என் மலர்
உலகம்
- ரேபிட் ஆன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியானது
- 40 வயதிற்கு மேற்பட்ட இரு சக பணியாளர்கள் உடன் இருந்தனர்
சிங்கப்பூரில் ஸென்கோ வே (Senko Way) பகுதியில் உலகின் முன்னணி நிதி முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றான லியோங் ஹப் (Leong Hup) செயல்படுகிறது. இந்நிறுவனத்தில் சுகாதார பணியாளராக வேலை பார்த்து வந்தவர் 64 வயதான தமிழ்செல்வம் ராமய்யா.
2021 வருடம் அக்டோபர் மாதம் இவர் மூக்கிலிருந்து நீர் வடியும் தொந்தரவால் அவதிப்பட்டு வந்தார். ஆனால், அந்த நிலையிலும் இவர் அலுவலகம் சென்றார். அங்கு இவரது உடல் அவதியினால் உடனடியாக ரேபிட் ஆன்டிஜன் பரிசோதனை செய்து கொள்ள மேலாளரால் வலியுறுத்தப்பட்டார்.
அதனை மேற்கொண்டவருக்கு கோவிட் பெருந்தொற்று இருப்பது உறுதியானது. வீட்டிற்கு சென்று தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தும் அவர் மீண்டும் பணிக்கு திரும்பினார்.
அப்போது அங்கு 40 வயது ஆண், 56 வயதான பெண் என இரு வயதில் மூத்த சக பணியாளர்கள் உடன் இருந்தனர். அந்த அறை ஏர்கண்டிஷனிங் வசதி செய்யப்பட்டிருந்தது. அதனால் அவரை வெளியேற சொல்லி மேலாளர் கட்டாயப்படுத்தினார். விருப்பமின்றி புறப்பட்ட தமிழ்செல்வம், அப்போது அங்கிருந்து கிளம்பும் முன் அந்த சக பணியாளர்கள் இருக்கும் திசையை நோக்கி இருமினார்.
இதனையடுத்து தமிழ்செல்வத்தின் மீது காவல்துறையில் புகாரளிக்கப்பட்டது. அவர் மீது சக பணியாளர்களின் உடலாரோக்கிய பாதுகாப்பை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
"இது ஒரு விளையாட்டான விஷயமல்ல" என அரசாங்க வக்கீல் ஸ்ருதி போபண்ணா நீதிமன்றத்தில் வாதிட்டார். இந்நிலையில் விசாரணையின் முடிவில் 2-வார சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சிங்கப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிங்கப்பூரில், 2021 செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் வரை கோவிட் பெருந்தொற்றை எதிர்கொள்ளும் கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது.
- இளஞ்சிவப்பு நிறம் கொண்ட புறாவின் புகைப்படம் பயனர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
- அரியவகை புறாவை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்க அவர்கள் விரைந்து சென்று பார்த்துள்ளனர்.
முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் பறவை இனத்தை சேர்ந்த புறாக்கள் கதிர் வடிவம் கொண்டவை. உலகம் எங்கும் புறாக்கள் அதிகமாக காணப்படுகின்றன. பல்வேறு அளவுகளில் அவை காணப்பட்டாலும் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இளஞ்சிவப்பு நிறம் கொண்ட புறாவின் புகைப்படம் பயனர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் துடிப்பான இறகுகளுடன் கூடிய இந்த புறாவை கண்ட அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
உடனே அவர்கள் புறாவுக்கு உணவுகளை அந்த புறா அமர்ந்திருந்த கூரை மீது வீசினர். அவற்றை ஏற்றுக்கொண்ட புறாவை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடவே அது வைரலாகி வருகிறது. மேலும் இந்த அரியவகை புறாவை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்க அவர்கள் விரைந்து சென்று பார்த்துள்ளனர்.
புறாவின் இந்த தோற்றம் நகர மக்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. தனித்துவமாக இந்த நிறம் உருவானதா? அல்லது யாரேனும் புறா மீது சாயத்தை பூசினார்களா? அல்லது புறா அதன் நிறத்தை மாற்றியமைக்கும் பொருள் மீது விழுந்ததா? என பல்வேறு கேள்விகளை சமூக வலைதளங்களில் கேட்டு தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- ஜப்பானுக்கு அடுத்த நிலையில் இத்தாலியும், பின்லாந்தும் உள்ளன
- குழந்தை பெற்று கொள்ள ஜப்பானிய தம்பதியினர் தயங்குகின்றனர்
கிழக்காசியாவில் உள்ள தீவு நாடு ஜப்பான். அந்நாடு ஒரு புதுவிதமான சிக்கலை எதிர்கொண்டு வருகிறது.
ஜப்பானின் தேசிய தகவல் தரவின்படி அந்நாட்டு மக்கள் தொகையில் 29.1 சதவீதம் பேர் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினராக உள்ளனர். இந்நிலை இப்படியே நீடித்தால், 2040 வருட காலகட்டங்களில் இது 34.8 சதவீதம் எனும் நிலையை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
24.5 சதவீதத்துடன் இத்தாலியும், 23.5 சதவீதத்துடன் பின்லாந்தும் அடுத்தடுத்த நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்முறையாக அந்நாட்டில், 10 பேரில் ஒருவர் 80 வயது நிரம்பியவராக இருப்பது தெரியவந்துள்ளது.
உலகிலேயே பிறப்பு விகிதம் குறைவான நாடுகளில் ஜப்பானும் ஒன்று. நாட்டில் பணியில் உள்ள குடிமக்களில் 65 வயதை கடந்தவர்கள் 13 சதவீதத்திற்கும் மேலே இருப்பதால் பொருளாதாரத்திலும், அதிகரிக்கும் நாட்டின் சமூக பாதுகாப்பிற்கான செலவினங்களிலும் இதன் தாக்கம் கடுமையாக உள்ளது.
1970 காலகட்டங்களில் 20 லட்சமாக இருந்த குழந்தை பிறப்பு அந்நாட்டில் கடந்த வருட தரவுகளின்படி 8 லட்சத்திற்கும் குறைவான நிலையை எட்டியுள்ளது.
ஜப்பானிய நிறுவன பணியிடங்களில் ஊழியர்களுக்கான வேலை பார்க்கும் நேரம் மிக அதிகம். மேலும், அந்நாட்டில் வாழ்வதற்கான செலவினங்கள் மிக அதிகம். இக்காரணங்களால் தம்பதிகள் குழந்தை பெற்று கொள்வதை அரசாங்கம் ஊக்குவித்தாலும், மக்கள் தயங்குகிறார்கள்.
ஒரு கட்டமைப்புள்ள சமூகமாக இயங்கும் ஆற்றலை ஜப்பான் இழந்து வருவதாக அந்நாட்டின் பிரதமர் ஃப்யுமியோ கிஷிடா கடந்த ஜனவரியில் தெரிவித்தார். இச்சிக்கலை விரைவாக சரி செய்யும் நடவடிக்கைகளை அந்நாடு எடுக்க வேண்டும் என மனிதவள மேலாண்மை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில், 2021 ஆண்டு வெளியிடப்பட்ட தரவுகளின்படி வயதானவர்களின் ஜனத்தொகை 10.1 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
- டெல்லி உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார்
- இந்தியாவிற்கும், இந்திய பிரதமர் மோடிக்கும் கடமைப்பட்டிருப்பதாக கிர்பி தெரிவித்தார்
ஜி20 கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புது டெல்லியில் இம்மாதம் 9, 10 தேதிகளில் நடைபெற்றது. இதில் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உட்பட பல உறுப்பினர் நாட்டு அதிபர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபையின் ராஜாங்க பேச்சுவார்த்தைகளுக்கான ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் பொது சபைக்கான 78-வது அமர்வில் உரையாற்றினார்.
அதில் அவர் தெரிவித்ததாவது:
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியாவில் ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு உலகம் பயணிக்க வேண்டிய திசை குறித்து தன்னம்பிக்கையுடனும், நேர்மறையான எண்ணங்களுடனும் செயல்பட்டு வருகிறார். பெரும் செயல்கள் ஜி20 மாநாட்டில் செய்து முடிக்கப்பட்டன. இதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், தலைமையேற்ற இந்தியாவிற்கும் நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். திட்டமிடுதல் மட்டுமல்லாது செயல்படுத்தலிலும் இந்தியா சிறப்பாக செயல்பட்டது. இந்தியாவில் இருந்த 2 நாட்களும் மிக மிக ஆக்கபூர்வமான நாட்களாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜி20 உச்சி மாநாட்டிற்கு வருகை தந்த போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், இந்திய பிரதமரும் பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- டொனால்ட் டிரம்ப் மீது பல மாநிலங்களில் பல வழக்குகள் பதிவாகியுள்ளது
- 33-வயதில் தாமஸ் ஜெபர்ஸன் சுதந்திர பிரகடனத்தை எழுதினார்
அமெரிக்காவில், அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
இத்தேர்தலில் வெற்றி பெற ஆளும் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும் குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் தீவிரமாக போட்டி போட்டு வருகின்றனர். ஆனால், டொனால்ட் டிரம்ப் மீது பதிவாகியுள்ள கிரிமினல் வழக்குகளின் தீர்ப்பை பொறுத்தே அவரது தகுதி நிர்ணயிக்கப்படும் எனும் நிலை உள்ளது.
இதனால் குடியரசு கட்சியில் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கரான 38-வயதான விவேக் ராமசாமிக்கு ஆதரவு நாளுக்கு நாள் கூடி வருகிறது. பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவர் தெரிவித்து வரும் ஆணித்தரமான, துணிச்சலான கருத்துக்களால் அவருக்கு எதிர்ப்பும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ஒரு தனியார் தொலைக்காட்சி பேட்டியில் தனது மீதான விமர்சனங்களை குறித்து விவேக் ராமசாமி கருத்து தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
எனது வளர்ச்சி பலருக்கு பொறாமையை ஏற்படுத்தியுள்ளது. எனது குறைந்த வயது காரணமாக நான் இந்த பதவிக்கு தகுதியானவன் அல்ல என சிலர் நினைக்கின்றனர். சுதந்திர பிரகடனத்தை (Declaration of Independence) எழுதும் போது அப்போதைய அதிபர் தாமஸ் ஜெபர்ஸன், 33 வயதே ஆனவர் என்பதை நாம் அறிவோம். குறைந்த வயதுள்ளவர்கள் அவர்களது வாழ்நாளில் இனிமேல்தான் சிறப்பான நாட்களை எதிர்கொள்ள போகிறார்கள். எனவே, தனது வாழ்நாளின் சிறப்பான நாட்களை எதிர்கொள்ளும் வாய்ப்புள்ள ஒருவர்தான் ஒரு நாட்டிற்கு கிடைக்க போகும் சிறப்பான எதிர்கால நாட்களையும் உருவாக்கி தர முடியும். சிறப்பான தகுதி, மேன்மையை தேடுதல், பொருளாதார வளர்ச்சி, கருத்து சுதந்திரம் மற்றும் வெளிப்படையான விவாதம் போன்ற அடிப்படை விஷயங்களைத்தான் அமெரிக்கர்கள் இன்னமும் மதிக்கிறார்கள். இதனை நிலைநிறுத்துவதே எனது லட்சியம். வெறும் விமர்சனங்களை மட்டுமே முன்வைத்து அரசியல் செய்வதை நான் விரும்பவில்லை.
இவ்வாறு விவேக் தெரிவித்தார்.
கணினி மென்பொருள் துறையிலும், பிற உயர் தொழில்நுட்ப துறையிலும் இந்திய இளைஞர்கள் மிகவும் ஆர்வத்துடன் பெற போராடும் அமெரிக்காவின் ஹெச்-1பி விசா எனும் அந்நாட்டின் உள்நுழையும் நடைமுறையை நீக்கி விடுவேன் என சில தினங்களுக்கு முன் விவேக் அறிவித்தார். இதற்கு இந்தியர்களிடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
- 55 போர் விமானங்களுடன் 7 போர் கப்பல்களும் பயிற்சி மேற்கொண்டன
- எல்லைக்கோடு எதுவும் இல்லையென சீனா மறுக்கிறது
கிழக்கு ஆசியாவில் உள்ள நாடு, தைவான். தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா, நீண்டகாலமாக சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனை ஏற்க மறுத்து தைவான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இவ்விவகாரத்தில் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளதால் சீனா கடுங்கோபத்தில் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தைவானை சுற்றியுள்ள கடற்பகுதியில் சீனா அத்துமீறி போர் பயிற்சிகளை மேற்கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையிலிருந்து திங்கட்கிழமை வரையில் 103 போர் விமானங்களை கொண்டு போர் பயிற்சியை தைவானின் வான் பகுதியில் சீனா மேற்கொண்டது. நேற்றிலிருந்து இன்று வரை சீனா மேலும் 55 போர் விமானங்களின் பயிற்சியை மேற்கொண்டதுடன் தைவானை சுற்றியுள்ள கடற்பகுதியில் 7 போர்கப்பல்களை கொண்டு பயிற்சி ஓட்டத்தில் ஈடுபட்டது.
அந்த 55 போர் விமானங்களில், பாதி விமானங்களுக்கு மேற்பட்டவை, சீனாவையும் தைவானையும் பிரிக்கும் தைவான் ஜலசந்தி பகுதியின் மத்திய எல்லை கோட்டை தாண்டி, தைவானின் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வான் பாதுகாப்பு அடையாள எல்லை வரை நுழைந்ததாக தைவான் அறிவித்திருக்கிறது.
இதனையடுத்து, போர் பதட்டத்தை தூண்டி வருவதாக சீனா மீது தைவான் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது.
போர் விமானங்களின் பயிற்சி குறித்து கருத்து தெரிவிக்காத சீன வெளியுறவுத்துறை, "தைவான், சீனாவிற்கு சொந்தமானது" என மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மேலும், தைவான் குறிப்பிடும் மத்திய எல்லைக்கோட்டு பகுதி என எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
சமீபத்தில் தைவான் ஜலசந்தி பகுதியில் கனடா மற்றும் அமெரிக்காவிற்கு சொந்தமான 2 கப்பல்கள் பயணம் மேற்கொண்டதையடுத்து தனது துருப்புகளுக்கு சீனா எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
- விபத்தில் பலர் காயம் அடைந்துள்ளனர்.
- தரமற்ற மற்றும் பராமரிப்பு இல்லாத ரோடுகளால் விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
அயகுச்சோவா:
பெரு நாட்டில் அயகுச்சோவா பகுதியில் இருந்து ஹூவான்சாயோ என்ற இடத்துக்கு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். திடீரென அந்த பஸ் விபத்தில் சிக்கி கவிழ்ந்தது.
இதில் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 24 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.பலர் காயம் அடைந்தனர், பெரு நாட்டை பொறுத்தவரை தரமற்ற மற்றும் பராமரிப்பு இல்லாத ரோடுகளால் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
- எப்.35 ரக விமானம் சம்பவத்தன்று தென் கரோலினா கடலோர பகுதியில் சென்று கொண்டிருந்தது.
- விமானத்தில் இருந்த விமானி பாராசூட் மூலம் கீழே குதித்து உயிர் தப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாஷிங்டன்:
உலகின் மிகப்பெரிய விமான படையை கொண்டுள்ள நாடாக அமெரிக்கா திகழ்கிறது. இந்த படையில் அதிநவீன போர் விமானங்கள் உள்ளது. 80 மில்லியன் டாலர் மதிப்பிலான எப்.35 ரக விமானம் சம்பவத்தன்று தென் கரோலினா கடலோர பகுதியில் சென்று கொண்டிருந்தது.
திடீரென அந்த விமானத்துக்கும் கட்டுப்பாட்டு அறைக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது. அந்த போர் விமானம் எங்கே சென்றது என தெரியவில்லை.
அந்த விமானத்தில் இருந்த விமானி பாராசூட் மூலம் கீழே குதித்து உயிர் தப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் விமானத்தின் நிலை என்ன என்பது மர்மமாக உள்ளது. அந்த விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
நவீனரக போர் விமானம் மாயமான சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஐ.நா. கூட்டத்தில் ரஷியா அதிகாரிகளுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது
- எங்களுடைய அனைத்தையும், பார்ட்னர் நாடுகளால் கேட்கப்படுவது முக்கியம்
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உலகத் தலைவர்களின் ஆதரவை ஜெலன்ஸ்கி நாடி வருகிறார். மேலும், ரஷியாவை தனிமைப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், ராணுவ உதவிகளை செய்து வரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள், உறுதியான எதிர்நடவடிக்கைகளை எடுக்கவில்லை. நேட்டோ படையில் சேர்ப்பதாக தெரிவித்து, அதன் மாநாட்டில் அதுகுறித்து முடிவு எடுக்கப்படாமல் விடப்பட்டது.
ஐ.நா. கண்டனம் தெரிவித்த போதிலும் ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் ஐ.நா.வின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-
எங்களை பொறுத்தவரை, எங்குடைய அனைத்து வார்த்தைகள், அனைத்து மெசேஜ்கள் என அனைத்தையும் எங்களுடைய பார்ட்னர்களால் கேட்கப்பட வேண்டியது மிகவும் முக்கியம். இன்னும் ஐ.நா. அவையில் ரஷியா உறுப்பினர்கள் இருந்தால் அது பரிதாபத்திற்குரியது. ஆனால், இருக்கிறார்கள். ரஷிய பயங்கரவாதிகளுக்காக இங்கே இடம் இருக்கிறது. இந்த கேள்வி எனக்கானது அல்ல. ஐ.நா. அவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்குமான கேள்வி என நான் நினைக்கிறேன்.
இவ்வாறு தெரிவித்தார்.
- ஜூன் மாதம் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் என்பவர் கொலை செய்யப்பட்டார்
- இவரது கொலையில் இந்திய ஏஜென்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு
இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என காலிஸ்தான் பயங்கரவாதிகள் வலியுறுத்தி வருகின்றனர். இவர்கள் கனடா நாட்டில் அதிக அளவில் உள்ளனர். காலிஸ்தான் பயங்கரவாதிகளின் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனடா அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
தாங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக கனடா தெரிவிக்கப்பட்ட போதிலும், அங்கு காலிஸ்தான் பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் அதிகரித்த வண்ணம்தான் உள்ளது.
இதனால்தான் ஜி20 மாநாட்டின்போது, பிரதமர் மோடி- கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இடையே மகிழ்ச்சிகரமான பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளது என கனடா குற்றம்சாட்டியுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவின் உயர் தூதர் அதிகாரி ஒருவரை கனடா வெளியேற்றியுள்ளது. ஏற்கனவே இந்தியா- கனடா இடையிலான ராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இது மேலும் சிக்கலை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
எதிர்க்கட்சிகள் கூட்டிய பாராளுமன்ற அவசர செசனில் ''நாடுகடத்தப்பட்ட காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் கொலை செய்யப்பட்டதில் இந்திய ஏஜென்ட்-களுக்கு தொடர்பு இருப்பதாக நம்பத்தகுந்த குற்றச்சாட்டு உள்ளன.
கனடா மண்ணில் கனடா குடியுரிமை பெற்ற ஒருவர் கொலையில் வெளிநாட்டு அரசின் தலையீடு ஏற்றுக் கொள்ள முடியாதது. இது நாட்டின் இறையாண்மையை மீறுவதாகும். இந்த விசயத்தை தெளிப்படுத்த இந்தியா ஒத்துழைக்க வேண்டும்'' என்றார்.
கனடா நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி மெலானி ஜூலி ''ஜஸ்டின் ட்ரூடோ அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று நாங்கள் இந்தியாவின் மூத்த தூதரக அதிகாரிகையை நாட்டில் இருந்து வெளியேற்றியுள்ளோம். அவர் இந்தியாவின் வெளிநாடு புலனாய்வு அமைப்பின், ஆராய்ச்சி மற்றும் ஆய்வு பிரிவின் (RAW) தலைவராக செயல்பட்டவர்'' என்றார்.
- அமெரிக்காவின் ரெனோவில் விமான பந்தய போட்டி நடந்தது.
- இறுதிப்போட்டியில் பங்கேற்ற 2 விமானங்கள் தரையிறங்கியபோது மோதி விபத்து ஏற்பட்டது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் ரெனோ விமான கண்காட்சி நடந்தது. இதில் ஏராளமான விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டன. இதன் இறுதிப்போட்டியில் விமானங்கள் கலந்து கொண்டன.
அப்போது தரை இறங்கும்போது 2 விமானங்கள் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன. இதில் அந்த விமானங்கள் நொறுங்கின. இந்த விபத்தில் அதில் பயணித்த 2 விமானிகள் பரிதாபமாக இறந்தனர்.
தகவலறிந்ததும் மீட்புப் படையினர் விரைந்து சென்று 2 விமானிகளின் உடல்களை மீட்டனர். இறந்தவர்கள் பெயர் விவரங்கள், விபத்துக்கான காரணம் பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- ரிங் ஆப் ஃபயர் என்ற பகுதியில் தைவான் அமைந்துள்ளதால் அங்கே அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம்.
- நிலநடுக்கத்தால் பொருட் சேதமோ, உயிர் சேதமோ ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.
கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள தீவு பகுதியான தைவானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.
ரிங் ஆப் ஃபயர் என்ற பகுதியில் தைவான் அமைந்துள்ளதால் அங்கே அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம்.
இந்நிலையில், தைவானின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் 171 கீழ் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் பொருட் சேதமோ, உயிர் சேதமோ ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல் எதுவும் இல்லை.






