என் மலர்tooltip icon

    வழிபாடு

    • கருடசேவை உற்சவம் விடிய, விடிய கோலாகலமாக நடந்தது.
    • 11 பெருமாள்களும் ஒன்றன்பின் ஒன்றாக முக்கிய வீதிகளை அணிவகுத்து வந்தன.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருநாங்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் 11 பெருமாள் கோவில்கள் ஒரே தொகுப்பாக அமைந்துள்ளன. இந்த கோவில்கள் 108 திவ்ய தேச தலங்களாக விளங்குகிறது.

    ஆண்டுதோறும் தை அமாவாசைக்கு மறுநாள் 11 கோவில்களில் இருந்தும் பெருமாள்கள் திருநாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் எழுந்தருளி கருடசேவை உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான கருடசேவை உற்சவம் நேற்று காலை தொடங்கி விடிய, விடிய கோலாகலமாக நடந்தது.

    இதனை யொட்டி நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் நடந்த கருடசேவையில் நாராயண பெருமாள், குடமாடு கூத்தர், செம்பொன்னரங்கர், பள்ளிகொண்ட பெருமாள், அண்ணன் பெருமாள், புருஷோத்தம்மன் பெருமாள், வரதராஜன் பெருமாள், வைகுந்தநாதன் பெருமாள், மாதவன் பெருமாள், பார்த்தசாரதி பெருமாள், கோபாலன் பெருமாள் ஆகிய 11 பெருமாள்களும் ஒன்றன்பின் ஒன்றாக முக்கிய வீதிகளை அலங்கரித்தவாறு அணிவகுத்து வந்தன.

    அப்போது கிராமமக்கள் 11 பெருமாள்களுக்கும், பட்டு அணிவித்து அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, நேற்று நண்பகல் முதல் மணிமாடக் கோவில் மண்டபத்தின் முன்பு அனைத்து பெருமாள்களும் எழுந்தருளினர்.

    முன்னதாக நாராயணப் பெருமாள் எதாஸ்தானத்தில் இருந்து எழுந்தருளி, மணிமாடக் கோவிலுக்கு வந்த பெருமாள்களை எதிர்கொண்டு அழைக்கும் 'எதிர்சேவை நிகழ்ச்சி' வெகு விமரிசையாக நடந்தது.

    அதனைத் தொடர்ந்து, மணவாள மாமுனிகள் சகிதம் திருமங்கை ஆழ்வார் ஹம்ச வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது பெருமாள்கள் குறித்த பாடல்களை பட்டாச்சாரியர்கள் மற்றும் பக்தர்களால் பாடப்பெற்று திருப்பாவை, மங்களாசாசனம் வைபவம் நடைபெற்றது.

    பின்னர், நள்ளிரவு 12 மணியளவில் தங்க கருட வாகனத்தில் வெண்பட்டு குடைகளுடன் சிறப்பு அலங்காரத்தில் நாராயணப் பெருமாள் கோவில் வாயில் முன்பு எழுந்தருளிய 11 பெருமாள்களுக்கும், ஆழ்வாருக்கும் ஒரே நேரத்தில் பாசுரங்கள் பாடி மகா தீபாராதனை நடைபெற்றது.

    இந்த தங்க கருடசேவை நிகழ்ச்சியை காண மயிலாடுதுறை மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அலை, அலையாக திரண்டு கோவிந்தா.. கோவிந்தா... கோஷம் முழங்க மனமுருகி வழிபட்டனர்.

    பக்தர்கள் வெள்ளத்தில் அணிவகுத்த 11 பெருமாள்களும் நாராயணன் பெருமாள் வீதி, வைகுந்தநாதர் வீதி, கீழ வீதி, நாராயண பெருமாள் தெற்கு வீதி ஆகிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் விடிய, விடிய திருவீதியுலா காட்சி நடைபெற்றது. இரவு முழுவரும் நடைபெற்ற நிகழ்ச்சியால் நகரமே விழாக்கோலம் பூண்டது.

    விழாவையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மயிலாடுதுறை, சிதம்பரம், சீர்காழி ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாமும், நாங்கூர் ஊராட்சி சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது.

    • மேற்குவங்காளத்தில் குழந்தைகளின் கல்வியைத் தொடங்குகிறார்கள்.
    • சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் வண்ண ஆடைகளை அணிவித்து வழிபடுவார்கள்.

    ஆடி அமாவாசைக்கு பிறகு வரும் பஞ்சமியை 'கருட பஞ்சமி' என்றும், ஆவணி மாதம் விநாயகர் சதுர்திக்கு மறுநாள் வரும் பஞ்சமியை ரிஷி பஞ்சமி' என்றும் வழிபடுவார்கள்.

    அதுபோலவே தை அமாவாசைக்கு பின் வரும் பஞ்சமி திதியை 'வசந்த பஞ்சமி' என்று போற்றும் வழக்கம் உள்ளது. இது தமிழ்நாட்டில் மிகக்குறைவு என்றாலும், வட மாநிலங்களில் இந்த வழிபாடு மிகவும் பிரசித்திப் பெற்றது.


    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சரஸ்வதியை வழிபடும் தினமாக, புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி இருக்கிறது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவின் கடைசி மூன்று நாட்களில் தான் சரஸ்வதியை போற்றி கொண்டாடுவார்கள்.

    ஆனால் வடநாட்டில் இந்த நவராத்திரி நாட்களில் துர்க்கையை விதவிதமாக அலங்கரித்து வழிபாடு செய்வார்கள். அதேநேரம் வசந்த பஞ்சமி தினத்தில் சரஸ்வதியை வழிபடும் வழக்கம் வடநாட்டில் உள்ளவர்களுக்கு இருக்கிறது.

    இந்த வசந்த பஞ்சமியானது, முன் காலத்தில் காமன் பண்டிகை' என்ற பெயரில் தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டதாக சொல்லப்படுகிறது.

    உலகத்தில் எல்லா விசித்திரமான உயிரினங்களையும் படைத்த பிரம்மனுக்கு, தன் படைப்பின் மீது பரிபூரணமான திருப்தி ஏற்படவில்லை. ஏனெனில் அப்போது உலகமானது, மிகவும் அமைதியாக, ஒலிகள் இன்றி நிசப்தமாக இருந்தது. இது பிரம்மதேவனின் மனதில் வருத்தத்தை உண்டாக்கியது.


    அப்போது அவரது கையில் இருந்த கமண்டலத்தில் இருந்து சில துளி நீர் கீழே சிந்தியது. அதில் இருந்து ஒரு பெண் சக்தி வெளிப்பட்டது. அந்த சக்தியானவள், தனது கையில் சுவடிகளையும், ஸ்படிக மாலையையும் தாங்கியிருந்தாள்.

    தன்னுடைய வலது காலை மடித்து வைத்து, இடது காலை தொங்க விட்ட நிலையில் வெண் தாமரை மீது அமர்ந்திருந்த அந்த பெண் சக்தி, தன்னுடைய மடியில் வீணை ஒன்றையும் வைத்திருந்தாள். அந்த வீணையை தன்னுடைய மென் கரங்களால் மீட்டத் தொடங்கினாள்.

    அப்போது அதில் இருந்து வெளிப்பட்ட தெய்வீக இசை, பிரம்மனின் படைப்புகள் அனைத்திற்கும் ஒசை நயத்தை வழங்கின.

    நதி, மரங்கள் அசைந்து காற்றுடன் ஓசையை உண்டாக்கின. கடல் பேரிரைச்சலுடன் அலைகளை வெளிப்படுத்தின. உயிரினங்கள் சத்தமிட்டன. இப்படி இந்த பிரபஞ்சம் முழுமையும் ஒலியை நாதமாகக் கொண்டதாக மாறியது.

    இதைக் கண்ட பிரம்மதேவன் மகிழ்ச்சி அடைந்தார். அந்த பெண் சக்தியை பலவிதமாக போற்றினார். அந்த பெண்ணை தன்னுடைய நாக்கில் இருத்திக் கொண்டார். அவளுக்கு 'சரஸ்வதி' என்று பெயரிட்டார். அந்த சரஸ்வதி தேவி தோன்றிய தினமே 'வசந்த பஞ்சமி' என்று கருதப்படுகிறது.

    இந்த நாளில் சரஸ்வதி தேவியை வழிபாடு செய்து வந்தால், ஞானத்தில் சிறந்து விளங்கலாம். வட மாநிலங்களில் ஒன்றான மேற்குவங்காளத்தில், வசந்த பஞ்சமி அன்றுதான், குழந்தைகளின் கல்வியைத் தொடங்குகிறார்கள்.

    அந்த நேரத்தில் குழந்தைகளின் முன்பாக பென்சில், பேனா, சிறிய தொழில்நுட்ப கருவிகள் என்று பலவிதமான பொருட்களை வைப்பார்கள். அதில் இருந்து குழந்தை எதை எடுக்கிறதோ, அதில் அந்த குழந்தைகளுக்கு ஆர்வமும், எதிர்காலமும் அமையும் என்பது அந்த பகுதி மக்களின் நம்பிக்கை.

    பஞ்சாப், அரியானா, ஜம்மு-காஷ்மீர், அசாம், திரிபுரா, ஒடிசா ஆகிய பகுதிகளிலும் வசந்த பஞ்சமி அன்று நடைபெறும் சரஸ்வதி வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    வசந்த பஞ்சமி தினத்தில் சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் வண்ண ஆடைகளை அணிவித்து வழிபடுவார்கள். அன்று ஒருநாள் மட்டும் மஞ்சள் நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். சரஸ்வதிக்கு மஞ்சள் நிற ஆடை, மஞ்சள் நிற மலர் மாலை அணிவிப்பார்கள்.

    பூஜையில் வைக்கப்படும் பிள்ளையாரையும் மஞ்சளில் பிடித்துதான் வைப்பார்கள். சரஸ்வதிக்கு படைக்கப்படும் லட்டு உள்ளிட்ட நைவேத்தியங்களும், மஞ்சள் நிறம் கொண்டதாகவே இருக்கும்.

    பஞ்சாப் பகுதிகளில் இந்த காலகட்டத்தில்தான் கடுகு செடியில் மஞ்சள் நிறப்பூக்கள் பரவலாக பூத்துக்குலுங்கும். அதனை அடிப்படையாகக்கொண்டே. அனைத்திலும் மஞ்சள் வண்ணம் பயன்படுத்தப்படுகிறது. இல்லங்களில் கூட அனைவரும் மஞ்சள் நிற ஆடை களையே அணிவார்கள்.

    • மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் தெப்போற்சவ உற்சவம் ஆரம்பம்.
    • இன்று சுபமுகூர்த்த தினம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு தை-18 (வெள்ளிக்கிழமை)

    பிறை: வளர்பிறை.

    திதி: துவிதியை மாலை 4.30 மணி வரை. பிறகு திருதியை.

    நட்சத்திரம்: அவிட்டம் காலை 8.07 மணி வரை. பிறகு சதயம்.

    யோகம்: சித்தயோகம்.

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சுபமுகூர்த்த தினம். மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் தெப்போற்சவ உற்சவம் ஆரம்பம். கற்பக விருட்ச சிம்ம வாகனத்தில் புறப்பாடு. திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் அன்னை வாகன வீதியுலா. திருவானைக்காவல் ஸ்ரீசிவபெருமாளுக்கு உற்சவம் ஆரம்பம். ஆப்பூதி நாயனாருக்கு குரு பூஜை. திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப்பெருமாளுக்கு தொட்டி திருமஞ்சனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சனம், ஊஞ்சல் சேவை. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் பல்லக்கில் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீவாகன வெங்கட்ராமன் சுவாமிக்கு திருமஞ்சனம். பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரன், படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம். லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்த ரிஷிஸ்வரர் கோவிலில் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வெற்றி

    ரிஷபம்-லாபம்

    மிதுனம்-ஆதரவு

    கடகம்-ஆக்கம்

    சிம்மம்-வரவு

    கன்னி-போட்டி

    துலாம்-நன்மை

    விருச்சிகம்-சுகம்

    தனுசு- வாழ்வு

    மகரம்-நட்பு

    கும்பம்-உவகை

    மீனம்- உண்மை

    • மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கோவில் முழுவதும் விழாக்கோலம் பூண்டது.
    • விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் 108 வைணவ தளங்களில் முதன்மை பெற்றதாகும். இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்று தற்போது 12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் 2023-ம் ஆண்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில் கும்பாபிஷேகம் 2-ந்தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது. இந்த நிலையில் நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்று மூலவர் சன்னிதானம் மூடப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    மேலும் கோவில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கோவில் முழுவதும் விழாக்கோலம் பூண்டது. இதனைத் தொடர்ந்து வருகிற 2-ந்தேதி கும்பாபிஷேகம் முடிவடைந்து சாமி தரிசனம் செய்ய வழக்கம் போல் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    முன்னதாக காலை புண்யாக வாசனம், வாஸ்து சாந்தி, மகா சாந்தி ஹோமம் நடைபெற்றது. பின்னர் மாலையில் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் நேரில் வந்தார். தொடர்ந்து திருப்பதி, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 75 பட்டாச்சாரியார்கள் கலந்து கொண்டு வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜை தொடங்கியது.

    தொடர்ந்து அங்குரார்ப் பணம், வேத திவ்யபிரபந்த தொடக்கம் மற்றும் பூர்ணாஹதி நடைபெற்றது. இதில் ஜி.ஆர்.கே.குழும நிறுவன இயக்குநர் ஜி.ஆர்.துரைராஜ், இயக்குனர் கோமதி துரைராஜ் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இன்று (30-ந்தேதி) அக்னி பாராயணம், நித்ய ஹோமங்கள் நடைபெற்றது. இன்று மாலை மற்றும் நாளை (31-ந் தேதி) கும்ப ஆராதனம் நடைபெறுகிறது. பிப்ரவரி (1-ந் தேதி) காலை அதிவாஸத்ரய ஹோமம், மஹா சாந்தி திருமஞ்சனம், கடம் புறப்பாடு, மாலை சயனா திவாஸம் மற்றும் பூர்ணாஹதி நடைபெறுகிறது.

    இதைத் தொடர்ந்து சிகர விழாவான கும்பாபிஷேக விழா வருகிற 2-ந்தேதி நடைபெற உள்ளது. அன்று காலை விஸ்வரூபம் தரிசனம், பிரதான ஹோமம், மகா பூர்ணாஹதி நடைபெற்று கும்ப புறப்பாடு ஊர்வலமாக சென்று கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

    இதனை தொடர்ந்து வேத, திவ்ய பிரபந்த சாற்று முறை, பிரம்ம கோஷம் நடைபெற்று பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    இரவு தங்க விசேஷ வாகனத்தில் தேவநாதசுவாமி உபய நாச்சியாருடன் வீதியுலா நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 

    • அம்மன் தங்கக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
    • அடுத்த மாதம் மயானக்கொள்ளை நடைபெற இருப்பதால் ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது.

    மேல்மலையனூர்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று இரவு தை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடை பெற்றது.

    இதை முன்னிட்டு நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு மூலஸ்தா னத்தில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், மஞ்சள், சந்தனம், விபூதி குங்குமம், இளநீர் பஞ்சாமிர்தம்,தேன், பன்னீர் உள்ளிட்ட பூஜைப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது.

    தொடர்ந்து தங்ககவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர். உற்சவ அம்மனுக்கு பலவித மலர்களை கொண்டு ராஜராஜேஸ்வரி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார். இரவு 11 மணிக்கு மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார்.

    அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ஓம் சக்தி அங்காளம்மா, ஓம் சக்தி அங்காளம்மா, என கோஷத்துடன அம்மனை வழிபட்டனர். இரவு ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதையடுத்து உற்சவர் அம்மன் கோவிலின் உட்பிரகாரத்துக்குச் சென்றார். ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம், கடலூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அடுத்த மாதம் அமாவாசை அன்று மயானக் கொள்ளை விழா நடைபெறுவதாலும் அன்று இரவு அம்மன் ஆண் பூத வாகனத்தில் வீதி உலா வருவதாலும் அன்று இரவு ஊஞ்சல் விழா நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பீஷ்மர் இறுதி வரை பிரம்மச்சரியத்தை கடைபிடித்தவர்.
    • மனதாலும், உடலாலும் மற்றொருவருக்கு செய்வது மட்டுமே தீமை, அநீதி என்றாகாது.

    குருச்சேத்திர போர்க்களத்தில் உடல் முழுவதும் அம்புகள் துளைக்கப்பட்டு, அந்த அம்புகளே படுக்கைகளாக மாறிய நிலையில் படுத்திருந்தார், பீஷ்மர். அவரது உடல் முழுவதும் வேதனையில் துடித்தது.

    பீஷ்மரின் தந்தை, நீ விரும்பும் நேரத்தில் தான் உன் உயிர் பிரியும்' என்ற வரத்தை பீஷ்மருக்கு அளித்திருந்தார். ஆனால் தற்போது அவர் உடல் அடையும் வேதகனையால், தன் உயிர் இப்போதே பிரிந்தால் என்ன என்ற எண்ணம் அவருக்கு வந்தது.


    அப்போது அங்கு வந்த வியாசரிடம், தன்னுடைய இந்த நிலைக்கு என்ன காரணம்? என்று கேட்டார். அதற்கு வியாசர். "ஒருவர் மனதாலும், உடலாலும் மற்றொருவருக்கு செய்வது மட்டுமே தீமை, அநீதி என்றாகாது.

    நம் முன்பாக ஒரு கெட்ட செயல் நடக்கும்போது, அதனை தடுக்காமல் இருப்பதும் கூட பாவம் தான். அதற்கான தண்டனையையும் அந்த நபர் அனுபவித்தே ஆக வேண்டும். அதைத்தான் இப்போது நீ அனுபவிக்கிறாய்" என்றார்.

    சிறந்த புத்திசாலியான பீஷ்மர், கவுரவ சபையில் திரவுபதிக்கு அநீதி நிகழ்ந்த போது, அதனை கண்டும் காணாமல் இருந்ததால், தனக்கு ஏற்பட்ட விளைவு இது என்பதை உடனடியாக உணர்ந்து கொண்டார். அதனால் வியாசரிடம். "இதற்கு பரிகாரம் ஒன்றும் இல்லையா?" என்று கேட்டார்.


    உடனே வியாசர், "ஒருவர், 'தான் செய்தது மகா பாவம்' என்று உணர்ந்து வருந்தும்போதே, அவரது பாவம் அகன்றுவிடும். அதேநேரம் திரவுபதி, கவுரவ சபையில் அனைவரும் முன்னிலையில் காப்பாற்றும்படி கதறும் போது, கேட்காதது போல் இருந்த உன் செவிகள், பாராததுபோல் இருந்த உன் கண்கள். இது அநீதி என்று சொல்லத் தவறிய உன் வாய், அளப்பரிய வீரம் இருந்தும் உபயோகமின்றி இருந்த உன் வலுவான தோள்கள், வாள் எடுத்து எச்சரிக்காத உன் கைகள், இருக்கையில் இருந்து எழாமல் இருந்த உன் கால்கள், நல்லது எது? கெட்டது எது? என்று சிந்திக்கத் தவறிய உன் புத்தி இருக்கும் தலை ஆகியவற்றிற்கு தண்டனை உண்டு. அந்த வேதனையைப் போக்க சூரியனின் அனுக்கிரகம் தேவை" என்றார்.


    பின்னர் எருக்கம் இலைகளைக் கொண்டுவரச் செய்து, பீஷ்மரின் கண், காது, வாய், கை,கால், தோள், தலை ஆகிய 7 அங்கங்களையும் அந்த எருக்கம் இலை வேதனை குறைந்தது. கொஞ்சம் கொஞ்சமாக மன அமைதி அடைந்த பீஷ்மர், தான் நினைத்த நொடியிலேயே தன்னுடைய உயிரைத் துறந்தார்.

    அப்படி அவர் மரணித்த தினம், ரத சப்தமிக்கு மறுதினமான 'அஷ்டமி திதி' ஆகும். எனவே அதனை 'பீஷ்மாஷ்டமி என்பார்கள்.

    பீஷ்மர் இறுதி வரை பிரம்மச்சரியத்தை கடைபிடித்தவர். எனவே பீஷ்மாஷ்டமி அன்று, புனித நீர் நிலைகளுக்குச் சென்று பீஷ்மருக்கும், தன் முன்னோர்களுக்கும் தர்ப்பணம் செய்பவர்களுக்கு எண்ணிய வாழ்க்கை அமையும், வாழ்வில் இன்பம் நிலைபெறும் என்பது ஐதீகம்.

    • தியானம், யோகாவைத் தொடங்க ரத சப்தமி சிறந்த தினமாக பார்க்கப்படுகிது.
    • 7 எருக்கம் இலைகளை தலையில் வைத்து நீராடுவது மிகவும் அவசியம்.

    அமாவாசைக்கு பிறகு வரும் 7-வது நாள் திதியை 'சப்தமி' என்பார்கள். இது சூரியன் அவதரித்த தினம் என்பதால், இதனை ரத சப்தமி' என்று போற்றுகிறார்கள்.


    காசியப முனிவருக்கு பல மனைவிகள் உண்டு. அவர்களில் ஒருவர், அதிதி. ஒரு முறை அவர் தன் கணவரான காசியபருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தார். அப்போது வாசலில் யாசகம் கேட்டு ஒரு அந்தணர் வந்து நின்றார். அப்போது அதிதி, நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால், மெதுவாக நடந்து சென்று அந்தணருக்கான உணவை எடுத்துக் கொண்டு வந்தார்.

    அப்போது யாசகம் கேட்டு வந்த அந்தணர், "உணவு எடுத்துவர இவ்வளவு தாமதமா? நீ என்னை உதாசீனப்படுத்தி விட்டாய். எனவே உன் வயிற்றில் வளரும் குழந்தை இறப்பான்" என்று சாபம் கொடுத்து விட்டுச் சென்றார்.

    பயந்து போன அதிதி, இதுபற்றி தனது கணவரிடம் தெரிவித்தார். காசியபரோ, "நீ வருந்த வேண்டாம். தேவர் உலகத்தில் இருந்து அழிவில்லாத ஒரு மகன் நமக்கு கிடைப்பான்" என்று கூறினார்.

    அதன்படியே பிரகாசமான ஒளியுடன் சூரியன், அதிதிக்கு மகனாகப் பிறந்தார். அவர் பிறந்த தினமே 'ரத சப்தமி' ஆகும். அன்றைய தினம் சூரியனை நாம் வழிபாடு செய்தால், எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.

    அன்றைய தினம் செய்யும் தர்மங்களுக்கு அதிக புண்ணியம் வந்துசேரும். அதேபோல் இந்நாளில் தொடங்கும் தொழில், சிறப்பான வளர்ச்சியைப் பெறும். கணவனை இழந்த பெண்கள், இந்த வழிபாட்டை மேற்கொண்டால் அடுத்த பிறவியில் இந்த நிலை வராது என்கிறது புராணங்கள்.

    தியானம், யோகாவைத் தொடங்க ரத சப்தமி சிறந்த தினமாக பார்க்கப்படுகிது. ரத சப்தமி அன்று சூரியனுக்கு சிவப்பு நிற ஆடை அணிவித்து, சிவப்பு நிற மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து, நெய் விளக்கேற்றி வழிபட்டால் சூரியனால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.

    சூரியனுக்கு உகந்த தானியம், கோதுமை. எனவே ரத சப்தமி அன்று சூரியனுக்கான நைவேத்தியத்தில் கோதுமையால் செய்யப்பட்ட உணவு இருப்பது பெரும் புண்ணியம் தரும்.

    ரத சப்தமி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி விட்டு, சூரியனை வணங்க வேண்டும். பின்னர் சூரியனுக்குரிய துதிகளைச் சொல்ல வேண்டும். ரத சப்தமி அன்று சூரியனுக்கு அர்க்கியம் விடுவது முக்கியத்துவம் வாய்ந்தது.


    சூரியனுக்கு உகந்த நைவேத்தியம், சர்க்கரைப் பொங்கல். அதனை சூடாக இருக்கும் போதே நைவேத்தியம் செய்துவிட வேண்டும். வழிபாட்டிற்குப் பிறகு அந்த சர்க்கரைப் பொங்கலை, மற்றவர்களுக்கு வழங்கி நாமும் சாப்பிட வேண்டும்.

    ரத சப்தமி நாளில் வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் தேர்க்கோலம் போடுங்கள். சூரியனுக்கு உகந்த பத்ரம் (இலை), எருக்கம் இலை ஆகும். ரத சப்தமி அன்று ஏழு எருக்கம் இலைகளை தலையில் வைத்து நீராடுவது மிகவும் அவசியம். இதனால் ஆரோக்கியமும் செல்வ வளமும் பெருகும்.

    நீராடும் போது ஏழு என்ற எண்ணிக்கையில் எருக்கம் இலைகளை எடுத்து அடுக்கிவைத்து, அதன் மீது அட்சதை, எள் வைக்க வேண்டும். ஆண்கள் என்றால் அதனுடன் விபூதியும், பெண்கள் என்றால் அதனுடன் மஞ்சளும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


    பின்னர் அந்த இலை அடுக்கை, தலை மீது வைத்து நீராட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாக, மின்சாரம் எப்படி உலோகக் கம்பி வழியே பாய்கிறதோ. அப்படி சூரியனின் ஏழு வகைக் கதிர்களும் அன்று மட்டும் எருக்கன் இலை வழியே இழுக்கப்பட்டு, நம் உடலில் பாய்ந்து,உடல் உபாதைகளையும், நோய்களையும் நீக்கும் என்பது ஐதீகம்.

    சூரியன், நாராயணரின் அம்சம் என்பதால், ரத சப்தமி தினம் அன்று, பெருமாள் கோவில்களில் அவர் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்குவார். சூரியன் வழிபாட்டை தினமும் கூட செய்யலாம்.

    இப்படி தினமும் அதிகாலை நீராடி சூரியனை வழிபடுவதன் மூலமாக செல்வந்தராக உயரும் வாய்ப்பு கிடைக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

    • இன்று சந்திர தரிசனம்.
    • சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு தை-17 (வியாழக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: பிரதமை இரவு 6.06 மணி வரை பிறகு துவிதியை

    நட்சத்திரம்: திருவோணம் காலை 8.59 மணி வரை பிறகு அவிட்டம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சந்திர தரிசனம். சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருநாங்கூரில் பதினொறு கருட சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, மைசூர் மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருமெய்யம் ஸ்ரீ சத்திய மூர்த்தி புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். சோழவந்தான் அருகில் உள்ள குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நன்மை

    ரிஷபம்-பாசம்

    மிதுனம்-தாமதம்

    கடகம்-நட்பு

    சிம்மம்-மகிழ்ச்சி

    கன்னி-அமைதி

    துலாம்- ஆர்வம்

    விருச்சிகம்-சுபம்

    தனுசு- உயர்வு

    மகரம்-போட்டி

    கும்பம்-பொறுமை

    மீனம்-ஆக்கம்

    • கடற்கரை பகுதிகளில் திரளானோர் குவிந்து புனித நீராடினர்.
    • பொதுமக்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் ராமநாத சுவாமி கோவில் இந்துக்களின் தீர்த்த மூர்த்தி ஸ்தலமாக விளங்கி வருகிறது. ஆடி அமாவாசை, தை அமா வாசை, மஹாளாய அமா வாசை நாட்களில் பல்லாயிரக்கான பக்தர்கள் வருகை தந்து அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.

    இந்நிலையில், இன்று தை அமாவாசையை முன்னிட்டு ராமநாதசுவாமி கோவில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு காலை 5 மணி முதல் 5.30 வரை ஸ்படிகலிங்க பூஜையும், அதனை தொடர்ந்து சாயரட்சை பூஜை வரையிலான காலபூஜைகள் நடைபெற்றது.

    காலை 11 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகள் சகிதம் புறப்பாடாகி பகல் 12.10 மணிக்கு அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளினர். அங்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து பகல் முழுவதிலும் கோவில் நடை திறந்திருந்தது. மாலை 5.30 மணிக்கு மண்டகப்படியில் தீபாரதனை நடைபெற்று இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகள் மற்றும் ஸ்ரீ ராமர் வெள்ளி ரத புறப்பாடு வீதி உலா நடைபெறு கிறது.

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ராமேசுவரத்திற்கு நள்ளிரவு முதல் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துக்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்தனர்.


    அதிகாலையில் அவர்கள் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடினர். தொடர்ந்து கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் மணற்பரப்பில் அமர்ந்து தங்களுடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    இதனைத்தொடர்ந்து, மீண்டும் அக்னி தீர்த்தக் கடலில் நீராடிவிட்டு, ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து புனித நீராடி ராமநாதசுவாமி- பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.

    தை அமாவாசையையொட்டி ஒரே நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரம் வந்துள்ளதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் எதுவும் ஏற்படாமல் இருக்க போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் உத்தரவின் பெயரில் 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 740 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் பொதுமக்கள் அதிகளவில் கானப்படும் அக்னி தீர்த்தக் கடல், கோவில் பகுதிகளை சுற்றி

    லும் சீருடை மற்றும் சீருடை இல்லாத போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    மேலும் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக ஒலிபெ ருக்கி மூலம் அறிவுறுத்தினர். அதிகளவில் வாகனங்கள் வந்ததால் 100-க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் வாகனங்களை முறைப்படுத்தி அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.

    கோவில் நிர்வாகம் சார் பில் பக்தர்கள் சிரமமின்றி நீராடவும், நெரிசல் இன்றி தரிசனம் செய்திடவும் தடுப்புகள் மூலம் வழித்தடம் அமைத்து ஏற்பாடுகள் செய்திருந்தனர். நகராட்சி நிர்வாகம் சார்பில் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.

    கன்னியாகுமரியில் தை அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை 3 மணி முதலே கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் குவிந்தனர். அவர்கள் முக்கடல் சங்கமிக்கும் சங்கிலித்துறை திரிவேணி சங்கமம் பகுதியில் கடலில் இறங்கி புனித நீராடினர். தொடர்ந்து முன்னோர்களுக்காக பலிகர்ம பூஜை மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலில் ஏராமானோர் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    அங்கு தொடங்கி நெல்லை மாவட்டம் பாபநாசம் வரையிலான 64 தீர்த்த கட்டங்கள், தாமிரபரணி பாயும் கரையோர பகுதிகள், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் தை அமாவாசை தினத்தை யொட்டி புனித நீராடி, தங்களது முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்தனர்.


    திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், அய்யாளம்மன், ஓடத்துறை, தில்லைநாயகம் படித்துறைகள், கருட மண்டபத்தில் இன்று காலை திரண்ட பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடினர்.

    பின்னர் அங்கு தனித்தனியாகவும், 100-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் அமர்ந்தும் முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், சமயபுரம் மாரியம்மன் கோவில்களுக்கு சென்று வழிபட்டனர்.

    மேலும் கரூர் மாவட்டத்தில் காவிரி கரையோர பகுதிகள், புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோவில், அறந்தாங்கியை அடுத்த கடற்கரை பகுதிகளில் திரளானோர் குவிந்து புனித நீராடினர்.

    தஞ்சை மாவட்டம் திருவையாறு, நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்கரை, சீர்காழியை அடுத்த பூம்பு கார் கடற்கரை, மயிலாடு துறை மாவட்டம் காவிரி துலாக்கட்டம் ஆகிய இடங்களில் பல்லாயிரக்கணக் கான பக்தர்கள் புனித நீராடி, தங்களது முன்னோர் கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், கருங்கல்பாளையம் காவிரி கரை யோர பகுதிகளில் அதிகாலை முதலே திரண்ட பொதுமக்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    மதுரையில் வைகை கரை யோர பகுதிகள், சோழவந் தான் அருகேயுள்ள திருவே டகத்தில் வைகை ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள் தங்களது முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தி, ஏடகநாதர் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் விருதுநகர் மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந் துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் சுவாமிகளை தரிசனம் செய்தனர்.



    • நாளை ஒரு நாள் மட்டும் ரோப்கார் சேவை நிறுத்தப்படும்.
    • அன்னதானம் வழங்க விரும்புவோர் கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று வழங்க வேண்டும்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசத்திருவிழா வருகிற பிப்ரவரி 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் 11-ந் தேதி நடைபெறுகிறது.

    திருவிழா நடைபெறுவதற்கு முன்பாகவே பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி நோக்கி பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி மாவட்ட கலெக்டர் தலைமையில் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் தடையின்றி செய்து தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு தன்னார்வலர்கள் சார்பில் ஆங்காங்கு அன்னதானம் வழங்கப்படுவது வழக்கம். இதற்கு பல்வேறு விதிமுறைகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது அதன்படி அன்னதானம் வழங்க விரும்புவோர் கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று அதன் பின்னரே வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தது.

    அதன்படி கோவில் நிர்வாகத்தில் பலர் அன்னதான அனுமதி கேட்டு மனு அளித்திருந்தனர். இதனையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்தி 110 பேருக்கு அன்னதானம் வழங்க அனுமதி அளித்துள்ளனர்.

    இந்த உரிமத்தை அவர்கள் ஓராண்டுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பனிக்கம்பட்டியைச் சேர்ந்த பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் மாட்டு வண்டியில் பழனி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    100 ஆண்டு பாரம்பரியமிக்க இந்த வழக்கத்தை அவர்கள் இந்த ஆண்டும் கடைபிடித்தனர். 20-க்கும் மேற்பட்டோர் மாட்டு வண்டிகளில் பழனி கோவிலுக்கு வந்தனர். அவர்கள் காவடிகள் எடுத்தும் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.


    இதுகுறித்து அவர்கள் கூறும் போது, கடந்த ஆண்டு மாட்டு வண்டிகளை கிரி வீதியில் நிறுத்த அனுமதி இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அனுமதி அளிக்கப்படவில்லை.

    இதன் காரணமாக தனியார் வாகனம் நிறுத்தும் இடத்தில் ரூ.400 கட்டணத்துக்கு மாட்டு வண்டிகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வாகன வசதி இல்லாத காலத்தில் இருந்து எங்கள் முன்னோர்கள் மாட்டு வண்டியில் பழனி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். அதேபோல் நாங்களும் இந்த பயணத்தை மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.

    மேலும் பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் விரைவாகவும், சிரமம் இன்றியும் மலைக்கோவிலுக்கு செல்லவும், பின்னர் அங்கிருந்து அடிவாரம் வந்தடையவும் ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சேவையில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மாதத்துக்கு ஒரு நாளும், வருடத்துக்கு 1 மாதமும் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படுவது வழக்கம்.

    தற்போது தைப்பூச திருவிழா நெருங்க உள்ள நிலையில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நாளை (30-ந் தேதி) ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணிகளுக்காக ரோப்கார் சேவை நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பக்தர்கள் மின் இழுவை ரெயில், படிப்பாதை, யானைப்பாதை வழிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    • முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
    • ஆற்றின் கரையில் பொதுமக்கள் புனித நீராடினர்.

    ஒகேனக்கல்:

    தை அமாவாசையை யொட்டி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

    ஆடி அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் முன்னோர்களை நினைத்து செய்யும் பூஜை, வழிபாடு, தர்ப்பணம், அன்னதானம் போன்ற வற்றை ஏற்றுக் கொள்வதற்காக அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக ஐதீகம்.

    மகாளய அமாவாசை நாட்களில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு வந்து காவிரி ஆற்றில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களை நினைத்து திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

    இதைத்தொடர்ந்து தை மகாளய அமாவாசையான இன்று ஒகேனக்கல் முதலைப்பண்ணை பகுதியில் காவிரி ஆற்றின் கரையில் பொதுமக்கள் புனித நீராடினர்.

    பின்னர் அவர்கள் வாழை இலை, பச்சரிசி, தேங்காய் பழம், காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை வைத்து பூஜைகள் செய்து முன்னோர்களை நினைத்து வழிபடுவது வழக்கம். பின்னர் அந்த பொருட்களை காவிரி ஆற்றில் விட்டனர்

    திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பதற்காக தருமபுரி மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் இன்று ஏரளமான பொதுமக்கள் குவிந்தனர்.

    இதன் காரணமாக ஒகேனக்கல்லில் ஏராளமான போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதுபோன்று இன்று தை அமாவாசையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மஞ்சமேடு தென்பாணை ஆற்றங்கரையில் காசி ராமேஸ்வரத்திற்கு அடுத்து புகழ்பெற்ற புண்ணியஸ்தலமாக ஸ்ரீ மாதேஸ்வரன் கோவில் முன்பு ஒட்டியவாறு செல்லும் தென்பெண்ணை ஆற்றங்கரையில் பொதுமக்கள் இறந்த தங்களின் முன்னோர்களுக்கு வாழை இலையில் பச்சரிசி காய்கறி அகத்திக்கீரை, வெற்றிலை, பாக்கு வாழைப்பழம் வைத்து திதி கொடுத்து தர்ப்பணம் செய்து, முன்னோர்களை வழிபட்டனர். 

    • ஆண்டுதோறும் தை மாதம் 10 நாட்கள் நடைபெறும்.
    • 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    திருப்பரங்குன்றம்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படைவீடாகத் திகழும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் பல்வேறு விழாக்களில் தெப்பத்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    ஆண்டுதோறும் தை மாதம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா இன்று காலை நூற்றுக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக அதிகாலையில் உற்சவர் சன்னதியில் வீற்றிருக்கும் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் கம்பத்தடி மண்டபத்தில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினார்.

    அங்கு தங்க முலாம் பூசப்பட்ட கொடிக்கம்பத்தில் தெப்ப திருவிழாவிற்கான கொடியேற்றம் மேளதாளங்கள் முழங்க நடைபெற்றது.

    இதையொட்டி கொடிக்கம்பத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தர்ப்பை புல், மா இலை, சந்தனம், குங்குமம் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது.

    விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில் வாகனம், அன்ன வாகனம், பூத வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களிலும் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    வருகிற பிப்ரவரி 6-ந்தேதி தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெறும். அதனைத்தொடர்ந்து 16 கால் மண்டபம் அருகே உள்ள சிறிய சட்டத்தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி ரத வீதிகள் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 7-ந்தேதி காலையில் ஜி.எஸ்.டி. சாலையில் அமைந்துள்ள தெப்பத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருக்கும் மிதவை தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளுவார். பின்னர் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்பத்தை மூன்று முறை சுற்றி வந்து அருள்பாலிப்பார்.

    ×