என் மலர்
வழிபாடு
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
- மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு கார்த்திகை-5 (புதன்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: பஞ்சமி இரவு 9.41 மணி வரை பிறகு சஷ்டி
நட்சத்திரம்: புனர்பூசம் இரவு 7.54 மணி வரை பிறகு பூசம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சுபமுகூர்த்த தினம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை. விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதர் அபிஷேகம், ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் சிறப்பு அபிஷேகம். திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்க வாசகர் அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் திருப்புளியங்குடி மூலவர் ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மன் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆர்வம்
ரிஷபம்-நட்பு
மிதுனம்-கீர்த்தி
கடகம்-உறுதி
சிம்மம்-சாகசம்
கன்னி-திடம்
துலாம்- அமைதி
விருச்சிகம்-ஜெயம்
தனுசு- அன்பு
மகரம்-பெருமை
கும்பம்-உதவி
மீனம்-உண்மை
- திருமலையில் மாற்றுமத பிரசாரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- திருப்பதி மலையில் பக்தர்கள், தலைவர்கள் அரசியல் பேச்சு பேசக்கூடாது.
திருப்பதி:
திருப்பதி தேவஸ்தானத்தின் முதல் அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு கூறியதாவது:-
திருப்பதி கோவிலில் நேரடி இலவச தரிசனம் செய்ய 20 முதல் 30 மணி நேரம் வரை ஆகிறது. செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்ப உதவியுடன் 2 முதல் 3 மணி நேரத்திற்குள் தரிசனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக நாங்கள் ஒரு சிறப்பு ஆலோசனையை ஏற்பாடு செய்வோம்.
திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் மாற்று மதத்தினரை விடுவிப்போம். அவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிப்பது பற்றி விவாதிப்போம்.
அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், நகராட்சி அல்லது பிற துறைகளுக்கு மாற்ற பரிந்துரை செய்வோம். திருமலையில் மாற்றுமத பிரசாரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
திருப்பதி மலையில் பக்தர்கள், தலைவர்கள் அரசியல் பேச்சு பேசக்கூடாது. விதிகளை மீறுவோர் மீது வழக்கு பதிவு செய்யப்படும். அன்னப்பிரசாதத்தின் தரத்தை மேம்படுத்துவோம்.
லட்டு பிரசாதத்திற்கு தரமான நெய் கொள்முதல் செய்ய நிபுணர்கள் கொண்ட குழுவை அமைப்போம்.
பல மாநிலங்களுக்கு சுற்றுலாத் துறையால் தினசரி ஒதுக்கப்பட்ட 4,000 தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீட்டை நாங்கள் ரத்து செய்துள்ளோம்.
இந்த டிக்கெட்டுகளை சிலர் முறைகேடாக பயன்படுத்தியது விஜிலென்ஸ் விசாரணையில் தெரியவந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 62,085 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 21,335 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோவில் உண்டியலில் ரூ.3.78 கோடி காணிக்கை வசூல் ஆனது. சுமார் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- 800 ஆண்டுகள் பழமையான ஆலயமாக கருதப்படுகிறது.
- மணக்கரையில் வீற்றிருக்கும் இறைவன் என்பதால் மணக்கரைநாதர் என்று அழைக்கின்றனர்.
கோவில் முகப்புத் தோற்றம்
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகே உள்ள மணக்கரைநாதர் கோவில், சுமார் 800 ஆண்டுகள் பழமையான ஆலயமாக கருதப்படுகிறது.

திருமணத் தடை, நவக்கிரக தோஷம் உள்ளவர்கள், இங்குள்ள அனுமனுக்கு வடைமாலை, வெண்ணெய் சாத்தி வழிபாடு செய்து பயனடைந்து வருகின்றனர்.
தென்பாண்டி சீமையை ஆண்டு வந்தான், உக்கிர வழுதி பாண்டியன். அவன் காலத்தில் தாமிரபரணி ஆறு பெருக்கெடுத்து ஓடியது.
ஒரு முறை தாமிரபரணி ஆற்று நீர், கரைகளை கடந்து ஊருக்குள் நுழைந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்களும், படைவீரர்களும் மன்னனிடம் முறையிட்டனர். மன்னனும் தன் வீரர்களுடன் தாமிரபரணி கரையில் முகாமிட்டான்.
படை வீரர்களையும், பொதுமக்களையும் திரட்டி வந்து, தாமிரபரணியின் கரையை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டான்.
ஆனால் அவனது முயற்சி பலன் அளிக்கவில்லை. இதனால் நிம்மதியின்றி அலைந்து திரிந்து கொண்டிருந்தான். அவன் மனமோ இறைவன் மீது நாட்டம் கொண்டது.
ஒரு நாள் மன்னன், தாமிரபரணி கரை ஓரத்தில் லிங்க ரூபத்தில் இறைவனை கண்டான். அந்த லிங்கத்தின் முன்பு மண்டியிட்டான். "தாமிரபரணிக்கு தடைபோட என்னால் இயலவில்லை. ஆனால் இறைவா உன்னால் முடியும்" என லிங்கநாதரை தீர்க்கமாக பற்றிக்கொண்டான்.
பல நாள் அங்கேயே தங்கினான். தினமும் தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து, லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வழிபட்டான்.
ஒரு நாள் இறைவன் அசரீரியாக பேசினார். "உக்கிரவழுதி! உன் பக்தியை மெச்சுகிறேன். மக்களுக்காக நீ படும் வேதனை என்னை ஈர்த்து விட்டது. தாமிரபரணிக்கு கரை அமைக்கும் முயற்சியை, மீண்டும் ஒரு முறை என்னை நம்பி செய். எம் அருளால் உனது முயற்சி வெற்றியாகும்" என்று அருளினார்.
மன்னன் அகமகிழ்ந்து, இறைவனை வணங்கி, தன் படை வீரர்களைத் திரட்டி, தாமிரபரணி நதி நீர் ஊருக்குள் நுழையாதபடி கரை அமைக்கும் பணியில் மீண்டும் ஈடுபட்டான்.
ஊர் முழுக்க தண்டோரா போட்டான். இறைவன் உத்தரவு கிடைத்து விட்டது. இனி என்ன? என ஊர் மக்கள் உற்சாகமாக திரண்டனர்.
இறைவனும் ஒரு குதிரை வீரனாக மக்களோடு மக்களாக தோன்றினார். பலவகையான படை வீரர்களை உருவாக்கினார். மன்னர் படையோடு சிவபெருமான் படையும் தாமிரபரணி கரையில் திரண்டனர்.
நதிக்கரையில் மணலால் கரை அமைத்தனர். மிக வேகமாக வேலை நடைபெறுகிறது. மன்னனுக்கு சந்தோஷம். 'நம் மக்களிடம் இவ்வளவு திறமையா?' என எண்ணி மன்னன் வியந்தான்.
வேலைகள் முடிந்ததும், லிங்கத்தின் முன்னால் வந்த மன்னன் இறைவனுக்கு நன்றி கூறி நின்றான். அப்போது குதிரை வீரனாக இருந்த சிவபெருமான், லிங்கத்துக்குள் சென்று மறைந்தார். அவருடன் வந்த சேனைகளும் மறைந்தன.
"இதுவரை நமக்கு உதவி செய்தது சிவபெருமானும், அவரின் சேனைகளுமா?" என சிவபெருமானின் அருளை எண்ணி மகிழ்ந்தான் மன்னன்.
இறைவன் உறைந்த லிங்க ரூபத்துக்கு, ஆகம விதிப்படி கோவில் அமைத்தான். அவருக்கு 'சொக்கநாதர்' என பெயர் வைத்தான். தொடர்ந்து பூஜைகள் செய்து வழிபட்டான். மக்களும் தவறாமல் வெள்ளத்தில் இருந்து தங்களை காப்பாற்ற தங்களுக்காக மண் சுமந்த சிவபெருமானை வணங்கி நின்றனர்.

மன்னனின் வேண்டுகோளை ஏற்று, சிவனே மணலால் கரை அமைத்ததால் இத்தலம் 'மணல்கரை' எனப்பெயர் பெற்றது. பின் 'மணக்கரை'யாக மருவியது. மணக்கரையில் வீற்றிருக்கும் இறைவன் என்பதால் இவரை 'மணக்கரைநாதர்' என்றும் அழைக்கின்றனர்.
உக்கிரவழுதி மன்னனால் கட்டப்பட்டு, பிற்காலத்தில் கொங்குராயர் என்ற மன்னரால் விரிவுபடுத்தப்பட்டது. திருமணத் தடை, நவக்கிரக தோஷம் உள்ளவர்கள், இங்குள்ள அனுமனுக்கு வடைமாலை, வெண்ணெய் சாத்தி வழிபாடு செய்து பயனடைந்து வருகின்றனர்.
புதிதாக வீடு கட்டுபவர்கள் சிவபெருமானால் அமைக்கப்பட்ட மணல் கரையில் உள்ள ஆற்று மணலை சிறிது எடுத்துக்கொண்டு போய், தங்களின் புதிய கட்டிடத்துக்குப் பயன்படுத்துகிறார்கள்.
மணக்கரைநாதர், மீனாட்சி உடனாய சொக்கநாதராக வீற்றிருக்கிறார். இவரை மூன்று வாரங்கள் தொடர்ச்சியாக வந்து வழிபாடு செய்தால், திருமண பாக்கியம் கிடைக்கும். திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.
மணவாழ்வில் பிரச்சினை இருந்தால் அதுவும் சரியாகும். பிரிந்த தம்பதிகள் ஒன்றுசேரவும் வாய்ப்பு உருவாகும் என்கிறார்கள். மணக்கரையில் இருக்கும் மற்றொரு ஆலயமான மலைபார்வதி அம்மன் கோவில் மிகவும் விசேஷமானது.
அமைவிடம்
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தாலூகாவில் உள்ள மணக்கரைக்கு, திருநெல்வேலி- தூத்துக்குடி சாலையில் உள்ள வல்லநாட்டில் இருந்தும், திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் உள்ள கருங்குளத்தில் இருந்தும் ஆட்டோ மற்றும் பஸ் வசதி உண்டு.
- கங்கையில் ஏராளமான முதலைகள் வசித்து வந்தன.
- கங்கை கரையைச் சுற்றிலும் நிறைய இடங்கள் நகரங்களாக வளர்ந்து விட்டது.
கங்கை நீரை குறைந்தது ஒரு வருடம் அல்லது இரண்டு வருட காலம் வைத்திருந்தால் கூட கெட்டுப் போகாது என்பார்கள். 'தற்போது நாம் காணும் கங்கையின் நீர் மிக அசுத்தமாக உள்ளதே' என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் எழலாம்.

கங்கை கரையில் மணிகர்னிகா காட், அரிச்சந்திரா காட் போன்ற இடங்களில் பிணங்களை எரித்து, அந்த சாம்பலை அப்படியே கங்கையில் விடுவார்கள்.
மேலும் சன்னியாசிகள், அகோரிகள் போன்ற சில குறிப்பிட்டவர்களின் உடலை எரிக்காமல் அப்படியே கங்கையில் விட்டுவிடுவார்கள். இதெல்லாம் கங்கை அசுத்தமாவதற்கு காரணமா? என கேட்டால், நிச்சயமாக இல்லை எனச் சொல்லலாம்.
ஏனெனில் இந்த பழக்கங்கள் எல்லாம் பல்லாயிரம் வருடங்களாக வழக்கத்தில் இருக்கிறது. அப்போதெல்லாம் கங்கை எந்த நிலையிலும் அசுத்தம் ஆகவில்லை. தற்பொழுது சுமார் 50, 60 வருடங்களாக ஏன் இந்த நிலை என சிந்தித்தால், கங்கை கரையைச் சுற்றிலும் நிறைய இடங்கள் நகரங்களாக வளர்ந்து விட்டது.

கழிவுநீர் அனைத்தையும் கங்கை நீரில் விட ஆரம்பித்துவிட்டனர். ஆலைகளில் இருந்து வரக்கூடிய கழிவுநீரையும் சுத்திகரிக்காமல் அப்படியே கங்கை நீரில் கலக்கவிடுகின்றனர். இதுபோன்ற காரணங்கள்தான், கங்கையின் இப்போதைய அசுத்த நிலைக்கு காரணம்.
இதற்கு முன் கங்கையில் விடப்பட்ட பிணங்கள், சாம்பல் போன்றவை எப்படி அசுத்தம் ஆகாமல் இருந்தது என்றால், கங்கையில் ஏராளமான முதலைகள் வசித்து வந்தன. சாதாரண முதலைகளுக்கும், கங்கை நீர் முதலைகளுக்கும் உருவத்தில் நிறைய வித்தியாசம் உண்டு.

இந்த கங்கை நீர் முதலைகள், நதியில் விடப்படும் பிணங்களையும் மற்ற அசுத்தங்களையும் உண்டு வாழ்ந்தது. ஆலைகளின் ரசாயனம் கலந்த நீர் கங்கையில் கலந்ததால் தற்பொழுது இந்த முதலை இனம் கிட்டத்தட்ட முழுவதுமாக அழிந்துவிட்டது.
- 21-ந்தேதி சஷ்டி விரதம்.
- 23-ந்தேதி மகாதேவாஷ்டமி.
19-ந்தேதி (செவ்வாய்)
* சங்கடஹர சதுர்த்தி,
* சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.
* திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* மேல்நோக்கு நாள்.
20-ந்தேதி (புதன்)
* முகூர்த்த நாள்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.
* பத்ராசலம் ராமபிரான் புறப்பாடு.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
21-ந்தேதி (வியாழன்)
* முகூர்த்த நாள்.
* சஷ்டி விரதம்.
* சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* மேல்நோக்கு நாள்.
22-ந்தேதி (வெள்ளி)
* ராமேஸ்வரம் பர்வத வர்த்தினி அம்மன் நவ சக்தி மண்டபம் எழுந் தருளி தங்கப் பல்லக்கில் பவனி.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.
* திருத்தணி முருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை.
* கீழ்நோக்கு நாள்.
23-ந்தேதி (சனி)
* மகாதேவாஷ்டமி.
* திருவள்ளூர் வீரராகவ பெருமாள், மதுரை கூடலழகர் பெருமாள். திருவரங்கம் நம்பெருமான் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்
* அகோபிலமடம் திருமத் 31-வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திர வைபவம்.
* கீழ்நோக்கு நாள்.
24-ந்தேதி (ஞாயிறு)
* கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் அனுமனுக்கு திருமஞ்சனம்.
* திருவில்லிபுத்தூர், திருமயம் தலங்களில் ஆண்டாள் புறப்பாடு.
* திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
25-ந்தேதி (திங்கள்)
* திருநெல்வேலி நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* மேல்நோக்கு நாள்
- இன்று சங்கடஹர சதுர்த்தி.
- சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு கார்த்திகை-4 (செவ்வாய்க்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சதுர்த்தி இரவு 10 மணி வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம்: திருவாதிரை இரவு 7.15 மணி வரை பிறகு புனர்பூசம்
யோகம்: மரண, சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று சங்கடஹர சதுர்த்தி. பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர், திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார், திருவலஞ்சுழி ஸ்ரீ சுவேத விநாயகர், திருச்சி உச்சிப் பிள்ளையார், ஸ்ரீ மாணிக்க விநாயகர், மதுரை ஸ்ரீ முக்குறுணி பிள்ளையார், உப்பூர் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகப் பெருமான் கோவில்களில் கணபதி ஹோமம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் சிறப்பு அபிஷேகம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகப் பெருமாள் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-புத்துணர்ச்சி
ரிஷபம்-ஆரோக்கியம்
மிதுனம்-சுகம்
கடகம்-ஆதாயம்
சிம்மம்-நன்மை
கன்னி-செலவு
துலாம்- உழைப்பு
விருச்சிகம்-அமைதி
தனுசு- புகழ்
மகரம்-நலம்
கும்பம்-உற்சாகம்
மீனம்-நட்பு
- பக்தர்கள் இருமுடி கட்டி வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
- கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி கடந்த 15-ந் தேதி நடை திறக்கப்பட்டது. இதையடுத்து தினமும் ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இதற்கிடையே சபரிமலையில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சபரிமலை சீசனையொட்டி இந்த ஆண்டு ஆன்லைன் தரிசன முன்பதிவு முறையில் செய்யப்பட்ட நவீன மாற்றங்கள் காரணமாக பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். ஒரு மணி நேரத்திற்கு 4,800 பக்தர்களுக்கு குறையாமல் தரிசனம் செய்கிறார்கள். 18-ம் படியில் பணியமர்த்தப்பட்டுள்ள போலீசார் 15 நிமிடத்திற்கு ஒருமுறை மாற்றப்படுகிறார்கள். அதாவது 15 நிமிடங்களுக்கு பின் ஓய்வு அளிக்கப்படுகிறது. இதனால் 18-ம் படியில் அதிக அளவில் பக்தர்கள் ஏற்றி விடப்படுகிறார்கள்.
சிரமமின்றி தரிசனம் செய்ய பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு வலியநடை பந்தலில் தனிவழி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் தரிசனம் முடிந்து மலை இறங்கும் பக்தர்களின் சிரமங்களை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சபரிமலையில் கடந்த ஆண்டு வரை தனியார் நிறுவனத்திடம் இருந்து களபாபிஷேகத்திற்கான சந்தனம் வாங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு சந்தனத்தை அரைக்க 3 அரவை எந்திரங்களை பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கி உள்ளார். அந்த எந்திரங்கள் மூலம் தற்போது சந்தனம் அரைக்கப்பட்டு களபாபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த சந்தனம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
சபரிமலையில் ஏற்கனவே 40 லட்சம் டின் அரவணை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர தற்போது தினமும் 1 லட்சம் டின் அரவணை தயாரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருவெண்காடு, திருக்கழுகுன்றம், திருவாடானை, திருக்கடவூர் கோவில்களில் 1008 சங்காபிஷேகம்.
- சிவன் கோவில்களில் காலை சோமவார அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு கார்த்திகை-3 (திங்கட்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: திருதியை இரவு 10.49 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம்: மிருகசீரிஷம் இரவு 7.56 மணி வரை பிறகு திருவாதிரை
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருவெண்காடு, திருக்கழுகுன்றம், திருவாடானை, திருக்கடவூர் கோவில்களில் 1008 சங்காபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்தியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம். திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர், திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி கோவில்களில் காலை சோமவார அபிஷேகம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருமஞ்சனம். கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ண நாதர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நன்மை
ரிஷபம்-நற்பலன்
மிதுனம்-வெற்றி
கடகம்-மகிழ்ச்சி
சிம்மம்-உழைப்பு
கன்னி-வரவு
துலாம்- உறுதி
விருச்சிகம்-உண்மை
தனுசு- வியப்பு
மகரம்-பெருமை
கும்பம்-ஆக்கம்
மீனம்-பயணம்
- முதன் முதலில் பரசுராமரே சாஸ்தா கோவிலை எழுப்பினார்.
- சபரிமலையில் மகர சங்கராந்தி தரிசனம் சிறப்பு.
1. சபரிமலையில் முதன் முதலில் பரசுராமரே சாஸ்தா கோவிலை எழுப்பினார். அப்போது தர்மசாஸ்தாவின் விக்ரகத்தை அவர் அங்கே பிரதிஷ்டை செய்தார்.
2. அவதார நோக்கமான மகிஷி சம்ஹாரம் முடிந்ததும், சின் முத்திரைக்காட்டி யோக பட்டம் தரித்து தவக்கோலத்தில் அமர்ந்த ஐயப்பன், தவத்தின் நிறைவாக, பரசுராமர் அமைத்த தர்மசாஸ்தா விக்ரகத்தில் ஐக்கியமானார். அதன் பிறகே சின்முத்திரை காட்டி யோக பட்டம் தரித்து, அமர்ந்த நிலையில் உள்ள ஐயப்பனின் வடிவம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

3. ஆதிகாலத்தில் பரசுராமர் பிரதிஷ்டை செய்த சாஸ்தாவின் வடிவிற்கு ஆண்டுக்கு ஒரு முறை மகர சங்கராந்தி, அன்று மட்டுமே வழிபாடுகள் நடத்தப்பட்டன. ஐயப்பன் வடிவம் அமைந்த பிறகே மாத பூஜைகள், மண்டல பூஜைகள் மகரவிளக்கு பூஜைகள் தொடங்கப்பட்டன. அதனால்தான் இன்று சபரி மலையில் மகர சங்கராந்தி தரிசனம் சிறப்பாகச் சொல்லப்படுகிறது.
4. ஐயப்பன் என்றதும் சின்முத்திரை காட்டி, யோகபட்டம் தரித்து அமர்ந்திருக்கும் வடிவமே பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் அவர் நான்கு விதமான ஆசனங்களில் அமர்ந்து, நான்கு வகையான முத்திரைகளைக் காட்டுபவர் என்கிறது பூதநாததோ பாக்யானம், தியானபிந்து ஆசனத்தில் அபய சின்முத்திரை தரித்தும், கிருக நாரீயபீட ஆசனத்தில் யோகப் பிராண முத்திரையுடனும், குதபாத சிரேஷ்டாசனத்தில் அபான பந்த முத்திரையோடும் அஷ்டகோண சாஸ்தா பீடத்தில் யோக பத்ராசனத்திலும் வீற்றிருந்து அருள்கிறார் ஐயப்பன்.
5. ஹரிஹர புத்ரனாகிய மணிகண்டனுக்கு ஐயப்பன் என்ற பெயர் வந்ததன் காரணமாக ஒரு வரலாறு கூறப்படுகிறது. பந்தளராஜன் மகனாக வளர்ந்த மணிகண்டன், அவதார நோக்கம் முடித்து, பந்தளராஜனை விட்டுப் பிரிய வேண்டிய நேரம் வந்தது.
அந்த சமயத்தில் கலங்கி நின்ற தனது வளர்ப்புத் தந்தையிடம் நான் இனி வனத்தில் வாசம் செய்வேன். என்னை காண வேண்டும் என நீங்கள் நினைத்தால், கல்லும் முள்ளும் நிறைந்த காட்டு வழியே வர வேண்டும். வழி தெரியாமல் நீங்கள் திணறாமல் இருக்க கருடன் உங்களுக்கு வழிகாட்டுவான் என்று சொல்லி விடை பெற்றுச் சென்றார்.
தன் மைந்தன் மணிகண்டனைப் பார்க்க சென்ற போதெல்லாம் பந்தளராஜன் காடு, மலைக்களைக் கடக்க மிகவும் சிரமப்பட்டார். அப்போது ஐயனே, அப்பனே என்றெல்லாம் அவர் சொன்ன வார்த்தைகளே இணைந்து ஐயன், அப்பன் ஐயப்பன் என்றாகி விட்டதாகச் சொல்லப்படுகிறது.

வழிநடை சரணங்கள்
சுவாமியே ஐயப்போ- ஐயப்போ சுவாமியே
பகவானே பகவதியே- பகவதியே பகவானே
தேவனே தேவியே- தேவியே தேவனே
வில்லாளி வீரனே- வீரமணிகண்டனே
வீரமணிகண்டனே- வில்லாளி வீரனே
பகவான் சரணம்- பகவதி சரணம்
பகவதி சரணம்- பகவான் சரணம்
தேவன் சரணம்- தேவி சரணம்
தேவி சரணம்- தேவன் சரணம்
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு- சபரிமலைக்கு பள்ளிக்கட்டு
பாத பலம்தா- தேக பலம்தா
தேக பலம்தா- பாத பலம்தா
கல்லும் முள்ளும்- காலுக்கு மெத்தை
காலுக்கு மெத்தை - கல்லும் முள்ளும்
குண்டும் குழியும் - கண்ணுக்கு வெளிச்சம்
கண்ணுக்கு வெளிச்சம்- குண்டும் குழியும்
தாங்கி விடப்பா- ஏந்தி விடப்பா
ஏந்தி விடப்பா- தாங்கி விடப்பா
தூக்கி விடப்பா- ஏற்றம் கடினம்
ஏற்றம் கடினம்- தூக்கி விடப்பா
சாமி பாதம் ஐயன் பாதம்- ஐயன் பாதம் சாமி பாதம்
யாரைக்காண- சாமியை காண
சாமியை கண்டால்- மோட்சம் கிட்டும்
கற்பூர ஜோதி- சுவாமிக்கே
நெய் அபிஷேகம்- சுவாமிக்கே
பன்னீர் அபிஷேகம்- சுவாமிக்கே
முத்திரைத் தேங்காய்- சுவாமிக்கே
காணிப்பொன்னும் சாமிக்கே- வெற்றிலை அடக்கம் சாமிக்கே
கதலிப்பழம் சாமிக்கே- விபூதி அபிஷேகம் சாமிக்கே
கட்டுக்கட்டு- இருமுடிக்கட்டு
யாரோட கட்டு- சாமியோட கட்டு
சாமிமாரே- ஐயப்பமாரே
ஐயப்பமாரே- சாமிமாரே
பம்பா வாசா- பந்தள ராஜா
பந்தள ராஜா- பம்பா வாசா
சாமி அப்பா ஐயப்பா- சரணம் அப்பா ஐயப்பா
வாரோம் அப்பா ஐயப்பா- வந்தோம் அப்பா ஐயப்பா
பந்தள ராஜா ஐயப்பா- பம்பா வாசா ஐயப்பா
கரிமலை வாசா ஐயப்பா- கலியுக வரதா ஐயப்பா
- எல்லா விரதங்களிலும், பிரம்மச்சாரிய விரதம் முக்கியமான தாகும்.
- போதையூட்டும் பொருட்கள், புகைப்பிடித்தல் முதலியவற்றை தவிர்க்க வேண்டும்.
1. ஐயப்ப பக்தர்கள் இயன்றவரை கார்த்திகைத் திங்கள் முதல் நாள் மாலை அணிந்து கொள்வது சாலச்சிறந்தது. அன்று நாள், கிழமை பார்க்க வேண்டியதில்லை. அதற்குப் பின் மாலை அணிபவர்கள் கார்த்திகை 19 தேதிக்குள் ஏதாவதொரு நல்ல நாளில் மாலை அணியலாம். எப்படியும் சன்னி தானத்திற்கு செல்லும் தினத்திற்கு முன்னதாக குறைந்தது ஒரு மண்டலம் (41 நாட்கள்) விரதம் இருக்கும்படி பார்த்து அதற்குள் மாலை அணிந்து கொள்ளவேண்டும்.

2. துளசிமணி அல்லது உருத்திராட்சமாலை 108 அல்லது 54 மணிகள் உள்ளதாகப் பார்த்து வாங்கி அத்துடன் ஐயப்பன் திருவுருவப்பதக்கம் ஒன்றையும் இணைத்து அணிய வேண்டும். அத்துடன் துணை மாலை ஒன்றும் அணிந்து கொள்வது நல்லது.
3. பலமுறை விரதமிருந்து சபரிமலை சென்று வந்து பக்குவமடைந்த பழமலை ஐயப்பன்மார் ஒருவரைக் குருவாக ஏற்று திருவிளக்கு முன்பாகவோ, திருக்கோவில்களிலோ குருநாதரை வணங்கி அவர் திருக்கரங்களால் மாலை அணிந்து கொள்ள வேண்டும், அல்லது தாய், தந்தையர் மூலமாகவோ, இறைவன் திருவடிகளில் வைத்து எடுக்கப்பெற்ற மாலையினையோ அணிந்து கொள்ளலாம். மாலை அணிந்து கொண்டவுடன், குருநாதருக்குத் தங்களால் இயன்ற தட்சிணையைக் கொடுத்து அடி வணங்கி ஆசிபெற வேண்டும்.
ஐயப்பனாக மாலை தரித்த நிமிடத்தில் இருந்து குருசாமியை முழுமனதுடன் ஏற்று அவர்தம் மொழிகளை தேவ வாக்காக மதித்து மனக்கட்டுப்பாட்டுடன் பணிந்து நடந்துக்கொண்டு பயணத்தை இனிதாக்க ஒத்துழைக்க வேண்டியது அவசியம்.
4. நீலம், கருப்பு, காவி, பச்சை, மஞ்சள் இவற்றுள் ஏதாவது ஒரு நிறத்தில் உடைகள் அணிய வேண்டும். தங்கள் கடமைகளை ஆற்றுகின்ற சமயங்களில் இயலாவிட்டாலும் பஜனைகளில் கலந்து கொள்ளும்போதும், யாத்திரையின்போது முழுவதும் கண்டிப்பாக வர்ண உடை அணிய வேண்டியது அவசியம்.
5. மலைக்குச் செல்ல கருதி, மாலை அணிய விரும்பும் பக்தரை, தாய், தந்தை, மனைவி, மக்கள் முதலியோர் தடுத்தல் கூடாது. எவ்வித அச்சமுமில்லாமல் தர்மசாஸ்தாவிடம் முழு பொறுப்பினையும் வைத்து, முகமலர்ச்சியுடன் அனுப்பி வைக்க வேண்டும்.
6. மேற்கொள்ள வேண்டிய விரதங்களில் மிகவும் ஒழுங்குடன் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டியது பிரம்மச்சாரிய விரதமாகும். மனம், வாக்கு, செயல் என்ற மூவகைகளிலும் காம இச்சையை அறவே நீக்கவேண்டும்.
7. காலை, மாலை இருவேளைகளிலும் குளிர்ந்த நீரில் தவறாமல் நீராடி ஐயப்பன் திருவுருவப் படத்தை வைத்து வணங்குதல் வேண்டும். தினமும் ஆலய வழிபாடும், பஜனைகளில் கலந்து கொண்டு வாய்விட்டுக்கூவி சரணம் விளித்து ஐயப்பன் புகழ்பாடி மகிழ்தலும் பேரின்பம் பயக்கும்.

8. படுக்கை, தலையணைகளை நீக்கி, தன் சிறு துண்டை மட்டும் தரையில் விரித்து படுக்கவேண்டும். பகல் நேரத்தில் தூங்குவதைத் தவிர்க்கவேண்டும்.
9. களவு, சூதாடுதல், பொய், திரைப்படங்கள், விளையாட்டு, வேடிக்கைகள், உல்லாசப்பயணங்கள், போதையூட்டும் பொருட்கள், புகைப்பிடித்தல் முதலியவற்றை தவிர்க்க வேண்டும்.
10. எண்ணெய் தேய்த்து குளிப்பது, சவரம் செய்து கொள்வது, காலணிகள், குடை உபயோகிப்பது முதலியவற்றைக் தவிர்க்கவேண்டும்.
11. மற்றவர்களிடம் பேசும் பொழுது, 'சாமி சரணம்' எனத் தொடங்கி, பின் விடை பெறும்பொழுதும் 'சாமிசரணம்' எனச் சொல்ல வேண்டும்.
12. விரத காலத்தில் அசைவ உணவு அருந்துவது மாபெரும் தவறாகும். எனவே இயன்றவரை வீட்டிலேயே தூய்மையாகத் தயாரித்து சைவ உணவே உண்ண வேண்டும். மாலை தரித்த ஐயப்பன்மார் வீட்டைத் தவிர மற்றவர்கள் வீட்டில் எக்காரணத்தினாலும் உணவு அருந்தக்கூடாது.
13. பக்தர்கள் மாலை தரித்த பிறகு சந்திக்கின்ற ஆண்களை ஐயப்பா என்றும், பெண்களை மாளிகைப்புறம் என்றும், சிறுவர்களை மணிகண்டன், சிறுமிகளை கொச்சி என்றும் குறிப்பிட்டு அழைக்கவேண்டும்.
14. சபரிமலை செல்லும் பக்தர்கள் புதிதாக பயணம் வர விரும்புகிறவர்களிடம் 'நான் பத்திரமாக கூட்டிக் கொண்டு போய் வருகிறேன். என்னோடு தைரியமாக வரலாம்' என்று சொல்லக்கூடாது.
பயணம் புறப்படும் பொழுது 'போய் வருகிறேன்' என்று யாரிடமும் சொல்லிக் கொள்ளக்கூடாது. எல்லாப் பொறுப்பினையும் ஐயப்பனிடம் ஒப்படைத்து அவன் திருவடிகளே சரணம் என்ற பக்தி உணர்வுடன் சரணம் விளித்துப் புறப்பட வேண்டும்.
15. மாலையணிந்த ஐயப்பமார்கள் தங்களது கடமைக்கு இடையூறு இல்லாமல் சுறு சுறுப்புடன் தங்கள் பணிகளைச் செவ்வனே செய்யவேண்டும்.
16. மாலை அணிந்தது முதல் பக்தர்கள் நாள்தோறும் 108 சரணங்கள் சொல்லி காலை, மாலை வழிபட்டு, துளசி, கற்கண்டு, நாட்டு சர்க்கரை, பால் இவற்றுள் ஏதாவது ஒன்றை சிறிதளவு வைத்து நைவேத்தியம் செய்து வணங்கவேண்டும்.

17. யாத்திரை புறப்படுவதற்கு சில நாட்கள் முன்னதாக கன்னி பூஜை நடத்த வேண்டும். எல்லா ஐயப்ப பக்தர்களும் தங்கள் வீட்டிலோ அல்லது குருசாமி மற்றும் ஐயப்பன் பக்தர்கள் வீட்டிலோ, பொது இடங்களிலோ சற்று விரிவான முறையில் கூட்டு வழிபாடு (பஜனை) நடத்தி எல்லோருக்கும் பிரசாதம் வழங்கி அருள் பெறுவது சாலச் சிறந்தது. ஐயப்பமார் ஒருவருக்காவது அன்னமிடுதல் மிக்க அருள் பாலிக்கும்.
18. மரணம் போன்ற துக்க காரியங்கள் எதிலும் ஐயப்ப மார்களும் அவர்கள் குடும்பத்தினரும் கலந்துக் கொள்ளக் கூடாது. தவிர்க்க முடியாத நெருங்கிய உறவில், மரணம் நேரிட்டு கலந்து கொள்ள வேண்டிய திருந்தால் தான் அணிந்த மாலையைக் கழற்றி ஐயப்பன் படத்தில் மாட்டிய பிறகு தான் கலந்துகொள்ள வேண்டும். மாலையைக் கழற்ற நேர்ந்தால் மீண்டும் உடனே அணிந்து கொண்டு யாத்திரை செல்ல முற்படக்கூடாது. ஐயப்பன் திருவருளை வேண்டி மறுவருடம் சென்று வரவேண்டும்.
19. எல்லா விரதங்களிலும், பிரம்மச்சாரிய விரதம் முக்கியமான தாகும். எனவே எந்த பெண்களைக் கண்டாலும் தாயென்றே கருத வேண்டும். மாதவிலக்கான பெண்களை காணக்கூடாது. தவறுதலாகக் காண நேர்ந்தால் உடனே நீராடி ஐயப்பனை வழிபட வேண்டும். பெண்கள் ருதுமங்கள சடங்கு விழாவிற்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ சென்று கலந்து கொள்ளக் கூடாது.

20. இருமுடிக்கட்டு பூஜையை தன் வீட்டிலோ, இயன்ற தட்சிணை கொடுத்து, குருவின் கரங்களால் இருமுடியைத் தலையில் ஏற்று, வீதிக்கு வந்ததும் வாசற்படியில் விடலைத் தேங்காய் உடைத்து ஐயப்பன் சரண கோஷத்துடன் பின்னால் திரும்பிப் பார்க்காமல் ஒரே நோக்கத்துடன் பயணம் தொடர வேண்டும். யாரிடமும் போய் வருகிறேன் என்று சொல்லக் கூடாது.
22. கன்னி ஐயப்பமார்கள் யாத்திரை புறப்பட்ட நேரத்தில் இருந்து ஐயப்பன் சன்னிதானம் செல்லும் வரை அவர்களாக இருமுடியை தலையில் இருந்து இறக்கி வைக்கவோ, ஏற்றிக் கொள்ளவோ கூடாது. குருநாதர் அல்லது மற்ற பழமலை ஐயப்பன்மாரைக் கொண்டு ஏற்றவோ, இறக்கவோ வேண்டும்.
23. 12 வயதுக்கு கீழ்பட்ட சிறுமிகளும் ருதுகாலம் நின்ற வயதான பெண்களும் மட்டுமே சபரி யாத்திரையில் கலந்து கொள்ளலாம்.
24. யாத்திரை வழியில் அடர்ந்த வனங்களில் காட்டு யானை, புலி, கரடி முதலான விலங்குகள் இருக்கும். எனவே பக்தர்கள் கூட்டமாக சரணம் சொல்லிக்கொண்டே செல்ல வேண்டும். இரவு நேரங்களில் காட்டிற்குள் மலஜலத்திற்காக தனியே அதிக தூரம் செல்லக்கூடாது. சரணம் விளித்தல், சங்கு ஒலித்தல், வெடி வைத்தல் பாதுகாப்புக்கு சிறந்த வழிகளாகும்.

25. பம்பை நதியில் நீராடும்பொழுது மறைந்த நம் முன்னோர்களுக்கு ஈமக்கடன்கள் செய்து முன்னோர்களின் ஆத்மா சாந்தி பெற வழிவகுக்க வேண்டும்.
26. பம்பையில் சக்தி பூஜையின்போது ஐயப்பமார்கள் சமைக்கும் அடுப்பில் இருந்து சிறிதளவு சாம்பல் சேகரித்து சன்னதி ஆழியில் இருந்து எடுக்கப்பெற்ற சாம்பலை அத்துடன் கலந்து தயாரிக்கப்பெறுவதுதான் சபரிமலை பஸ்பம், இது மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.
27. இருமுடியில் ஐயப்பனுக்காகக் கொண்டு செல்லும் நெய்த்தேங்காயை சன்னிதானத்தில் உடைத்து, அபிஷேகம் செய்து பெற்றுக்கொள்ள வேண்டும். யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும் இந்த நெய்யையும், விபூதி பிரசாதங்களையும் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்.
28. ஐயப்பனுக்கு காணிக்கையாக சுற்றத்தார்களும், மற்றவர்களும் கொடுத்தனுப்பும் காணிக்கையை சன்னிதானத்தில் செலுத்தி, அவர்களுக்கு ஐயப்பன் திருவருள் கிடைக்க வேண்டிக்கொள்ள வேண்டும்.
29. குருசாமிக்கு தட்சணை கொடுக்க வேண்டிய சமயங்களில் எல்லாம் ஐயப்பமார்கள் தாங்கள் விரும்பிய வசதிக்கேற்றவாறு கொடுத்து குருவின் அருளைப் பெறலாம். இதில் எந்தவித நிபந்தனையும் கிடையாது. ஐயப்பமார்கள் கொடுக்கும் காணிக்கை எவ்வளவாக இருந்தாலும் அதை மன மகிழ்வுடன் பெரும்பொருளாக ஏற்று குருவின் குருவான ஐயப்பனுக்கே செலுத்தி பேரருள் பெற்றுய்வது குருமார்களுக்குச் சாலச் சிறந்ததாகும்.
30. ஐயப்பன்மார்கள் எல்லோரும், குறிப்பாக கன்னி ஐயப்பன் மார்கள் பெரிய பாதையில் (அழுதை வழி) சென்று வருவது மிகுந்த பயன் விளைவிக்கும். ஆனால் சிலர் தங்கள் தொழில், கடமை சூழ்நிலை கருதி எரிமேலியில் இருந்து சாலைக்காயம் வழியாகவும், சிலர் வண்டிப்பெரியாறு வழியாகவும் சபரிமலை செய்கிறார்கள்.
என்றாலும் பெரிய பாதையில் செல்லும் பொழுது மலைகளில் விளையும் பல மூலிகைகளின் சக்தி கலந்த காற்றினை பெறுவதாலும், பல மூலிகைகளை கலந்த ஆற்று நீரில் குளிப்பதால் உடல்நலம் ஏற்படுவதாலும் எழில்மிக்க இயற்கைக்காட்சிகளைக் கண்டுகளிப்பதால் உள்ளம் பூரிப்பதாலும், பேரின்பமும் பெருநலமும் அடைகிறோம். நீண்டவழிப்பயணத்தில் ஐயப்பன் சரணமொழி அதிகம் சொல்வதால் பகவானின் திருநாம உச்சரிப்பு மிகுந்து பக்தி உணர்ச்சி வளர்கிறது.
31. யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும் ஐயப்பனின் திருவருள் பிரசாதக் கட்டினை தலையில் ஏந்தியபடி, வாயிற்படியில் விடலைத் தேங்காய் அடித்து வீட்டிற்குள் நுழைய வேண்டும். வழிபாட்டு அறையில் கற்பூர ஆர்த்தியோடு கட்டினை அவிழ்த்து பூஜை செய்து பிரசாதங்களை எல்லோருக்கும் வழங்க வேண்டும்.
32. யாத்திரை இனிது நிறைவேறியதும் குருநாதர் மூலம் மாலையைக் கழற்றி ஐயப்பன் திருவுருவப்படத்திற்கு அணிவித்து விட்டு விரதம் பூர்த்தி செய்து கொள்ளவேண்டும்.
- திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம்.
- சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன அலங்கார சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு கார்த்திகை-2 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: துவிதியை நள்ளிரவு 12.04 மணி வரை பிறகு திருதியை
நட்சத்திரம்: ரோகிணி இரவு 8.33 மணி வரை பிறகு மிருகசீர்ஷம்
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன அலங்கார சேவை. மன்னார்குடி, ஸ்ரீ ராஜகோபால சுவாமி புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உயர்வு
ரிஷபம்-உழைப்பு
மிதுனம்-உண்மை
கடகம்-அன்பு
சிம்மம்-ஆதரவு
கன்னி-ஆக்கம்
துலாம்- நன்மை
விருச்சிகம்-நிறைவு
தனுசு- புகழ்
மகரம்-இன்பம்
கும்பம்-பயணம்
மீனம்-பணிவு
- மாலை அணிபவர்கள் குறைந்தது ஒரு மண்டலம் அல்லது 41 நாட்கள் விரதம் மேற்கொள்வார்கள்.
- மகர ஜோதி தரிசனம் செல்பவர்கள் 60 நாட்கள் விரதம் இருப்பார்கள்.
பக்தி மணம் வீசும் மகத்துவம் வாய்ந்த கார்த்திகை மாதம் இன்று பிறந்தது. அதுவும், பெருமாளுக்கு உகந்த நாளான சனிக்கிழமையில் கார்த்திகை பிறந்ததால் கூடுதல் சிறப்பை பெற்றுள்ளது. இனி 60 நாட்கள் தமிழகத்தில் 'சாமியே சரணம் ஐயப்பா' என்ற சரண கோஷம் ஒலிக்க உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை 1-ந்தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் மண்டல பூஜை, மகர விளக்கு தரிசனத்துக்காக மாலை அணிந்து செல்கிறார்கள். மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து சென்று வருகின்றனர்.
அந்த வகையில் தமிழகத்தில் பெரும்பாலான பக்தர்கள் இன்று முதல் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டுள்ளர். தங்களின் இஷ்ட தெய்வங்களை வணங்கி அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று குருசாமி, கோவில் குருக்கள் முன்னிலையில் பயபக்தியுடன் சரண கோஷம் முழங்க மாலைகளை அணிந்து கொண்டனர்.
மாலை அணிபவர்கள் குறைந்தது ஒரு மண்டலம் அல்லது 41 நாட்கள் விரதம் மேற்கொள்வார்கள். மகர ஜோதி தரிசனம் செல்பவர்கள் 60 நாட்கள் விரதம் இருப்பார்கள். முதல் முறையாக சபரிமலைக்கு செல்பவர்கள் கன்னி சாமியாக கருதப்படுவார்கள். கார்த்திகை முதல் நாளான இன்று ஏராளமானவர்கள் முதல் முறையாக மாலை அணிந்தனர்.
மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்காக அண்ணாநகர் ஐயப்பன் கோவிலில் அதிகாலை 4 மணிக்கும், கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவிலில் அதிகாலை 4.30 மணிக்கும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
பக்தர்கள் எந்தவிதமான சிரமமும் இன்றி, மாலை அணிந்து செல்வதற்கு ஐயப்பன் கோவில்களில் தனி வரிசைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அம்பத்தூர், மாதவரம், மூலக்கடை உள்பட பல்வேறு இடங்களில் உள்ள ஐயப்பன் கோவில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
அதனைத்தொடர்ந்து கோவில்களில் விஷேச பூஜைகள் நடத்தப்படுகிறது. தொடர்ந்து கார்த்திகை மாதம் முழுவதும் பஜனைகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, விரதத்துக்கான பூஜை பொருட்கள் விற்பனை சென்னையில் நேற்று களைகட்டியது. துளசி, சந்தன, மணி மாலைகளை ஐயப்ப பக்தர்கள் வாங்கி சென்றனர். தேங்காய், பழம், சந்தனம், குங்குமம் மற்றும் இருமுடிக்கான பை விற்பனையும் அமோகமாக இருந்தது.
ஐயப்பன் உருவம் பொறித்த டாலர்கள், சிவப்பு, மஞ்சள், பச்சை, கருப்பு, நீலம், காவி போன்ற வண்ண வேட்டிகளின் விற்பனையும் களைகட்டியது. சென்னை மயிலாப்பூர், புரசைவாக்கம், தியாகராயநகர், வண்ணாரப்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கடை வீதிகளில் ஏராளமானவர்கள் பூஜைக்குரிய பொருட்களை வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது.






