என் மலர்
வழிபாடு
- பூங்கொடி போன்ற ஆயர்குலத்தின் கொழுந்து போன்ற ஒளி விளக்கே!
- உலகங்களை அளந்த தேவர்களின் தலைவனே! உறக்கத்தை விடுத்து எழுந்தருள்வாய்!
திருப்பாவை
பாடல்:
அம்பரமே, தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோ பாலா, எழுந்திராய்;
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே!
குலவிளக்கே!
எம் பெரு மாட்டி! யசோதாய்! அறிவுராய்;
அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த
உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்!
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்.
விளக்கம்:
ஆடையையும், உணவையும், நீரையும் வரையறையே இல்லாது தானம் அளிக்கும் எங்கள் தலைவர் நந்தகோபரே! எழுந்தருள்வீர்! பூங்கொடி போன்ற ஆயர்குலத்தின் கொழுந்து போன்ற ஒளி விளக்கே! எங்கள் தலைவியாகிய யசோதை அம்மா! வானளாவ உயர்ந்து நின்று உலகங்களை அளந்த தேவர்களின் தலைவனே! உறக்கத்தை விடுத்து எழுந்தருள்வாய்! சிவந்த பொன்னாலான கால்களை அணிந்த பலதேவனே! நீயும் உன் தம்பியான கண்ணனும் இனியும் உறங்காது, உறக்கத்தை விடுத்து எழுந்தருள்வீர்!
திருவெம்பாவை
பாடல்:
செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாதோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நம்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
பெண்களே! அந்த சிவந்த கண்களை உடைய திருமாலுக்கும், ஒவ்வொரு திசைக்கும் ஒரு முகம் வீதம் நான்கு முகங்களைக் கொண்ட பிரம்மனுக்கும், ஏனைய தேவர் பெருமக்களுக்கும் கிடைக்காத ஒரு பேரின்பத்தை நமக்கு அள்ளிக் கொடுப்பவள், நறுமணம் மிக்க கூந்தலையுடைய நம் அன்னை உமையவள். அவள் நம்மை சீராட்டி, நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளும் வகையில் தன் சிவந்த தாமரை போன்ற திருவடிகளை நமக்குக் காட்டி, அனைவருக்கும் அரசனாக விளங்குபவனும், அடியவர்களுக்கு கிடைத்தற்கரிய அமுதத்தைப் போன்று விளங்குபவனுமாகிய நம் சிவபெருமானைப் போற்றிப் பாடி, தாமரை மலர்ந்துள்ள இந்த பொய்கையில் நீராடுவோமாக!
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம்.
- பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மார்கழி-17 (புதன்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: துவிதியை மறுநாள் விடியற்காலை 4.02 மணி வரை பிறகு திருதியை
நட்சத்திரம்: உத்திராடம் நள்ளிரவு 1.31 மணி வரை பிறகு திருவோணம்
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சந்திர தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், காஞ்சீபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவில்களில் பகற்பத்து உற்சவம். கரூர் ஸ்ரீ அபயபிரதான ரங்கநாதர் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதருக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, தேவக்கோட்டை ஸ்ரீரங்கநாதர் புறப்பாடு. வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமானுக்கு காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்க வாசகர் புறப்பாடு. திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருப்பு ளியங்குடி மூலவர் ஸ்ரீபூமிபாலகர், திருபுளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உதவி
ரிஷபம்-தாமதம்
மிதுனம்-பணிவு
கடகம்-அன்பு
சிம்மம்-பாசம்
கன்னி-மகிழ்ச்சி
துலாம்- தனம்
விருச்சிகம்-பக்தி
தனுசு- உழைப்பு
மகரம்-கடமை
கும்பம்-நட்பு
மீனம்-போட்டி
- பகல்பத்து, ராபத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் விழா நடைபெறும்.
- 10-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும்.
திருச்சி:
108 திவ்ய தேசங்களில் முதன்மையான பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகுவிமரிசையாக நடை பெறும்.
மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. பகல்பத்து, ராபத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும்.
பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருநாள் இன்று (செவ்வாய்க்கிழமை) கோலாகலமாக தொடங்கியது. இதை யொட்டி நம்பெருமாள் காலை 7.45 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 8.30 மணிக்கு அர்சுன மண்டபம் வந்தடைந்தார்.
மஞ்சள் நிற பட்டு (பீதாம்பரம்) அணிந்து ரத்தின பாண்டியன் கொண்டை அணிந்து, நெற்றி பூ சாற்றி, வைர அபய ஹஸ்தம், பதக்கம், அடிக்கை, ஒட்டியா ணம், கைகளில் தாயத்து சரம் , திருவடியில் தண்டை அணிந்து புறப்பாடாகி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார்.
மதியம் 12 மணிவரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடினர்.

இரவு 7.30 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடை கிறார். பகல் பத்தின் முதல் நாளான இன்று மூலவர் ரெங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளித்தார். இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும்.
இதே போல் பகல் பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல்பத்து உற்ச வத்தின் 10-வது நாள் (9-ந்தேதி) நம்பெருமாள் நாச்சி யார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். 10-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும்.
அன்று அதிகாலை 4.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 5.15 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவா சலில் எழுந்தருள்வார். இதை யொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்த ர்களுக்கு அருள்பாலிப்பார்.
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளுடன் பரமபத வாசலை கடந்து செல்வார்கள். சொர்க்கவாசல் 11-ந்தேதி முதல் 15-ந் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணிவரை திறந்திருக்கும். 16-ந்தேதி மாலை 4 மணிமுதல் இரவு 9 மணிவரை திறந்திரு க்கும். 17-ந்தேதி சொர்க்க வாசல் திறப்பு இல்லை.
சொர்க்கவாசல் திறப்பு தினமான 10-ந்தேதி முதல் ராப்பந்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. ராப்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
ராப்பத்து ஏழாம் திரு நாளான 16-ந்தேதி நம்பெரு மாள் திருக்கைத்தல சேவை யும், எட்டாம் திருநாளான 17-ந்தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான 19-ந்தேதி தீர்த்தவாரியும், 20-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சி யும் நடைபெறும். இத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவு பெறும்.
விழாவிற்கான ஏற்பா டுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரி யப்பன், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்மு ருகன், கண்காணிப்பாளர் வெங்கடேசன், மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
- லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.
- ஜகத் ஜனனி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார்.
மேல்மலையனூர்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இரவு மார்கழி மாதம் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடை பெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு மூலஸ்தானத்தில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், குங்குமம், விபூதி, பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட வாசனை பொருட்களால் அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது.
தொடர்ந்து தங்ககவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து உற்சவர் அம்மனுக்கு பலவித மலர்களை கொண்டு ஜகத் ஜனனி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார்.
தொடர்ந்து இரவு 11.30 மணிக்கு பம்பை மேள தாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக் கணக்கான பக்தர்கள் ஓம் சக்தி, அங்காளம்மா! என்று பக்தி கோஷத்துடன அம்மனை வழிபட்டனர்.
தொடர்ந்து இரவு 12.30 மணியளவில் ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு பூக்காளால் அர்ச்சனை செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து உற்சவர் அம்மன் கோவில் மண்டபத்திற்கு சென்றனர்.
ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம், கடலூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
விழாவில் செஞ்சி துணைபோலீஸ் சூப்பிரண்டு கார்த்திகா பிரியா தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் மேல்மலையனூருக்கு இயக்கப்பட்டன.
- நேர்த்தியான நிலையுடன் பொருந்தியுள்ள கதவுகளைத் திறந்து விடுவாய்.
- உமையம்மையின் நிறத்தையொத்த கருநீல மேகமே!
திருப்பாவை
பாடல்:
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில்காப் பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில்காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்;
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்;
தூயோமாய் வந்தோம், துயிலெழப் பாடுவான்;
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே, அம்மா!
நீ நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.
விளக்கம்:
கொடி பறக்கின்ற தோரண வாசலைக் கொண்ட ஆயர்பாடியின் தலைவனாய் விளங்குகின்ற நந்தகோபனின் அரண்மனையைக் காவல் புரிபவரே! மணிகள் பொருத்தப்பட்ட கதவைத் திறந்து எங்களை உள்ளே அனுமதிக்க வேண்டும். கண்ணன் ஆயர் சிறுமிகளான எங்களின் நோன்புக்கு உரிய அருளை தருவதாக வாக்களித்துள்ளான். அவனைத் துயிலெழுப்ப தூய்மையான மனதுடன் வந்துள்ளோம். உன் வாயினால் மறுத்துச் சொல்லிவிடாதே. நேர்த்தியான நிலையுடன் பொருந்தியுள்ள கதவுகளைத் திறந்து விடுவாய்.
திருவெம்பாவை
பாடல்:
முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கும் முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
இந்த கடல் நீரைச் சுருக்கி வற்றச் செய்து மேலெழும்பும் உமையம்மையின் நிறத்தையொத்த கருநீல மேகமே! இறைவியின் இடையைப் போல மின்னி, அவள் கால்களில் அணிந்துள்ள சிலம்பு போன்ற இடியை இடிக்கச் செய்து, அவள் அழகிய புருவம் போன்ற வானவில்லைத் தோன்றச் செய்வாய். பார்வதியைப் பிரியாத பரமசிவன் தன் அடியார்கள் மேல் இன்னருளைப் பொழிவதைப் போல நீயும் மழையைப் பொழிவாயாக.
- சகல விஷ்ணு ஆலயங்களில் பகற்பத்து உற்சவம் ஆரம்பம்.
- முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம்
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மார்கழி-16 (செவ்வாய்க்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: பிரதமை மறுநாள் விடியற்காலை 4.48 மணி வரை பிறகு துவிதியை
நட்சத்திரம்: பூராடம் நள்ளிரவு 1.36 மணி வரை பிறகு உத்திராடம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொணட தங்கப்பூமாலை சூடியருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சனம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் திருமொழித் திருநாள் தொடக்கம். சாக்கிய நாயனார் குருபூஜை. சகல விஷ்ணு ஆலயங்களில் பகற்பத்து உற்சவம் ஆரம்பம். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை, திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான குமுத வல்லித் தாயார் சமேத ஸ்ரீ வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் காலை திருமஞ்சனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம்
இன்றைய ராசிபலன்
மேஷம்-மேன்மை
ரிஷபம்-விவேகம்
மிதுனம்-அன்பு
கடகம்-பெருமை
சிம்மம்-அன்பு
கன்னி-உற்சாகம்
துலாம்- பக்தி
விருச்சிகம்-ஆர்வம்
தனுசு- மகிழ்ச்சி
மகரம்-ஆதரவு
கும்பம்-பயணம்
மீனம்-லாபம்
- வடை, வெற்றிலை மாலை அணிவித்து சிறப்பு தீபராதனை நடந்தது.
- சாமியை தரிசிப்பதற்காக பக்தர்கள் இன்று காலை முதல் குவிந்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து பாபவிநாசம் சாலையில் உள்ள ஜபாலி மலையில் அனுமன் பிறந்ததாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது.
ஜபாலி மலையில் உள்ள அனுமனுக்கு இன்று காலை பல்வேறு பால், தேன், தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள், குங்குமம், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடந்தது.
பின்னர் அனுமனுக்கு பட்டு வஸ்திரங்கள் உடுத்தி, வடை, வெற்றிலை மாலை அணிவித்து சிறப்பு தீபராதனை நடந்தது. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அவர் பிறந்த இடத்தில் சாமியை தரிசிப்பதற்காக பக்தர்கள் இன்று காலை முதல் குவிந்தனர். நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதியில் நேற்று விடுமுறை நாள் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய தேவஸ்தான அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.
திருப்பதியில் நேற்று 84 950 பேர் தரிசனம் செய்தனர். 21,098 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.80 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
நேரடி இலவச தரிசனத்தில் 6 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.
- 5 இடங்களில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் கோட்டையில் புராதன சிறப்புப் பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் உருவான 18 அடி உயர ஆஞ்சநேயர் நின்ற நிலையில் சாந்த சொரூபியாக பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் அமாவாசை தினத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி நடப்பாண்டு 2 முறை ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வருகை பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மார்கழி மாதத்தையொட்டி கடந்த ஜனவரி மாதம் 11-ந்தேதி (வியாழக்கிழமை) ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
இதையடுத்து நடப்பாண்டு 2-வது முறையாக மார்கழி மாதத்தை முன்னிட்டு இன்று (30-ந்தேதி) ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலமாக தொடங்கியது. விழாவையொட்டி ஒரு டன் வண்ண மலர்களால் கோவில் வளாகம் முழுவதும் அலங்கரிப்பட்டு இருந்தது.
அதிகாலை 5 மணிக்கு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. இதையடுத்து ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டு திரை விலக்கப்பட்டு மகா தீபாராதணை நடைபெற்றது.
1 லட்சத்து 8 வடை மாலை அலங்காரத்துடன் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இவ்விழாவில் தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.
காலை 11 மணிக்கு வடை மாலை அலங்காரம் கலைக்கப்பட்டு நல்லெண்ணெய், பால், தயிர், திருமஞ்சள், சீயக்காய்தூள், பஞ்சாமிர்தம் போன்ற வாசனைப் பொருட்களால் சாமிக்கு சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.
பின்னர் மதியம் 1 மணிக்கு ஆஞ்சநேயருக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. சுமார் 20-க்கும் மேற்பட்ட கோவில் பட்டாச்சாரியார்கள் பூஜை பணிகள் செய்தனர்.
ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நள்ளிரவு முதலே சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
பக்தர்கள் வரிசையாக சென்று வரும் வகையில் கோவில் பகுதிகளிலும், கோவில் அமைந்துள்ள தெருக்களிலும் பேரிகார்டு வைத்து தடுப்புகள் அமைக்கப்பட்டது. பக்தர்கள் வரிசையாக வந்து ஆஞ்சநேயரை வழிபட்டு செல்கின்றனர். 5 இடங்களில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக நாமக்கல்லில் கோட்டை ரோடு, பார்க் ரோடு பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டது. நாமக்கல் கோட்டை பகுதி முழுவதும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணா தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 50 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளன.
ஆஞ்சநேயர் ஜெயந்தி பெருவிழாவையொட்டி நாமக்கல் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
- முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும்.
- பக்தர்கள் வசதிக்காக பல்வேறு இடங்களில் குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா திருநெடுந்தாண்டகத்துடன் இன்று தொடங்குகிறது.
பொதுவாக பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா பெரியாழ்வார் பாடிய திருப்பல்லாண்டு பாசுரத்துடன் தொடங்கும். ஸ்ரீரங்கத்தில் மட்டும் ஒரு நாள் முன்னர் திருநெடுந்தாண்டகம் சொல்லி விழா தொடங்கும்.
திருநெடுந்தாண்டகம் திருமங்கை ஆழ்வாரால் தொடங்கப்பட்டது. அவரின் பாசுரங்களை அரங்கன் முதலில் கேட்க ஆசைப்பட்டார். பராசர பட்டர் மாதவன் என்ற ஜீயரை திருநெடுந்தாண்டகம் கொண்டு போட்டியில் வென்றார். அரங்கன் இந்த நிகழ்வை கேட்டு பராசர பட்டரிடம் அதை கொண்டே தொடங்க சொன்னதாக வரலாறு.

வைகுண்ட ஏகாதசி பெருவிழா முழுவதுமே அரங்கனை தமிழால் பாடும் தமிழ் எழுச்சி விழா. நம்பெருமாள் முன்பாக பாசுரம் பாடுபவர்களை அரையர்கள் என்பார்கள். இவர்கள் ரங்கநாதர் முன்னர் திருநெடுந்தாண்டகம் 30 பாசுரங்கள் பாடுவர்.
வைகுண்ட ஏகாதசி திருவிழா நாட்களில் நம்பெருமாள் முன்பாக பகல்பத்து மற்றும் ராப்பத்து என 21 நாட்கள் நாலாயிர திவ்யபிரபந்தம் அபிநயம் மற்றும் இசையுடன் பாடப்படும். அதற்காக ரெங்கநாதரிடம் மூலஸ்தானத்தில் அனுமதி பெற்று, நாலாயிர திவ்ய பிரபந்தத்தை படிக்க தொடங்குவதே திருநெடுந்தாண்டகம் ஆகும்.
ஸ்ரீரங்கம் கோவிலில் நாலாயிர திவ்யபிரபந்தம் படிக்க ஆரம்பித்தவுடன் மற்ற திவ்ய தேசங்களில் இருந்து பெருமாள்கள் அனைவரும் இங்கு எழுந்தருளுகின்றனர் என்பது ஐதீகம்.
அதன்படி இன்று ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று மாலை 7 மணிக்கு அரையர்கள் திருநெடுந்தாண்டகம் பாட கோலாகலமாக வைகுண்ட ஏகாதசி பெருவிழா தொடங்குகிறது. தொடர்ந்து நாளை பகல்பத்து உற்சவம் தொடங்குகிறது.
பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 7.45 மணிக்கு நம் பெருமாள் மூல ஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 8.30 மணிக்கு அர்ஜுன மண்டபம் வந்தடைகிறார். காலை 8.30 மணி முதல் பகல் 12 மணி வரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிர திவ்யப் பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடுவார்கள்.
இரவு 7 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். பகல் பத்தின் முதல் நாளில் இருந்து மூலவர், முத்தங்கி சேவையில் காட்சியளிப்பார். இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும்.
பகல் பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல்பத்து உற்சவத்தின் 10-ம் நாளான வருகிற 9-ந் தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருள்வார். மறுநாள் 10-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ராப்பத்து உற்சவம் நடைபெறும் 11-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை (8-ம் திருநாளான 17-ந் தேதி தவிர) சொர்க்கவாசல் திறந்திருக்கும்.
ராப்பத்து உற்சவத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
16-ந் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், 17-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 19-ந் தேதி தீர்த்தவாரி கண்டருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 20-ந் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா நிறைவு பெறுகிறது.
விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஆயிரங்கால் மண்டபம், மணல் வெளி முழுவதும் அலங்கரிக்கப்பட்டு, கோவில் கோபுரங்கள் மின் விளக்குகளால் ஜொலிக்கின்றன. பக்தர்கள் வசதிக்காக பல்வேறு இடங்களில் குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி மேற்பார்வையில் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
விழா ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில், கோயில் இணை ஆணையர் மாரியப்பன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- மாயக் கண்ணனைப் பாடி பாவை நோன்பு நோற்கலாம் விரைந்து வாருங்கள்!
- நம் பெருமான் பெருமைகளை வாயாரப் பாடி, இக்குளத்தில் நீராடுவோம் வாருங்கள்.
திருப்பாவை
பாடல்:
'எல்லே! இளங்கிளியே இன்னமும் உறங்குதியோ?'
'சில்லென் றழையேன்மின், நங்கைமீர் போதர்கின்றேன்'
வல்லை உன் கட்டுரைகள்! பண்டேஉன் வாயறிதும்!''
'வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக!'
'ஒல்லைநீ போதாய்; உனக்கென்ன வேறுடையை?'
'எல்லாரும் போந்தாரோ?' போந்தார் போந்து
எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.
விளக்கம்:
'ஏனடி ! இளமையான கிளி போன்ற பெண்ணே! இன்னமும் உறங்குகிறாயோ?' 'சிடுசிடுவென கூச்சல் போடாதீர்கள், மங்கையரே! இதோ புறப்பட்டு விட்டேன்!' 'உன் பேச்சின் வீரத்தை நாங்கள் முன்பே அறிவோம்!'
நீங்கள்தான் வாய்ப்பேச்சில் வலிமை உடையவர்கள். இருந்தாலும் உங்களைப் பொறுத்தவரை நானே இருந்து விட்டுப் போகிறேன்'. 'முதலில் நீ புறப்படு, உனக்கு மட்டும் தனியாகக் கூற வேண்டுமா?" 'எல்லோரும் வந்து விட்டார்களா?" "வந்தவர்களை நீயே வந்து எண்ணிப் பார்த்துக் கொள். குவலயாபீடம் என்ற யானையைக் கொன்று, பகைவரின் செருக்கை அழித்த வல்லவனுமாகிய மாயக் கண்ணனைப் பாடி பாவை நோன்பு நோற்கலாம் விரைந்து வாருங்கள்!
திருவெம்பாவை
பாடல்:
ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூற
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்
பணியாள்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும்
வித்தகர்தான்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
நம் பெருமானது சிறப்பை பேசும் ஒருத்தி ஒவ்வொரு கணமும் 'எம் பெருமான்' என்றே வாய் ஒயாது பேசிக் கொண்டு இருப்பாள். மனதில் ஆனந்தம் பொங்க, கண்களில் இருந்து கண்ணீர் நீண்ட தாரையாக தொடர்ந்து வழிந்து கொண்டிருக்கும். அவள் மண்ணில் உள்ளவர்களையும், தேவர்களையும் வணங்க மாட்டாள். அரசர்க்கெல்லாம் அரசராக விளங்குபவரின் மேல் இத்தனை பித்து பிடித்து அலையும் இந்த பெண்ணை ஆட்கொண்ட வித்தகராம், அந்த சிவபெருமானின் பெருமைகளை நாமும் பாடுவோம். மார்புகளில் கச்சை அணிந்த இளம் பெண்களே! நம் பெருமான் பெருமைகளை வாயாரப் பாடி, இக்குளத்தில் நீராடுவோம் வாருங்கள்.
- இன்று சர்வ அமாவாசை. ஸ்ரீமத் அனுமன் ஜெயந்தி.
- மதுரை கூடலழகர் கருடோற்சவம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மார்கழி-15 (திங்கட்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: அமாவாசை மறுநாள் விடியற்காலை 5.03 மணி வரை பிறகு பிரதமை
நட்சத்திரம்: மூலம் நள்ளிரவு 1.12 மணி வரை பிறகு பூராடம்
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று சர்வ அமாவாசை. ஸ்ரீமத் அனுமன் ஜெயந்தி. ராமேசுவரம், வேதாரண்யம், திருவள்ளூர், சிதலப்பதி, திருவெண்காடு கோவில்களில் பித்ரு தர்ப்பணம் செய்ய நன்று. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். மதுரை கூடலழகர் கருடோற்சவம். ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம். கீழ்த் திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சனம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலுதர்பார் காட்சி. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருமஞ்சனம். கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ மருந்தீஸ்வர், பெசன்ட்நகர் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வர் கோவில்களில் சோமவார அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சுகம்
ரிஷபம்-உதவி
மிதுனம்-உயர்வு
கடகம்-உவகை
சிம்மம்-ஆக்கம்
கன்னி-ஆதரவு
துலாம்- பரிவு
விருச்சிகம்-புகழ்
தனுசு- அமைதி
மகரம்-ஓய்வு
கும்பம்-வெற்றி
மீனம்-மாற்றம்
- கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மண்டல பூஜை காலத்தில் 4.07 லட்சம் பக்தர்கள் அதிகமாக வந்திருக்கிறார்கள்.
- மகரவிளக்கு பூஜைக்காக ஸ்பாட் புக்கிங் கவுண்டர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்த்தப்படுகிறது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை நவம்பர் 16-ந்தேதி தொடங்கி கடந்த 26-ந்தேதி முடிந்தது. மண்டல பூஜை காலத்தில் மொத்தம் 32 லட்சத்து 49 ஆயிரத்து 756 பக்தர்கள் சபரிமலைக்கு வந்துள்ளனர்.
கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மண்டல பூஜை காலத்தில் 4.07 லட்சம் பக்தர்கள் அதிகமாக வந்திருக்கிறார்கள். மண்டல பூஜை முடிந்து கடந்த 26-ந்தேதி இரவு 11 மணிக்கு ஐயப்பன் கோவில் நடை சாத்தப்பட்டது.
இந்த நிலையில் மகர விளக்கு பூஜைக்காக நாளை (30-ந்தேதி) கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது. சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு, கண்டரரு பிரம்மதத்தன் ஆகியோர் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நாளை மாலை 5 மணிக்கு கோவில் நடையை திறக்கிறார்.
அதன்பிறகு பதினெட்டாம்படி அருகே உள்ள ஆழியில் தீ மூட்டப்படுகிறது. அதனைத்தொடர்ந்து பக்தர்கள் பதினெட்டாம் படி ஏற அனுமதிக்கப்படுவார்கள். நடப்பு சீசனுக்கான மகர விளக்கு பூஜை ஜனவரி 14-ந்தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை ஐயப்பனுக்கு திருவாபாரணங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும்.
அததைத்தொடர்ந்து மகர ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு ஜனவரி 19-ந்தேதி வரை பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்யலாம் எனவும், 18-ந்தேதி வரை நெய்யபிஷேகம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 20-ந்தேதி காலை பந்தள மன்னர் பிரதிநிதி சாமி தரிசனம் செய்ததும் கோவில் நடை சாத்தப்படுகிறது.
பக்தர்களுக்கான அனுமதி மண்டல பூஜை சீசன் காலத்தில் பின்பற்றியதை போன்றே மகரவிளக்கு பூஜை சீசன் காலத்திலும் பின்பற்றப்படுகிறது. தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.
தினசரி ஸ்பாட் புக்கிங் 10 ஆயிரம் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், அப்போதைய நிலைக்கு தகுந்தாற்போல் கூடுதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மண்டல பூஜை காலத்தில் பம்பையில் 7 ஸ்பாட் புக்கிங் கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன.
மகரவிளக்கு பூஜைக்காக ஸ்பாட் புக்கிங் கவுண்டர் களின் எண்ணிக்கை 10 ஆக உயர்த்தப்படுகிறது. மேலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிறப்பு கவுண்டர் திறக்கப்படுகிறது. பத்தினம் திட்டாவில் தேவசம்போர்டு மந்திரி வாசவன் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.






