என் மலர்tooltip icon

    வழிபாடு

    • சுப்ரபாதத்தை அருளிச் செய்வதவர் ஹஸ்திகிரிநாதன்.
    • பங்குனி மாதம் நவமி பூசம் நட்சத்திரத்தில் ஆசார்யன் திருவடி அடைந்தார்.

    கலியுக தெய்வம் திருவேங்கமுடையானுக்கு பிரதி நித்யம் சேவிக்கின்ற மேற்குறிப்பிட்ட சுப்ரபாதத்தை அருளிச் செய்வதவர் ஹஸ்திகிரிநாதன் இவரை அன்பாக அண்ணன் என்றும் அழைப்பர். இவர் வேதாந்த தேசிகரின் குமாரரான வரதாசார்யலு (குமார தேசிகர்) இடத்தே சமஸ்கிருத வேதாந்தத்தையும் மணவாளமாமுனிகளிடத்தே திராவிட வேதாந்தத்தையும் கற்றுத் தேர்ந்தார்.

    மணவாளமாமுனிகள் அண்ணனை விட எட்டு ஆண்டுகள் வயதில் சிறியவர் இவர் காலத்திற்கு பிறகு அண்ணன் சுமார் பத்து ஆண்டுகள் வாழ்ந்தார். இவர் கி.பி.1361 ப்ளவ வருடம் ஆடி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார் கி.பி. 1454 ஸ்ரீமுக வருடம் பங்குனி மாதம் நவமி பூசம் நட்சத்திரத்தில் ஆசார்யன் திருவடி அடைந்தார்.

    இவர் ஒருநாள் குருவான மணவாள மாமுனிகளோடு சேர்ந்து ஸ்ரீநிவாசனை சேவிப்பதற்காக திருமலைக்கு வந்தார் அவ்விடியற்காலை வேளை சீடனை பார்த்து ஸ்வாமி மீது சுப்ரபாதம் அருளக்கூடாதா எனக் கூற, அடுத்த கணமே. அவரின் கட்டளையின்படி வேங்கடேஸ்வர சுப்ரபாதம் ஸ்தோத்திரம், பிரபத்தி, மங்களாசாசனம் என்னும் நான்கினையும் தன்னிசையாகப் பாடினார்.

    இந்த சுப்ரபாதத்திற்கு முன்னர் தொண்டரடிப்பொடியாழ்வார் (விப்ரநாராயணர்) அருளிச் செய்த திருப்பள்ளி எழுச்சி யையே சுப்ரபாதமாக சேவிப்பது வழக்கம். இவருடைய வேதாந்த ஞானத்தைப் பாராட்டி குரு பிரதிவாதி பயங்கரம் என்னும் விருது வழங்கி கவுரவித்தார்.

    இன்றும் இவருடைய வம்சத்தினர் பிரதிவாதி பயங்கரம் என்னும் வீட்டுப் பெயரோடு அழைக்கப்படு கிறார்கள் திருப்பதி கோவிந்தராஜ ஸ்வாமி கோயில் தெற்கு மாடவீதியில் உள்ள லக்ஷ்மி நாராயண ஸ்வாமி கோயிலில் இன்றைக்கும் இவருக்கு விக்ரஹ ஆராதனை நடந்து வருகிறது.

    வைண சமயத்தை வளர்ப்பதற்காக ராமானுசர் நியமித்த 74 சிம்மாசனாதிகளில் ஒருவரான முடும்பை நம்பியின் வழித்தோன்றலில் பிறந்தவர் பிரதிவாதி பயங்கரம் அண்ணன். அவர் அவதார நட்சத்திரம் இன்று.

    • ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை.
    • இன்று திருவோண விரதம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, பங்குனி 21 (புதன்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: நவமி பிற்பகல் 2.09 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம்: உத்திராடம் மாலை 5.43 மணி வரை பிறகு திருவோணம்

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று திருவோண விரதம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். கரிவலம் வந்த நல்லூர் ஸ்ரீ பால் வண்ணநாதர் விழா தொடக்கம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி ரிஷிமுக பர்வதம் பட்டாபிராமர் திருக்கோலமாய்க் காட்சி. தாயமங்கலம் ஸ்ரீ முத்து மாரியம்மன் பூத வாகனத்தில் திருவீதிஉலா. ஒழுகைமங்கலம் ஸ்ரீ மாரியம்மன் வெள்ளி காமதேனு வாகன பவனி. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம் பெருமான் சிறப்பு திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-புகழ்

    ரிஷபம்-பக்தி

    மிதுனம்-பிரீதி

    கடகம்-சுகம்

    சிம்மம்-நிம்மதி

    கன்னி-சுபம்

    துலாம்- உயர்வு

    விருச்சிகம்-தேர்வு

    தனுசு- தனித்தன்மை

    மகரம்-நட்பு

    கும்பம்-கடமை

    மீனம்-பொறுமை

    • சுவர்க்கத்தின் பக்கம் அழைத்துச்செல்ல இஸ்லாம் மார்க்கம் உதவுகிறது.
    • வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை.

    உலக மக்கள் அனைவருக்கும் நேர் வழி காட்டவும், அவர்களை சுவர்க்கத்தின் பக்கம் அழைத்துச்செல்லவும் இஸ்லாம் மார்க்கம் உதவுகிறது. கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத் மற்றும் ஹஜ் ஆகிய 5 கடமைகளை உள்ளடக்கியது இஸ்லாம் மார்க்கம்.

    'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்' என்பதே முதல் கலிமா ஆகும். இந்தக் கலிமாவை யார் ஒருவர் உள்ளத்தால் ஏற்று நாவால் சொல்கிறாரோ அவர் நற்பாக்கியம் பெற்றவர்களில் இடம்பிடித்துவிடுவார்.

    அடுத்தது தொழுகை. கடமையான ஐந்து நேரத் தொழுகைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொரு ஆணுக்கும் 7 வயது முதல் மரணம் வரை தொழுகை கட்டாயம் ஆகும். தொழுகை மனிதர்களை நேர்வழியில் நடத்தி இம்மையிலும், மறுமையிலும் நன்மைகள் பெற உதவுகின்றது.

    தொழுகைக்கு அடுத்து வருவது நோன்பு. ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு வைக்க வேண்டும். சூரிய உதயத்தில் இருந்து மறையும் வரை எதையும் உண்ணாமல், பருகாமல் இருந்து மன ஆசைகளை கட்டுப் படுத்தி நோன்பு நோற்க வேண்டும். இரவு நேரங்களில் தொழுகையில் ஈடுபடவேண்டும். பகல் முழுவதும் பசித்திருப்பதாலும், தாகத்துடன் இருப்பதாலும் உடலும் உள்ளமும் தூய்மை பெறுகிறது. இறையச்சத்துடன் நடத்தப்படும் தொழுகைகள் நமது பாவங்களுக்கு மன்னிப்பை வழங்குகிறது.

    மேலும் பிறரின் பசித்துன்பத்தை நாம் இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

    நோன்பைப் போன்று ஜகாத்தும் முக்கிய கடமையாகும். ஒவ்வொருவரும் தங்களது வருமானத்தில், செல்வத்தில் இரண்டரை சதவீதம் ஏழைகளுக்கு தானமாக கொடுக்க வேண்டும். இதுவே `ஜகாத்' என்று சொல்லப்படுகிறது. ரமலான் நோன்பில் வரும் முக்கியமான இரவு லைலத்துல் கத்ர் இரவாகும்.

    `நபியே! லைலத்துல் கத்ர் என்றால் என்னவென்று நீர் அறிவீரா? கண்ணியமிக்க அந்த இரவு ஆயிரம் மாதங்களை விட சிறந்ததாகும்' என்று திருக்குர்ஆன் (97:23) கூறுகின்றது.

    மகத்துவமும், புனிதமும் மிக்க அந்த இரவு ரமலானில் எப்பொழுது வருகிறது?. இது குறித்த நபி மொழி வருமாறு:

    லைலத்துல் கத்ர் எனும் மகத்தான இரவு எப்பொழுது என்பதை அறிவிப்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது இரண்டு பேர் தங்களுக்குள் கடன் சம்பந்தமான சர்ச்சையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதை தீர்த்து வைப்பதில் நபி களார் ஈடுபட்டதால், அந்த இரவு எந்த நாள் என்று குறிப்பிட்டுச் சொல்வதை இறைவன் மறக்க செய்துவிட்டான்.

    என்றாலும், அந் நாளில் மட்டும் நற்கருமங்களை செய்து விட்டு மக்கள் மேம்போக்காக இருந்து விடக்கூடாது என்பதால் 'மறக்கடிக்கச் செய்ததும் நன்மைக்கே' என்று கூறிய நபிகளார், 'ரமலானில் கடைசி பத்தில் ஒற்றைப்படையான இரவில் (21, 23, 25, 27, 29) தேடிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்'. (நூல்: மிஷ்காத்)

    இமாம் ராஜி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 'இந்த இரவில் வானவர் எல்லோரும் சாந்தி மயமாகட்டும் என்று கூறிக் கொண்டு இருப்பார்கள். அதிகாலையில் புறப்படும் போது மலக்குகள், 'இந்த இரவில் முகம்மதுடைய (ஸல்) சமுதாயத்திற்கு இறைவன் என்ன செய்தான்?' என்று கேட்பார்கள்.

    உடனே வானவர் தலைவர், `இறைவன் தனது அருள் பார்வையை செலுத்தினான். அவர்கள் அனைவரின் பாவத்தையும் மன்னித்தான். அதே நேரத்தில், மது அருந்துபவர், பெற்றோருக்கு எதிராக இருப்பவர், சொந்தங்களை துண்டித்து வாழ்பவர், சகோதரனிடம் சண்டைபோட்டு மூன்று நாளுக்கு மேல் பேசாமல் இருப்பவர் ஆகியோரை இறைவன் மன்னிப்பதில்லை, அவர்களுக்கு இறைவனின் அருளும் கிடைப்பதில்லை என்று கூறினார்.

    மனிதர்கள் பலரும் பாவம் செய்பவர்களாகவே உள்ளனர். மனிதன் பாவத்தில் இருந்து விடுபட்டு, பாவ மன்னிப்பு பெற்று இம்மையிலும், மறுமையிலும் இறைவனின் திருப்பொருத்தத்தை அடையவே இஸ்லாம் மார்க்கம் வழிகாட்டுகின்றது. மேலும் பாவமன்னிப்பு கேட்பவர்களை அல்லாஹ் நேசிக்கின்றான் என்று திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:

    `நிச்சயமாக அல்லாஹ் பாவங்களை விட்டு மீளுபவர்களை நேசிக்கிறான்'. (திருகுர்ஆன் 2:222). இது போல நபிகள் நாயகம் அவர்கள் குறிப்பிடும்போது, `எல்லோரும் பாவம் செய்பவர்கள் தான். அவர்களில் சிறந்தவர் யார் எனில், தனது பாவத்திற்கு பரிகாரம் தேடுகிறாரோ அவர்தான்' என்று கூறினார்கள்.

    `நபியே! இறை நம்பிக்கை கொண்டு நல்ல செயல் களைச் செய்வோருக்கு சொர்க்கம் உண்டு என்று கூறுங்கள்' என்பது இறை கட்டளையாகும். உலக மக்கள் அனைவரும் அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்டு நோன்பு வைத்து லைலத்துல் கத்ர் என்ற உன்னதமான இரவை பெற்று உளமார இறைவனை தொழுது சொர்க்கத்தைப் பெற அல்லாஹ் வாய்ப்பை வழங்குவானாக, ஆமீன்.

    • தேவாலயங்கள் மனிதர்களுக்கும் ஆறுதலை தரக்கூடிய இடமாக இருக்கிறது.
    • இயேசு ஆலயத்தை தன் தந்தையின் இல்லமாக பார்த்தார்.

    தேவாலயம் அல்லது வழிபாட்டுக்கூடம் என்பது எல்லா மனிதர்களுக்கும் ஆறுதலை தரக்கூடிய இடமாக இருக்கிறது. மனதில் உள்ள கவலைகளை, கண்ணீரை கொட்டித் தீர்க்கிற இடமாகவும், விடை தெரியா கேள்விகளுக்கு விடை தருகிற இடமாகவும், வழி தெரியா வாழ்க்கைக்கு வழிகாட்டுகிற இடமாகவும் இருக்கிறது.

    ஆலயத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்புகிற போது ஒரு இனம் புரியாத அமைதி மனதில் தங்கி விடுகிறது. வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி நடந்திட ஆற்றல் கிடைக்கிறது. அத்தகைய சிறப்புமிகு ஆலயத்தை யூதர்கள் எப்படி பார்த்தார்கள்? இயேசு எப்படி பார்த்தார்? நாம் எப்படி பார்க்க வேண்டும்? என்கிற மூன்று நிலைகளில் யோவான் நற்செய்தி 2-வது அதிகாரம் 13 முதல் 22 வரை உள்ள இறைவார்த்தை பகுதியை தியானித்து பார்ப்போம்...! அந்த பகுதி பின்வருமாறு:

    யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார். கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும், அங்கே உட்கார்ந்து இருந்து நாணயம் மாற்றுவோரையும் கண்டார். அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி அவர்கள் எல்லோரையும் கோவிலில் இருந்து துரத்தினார். ஆடு, மாடுகளையும் விரட்டினார். நாணயம் மாற்றுவோரின் சில்லரைக் காசுகளையும் அவை இருந்த மேசைகளையும் கவிழ்த்து போட்டார். அவர் புறா விற்பவர்களிடம், இவற்றை இங்கிருந்து எடுத்துச்செல்லுங்கள். என் தந்தையின் இல்லத்தை சந்தை ஆக்காதீர்கள்' என்று கூறினார்.

    யூதர்கள் அவரைப் பார்த்து, இவற்றை எல்லாம் செய்வதற்கு உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு இயேசு மறுமொழியாக, `இக்கோவிலை இடித்து விடுங்கள் நான் மூன்று நாளில் கட்டிவிடுவேன்' என்றார்.

    அப்போது யூதர்கள், `இந்த கோவிலை கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே நீர் இதை மூன்றே நாளில் எழுப்பிவிடுவீரோ' என்று கேட்டார்கள். ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலை பற்றியே பேசினார் என்பது அவர்களுக்கு புரியவில்லை. (யோவான் 2:13-22)

    மேலே பார்த்த நற்செய்தி பகுதியில், இயேசு கோபப்படுவதை பார்க்கிறோம். அமைதியையும், கனிவையும், தனது வாழ்நாள் முழுவதும் வெளிப்படுத்திய இயேசு கோபப்படுகிறாறே அது நியாயமா என்ற கேள்வி நம்மில் பலருக்கு தோன்றலாம். ஆனால் இயேசு எதற்காக கோபப்பட்டார் என்பதை சிந்தித்து பார்க்கும் போது நமக்கு புரியும்.

    இயேசு ஆலயத்தை தன் தந்தையின் இல்லமாக பார்த்தார். எனவே தான் அதனை வியாபாரக்கூடமாக பார்த்த யூதர்கள் மீது கோபம் கொண்டார். அதனால் தான் அவரது கோபம் சாதாரணமாய் இல்லை. கடுமையாக இருந்தது. சாட்டையால் அவர்களை அடித்து விரட்டினார். அவர்களின் பொருட்களை கவிழ்த்துப் போடுகிறார்.

    இதன் மூலம் இயேசு தன் தந்தையின் இல்லமாகிய தேவாலயத்திற்கு எத்தகைய முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பது தெரிகிறது. இதுமட்டுமன்று நம் கண் எதிரே நடக்கும் அநீதியை கண்டு அமைதியாக இருக்காமல் குரல் கொடுக்க வேண்டும் என்கிற செய்தியையும் இயேசு நமக்கு தருகிறார். இயேசுவின் சாட்டையடி யூதர்களுக்கு மட்டுமல்ல மக்களின் நம்பிக்கையை பயன்படுத்தி, ஆலயங்களை வியாபாரக்கூடமாய் மாற்றும் ஒவ்வொருவருக்குமே பொருந்தும்.

    இரண்டாவதாக இந்த பகுதியில் நாம் கவனிக்க வேண்டியது யோவான்: 2:22. இதில் இயேசு, 'இந்தக் கோவிலை இடித்து விடுங்கள், நான் மூன்று நாளில் கட்டிவிடுவேன்' என்று கூறுகிறார். இதில் அவர் கோவிலாகிய கட்டிடத்தை குறிப்பிடவில்லை. மாறாக தம் உடலாகிய கோவில் பற்றியே குறிப்பிடுகிறார். இதன் வழியாக அவர் இறந்து மூன்றாம் நாள் உயிர்தெழுவதையே, `மூன்று நாளில் கட்டி விடுவேன்' என்று குறிப்பிடுகிறார்.

    ஆக, தனது உடலை இயேசு கோவிலாகவே பார்த்தார். தன்னில் இருக்கும் இறைவனை நற்செயல்களால் வெளிப்படுத்தி நடமாடும் ஆலயமாகவே வாழ்ந்தார். அவ்வாறு வாழ நமக்கும் அழைப்பு விடுக்கிறார். இதனையே திருத்தூதர் பவுல் கொரிந்திய மக்களுக்கு எழுதிய கடிதத்தில், நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும், கடவுளின் ஆவியார் உங்களுள் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்கு தெரியாதா? ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில் கடவுளின் கோவில் தூயது. நீங்களே அக்கோவில், என்று கூறுகிறார் (1 கொரிந்தியர் 3:16).

    இதன் மூலம் நமது உடல் இறைவனின் ஆலயம் என்பது தெளிவாக தெரிகிறது. அந்த உடலை நாம் எப்படி பார்க்க வேண்டும் என்பதும் புரிகிறது. ஆகவே நாம் நமது உடலில் இறைவன் தங்கியிருக்கிறார் என்பதை நம்புகிறோமா? அப்படி நம்பினால், நம்மில் இருக்கும் இறைவனை நமது நல்ல செயல்களால் நமக்கு அடுத்து இருப்பவருக்கு வெளிப்படுத்தி இருக்கிறோமா? சிந்திப்போம்.

    அன்பு, அமைதி, இரக்கம், மன்னிப்பு, சமத்துவம் ஆகிய இறைத்தன்மைகளை அனைவருக்கும் வெளிப்படுத்துவோம். நடமாடும் ஆலயங்களாக வாழ்வோம்.

    • ராம என்ற நாமத்தை விட உயர்ந்த மந்திரம் எதுவும் இல்லை.
    • ராமர் ஜாதகத்தில் நவக்கிரகங்கள் அமைந்த நிலை மகத்துவம் மிகுந்தது.

    ராமர் ஜாதகம்

    ராமர் ஜாதகத்தில் நவக்கிரகங்கள் அமைந்த நிலை மகத்துவம் மிகுந்தது. (கடக லக்னம் புனர்பூச நட்சத்திரம், கடக ராசி) மேஷத்தில் சூரியன் உச்சம், கடகத்தில் சந்திரன் ஆட்சி, குரு உச்சம், துலாம் ராசியில் சனி உச்சம், மகரத்தில் செவ்வாய் உச்சம், மீன ராசியில் சுக்ரன் உச்சம் என மொத்தம் 5 கிரகங்கள் உச்சம் பெற்றும், சந்திரன் ஆட்சி பெற்றும் ராகு ஆறாம் இடமான தனுசு ராசியிலும், கேது பன்னிரண்டாம் இடத்திலும் உள்ள சிறப்பு பெற்றது ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் ஜாதகம்.

    ஸ்ரீராமரின் தாரக மந்திரம்

    உலகத்தில் `ராம' என்ற நாமத்தை விட உயர்ந்த மந்திரம் எதுவும் இல்லை என்பார்கள். காசியில் இறந்தவர்களின் காதுகளில், சிவபெருமானே இந்த தாரக மந்திரத்தை கூறி, அவர்களை மோட்சத்திற்கு அனுப்புவதாக சொல்லப்படுகிறது. இதை ராமகிருஷ்ண பரமஹம்சரும் தன் கண்களால் கண்டதாகக் கூறுவார்கள்.

     ராமபிரான் அங்க பூஜை

    * ஓம் அஹல்யோத்தாரகாய நம: பாதௌ பூஜயாமி (கால்)

    * ஓம் விநதகல்பத்ருமாய நம: குல்பௌ பூஜயாமி (கணுக்கால்)

    * ஓம் தண்டகாரண்ய கமந ஜங்காலாய நம: ஜங்கே பூஜயாமி (முழங்கால்)

    * ஓம் ஜாநுந்யஸ்த தராம்புஜாய நம: ஜானுனீ பூஜயாமி (முட்டி)

    * ஓம் வீராஸநாத்யாஸிநே நம: ஊரூ பூஜயாமி (தொடை)

    * ஓம் பீதாம்பரா லங்க்ருதாய நம: கடிம் பூஜயாமி (இடுப்பு)

    * ஓம் ஆகாச மத்யகாய நம: குஹ்யம் பூஜயாமி (மர்மம்)

    * ஓம் அப்தி மேகலாபதயே நம: நாபிம் பூஜயாமி (தொப்புள்)

    * ஓம் உதரஸ்த்தித ப்ரஹ்மாண்டாய நம: உதரம் பூஜயாமி (வயிறு)

    * ஓம் ஸீதாநுலேபித காச்மீர சந்தனாய நம: வக்ஷ பூஜயாமி (மார்பு)

    * ஓம் அபயப்ரதான சௌ'ண்டாய நம: பார்ச்'வௌ பூஜயாமி (இடுப்பு)

    * ஓம் ஜ்ஞானவிஜ்ஞாந பாஸ்கராய நம: ஹ்ருதயம் பூஜயாமி (மார்பு)

    * ஓம் தசானன காலரூபிணே நம: ஸ்கந்தௌ பூஜயாமி (தோள்)

    * ஓம் ஸீதாபாஹு லதாலிங்கிதாய நம: கண்டம் பூஜயாமி (கழுத்து)

    * ஓம் விதரணஜித கல்பத்ருமாய நம: ஹஸ்தான் பூஜயாமி (கைகள்)

    * ஓம் அரிநிக்ரஹ பராய நம: பாஹூன் பூஜயாமி (புஜதண்டம்)

    * ஓம் ஸுமுகாய நம: முகம் பூஜயாமி (முகம்)

    * ஓம் அநாஸாதித பாபகந்தாய நம: நாஸிகாம் பூஜயாமி (மூக்கு)

    * ஓம் புண்டரீகாக்ஷாய நம்: அக்ஷிணீ பூஜயாமி (கண்கள்)

    * ஓம் கபாலி பூஜிதாய நம: கர்ணௌ பூஜயாமி (காதுகள்)

    * ஓம் கஸ்தூரீ திலகாங்கிதாய நம: பாலம் பூஜயாமி (நெற்றி)

    * ஓம் ராஜாதிராஜவேஷாய நம: கிரீடம் பூஜயாமி (தலை )

    * ஓம் ஸர்வேச்வராய நம: ஸர்வாண்யங்கானி பூஜயாமி (முழுவதும்)

    • ராமாயணம் என்பது மிகப்பெரிய காவியம்.
    • ராமர் பிறந்த திதியே ராம நவமி.

    ஸ்ரீ ராம நவமி என்றாலே, ராமனைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது. ராமாயணம் என்பது மிகப்பெரிய காவியம். விபண்டகர் என்ற முனிவருக்கு ரிஷ்ய சிங்கர் என்ற புதல்வன் பிறந்தார். தசரத மகாராஜா அவரை அழைத்து வந்து, நாடு செழிக்க யாகம் செய்ய நினைத்தார். ஒரு வசந்த காலத்தில் அஸ்வமேத யாகத்தை ஆரம்பித்தார். அதற்காக வசிஷ்டர் மூலமாக யாகசாலையை நன்றாக கட்டக் கூடிய திறமை வாய்ந்த சிற்பிகளையும், நன்கு வேதம் படித்த யாகம் செய்யக்கூடிய பிராமணர்களையும் அழைத்து வரச் சொன்னார். வசிஷ்டரும் தசரத மன்னன் சொன்ன படியே அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.

    இந்த யாகம் நடக்கும் பொழுது அயோத்தியில் இருக்கக்கூடிய நான்கு வர்ணத்தவருக்கும், எவ்விதமான உயர்வு தாழ்வும் இன்றி நல்ல மரியாதை, மதிப்புடனும் விருந்தளிக்குமாறும் தசரதர் கட்டளை இட்டிருந்தார். பல தேசத்து அரசர்களும் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களுடன் தசரத மகாராஜாவை காண வந்தனர். வசிஷ்டர் தலைமையில் யாகம் நடைபெற்றது. பல பண்டிதர்களும் அந்த நேரத்தில் தர்மங்களை பற்றி விவாதம் செய்தனர்.

    ஒரு வருடம் பூர்த்தியான பிறகு அஸ்வமேத யாக குதிரை சரயு நதியின் வடக்கு கரையில் அமைந்த யாகசாலைக்கு அருகே வந்து சேர்ந்தது. முதல் நாள் அக்னிஷ்டோமம், இரண்டாம் நாள் உக்த்யம், மூன்றாம் நாள் அதிராத்ரம் என்ற யாகங்கள் கல்ப சூத்திரத்தில் சொல்லியபடி நடைபெற்றது.

    அஸ்வமேத யாகம் நிறைவடைந்ததும் ரிஷ்ய சிங்கரை அணுகிய தசரத மன்னன், "நான் வெகு காலமாக புத்திர பாக்கியம் இன்றி தவிக்கிறேன். எங்கள் குலம் தழைக்க, அதற்குரிய யாகத்தை செய்து கொடுங்கள்" என்றார்.

    ரிஷ்ய சிங்கர் அதர்வண வேதத்தில் சொல்லப்பட்ட ரகசியமான `இஷ்டி' என்ற யாகத்தை செய்து, பின் முறைப்படி புத்திர காமேஷ்டி யாகத்தை செய்தார். அந்த வேளையில் முப்பத்து முக்கோடி தேவர்களும், மகாவிஷ்ணுவை துதி செய்து `பூலோகத்தில் தர்மம் தழைக்க வேண்டும்' என வேண்டிக்கொண்டனர்.

    மகாவிஷ்ணு அவர்களிடம் "நான் பதினோறாயிரம் வருஷம் இந்த பூமியில் பிறந்து நாட்டை ஆளப்போகிறேன்" எனக்கூறி, தன்னை நான்கு பாகமாக மாற்றி புத்திர காமேஷ்டி யாகம் செய்யும் யாகசாலை வந்து சேர்ந்தார். புத்திர காமேஷ்டி யாகம் செய்யும் அக்னியில் இருந்து தேஜஸ்வியான ஒரு பெருத்த உருவம் தோன்றியது. அதன் கையில் தங்க பாத்திரம் ஜொலித்தது. அதில் பால் பாயசம் இருந்தது. அந்த பால் பாயசத்தில் நான்கு பாகமாக மாறிய மகாவிஷ்ணு கலந்தார்.

    தேஜஸ்வியான அந்த உருவம் தசரதரை நோக்கி "இந்த பால் பாயசத்தை உனது பிரியமான மனைவிகளுக்கு பிரித்துக் கொடு. அவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறப்பார்கள்" எனக் கூறி மறைந்தது.

    தசரத மகாராஜா, அந்த பாயசத்தில் பாதியை கவுசல்யாவிற்கு கொடுத்தார். மீதமுள்ள பாதியில் அரை பங்கை சுமித்திராவுக்கு கொடுத்தார். மேலும் மீதம் இருந்த அரை பங்கில் பாதியை கைகேயிக்கு அளித்தார். அதன்பிறகும் எஞ்சிய பாயசத்தை மீண்டும் சுமித்திராவுக்கு கொடுத்தார்.

    பாயசத்தில் பாதியை அருந்திய கவுசல்யாவுக்கு சித்திரை மாதம் வளர்பிறை புனர்பூச நட்சத்திரம் கடக ராசியில் கடக லக்னத்தில் நவமி திதியில் ராமபிரான் பிறந்தார். கைகேயிக்கு பூச நட்சத்திரம் கடக ராசி மீன லக்னத்தில் பரதன் பிறந்தார். இரண்டு முறை பாயசம் அருந்திய சுமித்திராவுக்கு ஆயில்யம் நட்சத்திரம் கடன ராசி கடக லக்னத்தில் லட்சுமணனும், சத்ருக்ணனும் பிறந்தனர்.

    பிரம்ம தேவர், ராம பிரானுக்கு உதவுவதற்காக தேவர்களையும், மகரிஷிகளையும், கந்தர்வர்களையும், கருடர்களையும், யட்சர்களையும், நாகர்களையும், கிம்புருஷர்களையும், சித்தர்களையும், வித்யாதரர்களையும், உரகர்களையும், பெரிய உருவங்களுடன் வனத்தில் வசிக்கக்கூடிய வானரர்களாக பிறக்கும்படி செய்தார். இதில் நாம் ராமர் பிறந்த தினத்தை `ராம நவமி' என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடுகிறோம்.

    ஒரு சமயம் அஷ்டமி திதியும், நவமி திதியும் மன வருத்தம் கொண்டன. 'எல்லா திதிகளும் கொண்டாடப்படுகின்றன. நம்மை மக்கள் யாரும் கொண்டாடவில்லையே' என எண்ணி, வைகுண்டம் சென்று விஷ்ணு பகவானிடம் முறையிட்டன. அதற்கு விஷ்ணு, "நீங்கள் கவலைப்பட வேண்டாம். அஷ்டமி அன்று கிருஷ்ண அவதாரமும், நவமி அன்று ராம அவதாரமும் செய்யப்போகிறேன். அந்த தினங்களில் உலக மக்கள் அனைவரும் உங்களைக் கொண்டாடுவார்கள்" என்று வரம் கொடுத்தார்.

    அதன் படியே கிருஷ்ணர் பிறந்த அஷ்டமி திதியை `கோகுலாஷ்டமி' என்றும், ராமர் பிறந்த நவமி திதியை `ராம நவமி' என்றும் சிறப்பித்து வழிபடத் தொடங்கினர். ராம நவமி தினத்திற்கு 9 நாட்கள் முன்பு `கர்ப்போத்ஸவம்' என்று கோவில்களில் கொண்டாடுவார்கள். அப்போது ஆலயங்களில் விசேஷ பூஜைகளும் நடக்கும்.

    ராவணன், கரன், தூஷணன், திரிசிரன், மாரீசன், சுபாகு, தாடகை, விரதன், கபந்தன் போன்ற ராட்சசர்களை அழிக்க ராமனாக, விஷ்ணு பகவான் அவதரிக்கப் போவதை அறிந்து கொண்ட முனிவர்கள், ராமர் பிறப்பதற்கு முன்பிருந்தே கர்ப்போத்ஸவத்தை கொண்டாடியதாகச் சொல்வார்கள். அதேபோல் ராமபிரான் பிறந்ததில் இருந்து வரக்கூடிய ஒன்பது நாட்களை `ஜனோத்ஸவம்' என்று கொண்டாடுவார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அனைத்திற்கும் மூலமாக இருப்பது வால்மீகி எழுதிய ராமாயணம் தான்.
    • `நவாஹம்' என்பது ராமாயணத்தை ஒன்பது நாள் படிப்பது ஆகும்.

    ராமாயணம் என்னும் ராமனின் வரலாற்றைச் சொல்லும் காவியத்தை அனைவரும் தெரிந்து வைத்திருப்பார்கள். அந்த ராமாயணத்தை எப்படி படிக்க வேண்டும் என்பது பற்றியும், ராமாயணத்தின் சில அரிய தகவல்களையும் இங்கே பார்க்கலாம்.

     உத்தர காண்டம்சொல்லும் செய்தி

    ராவண யுத்தம் முடிந்து ராமர் பட்டாபிஷேகத்துடன் யுத்த காண்டம் நிறைவுறும். நாட்டு மக்களின் பழிச்சொல்லைக் கேட்டு சீதையை மீண்டும் காட்டிற்கு அனுப்புவது, லவ-குசர்கள் பிறப்பது, அவர்கள் வால்மீகியிடம் ராமாயணத்தை கற்றறிந்து அதை நாட்டில் உள்ள மக்களிடம் பரப்புவது, பிள்ளைகளை ராமரிடம் ஒப்படைத்து, சீதாதேவி பூமியில் மறைவது, லவ-குசர்களுக்கு நாட்டை சரியாக பிரித்து வழங்கி விட்டு, சரயு நதியில் ராமர் தன் வாழ்வை முடிப்பது வரையான தகவல்களை உத்தரகாண்டம் தெரிவிக்கிறது.

    வால்மீகி ராமாயணமே பிரதானம்

    வேடனாக இருந்து (சிலர் கள்வர் என்பார்கள்) நாரதரின் அறிவுரையால், ராமபிரானை நினைத்து தவம் செய்து மகரிஷியாக மாறியவர், வால்மீகி. இவர்தான் ராமாயணத்தை வடமொழியில் எழுதியவர். பல்வேறு மொழிகளில் நூற்றுக்கும் அதிகமான ராமாயணங்கள் இருப்பினும், அனைத்திற்கும் மூலமாக இருப்பது வால்மீகி எழுதிய ராமாயணம் தான். இதிகாசங்களின் கீழ் வருகிறது, ராமாயணம்.

    `இதிகாசம்' என்பதற்கு `இது நடந்தது' என்பது பொருளாகும். எனவே உண்மையில் நடந்த ஒரு நிகழ்வையே வால்மீகி ராமாயணமாக வடித்தார். வால்மீகி ராமாயணத்தில் இருந்து கம்பர் இயற்றிய கம்பராமாயணம் முதல் போஜ ராமாயணம் வரை ஒவ்வொன்றிலும் சில வித்தியாசங்கள் காணப்படுகின்றன. என்றாலும் வால்மீகி எழுதிய ராமாயணத்தையே பிரதானமாக கொள்ள வேண்டும்.

    வால்மீகி எழுதாத உத்தர காண்டம்

    7 காண்டங்கள், 500 ஸர்க்கங்கள், 24 ஆயிரம் சுலோகங்கள் கொண்டதாக, ராமாயணத்தை வால்மீகி பாடியிருக்கிறார். காண்டங்கள் என்பது பிரிவுகளையும், ஸர்க்கங்கள் என்பது அந்தப் பிரிவுகளின் உட்பகுதிகளையும் குறிப்பிடுகிறது. பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம், உத்தர காண்டம் என்பது 7 காண்டங்களாகும்.

    இதில் உத்தர காண்டம் என்ற பகுதியை வால்மீகி மகரிஷி எழுதவில்லை. பிற்காலத்தில் எழுதப்பட்டு சேர்க்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள். கம்பரும் கூட தான் எழுதிய ராமாயண காவியத்தில் பால கண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் ஆகிய ஆறு காண்டங்களை பற்றிதான் பாடியிருக்கிறார். ஏழாவது காண்டமாகிய உத்தர காண்டம் என்னும் பகுதியை, கம்பரின் சம காலத்தவரான ஒட்டக்கூத்தர் இயற்றியதாக சொல்லப்படுகிறது.

    நவாஹ பாராயணம்

    நவாஹ பாராயணம் செய்ய நினைப்பவர்கள் பால் காண்டம் தொடங்கி இறுதியில் ராம பட்டாபிஷேகம் சொல்லி முடிப்பார்கள். `நவாஹம்' என்பது ராமாயணத்தை ஒன்பது நாள் படிப்பது ஆகும். எப்படி பாராயணம் செய்ய வேண்டும் என்று இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

    முதல் நாள் : பாலகாண்டம் ஸர்க்கம் 1 முதல் 70-வது ஸர்க்கம் வரை

    இரண்டாம் நாள் : பால காண்டம் ஸர்க்கம் 71 முதல் அயோத்யா காண்டம் 64-வது ஸர்க்கம் வரை

    மூன்றாம் நாள் : அயோத்யா காண்டம் 65 ஸர்க்கம் முதல் 119-வது ஸர்கம் வரை

    நான்காம் நாள் : ஆரண்ய காண்டம் 1-ம் ஸர்க்கம் முதல் 68-வது ஸர்க்கம் வரை

    ஐந்தாம் நாள் : ஆரண்ய காண்டம் 69-ம் ஸர்க்கம் முதல் கிஷ்கிந்தா காண்டம் 49-வது ஸர்க்கம் வரை

    ஆறாம் நாள் : கிஷ்கிந்தா காண்டம் 50-ம் ஸர்க்கம் முதல் சுந்தர காண்டம் 57-வது ஸர்க்கம் வரை

    ஏழாம் நாள் : சுந்தர காண்டம் 58-ம் ஸர்க்கம் முதல் யுத்த காண்டம் 50-வது ஸர்க்கம் வரை

    எட்டாம் நாள் : யுத்தகாண்டம் 51-ம் ஸர்க்கம் முதல் 111-வது ஸர்க்கம் வரை

    ஒன்பதாம் நாள் : யுத்த காண்டம் 112-ம் ஸர்க்கம் முதல் 131-வது ஸர்க்கம் வரை

    • மனதை உருகச் செய்யும் செய்யுள்களால் இறைவனை போற்றிப் பாடி உள்ளார்.
    • பன்னிரு திருமுறைகளில் 8-ம் திருமுறையாக வைத்து போற்றப்படுகிறது.

    மனதை உருகச்செய்யும் செய்யுள்களால் இறைவனை போற்றிப் பாடிய மாணிக்கவாசகர், அதனை 'திருவாசகம்' என்ற பெயரில் தொகுத்தார். இந்த திருவாசகம், பன்னிரு திருமுறைகளில் 8-ம் திருமுறையாக வைத்து போற்றப்படுகிறது. இந்த நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

    பாடல்:

    மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே

    தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே

    பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே

    நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்

    பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே

    ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே

    ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே

    நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே

    இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே.

    விளக்கம்:

    குற்றமற்ற தூய ஒளியே... மலர்கின்ற மலர் போன்ற இனிய சுடரே! ஒளியுருவினனே.. தேன் நிறைந்த அமு தமே! சிவபுரம் கொண்டவனே.. பாசமாகிய கட்டினை அறுத்து திருவருள்புரியும் அறிவில் சிறந்தோனே. இனிய அறக்கருணை புரிந்து, அதனால் என்னுடைய நெஞ்சில் வஞ்சனை ஒழிய, என் உள்ளத்தில் நீங்காது நின்று பெருங்கருணை பெருக்கெடுக்கும் பெருவெள்ளமே! தெவிட்டாத அமுதமே! அளவுகள் கடந்து நிற்கின்ற பெருமானே! ஆர்வமும் முயற்சியும் இல்லாதவர்களின் உள்ளத்தில், வெளிப்படாமல் மறைந்திருக்கும் ஒளி பொருந்தியவனே.. என் உள்ளத்தை நீர் என உருகச் செய்து, என்னுடைய இன்னுயிராக நிற்பவனே! இன்ப-துன்பங்களுக்கு அப்பாற்பட்டு உள்ளத்தில் நிற்பவனே.

    • 6-ந்தேதி பிரதோஷம்.
    • 8-ந்தேதி அமாவாசை.

    2-ந்தேதி (செவ்வாய்)

    * தென்திருப்பேரை பெருமாள் ரத உற்சவம்.

    * ஒழுகைமங்கலம் மாரியம்மன் புஷ்பப்படி சட்டத்தில் புறப்பாடு.

    * தொட்டியம் காளியம்மன் ரத உற்சவம்.

    * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடிய ருளல்.

    * கீழ்நோக்கு நாள்.

    3-ந்தேதி (புதன்)

    * சென்னை மல்லீசுவரர் விடையாற்று உற்சவம்.

    * திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் வண்டலூர் சப்பரத்திலும், இரவு தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடு.

    * கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் விழா தொடக்கம்.

    * தாயமங்கலம் முத்து மாரியம்மன் பூத வாகனத்தில் புறப்பாடு.

    * மேல்நோக்கு நாள்.

    4-ந்தேதி (வியாழன்)

    * மன்னார்குடி ராஜகோ பாலசுவாமி சிம்ம வாகனத்தில் வீதி உலா.

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * மேல்நோக்கு நாள்.

    5-ந்தேதி (வெள்ளி)

    * சர்வ ஏகாதசி.

    * திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு.

    * உப்பிலியப்பன் கோவில் சீனிவாச பெருமாள் சப்தாவர்ணம்.

    * திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

    * மேல்நோக்கு நாள்.

    6-ந்தேதி (சனி)

    * பிரதோஷம்.

    * மன்னார்குடி ராஜ கோபால சுவாமி வெள்ளி சேஷ வாகனத்தில் புறப்பாடு.

    * பாபநாசம் பாபநாசநாதர் ஏக சிம்மாசனத்திலும், இரவு பர்வதவர்த்தன வாகனத்திலும் வீதி உலா.

    * கரிவலம்வந்தநல்லூர் அம்பாள் விருட்சப வாகனத்தில் பவனி.

    * மேல்நோக்கு நாள்.

    7-ந்தேதி (ஞாயிறு)

    * சமயபுரம் மாரியம்மன் கோவில் உற்சவம், கேடய சப்பரத்தில் அம்மன் பவனி.

    * மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி வைரமுடி சேவை.

    * தாயமங்கலம் முத்து மாரி அம்மன் புஷ்ப சப்பரத்தில் பவனி.

    * கீழ்நோக்கு நாள்.

    8-ந்தேதி (திங்கள்)

    * அமாவாசை.

    * சமயபுரம் மாரியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி.

    * பாபநாசம் பாபநாசநாதர் வெள்ளி விருட்சப சேவை.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

    * மேல்நோக்கு நாள்.

    • அறிவுக் கண்களை திறந்த மக்கா போரின் வெற்றி.
    • மக்கா வெற்றிக்குப் பிறகு ஒளிவு மறைவின்றி இஸ்லாத்தை பின்பற்றினர்.

    அறிவுக் கண்களை திறந்த மக்கா போரின் வெற்றி

    ஹஜ்ரி 6-ம் ஆண்டு துல்கஅதா மாதத்தின் தொடக்கத்தில் திங்கட்கிழமை அன்று நபி (ஸல்) அவர்களுக்கும், குரைஷிகளுக்கும் இடையே `ஹூதைபிய்யா' எனும் இடத்தில் சமாதான ஒப்பந்தம் ஏற்படுகிறது.

    அதில் ஒன்று 'நபியவர்களுடன் சேர விரும்புவோர் நபியுடன் சேரலாம்; குரைஷிகளுடன் சேர விரும்புவோர் அவர்களுடன் சேர்ந்து கொள்ளலாம். யார் யாருடன் சேர்ந்து கொள்கிறார்களோ அவர் அந்த அணியில் ஒருவராகக் கருதப்படுவார். அவர் மீது யாராவது அத்துமீறினால், அது அந்த கூட்டத்தினர் மீதே அத்து மீறியதாகும்.

    இதற்கேற்ப குஜாஆ கூட்டத்தினர் நபியுடன் சேர்ந்து கொண்டனர். பக்ர் கூட்டத்தினர் குரைஷிகளுடன் சேர்ந்து கொண்டனர். அறியாமைக் காலத்திலிருந்தே குஜாஆ. பக்ர் கூட்டத்தினருக்கிடையே சண்டை நிலவி வந்தது. இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு சண்டை நிறுத்தப்பட்டது.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு பக்ர் கோத்திரத்தினர். குஜாஆவினரிடம் அத்துமீறி நடந்து கொண்டு, ஹிஜ்ரி 8, ஷஃபான் மாதத்தில் சண்டையிட்டு உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தினர். பாதிக்கப்பட்ட குஜாஆ கிளையினர் நபி அவர்களிடம் உதவி தேடினர்.

    நபி (ஸல்) அவர்கள் தமது தோழமை அணியினரின் உதவிக்காக, ஹிஜ்ரி 8-ம் ஆண்டு ரமலான் பிறை 10-ல் தம்முடன் 10 ஆயிரம் தோழர்களுடன் மதீனாவிலிருந்து மக்கா நோக்கிப் புறப்பட்டார்கள். இந்த போர் புனித ரமலான் மாதத்தில் நடந்ததால் நபி (ஸல்) அவர்களும், நபித் தோழர்களும் நோன்பு வைத்திருந்தார்கள்.

    கி.பி. 630, ஜனவரி 10, ஹிஜ்ரி 8, ரமலான் பிறை 20-ம் நாளன்று நபி (ஸல்) அவர்களின் படை மக்காவிற்கு நுழைந்து, அதை வெற்றி கொள்கிறது.

    மக்கா வெற்றி கொள்ளப்பட்ட பிறகுமக்கா குரைஷிகள் பதட்டம் அடைந்தார்கள். மக்காவின் அதிகாரம் நபி (ஸல்) கீழ் வந்துவிட்டது.

    அவரையும், அவரது தோழர்களையும் நாம் பல்வேறு விதங்களில் கொடுமைப்படுத்தி உள்ளோம். எனவே அவர் நம்மை பழிவாங்கி விடுவார்' என்று நினைத்தனர்.

    அந்த சமயத்தில் 'குரைஷிக் கூட்டமே! நான் உங்களிடம் எவ்விதம் நடந்து கொள்வேன் என கருதுகிறீர்கள்?' என நபி கேட்க, 'நல்லமுறையில் நடந்து கொள்வீர்கள். நீங்கள் எங்களுக்கு சிறந்த சகோதரராகவும், எங்களில் சிறந்த சகோதரரின் மகனாகவும் இருக்கிறீர்' என பதில் கூறினர்.

    உடனே நபி (ஸல்) அவர்கள் 'நான் உங்களுக்கு யூசுப் நபி தமது சகோதரருக்குக் கூறியதைப் போன்றுதான் கூறுவேன். உங்களை எந்தவிதத்திலும் பழிவாங்கப்படாது. நீங்கள் மன்னிக்கப்பட்டவர்கள், நீங்கள் செல்லலாம்' என்று கூறினார்கள்.

    நபி (ஸல்) அவர்கள் எதிரிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கினார்கள். அபூசுப்யான் வீட்டில் அடைக்கலம் பெற்றவரும், புனிதகஅபா ஆலயத்தில் அடைக்கலம் பெற்றவரும் அபயம் பெற்றனர். பிறகு, நபி (ஸல்) மக்காவில் 19 நாட்கள் தங்கியிருந்து தூய இஸ்லாத்தை எடுத் துரைத்தார்கள்.

    இதுநாள் வரை மக்காவில் திரை மறைவில் இஸ்லாமிய நெறியைக் கடைப்பிடித்து வாழ்ந்து வந்த முஸ்லிம்கள், மக்கா வெற்றிக்குப் பிறகு ஒளிவு மறைவின்றி இஸ்லாத்தை பின்பற்றினர்.

    அலைகடலென மார்க்கத்தை நோக்கி படையெடுத்து வந்து ஏற்றுக்கொண்டனர். இப்போர் அறிவுக் கண்களைத் திறந்து, அறியாமைக் கதவுகளை அடைத்து, இஸ்லாத்தை ஏற்பதற்கு குறுக்கிட்ட தடைக்கல்லைத் தகர்த்தெறிந்தது.

    • பங்குனி மாத அஷ்டமி திரியம்பகாஷ்டமி என்று அழைக்கப்படுகின்றன.
    • பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர் என்று பொருள்.

    ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு ஒரு பெயர் உள்ளது. சித்திரை மாதம் சனாதன அஷ்டமி, வைகாசி மாதம் சதாசிவாஷ்டமி, ஆனி மாதம் பகவதாஷ்டமி, ஆடி மாதம் நீலகண்டாஷ்டமி, ஆவணி மாதம் சிவா அஷ்டமி, புரட்டாசி மாதம் சம்பு அஷ்டமி, ஐப்பசி மாதம் ஈஸ்வராஷ்டமி, கார்த்திகை மாதம் ருத்ராஷ்டமி,காலபைரவாஷ்டமி, மார்கழி மாதம் சங்கராஷ்டமி, தை மாதம் தேவ தேவாஷ்டமி, மாசி மாதம் மகேஸ்வராஷ்டமி, பங்குனி மாதம் திரியம்பகாஷ்டமி என்று அழைக்கப்படுகின்றன.

    அஷ்டமி என்பது எட்டாவது திதி. அது வைணவத்தில் கண்ணனுக்கு உரியது. சைவத்தில் சிவபெருமானுக்கு உரியது. குறிப்பாக கால பைரவருக்கு உரியது. சக்தி வழிபாட்டில் துர்க்கைக்கு உரியது. எனவே எல்லோரும் அனுசரிக்கக்கூடிய விரத நாள் அஷ்டமி. இன்றைய தினம் செவ்வாய்க் கிழமை பங்குனி மாதம் வருகின்ற அஷ்டமி திரியம்பகாஷ்டமி என்று வழங்கப்படுகிறது. இன்று காலையில் சிவபெருமானையும் மாலையில் சூரிய அஸ்தமனத்தில் பைரவரையும் தரிசனம் செய்து வழிபட்டால் அஷ்டமி விரத நன்மைகள் ஏற்படும் திருமணத் தடைவிலகும். எம பயம் நீங்கி ஆயுள் விருத்தி ஏற்படும்.

    பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர் என்று பொருள். எவரொருவர் தேய்பிறை அஷ்டமி தோறும் பைரவ பகவானை வழிபடுகிறார்களோ அவர்களுக்கு எதிரிகளே இருக்கமாட்டார்கள். பில்லி, சூனியம் அகலும். வழக்குகளில் வெற்றி பெறலாம் என்பது ஐதீகம். செந்நிற மலர்கள், அரளி மாலை கொண்டு பைரவருக்கு அணிவித்து பிரார்த்தனை செய்ய வேண்டும். வெண் பொங்கல் நைவேத்தியம் செய்தால் கடன் தொல்லைகள் தீரும். எதிர்ப்புகள் அகலும். தீய சக்திகள் அண்டாது. வடைமாலை சார்த்தி வணங்குவார்கள் பக்தர்கள். மிளகு வடை நைவேத்தியம் செய்து வழிபடுங்கள்.

    • தாய மங்கலம் ஸ்ரீ முத்து மாரியம்மன் அன்ன வாகன பவனி.
    • சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, பங்குனி 20 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: அஷ்டமி பிற்பகல் 3.49 மணி வரை பிறகு நவமி

    நட்சத்திரம்: பூராடம் இரவு 6.42 மணி வரை பிறகு உத்திராடம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி காலை பல்லக்கு, இரவு புஷ்பப் பல்லக்கில் வீதியுலா. உப்பிலியப்பன் கோவிலில் காலை சூர்ணாபிஷேகம். திருவெள்ளறை ஸ்ரீ சுவேதாத்திரிநாதர் பூந்தேரில் பவனி. கொட்டியம் ஸ்ரீ காளியம்மன் தேரோட்டம். சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். தாய மங்கலம் ஸ்ரீ முத்து மாரியம்மன் அன்ன வாகன பவனி. வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மகிழ்ச்சி

    ரிஷபம்-திறமை

    மிதுனம்-லாபம்

    கடகம்-உதவி

    சிம்மம்-உயர்வு

    கன்னி-பிரீதி

    துலாம்- வரவு

    விருச்சிகம்-உழைப்பு

    தனுசு- அன்பு

    மகரம்-ஆசை

    கும்பம்-நேசம்

    மீனம்-பொறுமை

    ×