என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • தலையை சற்று அசைத்ததால் அவரது காதில் குண்டு உரசி நூலிழையில் உயிர் தப்பினார்
    • "மிகவும் எளிமையான செய்தியை வழங்க இங்கு திரும்பி வந்துள்ளேன்

    அதிபர் தேர்தல் 

    உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட அமெரிக்காவுக்கான அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராகக் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

     பென்சில்வேனியா துப்பாக்கிசூடு

    தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுவரும் டிரம்ப் மீது கொலை முயற்சிகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. முதலாவதாக கடந்த ஜீலை 13 ஆம் தேதி பென்சில்வேனியா மாகாணத்தில் பட்லர் பகுதியில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த டிரம்ப் மீது தாமஸ் குரூக்ஸ் என்ற 20 வயது இளைஞன் துப்பாக்கிச்சூடு நடத்தினான். அப்போது தலையை சற்று அசைத்ததால் டிரம்ப் நூலிழையில் உயிர் தப்பினார். இருப்பினும் அவரது காதில் குண்டு உரசி காயம் ஏற்பட்டுள்ளது.

     

    தாமஸ் குரூக்ஸ் அந்த இடத்திலே சுட்டுக் கொல்லப்பட்டான். இதைத்தொடர்ந்து புளோரிடா கோல்ப் மைதானத்தில் வைத்து கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி மற்றொரு கொலை முயற்சி நடந்தது. ஆனால் அதில் இருந்தும் அவர் உயிர்தப்பினார். இந்நிலையில் முதல் முதலில் பென்சில்வேனியா தன்மீது துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் டிரம்ப் தற்போது மீண்டும் பிரச்சாரம் செய்ய வந்திருக்கிறார்.

     

    எலான் மஸ்க் விஜயம்

    அவரோடு தொழிலதிபர் எலான் மஸ்கும் பிரச்சாரம் செய்ய வந்துள்ளார். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா மற்றும் எக்ஸ் தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் இந்த அதிபர் தேர்தலில் டிரம்பின் தீவிர ஆதரவாளராக மாறியுள்ளார். வெற்றி பெற்றால் மஸ்க்குக்கு அமைச்சரவையில் முக்கிய இடம் தருவேன் என்றும் டிரம்ப் உறுதியளித்துள்ளார். தனது உயிருக்கு ஆபத்து நேர்ந்த இடத்துக்கே மீண்டும் திரும்பியுள்ள டிரம்ப் அங்கு வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளார்.

     

    செய்தி 

    அங்கு திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பேசிய டிரம்ப், "மிகவும் எளிமையான செய்தியை வழங்க பட்லருக்கு (Butler) திரும்பி வந்துள்ளேன், நாம் அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்ற போகிறோம், நாம் தேர்தலில் வெற்றி பெற போகிறோம் என்பது தான் அந்த செய்தி.

    இங்கு என்மீது துப்பாக்கி சூடு நடத்தியவர் என்னையும் , உருவாக இருக்கும் மிகப்பெரிய இயக்கத்தையும் தடுக்கும் நோக்கத்துடன் இருந்தார்" என்று பேசியுள்ளார்.

    மேலும் இந்த கூட்டத்தில் பேசிய எலான் மஸ்க், ஜனநாயக கட்சியினர் அமெரிக்க மக்களிடம் இருந்து, பேச்சுரிமையையும், ஆயுதம் வைத்து இருப்பதற்கான உரிமையையும் பறிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

    • அவர்கள் நமது அணு சக்தியை தாக்காத வரையில் நாம் தாக்க வேண்டாம் என்று பைடன் கூறுகிறார்.
    • முதலில் அணு சக்தியை தாக்குங்கள், அதன்பிறகு மற்றதைப் பற்றி கவலைப்படுங்கள்.

    பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 180 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் ஏவியது. இந்த திடீர் தாக்குதலால் நிலை தடுமாறிய இஸ்ரேல் பதில் தாக்குதலுக்கு அமெரிக்காவுடன் சேர்ந்து திட்டம் தீட்டி வருகிறது. ஈரானின் எண்ணெய் வயல்களையும், அணு உலையையும் தாக்கும் திட்டமும் இஸ்ரேலிடம் உள்ளது.

    ஆனால் அதனால் ஏற்படும் விளைவுகளால் அமெரிக்கா அதை ஆமோதிக்க தயக்கம் காட்டுகிறது. வெள்ளை மாளிகையில் நேற்றைய தினம் பேசிய அதிபர் ஜோ பைடனும் ஈரான் அணு உலையை தாக்குவதற்கு பதிலாக வேறு வழிகளை யோசிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் அமெரிக்க முன்னாள் அதிபரும் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடக்கும் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடுபவருமான டிரம்ப் மாறுபட்ட கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

    நேற்றைய தினம் வடக்கு கரோலினா பகுதியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட டிரம்ப் பேசியதாவது, ஈரானை தாக்கலாமா என்று அவரிடம் [ஜோ பைடனிடம்] கேள்வி கேட்கப்பட்டது. அவர்கள் நமது அணு சக்தியை தாக்காத வரையில் நாம் தாக்க  வேண்டாம் என்று பைடன் கூறுகிறார்.

    அவர் [பைடன்] இந்த விஷயத்தில் தவறாக புரிதலுடன் இருக்கிறார். நீங்கள் தாக்குதல் நடத்த வேண்டியதே அணு சக்தி மீதுதான். அணு ஆயுதங்கள் தானே உலகிலேயே அதிக ஆபத்துடைய ஒன்று. எனவே முதலில் அணு சக்தியை தாக்குங்கள், அதன்பிறகு மற்றதைப் பற்றி கவலைப்படுங்கள். அவர்கள் [ஈரான்] அணு ஆயுதத்தைப் பயன்படுத்த திட்டமிட்டிருந்தால் நிச்சயம் பயன்படுத்தியே தீர்வார்கள் என்று இஸ்ரேலுக்கு டிரம்ப் அறிவியரை வழங்கியுள்ளார்.

     

    ஈரானில் ஒரே ஒரு அணுசக்தி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு அணு உலை உள்ளிட்ட அணுசக்தி சார்ந்தவை இயங்கி வருகிறன. தலைநகர் தெஹ்ரானுக்கு தெற்கே 300 கிலோமீட்டர் தொலைவில் ஐஸ்பஹான் நகரில் வளைகுடா கடற்கரை அருகே அந்த அணுசக்தி நிலயமானது செயல்பட்டு வருகிறது. ரஷியாவுடன் இணைந்து கடந்த 1992 ஆம் ஆண்டு இந்த அணு உலை உருவாக்கப்பட்டது.

    • தனது பதவிக் காலத்திலேயே முதல் முறையாக வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பு அறையில் தோன்றினார் பைடன்
    • ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக அணு உலை மற்றும் எண்ணெய் வயல்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துமா?

    வெள்ளை மாளிகை 

    அதிபர் தேர்தல், பாலஸ்தீன போர், மத்திய கிழக்கு போர் பதற்றம் உள்ளிட்டவைகளுக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார். தனது பதவிக் காலத்திலேயே முதல் முறையாக நேற்றய தினம் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பு அறையில் [Briefing room]  தோன்றி ஜோ பைடன் பேட்டியளித்துள்ளார்.

     

    அமைதி - அரசியல் 

    அப்போது இஸ்ரேல் விவகாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், அமெரிக்க அதிபர் தேர்தலில் தாக்கம் செலுத்துவதற்காக தான் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு [பாலஸ்தீன] அமைதி உடன்படிக்கயை ஏற்காமல் இருக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் அது விஷயமில்லை. இஸ்ரேலுக்கு நான் [அமெரிக்க அரசு] உதவியதுபோல் வேறு எந்த நாட்டின் அரசும் உதவவில்லை, அதை நேதன்யாகு நினைத்துப் பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்கா முன்மொழிந்த காசா அமைதி உடன்படிக்கையை ஏற்பதில் நேதன்யாகு பிடிகொடுக்காமல் இருப்பதை சந்தேகிக்கும் விதமாக பைடன் இவ்வாறு பேசியுள்ளார்

     

    எண்ணெய் வயல்

    மேலும் ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக அணு உலை மற்றும் எண்ணெய் வயல்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துமா? என்ற கேள்விக்கு பதிலளித்த பைடன், அது பற்றி விவாதித்து வருகிறோம். அவர்கள் [இஸ்ரேல்] இடத்தில் நான் இருந்தால் எண்ணெய் வயல்களை தாக்குவதை விட அதற்கு மாற்றான வேறு வழிகளையே யோசிப்பேன் என்று தெரிவித்தார்.

    ஜோக் 

    இறுதியாக அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகிய முடிவை மாற்றி மீண்டும் போட்டியிட வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்வி வந்து விழுந்தது. இதற்குத் தலை அசைத்தபடியே சிரித்துவிட்டு, நான் திரும்பி வந்துவிட்டேன் என்று ஜோக் அடித்துவிட்டு பேட்டியை முடித்துக்கொண்டு அறையை விட்டு நடையைக் கட்டினார் பைடன். நவம்பர் 5 ஆம் தேதி நடக்க உள்ள  அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • உலக கோடீஸ்வரர்கள் பட்டியலை புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டது.
    • இதில் மெட்டா நிறுவன தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் 2வது இடத்திற்கு முன்னேறினார்.

    வாஷிங்டன்:

    உலக கோடீஸ்வரர்கள் பட்டியலை புளூம்பெர்க் நிறுவனம் ஒவ்வொரு வாரமும் வெளியிட்டு வருகிறது. கடந்த வாரம் வெளியான பட்டியலில் டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ. எலான் மஸ்க் முதலிடத்தில் இருந்தார்

    இந்நிலையில், இந்த வாரம் வெளியான பட்டியலிலும் எலான் மஸ்க் 256 பில்லியன் டாலருடன் முதலிடத்தில் உள்ளார்.

    இரண்டாவது இடத்திற்கு அமெரிக்காவைச் சேர்ந்த மெட்டா நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ. மார்க் ஜுக்கர்பெர்க் முன்னேறினார். அவரது சொத்து மதிப்பு 206 பில்லியன் டாலர்களுடன் உள்ளார்.

    கடந்த சில ஆண்டுகளில் , சமூக வலைதளங்களில் அதிகம் வளர்ந்த நிறுவனமாக மெட்டா உருவெடுத்து உள்ளது. மாதந்தோறும் 30 கோடி பேர் இதனை பயன்படுத்தி வருகின்றனர். உலகின் 7 வது பெரிய கார்பரேட்டாக இந்த நிறுவனம் உருவெடுத்து உள்ளது.

    பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, பின்னர் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் ஆப் ஆகியவற்றை கையகப்படுத்தியது.

    ஏற்கனவே 2-வது இடத்தில் இருந்த அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் இம்முறை 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார். அவரது சொத்து மதிப்பு 205 பில்லியன் டாலர்கள். 4வது இடத்தில் பிரான்சின் பெர்னார்ட் அர்னால்ட்- 193 பில்லியன் டாலர் ஆகும்.

    5 முதல் 10-வது இடம் வரை அமெரிக்க கோடீஸ்வரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

    • ஈரான் மீதான தாக்குதலை உடனே தொடங்கும்படி முன்னாள் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
    • ஈரானின் ஏவுகணை தாக்குதல் குறித்து ஜி-7 நாடுகள் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் பேசினார்.

    வாஷிங்டன்:

    லெபனானில் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் இஸ்ரேல் ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஈரானின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் விதமாக அங்குள்ள எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க இதுவே சரியான தருணம் என இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நப்தாலி பென்னட் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான தாக்குதலை உடனடியாக தொடங்க இஸ்ரேல் அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.

    இதற்கிடையே, இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணை தாக்குதல் குறித்து ஜி-7 நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் பேசினார்.

    இந்நிலையில், இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் முழு ஆதரவு உள்ளது. ஈரான் எண்ணெய் ஆலைகள்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது குறித்து விவாதித்து வருகிறோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

    • புளோரிடா, ஜார்ஜியா மற்றும் கரோலினா பகுதிகளில் மின்சாரம் இல்லை:
    • இதனால் 30 லட்சத்துக்கு மேற்பட்ட வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் ஹெலன் சூறாவளி புயல் பலவீனமடைந்தது. இதையடுத்து, புளோரிடா பகுதியில் சூறாவளி கரையைக் கடந்தது. இதனால் பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டது.

    அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதி மற்றும் புளோரிடா மாகாணம் முழுவதும் பெரிய அளவில் அழிவை ஏற்படுத்தியது. சூறாவளியால் மணிக்கு 225 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. வீடுகள் பல சூறாவளியால் சேதமடைந்தன.

    ஜார்ஜியா மாகாணத்தில் பலர் உயிரிழந்தனர். இதேபோல் புளோரிடா, தெற்கு மற்றும் வடக்கு கரோலினாவில் பலர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், ஹெலன் புயலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் சூறாவளியின் பாதிப்புகளை பற்றி விரிவாக விளக்கப்பட்டது என வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்தார்.

    புளோரிடா, ஜார்ஜியா, கரோலினா பகுதிகளில் மின்சாரம் இன்றி 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் பாதிப்பு அடைந்தன. பள்ளிகள், பல்கலைக்கழகங்களில் வகுப்புகள் ரத்துசெய்யப்பட்டன. புளோரிடா விமான நிலையங்கள் மூடப்பட்டன.

    • 50க்கும் மேற்பட்ட இடங்களில் எலிகள் கடித்ததால் குழந்தையில் முகம் உட்படப் பல உடல்பாகங்கள் சிதைந்தது.
    • 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    அமெரிக்காவில் உள்ள இந்தியானவை சேர்ந்த டேவிட் ஸ்கோனாபாம் என்பவரின் 6 மாத குழந்தையை எலிகள் கொடூரமாக கடித்துக் குதறியது. 50க்கும் மேற்பட்ட இடங்களில் எலிகள் கடித்ததால் பாதிக்கப்பட்ட குழந்தையில் முகம் உட்படப் பல உடல்பாகங்கள் சிதைந்தது.

    2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த ஓராண்டாக நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் எலிகடியால் பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    குழந்தையை ஒழுங்காக பராமரிக்காதது வீட்டிலிருந்த எலிகளை அகற்றாமல் குழந்தைக்கு தீங்கு ஏற்படுத்தியது என்ற குற்றச்சாட்டிற்காக இந்த தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.

    • மாரத்தான் வீரரான ஜோன்ஸ், இயற்கை பேரிடரை கண்டு பயப்படவில்லை.
    • இந்த ஆண்டின் சிறந்த தந்தை எனவும் பெயரெடுத்தார்.

    அமெரிக்காவில் தனது மகளின் திருமணத்தில் பங்கேற்பதற்காக புயல் மழைக்கு மத்தியில் 50 கி.மீ தூரம் நடந்து சென்ற தந்தை, இந்த ஆண்டின் சிறந்த தந்தையாக தேர்வாகியுள்ளார். அந்த தந்தையின் பெயர் டேவிட் ஜோன்ஸ். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள ஜான்சன் சிட்டியில் வசிக்கிறார்.

    இவரது மகள் எலிசபெத்துக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்துக்கு முந்தைய நாள் அவர் அங்குள்ள வேறொரு பகுதியில் இருந்தார். அந்த 2 பகுதிகளுக்கும் இடையே உள்ள தூரம் 50 கி.மீ. ஆகும். ஆனால் அந்த பகுதிக்கு காரில் செல்ல வேண்டுமென்றால் 2 மணி நேரம் ஆகும்.

    ஆனால் அங்கு பெய்த புயல் மழை காரணமாக போக்குவரத்து தடைபட்டது. இதனால் திருமணம் நடைபெற்ற பகுதிக்கு கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் மகளின் திருமண விழாவில் பங்கேற்பதில் டேவிட் ஜோன்ஸ் தீவிரமாக இருந்தார்.

    மாரத்தான் வீரரான ஜோன்ஸ், இயற்கை பேரிடரை கண்டு பயப்படவில்லை. மகளின் திருமணத்தில் பங்கேற்க அங்கிருந்து 50 கி.மீ. தூரம் நடந்தே செல்வது என்று முடிவு செய்தார். தனது பயணத்துக்கு தேவையான சில அத்தியாவசிய பொருட்களை ஒரு பையில் எடுத்துக்கொண்டு அந்த பையை தனது முதுகில் மாட்டியபடி நடை பயணத்தை தொடங்கினார்.

    கடும் புயல், மழைக்கு மத்தியில் பெரும் சோதனைகளை அனுபவித்து, சுமார் 12 மணி நேரத்தில் 50 கி.மீ. தூரம் நடந்து சென்று தனது மகளின் திருமணம் நடைபெற்ற இடத்தை அடைந்தார். அவரை பார்த்ததும் அவரது மகள் எலிசபெத் ஆனந்த கண்ணீர் வடித்தார்.

    மகளின் திருமணத்தில் பங்கேற்க கடும் புயல், மழைக்கு மத்தியில் 50 கி.மீ. தூரம் நடந்து சென்ற தந்தை அனைவருக்கும் ஹீரோவாக பார்க்கப்படுகிறார். மேலும் இந்த ஆண்டின் சிறந்த தந்தை எனவும் பெயரெடுத்தார்.

    • இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது
    • அதிபர் ஜோ பைடன், அமெரிக்கா இஸ்ரேலுக்கு முழு ஆதரவாக உள்ளது என்றார்.

    வாஷிங்டன்:

    இஸ்ரேல் நாட்டின்மீது ஈரான் நேற்று முன்தினம் இரவு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதுப்பற்றி தெரியவந்ததும் உடனடியாக இஸ்ரேலுக்கு உதவும் வகையில் ஈரானின் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தும்படி அமெரிக்க ராணுவத்துக்கு அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டார்.

    அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த அதிபர் ஜோ பைடன், அமெரிக்கா இஸ்ரேலுக்கு முழு ஆதரவாக உள்ளது என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், இஸ்ரேலின் பாதுகாப்புக்கான அமெரிக்காவின் இரும்புக் கவச உறுதிப்பாட்டை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

    இது தொடர்பாக அதிபர் பைடன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளசெய்தியில், இன்று காலை இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் ஏற்றுக்கொள்ள முடியாத தாக்குதலைப் பற்றி விவாதிக்கவும், புதிய தடைகள் உள்பட இந்தத் தாக்குதலுக்கான பதிலை ஒருங்கிணைக்கவும் ஜி7 தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தேன். இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான அமெரிக்காவின் இரும்புக் கவச உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினேன் என பதிவிட்டுள்ளார்.

    • அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதால் ஆளும் ஜனநாயக கட்சிக்கு இந்த போர் சூழல் தலைவலியாக மாறி உள்ளது.
    • சில நேரம், என்னதான் நடக்கிறது என்று பார்ப்பதற்கு நீங்கள் அவர்களை அப்படியே [சண்டைபோட] விட்டுவிட வேண்டும்.

    பாலஸ்தீனம் மற்றும் லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு மத்தியில் ஈரான் ராணுவம் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று இரவு முதல் 200 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்ளிட்ட பகுதிகளில் ஈரான் ஏவியுள்ளது. அவற்றை இஸ்ரேல் ராணுவம் தாக்கி அளித்து வரும் சூழலில் மக்கள் பாதுகாப்பு பங்கர்களில் தஞ்சம் அடைத்துள்ளனர்.

    இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் மீதான தாக்குதலை முறியடிக்கும்படி அமெரிக்க ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார். நவம்பர் 5 ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதால் பைடன் தலைமையிலான ஆளும் ஜனநாயக கட்சிக்கு இந்த போர் சூழல் தலைவலியாக மாறி உள்ளது.

    இந்நிலையில் இஸ்ரேல்- ஈரான் சண்டை குறித்து குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனால்டு டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று பேசிய டிரம்ப், இது மிகவும் மோசமானதாக உள்ளது. ஆனால் இது நடந்து தான் ஆக வேண்டும்.

     

    பள்ளி வளாகத்தில் இரண்டு குழந்தைகள் சண்டைபோட்டுக் கொள்வதுபோல இது உள்ளது. சில நேரம், என்னதான் நடக்கிறது என்று பார்ப்பதற்கு நீங்கள் அவர்களை அப்படியே [சண்டைபோட] விட்டுவிட வேண்டும். ஆனால் நிச்சயம் இது மோசமான போர். இது எங்கு சென்று முடியும்? அவர்கள் [ஈரான்] 200 ராக்கெட்டுகளை ஏவியுள்ளனர், இது நிச்சயம் நடக்கக்கூடாத ஒன்று, எனவே மத்திய கிழக்கில் நாம் [அமெரிக்கா] தலையிட்டாக வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

    • அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
    • குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அதிபர் தேர்தலுக்கான பிரசார வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் அருகே முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் 43 அடி உயர நிர்வாண சிலை 2 நாட்களுக்கு முன்பு நிறுவப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வந்தன.

    இந்நிலையில் சர்ச்சைக்குரிய அந்த சிலை இன்று அகற்றப்பட்டுள்ளது. ஆனால் யார் இந்த சிலையை வைத்தார்கள் என்ற தகவல் இன்னும் தெரியவில்லை. 

    • போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
    • அதிநவீன டிரோனை ஏவுகணை மூலம் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

    காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

    மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

    இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது.

    அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், இன்னும் 100க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் ஹமாஸ் வசம் பணய கைதிகளாக உள்ளனர்.

    அதேவேளை, இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இதனிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

    ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேல் மீதும் அவ்வப்போது ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதேபோல், செங்கடல் பகுதியில் பாதுகாப்பு, ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அமெரிக்க டிரோன்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், செங்கடலில் அமெரிக்காவுக்கு சொந்தமான டிரோனை ஹவுதி கிளர்ச்சியளர்கள் சுட்டு வீழ்த்தினர். எம்.கியூ-9 என்ற அதிநவீன டிரோனை ஏவுகணை மூலம் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

    ×