என் மலர்tooltip icon

    உலகம்

    • எலான் மஸ்க் உலகின் நம்பர் 1. கோடீசுவரரும் அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபரும் ஆவார்
    • மஸ்கை இஸ்ரேலில் முதலீடு செய்ய அழைக்கிறார் நேதன்யாகு

    ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் பொது சபையின் சந்திப்பு நாளை அமெரிக்காவில் நடைபெறவிருக்கிறது. இதில் கலந்து கொள்ள இஸ்ரேல் நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அங்கு செல்லும் போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை முதல்முறையாக சந்திக்கவிருக்கிறார்.

    தனது பயண திட்டத்தில் ஜோ பைடன் தவிர உலகின் நம்பர் 1. கோடீசுவரரும் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் எக்ஸ் (முன்னர் டுவிட்டர்) ஆகிய நிறுவனங்களின் நிறுவனருமான அமெரிக்கர் எலான் மஸ்கை சந்திக்கவுள்ளார்.

    இது குறித்து எக்ஸ் கணக்கில் நேதன்யாகு தெரிவித்திருப்பதாவது:

    கலிபோர்னியாவில் எனது பயணத்தை தொடங்க போகிறேன். இந்த நவீன காலகட்டத்திற்கான அதிசயத்தக்க மாற்றங்களின் தலைவரான எலான் மஸ்கை சந்திக்க போகிறேன். அவரிடம் செயற்கை நுண்ணறிவு குறித்து விவாதிக்க போகிறேன். இஸ்ரேலில் முதலீடு செய்யுமாறு வலியுறுத்துவேன். மனித குலத்தின் அடையாளத்தையும் இஸ்ரேலின் அடையாளத்தையும் மாற்ற கூடிய பயணத்தை மஸ்க் முன்னெடுத்திருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    "செயற்கை நுண்ணறிவின் அதிவேகமான வளர்ச்சி மனித குல வாழ்வியலுக்கான மிக பெரும் ஆபத்து. அத்துறையில் விளைவுகளை சிந்திக்காமல் மேம்படுத்தி கொண்டே போவது சாத்தானை வரவேற்பதற்கு சமம்" என செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.

    இத்துறையில் முன்னணியில் உள்ள ஓபன்ஏஐ நிறுவனத்திற்கு போட்டியாக மஸ்க், எக்ஸ்ஏஐ எனும் நிறுவனத்தை கடந்த ஜூலையில் துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உள்ளூரில் உள்ள சந்தைக்கு சென்று திலப்பியா என்ற மீனை வாங்கி வந்து வீட்டில் சமைத்து சாப்பிட்டார்.
    • தொடர்ந்து அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கலிபோர்னியா:

    மீன் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என சொல்வார்கள். ஆனால் அதனை சாப்பிட்ட பெண் ஒருவர் கை, கால்களை இழந்து உயிருக்கு போராடி வருகிறார். அவரது பெயர் லாரா பராசாஸ் (வயது 40) அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் உள்ளூரில் உள்ள சந்தைக்கு சென்று திலப்பியா என்ற மீனை வாங்கி வந்து வீட்டில் சமைத்து சாப்பிட்டார். சிறிது நேரத்தில் அவரது உடலில் மாற்றம் ஏற்பட்டது. கை விரல்கள் கறுப்பாக மாறியது. பாதங்கள் மற்றும் கீழ் உதடு கறுப்பானது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஆனாலும் அவர் கோமா நிலைக்கு சென்றார். சிறுநீரகமும் பாதிக்கப்பட்டது. மேலும் கை, கால்களும் முற்றிலும் செயல் இழந்ததால் உயிருக்கு போராடி வருவதாக லாரா பராசாஸ் தோழி மெசினா தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது.லாரா கிட்டத்தட்ட தன் உயிரை இழந்துவிட்டார். அவருக்கு சுவாச கருவி பொருத்தப்பட்டு உள்ளது. கடல் உணவுகளில் பொதுவாக கொடிய பாக்டீரியாக்கள் காணப்படும். இந்த உணவுகளை முறையாக தயார் செய்து சாப்பிடாவிட்டால் உடலுக்கு தொந்தரவு கொடுக்கும்.

    சந்தையில் இருந்து வாங்கி வந்த மீனை சரியாக வேக வைக்காமல் அப்படியே சாப்பிட்டதால் இந்த நிலைக்கு ஆளாகிவிட்டார். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • மாலத்தீவில் 4 போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார்
    • இந்த வெற்றியை "வெட்கக்கேடானது" என சமூக வலைதளங்களில் விமர்சிக்கின்றனர்

    பெண்களுக்கான சர்வதேச அழகி போட்டிகளில் மிஸ் வேர்ல்ட், மிஸ் இன்டர்நேஷனல் மற்றும் மிஸ் எர்த் ஆகியவற்றுடன் பிரபலமான மற்றொரு அழகி போட்டி, மிஸ் யூனிவர்ஸ். இது அமெரிக்கா மற்றும் தாய்லாந்து ஆகிய இரு நாடுகளையும் தளமாக கொண்ட மிஸ் யூனிவர்ஸ் நிறுவனத்தால் வருடாவருடம் நடத்தப்படுகிறது.

    சில தினங்களுக்கு முன் மாலத்தீவில் "மிஸ் யூனிவர்ஸ் பாகிஸ்தான்" போட்டி நடைபெற்றது. அதில் 4 போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளி, எரிகா ராபின் (24) எனும் இளம் பெண் முதலிடம் பிடித்தார். இதனையடுத்து இவ்வருடம் எல் சால்வடார் நாட்டில், வரும் நவம்பரில் நடைபெறவுள்ள 72-வது "குளோபல் மிஸ் யூனிவர்ஸ்" அழகி போட்டியில்,  முதல்முறையாக, பாகிஸ்தான் நாட்டின் சார்பாக கலந்து கொள்ளவிருக்கிறார்.

    இந்த வெற்றியை குறித்து எரிகா ராபின் தெரிவித்ததாவது:

    நான் பணிவுடன் இந்த வெற்றியை ஏற்கிறேன். எனக்கு இது உண்மையிலேயே பெருமையான விஷயம். மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் கலந்து கொண்டு பாகிஸ்தான் நாட்டின் அழகை உலகிற்கு பறைசாற்றுவேன். ஊடகங்கள் தெரிவிக்காத அழகான கலாச்சாரம் எங்களுக்கு உள்ளது. பாகிஸ்தானியர்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள்; பழகுவதற்கு அன்பானவர்கள், பெருந்தன்மையானவர்கள். பாகிஸ்தான் நாட்டின் ருசி மிக்க உணவு வகைகளை உண்டு மகிழவும், எங்கள் நாட்டின் இயற்கையழகையும், பனிமலைகளையும் மற்றும் வயல்வெளிகளையும் காணவும் அனைவரையும் அழைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் உள்ள ஒரு கிறித்துவ குடும்பத்தை சேர்ந்தவர் எரிகா. அவர், அந்நாட்டின் புகழ் பெற்ற மாடலாக பல விலையுயர்ந்த பிராண்டுகளின் விளம்பரங்களில் தோன்றியவர். மேலும், எரிகா ஒரு மென்பொருள் நிறுவனத்தில் துணை மேலாளராக பணிபுரிபவர்.

    இதற்கிடையே எரிகாவின் வெற்றியை "வெட்கக்கேடானது" என அந்நாட்டில் உள்ள மத அடிப்படைவாதிகள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். அதே சமயம், எரிகாவிற்கு ஆதரவாக பெண்ணுரிமைவாதிகள் குரல் கொடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில், "பாகிஸ்தான் அரசாங்கம் எந்த பெண்ணையும் நாட்டின் சார்பாக அழகி போட்டிக்கு அனுப்பவில்லை. இத்தகைய போட்டிகளில் கலந்து கொள்பவர்களை அரசாங்கத்தின் பிரதிநிதியாக கருத முடியாது," என இது குறித்து அந்நாட்டின் செய்தி மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் முர்டாசா சோலங்கி கூறினார்.

    • அமெரிக்காவில் எலான் மஸ்க்- துருக்கி அதிபர் எர்டோகன் சந்திப்பு
    • ஏ.ஐ., ஸ்டார்லிங், ஸ்பேஸ் எக்ஸ்-ன் செயற்கைக்கோள் இணையதள சேவை ஆகியவற்றில் ஒத்துழைப்பை துருக்கி வரவேற்கும்

    துருக்கி அதிபர் எர்டோகன் ஐக்கிய சபை பொது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது எலான் மஸ்க்-ஐ சந்தித்துள்ளார். துருக்கியில் எலெக்ட்ரிக் கார் தயாரிக்கும் டெஸ்லா தொழிற்சாலையை தொடங்குவது குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக, துருக்கி அதிபர் அலுவலகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

    "ஏ.ஐ., ஸ்டார்லிங், ஸ்பேஸ் எக்ஸ்-ன் செயற்கைக்கோள் இணையதள சேவை ஆகியவற்றில் ஒத்துழைப்பை வரவேற்பதாக எலான் மஸ்க் இடம் எர்டோகன் தெரிவித்தார்" என எர்டோகன் அலுவலகம் தெரிவித்துள்ளது. அப்போது ஸ்டார்லிங் வழங்க பாதுகாப்பு தொடர்பாக உரிமத்தை பெற ஸ்பேஸ்எக்ஸ் விரும்புவதாக மஸ்க் தெரிவித்துள்ளார்.

    இந்த பேச்சுவார்த்தையின்போது எலான் மஸ்க் தனது மகனை கையில் வைத்திருந்தது போன்ற படங்கள் வெளியாகியுள்ளன.

    டெஸ்லாவின் முதலீட்டிற்கான மிகவும் முக்கியமான நாடுகளில் துருக்கியும் ஒன்று என மஸ்க் தெரிவித்ததாக, துருக்கி தொழில்துறை மற்றும் டெக்னாலாஜி மந்திரி மெஹ்மெட் ஃபதிக் கசிர் தெரிவித்துள்ளா். இருவரும் துருக்கியின் ஆயுதமேந்திய வான்வழி டிரோன் திட்டம் குறித்தும் ஆலோசனை நடத்தினர் எனக் கூறினார்.

    • ஆண்ட்ரியா உடற்பயிற்சிக்காக காலை சைக்கிளில் சென்றார்
    • "அவனை பின்புறமாக மோதி தாக்கு" என நண்பன் பதிலளிக்கிறான்

    அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள மாநிலம் நிவேடா. இதன் தலைநகரம் கார்ஸன் சிட்டி.

    இம்மாநிலத்தில் உள்ள பிரபலமான லாஸ் வேகஸ் நகரில் வசித்தவர் 64 வயதான ஆண்ட்ரியா ப்ரோப் (Andreas Probst). இவர் காவல்துறையில் உயரதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    நான்கு நாட்களுக்கு முன் இவர் தனியாக காலை சுமார் 06:00 மணியளவில் தனது சைக்கிளில் உடற்பயிற்சிக்காக புறப்பட்டார். அவர் மேற்கு சென்டினியல் பார்க்வே (West Centennial Parkway) சாலையின் அருகில் வடக்கு டெனாயா சாலை (North Tenaya Way) சாலை வழியாக சைக்கிளை செலுத்தி கொண்டிருந்தார்.

    அப்போது சற்று தொலைவில் ஹுண்டாய் காரில் அமர்ந்திருந்த 18 வயதிற்குட்பட்ட ஒரு சிறுவன் நண்பர்களுடன் உற்சாகமாக பேசிக்கொண்டே "தயாரா?" என கேட்க, அவனது நண்பர்களில் ஒருவன் "ஆமாம், அவனை பின்புறமாக தாக்கு" என பதிலளிக்க, உடனே அந்த சிறுவன் காரை வேகமாக அந்த காவல் அதிகாரி ஓட்டி செல்லும் சைக்கிளின் பின்புறத்தில் இடிக்க, அவர் தூக்கி வீசப்பட்டார். காரில் இருந்த நண்பன் அந்த அதிகாரி தரையில் பரிதாபமாக கிடப்பதை படமாக்கி கொண்டான். காரில் உள்ள மற்றொரு நண்பன், "அவன் தொலைந்தான்" என கூற, அவர்கள் அங்கிருந்து விரைவாக தப்பி செல்கின்றனர்.

    அவ்வழியாக சென்றவர்கள் அடிபட்டவரை காப்பாற்ற அவசர சேவைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த மருத்துவ சேவையினர் அந்த காவல் அதிகாரியை யூனிவர்சிட்டி மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    இந்த நிகழ்ச்சி முழுவதையும் தொடக்கம் முதலே படமெடுத்த அந்த சிறுவனும் அவன் நண்பர்களும் அந்த முழு வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் தேடுதல் வேட்டையை தொடங்கினர். இறுதியாக, அந்த காரை ஓட்டிய சிறுவனையும், அவன் நண்பர்களையும் காவலில் எடுத்துள்ளனர்.

    அச்சிறுவனின் மீது கொலைக்குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த சிறுவனும் அவன் நண்பர்களும் எதற்காக இந்த கொலையை செய்தனர் எனும் காரணம் தற்போது வரை தெரியவில்லை.

    கொலையை செய்யும் முன்பு, அதனை படமாக்கவும் திட்டமிட்டு, இரக்கமின்றி காரால் சைக்கிளை மோதிய அந்த சிறுவனின் செயல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

    • லிபியா வெள்ளத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்
    • தற்போது 3,958 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. தெரிவித்துள்ளது

    வடக்கு ஆப்பிரிக்க நாடான லிபியாவில் கடந்த வாரம் புயல் காரணமாக கனமழை பெய்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், பழமையான இரண்டு அணைகள் உடைந்து நகருக்குள் வெள்ளம் புகுந்தது.

    இதனால் பலி எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது. முதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அதன்பின் 10 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர் எனத் தகவல் வெளியானது.

    இந்த நிலையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையை திருத்தி ஐ.நா. வெளியிட்டுள்ளது. ஐ.நா.வுக்கான மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்பு அதிகாரி, "3,958 பேர் உயிரிழந்துள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக 11,300 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அது திருத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

    அதேவேளையில் 9 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். ஐ.நா. பொதுச் செயலாளரின் செய்தி தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக், "உலக சுகாதார அமைப்புடன் இணைந்து சரியான எண்ணிக்கை வெளிப்படுத்த இருக்கிறோம்'' என்றார்.

    ஆனால், லிபியாவின் செஞ்சிலுவை சங்கம், வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் அதிகப்படியான உயிர்ப்பலி எண்ணிக்கையை ஐ.நா.வுக்கு வழங்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.

    மிகவும் பாதிப்புக்கு உள்ளான டெர்னாவில் 1,20,000 மக்கள் வசித்து வருகின்றனர். ஒட்டுமொத்த நகரமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம். அல்லது சேற்றில் சிக்கியிருக்கலாம் என தகவல் வெளியானது.

    ரஷியா நடமாடும் மருத்துவமனை உள்ளிட்ட உதவிகளை செய்துள்ளது. இத்தாலி கப்பற்படைக்கு சொந்தமான கப்பலை அனுப்பியுள்ளது. அதில் தற்காலிக கூடாரம் அமைப்பதற்கான பொருட்கள், தண்ணீர் குழாய், டிராக்டர் போன்றவற்றை அனுப்பி வைத்துள்ளது.

    • ரஷியா சென்ற கிம் ஜாங் அன் அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • ரஷிய சுற்றுப்பயணம் முடிந்த நிலையில் கிம் ஜாங் அன் நேற்று வடகொரியா திரும்பினார்.

    பியாங்யாங்:

    வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ரஷியாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். கடந்த வாரம் தலைநகர் பியாங்யாங்கில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் ரஷியா சென்றார். அவருடன் வடகொரியாவின் ராணுவ உயர் அதிகாரிகளும் சென்றனர்.

    அங்கு சென்றுள்ள அவர் ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ரஷியாவிற்கு தனது ஆதரவை தெரிவித்தார். அதன்பிறகு ரஷியாவின் ஆயுத தொழிற்சாலைகளுக்கு சென்று, ஆயுதங்களை பார்வையிட்டார்.

    இந்தப் பயணத்தில் அதிபர் புதின், ராணுவ மந்திரி செர்ஜி ஷோய்கு மற்றும் பிற ராணுவ உயர் அதிகாரிகளை கிம் ஜாங் அன் சந்தித்துப் பேசினார். விளாடிவோஸ்டாக்கில் உள்ள ராணுவ தளத்துக்கு சென்ற அவர்கள், ரஷியாவின் ராணுவ திறன்கள் மற்றும் ஆயுதங்கள் குறித்து கிம் ஜாங் அன்னுக்கு விளக்கம் அளித்தனர். ரஷியாவின் முக்கிய விண்வெளி தளங்களுக்கும் சென்று அவர் பார்வையிட்டார்.

    மேலும் ரஷியாவுக்கு ஆயுத பரிமாற்ற ஒப்பந்தம், ராணுவத்துக்கு இடையேயான மூலோபாய மற்றும் தந்திரோபாய ஒருங்கிணைப்பு போன்றவை குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

    இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் தனது 6 நாள் ரஷிய பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று நாடு திரும்பினார்.

    கொரோனா ஊரடங்குக்கு பின்னர் கிம் ஜாங் உன் மேற்கொண்ட முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • லட்சக்கணக்கான இந்தியர்கள் ஹெச்-1பி விசாவை நம்பியுள்ளனர்
    • விவேக் ராமசாமியின் பெற்றோர் இந்தியாவிலிருந்து குடியேறியவர்கள்

    அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். இவரை எதிர்த்து குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியாளராக முன்னிலையில் உள்ளார். அவர் மீதுள்ள வழக்குகளின் தீர்ப்பை பொறுத்தே அவரது தகுதி உறுதிப்படுத்தப்படும் என்பதால் அவர் கட்சியில் அவருக்கு அடுத்த நிலையிலுள்ள இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமி தீவிரமாக தன்னை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து வருகிறார்.

    அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனங்களில் வேலை செய்ய லட்சக்கணக்கான இந்தியர்கள் அந்நாடு வழங்கும் ஹெச்-1பி விசா எனும் நடைமுறையை நம்பியுள்ளனர்.

    இந்நிலையில், இந்த விசா நடைமுறை குறித்து விவேக் தெரிவித்திருப்பதாவது:

    ஹெச்-1பி விசா அதனுடன் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே தீங்கை விளைவிக்கிறது. லாட்டரி திட்டம் பணியாளருக்கு பயனை அளிக்காது. நிபந்தனைக்குட்பட்ட அடிமை முறையாக பணியாளருக்கு இருப்பதனால் பணியமர்த்தும் நிறுவனத்திற்குத்தான் இது பலனளிக்கிறது. பணியாளருடன் வரும் அவரது குடும்ப உறுப்பினர்களாலும் நாட்டிற்கு எந்தவிதமான ஆக்கபூர்வமான பயனும் இல்லை. நான் இந்த விசா முறையை நீக்கி விடுவேன்.

    இவ்வாறு விவேக் கூறினார்.

    2018 தொடங்கி 2023 வரை, விவேக் அவரது முன்னாள் நிறுவனமான ரொய்வான்ட் சர்வீசஸ் சார்பாக இந்தியாவிலிருந்து பணியாளர்களை 29 முறை அமெரிக்காவிற்கு அழைத்துவர விண்ணப்பித்து இத்திட்டத்தால் பயனடைந்தவர். மேலும், அவரது பெற்றோர் இந்தியாவின் கேரள மாநிலத்திலிருந்து அமெரிக்காவிற்கு குடியேறியவர்கள்.

    இப்பின்னணியில், விவேக் ராமசாமியின் கருத்து, இந்திய எதிர்ப்பு பேச்சாக சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்படுகிறது.

    • தாக்குதல் காரணமாக உக்ரைனியர்கள் ரஷியாவிற்குள் தஞ்சம் புகுந்து வருகின்றனர்
    • அவர்கள் தவிப்பதை எங்களால் வேடிக்கை பார்க்க முடியாது என்றார் ஒரு ரஷிய பெண்மணி

    2022 பிப்ரவரியில் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. ரஷியாவை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன், உக்ரைன் கடுமையாக போரிட்டு வருகிறது.

    ரஷியாவில் இப்போர் குறித்து ரஷியாவையோ, அதிபர் விளாடிமிர் புதினையோ விமர்சிப்பவர்கள் மீது ரஷிய அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    ஆனால் அரசுக்கு தெரியாமல், உக்ரைன் அகதிகளுக்கு ரஷியாவை சேர்ந்த பலர் மனிதாபிமான உதவிகளை செய்து வருகின்றனர்.

    ராணுவ தாக்குதல் காரணமாக ரஷியாவிற்கோ அல்லது ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் பிராந்தியங்களுக்கோ, உக்ரைனின் பிற பகுதிகளிலிருந்து மக்கள் அகதிகளாக தினம் வந்திறங்குகின்றனர். தங்களது வீடு, உடைமைகள் மற்றும் செல்வம் அனைத்தையும் இழந்து அகதிகளாக எதிர்காலம் குறித்த அச்சத்துடன் வந்திறங்கும் உக்ரைனியர்களுக்கு ரஷிய மக்கள் தன்னார்வலர்களாக உதவி செய்து வருகின்றனர்.

    "இந்த அகதிகளுக்காக இணையவழியாக நன்கொடை பெற்று உடைகள், மருந்துகள் மற்றும் உணவு வசதி போன்றவற்றை செய்து தருகிறேன். ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு ரெயிலில் வருபவர்களுக்கு வேலை வாய்ப்பு, தங்குமிடம் போன்றவற்றையும் ஏற்பாடு செய்கிறேன். என்னை போல் ஆயிரக்கணக்கான ரஷியர்கள் உதவி செய்கிறார்கள். பாதுகாப்பு காரணங்களால் இது குறித்து நாங்கள் வெளியில் பேசுவதில்லை," என கலினா அர்ட்யோமென்கோ (58) எனும் ரஷிய பெண்மணி தெரிவித்தார்.

    "எங்களை விட மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டவர்களை நாங்கள் வெறுமனே வேடிக்கை பார்த்து கொண்டு நிற்க முடியாது. நாங்கள் அவர்களுக்கு உதவியே ஆக வேண்டும்" என ல்யுட்மில்லா (43) எனும் மற்றொரு ரஷிய பெண் கூறினார்.

    2022 டிசம்பர் மாதமே ரஷியாவில் உக்ரைன் நாட்டு அகதிகள் 10 லட்சத்திற்கும் மேல் உள்ளனர் என ஐநா சபை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • தேர்தல் நேரத்தில் பைடன் 82 நெருங்குவார்; டிரம்ப் 78 நிறைவு செய்வார்
    • எனது பெற்றோர் நீண்ட காலம் உயிர் வாழ்ந்தனர் என்றார் டிரம்ப்

    அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் போட்டியிட முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (77) மற்றும் தற்போதைய அதிபர் ஜோ பைடன் (81) ஆகியோர் களத்தில் இருக்கின்றனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் பைடன் 82 வயதை நெருங்குவார் என்பதும் டிரம்ப் 78 வயதை நிறைவு செய்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், அமெரிக்காவில் வாக்காளர்களிடம் ஆங்காங்கே நடத்தப்படும் கருத்து கணிப்புகளில் பேட்டி காணப்படும் 3 பேரில் ஒருவர், ஜோ பைடனின் அதிக வயது குறித்தும், அதனால் அவரால் மீண்டும் அதிபராக திறம்பட செயல்பட முடியுமா என்பது குறித்தும் ஆழ்ந்த சந்தேகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் என தெரிய வந்துள்ளது.

    "ஜோ பைடன் மிகவும் வயதானவராகி விட்டதாக நான் நினைக்கவில்லை. ஆனால் அவர் அப்பதவிக்கு திறனில்லாதவர்; அதுதான் மிக பெரிய பிரச்சனை என நான் நினைக்கிறேன். எனது பெற்றோர் நீண்ட வயது உயிர் வாழ்ந்தனர். எனது மரபணுவில் அது உள்ளது. எனவே நான் வயதை ஒரு பொருட்டாக கருதவில்லை" என இது குறித்து ஒரு பேட்டியில் டொனால்ட் டிரம்ப் கூறினார்.

    இரண்டு போட்டியாளர்களும் மது அருந்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • விசா கட்டண உயர்வு வருகிற அக்டோபர் 4-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • கட்டண உயர்வு இந்திய மாணவர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் சுற்றுலா மற்றும் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்களின் கட்டணத்தை அந்நாட்டு அரசாங்கம் உயர்த்தியுள்ளது.

    விசா கட்டணம் மாற்றங்கள் குறித்த சட்டம் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய கட்டண கட்டமைப்பின் கீழ் ஆறு மாதங்களுக்கு குறைவான காலம் தங்குவதற்கான சுற்றுலா விசாவுக்கு கூடுதலாக 15 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ரூ.1540) உயர்த்தப்பட்டுள்ளது.

    மாணவர் ஒருவர் விசாவுக்கு கூடுதலாக 127 பவுண்டுகள் (ரூ.13 ஆயிரம்) அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இங்கிலாந்துக்கு வெளியே இருந்து மாணவர் ஒருவர் விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணம் 490 பவுண்டு களாகவும் (ரூ.50 ஆயிரம்), சுற்றுலா விசா 115 பவுண்டுகளாகவும் (ரூ.12 ஆயிரம்) கட்டணம் உயரும் என்று உள்துறை அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    பெரும்பாலான வேலை மற்றும் சுற்றுலா விசாக்கள் விலையில் 15 சதவீதமும், முன்னுரிமை விசா, படிப்பு விசா விலையில் 20 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

    பெரும்பாலான விசா வகைகளுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தும். இந்த விசா கட்டண உயர்வு வருகிற அக்டோபர் 4-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இங்கிலாந்துக்கு கல்வி பயில இந்திய மாணவர்கள் அதிகளவில் விசாவுக்கு விண்ணப்பிப்பதாக கூறப்படுகிறது. இந்த கட்டண உயர்வு இந்திய மாணவர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

    • ரஷியாவில் தொடர்ந்து அந்நாட்டின் ஆயுத திறனை பார்வையிட்டு வருவதாக பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
    • உணவுத் துறை வணிகங்களையும் ஜிம் ஜாங் உன் பார்வையிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வடகொரியா அதிபர் ஜிம் ஜாங் உன், ரஷியாவுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசினார்.

    பின்னர் கிம்ஜாங் உன் ரஷியாவின் போர் விமான ஆலையை பார்வையிட்டார். அதே போல் ஏவுகணை தயாரிப்பையும் பார்வையிட்டார்.

    அவர், ரஷியாவில் தொடர்ந்து அந்நாட்டின் ஆயுத திறனை பார்வையிட்டு வருவதாக பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் வடகொரியாவின் அணு ஆயுத தாக்குதல் திறனை அதிகரிக்கக் கூடிய ஒப்ந்தத்தை இரு நாடுகளும் மேற்கொள்ளக் கூடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    நேற்று ரஷியாவின் பசிபிக் கடற்படை பிரிவில் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட குண்டு வீச்சு விமானங்கள், ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள், அதிநவீன போர்க் கப்பல் ஆகியவற்றை பார்வையிட்டார்.

    இந்நிலையில், ரஷிய பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்குவுடன் கிம் ஜாங் உன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    இது தொடர்பாக வடகொரியா அரசு ஊடகம் கூறும்போது, வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், ரஷிய பாதுகாப்பு மந்திரியுடன் இரு நாடுகளின் ராணுவங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தார் என்று தெரிவித்தது. இதில் அவர்கள் ஆயுத ஒத்துழைப்பு குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இன்று விளாடிவோஸ்டாக் நகரில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு சென்றார்.

    அப்போது அவரை ப்ரிமோரி பிராந்திய கவர்னர் ஓலெக் கோஜெமியாகோ சந்தித்து பேசினார். மேலும் அங்குள்ள உணவுத் துறை வணிகங்களையும் ஜிம் ஜாங் உன் பார்வையிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உக்ரைன் மீது ரஷியா போர் நடத்தி வரும் நிலையில் ரஷியா-வடகொரியா இடையே ஆயுத ஒப்பந்தம் ஏற்பட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×