸ்ரீமுருகப்பெருமான் தங்கமயில் வாகனத்தில் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் முத்துக்குறிகண்டருளல். பழனி ஸ்ரீமுருகப்பெருமான் தந்தப்பல்லக்கு இரவு தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நிம்மதி
ரிஷபம்-நன்மை
மிதுனம்-வரவு
கடகம்-உழைப்பு
சிம்மம்-இனிமை
கன்னி-களிப்பு
துலாம்- போட்டி
விருச்சிகம்-ஆர்வம்
தனுசு- வெற்றி
மகரம்-உண்மை
கும்பம்-உறுதி
மீனம்-துணிவு
- தேரோட்டம் இன்று விமரி சையாக நடைபெற்றது.
- நேற்று இரவு, சாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திரசூடேஸ்வர சாமி மலைக்கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த்திருவிழா, இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது..
விழாவையொட்டி, கடந்த மாதம் 21-ந்தேதி ஓசூர் தேர்பேட்டையில் பால்கம்பம் நட்டு, தேர்கட்டும் பணிகள் தொடங்கியது. தொடர்ந்து, கடந்த 18-ந்தேதி அங்குரார்ப்பணம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து, விழா நிகழ்ச்சிகள், கடந்த 19-ந் தேதி ஓசூர் வீரசைவ லிங்காயத்து மரபினரால் திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து நேற்றுவரை ஓசூர் தேர்பேட்டையில் உள்ள ஸ்ரீ கல்யாண சூடேஸ்வரர் கோவிலில் தினமும் இரவு சிறப்பு பூஜைகளும் சிம்ம வாகனம், மயில் வாகனம், நந்தி வாக னம், நாக வாகனம் உள்ளிட்ட வாகன உற்ச வங்கள், பூ அலங்காரங்கள் நடைபெற்றது. நேற்று இரவு, சாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர், யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று காலை 10.10 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில், சாமியை வைத்து முதலில் விநாயகர் சிறிய தேரையும், அதனை தொடர்ந்து பெரிய தேரையும் பகுதி கோஷம் முழங்க பக்தர்கள் தேரை இழுத்து சென்றனர்.
விழாவையொட்டி தேர்பேட்டை மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் பல்வேறு அமைப்புகள் மற்றும் பக்தர்கள் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தேர்த்திருவிழாவை யொட்டி, ஓசூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
- கொடுமுடி தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு.
- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வருவார்கள்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திர திருவிழா என்பது பழனியில் `தீர்த்தக்காவடி' என அழைக்கப்படுகிறது.
அதாவது கோடை வெயில் உக்கிரமாக உள்ள பங்குனி, சித்திரை மாதங்களில் நவபாஷாணத்தால் ஆன பழனி முருகப்பெருமானை குளிர்விக்க பக்தர்கள் கொடுமுடி தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு ஆகும். குறிப்பாக பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வருவார்கள்.
பல்வேறு சிறப்புக்கு சொந்தமான பங்குனி உத்திர திருவிழா, கடந்த 18-ந்தேதி உபகோவிலான திருஆவினன்குடியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வந்து வழிபட்டு வருகின்றனர். விழாவில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடந்தது.
இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்தனர். இதில் பெரும்பாலான பக்தர்கள், தீர்த்தக்காவடி எடுத்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
பங்குனி உத்திர நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சண்முகநதியில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார். பின்னர் 6 மணிக்கு தீர்த்தம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
காலை 9 மணிக்கு திருஆவினன்குடி கோவிலில் தந்தப்பல்லக்கில் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. மதியம் 11.30 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் வடக்கு கிரிவீதியில் இருந்த திருத்தேரில் எழுந்தருளினார். மாலை 4 மணிக்கு தனித்தனி தேர்களில் எழுந்தருளிய விநாயகர், அஸ்திர தேவருக்கு தீபாராதனை நடைபெற்று தேர் இழுக்கப்பட்டது.
தொடர்ந்து பெரிய தேரில் எழுந்தருளி இருந்த முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது.
தேரோட்டம்
பின்னர் தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிதறு தேங்காய் உடைக்கப்பட்டது. அதையடுத்து திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோவில் அலுவலர்கள், நகர் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இதனையடுத்து 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா', 'வீரவேல் முருகனுக்கு அரோகரா' என்ற சரண கோஷம் விண்ணை பிளக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு கிரிவீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் வெள்ளத்தில் தேர் வலம் வந்தது. அப்போது தேரில் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையை பக்தர்கள் பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
- தேர் திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குத்தாலம்:
குத்தாலம் தாலுகா திருவாலங்காடு கிராமத்தில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான வண்டார் குழலி அம்பிகை சமேத வடாரண்யேசுர சாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா கடந்த 16-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான 9-ம் நாள் தேர் திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள் அருளாசியுடன் காலை 9 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினர்.
பின்னர் மகா தீபாராதனை செய்யப்பட்ட, திருவாவடுதுறை ஆதீன கட்டளை ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜவள்ளி பாலமுருகன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் தேரானது நான்கு வீதிகளையும் வலம் வந்து மதியம் நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
- கோவில் முன்பு தீமிதி உற்சவம் நடைபெற்றது.
திருக்கடையூர்:
திருக்கடையூர் கீழ வீதியில் மகா முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் மகா முத்துமாரியம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இக்கோவிலில் நேற்று தீமிதி திருவிழா நடந்தது.
முன்னதாக மாலை 5 மணி அளவில் திருக்கடையூர் ஆணைக்குளத்தில் உள்ள எதிர்காலிஸ்வரர் கோவிலில் இருந்து பால் காவடி, அலகு காவடி, பறவைக்காவடிகள் உடன் கரகம் புறப்பட்டு, வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க கடைவீதி, சன்னதி வீதி, வடக்கு வீதி, மேல வீதி வழியாக கோவிலை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து மகா முத்துமாரியம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
அதனை தொடர்ந்து மாலை 6 மணி அளவில் கோவில் முன்பு தீமிதி உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீக்குண்டத்தில் இறங்கி அம்மனுக்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.தொடர்ந்து இரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு பொறையாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- பங்குனி உத்திர விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்.
புதுச்சேரி:
தமிழ் மாதங்களில் கடைசி மாதமான பங்குனியில் வரும் உத்திரம் நட்சத்திரம் மற்றும் பவுர்ணமியுடன் இணையும் நன்னாள் பல தெய்வங்களின் திருமணங்கள், நிகழ்வுகளால் மிக சிறப்பை பெற்றது. அதன் நினைவை போற்றி மகிழும் விதமாக பங்குனி உத்திர பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரமானது, தமிழ் கடவுளான முருகனுக்கு உகந்ததாக முருகன் கோவில்களிலும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
புதுச்சேரியில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்திர விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக முருங்கப்பாக்கம் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி கோவில் பங்குனி உத்திர விழா கடந்த 15-ந் தேதி தொடங்கியது.

விழாவையொட்டி நேற்று காலை 6 மணிக்கு பக்தருக்கு மிளகாய் பொடி கரைசல் அபிஷேகம், அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் இன்று (திங்கட்கிழமை) 108 சங்காபிஷேகமும், நாளை (செவ்வாய்க்கிழமை) சுவாமிக்கு சந்தனக்காப்பு அரங்கமும் நடக்கிறது.
புதுவை ரெயில் நிலையம் அருகே உள்ள கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் காலை முருகப்பெருமானுக்கு பால் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 7 மணிக்கு ஸ்ரீ வள்ளி திருக்கல்யாணமும், அம்பாள் உள்புறப்பாடும் நடந்தது.
காராமணிக்குப்பத்தில் உள்ள சுந்தரவிநாயக சிவசுப்ரமணிய சாமி கோவிலில் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பச்சைசாற்றி அலங்காரத்தில் முருகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
புதுவை சஞ்சய்காந்தி நகரில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் சுவாமிக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. இரவு 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது. இன்று இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.
பிள்ளையார்குப்பம் சிவசுப்ரமணிய கோவிலில் காலை 8 மணிக்கு சுவாமிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடந்தது. இதேபோல் புதுச்சேரி கதிர்வேல் சுவாமி கோவில், லாஸ்பேட்டை முருகன் கோவில், பெரியகாலாப்பட்டு பாலமுருகன் கோவில் உள்பட பல்வேறு முருகன் கோவில்களிலும் பங்குனி உத்திரவிழா கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.
அரியாங்குப்பம் சுப்பையா நகர் பாலமுருகன் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு விசேஷ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து 108 காவடிகள் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். மேலும் பக்தர்கள் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
காலாந்தோட்டம் சிவசுப்பிரமணியர் கோவிலில் நடந்த விழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து சாமிக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் ராஜ அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் உள்ள சிவசுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
- பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
- பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
பங்குனி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று காலை 10.54 மணியளவில் தொடங்கியது. பவுர்ணமி காலையில் தொடங்கியதால் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்றனர். வழக்கமாக சித்ரா பவுர்ணமி, கார்த்திகை தீபம் போன்ற நாட்களில் தான் பக்தர்களின் வரிசையானது கோவிலையும் தாண்டி மாட வீதியில் வரை காணப்படும். நேற்று விடுமுறை தினம் என்பதால் பவுர்ணமி கிரிவலம் மேற்கொள்ள பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர்.
கிரிவலம் செல்ல உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். குறிப்பாக ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் வருகை தந்தனர்.
நேற்று வழக்கத்தை விட பகலில் வெயில் கொளுத்தியது. இதனால் பக்தர்கள் பலர் பகலில் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் செல்லலாம் என்று முடிவு செய்து வரிசையில் நின்றனர். கோவிலை சுற்றியுள்ள மாட வீதி வரை பக்தர்கள் வரிசை நீண்டு காணப்பட்டது. வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தலையில் துண்டு வைத்து மறைத்தும், குடை பிடித்தபடியும் வரிசையில் நின்றனர்.

கோவிலில் சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரத்திற்கு மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர். வரிசையில் சென்ற பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டதுடன் மோர் வழங்கப்பட்டது. இருப்பினும் வெயிலின் தாக்கத்தினால் பக்தர்கள் மிகவும் அவதி அடைந்தனர்.
மேலும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் பலர் தனித்தனியாக நேற்று கிரிவலம் சென்றனர். மாலையில் வெயிலின் தாக்கம் குறைய தொடங்கியதும் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இரவில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.
பவுர்ணமி கிரிவலமானது இன்று மதியம் 12.55 மணி வரை உள்ளது. அதனால் பக்தர்கள் இன்று காலை வரை தொடர்ந்து விடிய, விடிய கிரிவலம் சென்றனர். பவுர்ணமியை முன்னிட்டு போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.






