என் மலர்
வழிபாடு

தஞ்சை பெரிய கோவிலில் 48 வகையான பொருட்களால் பெருவுடையாருக்கு பேரபிஷேகம்- ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
- 108 ஸ்தாபன கலச அபிஷேகம் என 48 வகையான பொருட்களை கொண்டு பேரபிஷேகம் நடைபெற்றது.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மனமுருகி பெருவுடையாரை வழிபட்டனர்.
தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் 1040-வது சதய விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சதய விழாவை முன்னிட்டு காலை பெருவுடையாருக்கு விபூதி, தைலக்காப்பு, சாம்பிராணி தைலம், திரவியப்பொடி, மஞ்சள் பொடி, அரிசி மாவுப்பொடி, பஞ்சாமிர்தம், தேன், நெய், பசும்பால், தயிர், மாதுளை முத்து, பிலாச்சுளை, அன்னாச்சி, திராட்சை பழம், சொர்ணாபிஷேகம், 108 ஸ்தாபன கலச அபிஷேகம் என 48 வகையான பொருட்களை கொண்டு பேரபிஷேகம் நடைபெற்றது. பின்னர், வண்ண, வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கு பெருந்தீப வழிபாடு நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மனமுருகி பெருவுடையாரை வழிபட்டனர். தொடர்ந்து, மாலை பெருவுடையார்-பெரியநாயகி உருவ செப்பு திருமேனிகள் வெள்ளி ரிஷப வாகனத்தில், மாமன்னர் ராஜராஜ சோழன், பட்டத்தரசி லோகமாதேவி திருமேனிகள் மற்றும் ராஜேந்திரசோழன் திருமேனி ஆகியவை தங்க கிரீடத்துடன் வீதிஉலா நடைபெறுகிறது.






