என் மலர்tooltip icon

    வழிபாடு

    • 3 டன் அளவுள்ள காய்கறி, பழங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
    • நாளை வரை நிறைமணி காட்சியை பக்தர்கள் கண்டுகளிக்கலாம்.

    திருவேற்காடு:

    திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பவுர்ணமி தினத்தில் நிறைமணி காட்சி நடைபெறும். அதன்படி இந்த ஆண்டும் நேற்று முதல் 3 நாட்கள் நிறைமணி காட்சி அமைக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி கோவில் கருவறை மற்றும் முன்பகுதியில் பல்வேறு வகையான பழங்கள், காய்கறிகள், தானியங்கள், எண்ணெய், மூலிகை தாவரங்கள், இனிப்பு வகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பந்தல் முழுவதும் தோரணமாக கட்டி தொங்க விடப்பட்டிருந்தது.

    இந்த தோரணங்களை பார்ப்பதற்கு அழகாகவும், கண்ணுக்கு குளிர்ச்சி அளிப்பதாகவும் உள்ளது. மக்களின் வேண்டுதல்கள் நிறைவேறவும், மழை பெய்து செழிக்கவும், ஜீவ ராசிகள் அனைத்தும் பசி, பட்டினி, பஞ்சம் இல்லாமல் வாழ வேண்டும்.

    இயற்கை வளங்கள் பெருக வேண்டும். விவசாயம் தழைக்க வேண்டும் என்பதற்காக இந்த நிறைமணி காட்சி அமைக்கப்படுகிறது.

    சுமார் 3 டன் அளவுள்ள காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் இதற்காக பயன்படுத்தப் பட்டுள்ளன. நாளை (வெள்ளிக்கிழமை) வரை இந்த நிறைமணி காட்சியை பக்தர்கள் கண்டுகளிக்கலாம்.

    கடைசி நாளில் இங்கு தொங்கவிடப்பட்டுள்ள பொருட்களை ஒன்று சேர்த்து கூட்டாஞ்சோறு செய்து அம்மனுக்கு படைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்படும்.

    இதையொட்டி மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றது. நிறைமணி காட்சி பார்ப்பதற்கு தொங்கும் தோட்டம் போல் காட்சி அளித்தது.

    பக்தர்கள் நிறைமணி காட்சியில் தொங்கவிடப்பட்டிருந்த பழங்கள், காய்கறிகளை தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    • மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார்.
    • வருகிற 21-ந் தேதி வரை சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெறும்.

    திருவனந்தபுரம்:

    ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரிகள் கண்டரரு பிரம்மதத்தன், கண்டரரு ராஜீவரு ஆகியோர் தலைமையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார்.

    அதைதொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 21-ந் தேதி வரை நடை திறந்து ஐப்பசி மாத சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும். முன்னதாக இன்று காலை சன்னிதானத்தில் சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள் தேர்வு குலுக்கல் மூலம் நடைபெறுகிறது.

    சித்திரை ஆட்டத்திருநாள் சிறப்பு பூஜைகளுக்காக வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் திறக்கப்படும். மறுநாள் 31-ந் தேதி சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும்.

    அன்று இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். மீண்டும் மண்டலகால பூஜைகளுக்காக அடுத்த மாதம் 15-ந் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்படும்.

    • இன்று பவுர்ணமி.
    • சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு புரட்டாசி-31 (வியாழக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: பவுர்ணமி மாலை 5.25 மணி வரை பிறகு பிரதமை

    நட்சத்திரம்: ரேவதி மாலை 5.36 மணி வரை பிறகு அசுவினி

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று பவுர்ணமி. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லியம்மன் உற்சவம் ஆரம்பம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வேங்கடேசப் பெருமாள் ஊஞ்சலில் காட்சி. தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் புறப் பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை மற்றும் மைசூர் மண்டபம் எழுந்தருளல். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை. குறுக்குதுறை ஸ்ரீ முருகப் பெருமான் பவனி. சோழவந்தான் அருகில் ஸ்ரீ குருவித்துறை குருபகவானுக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பொறுமை

    ரிஷபம்-இன்பம்

    மிதுனம்-போட்டி

    கடகம்-ஆசை

    சிம்மம்-விவேகம்

    கன்னி-ஆக்கம்

    துலாம்- பாராட்டு

    விருச்சிகம்-நற்செயல்

    தனுசு- வரவு

    மகரம்-புகழ்

    கும்பம்-சுபம்

    மீனம்-பயணம்

    • விழாவினை முன்னிட்டு தினமும் பகல் 11 மணிக்கும், மாலை 6 மணிக்கும் சண்முகார்ச்சனை நடைபெறும்.
    • சப்பரத்தில் மாலையில் எழுந்தருளி கோவில் ஆஸ்தான மண்டபத்தை 6 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா வருகிற நவம்பர் 2-ந்தேதி காப்புக் கட்டுதலுடன் நடைபெற உள்ளதையொட்டி பக்தர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா தலைமையில் நேற்று நடைபெற்றது.

    முருகப்பெருமானின் முதலாம் பட வீடான திருப்பரங்குன்றத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கந்தசஷ்டி விழா 7 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா வருகின்ற நவம்பர் 2-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது. விழாவினை முன்னிட்டு அன்றைய தினம் அதிகாலையில் அனுக்கை பூஜை தொடங்கி யாகசாலை பூஜைகள் நடைபெற்று, உற்சவர் சன்னதியில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சண்முகர் சன்னதியில் சண்முகர் வள்ளி, தெய்வானை, உற்சவ நம்பியார்க்கும் காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெறும்.

    தொடர்ந்து கோவிலில் தங்கி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவினை முன்னிட்டு தினமும் பகல் 11 மணிக்கும், மாலை 6 மணிக்கும் சண்முகார்ச்சனை நடைபெறும். சண்முகர் தினமும் வெள்ளை அலங்காரம், பச்சை அலங்காரம், மயில் மீது அமர்ந்த அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அலங்காரங்களின் எழுந்தளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    இதே போல தினமும் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் தந்ததொட்டி விடையாத்தி சப்பரத்தில் மாலையில் எழுந்தருளி கோவில் ஆஸ்தான மண்டபத்தை 6 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்வான வேல் வாங்குதல் வருகின்ற நவம்பர் 6-ந்தேதியும், சிகர நிகழ்ச்சியாக 7-ந்தேதி சொக்கநாதர் கோவில் வாசல் முன்பு சூரசம்ஹாரமும், 8-ந்தேதி காலை தேரோட்டமும் மாலையில் சுவாமிக்கு பாவாடை தரிசனம் மற்றும் மூலவர் தங்க கவச அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் அளிப்பார்.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ப.சத்யப்பிரியா, அறங்காவலர்கள் வ.சண்முகசுந்தரம், பொம்மத்தேவன், மணி செல்வம், ராமையா, கோவில் துணை ஆணையர் சூரியநாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருதிராஷ்டிரரும்.... முற்பிறவியும்
    • தெய்வத்தின் முன்பு ஒரு போதும் நீதி தவறாது.

    திருதிராஷ்டிரரும்.... முற்பிறவியும்!

    கரவர்களின் தந்தையான திருதிராஷ்டிரர், பெரும் சோகத்துடன் அரசவையில் அமர்ந்திருந்தார். குருச்சேத்திரப் போர் முடிந்து. அவரது 100 பிள்ளைகள் மரணத்தை தழுவி இருந்தனர்.

    போருக்குப் பின் ஒருநாள் கிருஷ்ணரை சந்தித்த திருதிராஷ்டிரர், "கிருஷ்ணா.. நான் குருடனாக இருந்தாலும், நீதிமானான விதுரரின் சொல்லைக் கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன்.

    அப்படி இருந்தும் இப்போது என் பிள்ளைகள் 100 பேரை இழந்து தவிப்பதன் காரணம் என்ன?" என்று கேட்டார்.

    அதற்கு கிருஷ்ணர், "திருதிராஷ்டிரரே.. உங்களுக்கு நான் ஒரு கதை சொல்கிறேன். அதன் முடிவில் ஒரு கேள்வியும் கேட்பேன். அதற்கு நீங்கள் சரியான பதிலை சொல்லும் பட்சத்தில், உங்களின் கேள்விக்கும் பதில் கிடைக்கும்" என்று சொல்லி விட்டு, அந்த கதையைச் சொல்லத் தொடங்கினார்.

    ஒரு ராஜ்ஜியத்தை நீதி தவறாமல் ஆட்சி செய்தான் ஒரு மன்னன். அவனிடம் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த ஒருவன், சமையல்காரனாக பணிக்கு சேர்ந்தான். மிகவும் சுவையாக சமைப்பது, மன்னரை சிறப்பான முறையில் கவனிப்பது என்று அவன் எடுத்துக் கொண்ட முயற்சியின் காரணமாக அவன் வெகு விரைவிலேயே தலைமை சமையல் கலைஞனாக தரம் உயர்த்தப்பட்டான்.

    அதன்பின்னர் மன்னனுக்கு வித்தியாசமான சுவையில் உணவு செய்து கொடுத்து பரிசு பெறுவது ஒன்றே அந்த சமையல் கலைஞனின் நோக்கமாக இருந்தது.

    அதன்படி அரண்மனை குளத்தில் நீந்திக் கொண்டிருந்த அன்னப் பறவையின் குஞ்சு ஒன்றினைப் பிடித்து ரகசியமாய் சமைத்து மன்னனுக்கு பரிமாறினான். தான் சாப்பிடுவது எந்த வகையான உணவு என்று தெரியாமல் அந்த சுவையில் மன்னன் மயங்கினான்.

    அதை மிகவும் விரும்பிய மன்னன், அடிக்கடி அந்த உணவை சமைக்குமாறும், தலைமைச் சமையல் கலைஞனுக்கு உத்தரவிட்டான். அந்த சுவையின் காரணமாக சமையல் கலைஞனும் பெரும் பரிசுகளைப் பெற்றான்.

    கதையை இத்துடன் முடித்துக் கொண்ட கிருஷ்ணர், "இப்போது சொல்லுங்கள் திருதிராஷ்டிரரே.. மன்னன், சமையல் கலைஞன் இருவரில் அதிகம் தவறிழைத்தவர் யார்?" என்று கேட்டார்.

    ஒரு முறை வசிஷ்ட மகரிஷியின் சமையல்காரனும், புலால் கலந்த உணவை வசிஷ்டருக்கு வைத்து விட்டான். ஆனால் அதை வசிஷ்டர் கண்டுபிடித்து அவனுக்கு சாபமிட்டார். அந்த விவேகமும், எச்சரிக்கை உணர்வும் இந்த மன்னனிடம் இல்லையே.

    சமையல்காரன் பணம், பரிசுகளுக்கு ஆசைப்பட்டிருப்பான். அதனால் அவன் செய்த தவறு சிறியது. ஆனால் பல நாட்கள் புலால் உண்டும், அதை கண்டுபிடிக்காத மன்னன்தான் அதிகம் தவறிழைத்தவன் ஆகிறான்" என்று பதிலளித்தார், திருதிராஷ்டிரன்.

    புன்னகைத்த கிருஷ்ணர், "திருதராஷ்டிரரே.. ஓர் அரசனாக இருந்தும், நியாயம் தவறாது 'மன்னன் செய்ததே தவறு எனக் கூறினீர்கள்.

    அத்தகைய நீதி தவறாமைதான், பீஷ்மர். துரோணர் போன்ற சான்றோர் சபையில் உங்களை அமர்த்தியது. நல்ல மனைவி, நூறு பிள்ளைகள் என நல்வாழ்க்கையைத் தந்தது.


    ஆனால், நான் சொன்ன கதையே தங்களைப் பற்றியதுதான். சென்ற பிறவியில் நீங்கள் தான் நூறு அன்னக் குஞ்சுகளை உணவாக சாப்பிட்டிருக்கிறீர்கள்.

    அந்த அன்னக் குஞ்சுகளும், அதன் தாய் பறவையும் எத்தகைய வேதனையை அடைந்திருக்கும் என்பதை தங்களின் நூறு பிள்ளைகளை இழந்து இப்போது அறிந்துகொண்டீர்கள்.

    முற்பிறவியில் தினம் தினம் பார்த்தும், சைவ, அசைவ உணவுகளுக்கிடையே வேறுபாடு தெரியவில்லை. பிறகு எதற்கு கண்? அதனாலேயே குருடனானாய் பிறந்தீர்கள், தெய்வத்தின் முன்பு ஒரு போதும் நீதி தவறாது. அவரவர் வினைக்கேற்பவே அவரவர் வாழ்வு அமையும்" என்று முடித்தார்.

    • தீபவழிபாட்டிற்கு, வலம்புரிச் சங்கு சிறந்ததாக கருதப்படுகிறது.
    • சங்கில் ஏற்றும் தீபம் மகாலட்சுமி தாயாரை வீட்டிற்கு வரவழைக்கும்.

    சங்கு தீபவழிபாட்டிற்கு, வலம்புரிச் சங்கு சிறந்ததாக கருதப்படுகிறது. அதே நேரம் இடம்புரி சங்கை வைத்தும் சங்கு தீபத்தை ஏற்றலாம். இந்த சங்கில் ஏற்றும் தீபம் தான் மகாலட்சுமி தாயாரை நம் வீட்டிற்கு வரவழைக்கும்.

    கேரளாவில் உள்ள பல நாராயணர் கோவில்களில், சங்கில் தீபம் ஏற்றும் வழக்கம் காணப்படுகிறது. சங்கில் தீபம் ஏற்றுவது மகாலட்சுமி மற்றும் மகாவிஷ்ணுவின் அருளை ஒருசேரப் பெற்றுத்தருகிறது.


    தரமான நல்ல சங்கை வாங்கிய பிறகு, நம் வீட்டிற்கு கொண்டு வந்து தண்ணீர் ஊற்றி சங்கை சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த சங்கிற்கு மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து, ஒரு பாத்திரத்தில் கல் உப்பை நிரப்பி அதன் மேல் சங்கை வைக்க வேண்டும்.

    மகாலட்சுமிக்கு தீபம் ஏற்றுபவர்கள், சங்கினுள் பசுநெய்விட்டு தீபம் ஏற்ற வேண்டும். நாராயணனுக்கு விளக்கு ஏற்றுபவர்கள், சங்கினுள் நல்லெண்ணெய் விட்டு தீபம் ஏற்ற வேண்டும். உருக்கிய பசுநெய்யும். நல்லெண்ணெயும் சரி பாதியாகக் கலந்து சங்கில் விட்டு தீபம் ஏற்றினால், லட்சுமிக்கும் நாராயணனுக் கும் பூஜை செய்த பலன் கிடைக்கும்.


    இந்த சங்கு தீபத்தை நம் வீட்டின் தெய்வ ஆற்றல் மிகுந்த ஈசானிய மூலையில் வைத்து ஏற்ற வேண்டும். தீபம் எரியும் திசை தென்மேற்கு நோக்கியவாறு இருக்க வேண்டும். சங்கு தீபத்தை முதன் முதலாக ஏற்றும்போது, அந்த நாள் சுக்ர ஓரையில் ஏற்றுவது விசேஷமான பலனைத் தரும் என்கிறார்கள்.

    குறைந்தது அரை மணிநேரம் சங்கு தீபம் எரிவது சிறப்பு. சங்கு தீபம் ஏற்ற தொடங்கிய நாளில் இருந்து 41 நாட்களுக்கு தொடர்ந்து ஏற்றி வழிபாடு செய்வது மிகவும் அவசியம். பெண்கள் மாதவிலக்கு நாளில் வீட்டில் உள்ள வேறு ஒருவர் அந்த தீபத்தை ஏற்றலாம்.

    இவ்வாறு தொடர்ந்து 41 நாட்கள் சங்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்வதால், பொருளாதார பிரச்சனைகள் தீரும். பணவரவு அதிகரிக்கும். இடர்பாடுகள் அனைத்தும் அகலும், வீட்டில் ஐஸ்வரியம் குடிகொள்ளும்.

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
    • திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் பால் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு புரட்டாசி-30 (புதன்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சதுர்த்தசி இரவு 7.55 மணி வரை பிறகு பவுர்ணமி

    நட்சத்திரம்: உத்திரட்டாதி இரவு 7.13 மணி வரை பிறகு ரேவதி

    யோகம்: சித்த, மரணயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    நடராஜர் அபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வேங்கடேசப் பெருமாள் துளசி பிருந்தாவனம். சிதம்பரம் ஸ்ரீ சிவகாசி அம்மன் சமேத ஸ்ரீ ஆனந்த நடராஜப் பெருமானுக்கு கனக சபையில் அபிஷேகம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராமர் சிறப்பு திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர், அன்னை ஸ்ரீகாந்தி மதியம்மன் அபிஷேகம். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீநம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் அபிஷேகம். திருவல்லிக் கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்மருக்கு திருமஞ்சனம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் பால் அபிஷேகம். திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் சிறப்பு அபிஷேகம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி புறப்பாடு. வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-அன்பு

    ரிஷபம்-அமைதி

    மிதுனம்-ஆதரவு

    கடகம்-ஆக்கம்

    சிம்மம்-லாபம்

    கன்னி-முயற்சி

    துலாம்- வெற்றி

    விருச்சிகம்-உற்சாகம்

    தனுசு- இன்பம்

    மகரம்-நிம்மதி

    கும்பம்-புகழ்

    மீனம்-சுகம்

    • சக்திக்கு மீறி செய்யும் தானம் விஷத்திற்கு சமம்.
    • கடமைக்காக செய்யும் தீர்த்த யாத்திரையால் எந்த பலனும் கிடைக்காது.

    காசி யாத்திரை பற்றி சொல்ல ஆரம்பிக்கும் பொழுது, முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள் உண்டு. காசி யாத்திரை என்பது, நேரடியாக காசிக்குச் செல்லும் வழக்கம் கொண்டது இல்லை.

    ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கி, காசிக்கு சென்று மீண்டும் ராமேஸ்வரம் வந்து, இந்த யாத்திரையை பூர்த்தி செய்வார்கள். ஆகையால் காசி யாத்திரை பற்றி சொல்ல ஆரம்பிக்கும் பொழுது ராமேஸ்வரத்தை பற்றி சொல்ல வேண்டியது அவசியம்.

    காசி செல்லும் முன் ராமேஸ்வரம் தொடங்கி, பிரயாகை மற்றும் கயாவும் சேர்ந்ததுதான் காசி யாத்திரை. இதற்கு 'காசி யாத்திரா க்ரமம்' என்ற விதியும் உண்டு.


    ராமேஸ்வர யாத்திரையை பற்றி நன்கு முழுமையாக அறிந்து, ராமேஸ்வரம் சென்று பின்னர் காசி செல்வது நன்மை தரும்.

    மேலும் இந்த யாத்திரையில் சொல்லப்பட்ட அனைத்தையும் கடைப்பிடிக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் பாதி அளவாவது கடைப்பிடிப்பது நன்மை தரும்.

    அவசர அவசரமாக யாத்திரை சென்று திரும்புவது சுற்றுலா சென்று திரும்புவது போல் அமைந்து விடும். இதில் எவ்வித பயனும் இல்லை.

    கட்டுரைகளில் கோவில் வரலாறு பற்றி மட்டும் எழுதுவார்கள். ஆனால் நாம் அந்த கோவில்களில் உள்ள சம்பிரதாயங்களையும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் சென்று வரக்கூடிய இடங்களில் இருக்கக்கூடிய இடர்பாடுகளையும் புரிந்துகொள்ள வேண்டும்.

    எல்லா இடங்களிலும் நன்மைகளும் உண்டு. தீமைகளும் உண்டு. ஒரு இடத்தில் அதிக கூட்டங்கள் கூடும் பொழுது, அங்கு சில பிரச்சனைகளும் உருவாகும். சில இடங்களில் அதிகார மையம் உருவாகும்.

    சில இடங்களில் போலித் தன்மை உருவாகும். மந்திரங்களையும், சம்பிரதாயங்களையும் முழுமையாக அறியாத பொழுது, பக்தர்களுக்கு எது உண்மை? எது பொய்? என தெரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுவதில் ஆச்சரியம் இல்லை.

    காசி யாத்திரையை முழுமையாக செய்ய எண்ணுபவர்களுக்கு, இந்த கட்டுரை பலன் தர வேண்டும் என்பதால் தான், இங்கே சில விஷயங்களை விரிவாக எடுத்துக் கூறுகிறோம்.

    ராமேஸ்வரம் யாத்திரையில் கவனிக்க வேண்டியவை:

    ராமநாதபுரம் வந்து தேவிப்பட்டினம் அல்லது தர்ப்ப சயனம் சென்று, அங்கு தரிசனங்களை முடிக்க வேண்டும். பின்னர் ராமேஸ்வரத்தில் லட்சுமண தீர்த்தம் சென்று வபனம் (மொட்டை அடித்துக்கொள்தல்) செய்து கொள்ள வேண்டும்.

    இங்கே முழுமையாக மொட்டை அடிக்காமல், உச்சியில் இரண்டே இரண்டு முடிகளை விட்டுவிட்டு மொட்டை அடித்துக்கொள்வது நல்லது. (மொட்டை அடித்துக்கொள்ளும்போது, மீசை, தாடியை எடுப்பதில் சிலருக்கு உடன்பாடு கிடையாது.

    ஆனால் அந்தந்த தேசத்தில் உள்ள ஆச்சாரத்தை அனுஷ்டித்து நாம் சில விஷயங்களை செய்வது நல்லது. சில வட தேசங்களில் மீசையை எடுக்க மாட்டார்கள். அது அவர்கள் வழக்கம்).


    மொட்டை அடித்து முடித்ததும், நீராடுவதற்கு சங்கல்பம் செய்ய வேண்டும். அதாவது அங்குள்ள புண்ணிய தீர்த்தத்தில் குளிப்பதற்கு முன் செய்ய வேண்டிய சங்கல்பம். அதன்பின் இரண்ய சிரார்த்தம், பிண்ட தானம் போன்றவை அவரவர் சக்திக்கு ஏற்றபடி செய்து, அங்குள்ள தீர்த்தங்களில் நீராட வேண்டும்.

    அதைத் தொடர்ந்து ராமநாதரை அர்ச்சித்து வழிபட வேண்டும். இறைவனை வழிபட்டதும் தனுஷ்கோடி செல்ல வேண்டும். பொதுவாக எந்த நதி தீர்த்தம், குளம், சமுத்திரம் போன்ற இடங்களில் குளிப்பதாக இருந்தாலும், அதற்குரிய நமஸ்காரம், சங்கல்பம், தர்ப்பணம் போன்றவை செய்வது நல்லது.

    வலது கையால் தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டு பின் முறையாக குளிக்க வேண்டும். அர்க்கியமும் விடவேண்டும். பின் மனம் உருகி பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    ஒவ்வொரு தீர்த்தங்களும் ஒரு விசேஷ பலனை தருவதால், மொத்தம் 36 முறை நீராட வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இது ஒரே நேரத்தில் செய்ய முடியாவிட்டால், இரண்டு மூன்று நாட்களாக பிரித்துக் கொண்டு செய்வது விசேஷம் என்பது பெரியோர் கருத்து.

    ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் செய்வதைத் தவிர, சுக்ரீவன், நளன், சீதா, லட்சுமணர், ராமச்சந்திர மூர்த்தி ஆகியோரை தியானம் செய்து எல்லோருக்கும் மூன்று முறை தர்ப்பணம் விட வேண்டும்.

    கோடிக்கரையில் ஒரு சிரார்த்தமாவது செய்ய வேண்டும். அரிசி, எள்ளு இவைகளால் பிண்ட தானம் செய்ய வேண்டும். எதுவுமே இல்லாவிட்டால் இரண்யமாக (பணம்) தாம்பூலம் வைத்து கொடுத்து விடலாம்.

    பின் ராமேஸ்வரம் வந்து கோடி தீர்த்தத்தில் குளித்து, அந்த தீர்த்தத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த யாத்திரை முடிக்கும் பொழுது நாம் உறவினர்களையும், பெரியோர்களையும் நமது இல்லத்தில் வரவழைத்து அன்னமிட்டு யாத்திரையை பூர்த்தி செய்து கொள்வது விசேஷம்.

    வருட சிரார்த்தம் என்பது ஒவ்வொரு வருடமும் தாய் - தந்தையர் மரணம் அடைந்த, அதே மாதம் அதே திதி வருவதை குறிக்கும். இதை எக்காரணம் கொண்டும் நிறுத்தக்கூடாது.

    விசேஷ சிரார்த்தம் என்பது நாம் தீர்த்த யாத்திரை செல்லும்போது அங்கு செய்வது. இது எப்பொழுது வேண்டுமானாலும், தீர்த்த யாத்திரை செல்லும் போதெல்லாம் செய்யலாம்.

    ராமேஸ்வரம், காசி போன்ற இடங்களுக்கு எப்பொழுது செல்லலாம் என்று கேட்டால், வருடத்தின் 365 நாட்களும் சென்று நாம் செய்ய வேண்டிய கடமைகளை செய்யலாம்.

    அதே நேரத்தில் அமாவாசை, மகா சங்கரனம், கிரகணம், மஹாளய பட்சம் போன்ற புண்ணிய காலங்கள் மிக விசேஷமானதாகும். இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது.

    பல ஆன்மிக அன்பர்கள், 'எனது தாய் தந்தையாரின் சிரார்த்தத்தை வருடா வருடம் ராமேஸ்வரம் சென்று செய்கிறேன். காசி சென்று செய்கிறேன்' என கூறுவார்கள். இவ்வாறு செய்வது கூடாது.

    தாய் தந்தையரின் சிரார்த்தத்தை (திதி) தனியாக செய்துவிட்டு, பின் ராமேஸ்வரத்திலும், காசியிலும் செய்ய வேண்டிய விசேஷ சிரார்த்தத்தை அங்கு செய்யலாம்.

    ஏனென்றால் தீர்த்த யாத்திரையில் வழக்கமான சிராத்தத்தை செய்வதா? அல்லது அங்கு செய்ய வேண்டிய விஷேச சிரார்த்தத்தை செய்வதா? என்ற கேள்வி எழும்.

    தீர்த்த யாத்திரை செல்லும் போது வழக்கமான சிரார்த்த திதி வந்தால், காசி - ராமேஸ்வரம் போன்ற எல்லைக்கு செல்வதற்கு முன்பாகவே, முன்னோர்களின் வருஷ சிரார்த்தத்தை செய்துவிட்டு, பின் ராமேஸ்வரம் மற்றும் காசி சென்று விசேஷ சிரார்த்தத்தை (திதி) செய்யலாம்.

    • 17-ந்தேதி பவுர்ணமி.
    • 20-ந்தேதி சங்கடகர சதுர்த்தி.

    15-ந்தேதி (செவ்வாய்)

    * பிரதோஷம்.

    * கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் காலை பல்லக்கிலும், இரவு வெள்ளி கருட வாக னத்திலும் பவனி.

    * சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

    * கீழ்நோக்கு நாள்.

    16-ந்தேதி (புதன்)

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சபாபதி அபிஷேகம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.

    * திருத்தணி முருகப் பெருமான் பால் அபிஷேகம்.

    * மேல்நோக்கு நாள்.

    17-ந்தேதி (வியாழன்)

    * பவுர்ணமி.

    * திருநெல்வேலி காந்திமதி அம்மன் புஷ்பாஞ்சலி.

    * திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி தீர்த்தாபிஷேகம்.

    * கோவில்பட்டி செண்பக வல்லி அம்மன் உற்சவம் ஆரம்பம்.

    * திருவண்ணாமலை அண்ணாமலையார் சன்னிதியில் மலைமேல் கிரிவலம்.

    * சமநோக்கு நாள்.

    18-ந்தேதி (வெள்ளி)

    * திருநெல்வேலி காந்திமதி அம்மன் திருக்கல்யாண உற்சவம் ஆரம்பம்.

    * கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் ஆடும் பல்லக்கில் பவனி.

    * தேவகோட்டை மணிமுத்தா நதிக்கு அவ்வூர் சகல ஆலய மூர்த்திகளும் எழுந்தருளல்.

    * சமநோக்கு நாள்.

    19-ந்தேதி (சனி)

    * திருநெல்வேலி காந்திமதி அம்மன் காலை வெள்ளி சப்பரத்திலும், இரவு கமல வாகனத்திலும் வீதி உலா.

    * திருவரங்கம் நம்பெரு மான், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள். மதுரை கூடலழகர் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.

    * திருப்போரூர் முருகப் பெருமான் பால் அபிஷேகம்.

    * கீழ்நோக்கு நாள்.

    20-ந்தேதி (ஞாயிறு)

    * சங்கடகர சதுர்த்தி.

    * கார்த்திகை விரதம்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன். தூத்துக்குடி பாகம்பிரியாள் தலங்களில் திரு வீதி உலா.

    * திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்கமயில் வாகனத்தில் பவனி.

    * கீழ்நோக்கு நாள்.

    21-ந்தேதி (திங்கள்)

    * முகூர்த்த நாள்.

    * திருநெல்வேலி காந்திமதி அம்மன் ரிஷப வாகனத்தில் பவனி.

    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு.

    * மேல்நோக்கு நாள்.

    • கொடிமரத்தின் மேலே மூன்று உலோக அடுக்குகள் அமைக்கப்படுகின்றன.
    • ஆகம விதிப்படி சில சிற்பங்கள் செதுக்கப்படுகின்றன.

    மகாபாரதப் போர் முடிந்து விட்டது. பாண்டவர்கள் அஸ்தினாபுரத்தை நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தனர். பாண்டவர்களில் மூத்தவரான தருமர், நிறைய தான - தர்மங்கள் செய்து வந்தார்.

    ஒரு கட்டத்தில் அவருக்கு, 'இந்த உலகிலேயே தன்னை விட தானமும், தர்மமும் செய்பவர் எவரும் இருக்க முடியாது' என்ற கர்வம் பிறந்தது. அந்த கர்வம் அவருக்கு, 'தானே உலகில் சிறந்த நீதிமான்' என்ற எண்ணத்தையும் வழங்கியது.

    இதை உணர்ந்த கிருஷ்ணர், தருமரின் கர்வத்தை அகற்ற, அவருக்கு பாடம் புகட்ட எண்ணினார். உடனே தருமரிடம் சென்று, "நீ ஒரு அசுவமேத யாகம் செய். அது நாட்டிற்கு மேலும் பல நன்மைகளை வழங்கும்" என்றார். இதையடுத்து தருமர், அசுவமேத யாகத்தை தொடங்கினார்.


    அசுவமேத யாக குதிரை, மற்ற பாண்டவர்களுடன் பாரத தேசத்தை வலம் வரத் தொடங்கியது. பாண்டவர்களின் பராக்கிரமம் அறிந்த பல மன்னர்கள், தருமரின் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டனர்.

    ஆனால் அசுவமேத யாக குதிரை, மணிப்பூர் ராஜ்ஜியத்தை அடைந்தபோது நிலைமை மாறியது. அந்த ராஜ்ஜியத்து அரசனின் பெயர், மயூரத்வஜன். அவன் சிறந்த கிருஷ்ண பக்தன் ஆவான்.

    அவனுக்கு அசுவமேத யாக குதிரை, கிருஷ்ணர் ஆதரவைப் பெற்ற பாண்டவர்களுடையது என்பது நன்கு தெரியும். ஆனாலும் அவனுக்கு தன்னுடைய ராஜ்ஜியத்தை விட்டுக்கொடுக்க மனம் இல்லை. எனவே குதிரையை தடுத்து நிறுத்தினான். மயூரத்வஜனின் மகன் தாம்ப்ராதவஜன், பாண்டவர்களுடன் போரிட்டு அவர்களை சிறைபிடித்தான்.

    இந்த செய்தியை அறிந்த கிருஷ்ணரும், தருமரும் மணிப்பூர் விரைந்தனர். அப்போது கிருஷ்ணர், "உன்னால் மயூரத்வஜனை தோற்கடிக்க முடியாது. எனவே நாம் மாறு வேடத்தில் செல்வோம்" என்று தருமரிடம் கூறினார்.

    பின்னர் இருவரும் அந்தணர் வேடம் பூண்டு மயூரத்வஜனை சந்தித்தனர். அந்தணர் வேடத்தில் இருந்த கிருஷ்ணர், "அரசே.. நாங்கள் காட்டு வழியாக இங்கே வரும் வழியில், ராட்சசன் ஒருவன் எனது மகனை பிடித்துக்கொண்டான்.

    அந்த ராட்சசன் என் மகனை சாப்பிடாமல் இருக்க வேண்டுமானால், உடனடியாக மனித மாமிசத்தைக் கொண்டு செல்ல வேண்டும். அந்த ராட்சசனுக்கு சரி பாதி உடல் பாகம் தான் வேண்டுமாம்.


    எனவே உன் உடலில் பாதியை தந்தால், என் மகனை மீட்க முடியும். அதோடு உன் உடலை உன் மனைவியும், மகனும் தான் வெட்ட வேண்டும்" என்றார்.

    மயூரத்வஜனும் அதற்கு சம்மதம் தெரிவித்தான். அப்போது அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அதைக் கண்ட தருமன், "கண்ணீருடன் தரப்படும் தானம் எங்களுக்குத் தேவையில்லை" என்றான்.

    அதற்கு மயூரத்வஜன், "மன்னிக்க வேண்டும் வேதியர்களே.. என்னுடைய உடலின் ஒரு பாகம் தானே பயன்படப்போகிறது. மற்றொரு பாகம் யாருக்கும் பயனின்றி போகப் போகிறதே" என்பதை நினைத்துத்தான் என் கண்கள் கலங்கின என்று தெரிவித்தான்.

    அதைக் கேட்டதும் தருமரின் ஆணவம் அழிந்தது. தான் இதுவரை செய்து வந்த தானமும்- தர்மமும் இவன் முன்பு ஒன்றும் இல்லை என்று தருமர் நினைத்து வருந்தினார். அப்போது கிருஷ்ணர் தன்னுடைய சுய உருவத்தைக் காட்டி விஸ்வரூபமாக மயூரத்வஜனுக்கு தரிசனம் அளித்தார்.

    மேலும் "கடவுளை வணங்கும் இடங்களில் நீயும், உன் மனைவி, மகனும் த்வஜ ஸ்தம்பம் (கொடிமரம்) ஆக இருப்பீர்கள். ஆலயத்தில் உள்ள தெய்வத்தை வணங்குவதற்கு முன்பாக அனைவரும் உங்களை வணங்குவார்கள்" என்ற வரத்தை அருளினார்.

    கொடி மரமானது, ஜீவதாறு (உயிர் உள்ள மரம்) என்ற மரத்தில் செய்யப்படுகிறது. அது தாமிரம் மற்றும் தங்கத் தகடுகளால் மூடப்பட்டு, ஆகம விதிப்படி சில சிற்பங்கள் செதுக்கப்படுகின்றன.


    கொடிமரத்தின் மேலே மூன்று உலோக அடுக்குகள் அமைக்கப்படுகின்றன. அதன் பெயர் 'மேகலா' ஆகும். அந்த மூன்றும் பூமி, அண்டம், சொர்க்கம் ஆகியவற்றை குறிப்பதாகும். அதில் பாலி என்ற சிறிய மணி இருக்கும்.

    கொடி மரத்தின் உச்சியில் மயூரத்வஜனை நினைவுகூரும் வகையில் ஆகாச தீபம் என்ற சிறிய விளக்கும் இருக்கும். கொடி மரத்தில் ஏற்றப்படும் கொடிக்கு 'த்வஜபடம்' என்று பெயர்.

    அந்த கொடியில் நந்தி, கருடன் அல்லது திரிசூலம் போன்றவை பொறிக்கப்பட்டு இருக்கும்.

    கொடியேற்றத்தை 'த்வஜ ஆரோகணா' என்றும், கொடி இறக்குவதை 'த்வஜ அவனத' என்றும் சொல்வார்கள். கொடிமரத்தை சுற்றாமல், கோவில் பிரதட்சணம் நிறைவு பெறாது.

    • சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
    • சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு புரட்டாசி-29 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : திரயோதசி இரவு 10.20 மணி வரை பிறகு சதுர்த்தசி

    நட்சத்திரம் : பூரட்டாதி இரவு 8.52 மணி வரை பிறகு உத்திரட்டாதி

    யோகம் : மரண, அமிர்தயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று பிரதோசம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். குரங்கணி ஸ்ரீ முத்துமாலையம்மன் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ருசம்ஹார அர்ச்சனை.

    சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருச்செங்காட்டங்குடி ஸ்ரீ உத்திரபதீஸ்வரர் அபிஷேகம், அலங்காரம். திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீசுவரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ அராளகேசியம்மன் சமேத ஸ்ரீ ரத்தின கிரீஸ்வரர், திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்குசாமி கோவில்களில் மாலை ரஷிப வாகனத்தில் பவனி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம் - ஊக்கம்

    ரிஷபம் - நற்செயல்

    மிதுனம் - செலவு

    கடகம் - நிம்மதி

    சிம்மம் - அமைதி

    கன்னி - மாற்றம்

    துலாம் - புகழ்

    விருச்சிகம் - உயர்வு

    தனுசு - ஆதரவு

    மகரம் - வெற்றி

    கும்பம் - உண்மை

    மீனம் - சுகம்

    • கிரிவலம் வர உகந்த நேரமாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பக்தர்கள் மாலை, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கிரிவலம் வரலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    திருவண்ணாமலை:

    புரட்டாசி மாத பவுர்ணமி நாளில் கிரிவலம் வர உகந்த நேரத்தை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    புரட்டாசி மாத பவுர்ணமி அக்டோபர் 16-ந்தேதி புதன்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் 17-ந்தேதி மாலை 5.38 மணிக்கு நிறைவுபெறுகிறது.

    இது கிரிவலம் வர உகந்த நேரமாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பக்தர்கள் மாலை, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கிரிவலம் வரலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    ×