என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • மீனாட்சி அம்மன் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி காட்சி தருவார்.
    • அக்டோபர் 1-ந் தேதி சிவபூஜை செய்யும் திருக்கோலங்களில் அம்மன் காட்சி தருகிறார்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் மீனாட்சி அம்மனுக்கு என்று ஆடி முளைக்கொட்டு, நவராத்திரி விழா, ஐப்பசி கோலாட்ட உற்சவ விழா போன்ற திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை. இந்த ஆண்டுக்கான நவராத்திரி உற்சவ விழா வருகிற 23-ந்தேதி தொடங்கி 2-ந்தேதி வரை நடக்கிறது.

    இது குறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நவராத்திரி திருவிழா நாட்களில் தினசரி மாலை 6 மணி முதல் மூலவர் மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் ஆகி கல்பபூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற விஷேச பூஜைகள் நடைபெறும். அந்த நேரத்தில் பக்தர்களுக்கு அர்ச்சனைகள் மூலவர் சன்னதியில் நடத்தப்படாது. கொலு மண்டபத்தில் எழுந்தருளும் அலங்கார அம்மனுக்குதான் நடைபெறும்.

    விழா நாட்களில் திருக்கல்யாண மண்டபத்தில் காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை கச்சேரி, கர்நாடக சங்கீதம், தோற்பாவை கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    கோவிலில் வைக்கப்படும் கொலுவுக்கு அலங்கார பொம்மைகள், சிவபெருமானின் 64 திருவிளையாடல் தொடர்பான பொம்மைகள், இதர பொம்மைகளை பக்தர்கள் உபயமாக உள்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வழங்கலாம்.

    நவராத்திரி திருவிழாவையொட்டி அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் எழுந்தருளும் உற்சவர் மீனாட்சி அம்மன் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி காட்சி தருவார். 23-ந் தேதி ராஜராஜேசுவரி, 24-ந் தேதி வளையல் விற்றது, 25-ந் தேதி ஏகபாதமூர்த்தி, 26-ந் தேதி ஊஞ்சல், 27-ந் தேதி ரசவாதம் செய்த படலம், 28-ந் தேதி ருத்ரபசுபதியார் திருக்கோலம், 29-ந் தேதி தபசுகாட்சி, 30-ந் தேதி மகிஷாசுரமர்த்தினி, அக்டோபர் 1-ந் தேதி சிவபூஜை செய்யும் திருக்கோலங்களில் அம்மன் காட்சி தருகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சன சேவை.
    • உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆவணி-28 (சனிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : சஷ்டி காலை 11.34 மணி வரை பிறகு சப்தமி

    நட்சத்திரம் : கார்த்திகை பிற்பகல் 2.49 மணி வரை பிறகு ரோகிணி

    யோகம் : அமிர்தயோகம்

    ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம்

    திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சன சேவை. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் தங்க மயில் வாகனத்தில் புறப்பாடு. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை.

    உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை. திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள், திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரெங்கராஜர் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நன்மை

    ரிஷபம்-நட்பு

    மிதுனம்-நலம்

    கடகம்-மேன்மை

    சிம்மம்-ஆர்வம்

    கன்னி-மாற்றம்

    துலாம்- ஆதரவு

    விருச்சிகம்-சிந்தனை

    தனுசு- உயர்வு

    மகரம்-பாராட்டு

    கும்பம்-கடமை

    மீனம்-கண்ணியம்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    பகையான உறவுகள் நட்பாகும் நாள். பாகப் பிரிவினைகள் சுமூகமாக முடியும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். குடும்பச் செலவுகளை குறைப்பது பற்றி யோசிப்பீர்கள்.

    ரிஷபம்

    வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். கவுரவம் அந்தஸ்து உயரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

    மிதுனம்

    பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். ஒருவழியில் வந்த வரவு மற்றொரு வழியில் செலவாகும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி வெற்றி தரும்.

    கடகம்

    வரவைக் காட்டிலும் செலவு கூடும் நாள். நீண்ட நாளாக சந்திக்க நினைத்த ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

    சிம்மம்

    ஆச்சரியப்படத்தக்க சம்பவங்கள் அதிகாலையிலேயே நடைபெறும் நாள். அலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம்பிடிப்பீர்கள்.

    கன்னி

    தொட்ட காரியம் துளிர் விடும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் தோள் கொடுத்து உதவுவர். பொன், பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்ப முன்னேற்றம் கூடும்.

    துலாம்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வருமானம் வந்த மறுநிமிடமே செலவாகும். தொழிலில் பணியாளர்களின் ஒத்துழைப்பு குறையும். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும்.

    விருச்சிகம்

    செல்வ நிலை உயரும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறி தென்படும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும்.

    தனுசு

    பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் நாள். பணவரவு திருப்தி தரும். அன்னிய தேசத்திலிருந்து அனுகூல தகவல் கிடைக்கும். குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.

    மகரம்

    வீட்டுப் பராமரிப்பில் ஆர்வம் காட்டும் நாள். வருமானம் திருப்தி தரும். வாழ்க்கைத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். விலகிச்சென்ற நண்பர்கள் விரும்பி வந்திணைவர்.

    கும்பம்

    தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். நேற்றைய பிரச்சனை ஒன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். அன்பு நண்பர்கள் ஆதாயம் தரும் தகவலை தருவர்.

    மீனம்

    யோகமான நாள். வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். உத்தியோக உயர்வு உண்டு. பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

    • ஸ்ரீ அஷ்டபுஜ வராகி அம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அனைத்து வராகி அம்மன் கோவில்களிலும் தேய்பிறை பஞ்சமியையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி தானப்ப கவுண்டர் பள்ளி வளாகத்தில் உள்ள அஷ்ட வராகி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி கணபதி பூஜை, வராகி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் மற்றும் பழங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அஷ்ட வராகி அம்மனுக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தருமபுரி அன்னசாகரம் சாலை சித்திலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ அஷ்டபுஜ வராகி அம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். அவர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோன்று தர்மபுரி அருகே இலக்கியம் பட்டி அழகாபுரியில் 21 அடி உயர ஸ்ரீ சிம்மஹாரூட வராகி அம்மன் சிலையுடன் அமைந்துள்ள கோவிலில் தேய்பிறை பஞ்சமியையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 9-ந் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது.

    கோவை வெரைட்டிஹால் ரோடு காவல்துறை குடியிருப்பு பகுதியில் ஸ்ரீகாவல் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 9-ந் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது.

    நேற்றுமுன்தினம் 2-ம், 3-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று அதிகாலை 5.30 மணிக்கு 4-ம் கால பூஜைகள் நடத்தப்பட்டு கலசங்கள், யாகசாலையில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. பின்னர் காலை 8 மணிக்கு சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், ஸ்ரீ அய்யனார் ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹரஸ்ரீ ஸ்ரீனிவாசசுவாமிகள் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர், துணை கமிஷனர் கார்த்திகேயன், உதவி கமிஷனர் முருகேசன், காவல்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழாவில் கலந்து கொண்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர் குடியிருப்புவாசிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஸ்ரீஅய்யனார் ஆதீனம் அருள் ஆசி வழங்கி பிரசாதம் வழங்கினார். விழா ஏற்பாடுகளை அனைத்து காவல் துறை குடும்பத்தினர் செய்திருந்தனர்.

    • எந்தெந்த பொருட்களை தானம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்.
    • பசுவிற்கு உணவளிப்பதன் மூலம் தானத்துக்குரிய எல்லா பலன்களையும் பெற முடியும்.

    மகாளய அமாவாசை நாளில் செய்யும் சிறு தானமும் நமது முன்னோர்களின் பசியை தீர்த்து அவர்களின் ஆசியை வழங்கக்கூடியது. இத்தகைய சிறப்பு மிக்க அமாவாசை திருநாளில் தானங்கள் செய்வோம். நமது கர்மவினைகளை தூள் தூளாக்குவோம். எந்தெந்த பொருட்களை தானம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ற விபரம் வருமாறு:-

    பொருட்கள் - பலன்கள்

    அன்னம்- வறுமையும், கடனும் நீங்கும்

    துணி- ஆயுள் அதிகமாகும்

    தேன்- புத்திர பாக்கியம் உண்டாகும்

    தீபம்- கண்பார்வை தெளிவாகும்

    அரிசி- பாவங்களை போக்கும்

    நெய்- நோய்களை போக்கும்

    பால்- துக்கம் நீங்கும்

    தயிர்- இந்திரிய சுகம் பெருகும்

    பழங்கள்- புத்தியும், சித்தியும் உண்டாகும்

    தங்கம்- குடும்ப தோஷங்களை நீக்கும்

    வெள்ளி- மனக்கவலை நீங்கும்

    பசு- ரிஷி, தேவர், பிதுர் கடன்கள் அகலும்

    தேங்காய்- நினைத்த காரியம் வெற்றியாகும்

    நெல்லிக்கனி- ஞானம் உண்டாகும்

    பூமி தானம்- ஈஸ்வர தரிசனம் உண்டாகும்

    சிலருக்கு பொருள் வசதி குறைவாக இருக்கும். அவர்களால் பெரிய அளவில் தானம் செய்ய இயலாது. அவர்கள் கவலை கொள்ள வேண்டாம். பசுவிற்கு உணவளிப்பதன் மூலம் தானத்துக்குரிய எல்லா பலன்களையும் பெற முடியும். கன்றுடன் கூடிய பசுவிற்கு தானம் அளித்தல் மிகவும் நல்லது.

    பசுவிற்கு ஒரு கட்டு அருகம்புல் அளிக்கலாம். ஒரு கட்டு அகத்தி கீரையை உணவாக அளிக்கலாம். பசுவிற்கு வாழையிலையில் சாதத்தை அளிக்கலாம். பழவகைகளை கொடுக்கலாம்.

    பழங்களில் வாழைப்பழமே மிகச் சிறந்தது. ஆறு மஞ்சள் வாழைப்பழங்களை பசுவிற்கு உணவாக அளிக்கலாம்.

    அரிசியும், வெல்லமும் கலந்து ஒரு பாத்திரத்தில் பசுவிற்கு உணவாக அளிக்கலாம். இதை அதிகமாக தரக்கூடாது. பசுவிற்கு வயிற்று உபாதையை உண்டாக்கும்.

    கோமாதா என்றழைக்கப்படும் பசுவின் உடலில் அனைத்து தெய்வங்களும், தேவதைகளும் வாசம் செய்கின்றனர். அனைத்து தெய்வங்களுக்கும் மற்றும் தேவதைகளுக்கும் ஒரே நேரத்தில் தானம் செய்ய முடியுமா? முடியும். பசுவுக்கு உணவளித்தால் அனைத்து தெய்வங்களுக்கும், தேவதைகளுக்கும் உணவளித்ததாகவே சமம். எனவே இத்தகைய சிறப்புடைய பசுவிற்க்கு தங்களால் இயன்ற அளவு உணவை அளிக்கவும்.

    அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தால் நமது கர்ம வினைகளை போக்கிக் கொள்ள முடியும். அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தல் நம் பிதுர்களையும் மகிழ்விக்கும் செயல் ஆகும். நம் பிதுர்களும் மகிழ்ச்சி அடைந்து அவர்களின் ஆசிகளும் கிட்டும். நமது குலம் தழைக்கும்.

    • ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது.
    • புரட்டாசி மாதத் திருவோணம், திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினம்.

    மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதம் புரட்டாசி. அதுவும் அந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் துன்பங்கள் விலகி, வளமான வாழ்வு கிடைக்கும். நவக்கிரகங்களில் ஒன்றான புதன் கிரகத்தின் அதிதேவதையாக இருப்பவர் மகாவிஷ்ணு. பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி. இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதம் ஆகும். ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கான சிறப்பு வழிபாடுகள், பிரமோற்சவங்கள் நடத்தப்படுகின்றன. புதனுக்கு நட்பு கிரகம் சனி என்பதால் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.

    ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அப்படி விரதம் மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.

    பொதுவாக சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். எனவே, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது. இந்த விரதத்தின் மகிமையை விளக்க கதை ஒன்று கூறப்படுகிறது.

    திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் பீமன் என்ற மண் பாண்ட தொழிலாளி வசித்துவந்தார். பெருமாள் பக்தரான இவர், ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டவர். ஆனால், இவரது ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் தொழிலில் மூழ்கிக் கிடப்பார். சனிக்கிழமைகளில் கோவிலுக்கு போக நேரம் இருக்காது. போனாலும் எப்படி வழிபடுவது என்று தெரியாது. "பெருமாளே, நீயே எல்லாம்" என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு வந்துவிடுவார்.

    ஒருமுறை, "பெருமாளைப் பார்க்க கோவிலுக்கு போக நேரமில்லை. பெருமாளை இங்கேயே வரவழைத்தால் என்ன?" என்று யோசித்தார். படபடவென களிமண்ணால் ஒரு சிலையைச் செய்தார். பூ வாங்குமளவுக்கு அவரிடம் பணம் கிடையாது. எனவே, தான் வேலை செய்து முடிந்ததும் மீதமிருக்கும் மண்ணை சிறுசிறு பூக்களாகச் செய்து அதைக் கோர்த்து சிலையின் கழுத்தில் போட்டு வணங்கி வந்தார்.

    அந்த ஊரைச் சேர்ந்த அரசர் தொண்டைமானும் பெருமாள் பக்தர். அவர் சனிக்கிழமைகளில் ஆலயத்திற்கு வந்து இறைவனுக்கு தங்கப்பூ மாலை ஒன்றை அணிவிப்பார். ஒருமுறை இப்படி அணிந்து விட்டு, மறுவாரம் ஆலயம் வந்தார். பெருமாளின் கழுத்தில் மண் பூ மாலை கிடந்தது. பட்டர்கள் தான் ஏதாவது தவறு செய்கிறார்களோ என குழப்பத்தில் அரண்மனை திரும்பினார்.

    அன்று கனவில் தோன்றிய பெருமாள், நடந்ததைச் சொன்னார். அந்த தொழிலாளியின் இல்லத்திற்கு சென்ற அரசர், அவருக்கு வேண்டிய பொருளுதவி செய்தார். ஆனால் அதை ஏற்காமல், பெருமாள் பணியை செய்துவந்த அவர் இறுதிக்காலத்தில் வைகுண்டத்தை அடைந்தார். அந்த பக்தரைக் கவுரவிக்கும் வகையில் இப்போதும், திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்தியம் செய்யப்படுகிறது.

    புரட்டாசி மாதத் திருவோணம், திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினம். அதேநேரம் புரட்டாசி சனிக்கிழமை சனி பகவான் அவதரித்த நாள். அதன்காரணமாகவே சனி பகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது மரபாகிவிட்டது.

    • சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
    • வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆவணி-27 (வெள்ளிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : பஞ்சமி பிற்பகல் 2.01 மணி வரை பிறகு சஷ்டி

    நட்சத்திரம் : பரணி மாலை 4.30 மணி வரை பிறகு கார்த்திகை

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை

    இன்று மகாபரணி, கார்த்திகை விரதம் (இன்று பித்ரு கடன் இயற்றுதல் நன்று). சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. திருப்போரூர் ஸ்ரீமுருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை.

    கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சனம், மாலையில் ஊஞ்சல் சேவை. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம். லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீபெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பரிசு

    ரிஷபம்-பாசம்

    மிதுனம்-பண்பு

    கடகம்-பரிவு

    சிம்மம்-செலவு

    கன்னி-ஆதாயம்

    துலாம்- வரவு

    விருச்சிகம்-சலனம்

    தனுசு- வெற்றி

    மகரம்-விருப்பம்

    கும்பம்-நிறைவு

    மீனம்-தாமதம்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள். கடந்த சில நாட்களாக தாமதப்பட்டு வந்த காரியம் இன்று துரிதமாக நடைபெறும்.

    ரிஷபம்

    முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். முக்கியப் புள்ளிகளின் சந்திப்பால் பொருளாதார நிலை உயரும். வீட்டுக் காரியம் விரைவாக நடைபெறும். வியாபாரப் போட்டிகள் அகலும்.

    மிதுனம்

    மகிழ்ச்சி கூடும் நாள். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறி தோன்றும்.

    கடகம்

    பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். ஆடை, ஆபரண பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

    சிம்மம்

    விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். இடமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். பயணங்களில் கவனம் தேவை.

    கன்னி

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலையொன்று முடியாமல் போகலாம். தொழில் பங்குதாரர்களால் தொல்லையுண்டு.

    துலாம்

    சொத்து பிரச்சனை சுமூகமாக முடியும் நாள். காரிய வெற்றி ஏற்படும். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரலாம். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

    விருச்சிகம்

    புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். தொலைபேசி வழி தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும். பக்கத்தில் இருப்பவர்கள் பக்கபலமாக இருப்பர்.

    தனுசு

    சந்தோஷ வாய்ப்புகளைச் சந்திக்கும் நாள். அலைபேசி வழியில் அனுகூலத் தகவல் வந்து சேரும். அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பால் சில பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும்.

    மகரம்

    புகழ் கூடும் நாள். புதிய முயற்சியில் வெற்றி கிட்டும். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் உறுதுணை புரிவர்.

    கும்பம்

    ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். கைமாற்றாக கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். உத்தியோகத்தில் சிறப்பாக செயல்பட்டு பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

    மீனம்

    அயல்நாட்டு முயற்சியில் அனுகூலம் கிட்டும் நாள். போட்ட திட்டங்கள் நிறைவேறலாம். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும். வரன்கள் வாயில் தேடிவரலாம்.

    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் கும்பாபிஷேகத்தை பக்தியுடன் கண்டு வணங்கினர்.
    • தீர்த்த குடங்கள் ஊர்வலமாக புறப்பட்டு காலை 8 மணி அளவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    திருச்சி கே.கே.நகர் இந்திராநகர் ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று (வியாழக்கிழமை) காலை கோலாகலமாக நடைபெற்றது. இதற்கான யாக சாலை பூஜைகள் கடந்த 8-ந்தேதி தொடங்கின. அன்று மாலை ஆசார்யாள், அர்சகாள் (யஜமானாள்) அழைப்பு, பகவத் ப்ரார்த்தனை. மஹா ஸங்கல்பம், அனுக்ஞை, விஷ்வக்ஸேன ஆராதனம், க்ரஹப்ரீதி, ஆசார்ய வர்ணம், - ம்ருத்ஸங்கி ரஹணம், வாஸ்து சாந்தி, - அங்குரார்பணம், வேதப்ர பந்த பாராயணம் தொடக்கம் நடைபெற்றது. இரவு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது.

    மறுநாள் காலையில் 1-ம் கால் பூஜை, தீர்த்த - ஸங்க்ரஹணம் ரக்ஷா பந்தனம். சத்தி - யாகர்ஷணம், க்ருஹப்ரீதி, - யாத்ராதானம் மஹா கும்பம் (பெருமாள்உத்ஸவர்) ப்ரவேசம், துவாரபூஜை அக்னி மதனம், அக்னி யாகசாலை ப்ரதிஷ்டை, நித்யஹோமம் ஆகியவை நடைபெற்றன. மதியம் பூர்ணாஹுதி சாற்றுமுறை கோஷ்டியும் நடந்தன. 2-ம் காலம் மாலையில் துவாரபூஜை, கும்ப, மண்டல, பிம்ப பூஜைகள், நித்ய ஹோமங்கள், (சதுஸ்தான ஆராதனம்). இரவு பூர்ணாஹுதி, சாற்றுமுறை கோஷ்டி நடந்தது.

    நேற்று(புதன்கிழமை) காலை 8 மணிக்கு 3-ம் காலம் புண்யாஹ வாசனம் துவாரபூஜை, கும்ப மண்டல பிம்பபூஜை, நித்ய ஹோமங்கள், (சதுஸ்தான ஆராதனம்.) மதியம் பூர்ணாஹுதி, சாற்றுமுறை கோஷ்டி ஆகியவை நடைபெற்றன. மாலை 4 மணிக்கு புண்யாஹவாசனம், மூலவர், உத்ஸவர் விமானங்கள், ப்ராயச்சித்த ஸ்நபன கலச திருமஞ்சனம், பஞ்சகவ்ய அபிஷேகம். 6 மணிக்கு கோதோஹணம், பசுமாடு யாக சாலைக்கு கொண்டு வந்து பால் கறந்து ஹோமம் செய்தல் நடைபெற்றது..

    மாலை 6.30 மணிக்கு 4-ம் காலம் துவார பூஜை. கும்ப மண்டல பிம்ப பூஜை, நித்ய ஹோமம் (சதுஸ்தான ஆராதனம்) ஷோடச, தத்வ, ந்யாஸ, ஹோமங்கள், சாந்தி ஹோமம். இரவு 8.30மணிக்கு பூர்ணாஹுதி, சாற்றுமுறை கோஷ்டி, இரவு 9 மணிக்கு சயனாதி வாசம் நடைபெற்றது. இன்று (வியாழக் கிழமை) காலை 5.30 மணிக்கு 5-ம் காலம் விஸ்வரூபம், புண்யா ஹவாசனம், துவார பூஜை, கும்ப மண்டல பிம்ப பூஜை, நித்ய ஹோமங்கள், (சதுஸ்தான ஆராதனம்). மஹா பூர்ணாஹுதி, அந்தர்பலி, பஹீர்பலி யாத்ராதானம், க்ரஹப்ரீதி, தசதானங்கள், கும்ப உத்தாபனம், பெருமாளு டன் கடம் புறப்பாடும் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க விமானங்கள் ஸ்ரீராஜகோபுர, மூலவர், உத்ஸவர், பரிவாரங்கள் மஹா ஸம்ப்ரோஷ்ணம், விசேஷ ஆராதனம், ஆசீர்வாதம் வேத ப்ரபந்த சாற்றுமுறை, தீர்த்த குடங்கள் ஊர்வலமாக புறப்பட்டு காலை 8 மணி அளவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் கும்பாபிஷேகத்தை பக்தியுடன் கண்டு வணங்கினர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

    நிகழ்ச்சியில் தேவர் மலை கேசவன் மற்றும் திருச்சி சி.காளிதாஸ் குழுவினரின் நாதஸ்வர நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தி.மு.க. கலைஞர் நகர் பகுதி செயலாளர் மணிவேல், மாமன்ற உறுப்பினர் பொற்கொடி, அ.ம.மு.க. மாநகர அவைத் தலைவர் சாத்தனூர் ராமலிங்கம் ஏர்போர்ட் பகுதி செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • பெற்ற பிள்ளைகளை எந்த சூழ்நிலையிலும் மன்னித்தே பழக்கப்பட்ட பெற்றோர், இந்த விஷயத்திலும் மன்னித்து அருள்புரிவார்கள்.
    • சில கோவில்களும் பிதுர் பூஜை செய்ய உகந்ததாக சொல்லப்படுகின்றன.

    மகாளய அமாவாசை அன்று நீர்நிலைகளிலும், சில கோவில்களிலும் மறைந்த மூதாதையர்களுக்கும் உறவினர்களுக்கும் முறையாக பூஜை செய்து வழிபட்டால், எடுத்த காரியங்கள் நிறைவேறும். பிதுர்தோஷம் இருந்தால் நீங்கும்.

    பெற்றோருடன் வாழ்ந்த காலத்தில் அவர்களை சரியாக கவனிக்க முடியாதவர்கள்கூட பிதுர் பூஜை செய்து வழிபட்டால், மனச்சுமைகள் குறையும். பெற்ற பிள்ளைகளை எந்த சூழ்நிலையிலும் மன்னித்தே பழக்கப்பட்ட பெற்றோர், இந்த விஷயத்திலும் மன்னித்து அருள்புரிவார்கள்.

    காவிரிக்கரை, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை திருச்சி முக்கொம்பு, மயிலாடுதுறை நந்திக்கட்டம், பவானி முக்கூடல், உள்பட பல நீர்நிலைகளில் பக்தர்கள் அதிக அளவில் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்வார்கள். நதிக்கரைகள் மட்டுமின்றி, கடற்கரை தலங்களன ராமேஸ்வரம், தனுஷ்கோடி, முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி, பூம்புகார், வேதாரண்யம், கோடியக்கரை ஆகிய கடற்கரைப் பகுதிகளும் பிதுர் பூஜைகளுக்கு ஏற்றவை.

    சில கோவில்களும் பிதுர் பூஜை செய்ய உகந்ததாக சொல்லப்படுகின்றன. அந்த வகையில், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மகாளய அமாவாசை அன்று மூதாதையர்களுக்காக சிறப்பு பூஜை செய்வது சிறப்பானது. மூங்கில் தட்டில் வெற்றிலைபாக்கு, தேங்காய், பழங்கள், மலர்ச் சரங்கள், வாழைக்காய், பூசணிக்காய் வைத்து, அதனைக் கோவில் அர்ச்சகரிடம் கொடுத்து அம்மன் சன்னிதியில் சமர்ப்பிக்கிறார்கள். மறைந்த தங்கள் பெற்றோரின் பெயர், நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்யச் சொல்கிறார்கள்.

    பிறகு பூஜை செய்யப்பட்ட அந்தத் தட்டினை வயதான ஒரு அந்தணரிடம் தட்சிணை கொடுத்து சமர்ப்பிக்கலாம். அல்லது வயதான சுமங்கலிப் பெண்ணிடம் கொடுத்து அவர்கள் காலில் விழுந்து ஆசி பெறலாம். வசதி படைத்தோர் அன்றைய தினம் அன்னதானம் செய்வதுடன் ஆடைதானமும் செய்வார்கள்.

    தஞ்சையில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் பாதையில் கண்டியூரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம் திருப்பந்துருத்தி. இந்த தலமும் மகாளய அமாவாசைக்கு ஏற்ற இடமாகும்.

    • நந்தி எம்பெருமான் நெய் நந்தீஸ்வரராக வணங்கப்படுவது இக்கோவிலின் தனிச்சிறப்பு.
    • சிவபெருமானும் உமாதேவியும் மீனாட்சி சொக்கலிங்கேஸ்வரராக மூலஸ்தானக் கடவுளர்களாக அருள் பாலிக்கின்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி எனும் ஊருக்குத் தெற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிற்றூர் வேந்தன்பட்டி. இவ்வூரில் உள்ள சிவன் கோவிலில் நந்தி எம்பெருமான் நெய்-நந்தீஸ்வரராக அருள் பாலிக்கின்றார். நந்தி எம்பெருமான் நெய் நந்தீஸ்வரராக அருள்பாலிப்பது இவ்வூரில் மட்டுமே. அதனால் இவ்வூர் தமிழகத்து ஊர்களில் தனி சிறப்பிடம் பெறுகின்றது.

    பஸ்ஸைவிட்டு இறங்கி இவ்வூருக்குள் நுழைந்தவுடன் நம் கண்ணுக்கு தெரிவது நெய் நந்தீஸ்வரர் கோவில்தான். இவ்வூரைச் சார்ந்த நகரத்தார் (நாட்டுக்கோட்டை செட்டியார்கள்) பெருமக்கள் பெருமுயற்சி செய்து பெரும்பணம் சேகரித்து இக்கோவிலை கட்டியுள்ளனர். நிர்வாகப் பொறுப்பையும் இவர்களே ஏற்றுள்ளனர்.

    நந்தி எம்பெருமான் நெய் நந்தீஸ்வரராக வணங்கப்படுவது இக்கோவிலின் தனிச்சிறப்பு

    நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் ஒன்பதுமுறை கும்பாபிஷேகம் கண்டுள்ளதாம். சிவபெருமானும் உமாதேவியும் மீனாட்சி சொக்கலிங்கேஸ்வரர் என்னும் பெயரில் இக்கோவிலின் மூலஸ்தானக் கடவுளர்களாக அருள் பாலிக்கின்றனர்.

    இவர்களைத் தவிர விநாயகர், முருகப்பெருமான், தெட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பைரவர், நவக்கிரகங்கள் போன்ற கடவுளர்களும் தனித்தனி சந்நிதிகளில் அருள் பாலிக்கின்றனர் என்றாலும் நெய் நந்தீஸ்வரரே இக்கோவிலின் சிறப்புக் கடவுளாக உள்ளார். அதனால் இக்கோவில் சிவன் கோவிலாக இருந்த போதிலும் நந்திகோவில் என்றே இவ்வூர் மக்களால் அழைக்கப்படுகின்றது.

    ஊரின் நடுவே அழகுற அமைந்துள்ளது கோவில் உள்ளே நுழைந்ததும் நெய்மணம் கமகமக்கிறது. சிவனாரின் சந்நிதியை நோக்கி கம்பீரமாக வீற்றிருக்கின்றார் நெய் நந்தீஸ்வரர். இவரின் மேனி முழுவதிலும் பசு நெய் அப்படியே உறைந்து போயிருக்கிறது. எவ்வளவுதான் நெய் பூசினாலும் இவரது மேனியை ஈ, எறும்பு, பூச்சிகள் எதுவும் நெருங்குவதில்லையாம். ரொம்ப சக்தி வாய்ந்த கடவுள் இவர்.

    கவியரசர் கண்ணதாசன் இவரை போற்றிப் பாடியுள்ளார்.

    * வேந்தன்பட்டியிலும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் பசுமாடு வைத்திருப்பவர்கள் பால் கறந்து காய்ச்சி நெய் எடுத்து நெய் நந்தீஸ்வரருக்கு காணிக்கையாக செலுத்திய பிறகுதான் பாலை விற்கவோ சொந்த உபயோகத்திற்கு எடுத்துக் கொள்ளவோ செய்கின்றார்கள். இன்றும் இப்பழக்கம் இவ்வூர் மக்களிடம் இருந்து வருகின்றது.

    * நந்தி எம்பெருமானுக்கு "தன-ப்ரியன்" என்ற ஒரு பெயர் உண்டு. அதனால் தானோ என்னவோ இவ்வூர் மக்கள் நெய்-நந்தீஸ்வரரின் நெற்றியில் காசுகளை பொட்டுகளாக வைப்பதையும் பண நோட்டுகளை கயிற்றில் கட்டி நெய் நந்தீஸ்வரரின் கழுத்தில் மாலையாக போடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

    * வருடந்தோறும் தை மாதத்தில் மாட்டுப்பொங்கலன்று அதிகாலை 4 மணிக்கு நெய் நந்தீஸ்வரருக்கு நந்தி விழா என்ற ஒரு விழாவினை இவ்வூர் மக்கள் நடத்தி வருகின்றார்கள். நந்தி விழா தினத்தன்று நெய் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேங்கள் செய்து 30 வகையான மாலைகளால் அலங்கரித்து தீப ஆராதனைகள் காட்டி வழிபடுகின்றனர். இந்த அதிசய விழா தமிழகத்து ஊர்களில் திருவண்ணாமலையிலும் வேந்தன்பட்டியிலும்தான் நடைபெறுகின்றது. மற்ற ஊர்களில் நடைபெறுவதில்லை.

    *நெய் நந்தீஸ்வரரின் இரு கொம்புகளுக்கு நடுவே "சக்கரம்" ஒன்று உள்ளது. இது இயற்கையாகவே அமைந்தது (பொதுவாக இந்த அமைப்பு நந்தி எம்பெருமானின் தோற்றத்தில் இருப்பதில்லை).

    * நெய் நந்தீஸ்வரருக்கு பசு நெய்தான் காணிக்கை பொருள். எனவே நெய் நந்தீஸ்வரரை பார்க்க வருகிறவர்கள் வரும்போது கலப்படமில்லாத சுத்தமான பசு நெய் கொண்டு வரவேண்டும்.

    நெய் - நந்தீஸ்வரருக்கு மணி சார்த்துதல்

    இவ்வூர் மக்களில் பெரும்பாலோர் தங்களின் சொந்த வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்பட்டாலோ உடலில் நோய்கள் தோன்றினாலோ நெய் நந்தீஸ்வரருக்கு மணி சார்த்துவதாக வேண்டிக்கொள்கிறார்கள். நோய்களோ பிரச்சனைகளோ தீர்ந்த பிறகு வெங்கல மணி ஒன்றும் பட்டுத்துண்டு ஒன்றும் மாலை ஒன்றும் வாங்கி நெய்-நந்தீஸ்வரருக்கு சார்த்தி தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.

    பிரதோச விழா

    நெய் நந்தீஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. அன்றைய தினம் நந்தியை பசு நெய்யினால் அபிஷேகம் செய்வர். அபிஷேகம் செய்த நெய் நந்தீஸ்வரரின் தோற்றம் முழுவதிலும் நிறைந்து தரையில் வழிந்து அப்படியே தேங்கி நிற்கின்றது.

    மறுநாள், அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து நந்தவனத்தில் உள்ள நெய்கிணற்றில் கொட்டுகிறார்கள். நெய் கிணற்றின் உள்ளே பல ஆண்டுகளாக உறைந்து போயிருக்கிறது. இதன் உள்ளே உறைந்திருக்கும் நெய்யில் கூட ஈ, எறும்பு, பூச்சிகள் எதுவும் மொய்ப்பதில்லையாம்.

    பஸ் வசதி

    சென்னை, மதுரை, கோவை, ஈரோடு, திருச்சி, திண்டுக்கல், சேலம், திருப்பூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் போன்ற ஊர்களில் இருந்து பொன்னமராவதிக்கு நேரடி பஸ்கள் உள்ளன. பொன்னமராவதியிலிருந்து வேந்தன்பட்டி வருவதற்கு சிட்டி பஸ்களும், தனியார் பஸ்களும் நிறைய உள்ளன.

    கோவில் திறப்பு : காலை 6.00 மணி முதல் பகல் 12 மணிவரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

    ×