என் மலர்
உலகம்
- சியாட்டில் நகரில் சாலையை கடந்தபோது அந்த வழியாக வேகமாக வந்த போலீஸ் கார் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
- மாணவியின் இறப்பை கிண்டல் செய்த போலீஸ் அதிகாரியை பணிநீக்கம் செய்யுமாறு புகார்கள் குவிந்து வருகின்றன.
சியாட்டில்:
ஆந்திராவை சேர்ந்த ஜானவி கண்டுலா (வயது 23) என்ற மாணவி அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வடகிழக்கு பல்கலைக்கழகத்தில் தகவல் அமைப்புகள் பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்த ஆண்டுடன் படிப்பு முடிந்து, வருகிற டிசம்பர் மாதம் பட்டம் பெற இருந்தார்.
ஆனால் கடந்த ஜனவரி 23-ந்தேதி இரவு சியாட்டில் நகரில் சாலையை கடந்தபோது அந்த வழியாக வேகமாக வந்த போலீஸ் கார் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இது அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த சம்பவத்தின்போது காரில் இருந்த டேனியல் ஆடரர் என்ற போலீஸ் அதிகாரி, விபத்து தொடர்பாக உயர் அதிகாரியிடம் தெரிவித்தபோது நடந்த உரையாடல் அவரது உடலில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகி இருந்தது.
அதில் அவர், இளம்பெண்ணை வழக்கமான ஒரு நபர்தான் என்றும், அவரது உயிருக்கு குறைந்த மதிப்புதான் எனவும் கூறுகிறார். மேலும் வெறும் 11 ஆயிரம் டாலருக்கான ஒரு காசோலையை உடனே எழுதுங்கள் என்றும் கூறும் அவர், இளம்பெண்ணுக்கு ஒரு 26 வயது இருக்கும் என்றும் அலட்சியமாகவும், கிண்டலாகவும் கூறுகிறார்.
இந்த வீடியோ பதிவு சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவிடம் மத்திய அரசு கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளதுடன், அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியது.
அதன்படி, இது குறித்து விசாரணை நடத்தப்படும் என அமெரிக்கா உறுதியளித்து உள்ளது.
இந்த நிலையில் விபத்தில் பலியான மாணவி ஜானவிக்கு வருகிற டிசம்பர் மாதம் பட்டம் வழங்கப்படும் (இறப்புக்குப்பின்) என பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் கென்னத் ஹெண்டர்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஜானவியின் இழப்பை மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆழமாக உணருவார்கள். ஜானவிக்கு மரணத்திற்குப் பின் பட்டம் வழங்கி அதை அவரது குடும்பத்தினரிடம் வழங்க பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது' என குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் மாணவியின் இறப்பு தொடர்பாக நடந்து வரும் விசாரணையில் நீதி கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையே மாணவியின் இறப்பை கிண்டல் செய்த போலீஸ் அதிகாரியை பணிநீக்கம் செய்யுமாறு புகார்கள் குவிந்து வருகின்றன.
ஆனால் இந்த குற்றச்சாட்டை போலீஸ் அதிகாரிகள் சங்கம் மறுத்து உள்ளது. அந்த வீடியோவில் உரையாடலின் ஒரு பகுதி மட்டுமே இடம்பெற்றுள்ளதாகவும், மேலும் பல விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றும் அந்த சங்கம் கூறியுள்ளது.
- கடந்த ஜூன் மாதம் நடந்த தேர்தலில் போட்டியிட்டு மூன்றாவது முறையாக அதிபராக பொறுப்பேற்றார்.
- முந்தைய அமைச்சரவையில் இருந்த பலரும் தற்போது அதிபரின் சிறப்பு ஆலோசகர்களாக இருந்து வருகின்றனர்.
அங்காரா:
துருக்கியில் 2014-ம் ஆண்டு முதல் அதிபர் தாயீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் கடந்த ஜூன் மாதம் நடந்த தேர்தலில் போட்டியிட்டு மூன்றாவது முறையாக அதிபராக பொறுப்பேற்றார். இதனையடுத்து அங்கு புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு மந்திரி பதவி வகிக்காத 90 சதவீதம் பேருக்கு இந்த முறை புதிதாக பொறுப்பு வழங்கப்பட்டது. இதனால் முந்தைய அமைச்சரவையில் இருந்த பலரும் தற்போது அதிபரின் சிறப்பு ஆலோசகர்களாக இருந்து வருகின்றனர். எனினும் அமைச்சரவையில் பதவி வழங்காததால் அவர்கள் அதிருப்தியில் இருந்து வந்தனர்.
இந்தநிலையில் அங்கு அதிபர் தாயீப் எர்டோகனின் ஆலோசகர்கள் 15 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது துருக்கி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பிரேசில் நாட்டின் வடக்கு அமேசான் மாநிலத்தில் விமானம் விபத்தில் சிக்கியது.
- இதில் 14 பேர் பரிதாபமாக பலியாகினர் என அம்மாநில ஆளுநர் தெரிவித்தார்.
சாவ் பாவ்லோ:
பிரேசில் நாட்டின் வடக்கு அமேசான் மாநிலத்தில் சனிக்கிழமை நடந்த விமான விபத்தில் 14 பேர் பரிதாபமாக பலியாகினர் என அம்மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து மாநில தலைநகரான மனாஸிலிருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள பார்சிலோஸ் மாகாணத்தில் நடந்துள்ளது.
இதுதொடர்பாக, ஆளுநர் வில்சன் லிமா கூறுகையில், பார்சிலோசில் நடந்த விமான விபத்தில் 12 பயணிகள் மற்றும் 2 ஊழியர்கள் பலியானது அறிந்து வருந்துகிறேன். அவர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் என தெரிவித்துள்ளார்.
- நேபாளத்தில் அமைந்துள்ளது உலக பிரசித்திப் பெற்றது பசுபதிநாதர் கோவில்.
- அங்கு புகைப்படம் எடுத்தால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என கோவில் நிர்வாகம் எச்சரித்தது.
காத்மண்டு:
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் உலக பிரசித்திப் பெற்ற பசுபதிநாத் கோவில், பாக்மதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு தினமும் இந்தியா மட்டுமின்றி, உலகின் பல நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்தக் கோவில் வளாகத்துக்குள் புகைப்படம், வீடியோ எடுப்பது ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதனை மீறி கோவிலுக்கு வரும் இளைஞர்கள் சிலர் ஆர்வமிகுதியில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் இனிமேல் ரூ.500 முதல் ரூ.2,000 வரை அபராதம் விதிக்கப்படும் என கோவில் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
ஆண்டுதோறும் நடைபெறும் பிரபல டீஜ் பண்டிகை இன்று தொடங்கியுள்ள சூழ்நிலையில், பசுபதிநாத் கோவில் நிர்வாகம் இதுபோன்று உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஒரு அமெரிக்க பெண் உட்பட குறைந்தது 18 ஊழியர்களைக் தலிபான் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- இக்குகுழுவை கண்காணித்து வருவதாக மாகாணத்தின் அரசாங்க செய்தித் தொடர்பாளர் அப்துல் வாஹித் ஹமாஸ் கோரி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியை பிடித்ததில் இருந்து இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் கடுமையான விளக்கத்திற்கு ஏற்ப என்ஜிஓக்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் பெண்கள் பணியாற்றுவதைத் தடுப்பது உட்பட மக்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
இளம் பெண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல தடைசெய்யப்பட்டுள்ளனர். மேலும் பொது சமூக வாழ்க்கையின் பல முன்னாள் நபர்களிடமிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த 18 பணியாளர்களை தலிபான் கைது செய்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் கிறிஸ்தவ மிஷனரிப் பணிகளை மேற்கொள்வதாகக் குற்றம் சாட்டி, ஒரு அமெரிக்க பெண் உட்பட குறைந்தது 18 ஊழியர்களைக் தலிபான் கைது செய்துள்ளதாக அந்நாட்டுத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய ஆப்கானிஸ்தானின் கோர் மாகாணத்தில் உள்ள அதன் அலுவலகத்திலிருந்து அதன் பணியாளர்கள் தலைநகர் காபூலுக்கு அழைத்துச் செல்லப்பட்டதை சர்வதேச உதவித் திட்டம் உறுதிப்படுத்தியது.
பாதுகாப்பு மற்றும் உளவுப் படைகள் இக்குகுழுவை கண்காணித்து வருவதாக மாகாணத்தின் அரசாங்க செய்தித் தொடர்பாளர் அப்துல் வாஹித் ஹமாஸ் கோரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்," கிறிஸ்தவ மதத்தில் சேர மக்களை அழைப்பதாகக் காட்டும் ஆவணங்களும் ஆடியோக்களும் பெறப்பட்டன. வெளிநாட்டவர் உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகளின் தன்மை குறித்து தன்னிடம் எந்த தகவலும் இல்லை" என்றார்.
- மத்திய அரசாங்கத்தின் 75 சதவீத ஊழியர்களை நீக்கி விடுவேன் என்றார் விவேக்
- கடும் சட்டதிட்டங்களை பணியாளர்களுக்கு வகுப்பவர் என்கின்றனர் முன்னாள் ஊழியர்கள்
2024 தேர்தலுக்காக குடியரசு கட்சியின் சார்பாக போட்டியிட முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலை வகித்தாலும் அவர் மீது பல கிரிமினல் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவர் பதவியில் அமர்வது சிக்கலாக இருக்கும் என தெரிகிறது. அக்கட்சியில் அவருக்கு அடுத்த நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 38-வயதான விவேக் ராமசாமி எனும் இளம் தொழிலதிபர் முன்னிலை வகிக்கிறார். தனது அதிரடி கருத்துக்களுக்காகவும், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் செயல்படுத்த போவதாக கூறும் சில துணிச்சலான திட்டங்களுக்காகவும் அவர் மிகவும் பாராட்டப்படுகிறார்.
தான் அதிபரானால் மத்திய அரசாங்கத்தின் பணியாளர்களை 75 சதவீதத்திற்கும் மேலாக குறைக்க போவதாகவும் தற்போது முக்கிய துறைகளாக கருதப்படும் பல துறைகளை கலைத்து விட போவதாகவும் விவேக் தெரிவித்தார். பல துறைகளிலும் சுமார் 21 லட்சம் (2.25 மில்லியன்) பணியாளர்கள் உள்ள அமெரிக்க மத்திய அரசாங்கத்தில், விவேக் ராமசாமி 16 லட்சம் பேர்களை (1.6 மில்லியன்) நீக்கி விட்டு அதன் மூலம் மிக பெரும் தொகை செலவாவதை தவிர்க்க போவதாக அறிவித்தார்.
இந்நிலையில், விவேக் நடத்தி வரும் ரொய்வன்ட் சயின்ஸ் மற்றும் ஸ்ட்ரைவ் அசட் மேனெஜ்மென்ட் ஆகிய நிறுவனங்களில் பணி புரிந்த சில முன்னாள் ஊழியர்களில் 7 பேர் அவரது மனநிலை குறித்து கருத்து தெரிவித்தனர். அவர்கள் அனைவரும், விவேக் "ஆதிக்க மனோபாவம்" உடையவர் என குறிப்பிட்டுள்ளனர்.
தனக்கு பணி செய்வதற்காகவே ஊழியர்கள் உள்ளதாக அவர் நினைப்பவர் என்றும், கடுமையான சட்டதிட்டங்களை வகுப்பவர் என்றும், அறையின் வெப்பத்தை மிகவும் குளிரான நிலையிலேயே வைப்பவர் என்றும், பயணத்தின் போது ஒரு விமானம் ரத்தானால் மற்றொன்றில் உடனடியாக பயணிக்கும் வகையில் இன்னொரு விமானத்திற்கான ஏற்பாட்டை முன்னரே செய்து கொள்பவரகவும், முன்னாள் ராணுவ ரேஞ்சர் ஒருவரை தன்னுடனேயே மெய்காப்பாளராக வைத்து கொண்டவராகவும் விமர்சிக்கின்றனர்.
மாறுபட்ட குணாதிசயங்கள் கொண்டவராக சித்தரிக்கபட்டாலும், விவேக் தற்போது தீவிர பிரச்சாரத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
- நிகோல் கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஆவார்.
- 2021ல் கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர்.
1998ல் அமெரிக்காவில், கணினி மென்பொருள் பொறியியல் வல்லுனர்களான லேரி பேஜ் மற்றும் செர்ஜி ப்ரின் ஆகிய இருவர் கூட்டாக உருவாக்கிய சமூக வலைதள நிறுவனம், கூகுள்.
2015ல் செர்ஜி ப்ரின், நிகோல் ஷானஹான் எனும் கலிபோர்னியா மாநில பெண் வழக்கறிஞரை காதலித்து வந்தார். அந்த வருடமே தனது அப்போதைய மனைவியான ஆன் வோஜ்சிக்கியை விவாகரத்து செய்தார் செர்ஜி ப்ரின்.
2018ல் நிகோலை செர்ஜி ப்ரின் திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், 2021ல் இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்தனர்.
உலகின் நம்பர் ஒன் கோட்டீஸ்வரரும், அமெரிக்காவின் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் (முந்தைய டுவிட்டர்) ஆகிய நிறுவனங்களின் நிறுவனருமான எலான் மஸ்க், செர்ஜி ப்ரின் ஆகிய இருவரும் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தனது நண்பரான எலான் மஸ்க், மனைவி நிகோல் ஷானஹான் ஆகிய இருவருக்கும் முறையற்ற உறவு இருந்ததாகவும் அதனால் செர்ஜி ப்ரின் விவாகரத்து கோரியிருப்பதாக அப்போது செய்திகள் வெளிவந்தன. ஆனால், இதனை நிகோல் மற்றும் எலான் மஸ்க் இருவரும் திட்டவட்டமாக மறுத்தனர்.
இந்நிலையில், 2022 ஜனவரியில் "தீர்க்க முடியாத கருத்து வேறுபாடுகள்" ஏற்பட்டதன் காரணமாக மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி செர்ஜி ப்ரின் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். கடந்த மே மாதம் இருவருக்குமான விவாகம் நீதிமன்றம் மூலமாக ரத்தானது.
விவாகரத்திற்கு எதிராக நிகோல் முறையிடவில்லை. மணத்துணை பாதுகாப்பு தொகையை மட்டுமே நீதிமன்றத்திடம் கோரியிருந்தார். பிற சொத்துக்களின் பிரிவினையையும், தங்களது 4-வயது ஒரே மகளின் நிலை குறித்தும் இரு தரப்பு வழக்கறிஞர்களின் மூலம் பேச்சு வார்த்தை நடத்தி முடிவு செய்து கொண்டனர்.
உலகின் நம்பர் 9. பணக்காரர் எனும் இடத்தை சுமார் ரூ.1000 கோடி ($118 பில்லியன்) சொத்து மதிப்புடன் செர்ஜி ப்ரின் தக்க வைத்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தற்காலிக பிரதமராக பலூசிஸ்தான் எம்.பி. அன்வர் உல் ஹக் ககர் நியமிக்கப்பட்டுள்ளார்.
- நிதி நிலைமையை சமாளிக்க பெட்ரோல் டீசல் மீதான வரி இன்று மேலும் உயர்த்தப்பட்டுள்ளது.
லாகூர், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆட்சியில் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவருடைய ஆட்சி கவிழ்ந்தது. அதன் பின்னர் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் ஆட்சி பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து இம்ரான்கான் மீது 100-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மேலும், அரசுக்கு வந்த பரிசுப்பொருட்களை விற்று சொத்து சேர்த்ததாக இம்ரான்கான் மீது 'தோஷகானா' வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக இம்ரான்கானின் எம்.பி. பதவி பறிபோனது. ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
அதைத்தொடர்ந்து இம்ரான்கான் உடனடியாக கைது செய்யப்பட்டு பஞ்சாப் மாகாணத்தின் அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து கடந்த மாதம் பாகிஸ்தான் நாடாளுமன்றம் இரவோடு இரவாகக் கலைக்கப்பட்டது. இதற்கான பிரகடனத்தைப் பாகிஸ்தான் அதிபர் பிறப்பித்தார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் இன்னும் 90 நாட்களில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது. இம்ரான்கான் சிறையில் உள்ள நிலையில் அவர் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேவேளை, ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் தேர்தலில் போட்டியிட உள்ளார். தேர்தலில் வெற்றிபெறும்பட்சத்தில் ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் பிரதமராகும் வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன.
பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் தற்காலிக பிரதமராக பலூசிஸ்தான் எம்.பி. அன்வர் உல் ஹக் ககர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்காலிக பிரதமராக அன்வர் உல் ஹக் ககர் செயல்பட்டு வரும் நிலையில் பாகிஸ்தானின் நிதி நிலைமை மோசமடைந்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. நிதி நிலைமையை சமாளிக்க பெட்ரோல் டீசல் மீதான வரி இன்று மேலும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 26 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 17 ரூபாயும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் 305 ரூபாய்-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது கூடுதல் வரியுடன் சேர்த்து ஒரு லிட்டர் 331 ரூபாய்-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு லிட்டர் டீசல் 311 ரூபாய்-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது வரியுடன் சேர்த்து 329 ரூபாய்-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பாகிஸ்தான் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். பாகிஸ்தான் வரலாற்றில் உச்சபட்ச விலையாக ஒரு லிட்டர் பெட்ரோல் 331 ரூபாய்-க்கும், டீசல் 329 ரூபாய்-க்கு விற்பனை செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
- ஆயுத கொள்முதலில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரால் இந்த விசாரணை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
- சீன ராணுவத்தின் கொள் முதல் பிரிவை சேர்ந்த 8 மூத்த அதிகாரிகளும் விசாரணை வளையத்தில் உள்ளனர்.
பீஜிங்:
சீன ராணுவ மந்திரியாக இருப்பவர் லீஷாங்பூ. இவர் கடந்த இரண்டு வாரமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. அரசு நிர்வாக விவகாரங்களிலும் கலந்துக் கொள்ளவில்லை. அவர் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்காதது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடவில்லை. கடந்த ஜூலை மாதம் சீன வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்த குயின் கேங் திடீரென்று மாயமாகி பொது நிகழ்ச்சிகளை தவிர்த்து வந்த நிலையில் புதிய வெளியுறவுத்துறை மந்திரியாக வாங்யீ நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையே சீன ராணுவ மந்திரி மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராணுவ மந்திரி லீஷாங்பு எங்கு உள்ளார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படாத நிலையில், அவர் ரகசிய இடத்தில் சீன அதிகாரிகளால் விசாரணை வளையத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ராணுவ உபகரணங்களை வாங்கியது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆயுத கொள்முதலில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரால் இந்த விசாரணை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் 2017 முதல் 2022-ம் ஆண்டு வரை லீஷாங்பு தலைமையிலான சீன ராணுவத்தின் கொள் முதல் பிரிவை சேர்ந்த 8 மூத்த அதிகாரிகளும் விசாரணை வளையத்தில் உள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் ராணுவ மந்திரியாக நியமிக்கப் பட்ட லீஷாங்பு மற்றும் 8 அதிகாரிகள் மீதான விசாரணை ராணுவத்தின் சக்தி வாய்ந்த ஒழுங்குமுறை ஆய்வு குழுவால் மேற்கொள்ளப்படுகிறது. சீன ராணுவ மந்திரி லீஷாங்பு, ஊழல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசாங்கம் நம்புவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அவர் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.
லீ ஷாங்பு, கடைசியாக கடந்த ஆகஸ்ட் 29-ந்தேதி பீஜிங்கில் நடந்த ஆப்பிரிக்க நாடுகளுடனான பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றினார். கடந்த மாத தொடக்கத்தில் ரஷியா, பெலாரஸ் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரஷியாவுக்கு வடகொரியா முழு ஆதரவு தெரிவிப்பு
- கடந்த சில நாட்களாக ரஷியாவின் ஆயுதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார் கிம் ஜாங் உன்
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ரஷியாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். அங்கு சென்றுள்ள அவர் ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ரஷியாவிற்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
அதன்பிறகு ரஷியாவின் ஆயுத தொழிற்சாலைகளுக்கு சென்று, ஆயுதங்களை பார்வையிட்டு வருகிறார். ஏற்கனவே கிம் ஜாங் உன் பயணம் குறித்து தென்கொரியா கவலை தெரிவித்திருந்தது. ஆயுதங்கள் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை ரஷியா வழங்கக்கூடும் எனத் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் ரஷியாவின் கிழக்குப்பகுதியில் தொடர்ந்து சுற்றுப் பயணத்தில் இருக்கும் கிம் ஜாங் உன், இன்று விளாடிவோஸ்டோக்கில் அணுஆயுதங்களை சுமந்து செல்லும் விமானங்களை ஆய்வு செய்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்படும் Tu-160, Tu-95, Tu-22 ஆகிய விமானங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். இந்த விமானங்கள் தற்போது உக்ரைன் மீது ஏவுகணைகளை வீச பயன்படுத்தப்படுகிறது.
புதின்- கிம் ஜாங் உன் கடந்த புதன்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின்போது, ரஷியாவிற்கு வடகொரியா ஆயுதங்கள் வழங்குவதற்குப் பதிலாக, ரஷியாவின் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள வடகொரியா ரஷியாவிடம் கேட்பது தொடர்பான ஒப்பந்தம் போடப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
அடுத்ததாக ரஷியாவின் கப்பற்படைக்கு சென்று கிம் ஜாங் உன் ஆய்வு செய்ய இருப்பதாக தெரிகிறது. இதில் இருந்து ரஷியாவுக்கு வட கொரியா ஆயுதங்கள் வழங்க இருப்பதும், ரஷியாவின் தொழில்நுட்பத்தை வடகொரிய பயன்படுத்த வாய்ப்புள்ளதும் ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உதவி செய்து வரும் நிலையில், உக்ரைன் பொரில் மிகப்பெரிய அளவில் ஆயுதங்களை செலவழித்துள்ள ரஷியாவுக்கு தற்போது ஆயுதங்கள் தேவைப்படுகிறது. இதனால் வடகொரியாவின் உதவியை நாடியுள்ளது. வெளிநாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதில், அமெரிக்காவுக்கு இணயைாக ரஷியா திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- இங்கிலாந்து ஆடம்பர பின்னலாடை நிறுவனம் தயாரித்து இளவரசி டயானா அணிந்த சிகப்பு நிற ஸ்வெட்டர் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏலம் விடப்பட்டது.
- 1983-ம் ஆண்டு ஸ்வெட்டரை மீண்டும் ஒரு நிகழ்ச்சியில் டயானா அணிந்து சென்றிருந்தார்.
இங்கிலாந்து அரசர் சார்லசின் முதல் மனைவி டயானா 1997-ம் ஆண்டு கார் விபத்தில் தனது 36-ம் வயதில் பலியானார். இந்நிலையில் இளவரசி டயானா பயன்படுத்திய ஆடைகள் மற்றும் பொருட்கள் ஏலத்திற்கு வருவதும் அவை அதிக விலைக்கு ஏலம் போவதும் சமீபகாலமாக அரங்கேறி வருகிறது.
அந்த வகையில் இங்கிலாந்து ஆடம்பர பின்னலாடை நிறுவனம் தயாரித்து இளவரசி டயானா அணிந்த சிகப்பு நிற ஸ்வெட்டர் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏலம் விடப்பட்டது. 1981-ம் ஆண்டு இளவரசர் சார்லசுடன் கோல்ப் போட்டி ஒன்றுக்கு டயானா இந்த ஸ்வெட்டரை அணிந்து சென்றிருந்தார். வரிசையாக வெள்ளை நிற ஆடுகள் படம் போட்ட இந்த ஸ்வெட்டரில் ஒன்று மட்டும் கருப்பு நிறத்தில் இருந்தது. இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டிருந்தது.
1983-ம் ஆண்டு இந்த ஸ்வெட்டரை மீண்டும் ஒரு நிகழ்ச்சியில் டயானா அணிந்து சென்றிருந்தார். தற்போது அந்த ஸ்வெட்டர் ஏலத்திற்கு வந்த போது 1.1 மில்லியன் அமெரிக்கன் டாலருக்கு ஏலம் போனது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.9 கோடி ஆகும். இதற்கு முன்பு டயானா பயன்படுத்திய பொருட்களில் அவர் அணிந்திருந்த ஊதா நிற கவுன் ரூ.4.9 கோடிக்கு ஏலம் போனது. அதிக விலைக்கு ஏலம் போன பொருளாக இருந்தது.
- நான்கு மாதங்களுக்கு முன்பு இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தம் செய்ய முடிவு செய்தன.
- காலிஸ்தான் விவகாரத்தில் கனடாவுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஒட்டாவா:
கனடா வர்த்தகத்துறை மந்திரி மேரி எங், அடுத்த மாதம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். அவரது இந்த பயணத்தில் இந்தியாவுக்கான வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் கனடா மந்திரி மேரி எங்கின் இந்தியா பயணம் திடீரென்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மந்திரியின் செய்தி தொடர்பாளர் சாந்தி கோசென்டினோ கூறும்போது, "இந்தியாவுக்கு வரவிருக்கும் வர்த்தக பணியை நாங்கள் ஒத்தி வைக்கிறோம்" என்றார். ஆனால் ஒத்தி வைப்பதற்கான காரணம் குறித்து அவர் தெரிவிக்கவில்லை.
நான்கு மாதங்களுக்கு முன்பு இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தம் செய்ய முடிவு செய்தன. இதற்காக கனடா மந்திரி இந்தியாவுக்கு வர இருந்த அந்த பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 9, 10-ந்தேதிகளில் இந்தியாவில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டார். இதில் இந்திய பிரதமர் மோடி-ஜஸ்டின் ட்ரூடோ இடையே இரு தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.
அப்போது கனடாவில் இந்தியாவுக்கு எதிரான காலிஸ்தான் அமைப்புகளின் நடவடிக்கைகள், இந்து கோவில் மீது தாக்குதல், இந்திய தூதரகங்களுக்கு மிரட்டல் ஆகியவை மீது கனடா அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ட்ரூடோவிடம் மோடி வலியுறுத்தினார்.
மேலும் காலிஸ்தான் விவகாரத்தில் கனடாவுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஜி-20 மாநாடு முடிந்த பிறகு விமான கோளாறு காரணமாக ஜஸ்டின் ட்ரூடோ, கனடா புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. அவர் இரண்டு நாட்கள் கழித்து புறப்பட்டு சென்றார்.
ஜஸ்டின் ட்ரூடோ ஜி-20 மாநாட்டின் 2-வது நாள் அமர்வில் பங்கேற்கவில்லை. இதனால் அவர் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில்தான் கனடா வர்த்தக மந்திரியின் இந்தியா பயணம் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் இரு நாட்டின் இடையேயான நட்புறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. மேலும் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதில் சிக்கல் உண்டாகி இருக்கிறது.






