என் மலர்
அமெரிக்கா
- மனித இருப்பின் இருண்ட அடுக்குகளை ஆராய்ந்த லிஞ்ச் தனக்குப் பின்னால் தனியானதொரு பாணியை விட்டுச் சென்றுள்ளார்.
- திரைப்பட இயக்குநராக மாறுவதற்கு முன்பு ஒரு ஓவியராக தனது கலைப் பயணத்தைத் தொடங்கினார்.
ஹாலிவுட்டின் தனித்துவமான படைப்பாளியான டேவிட் லிஞ்ச் காலமானார். கடுமையான புகைப்பழக்கம் கொண்டவரான டேவிட் எம்பைசிமா எனப்படும் நாள்பட்ட நுரையீரல் நோயால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று தனது 78 வயதில் உயிரிழந்துள்ளார்.
மல்ஹோலண்ட் டிரைவ், ட்வின் பீக்ஸ் போன்ற படைப்புகள் மூலம் மனித இருப்பின் இருண்ட அடுக்குகளை ஆராய்ந்த லிஞ்ச் தனக்குப் பின்னால் தனியானதொரு பாணியை விட்டுச் சென்றுள்ளார்.

லிஞ்சின் குடும்பத்தினர் அவரது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஒரு அறிக்கை மூலம் அவரது மரணத்தை அறிவித்தனர்.
அந்த அறிக்கையில், இப்போது அவர் எங்களுடன் இல்லாததால் உலகில் ஒரு பெரிய ஓட்டை உருவாகியுள்ளது. ஆனால், அவர் சொல்வது போல், 'உங்கள் கண்ணை டோனட்டின் மீது வைத்திருங்கள், ஓட்டை மீது அல்ல' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
1946 இல் மொன்டானாவில் பிறந்த லிஞ்ச், திரைப்பட இயக்குநராக மாறுவதற்கு முன்பு ஒரு ஓவியராக தனது கலைப் பயணத்தைத் தொடங்கினார். அவரது முதல் படமான "எரேசர்ஹெட்" (1977), ஹாலிவுட் சுயாதீன [இண்டி] சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

வழக்கமான கதை சொல்லலை புறக்கணித்து அவர் இயக்கிய "ப்ளூ வெல்வெட்" (1986), "வைல்ட் அட் ஹார்ட்" (1990) மற்றும் "மல்ஹோலண்ட் டிரைவ்" (2001) உள்ளிட்ட திரைப்படங்கள் கவனம் பெற்றன. 1990 களில் "ட்வின் பீக்ஸ்" மூலம் தொலைக்காட்சியில் லிஞ்சின் பிரவேசம் நிகழ்ந்தது.
சிறிய நகரினுடைய இரகசியங்களின் வினோதமான கதையுடன் கூடிய இந்தத் தொடர் தற்காலத்தில் கோலோச்சும் சீரிஸ் வகை படைப்புகளுக்கு முன்னோடியாகும். இத்தகு திரை மேதைமை கொண்ட டேவிட் லின்ச் மரணத்துக்கு உலக சினிமா தூக்கம் அனுசரித்து வருகிறது.
- லாஸ் ஏஞ்சல்சில் கடந்த 7-ம் தேதி காட்டுத் தீ ஏற்பட்டது.
- தீ பரவ காரணமாக இருந்த காற்றின் வேகம் தற்போது தணிந்துள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்சில் கடந்த 7-ம் தேதி காட்டுத் தீ ஏற்பட்டது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வர வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தண்ணீர் பற்றாக்குறையால் ஹெலிகாப்டர்கள் வாயிலாக கடல் நீரில் தண்ணீர் இறைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஒன்பது நாட்களுக்கும் மேலாக தீ எரிவதால் இதுவரை மொத்தம் 40,000-க்கும் அதிகமான ஏக்கர் பரப்பை எரித்து நாசமாக்கியுள்ளது. 12,000-க்கும் அதிகமான கட்டமைப்புகள் தீயால் அழிக்கப்பட்டுள்ளன. காட்டுத் தீக்கு இதுவரை 25 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், காற்றின் வேகம் தற்போது கொஞ்சம் தணிந்துள்ளது. இதனால் தீயை அணைக்கப் போராடி வரும் தீயணைப்பு வீரர்களின் பணிகளில் இது சற்று ஆறுதலைக் கொடுத்துள்ளது. தீ அணைக்கும் பணிகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
- ஆபத்தான அதிகாரக் குவிப்பு" குறித்து அமெரிக்கர்களை எச்சரித்தார்.
- ஆபத்தில் இருப்பதை உணர்ந்து தான், அதிபர் தேர்தலில் போட்டியிட்டேன்.
அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து இன்னும் சில நாட்களில் விலக இருக்கும் ஜோ பைடன், புதன்கிழமை ஓவல் அலுவலகத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு தனது பிரியாவிடை உரையை நிகழ்த்தினார். உரையின் போது, அமெரிக்காவில் உள்ள ஒரு சில செல்வந்தர்களிடையே "ஆபத்தான அதிகாரக் குவிப்பு" குறித்து அமெரிக்கர்களை எச்சரித்தார்.
ஓவல் அலுவலகத்தில் இருந்து பேசிய ஜோ பைடன், "இன்று, அமெரிக்காவில் ஒரு தன்னலக்குழு தீவிர செல்வம், அதிகாரம் மற்றும் செல்வாக்குடன் உருவாகி வருகிறது. இது நமது ஜனநாயகத்தையும், நமது அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரத்தையும், அனைவரும் முன்னேறுவதற்கான நியாயமான வாய்ப்பையும் உண்மையில் அச்சுறுத்துகிறது."
"அமெரிக்கர்கள் தவறான தகவல்களின் கீழ் புதைக்கப்படுகிறார்கள், இது அதிகார துஷ்பிரயோகத்திற்கு வழிவகுக்கிறது. பத்திரிகை சுதந்திரம் நொறுங்கி வருகிறது. செய்தி ஆசிரியர்கள் மறைந்து வருகின்றனர். அதிகாரம் மற்றும் லாபத்திற்காகச் சொல்லப்படும் பொய்களால் உண்மை அடக்கப்படுகிறது. நமது குழந்தைகள், நம் குடும்பங்கள் மற்றும் ஜனநாயகத்தை துஷ்பிரயோக சக்தியிலிருந்து பாதுகாக்க சமூக தளங்களை நாம் பொறுப்பேற்க வேண்டும்."
"நாம் ஒன்றிணைந்து மேற்கொண்ட பணிகளின் தாக்கத்தை உணர சற்று நேரம் ஆகும். ஆனால், நாம் விதைத்த விதைகள் வளர்ந்து, வரும் தசாப்தங்களில் பூத்துக் குலுங்கும். அமெரிக்க ஆபத்தில் இருப்பதை உணர்ந்து தான், நான் அதிபர் தேர்தலில் போட்டியிட்டேன்."
"திக்கி பேசும் குழந்தை ஒன்று ஸ்கிராண்டன், பென்சில்வேனியா அல்லது கிளேமாண்ட், டெலாவேரில் சாதாரண துவக்கத்தில் இருந்து அமெரிக்க அதிபராக ஓவல் அலுவலகத்தின் ரெசல்யூட் மேசையின் பின் அமர்வது உலகில் வேறு எங்கும் சாத்தியமாக முடியாது. நான் நம் நாட்டின் மீது முழு அன்பை முழுமையாக அர்ப்பனித்துள்ளேன். அதற்கு கைமாறாக அமெரிக்க மக்களிடம் இருந்து பல லட்சம் முறை அன்பு, ஆதரவு கலந்த ஆசீர்வாதத்தை பெற்றுள்ளேன்," என்றார்.
பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அதிபர் ஜோ பைடன் வருகிற 20 ஆம் தேதி வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுகிறார். இதே நாளில் அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்பம் பதவியேற்கிறார்.
- இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
- இதன்மூலம் 15 மாதமாக நடந்து வரும் காசா போர் முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
வாஷிங்டன்:
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. பாலஸ்தீனிய கைதிகள் இஸ்ரேலிய பிணைக்கைதிகளை பரிமாற்றம் செய்ய இருதரப்பும் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதன்மூலம் 15 மாதமாக நடந்து வரும் காசா போர் முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, இஸ்ரேல்-ஹமாஸ் ஆகியவை போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. பிணைக்கைதிகள் பரிமாற்றம் செய்யவும் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
மேலும், இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தமானது பல கட்டமாக நடைபெறும். ஜனவரி 19-ம் தேதி அமலுக்கு வரும் இந்த ஒப்பந்தத்தின் முதல் 42 நாளில் 33 பிணைக்கைதிகளை ஹமாஸ் படைகள் விடுவிக்க உள்ளன என தெரிவித்தார்.
நவம்பர் மாதம் சாதனை வெற்றியைப் பதிவு செய்ததன் அடிப்படையிலேயே இந்த ஒப்பந்தம் சாத்தியமாகியுள்ளது என விரைவில் பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே ஏற்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு உலக தலைவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ், அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா மற்றும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உள்ளிட்ட பலர் வரவேற்றுள்ளனர்.
- இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
- இதன்மூலம் 15 மாதமாக நடந்து வரும் காசா போர் முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
வாஷிங்டன்:
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. பாலஸ்தீனிய கைதிகள் இஸ்ரேலிய பிணைக்கைதிகளை பரிமாற்றம் செய்ய இருதரப்பும் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதன்மூலம் 15 மாதமாக நடந்து வரும் காசா போர் முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல்-ஹமாஸ் ஆகியவை போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது என்றும், பிணைக்கைதிகள் பரிமாற்றம் செய்ய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்றும் அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமெரிக்காவின் தீவிர ராஜதந்திரத்திற்குப் பிறகு எகிப்து மற்றும் கத்தார், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆகியவை போர் நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகள் ஒப்பந்தத்தை எட்டியுள்ளன.
ஜனவரி 20 அன்று முடிவடையும் தனது நிர்வாகத்தின் கடைசி வெளியுறவுக் கொள்கை நிறைவேற்றமாக இந்த ஒப்பந்தத்தை உருவாக்குகிறது.
இந்த ஒப்பந்தம் காசாவில் சண்டையை நிறுத்தும். பாலஸ்தீனிய குடிமக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படும்.
மேலும் 15 மாதத்துக்கு மேலாக சிறைபிடிக்கப்பட்ட பிணைக்க்கைதிகளை அவர்களது குடும்பத்தினருடன் மீண்டும் இணைக்கும்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தமானது பல கட்டமாக நடைபெறும் என்றும், ஜனவரி 19-ம் தேதி அமலுக்கு வரும் இந்த ஒப்பந்தத்தின் முதல் 42 நாளில் 33 பிணைக்கைதிகளை ஹமாஸ் படைகள் விடுவிக்க உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
- இந்தக் கவனக்குறைவான தவறுக்கு மன்னிப்பு கேட்கிறோம் என மெட்டா நிறுவனம் கூறியது.
- மெட்டா நிறுவனத்திற்கு இந்தியா முக்கியமான நாடு என தெரிவித்தார்.
நியூயார்க்:
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜூக்கர்பெர்க், ஜோ ரோகனின் போட்காஸ்டில் சமீபத்தில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், 2024-ல் உலகம் முழுவதும் மிகப்பெரிய தேர்தல் ஆண்டாக இருந்தது. இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் தேர்தலைச் சந்தித்தன. ஆனால், ஆட்சியில் இருந்த கட்சிகள் பணவீக்கம், பொருளாதார பிரச்சனை, கோவிட்டை கையாண்டது உள்ளிட்ட ஏதாவது ஒரு விஷயம் காரணமாக ஆட்சியை பறிகொடுத்தன என தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகம் என்ற அடிப்படையில் 2024 ல் இந்தியாவில் நடந்த தேர்தலில் 64 கோடி வாக்காளர்கள் பங்கேற்றனர். பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீதான தங்களின் நம்பிக்கையை மக்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
கோவிட்டிற்கு பிறகு 2024 ல் நடந்த தேர்தலில் இந்தியா உள்ளிட்ட அனைத்து அரசுகளும் தோல்வியடைந்தன என்பது தவறான தகவல்.
80 கோடி பேருக்கு இலவச உணவு, 220 கோடி பேருக்கு இலவச தடுப்பூசி, கோவிட் காலத்தில் உலக நாடுகளுக்கு உதவி என வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா முன்னணியில் உள்ளது. பிரதமர் மோடியின் 3-வது வெற்றி என்பது சிறந்த நிர்வாகம் மற்றும் பொது மக்களின் நம்பிக்கைக்கு கிடைத்த சான்று.
மார்க் ஜூக்கர்பெர்க்கிடம் இருந்து தவறான தகவல்களைப் பார்ப்பது ஏமாற்றம் அளிக்கிறது. உண்மைகளையும், நம்பகத்தன்மையயும் நிலைநிறுத்துவோம் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்திய தேர்தல் குறித்து தவறான தகவல் வெளியிட்டதற்காக மெட்டா நிறுவனம் மன்னிப்பு கோரியது.
இதுதொடர்பாக, மெட்டா நிறுவனத்தின் இந்திய துணைத்தலைவர் ஷிவ்நாத் துக்ரால் வெளியிட்டுள்ள அறிக்கையில், மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, 2024-ல் நடந்த தேர்தல்களில் ஆட்சியில் இருந்த கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை என்ற மார்க் ஜூக்கர்பெர்க்கின் கருத்து பல நாடுகளில் நடந்துள்ளது. இந்தியாவிற்கு இது பொருந்தாது. இந்தக் கவனக்குறைவான தவறுக்கு மன்னிப்பு கேட்கிறோம். மெட்டா நிறுவனத்திற்கு இந்தியா முக்கியமான நாடு. அதன் புதுமையான எதிர்காலத்தின் மையத்தில் இருப்பதை நாங்கள் எதிர்நோக்குகிறோம் என தெரிவித்துள்ளார்.
- அமெரிக்காவை மையமாக கொண்டு வால்மார்ட் நிறுவனம் இயங்கி வருகிறது.
- 17 ஆண்டுகளுக்கு பிறகு வால்மார்ட் நிறுவனம் தனது லோகோவை மாற்றியுள்ளது.
உலகெங்கும் பல முக்கிய நகரங்களில் செயல்பட்டு வரும் பன்னாட்டு பல்பொருள் விற்பனை அங்காடி, வால்மார்ட்.
அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் வால்மார்ட் நிறுவனத்தில் அன்றாட உபயோக பொருட்கள், மளிகை, மருந்து, விளையாட்டு பொருட்கள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்கும்.
இந்நிலையில், வால்மார்ட் நிறுவனம் தனது பழைய லோகோவின் பின்புற நிறத்தை மட்டும் அடர் நீல நிறத்தில் மாற்றி அதனை புதிய லோகோ என்று சமூக வலைத்தளங்களில் அறிமுகம் செய்தது. இதனையடுத்து நெட்டிசன்கள் அதன் புதிய லோகோவை கடுமையாக ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.
வால்மார்ட் நிறுவனம் தனது பழைய லோகோவையே பட்டி டிங்கரிங் செய்து புதிய லோகோவாக வெளியிட்டுள்ளது என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
17 ஆண்டுகளுக்கு பிறகு வால்மார்ட் நிறுவனம் தனது லோகோவை மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- உக்ரைன் - ரஷிய போர், சிரியாவின் உள்நாட்டு போர் ஆகியவை அந்நாடுகளில் ஆபத்தான சூழலை உருவாக்கியுள்ளன.
- வட கொரியாவில் வெளிநாட்டினர் மீது கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளது
ரஷியா , வட கொரியா உட்பட 20 நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று அமெரிக்க அரசாங்கம் அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இந்த பட்டியலில் ரஷியா , வட கொரியா, ஈரான், ஈராக், உக்ரைன், ஆப்கானிஸ்தான், பெலாரஸ், சிரியா, லெபனான், லிபியா, சோமாலியா, சூடான், வெனிசுலா மற்றும் ஏமன் உள்ளிட்ட 20 நாடுஜ்கள் இடம் பெற்றுள்ளன.
மேற்க்கண்ட நாடுகளில் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் ஏற்படும் என்றும் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு இந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்க அரசாங்கம் அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் - ரஷிய போர், சிரியாவின் உள்நாட்டு போர் ஆகியவை ஆபத்தான சூழலை உருவாக்கியுள்ளன. சோமாலியா, லிபியா மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் பயங்கரவாத குழுக்களின் அச்சுறுத்தல்கல் இருக்கிறது. பெலாரஸ் மற்றும் வெனிசுலா போன்ற நாடுகளில் அரசியல் நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. வட கொரியாவில் வெளிநாட்டினர் மீது கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- அதிபர் ஜோ பைடன் கடைசி வெளிநாட்டுப் பயணமாக இத்தாலி செல்ல திட்டமிட்டிருந்தார்.
- கலிபோர்னியா காட்டுத்தீ எதிரொலியால் ஜோ பைடனின் இத்தாலி பயணம் ரத்துசெய்யப்பட்டது.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் வரும் 20-ம் தேதி அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்க உள்ளார். அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
பதவிக் காலம் முடிவடையும் அதிபர் ஜோ பைடன் விழாவில் கலந்துகொண்டு அதிகாரத்தை அவரிடம் ஒப்படைக்கிறார். இந்த விழாவில் பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதற்கிடையே, அதிபர் பதவியில் ஒரு வார காலம் மீதமுள்ள நிலையில் கடைசி வெளிநாட்டுப் பயணமாக இத்தாலி செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் கலிபோர்னியா காட்டுத்தீ எதிரொலியாக அதிபர் பைடனின் இத்தாலி பயணம் ரத்துசெய்யப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க அதிபரின் ஆக உயரிய மெடல் ஆப் பிரீடம் விருது போப் பிரான்சிசுக்கு வழங்கப்பட்டது. அதிபர் ஜோ பைடன் முதல் முறையாக அந்த உயரிய விருதை வழங்கினார்.
போப் பிரான்சிசிடம் தொலைபேசியில் பேசிய அதிபர் பைடன் இந்த விருதை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், ஏழை மக்களுக்கு சேவையாற்றிய போப் பிரான்சிஸின் அர்ப்பணிப்பை பாராட்டினார்.
இதுதொடர்பாக, அதிபர் பைடன் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், உங்கள் பணிவையும் பண்பையும் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. நீங்கள் காட்டும் அன்புக்கு ஈடு இணை இல்லை என பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் வளர்ச்சி, பண்புகள், பாதுகாப்பு, உலக அமைதி போன்றவற்றில் சிறந்த பங்காற்றியவர்களுக்கு அதிபரின் மெடல் ஆப் பிரீடம் விருது வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- லாஸ் ஏஞ்சல்ஸ்-இல் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.
- காட்டுத் தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்பு துறையினர் தீவிரம்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் தொடர்ந்து பரவி வரும் காட்டுத் தீயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. ஈட்டன் பகுதியில் 11 பேரும், பாலிசேட்ஸ் பகுதியில் 5 பேரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காட்டுத் தீ ஏற்பட்டுள்ள பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிப்பதால் தீயை அணைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. பள்ளத்தாக்கு பகுதிகளில் தீயை அணைக்க வீரர்கள் போராடிக்கொண்டிருந்தபோது விமானம் மூலம் வானில் இருந்து தீ தடுப்பு மருந்து வீசிப்பட்டது.
இது குறித்து ஃபெடரல் அவசர கால மேலாண்மை ஆணைய தலைவர் கூறும் போது, "காட்டுத் தீ ஏற்பட்டுள்ள பகுதிகளில் காற்றின் வேகம் அபாயகரமாகவும், தீவிரமாகவும் மாறியுள்ளது. இதில் மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய மிகப்பெரிய விஷயம் இது இன்னும் அதி பயங்கரமாக இருப்பது தான்," என்றார்.
முன்னதாக காட்டுத் தீ ஏற்பட்டுள்ள பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 80 கிலோமீட்டர்கள் வேகத்திற்கு வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
- கட்டணங்கள், வரிகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றினால் தாக்கம் இருக்கும்.
- புதிய பாதிப்புகள் எதிா்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் "சற்று பலவீனமாக" இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) கணித்துள்ளது
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நேற்று முன்தினம் [வெள்ளிக்கிழமை] நிருபர்கள் குழுவுடன் வருடாந்திர ஊடக சந்திப்பில் ஐஎம்எஃப் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், உலகப் பொருளாதாரம் நிலைத்தன்மையுடன் இருக்கும் நிலையில், இந்திய பொருளாதாரம் சற்று பலவீனமடையும்.
நாங்கள் முன்பு எதிர்பார்த்ததை விட அமெரிக்கா சற்று சிறப்பாக செயல்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியம் சற்று ஸ்தம்பித்துள்ளது, இந்தியா கொஞ்சம் பலவீனமாக உள்ளது. பிரேசில் உயா் பணவீக்க பாதிப்பை சந்தித்து வருகிறது. சீனா, பண வீக்கத்துக்கு எதிரான பாதிப்பைச் சந்தித்து வருகிறது. பொருள்களின் விலை குறைந்து வாங்கும் திறன் அதிகரித்திருப்பதால், உள்நாட்டு தேவை அதிகரித்து சவாலான சூழ்நிலை உருவாகியுள்ளது.
2025 ஆம் ஆண்டு மிகவும் நிச்சயமற்ற தன்மையைக் கொண்டிருக்கும். குறிப்பாக பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படையில் அது இருக்கும்.
உலகளாவிய அளவில் அமெரிக்கப் பொருளாதாரத்தின் அளவு மற்றும் பங்கைக் கருத்தில் கொண்டு புதிதாக அமைய உள்ள புதிய அரசின் கொள்கைகள் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக கட்டணங்கள், வரிகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றினால் தாக்கம் இருக்கும்.

குறைந்த வருவாய் நாடுகளின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளில், புதிய பாதிப்புகள் எதிா்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
உலகளாவிய விநியோகச் சங்கிலி, நடுத்தர பொருளாதார நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். முக்கியமாக, ஆசிய பிராந்தியத்தில் தாக்கம் இருக்கும் என்று தெரிவித்தார்.
ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் 47 வது அதிபராக பதவியேற்கும் டோனால்டு டிரம்ப், மற்ற நாடுகள் மீது வரி விதிப்பில் கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் அபார வெற்றி பெற்றார்.
- அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் அபார வெற்றி பெற்றார். டிரம்ப் புதிய அதிபராகப் பதவியேற்க உள்ளார்.
இதற்கிடையே, வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், போப் பிரான்சிஸ் மற்றும் இத்தாலிய அதிபர் செர்ஜியோ மேட்டரெல்லா, பிரதமர் ஜியார்ஜியா மெலோனி ஆகியோரை சந்திப்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜனவரி 9-ம் தேதி முதல் ஜனவரி 12-ம் தேதி வரை ரோம் நகருக்குச் செல்கிறார் என்றும், அதிபர் ஜோ பைடன் போப் பிரான்சிசை சந்திக்க உள்ளார் என தெரிவித்து இருந்தது.
அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்பிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கு முன் அதிபர் ஜோ பைடன் செல்லும் கடைசி வெளிநாட்டுப் பயணமாக இது இருக்கலாம் என கூறப்பட்டது.
இந்நிலையில், அதிபர் ஜோ பைடனின் இத்தாலி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
கலிபோர்னியாவில் பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயை போராடி அணைக்கும் முயற்சியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அதிபரின் இத்தாலி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.






