என் மலர்
உலகம்
- ரஷியா, கருங்கடல் பகுதி வழியாக உணவு தானிய கப்பல் போக்குவரத்தை தடுத்தது
- 5 நாடுகளில் 3 நாடுகள், தடை விலகலை ஏற்க மறுத்து விட்டன
2022 பிப்ரவரி மாதம் ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் ரஷியாவை எதிர்த்து போரிட்டு வருகிறது. போர் 575 நாட்களாக தொடர்ந்து வருகிறது.
மத்திய ஐரோப்பிய நாடான போலந்து உக்ரைனுக்கு 320 பீரங்கிகளையும், 14 மிக்-29 ரக போர் விமானங்களையும் வழங்கி உதவியது.
போர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆக்ரமித்த கருங்கடல் பகுதியை உணவு தானிய ஏற்றுமதிக்கு பயன்படுத்துவதை ரஷியா தடை செய்து விட்டது. இதனால் உக்ரைன் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தானியங்கள் உலகின் பல நாடுகளுக்கு ஐரோப்பிய நாடுகள் வழியாக சென்றடைகின்றன.
இந்நிலையில் ஐரோப்பியாவின் பல்கேரியா, ஹங்கேரி, போலந்து, ருமேனியா மற்றும் ஸ்லோவேகியா ஆகிய நாடுகளின் உள்ளூர் விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில் அந்நாடுகளின் வழியாக தானியம் எடுத்து செல்ல அனுமதித்தாலும் அந்நாடுகளில் அவற்றை விற்பனை செய்வதை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்திருந்தது. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஐரோப்பிய ஒன்றியம் இந்த தடையை விலக்குவதாக அறிவித்தது.
இருப்பினும் அந்த 5 நாடுகளில் போலந்து, ஹங்கேரி மற்றும் ஸ்லோவேகியா ஆகிய 3 நாடுகள், தங்கள் நாட்டு உள்ளூர் விவசாயிகளை காக்கும் வகையில் இந்த தடை விலகலை ஏற்க மறுத்து விட்டன.
இதனை எதிர்க்கும் விதமாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, தற்போது அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நடைபெறும் ஐ.நா. கூட்டமைப்பின் பொது சபை கூட்டத்தில் உரையாற்றும் போது, "சில ஐரோப்பிய நாடுகள் ரஷியாவிற்கு மறைமுகமாக உதவுகின்றன" என குறிப்பிட்டார்.
இதற்கு எதிர்வினையாக தற்போது போலந்து நாட்டு பிரதமர் மாட்யுஸ் மொராவிக்கி (Mateusz Morawiecki), உள்நாட்டு ராணுவ பலத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால், உக்ரைனுக்கு ராணுவ தளவாடங்களை அனுப்புவது இனி நிறுத்தப்படும் என அறிவித்துள்ளார்.
- இம்ரான்கான் கடந்த மே 9-ந்தேதி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.
- வன்முறைக்கு மூளையாக செயல்பட்டதாக இம்ரான்கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
லாகூர்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், கடந்த மே 9-ந்தேதி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, நாடு தழுவிய அளவில் போராட்டங்கள், வன்முறை நடைபெற்றது. இதை தொடர்ந்து இம்ரான்கான் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். வன்முறையின்போது ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகம் உட்பட அரசாங்க கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டன. போலீஸ் மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகளின் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இந்த வன்முறைக்கு மூளையாக செயல்பட்டதாக இம்ரான்கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
- கவுகா அருகே உள்ள டிம்பா போலீஸ் நிலையம் அருகே சந்தேகத்துக்கு இடமாக ஒரு கார் நின்றது.
- போலீஸ் நிலையத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் கார் வெடிகுண்டு வெடித்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கவுகா:
தென்மேற்கு கொலம்பியாவின் கவுகா அருகே உள்ள டிம்பா போலீஸ் நிலையம் அருகே சந்தேகத்துக்கு இடமாக ஒரு கார் நின்றது. திடீரென இந்த கார் வெடித்து சிதறியது. அதிகாலையில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் 2 பேர் பலியானார்கள்.
மேலும் 2 பேர் காயம் அடைந்தனர். அருகில் உள்ள ஒரு பள்ளி, மருத்துவமனை, வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சேதமடைந்தன. போலீஸ் நிலையத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் கார் வெடிகுண்டு வெடித்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது பயங்கரவாத தாக்குதல் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலில் போலீஸ் நிலையத்தில் அதிகாரிகள் யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என காவல்துறை தெரிவித்து உள்ளது.
- ஈரானின் தண்டனைச் சட்டத்தின்படி 180 மில்லியன் முதல் 360 மில்லியன் ரியால்கள் வரை அபராதம் விதிக்கப்படும்.
- ஈரான் சட்டப்படி இளம்பெண்கள், சிறுமிகள் தங்கள் தலைமுடியை ஹிஜாப் மூலம் மறைக்க வேண்டும்.
டெஹ்ரான்:
ஈரானில் ஆடை அணிவதில் விதிகளை மீறும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கக்கூடிய மசோதாவை ஈரான் பாராளுமன்றம் சமீபத்தில் நிறைவேற்றி உள்ளது.
இந்த மசோதாவின் விதிகளின்படி, பொது இடங்களில் "தகாத முறையில்" உடை அணிந்தவர்களுக்கு 10 ஆண்டு வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்.
ஈரானின் தண்டனைச் சட்டத்தின்படி 180 மில்லியன் முதல் 360 மில்லியன் ரியால்கள் வரை அபராதம் விதிக்கப்படும். இந்த மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பு கார்டியன் கவுன்சிலின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.
இந்த மசோதா அரசியலமைப்பு மற்றும் ஷரியாவுக்கு முரணானது என்று கருதினால் அதை தடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு உள்ளது. இந்த ஹிஜாப் மசோதா 152-க்கு 34 என்ற பாராளுமன்ற வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டு உள்ளது.
மேலும் பெண் டிரைவர் அல்லது பயணிகள் ஆடைக்கட்டுப்பாட்டை மீறினால் வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஈரான் சட்டப்படி இளம்பெண்கள், சிறுமிகள் தங்கள் தலைமுடியை ஹிஜாப் மூலம் மறைக்க வேண்டும். அவர்களின் உடலை மறைக்க நீண்ட, தளர்வான ஆடைகளை அணிய வேண்டும் என்று கூறப்படுகிறது.
முறையற்ற ஹிஜாப் அணிந்ததற்காக போலீசாரால் காவலில் வைக்கப்பட்டிருந்த மாஷா அமினி மரணம் தொடர்பாக எதிர்ப்புக்கள் வெடித்த ஒரு வருடத்திற்குப் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவால் தேடப்படும் பல சீக்கிய பயங்கரவாதிகளை கனடா ஒப்படைக்காத வேளையில், தேடப்படும் பயங்கரவாதிகள் சிலர் கொல்லப்பட்டனர்.
- படிப்புக்காகவும், வேலைவாய்ப்புகளுக்காகவும் கனடா சென்ற பல லட்சம் இந்தியர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
டொரன்டோ:
இந்தியாவின் பஞ்சாப், அரியானாவில் சீக்கியர்கள் பகுதிகளை ஒருங்கிணைத்து காலிஸ்தான் என்ற பெயரில் தனிநாடு அமைக்க வேண்டும் என சீக்கியர்கள் ஆயுதப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் முறியடிக்கப்பட்டது.
இதனால் இந்தியாவை விட்டு தப்பி ஓடிய சீக்கியர்கள் லட்சக்கணக்கானோர் கனடாவில் அகதிகளாக அடைக்கலம் புகுந்தனர். கனடாவின் மொத்த மக்கள்தொகையில் சீக்கியர்கள் தற்போது 2.1 சதவீதம் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் கனடா அரசியலிலும் சீக்கியர்கள் பங்களிப்பு வலிமையாகி விட்டது.
இந்நிலையில் இந்தியாவால் தேடப்படும் பல சீக்கிய பயங்கரவாதிகளை கனடா ஒப்படைக்காத வேளையில், தேடப்படும் பயங்கரவாதிகள் சிலர் கொல்லப்பட்டனர். கனடாவில் நிகழ்ந்த இந்த கொலைகளுக்கு இந்தியாதான் காரணம் என்று கனடா குற்றம் சாட்டியதோடு இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றியது.
இதை கண்டித்த இந்தியா கனடாவின் தூதரக அதிகாரியை வெளியேற்றியது. இதனால் இரு நாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில் சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு என்ற காலிஸ்தான் பயங்கரவாத இயக்கம், கனடாவில் வாழும் இந்துக்களை மிரட்டி இருக்கிறது.
இதுதொடர்பாக காலிஸ்தான் பயங்கரவாதிகள் வெளியிட்ட அறிவிப்பில், கனடாவில் இருந்து இந்தியர்கள் குறிப்பாக இந்துக்கள் வெளியேறி இந்தியாவுக்கு செல்ல வேண்டும். நீங்கள் இந்தியாவை மட்டும் ஆதரிக்கவில்லை.
காலிஸ்தான் தனிநாடு கோருகிறவர்கள் மீதான அடக்குமுறையையும் ஆதரிக்கிறீர்கள். ஆகையால் கனடாவை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு செல்லுங்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் படிப்புக்காகவும், வேலைவாய்ப்புகளுக்காகவும் கனடா சென்ற பல லட்சம் இந்தியர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
- முகத்தை மறைக்க அணியும் புர்கா போன்ற உடைகளுக்கு தடை விதிக்கும், சட்டத்தை அமல்படுத்தி உள்ளது.
- தடையை மீறுபவர்களுக்கு சுவிட்சர்லாந்தின் 1,000 பிராங்குகள் வரை அபராதம் விதிக்கப்படும்.
சூரிச்:
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து பொதுவெளிகளில் பெண்கள், தங்கள் முகத்தை மறைக்க அணியும் புர்கா போன்ற உடைகளுக்கு தடை விதிக்கும், சட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இந்த சட்டம் சுவிட்சர்லாந்து பாராளுமன்றத்தில் 151-29 என்ற அடிப்படையில் நிறைவேறியது, இது ஏற்கனவே மேலவையால் அங்கீகரிக்கப்பட்டது.
இந்த சட்டம் அமலுக்கு வந்தால், உணவகங்கள், விளையாட்டு மைதானங்கள், பொது போக்குவரத்து, சாலைகளில் நடந்து செல்லும்போது என, அனைத்து பொது இடங்களிலும் புர்கா அணிய தடை விதிக்கப்படும். எனினும், மத வழிபாட்டுத் தலங்களில், இதற்கு தடை விதிக்கப்படாது என கூறப்படுகிறது. தடையை மீறுபவர்களுக்கு சுவிட்சர்லாந்தின் 1,000 பிராங்குகள் வரை அபராதம் விதிக்கப்படும்.
- 2017-ம் ஆண்டில் சுக்தூல் சிங் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
- இந்தியா மீது கனடா கொண்டுள்ள கோபம் ஏற்கனவே சமீபத்தில் முடிவடைந்த ஜி20 உச்சி மாநாட்டின்போது வெளிப்பட்டது.
ஒட்டாவா:
கனடாவில் சமீபத்தில் காலிஸ்தான் பிரிவினைவாத குழு தலைவர் நிஜார் சுட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவத்துக்கு இந்தியா காரணம் என்று கனடா குற்றம் சாட்டியது.
இதை இந்தியா மறுத்த நிலையில் 2 நாடுகளும் தங்கள் நாட்டில் உள்ள தூதர்களை வெளியேற்றின. இதனால் இந்தியா-கனடா இடையே உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
கனடாவில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதே வேளையில் கனடாவில் உள்ள இந்துக்கள் வெளியேறுமாறு காலிஸ்தான் பயங்கரவாத கும்பல் மிரட்டி உள்ளது.
இது போன்ற பரபரப்புகளுக்கு மத்தியில் கனடாவில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார். அவர் இந்தியாவின் என்.ஐ.ஏ. அமைப்பால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த சுக்தூல் சிங் ஆவார்.
கனடாவின் வின்னிபெக் நகரில் பிரிவினைவாத குழுக்களுக்கு இடையேயான மோதலில் சுக்தூல்சிங் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 2017-ம் ஆண்டில் சுக்தூல் சிங் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
இந்தியாவில் இருந்து கனடாவுக்கு தப்பி சென்ற அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். கொல்லப்பட்ட சுக்தூல்சிங் போலி பாஸ்போர்ட்டில் அங்கு தங்கி இருந்தார்.
கனடாவில் பெரும்பான்மையாக உள்ள சீக்கியர்களின் வாக்குகளை பெறுவதற்காக கனடா அரசு தொடர்ந்து பிரிவினைவாத குழுக்களுக்கு ஆதரவா இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
இந்தியா மீது கனடா கொண்டுள்ள கோபம் ஏற்கனவே சமீபத்தில் முடிவடைந்த ஜி20 உச்சி மாநாட்டின்போது வெளிப்பட்டது. அப்போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்பட மாநாட்டுக்கு வந்திருந்த தலைவர்களுக்காக சிறப்பு பாதுகாப்புகளுடன் ஓட்டலில் அறைகள் ஒதுக்கப்பட்டு இருந்தன.
ட்ரூடோ தங்கியிருந்த மத்திய டெல்லியில் உள்ள லலித் என்ற ஓட்டலில் ஸ்னைப்பர் தோட்டாக்கள் துளைக்க முடியாத தடிமனான பாலிகார்பனேட் பிளாஸ்டிக் குண்டுகள் துளைக்காத கண்ணாடி மூலம் மேம்பட்ட பாதுகாப்பு கவசம் நிறுவப்பட்டிருந்தது. இது தவிர மற்ற பாதுகாப்பு உபகரணங்களும் இருந்தன.
இருப்பினும், ட்ரூடோவின் பிரதிநிதிகள் அங்கு தங்க வேண்டாம் என்று முடிவு செய்து, அதற்குப் பதிலாக சாதாரண அறைகளை தேர்ந்தெடுத்து தங்கியதால், இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு குழப்பம் ஏற்பட்டது.
இந்திய அதிகாரிகள் பல முறை கனடா பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சாதாரண அறைகளில் தங்கியிருந்தது மட்டுமின்றி, அதற்காக கனடா தரப்பில் பணம் செலுத்தவும் முன்வந்ததாக கூறப்படுகிறது.
உச்சிமாநாட்டிற்குப் பிறகு நாடு திரும்பியபோது கனடா பிரதமரின் சிறப்பு விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு தாமதம் ஆனது. அப்போது அவர் நாடு திரும்ப இந்தியா விமானத்தை வழங்க முன்வந்தது. ஆனால் அதுவும் கனடா தரப்பில் நிராகரிக்கப்பட்டது.
- ரஷியாவின் போர் எங்களுடன் நிற்கப்போவதில்லை என ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்திருந்தார்
- ரஷியா போர் தொடங்கியதில் இருந்து உக்ரைனுக்கு கனடா ஆதரவு தெரிவித்து வருகிறது
ஐ.நா. சபையின் வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பாதுகாப்பு கவுன்சிலில் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
ரஷியா எரிசக்தி மற்றும் உணவை ஆயுதமாக்கி வருகிறது. மில்லியன் கணக்கான மக்கள் உணவு தட்டுப்பாட்டால் அவதிப்படுகின்றனர். பசி மற்றும் பட்டினியால் வாடுகின்றனர். மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தணிப்பதில் கனடா அர்ப்பணிப்புடன் உள்ளது.
உக்ரைன்- நிலையான வளர்ச்சி இலக்கு மற்றும் உலகளாவிய முன்னேற்றம் ஆகிவற்றிற்கு இடையேயான ஆதரவை முடிவு செய்வதை நாங்கள் நம்பவில்லை. உண்மையிலே, ஒரே பொறுப்பு இரண்டையும் தேர்வு செய்வதுதான். ஒற்றுமை மற்றும் நிதி அர்ப்பணிப்புடன் அதை செய்து கொண்டிருக்கிறோம். ரஷியா முற்றிலுமாக, உடனடியாக உக்ரைனில் இருந்து துருப்புகளை திரும்பப்பெற வேண்டும்.
இவ்வாறு ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.
- நண்டு உணவுக்கு 56 ஆயிரம் ரூபாய் பில் போட்டதால் அதிர்ச்சி
- பேச்சுவார்த்தைக்கு பிறகு 6479 ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது
ஜப்பானைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஜுன்கோ ஷின்பா தனது நண்பர்கள் மூன்று பேருடன் சிங்கப்பூரில் உள்ள ரெஸ்டாரன்டில் சாப்பிட சென்றிருந்தார். சப்ளை செய்யும் நபர், இங்கு நண்டு உணவு (Crab Dish) பிரமாதமாக இருக்கும். அதன்விலை 20 டாலர் எனத் தெரிவித்துள்ளார். மேலும், அந்த நண்டை அவர்களது மேஜையில் வைத்து இதை சமைக்க சொல்லலாமா? எனக் கேட்டுள்ளார். இவர்களும் ஓ.கே. சொல்லியுள்ளனர்.
ஜுன்கோ தனது நண்பர்களுடன் நண்டு உணவை சாப்பிட்டுள்ளார். சாப்பிட்டு முடித்த பின்னர், சப்ளை செய்த நபர், பில்லை நீட்டியுள்ளார். அப்போது நண்டு உணவுக்கு 56 ஆயிரம் (680 டாலர்) பில் போட்டிருப்பதை கண்டு வாயடைத்துப் போனார். அவருடன் வந்தவர்களில் ஒருவர், ''ஓட்டலில் உள்ள அனைத்தையும் எங்களுக்காக சமைப்பார்கள் என்று எங்களிடம் தெரிவிக்கவில்லை. மற்ற ரெஸ்டாரன்ட்களில் அவற்றில் ஒரு பகுதியைத்தான் சமைப்பாளர்கள்'' என்று தெரிவித்தார்.
இதுகுறித்து ரெஸ்டாரன்ட் நிர்வாகத்திடம் தெரிவிக்க, அவர்கள் 100 கிராம் நண்டு டிஷ் 20 டாலர். உங்களுக்கு 3,500 கிராம் நண்டு டிஷ் பரிமாறப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. சப்ளை செய்த நபர் அவ்வாறு தெரிவிக்கவில்லையே, நாங்களும் மொத்தத்தையும் ஆர்டர் செய்யவில்லையே, என்று ஜுன்கோ தெரிவித்து, போலீஸை அழைக்க கேட்டுக்கொண்டார்.
அதன்படி போலீசார் வரவழைக்கப்பட்டனர். அப்போது ஜுன்கோ நடந்த சம்பவம் குறித்து விளக்கமாக எடுத்துக் கூறினார். அதற்கு ரெஸ்டாரன்ட் தரப்பிலும், தங்களது சப்ளையர் சரியான முறையில் அவர்களுக்கு எடுத்துரைத்தார் என்று விளக்கம் அளித்தனர்.
இறுதியாக ரெஸ்டாரன்ட் 78 டாலர் (6,479 ரூபாய்) தள்ளுபடி செய்ய ஒப்புக்கொண்டனர். அதன்பின் ஜுன்கோ மீதி பணத்தை செலுத்தினார்.
- இறந்தவர்களில் 10 பேர் பொதுமக்கள் ஆவர் என்றும் அவர்களில் ஐந்து குழந்தைகள் என்றும் கூறினார்.
- தாக்குதலில் உயிரிழந்தவர்கள் பற்றிய விவரங்களைத் தெரிவிக்கவில்லை.
அஜர்பைஜானில் உள்ள நாகோர்னோ-கராபாக் என்பது தென் காகசஸில் உள்ள கராபாக் மலைத்தொடர்களுக்குள் நிலத்தால் சூழப்பட்ட பகுதி.
இங்கு, அஜர்பைஜான் நடத்திய ஒரு நாள் ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு ஏற்பட்ட தாக்குதலில் நூற்றுக்கணக்கான உயிர்கள் கொல்லப்பட்டதாக பிரிவினைவாத அதிகாரி ஒருவர் கூறினார்.
அப்போது அவர். "குறைந்தது 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 400 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்" என்று சமூக ஊடகங்களில் அறிவித்தார்.
மேலும் அவர், இறந்தவர்களில் 10 பேர் பொதுமக்கள் ஆவர் என்றும் அவர்களில் ஐந்து குழந்தைகள் என்றும் அவர் கூறினார்.
ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் நேற்று மாலை, அதன் வீரர்கள் சிலர் கொல்லப்பட்டதாகவும், மற்றவர்கள் காயமடைந்ததாகவும் கூறினார்.
- க்விலேரியோ ஏசுநாதரின் மறுஅவதாரமாக தன்னை அறிவித்து கொண்டுள்ளார்
- இந்த அமைப்பிற்கு 3500க்கு மேற்பட்டோர் ஆதரவாளராக உள்ளனர்
தென்கிழக்காசிய நாடான பிலிப்பைன்ஸில் உள்ளது மிண்டனாவ் நகரம்.
இந்நகரத்தில் தற்போது ஒமேகா டி சலோனேரா (Omega de Salonera) என்றும் முன்னர் சொக்கோரோ பயனிஹான் சேவைக்குழு (Soccoro Bayanihan Services) என்றும் அழைக்கப்பட்ட ஒரு மத அமைப்பு செயல்படுகிறது. தன்னை பின்பற்றுபவர்களை தவிர வேறு எவராலும் எளிதில் உள்ளே நுழைய முடியாதவாறு ஆயுதமேந்திய காவலர்கள் சூழ, அதன் தலைவர் ஜே ரென்ஸ் பி க்விலேரியோ (Jey Rence B Quilario) என்பவரால் ஒரு மலைப்பகுதியில் இது செயல்படுகிறது.
2019ல் அந்த பிராந்தியத்தில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்திற்கு பிறகு அச்சத்தில் வாழ்ந்து வந்த மக்களிடம், உலகம் அழிய போவதாகவும் அதிலிருந்து தப்ப தன்னிடம் சரணடையுமாறும் கூறி மூளை சலவை செய்துள்ளார். ஏசுநாதரின் மறுஅவதாரமாக தன்னை அறிவித்து கொண்டுள்ள க்விலேரியோ மீது அவரது ஆதரவாளர்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர்.
உறுப்பினர்களிடம் பெருகின்ற நிதியிலிருந்தும், போதை மருந்து கடத்தல் மூலமாகவும் நிதி பெறும் இந்த அமைப்பில் சுமார் 1600 குழந்தைகள் உட்பட 3,500 பேருக்கும் மேல் நம்பிக்கையாளர்களாக உள்ளனர்.
சில தினங்களுக்கு முன்னால் 8 குழந்தைகள் அங்கிருந்து தப்பித்து வந்தனர். அங்கு நடைபெறும் கொடுமைகள் குறித்து அவர்கள் காவல்துறையிடம் வாக்குமூலம் தெரிவித்துள்ளனர்.
க்விலேரியோ, மைனர் சிறுமிகள் மீது பாலியல் தாக்குதல் நடத்துவதாகவும், அங்குள்ள ஆண்களுக்கு அச்சிறுமிகளை கட்டாய திருமணம் செய்து வைப்பதாகவும், அதற்கு அச்சிறுமிகளின் பெற்றோர்களும் ஒப்பு கொள்வதாகவும், அந்த மலைப்பகுதியில் வசிக்கும் பிற சிறுமிகள் மீதும் அவர் பாலியல் தாக்குதல்களில் ஈடுபடுவதாகவும் புகாரளித்தனர்.
தற்போது இவர் மீது நடவடிக்கை எடுக்க விசாரணை அமைப்புகள் தீவிரமாக இறங்கியுள்ளன.
- ஐ.நா. பொது சபையின் 78-வது அமர்வு நியூயார்க் நகரில் நடைபெறுகிறது
- பிற நாட்டின் இறையாண்மையை மதிக்க துருக்கி கற்று கொள்ள வேண்டும் என இந்தியா தெரிவித்தது
ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் கொள்கைகளை வகுக்கும் முக்கிய அங்கம், பொது சபை (General Assembly). ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதத்தில் உறுப்பினர் நாடுகளுக்கான சந்திப்புக்காக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இச்சபையின் கூட்டம் நடைபெறும்.
இதன் 78-வது அமர்வு இம்மாதம் 5 அன்று தொடங்கியது. இது இம்மாதம் 26 வரை நடைபெறும். நேற்று தொடங்கி வரும் 23 வரையிலும், பிறகு இரண்டு நாட்கள் கழித்து 26 அன்றும், பல்வேறு பிரச்சனை குறித்து உறுப்பினர் நாடுகள் கலந்து கொள்ளும் விவாதங்கள் நடைபெறும்.
இதில் உறுப்பினர் நாடான துருக்கியின் சார்பில் அதன் அதிபர் ரிசெப் டாயிப் எர்டோகன் கலந்து கொண்டார்.
"பிராந்திய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி நிலைபெற இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்சனை குறித்து பேச வேண்டும். இதற்கான அனைத்து ஒத்துழைப்பையும் துருக்கி வழங்க தயாராக உள்ளது." என விவாதத்தில் பேசிய போது அவர் தெரிவித்தார்.
கடந்த வருடம் நடைபெற்ற பொது சபை சந்திப்பிலும் எர்டோகன் காஷ்மீர் பிரச்சனையை எழுப்பினார்.
"பிற நாட்டின் இறையாண்மையை மதிக்க துருக்கி கற்று கொள்ள வேண்டும்" என பதிலளித்து அதற்கு அப்பொழுதே இந்தியா கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் துருக்கி இந்த சிக்கலை கிளப்பியிருப்பதால், இந்தியாவின் நகர்வை அரசியல் விமர்சகர்கள் கவனித்து வருகின்றனர்.






