என் மலர்
பிரேசில்
- விசா இல்லாததால் விமான நிலையத்தில் ஒரு வாரமாக தவித்து வருகிறார்கள்.
- ஆசியாவில் இருந்து, வட அமெரிக்காவிற்குச் செல்லும் வழியில் ஒரு இடமாற்றத்திற்காக இங்கு வருகிறார்கள்.
பிரேசிலியா:
இந்தியா, நேபாளம். வியட்நாமில் இருந்து ஏராளமான புலம்பெயர்ந்தோர் பிரேசில் நாட்டுக்கு சென்றனர். சுமார் 660 பேர் அங்குள்ள சாவ் பாலோவின் சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றடைந்தனர். அவர்கள் தங்களை பிரேசிலுக்குள் அனுமதிக்கும்படி கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்கள் விசா இல்லாததால் விமான நிலையத்தில் ஒரு வாரமாக தவித்து வருகிறார்கள். அவர்கள் தரையில் படுத்து தூங்குகிறார்கள். உணவு, தண்ணீர் கிடைக்காமல் அவர்கள் பரிதவிக்கிறார்கள். இதில் சிலரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, கனடாவுக்கு செல்வதற்காக பிரேசில் வழியை வெளிநாட்டினர் பயன்படுத்துவதை தடுக்க விதிகளை அந்நாட்டு அரசாங்கம் கடுமையாக்கி புதிய சட்டத்தை அறிவித்துள்ளது. பிரேசில் விசா இல்லாத வெளிநாட்டுப் பயணிகள் வேறொரு நாட்டிற்குச் செல்ல வேண்டும் அல்லது தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என்று பிரேசிலின் பொது பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதனால் 660 அகதிகள் பிரேசிலுக்குள் நுழைய முடியாமல் தவித்து வருகிறார்கள். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, பிரேசிலில் வெளிநாட்டுப் பயணிகளின் வருகை ஏற்றம் கண்டுள்ளது, குறிப்பாக ஆசியாவில் இருந்து, வட அமெரிக்காவிற்குச் செல்லும் வழியில் ஒரு இடமாற்றத்திற்காக இங்கு வருகிறார்கள்.
பிரேசிலுக்குள் நுழைய, அவர்கள் தங்கள் சொந்த நாடுகளில் துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல்கள் இருப்பதாக அகதி அந்தஸ்தைக் கேட்கிறார்கள். ஆனால் அதன்பின் பெரும்பான்மையானவர்கள் அமெரிக்காவுக்கு பயணம் செய்கிறார்கள். தற்போது விசா இல்லாமல் சாவ் பாலோவுக்கு வரும் பயணிகள் பிரேசிலில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றனர்.
- துர்நாற்றத்தை கட்டுப்படுத்த மூக்கில் க்ளிப் மாட்டி உள்ளார்.
- இது எனக்கு வேலை செய்தது, என் தோல் உதிர்வதை நிறுத்திவிட்டது என்று டிபோரா பெய்க்ஸோடா தெரிவித்துள்ளார்.
பிரேசிலை சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் டிபோரா பெய்க்ஸோடா. இவர் வயதாவதை தடுப்பதற்கான சரும பராமரிப்பு (Skin care) எனக்கூறி தனது மலத்தை முகத்தில் பூசிக்கொண்டு வீடியோ பதிவிட்டுள்ளது பேசு பொருளாகி உள்ளது.
அந்த வீடியோவில் அவர் தனது மலத்தை முகத்தில் எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதை காட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இன்ஸ்டாகிராமில் 6.58 லட்சத்திற்கும் அதிக ஃபாலோவர்களைக் கொண்ட பெய்க்ஸோடா, தனது மலத்தை வழக்கமான ஃபேஸ் மாஸ்க் போல முகத்தில் தடவிக் கொள்கிறார்.
துர்நாற்றத்தை கட்டுப்படுத்த மூக்கில் க்ளிப் மாட்டி உள்ளார். பின்னர் இந்த ஃபேஸ் மாஸ்க்கை கழுவுகிறார். அதன் பின்னர் அவர் சருமத்தை காட்டுவது போல் இந்த வீடியோ முடிகிறது. இது எனக்கு வேலை செய்தது, என் தோல் உதிர்வதை நிறுத்திவிட்டது என்று டிபோரா பெய்க்ஸோடா தெரிவித்துள்ளார்.
வழக்கத்திற்கு மாறான இந்த அழகு சிகிச்சையை விமர்சித்த மருத்துவ நிபுணர்கள், இவ்வாறு செய்வதால் நன்மைகளை விட, உடல்நல அபாயங்கள் அதிகமாக இருக்கும் என்று எச்சரித்தனர்.
லண்டனில் உள்ள கடோகன் கிளினிக்கின் ஆலோசகரும், சரும மருத்துவரான டாக்டர். சோஃபி மோமன் கூறுகையில், "அனைத்து தோல் பராமரிப்பு போக்குகளிலும், இது நான் கண்ட விசித்திரமான ஒன்றாகும். மலத்தை ஃபேஸ் மாஸ்க்காக பயன்படுத்துவது சருமத்திற்கு நன்மை பயக்கும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை," என்று தெரிவித்தார்.
டிபோரா பெய்க்ஸோடா ஏற்கனவே தனது மாதவிடாய் ரத்தத்தை சரும பராமரிப்புக்கு பயன்படுத்தி இருந்தார். தற்போது புதுவித யோசனையுடன் வந்துள்ள இவர் இதனால் தனது சருமத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
- விமானம் விழுந்த வேகத்தில் வெடித்துச் சிதறியதால் அப்பகுதியே தீப் பிழம்பாக மாறியது.
- விமானம் விபத்துக்குள்ளான பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது
பிரேசிலின் சாவ் பாலோ மாநிலத்திலிருந்து 61 பயணிகளுடன் புறப்பட விமானமானது நேற்று [வெள்ளிக்கிழமை] மதியம் வின்ஹெடோ நகருக்கு அருகே வந்தபோது விமானிகளின் கட்டுப்பாட்டை இழந்து பயங்கர விபத்துக்குள்ளானது. 2283 என்ற அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து செங்குத்தாக இறங்கி அப்பகுதியில் உள்ள வீடுகளின் மேல் விழுந்து வெடித்துச் சிதறியது.
விமானம் விழுந்த வேகத்தில் வெடித்துச் சிதறியதால் அப்பகுதியே தீப் பிழம்பாக மாறியது. விமானத்தில் பயணித்த 57 பயணிகளும் 4 பணியாளர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்து நடந்த இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படை தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டது. இந்த விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா,ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தற்போது விபத்து குறித்து விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.
விபத்து தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில், விமானம் நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுகிறது. பின்னர் வின்ஹெடோ நகரில் உள்ள வீடுகளின் மீது தலைகீழாகக் கவிழ்ந்து விழுகிறது. இதில் சில நொடிகளில் விமானத்தின் ஒரு பெரிய பகுதியில் தீப்பிடித்து எரிகிறது. பின்னர் விமானத்திலிருந்து பெரிய கரும்புகை வானத்தை நோக்கி வெளியேறுவது பதிவாகியுள்ளது.
- சமூக வலைதளம் மூலம் நட்பான இவர்கள் கடந்த 2006-ம் ஆண்டு சந்தித்து கொண்டனர்.
- புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
கின்னஸ் உலக சாதனை அமைப்பு குறிப்பிடத்தக்க சிலரது சாதனைகளை தொடர்ந்து அங்கீகரித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அந்த அமைப்பு, உலகின் குள்ளமான ஜோடியின் திருமணத்தை அங்கீகரித்திருப்பது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரேசிலை சேர்ந்த பவ்லோ கேப்ரியல் டி சில்வா- கட்யூசியா லி ஹோஷினோ ஜோடி உலகின் மிகவும் குள்ளமான ஜோடி என பெயர் பெற்றவர்கள். பவ்லோவின் உயரம் 90.28 சென்டி மீட்டர் (35.54 அங்குலம்) ஆகும். கட்யூசியாவின் உயரம் 91.13 சென்டி மீட்டர் (35.88 அங்குலம்) ஆகும். இருவருமே எலும்பு வளர்ச்சி குறைபாடு கொண்டவர்கள் ஆவார்கள்.
சமூக வலைதளம் மூலம் நட்பான இவர்கள் கடந்த 2006-ம் ஆண்டு சந்தித்து கொண்டனர். அதன்பிறகு 15 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு முறை சந்தித்து பேசிய அவர்கள் தங்களது 31-28 வயதில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் உலகின் மிகவும் குள்ளமான ஜோடி என இவர்களை கின்னஸ் சாதனை அமைப்பு அங்கீகரித்து, தங்களின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டது.
இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு விபத்து.
- விபத்தில் விமானி உள்பட 2 பேர் பலி.
பிரேசில்:
தெற்கு பிரேசிலின் சான்டா கட்டரினா மாகாணம் வால்டரேஸ் நகரில் இருந்து மினாஸ் கிரேஸ் மாகாணம் புளோரினோபொலிஸ் நகருக்கு சிறிய ரக விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இடபோ நகர் அருகே நடுவானில் அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது அதன் என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதனிடையே கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை விமானிகள் உடனடியாக இழந்தனர். இதனால் நடுவானில் இருந்து கீழே தரையில் விழுந்து அந்த விமானம் நொறுங்கியது. இந்த விபத்தில் விமானி உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
- காசா மீதான தாக்குதலை பிரேசில் அதிபர் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.
- காசா மீதான மனிதாபிமானமற்ற நடவடிக்கைக்கு எதிரான இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
பிரேசில் அதிபர் இனாசியோ லுலா டா சில்வா தொடர்ந்து இஸ்ரேலை விமர்சனம் செய்து வந்தார். காசா மீதான தாக்குதலை ஹொலோகாஸ்ட் உடன் ஒப்பிட்டு விமர்சித்தார்.
இதனால் பொது கண்டனம் தெரிவிக்க பிரேசில் தூதருக்கு இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி சம்மன் அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில் இஸ்ரேலுக்கான பிரேசில் பிரதமரை திரும்பப் பெறுவதாக பிரேசில் அதிபர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பிரேசில் அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
காசா மீதான மனிதாபிமானமற்ற நடவடிக்கைக்கு எதிராகவும், தற்போது வரை அதில் முன்னேற்றம் ஏதும் இல்லை என்பதால் பிரேசில் தூதரை திரும்பப் பெறும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
- இன்னும் 134 பேரை காணவில்லை. அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை.
- படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணி நடந்து வருகிறது.
தெற்கு பிரேசிலில் உள்ள ரியோ கிராண்டே சுல் மாநில தலைநகர் போர்டோ அலெக்ரே உள்ளிட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் பலத்த மழை கொட்டிவருகிறது.
இதனால் அந்த நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. சாலைகள் அனைத்தும் ஆறுகளாக மாறிவிட்டன. பாலங்கள்,ரோடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. வெள்ளத்தில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 107- ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 134 பேரை காணவில்லை. அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணி நடந்து வருகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 65 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வரும் நாட்களிலும் தெற்கு பிரேசில் பகுதியில் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பெருவெள்ளம் சூழ்ந்த நகர்ப்பகுதி நடுவே பைபர் படகு மூலம் முதியவர் ஒருவர் மீட்கப்பட்டார்.
- வெள்ளத்தில் சிக்கியபோது பிரிந்த அவரின் 4 வளர்ப்பு நாய்களும் மீட்புத்துறையினரால் மீட்கப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
வெள்ளத்தில் பிரிந்துபோன தனது வளர்ப்பு நாய்களுடன் மீண்டும் இணைந்த உரிமையாளர் குறித்தான வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.
பிரேசிலின் ரியோ கிராண்ட் சுலே மாகாணத்தில் கனமழை காரணமாக அங்கு திடீர் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 100-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிய நிலையில் பலர் வீடுகளை இழந்தும், சொந்தங்களை பிரிந்தும் தவித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் பேரிடரின்போது பிரிந்துபோன தன் வளர்ப்பு நாய்களுடன் அதன் உரிமையாளர் மீண்டும் இணைவது குறித்தான காட்சிகள் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாக பரவுகிறது. அதில் பெருவெள்ளம் சூழ்ந்த நகர்ப்பகுதி நடுவே பைபர் படகு மூலம் முதியவர் ஒருவர் மீட்கப்பட்டார்.
மேலும் வெள்ளத்தில் சிக்கியபோது பிரிந்த அவரின் 4 வளர்ப்பு நாய்களும் மீட்புத்துறையினரால் மீட்கப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் பெருமகிழ்ச்சியில் அவர் தன் நாய்களை அணைத்தவாறு அவர் கதறி அழுதார். இந்த பதிவு காண்போரை நெகிழ வைத்து வேகமாக பகிரவும் செய்துள்ளது.
- வெள்ளப்பெருக்கால் அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன.
- சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
தென் அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த வெள்ளப்பெருக்கால் அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன.
இன்று காலை முதல் மழை தொடர்ந்து பெய்து வருவதால், வெள்ளம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மேலும் வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்டு ஏற்கனவே 37 பேர் உயிரிழந்த நிலையில், 66 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 101 பேர் காணவில்லை என கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதற்கிடையே வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக அர்ஜென்டினா மற்றும் உருகுவே நாட்டின் எல்லையில் அமைந்துள்ள பல நகரங்களுக்கு அங்கு அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
மேலும், உள்ளூர் நகராட்சியின் அறிக்கையின்படி, 1.4 மில்லியன் மக்கள் வசிக்கும் நகரத்தின் வழியாக ஓடும் குய்பா நதி, 1941 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பேரழிவின்போது வரலாற்று உச்சமாக 4.76 மீட்டர் இருந்தது. இது, 5.3 மீட்டர் என்ற புதிய உச்ச அளவை எட்டியது.
- வெள்ளப்பெருக்கால் அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன.
- வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 5 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
பிரேசிலியா:
தென் அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த வெள்ளப்பெருக்கால் அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்டு இதுவரை 37 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 74 பேர் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 5 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக அர்ஜென்டினா மற்றும் உருகுவே நாட்டின் எல்லையில் அமைந்துள்ள பல நகரங்களுக்கு அங்கு அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
- தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சி.
- படுகாயமடைந்தவர்கள் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தெற்கு பிரேசிலில் உள்ள போர்டோ அலெக்ரே நகரில் பயன்பாடு இல்லாமல், வீடு இல்லாதோருக்கு முகாமாக செயல்பட்டு வந்த ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தீ விபத்து இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்டுள்ளது. தீயில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும், தீ விபத்துக்கான காரணத்தை விசாரிக்கவும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் உள்ளனர்.
இதுகுறித்து, மாநில ஆளுநர் எடுவார்டோ லைட், ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேயர் செபாஸ்டியாவோ மெலோ தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில், "தீ விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
- இந்த ஆண்டில் மட்டும் இதுவரை சுமார் 35 லட்சம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
- இறந்தவர்களில் பெரும்பாலானோர் 20 முதல் 29 வயது வரை உள்ளவர்கள்.
பிரேசிலியா:
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை சுமார் 35 லட்சம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவர்களில் 1,600 பேர் சிகிச்சை பலனின்றி இறந்து உள்ளனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 35 சதவீதம் அதிகம் ஆகும். இறந்தவர்களில் பெரும்பாலானோர் 20 முதல் 29 வயது வரை உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி பொதுமக்களுக்கு பிரேசில் அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.






