என் மலர்
உலகம்
- பாரம்பரியமிக்க 2 சிங்கங்கள் கொண்ட சிலை மற்றும் ஜோதியுடன் ஒரு மனிதனை கொண்ட சிலை ஆகியவற்றை பார்வையிட்டதோடு, அந்த சிலைகளின் மீது சுற்றுலா பயணி ஏறி அமர்ந்துள்ளார்.
- சிலையை புதுப்பிக்க ஆகும் ரூ.16 லட்சத்தை சுற்றுலா பயணிக்கு அபராதமாக விதித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பெல்ஜியம் நாட்டில் புராதன சின்னங்கள் மற்றும் பாரம்பரிய சிலைகள் அங்குள்ள ஒரு மையத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் மிகவும் பழமையான சில சிலைகளை சீரமைப்பு திட்டத்தின் கீழ் புதுப்பித்து வைத்திருந்தனர்.
இந்நிலையில் ஐரிஷ் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் அந்த மையத்துக்கு சென்று சிலைகளை பார்வையிட்டுள்ளார். அப்போது அங்கு பாரம்பரியமிக்க 2 சிங்கங்கள் கொண்ட சிலை மற்றும் ஜோதியுடன் ஒரு மனிதனை கொண்ட சிலை ஆகியவற்றை பார்வையிட்டதோடு, அந்த சிலைகளின் மீது ஏறி அமர்ந்துள்ளார். அப்போது அதில் ஒரு சிலை உடைந்து விழுந்தது. இதை கண்ட சுற்றுலா பயணிகள் மற்றும் அந்த மையத்தின் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சேதப்படுத்தப்பட்ட சிலையின் மதிப்பு ரூ.16 லட்சம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் சிலையை சேதப்படுத்திய சுற்றுலா பயணியை கைது செய்தனர். அவர் போதையில் இருந்துள்ளார். தான் சேதப்படுத்திய சிலையின் மதிப்பு தெரியாமல் செய்துவிட்டதாக அவர் கூறினார். இதைத்தொடர்ந்து சிலையை புதுப்பிக்க ஆகும் ரூ.16 லட்சத்தை அந்த சுற்றுலா பயணிக்கு அபராதமாக விதித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
- 2014-ம் ஆண்டு 8.4 கிலோவில் பெரிய வெங்காயம் வளர்க்கப்பட்டதே சாதனையாக இருந்தது.
- சாதனை முறியடிக்கப்பட்டுள்ள நிலையில் கிரிபின் தோட்டத்தில் வளர்ந்த வெங்காயத்துடன் போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இங்கிலாந்து நாட்டில் ஹரோ கேட் நகரில் இலையுதிர்கால மலர் கண்காட்சியையொட்டி காய்கறி போட்டி நடத்தப்படுகிறது. இதில் மிகப்பெரிய அளவிலான காய்கறிகள் மற்றும் மலர்கள் இடம்பெற்றுள்ளன.
அந்த வகையில் இங்கிலாந்து நாட்டின் வடக்கு யார்க்ஷயர் பகுதியை சேர்ந்த தோட்ட விவசாயி கரேத் கிரிபின் என்பவர் தனது தோட்டத்தில் விளைந்த பிரமாண்டமான வெங்காயத்தை கொண்டு வந்து காட்சிபடுத்தினார். அந்த வெங்காயம் 8.97 கிலோ எடை கொண்டதாக இருந்தது. இந்த வெங்காயம் உலகிலேயே பெரிய வெங்காயம் என்று உலக சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு 8.4 கிலோவில் பெரிய வெங்காயம் வளர்க்கப்பட்டதே சாதனையாக இருந்தது. அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ள நிலையில் கிரிபின் தோட்டத்தில் வளர்ந்த வெங்காயத்துடன் போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதனை பார்த்த பயனர்கள் சிலர், இவ்வளவு பெரிய வெங்காயத்தை எப்படி வளர்க்க முடிந்தது? என கேட்டு வருகின்றனர்.
- 27 சதவீத சிறுமிகள் பாலியல் தொந்தரவிற்கு ஆளாகியதாக தெரிவித்தனர்
- சிறுவர்களில் 24 சதவீதம் பேர் தனியே நடந்து செல்ல அச்சப்படுவதாக ஒப்புக்கொண்டனர்
இங்கிலாந்தில் பதின் வயதுகளில் (13லிருந்து 19 வரை) உள்ள 1000 சிறுவர்களிடமும் 1000 சிறுமிகளிடமும் ஒரு தனியார் செய்தி நிறுவனம் சார்பில் கருத்து கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது. இதில் அவர்கள் வீட்டிலும், பள்ளிகளிலும், வீதிகளிலும் மற்றும் பொது இடங்களிலும் சந்திக்கும் சிக்கல்கள் குறித்தும் அவர்களின் மனநிலை குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டது.
இதில் 27 சதவீதத்திற்கும் மேற்பட்ட சிறுமிகள் தாங்கள் ஏதோ ஒரு வகையில் ஒரு முறையாவது பாலியல் தாக்குதலுக்கோ அல்லது தொந்தரவிற்கோ ஆளானதாக தெரிவித்துள்ளனர்.
நகர வீதிகளில் நடந்து செல்லும் போது பாதுகாப்பாக இருப்பதாக உணரவில்லை என 44 சதவீதம் சிறுமிகள் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் அதிகம் இடம்பெறும் ஆபாச படங்களும் செய்திகளும் தங்களை பாதிப்பதாகவும், இணையதளங்களில் எதிர்பாராத நேரங்களில் திடீரென தோன்றும் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் தங்கள் கவனத்தை பாதிப்பதாகவும் அவர்களனைவரும் தெரிவித்துள்ளனர். கருத்து தெரிவித்தவர்களில் பலர் தாங்கள் எப்போதும் மன அழுத்தத்திலும் உளைச்சலிலும் இருப்பதாக கூறினர்.
பள்ளியிலிருந்து வீட்டிற்கு செல்லும் வழியில் பாதுகாப்பற்று உணர்வதாக பல சிறுமிகள் கூறினர். உடுத்தும் உடை, உடல் தோற்றம் மற்றும் முக அழகு குறித்த விமர்சனங்களும் கிண்டல்களும் பகிரங்கமாக செய்யப்படுவதாக கவலையுடன் பல சிறுமிகள் தெரிவித்துள்ளனர். இறுக்கமான உடையணியும் போதெல்லாம் அச்சுறுத்தல்கள் அதிகம் இருப்பதாக பலர் தெரிவித்தனர்.
பின்னால் யாராவது தொடர்கின்றனரா என எப்போதும் பார்க்க வேண்டிய சூழல் இருப்பதாகவும், இதனால் வீடு அல்லது பள்ளி நோக்கி செல்ல மாற்று பாதைகளை தேர்ந்தெடுத்து வைத்திருப்பதாகவும் சில சிறுமிகள் கூறினர்.
ஆச்சரியம் அளிக்கும் விதமாக, இக்கருத்து கணிப்பில் 24 சதவீத சிறுவர்களும் பாதுகாப்பின்மையை உணர்வதாக ஒத்துகொண்டுள்ளனர். கும்பலாக குழுமியிருக்கும் பிற சிறுவர்கள் மற்றும் இரவு நேரம் ஆகியவை அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் கருத்து கூறினர்.
இன்ஃப்ளுயன்ஸர்கள் (influencers) எனப்படும் சமூக வலைதளங்களில் பதின் வயதினருக்கு மாறுபட்ட கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கூறி வருபவர்கள் தங்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதாக சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் ஒப்புக்கொண்டனர்.
ஆனால், கருத்து கணிப்பில் பங்கேற்ற சிறுவர் மற்றும் சிறுமியர் அனைவரும் தங்களது எதிர்காலம் குறித்து மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- எல் நினோ தாக்கத்தால் கணிக்க முடியாத பருவகால நிகழ்வுகள் ஏற்படுகின்றன
- எல் நினோவை எதிர்கொள்ள பெரு நாட்டதிபர் சர்வதேச கூட்டு முயற்சியை கோரியுள்ளார்
அமேசான் மழைக்காடுகள் நிரம்பிய வட அமெரிக்க நாடு, பெரு. இதன் தலைநகர் லிமா.
மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் கடலின் மேற்புரத்தில் ஏற்படும் அதிகப்படியான வெப்பமயமாதலால் அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளில் பருவகால மாற்றங்களில் - சில வருட கால இடைவெளிகளில் - ஒரு சமச்சீரற்ற நிலை உருவாகிறது. இதன் காரணமாக அதிக வறட்சி, அதிக மழைபொழிவு என வானியல் சூழ்நிலை மாறி மாறி திகழ்கிறது. இதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாடும், வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களும் அதிகம் உருவாகின்றன.
இந்நிகழ்வை "எல் நினோ" (El Nino) என சுற்றுச்சூழல் வல்லுனர்கள் அழைக்கின்றனர். பல வருடங்களாகவே இந்த சிக்கலை சமாளிக்க உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என வானிலை நிபுணர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் பெரு நாட்டில், செப்டம்பர் 13 அன்று அந்நாட்டின் தேசிய சிவில் பாதுகாப்பு நிறுவனம், நீர் நிலை குறித்த தனது தொழில்நுட்ப அறிக்கையில் எல் நினோ தாக்குதல் 2024 கோடை காலம் வரை இருக்கும் என எச்சரித்தது.
இதனையடுத்து பெரு நாட்டில் நேற்று தொடங்கி 2 மாத காலத்திற்கு 544 மாவட்டங்களுக்கு அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. வரவிருக்கும் எல் நினோ நிகழ்வினால் அங்கு பெரும் வறட்சியும் அதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படவிருப்பதாக வல்லுனர்கள் தெரிவித்திருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. நிலைமையை சமாளிக்க அந்நாட்டின் மத்திய, மாநில மற்றும் உள்ளூர் அரசாங்க அமைப்புகளும் தேசிய சிவில் பாதுகாப்பு நிறுவனமும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.
இந்நிலையில் அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பின் பொது சபையின் சந்திப்பில் பேசிய பெரு நாட்டு அதிபர் டினா பொலுவார்டே (Dina Boluarte) எல் நினோ நிகழ்வை எதிர்கொள்ள பன்னாட்டு கூட்டு முயற்சியும் ஒப்பந்தமும் அவசியம் என வலியுறுத்தினார்.
- ஜெனின் அகதிகள் முகாம் பகுதியில் இஸ்ரேல் டிரோன் தாக்குதல்
- போராளிகளுக்கும் இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் இடையில் சண்டை நடைபெற்றுள்ளது
ஆக்கிரமிப்பு வெஸ்ட் பேங்க் (மேற்கு கரை) ஜெனின் அகதிகள் முகாம் பகுதியில், இஸ்ரேல் ராணுவம் டிரோன் மூலம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அப்போது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று பாலஸ்தீனர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். 30 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இஸ்ரேல் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ''போராளிகள் ஆதிக்கம் செலுத்தும் ஜெனின் அகதிகள் முகாமில் தேடுதல் வேட்டையில் ராணுவம் ஈடுபட்டது. அப்போது இஸ்ரேல் பாதுகாப்புப்படையின் டிரோன்கள் அந்த பகுதியில் தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேலியர்களை தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்டதாக இரண்டு பாலஸ்தீனர்களை கைது செய்துள்ளனர். இந்தத் தாக்குதலில் இஸ்ரேல் ராணுவத்தை சேர்ந்தவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை'' என்றார்.
பாலஸ்தீனத்தின் ரமல்லா பகுதி சுகாதாரத்துறை அமைச்சகம், மூன்று இளைஞர்கள் உயிரிழந்ததாகவும், 30 பேர் காயம்அடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் போராளிகள் உள்ளிட்ட இரண்டு குழுக்கள் இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிராக கடுமையான சண்டையில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளன. ஆனால், சண்டை குறித்து முழு விவரத்தை தெரிவிக்க மறுத்துவிட்டது.
முன்னதாக, இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையிலான பாதசாரிகள் பயன்படுத்தும் பாதையை இஸ்ரேல் ராணுவம் மூடியதால் 25 வயது பாலஸ்தீனர், காசா முனையில் போராட்டத்தில் ஈடுபட்டபோது இஸ்ரேல் குண்டுக்கு பலியானார்.
மேற்கு கரையில் அடிக்கடி இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால், ஒன்றரை வருடங்களாக அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் நடந்த சமீபத்திய வன்முறை இதுவாகும்.
- தம்பதி மற்றும் அவர்களின் இரு குழந்தைகள் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழப்பு
- அவர்கள் வளர்த்த மூன்று நாய்களும் துப்பாக்கியால் சுட்டுக்கொலை
அமெரிக்காவின் சிகாகோ நகரில், பூட்டிய வீட்டிற்குள் ஒரு தம்பதி, அவர்களின் இரண்டு குழந்தைகள், அவர்கள் வளர்த்த மூன்று நாய்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில், பிணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர்கள் ஒருநாள் முழுவதும் வீட்டில் இருந்து வெளியே வராததாலும், வீடு பூட்டியே கிடந்ததாலும் அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து சிகாகோ போலீசார் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, வீட்டுக்கதவை உடைத்து பார்த்தபோது துப்பாக்கி குண்டு பாய்ந்த இறந்து கிடந்தது தெரியவந்தது. அந்த தம்பதி தங்களது குழந்தைகள், வளர்த்த நாய்களை சுட்டுக்கொலை செய்து, தாங்களும் தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது கொலை செய்யப்பட்டனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்தவர்கள் ஆல்பர்ட்டோ ரோலன், ஜோரைடா பார்டோலோமெய், அவர்களின் குழந்தைகள் ஆட்ரியல் (10 வயது), டியாகோ (7) எனத் தெரியவந்துள்ளது.
போலீஸ் அதிகாரி ஒருவர், ''சம்பவம் நடைபெற்ற இடத்தில் சந்தேக்திற்குரிய வகையில் யாரும் தங்கியதாகவும், நடமாடியதாகவும் எந்த தகவலும் கிடைக்கவில்லை, எங்களுடைய புலனாய்வுத்துறை அதிகாரிகள் தடயங்களை ஆராய்ந்து வருகிறார்கள்'' என்றார்.
- கொரோனா தொற்றால் ஏற்பட்ட உணவு, எரிபொருள் உள்ளிட்டவையின் விலைவாசி உயர்வை உக்ரைன் மீதான போர் மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
- உக்ரைனில் இருந்து சுமார் 10 ஆயிரம் சிறுவர்கள் கடத்தப்பட்டுள்ளனர்
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஐ.நா. பொதுச்சபையில் வருடாந்திர உயர்மட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒரு நாட்டிற்கு எதிராக வெறுப்பு ஆயுதமாகும்போது, அது அந்த நாட்டுடன் நிற்காது. தற்போது உக்ரைனுக்கு எதிராக நடத்தப்படும் போரின் இலக்கு எங்கள் நிலங்கள், எங்கள் மக்கள், எங்கள் உயிர், எங்கள் வளங்கள் ஆகியவற்றை சர்வதேச விதிமுறை உத்தரவுக்கு எதிராக உங்களுக்கு (உலக நாடுகள்) எதிராக ஆயுதமாக மாற்றுவதற்காகத்தான்.
கொரோனா தொற்றால் ஏற்பட்ட உணவு, எரிபொருள் உள்ளிட்டவையின் விலைவாசி உயர்வை உக்ரைன் மீதான போர் மேலும் அதிகப்படுத்தியுள்ளது. உலகளாவிய பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வளர்ந்து வரும் நாடுகள் கஷ்டத்தை எதிர்கொண்டுள்ளனர்.
ரஷியா மீதான தடையால் ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் எரிசக்தி வினியோகம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கத்திய நாடுகள் மாற்று வழியை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ரஷியா மற்றும் உக்ரைன் ஆகியவை தானியங்களை ஏற்றுமதி செய்வதில் முன்னணி நாடுகளாக திகழ்கிறது. தற்போது ரஷியா கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதிக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.
உக்ரைனில் இருந்து சுமார் 10 ஆயிரம் சிறுவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் நிலை என்ன?. அவர்களுக்கு உக்ரைனுக்கு எதிராக வெறுப்பு கற்றுக் கொடுக்கப்படும். இது இனப்படுகொலை என்பது தெளிவாகத் தெரிகிறது.
சர்வதேச கிரிமினல் கோர்ட், கடந்த மார்ச் மாதம் ரஷிய அதிபர் புதினுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. உக்ரைனில் இருந்து குழந்தைகள் கடத்தப்பட்ட குற்றச்சாட்டில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
- 11 கிலோ மீட்டர் ஆழத்திலேயே ஏற்பட்டதால் அதிக அளவில் உணரப்பட்டது
- சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை
நியூசிலாந்தில் இன்று காலை 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதா? என்பது குறித்து உடனடித் தகவல் ஏதும் வெளியாகவில்லை.
நியூசிலாந்தின் முக்கிய நகரான கிறிஸ்ட்சர்ச்சில் இருந்து மேற்கே, 124 கிலோ மீட்டர் தொலைவில் தென்மத்திய தீவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 11 கிலோ மீட்டர் ஆழத்திலேயே ஏற்பட்டதால் பல்வேறு இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
நியூசிலாந்தின் தேசிய அவசரநிலை மேலாண்மை நிர்வாகம், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் இல்லை. இதனால் சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலையும் பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளது. ஆனால், சுமார் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.
5 மில்லியன் மக்களை கொண்ட நியூசிலாந்து அடிக்கடி நிலநடுக்கத்தை எதிர்கொள்வதால் நடுங்கும் தீவுகள் (Shaky Isles) என நகைச்சுவைக்காக அழைக்கப்படுகிறது.
நிலநடுக்கம் மற்றும் எரிமலைகள் வெடிப்புகள் அடிக்கடி நடைபெறும் பசிபிக் கடலை சுற்றியுள்ள ரிங் ஆஃப் பையர் என அழைக்கப்படும் பகுதியில் நியூசிலாந்து அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா ஜி20 மாநாட்டினை தலைமை ஏற்று நடத்தி எங்கோ சென்றுவிட்டது.
- நாம் உலக நாடுகளிடம் கையேந்தி பிச்சை எடுக்கிறோம் என நவாஸ் ஷெரீப் கூறினார்.
லாகூர்:
பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் தற்காலிக பிரதமராக பலூசிஸ்தான் எம்.பி. அன்வர் உல் ஹக் ககர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்காலிக பிரதமராக அன்வர் உல் ஹக் ககர் செயல்பட்டு வரும் நிலையில் பாகிஸ்தானின் நிதி நிலைமை மோசமடைந்து வருகிறது.
நிதி நிலைமையை சமாளிக்க பெட்ரோல் டீசல் மீதான வரி மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 26 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 17 ரூபாயும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் 305 ரூபாய்-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில்
தற்போது கூடுதல் வரியுடன் சேர்த்து பெட்ரோல் ஒரு லிட்டர் 331 ரூபாய்-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு லிட்டர் டீசல் 329 ரூபாய்-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பாகிஸ்தான் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இதற்கிடையே, ஊழல் வழக்குகளில் சிக்கி நாட்டை விட்டு வெளியேறி லண்டனில் வசித்து வரும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிடுவதற்காக அக்டோபர் 21-ம் தேதி நாடு திரும்புவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், லண்டனில் இருந்தபடி காணொலி வாயிலாக தனது கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டதில் நவாஸ் ஷெரீப் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், பாகிஸ்தானின் பொருளாதாரம் கடந்த பல ஆண்டுகளாக வீழ்ச்சி நிலையில் சென்று கொண்டிருக்கிறது. நிலவில் தடம் பதித்தும், ஜி 20 மாநாட்டினை தலைமை ஏற்று நடத்தியும் இந்தியா எங்கோ சென்றுவிட்டது. நாம் உலக நாடுகளிடம் கையேந்தி பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறோம். இந்தியா செய்துள்ள சாதனைகளை பாகிஸ்தானால் ஏன் செய்ய முடியவில்லை? வரும் தேர்தலில் நம் கட்சி பெரும்பான்மை பெற்று, மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என தெரிவித்தார்.
- காலிஸ்தான் தலைவர் கொலையில் தொடர்புடையதால் இந்திய தூதரக அதிகாரியை கனடா வெளியேற்றியது.
- இதற்கு பதிலடியாக கனடா தூதரக உயரதிகாரியை வெளியேற்ற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.
ஒட்டாவா:
பிரிட்டிஷ் கொலம்பியாவில் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் என்பவர் கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார். இக்கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதாக கனடா குற்றம்சாட்டியது.
இதனால் இந்தியா, கனடா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்திய தூதரக அதிகாரியை வெளியேற கனடா உத்தரவிட, அதற்கு பதிலடியாக கனடா தூதரக உயரதிகாரியை வெளியேற்ற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதற்கிடையே, காலிஸ்தான் தலைவர் கொலையில் இந்தியா மீது கனடா அரசு குற்றம் சாட்டியதற்கு அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கனடா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அத்தியாவசிய தேவையின்றி இந்திய பயணத்தை கனடா நாட்டவர்கள் தவிர்க்க வேண்டும். தகுந்த பாதுகாப்புடன் இந்தியாவிற்கு, குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் போன்ற பதற்றம் மிக்க பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் பயணம் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
- ஈரான் சிறையில் இருந்து 5 அமெரிக்கர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
- அவர்கள் கத்தார் தலைநகர் டோகாவுக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்
டோகா:
அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதால் ஈரான் மீது அப்போதைய அமெரிக்க அதிபர் பொருளாதார தடைகளை விதித்தார். மேலும் தென்கொரியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்த ரூ.49,138 கோடியை ஈரானுக்கு கிடைக்க செய்யாமல் முடக்கினார்.
இதற்கிடையே, அமெரிக்கா, ஈரான் இடையே கைதிகள் பரிமாற்றம் ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்பேரில் அமெரிக்காவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு ஈரானில் சிறை தண்டனை அனுபவிக்கும் 5 அமெரிக்கர்களை விடுவிக்க ஈரான் ஒப்புக்கொண்டது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் பொருளாதார தடையால் முடக்கப்பட்டிருந்த ரூ.49,138 கோடியை அமெரிக்கா விடுவித்தது. மேலும் அமெரிக்க சிறையில் உள்ள ஈரானியர்கள் 5 பேரை விடுவிக்கவும் ஆலோசனை நடக்கிறது.
இந்நிலையில், கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட அவர்கள் கத்தார் தலைநகர் டோகாவுக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை கத்தாருக்கான அமெரிக்க தூதர் டேவிஸ் நேரில் சென்று வரவேற்றார்.
- காலிஸ்தான் தலைவர் கொலையில் இந்தியாவுக்கு தொடர்புள்ளது என கனடா குற்றம்சாட்டியது.
- கனடா பிரதமரின் குற்றச்சாட்டு கவலை அளிக்கிறது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்:
பிரிட்டிஷ் கொலம்பியாவில் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் என்பவர் கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளது என கனடா குற்றம்சாட்டியது.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, காலிஸ்தான் தலைவர் கொலை சம்பவத்தை இந்தியர்கள் நடத்தி இருக்கலாம். கொலைக்கு பின் அவர்களே முக்கிய காரணமாக இருக்கலாம் என குற்றம்சாட்டினார்.
இதனால் இந்தியா, கனடா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்திய தூதரக அதிகாரியை வெளியேற கனடா உத்தரவிட, அதற்கு பதிலடியாக கனடா தூதரக உயரதிகாரியை வெளியேற்ற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் அட்ரினே வாட்சன் கூறுகையில், ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த குற்றச்சாட்டுகள் மிகுந்த கவலை அளிக்கின்றன. கனடா கூட்டாளிகளுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம். கனடாவின் விசாரணை நடவடிக்கைகள் மற்றும் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவது மிகவும் முக்கியம் என தெரிவித்தார்.






