என் மலர்
வழிபாடு
- தைப்பூசத் திருவிழா பிப்ரவரி 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
- ரூ.46 லட்சத்தில் புதிய தேர் சீரமைக்கப்பட்டுள்ளது.
பழனி:
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்டவை வெகு விமர்சையாக நடைபெறும். இதில் பங்குனி உத்திர தேரோட்டம் கிரி வீதிகளிலும், தைப்பூசத் தேரோட்டம் ரத வீதிகளிலும் நடைபெறும்.
இந்த வருடத்துக்கான தைப்பூசத் திருவிழா வருகிற பிப்ரவரி 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் வருகை தருவார்கள்.
தற்போது தைப்பூசத் திருவிழா தொடங்குவதற்கு முன்பாகவே தினத்தோறும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து வந்த வண்ணம் உள்ளனர். தைப்பூச தேரோட்டம் நடைபெறும் போது முத்துக்குமார சாமி, வள்ளி தெய்வானை பெரிய தேரிலும், விநாயகர், சண்டிகேஸ்வரர் சிறிய தேரிலும் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த தேர்கள் பெரியநாயகி அம்மன் கோவில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தேரோட்டத்துக்கு பயன்படும் தேர் பல வருடங்களுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது என்பதால் சேதமடைந்து இருந்தது. எனவே அதனை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்ததின் பேரில் ரூ.46 லட்சத்தில் புதிய தேர் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.
அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் இன்று (27-ந் தேதி) வெள்ளோட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. புதிய தேரில் விநாயகர், முருகன், சிவன், பார்வதி உள்ளிட்ட தெய்வ உருவங்கள் வடிவமைக்கப்பட்டு இருந்தது. பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் இன்று சிறப்பு பூஜைகளுக்கு பிறகு வெள்ளோட்டம் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலெக்டர் பூங்கொடி, அமைச்சர் அர.சக்கரபாணி, சச்சிதானந்தம் எம்.பி., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், சார் ஆட்சியர் கிஷன் குமார், கோவில் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதிய தேர் ரத வீதிகளில் உலா வந்த போது ஏராளமான பக்தர்கள் அதனை கண்டு பரவசமடைந்தனர்.
வருகிற தைப்பூசத் தேரோட்டத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்ட இந்த தேர் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஒவ்வொரு ஆண்டும் 3 முக்கிய அமாவாசைகள் வருகின்றன.
- தர்ப்பணம்- படையல் கொடுக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.
தை அமாவாசை இந்த ஆண்டு ஜனவரி மாதமே வருகிறது. ஜனவரி 29-ந் தேதி, புதன் கிழமை அன்று தை அமாவாசை திதி வருகிறது.
திதி தொடங்கும் நேரம்: ஜனவரி 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 8.09.
திதி முடியும் நேரம்: ஜனவரி 29-ந் தேதி (புதன்கிழமை) இரவு 7.21 மணி.
ஜனவரி மாதம் 29- ந் தேதி அன்று காலை சூரியன் உதயமாகும் நேரத்தில் அமாவாசை திதி இருக்கிறது மற்றும் இரவு வரை நீடிக்கிறது என்பதால், ஜனவரி 29 அன்று தை அமாவாசைக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தை அமாவாசை அன்று புண்ணிய நதிகளில் அல்லது நீர் நிலைகளில் நீராடி, பிண்டங்கள் வைத்து முன்னோர்களுக்கு திதி கொடுத்து ஆசிகளை பெறலாம்.
ஒவ்வொரு ஆண்டும் 3 முக்கிய அமாவாசைகள் வருகின்றன. தை அமாவாசை, ஆடி அமாவாசை , மகாளய அமாவாசை . இந்த 3 அமாவாசை நாட்களில் நம் முன்னோருக்கு தர்ப்பணம்- படையல் கொடுக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.
இதில் தை அமாவாசை மிகவும் விசேஷமானது. இந்த நாள் நாம் முன்னோர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு திதி கொடுத்து வணங்க வேண்டிய முக்கிய நாளாகும்.
ஆடி அமாவாசை அன்று மூதாதையர்களை வரவேற்கும் நாம் தை அமாவாசை அன்று விடை கொடுத்து அனுப்புகிறோம். இந்த நாட்களில் தீர்த்த தலங்களுக்கு சென்று எள், தண்ணீர் இறைத்து அவர்களது தாகத்தை தீர்க்க வேண்டும்.

இப்படி செய்தால் அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி அவர்களுக்கு முக்தி பேறு கிடைக்கும் என்பது ஜதீகம். நமது முன்னோர்கள் காகத்தின் வடிவில் வீட்டு பக்கம் வருவதாக சொல்லப்படுகிறது. அதனால் அன்றைய தினம் காகத்துக்கு உணவு அளிப்பது மிகவும் முக்கியமாகும்.
இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்களின் குடும்பம் அமைதி பெற்று மென்மேலும் சிறந்து விளங்கும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டு உள்ளது.
- நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு தோறும் பத்ரதீபமும் நடைபெறுகிறது.
- லட்ச தீபத்தால் ஆலயம் முழுவதும் ஒளிவெள்ளத்தால் ஜொலிக்கும்.
அமாவாசை அன்று தாமிரபரணி பாயும் பாபநாசம் முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் கலக்கும் புன்னக்காயல் பகுதி வரை பல்வேறு இடங்களில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் குடும்பத்தில் உயிர் நீத்த முன்னோர்களை நினைத்து நீர் நிலைகளில் நீராடி, தண்ணீர் இறைத்து, வேத மந்திரங்கள் முழங்க வழிபாடு நடத்துவார்கள்.

குறிப்பாக பாபநாசம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, நெல்லை மாநகரின் பகுதிகளான குறுக்குத்துறை, வண்ணார்பேட்டை, சீவலப்பேரி, தூத்துக்குடி மாவட்டத்தின் ஏரல், முறப்பநாடு, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகாலையிலேயே பொதுமக்கள் திரண்டு தங்கள் முன்னோர்களை நினைத்து வழிபாடு நடத்துவார்கள்.
தாமிபரணி, காசி நதிக்கு ஒப்பாக கருதப்படுவதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்திருந்து தாமிரபரணியில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வர்.
இதேபோல் தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் புனித நீராடி அருவிக்கரை பகுதியில் வரிசையாக அமர்ந்திருந்து அர்ச்சகர்கள் முன்னிலையில் எள்ளையும், தண்ணீரையும் ஆற்றில் விட்டு தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.
சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவிலின் நாகசுனை தெப்பக்குளத்தில் தர்ப்பணம் செய்வார்கள். தை அமாசாசையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், ஏரல் சோ்மன் அருணாச்சல சுவாமி கோவிலில் தை அமாவாசை திருவிழா 12 நாள்கள் நடைபெறும்.

நிறைவு நாளான 12-ம் திருநாள் அன்று தீா்த்தவாரி, பொருநை நதியில் திருத்துறையில் நீராடல் செய்தால் சகல நோய் தீரும் என்பது ஐதீகம். அதனைத் தொடர்ந்து அன்னதானமும், ஆலிலை சயன அலங்காரமும், அதன் பின்னா் ஊஞ்சல் சேவையும் நடைபெறும்.
தை அமாவாசை தினத்தன்று நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு தோறும் பத்ரதீபமும் நடைபெறுகிறது. இதில் பத்தாயிரம் விளக்குகள் ஏற்றப்படும். 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை தை அமாவாசையன்று, லட்சதீபமும் ஏற்றப்படுகிறது.

பத்ரதீபம் மற்றும் லட்சதீப திருவிழாக்களின்போது மணி மண்டபத்தில் தங்கவிளக்கு, 2 வெள்ளி விளக்குகள் மற்றும் அவற்றைச் சுற்றி 8 தீபங்களை வைத்து பூஜை நடைபெறுகிறது.
நெல்லையப்பர் கோவிலில் தை அமாவாசை அன்று மாலை 6 மணி முதல் 9 வரை பக்தர்களால் ஏற்றப்படும் இந்த லட்ச தீபத்தால் ஆலயம் முழுவதும் ஒளிவெள்ளத்தால் ஜொலிக்கும்.

பித்ருகர்மா என்னும் நீத்தார் கடன்களை சரிவர நிறைவேற்றாதவர்கள் நெல்லையப்பர் கோவிலில் தை அமாவாசை தினத்தன்று நடைபெறும் பத்ரதீபம் அல்லது லட்சதீப விழாவின்போது தீபமேற்றினால் குடும்ப சாபங்கள் விலகும் என்பது ஐதீகம்.
- முக்கடலும் சங்கமிக்கும் இடம் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது.
- கன்னியாகுமரி, காசிக்கு நிகரான புண்ணிய தலமாக விளங்குகிறது.
ஆடி, மகாளய மற்றும் தை அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு சிறப்பு வாய்ந்த இடங்களில் ஒன்றாக கன்னியாகுமரி விளங்குகிறது.

நாட்டின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி, காசிக்கு நிகரான புண்ணிய தலமாக விளங்குகிறது. இதனால் மறைந்த நமது முன்னோர்களுக்கு கன்னியாகுமரியில் தர்ப்பணம் கொடுப்பது சாலச் சிறந்தது என்று பலரும் கருதுகின்றனர்.
அதற்கு காரணம் இங்கு முக்கடல்கள் சங்கமிப்பது தான். இந்திய பெருங்கடல், வங்கக்கடல், அரபிக்கடல் ஆகிய 3 கடல்களும் இங்கு தான் சங்கமிக்கிறது. முக்கடலும் சங்கமிக்கும் இடம் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது.
இங்கு மற்ற அமாவாசை நாட்களை விட தை, ஆடி மற்றும் புரட்டாசி அமாவாசையின் போது ஆயிரக்கணக்கானோர் வருவார்கள். இவர்கள் முக்கடல்கள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.
கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் கோவில் கொடைவிழா, கும்பாபிஷேகம், வருஷாபிசேகம் போன்றவற்றுக்கு இங்கிருந்து புனிதநீர் எடுத்துச் செல்வது வழக்கமான நிகழ்வாக இருக்கிறது.
அத்தகைய புனிதம் நிறைந்த கன்னியாகுமரியில் தை அமாவாசை, ஆடி அமாவாசை நாட்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் வருவார்கள். இதற்காக அவர்கள் முந்தைய நாளிலேயே கன்னியாகுமரிக்கு வந்து விடுவார்கள்.

பின்பு தை அமாவாசை தினத்தில் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவார்கள். மேலும் பலிகர்ம பூஜை நடத்துவார்கள்.
அமாவாசை நாளில் இங்கு தர்ப்பணம் கொடுக்க வருபவர்கள், கடலில் நீராடிவிட்டு, ஈரத் துணியுடன் கடற்கரையில் உள்ள 16 கால் மண்டபத்தை சுற்றி இருக்கும் வேத விற்பன்னர்கள் மூலம் பலிகர்ம பூஜையில் ஈடுபடுவார்கள்.

வாழை இலையில் பச்சரிசி, எள், உதிரிப்பூக்கள், தர்ப்பப் புல் மற்றும் மாவு பிண்டம் கொண்டு தர்ப்பணம் கொடுப்பார்கள். பின்னர் இலையுடன் சேர்த்து அவற்றை எடுத்துக் கொண்டு கடலில் சென்று பின்னோக்கி போட்டுவிட்டு கடலில் குளித்து கரையேறுவார்கள்.
கன்னியாகுமரியில் அதிகாலை 3 மணிக்கு தொடங்கும் தை அமாவாசை தர்ப்பண வழிபாடுகள் மதியம் வரை நடந்தபடி இருக்கும்.
- இன்று பிரதோஷம், மாத சிவராத்திரி.
- ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு தை-14 (திங்கட்கிழமை)
பிறை: தேய்பிறை.
திதி: திரயோதசி இரவு 8.29 மணி வரை. பிறகு சதுர்த்தசி.
நட்சத்திரம்: மூலம் காலை 8.55 மணி வரை. பிறகு பூராடம்.
யோகம்: அமிர்த, சித்தயோகம்.
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று பிரதோஷம், மாத சிவராத்திரி. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். மதுரை ஸ்ரீசெல்லத்தம்மன் இரவு பட்டாபிஷேகம், புஷ்ப சப்பரத்தில் வீதியுலா. ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். சூரியனார்கோவில் ஸ்ரீசிவபெருமான் பவனி. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீமகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீகற்பகாம்பாள் சமேத ஸ்ரீகபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீதிரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீமருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் மாலை சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி. திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் காலையில் சேஷ வாகனத்திலும், இரவு சந்திர பிரபையிலும் புறப்பாடு. திருச்சேறை ஸ்ரீசாரநாதர் திருமஞ்சனம். கோவில்பட்டி ஸ்ரீபூவண்ணநாதர் புறப்பாடு. திருநெல்வேலி நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-தெளிவு
ரிஷபம்-அசதி
மிதுனம்-களிப்பு
கடகம்-பரிவு
சிம்மம்-பாசம்
கன்னி-உண்மை
துலாம்- நன்மை
விருச்சிகம்-லாபம்
தனுசு- வரவு
மகரம்-இயல்பு
கும்பம்-பக்தி
மீனம்- பணிவு
- பாவ, புண்ணியங்கள் நம் வாழ்வை தீர்மானிக்கும் சக்திகளுள் ஒன்று.
- பாதிப்புகளில் இருந்து தற்காத்து கொள்ள ஸ்ரீதேவி பாகவதம் உதவுகிறது.
நமது முன்னோர்கள் எத்தகைய பாவ, புண்ணியம் செய்தார்கள் என்பது நமக்கு தெரியாது. ஆனால் அந்த பாவ, புண்ணியங்களும் நம் வாழ்வை தீர்மானிக்கும் சக்திகளுள் ஒன்றாகத்திகழ்கின்றன. ஒரு வேளை நம் முன்னோர்கள் படுபாதக செயல்கள் செய்திருந்தால், அது மறைமுகமாக நம்மை வெகுவாகத் தாக்க கூடும்.

இத்தகைய பாதிப்புகளில் இருந்து நம்மை நாம் தற்காத்து கொள்ள ஸ்ரீதேவி பாகவதம் உதவுகிறது. ஸ்ரீதேவி பாகவதத்தை சிரவணம் செய்தால் நம் முன்னோர்கள் செய்த பாவங்களும், அதனால் ஏற்பட்ட தோஷங்களும் விலகி விடும். இதன் பின்னணியில் ஒரு கதை உள்ளது. அந்த கதை வருமாறு:-
திருதராஷ்டிரரின் மகன்களான 100 கவுரவர்களுக்கும் பாண்டு மன்னனின் மகன்களான பஞ்ச பாண்டவர்களுக்கும் இடையே போர் ஏற்பட்டது. அந்த போரில் பஞ்சபாண்டவர்கள் பக்கம் நின்ற கிருஷ்ணபகவான் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்து பாண்டவர்களின் வெற்றிக்கு கை கொடுத்தார்.
பாண்டவர்களின் வெற்றியை அசுவத்தாமனால் பொறுக்க இயலவில்லை. அவர்கள் மீது அபாண்ட அஸ்திரத்தை பிரயோகித்தான். அதனால் இரு குலத்தாருக்கும் ஒரே சந்ததியாக இருந்த உபபாண்டவர் கருகி ஓர் பிண்டமாக கீழே விழுந்து விட்டார்.
அப்பிண்டத்தை இறைவன் ஸ்ரீகிருஷ்ணன் எழுப்பி பரிஷத் எனும் அரசனாக மாற்றினான். அவன் தன் கர்வத்தினால் தியான நிஷ்டையில் இருந்த ஓர் முனிவரின் கழுத்தில் செத்த பாம்பை போட்டான்.
முனிவர் அவனுக்கு பாம்பு தீண்டி இறப்பாய் என சாபமிட்டார்.
இதனால் பயந்து போன பரிஷத் மன்னன் கங்கை நதியின் நடுவில் அரண்மனை கட்டி, பாதுகாப்புடன் இருந்தான். ஆனால் விதி யாரை விட்டது, எலுமிச்சை பழத்தில் ஒரு புழு உருவில் வந்து பாம்பாக மாறி பரிஷத் மகாராஜாவை கொன்றது.
இதனால் பரிஷத் மகாராஜாவின் ஒரே மகன் ஜனமோஜயன் கோபம் கொண்டு வெகுண்டெழுந்து சர்ப்ப யாகம் செய்யத் தொடங்கினான். ஆனால் யாகம் பாதியில் நின்று விட்டது. 'என் தாத்தாவின் தந்தை யுதிஷ்டிரர் தொடங்கிய யாகம் பாதியில் சிசுபாலனின் இறப்பால் நின்று விட்டது. இப்போது நான் செய்யும் சர்ப்பயாகமும் பாதியில் நின்று விட்டது.
என் தந்தையோ மோட்சத்திற்கு இடமின்றி தவிக்கின்றார். என் குடும்பத்து பாவ தோஷங்களை எப்படி நீக்குவது, என் தந்தையின் ஆத்மாவை எப்படி கரையேற்றுவது? என்று தவித்தான்.
அப்போது ஸ்ரீதேவி பாகவதத்தின் மகிமையை குரு மூலம் அறிந்தான். உடனே ஜனமேஜயன் தேவிபாகவத கதையை சிரவணம் செய்தான். இதனால் அவனது முன்னோர்களின் பாவங்கள் நீங்கியது.
சிரவணம் முடித்த பிறகு ஸ்ரீதேவி யக்ஞத்தினை முடித்தாள். உடனே 'ஜனமேஜயா, உன் வம்சத்து பாவங்கள் நீங்கி விட்டன' என்று அசரீரி குரல் எழும்பியது.
எனவே நம் குடும்பத்தில் எத்தகைய பாவ காரியங்கள் அறிந்தோ, அறியாமலோ நம் முன்னோர்கள் செய்திருந்தாலும் ஸ்ரீதேவி பாகவதம் அவற்றைப் போக்கி விடும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
- தை அமாவாசை என்பது சூரியனின் முக்கிய நாள்.
- நீத்தார் கடன் செய்வது என்பது மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரின் கடமை.
ஆடி அமாவாசையன்று மூதாதையர்களை வரவேற்கவேண்டும் எனவும், புரட்டாசி மகாளய அமாவாசையில் அவர்களை பூஜிக்கவேண்டும் என்றும், தை அமாவாசை அன்று மூதாதையர்களுக்கு விடை கொடுத்து அனுப்ப வேண்டும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
தை அமாவாசை என்பது சூரியனின் முக்கிய நாள். சூரியன் தை மாதத்தில் மகர ராசியில் சஞ்சரிக்கின்றார். சனியின் வீடான மகரத்தில் அவரது தந்தையான சூரியன் பிரவேசிக்கின்றார்.
சூரியனை பிதுர்காரகன் என்றும் சந்திரனை மாதுர்காரகன் என்றும் முன்னோர்கள் கூறுகின்றனர். சூரியனும், சந்திரனும் சனியின் வீட்டில் சஞ்சரிப்பதால் தை அமாவாசை சிறப்புக்கு உரியதாகிறது. இதை புண்ணிய காலம் என்பார்கள்.

உத்தராயண புண்ணிய காலமான தை அமாவாசை அன்று பித்ருக்கள் தங்களின் உலகத்துக்கு புறப்படுகிறார்கள். நம் வீடுகளுக்கு வந்து தங்கி இருந்து கிளம்பும் உறவினர்களை எப்படி நாம் நல்ல முறையில் வழி அனுப்பி வைப்போமோ, அப்படி பித்ருக்களுக்கு தை அமாவாசை நாளில் தர்ப்பணம் முதலிய வழிபாடுகளை செய்து அனுப்பி வைக்க வேண்டும்.
அவ்வாறு செய்தால் அவர்களின் ஆசீர்வாதம் நமக்கு பூரணமாகக் கிடைக்கும். தை அமாவாசை அன்று அவர்கள் மீண்டும் தங்களின் உலகத்துக்குப் புறப்படுவதாகக் கூறப்படுகிறது.\

நாம் இன்று அனுபவிக்கும் நற்பலன்களுக்கு காரணம் நம் முன்னோர்கள் சேர்த்து வைத்துள்ள புண்ணியம்தான். அதை நம் பிள்ளைகளும் பெற்று பயனடைய அதை தொடர வேண்டும்.
பெற்றோர்கள் செய்யும் நற்செயல்கள் பிள்ளைகளுக்கு கட்டாயம் போய் சேரும். எனவே நீத்தார் கடன் செய்வது என்பது மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமை ஆகும்.
- அமாவாசையன்று விரதம் இருக்கும் பெண்கள் சவுபாக்கியத்துடன் வாழ்வார்கள்.
- பெண்களுக்கு தாலி பாக்கியம் நிலைக்கும்.
அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்கு உரிய தினம் என்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும், அதை ஐதீகப்படி எப்படி செய்வது என்பது சிலருக்கு மட்டுமே தெரிகிறது.

அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது. அன்றைய தினம் ஒரு கதையை படித்த பிறகு மறுநாளான அமாவாசையன்று விரதம் இருக்கும் பெண்கள் சவுபாக்கியத்துடன் வாழ்வார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?
அழகாபுரி நாட்டு அரசன் அழகேசன். பராக்கிரமம் மிக்க அவனுக்கு வாரிசு இல்லாத வருத்தம் இருந்தது. அதை தீர்த்துக்கொள்ள அவன் தன் மனைவியோடு தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அதன் பலனாக அவனுக்கு ஒரு மகன் பிறந்தான்.
மன்னன் மகிழ்ச்சியோடு இருந்த போது ஓர் அசரீரி எழுந்தது. அவனது மகன் இளமைப்பருவத்தை எட்டும் போது இறந்து போவான் என்று அது சொல்லவே மன்னன் விரக்தியில் ஆழ்ந்தான். மன அமைதிவேண்டி அவன் பல கோவில்களுக்கும் சென்றான்.
ஒருநாள் காளி கோவில் ஒன்றில் அவன் வழிபட்ட போது உன் மகன் இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவை. அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர் பெறுவான் என்ற குரல் கேட்டது.
இளமை பருவம் வந்ததும் இளவரசன் ஒருநாள் இறந்து போனான். மன்னன் அவனுக்கு திருமணம் செய்து வைக்க பெண் தேடிய போது, பெற்றோரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த ஓர் இளம் பெண்ணை அவளது உறவினர்கள் ஏமாற்றி, இறந்துபோன இளவரசனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளை காட்டில் கொண்டு விட்டனர். அப்பாவியான அந்த பெண் கணவன் உறங்குவதாக நினைத்தாள். விடிந்தபின் உண்மை தெரிய வந்ததும் அழுதாள்... தவித்தாள்...
தனக்கு தெரிந்த தெய்வங்களின் பெயர்களையெல்லாம் சொல்லி வேண்டினாள்.
உலகத்தின் தாயான ஈஸ்வரி அவளது அழுகுரல் கேட்டு மனம் இரங்கினாள். இறந்து கிடந்த இளவரசனை ஈசனின் அனுமதியோடு உயிர் பெற்று எழச்செய்தாள். இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் அமாவாசை நாளாகும்.
தனக்கு அருளிய தேவியிடம் அந்த பெண் இருண்டுபோன தன் வாழ்வை ஒளிபெறச் செய்தது போலவே அமாவாசை நாட்களில் அம்மனை வழிபடும் பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும் என்று வேண்டி னாள்.
மகிழ்ந்த அம்பிகை, அமாவாசைக்கு முன்தினம் அவளது கதையை படித்துவிட்டு மறுநாள் விரதம் இருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கல பொருட்களை உரியவர்களுக்கு தந்து தன்னை வழிபடும் பெண்களுக்கு தாலி பாக்கியம் நிலைக்கும் என்றும், அவர்கள் இல்லத்தில் அஷ்ட லட்சுமி கடாட்சம் நிலவும் எனவும் சொல்லி மறைந்தாள்.

அமாவாசை அன்று காலையில், எழுந்து ஆறு, குளங்களில் நீராடி சூரிய உதயத்திற்கு முன்னதாகவே எள், தர்ப்பைப்புல் ஆகியவற்றை கொண்டு தர்ப்பணம் செய்து வருதல் நல்லது.
அத்துடன் வீடுகளில் மறைந்த முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில், அவர்களுக்கு பிடித்தமான சைவ உணவு வகைகளையும் வைத்து வழிபட வேண்டும். அவர்கள் மனம் மகிழ்ந்தால் நம் வாழ்விலும் மகிழ்ச்சி பெருகும்.
- திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் காலை கருட வாகனத்திலும், இரவு அனுமந்த வாகனத்திலும் பவனி.
- திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு தை-13 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: துவாதசி இரவு 8.17 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம்: கேட்டை காலை 7.49 மணி வரை பிறகு மூலம்
யோகம்: மரண, அமிர்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் காலை கருட வாகனத்திலும், இரவு அனுமந்த வாகனத்திலும் பவனி வரும் காட்சி. மதுரை ஸ்ரீ செல்லத்தம்மன் விருஷப சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் பவனி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாதர், பழனி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோவில்களில் பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மகிழ்ச்சி
ரிஷபம்-பரிசு
மிதுனம்-ஆக்கம்
கடகம்-உதவி
சிம்மம்-சாதனை
கன்னி-பாராட்டு
துலாம்- கீர்த்தி
விருச்சிகம்-உண்மை
தனுசு- வெற்றி
மகரம்-திடம்
கும்பம்-திறமை
மீனம்-வாழ்வு
- இன்று சர்வ ஏகாதசி.
- வாஸ்து நாள் (காலை 10.41-க்கு மேல் 11.17 மணிவரை வாஸ்து செய்ய நன்று).
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு தை-12 (சனிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: ஏகாதசி இரவு 7.34 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம்: கேட்டை (முழுவதும்)
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று சர்வ ஏகாதசி. வாஸ்து நாள் (காலை 10.41-க்கு மேல் 11.17 மணிவரை வாஸ்து செய்ய நன்று). திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். மதுரை ஸ்ரீ செல்லத்தம்மன் சப்பரத்தில் பவனி. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவர், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவர் கோவில்களில் காலை திருமஞ்சன சேவை. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரெங்கராஜர், திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் பெருமாள் கோவில்களில் காலை திருமஞ்சனம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருமொகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி திருமஞ்சனம். திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் காலை சிறப்பு திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சாதனை
ரிஷபம்-செலவு
மிதுனம்-லாபம்
கடகம்-வரவு
சிம்மம்-ஆர்வம்
கன்னி-போட்டி
துலாம்- பாராட்டு
விருச்சிகம்-உழைப்பு
தனுசு- பொறுமை
மகரம்-சலனம்
கும்பம்-வெற்றி
மீனம்-பயணம்
- இக்கோவிலை நவக்கிரக கோவில் என்றும் அழைக்கிறார்கள்.
- இறைவனும், இறைவியும் தோன்றி நவக்கிரகங்களின் சாபத்தை விலக்கினர்.
தலவரலாறு
முன்னொரு காலத்தில் இமயமலைச் சாரலில் காலவ முனிவர் என்று ஒருவர் இருந்தார். ஒருநாள் ஒரு இளந்துறவி காலவ முனிவரிடம் வந்தார். தனது வருங்காலம் பற்றி அறிவிக்கும்படி கேட்டார். காலவ முனிவர் தமது ஞானதிருஷ்டியால் இளந்துறவியின் வருங்காலம் பற்றி ஆராய்ந்தார். உமது வருங்காலம் பற்றி கூற ஒன்றும் இல்லை என்றார்.

உடனே அந்த இளந்துறவி காலவ முனிவரைப் பார்த்து, மற்றவரின் வருங்காலம் பற்றிக் கூறும் நீர் உம்முடைய வருங்காலம் பற்றி அறிந்ததுண்டோ? எனக்கேட்டு நகைத்து மறைந்தார்.
காலவ முனிவர் தன்னுடைய வருங்காலத்தை எண்ணிப் பார்த்தார். தனது முன்வினைப் பயனால் முன்ஜென்மத்தில் நண்டுகளின் காலை முரித்துத் தின்ற பாவத்தால், கூடிய விரைவில் தமக்குத் தொழுநோய் வரப்போகிறது என்பதை உணர்ந்தார்.
காலவ முனிவரின் சோகம் படிந்த முகத்தைப் பார்த்த மற்ற முனிவர்கள், சோகத்துக்குக் காரணம் என்ன என்று விசாரித்தனர். காலவ முனிவர் தமது வருங்கால நிலையை எடுத்துரைத்தார்.
அதனைக் கேட்ட மற்ற முனிவர்கள். நவக்கிரகங்களை நோக்கித் தவம் செய்து வினைப் பயனிலிருந்து விடுதலை பெற முயற்சி செய்யும் என்று ஆறுதல் கூறினார்கள்.
அதன்படி காலவ முனிவர் நவக்கிரகங்களைத் தியானித்து கடுந்தவம் புரிந்தார். காலவ முனிவரின் முன் நவநாயகர்கள் ஒருசேர வந்து காட்சி கொடுத்தார்கள்.
முனிவரே உமது தவத்திற்கு மகிழ்ந்தோம் உமக்கு என்ன வரம் வேண்டும் என்றார்கள்.

காலவ முனிவர் நவநாயகர்களை நோக்கி, நவமண்டலாதிபர்களே வினைப்பயனையூட்டும் தேவர்களே அடியேனைத் தொழுநோய் பற்றும் சூழ்நிலை உள்ளது.
அந்த தொழுநோய் என்னை அணுகாதபடி வரம் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நவ நாயகர்களும் அவ்வண்ணமே ஆகுக என்று வரம் தந்து மறைந்தனர்.
இந்த செய்தி பிரம்ம தேவருக்குத் தெரியவந்தது. நவக்கிரகங்களைத் தம்மிடம் வருமாறு செய்தார். அவர்களை நோக்கி, நவக்கிரகங்களே நீங்கள் தேவர்களாக இருந்தாலும், எம் கட்டளைப்படி நடக்க வேண்டியவர்களாவீர்கள். தனித்து இயங்கும் சுதந்திரம் உங்களுக்கு இல்லை.
சிவபெருமானின் ஆணைப்படியும், கால தேவனின் துணை கொண்டும் அனைத்து ஜீவராசிகளுக்கும் அவரவரது வினைப்பயனை ஊட்டுவதற்காகவே உங்களை யாம் படைத்தோம். அவ்வாறே நடக்கும் படியும் உங்களுக்கு உத்தரவிட்டோம்.
ஆனால் நீங்கள் எமது உத்தரவுக்குக் கீழ்ப்படியாமல் மீறி நடக்கத் தொடங்கினீர்கள். நீங்கள் சுதந்திரமானவர்களாகி காலவ முனிவருக்குத் தொழுநோய் அணுகாமல் இருக்க வரம் கொடுத்துள்ளீர்கள்.
ஆகவே நீங்கள் ஒன்பதுபேரும் பூலோகத்தில் பிறந்து, காலவ முனிவர் தொழுநோயால் கஷ்டப்படவேண்டிய கால அளவு வரை நீங்கள் அந்த தொழுநோயால் துயர் அடைவீராக என்று சாபமிட்டார்.
சாபமொழி கேட்ட நவக்கிரகங்கள், அறியாமல் செய்த பிழையைப் பொறுத்து, தங்களின் சாபத்துக்கு விமோசனம் ஒன்று கூற வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
அதுகேட்டு மனம் இரங்கிய பிரம்மன், காவிரி ஆற்றின் வடகரையை அணுகுங்கள். அங்கே அர்க்கவனம் என்ற வெள்ளெருக்கங்காடு ஒன்று உள்ளது. அங்கே தங்கி இருந்து தவம்புரியுங்கள்.

கார்த்திகை மாதத்து முதல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிப் பன்னிரெண்டு ஞாயிற்றுக்கிழமை முடிய எழுபத்தெட்டு நாட்கள் தவம் புரியவேண்டும்.
திங்கட்கிழமைதோறும் உதயத்துக்கு முன்னதாகக் காவிரியில் நீராடி பிராண வரதரையும், மங்கள நாயகியையும் வழிபட வேண்டும்.
உதயாதி எழு நாழிகைக்குள் அர்க்க இலை (வெள்ளெருக்கு இலை)யில் ஒரு பிடி அளவு தயிர், அன்னம் வைத்து அதை சாப்பிட வேண்டும். மற்ற நாட்களில் உணவின்றி நோன்பு இருக்க வேண்டும். இந்த அரிய நோன்பைச் சிறிதளவும் தவறாமல் செய்து வந்தால் சாப விமோசனம் கிடைக்கும் என்று சொன்னார்.
பிரம்மன் கூறிய வண்ணம் நவநாயகர்கள் பூலோகத்தை அடைந்து அர்க்கவனத்தைத் தேடி வந்து கொண்டிருந்தனர். தமக்கு முன்னே அவ்வழியில் அகத்தியர் செல்வதைக்கண்டு விரைந்து நடந்து அவரிடம் அணுகி வணங்கினார்கள். தமக்கு நேர்ந்த சாப வரலாற்றை கூறி அர்க்கவனத்தைத் தேடுகிறோம், அது உள்ள இடத்தை அறிவிக்க வேண்டும் என்றனர்.

அகத்தியர், அவர்களைப் பார்த்து நாமும் அர்க்கவனத்திற்குத் சென்று பிராண வரதரை வழிபடச் செல்கிறோம். அவ்வனத்திற்கு உங்களையும் அழைத்துப் போகிறோம் வாருங்கள் என்று கூறி அழைத்துப்போனார்.
அவருடன் அந்த இடத்திற்கு சென்ற நவக்கிரக தெய்வங்கள் தங்கள் தவத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருக்க கோள் தீர்த்த விநாயகரை பிரதிஷ்டை செய்து மங்கலநாயகி உடனாய பிராணநாதேஸ்வரரை வழிபட்டனர்.

அப்போது இறைவனும், இறைவியும் தோன்றி நவக்கிரகங்களின் சாபத்தை விலக்கி நவக்கிரக தெய்வங்களை நாடி வரும் பக்தர்களுக்கு சுதந்திரமாக அருள்பாலிக்க அருள்புரிந்தனர் என்பது புராணவரலாறு. அவர்கள் தவம் இருந்த இடமே சூரியனார்கோவில் ஆகும். இக்கோவிலை நவக்கிரக கோவில் என்றும் அழைக்கிறார்கள்.
- சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
- திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு தை-11 (வெள்ளிக்கிழமை)
பிறை: தேய்பிறை.
திதி: தசமி இரவு 6.22 மணி வரை. பிறகு ஏகாதசி.
நட்சத்திரம்: அனுஷம் மறுநாள் காலை 6.59 மணி வரை பிறகு கேட்டை.
யோகம்: சித்த, மரணயோகம்.
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம், திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை. ராமேஸ் வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சன சேவை, மாலையில் ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோயிலில் ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் புறப்பாடு ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் அபிஷேகம் அலங்காரம். சமயபுரம், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம். திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் உற்சவம் ஆரம்பம். திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாதர் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணு காம்பாள் புறப்பாடு
இன்றைய ராசிபலன்
மேஷம்-உதவி
ரிஷபம்-போட்டி
மிதுனம்-ஆதரவு
கடகம்-பணிவு
சிம்மம்-ஆர்வம்
கன்னி-நன்மை
துலாம்- நட்பு
விருச்சிகம்-இயல்பு
தனுசு- இன்பம்
மகரம்-சிறப்பு
கும்பம்-தெளிவு
மீனம்- சிந்தனை






