என் மலர்tooltip icon

    உலகம்

    • தேவாலயத்தில் ஞானஸ்னானம் எனும் சடங்கு நடைபெற்று கொண்டிருந்தது
    • இறந்த 10 பேரில் 5 பேர் பெண்கள், 2 பேர் ஆண்கள் மற்றும் 3 பேர் குழந்தைகள்

    மெக்சிகோ நாட்டின் வடக்கே உள்ள டமாலிபாஸ் (Tamaulipas) பகுதியில் உள்ள மெக்சிகோ வளைகுடாவின் கடற்கரையோர நகரம், சியுடாட் மடேரோ (Ciudad Madero). இங்கு சுமார் 2 லட்சம் பேர் வசிக்கின்றனர்.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுமார் 80 பேருக்கும் மேற்பட்ட கிறித்துவ மக்கள் அங்குள்ள சான்டா க்ரூஸ் தேவாலயத்தில் வழிபாட்டிற்காக கூடியிருந்தனர். அங்கு 'ஞானஸ்னானம்' எனும் கிறித்துவ மத சடங்கு நடைபெற்று கொண்டிருந்தது.

    அப்போது எதிர்பாராதவிதமாக அந்த தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து கீழே விழுந்தது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர்; 60-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

    இறந்த 10 பேரில் 5 பேர் பெண்கள், 2 பேர் ஆண்கள் மற்றும் 3 பேர் குழந்தைகள். காயமடந்த 60 பேரில் 23 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

    இடிபாடுகளுக்கிடையே 80 பேர் இன்னமும் சிக்கி உள்ளதாகவும் அவர்களை பத்திரமாக மீட்க காவல்துறை மற்றும் சமூக சேவை அமைப்புகளுடன் இணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் டமாலிபாஸ் கவர்னர் அமெரிக்கொ வில்லாரியல் (Americo Villarreal) தனது எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

    மீட்பு நடவடிக்கைக்கு உதவ தேவைப்படும் ஹைட்ராலிக் லிஃப்ட், மரங்கள், சுட்டி உட்பட பல உபகரணங்களை தந்து உதவ கோரி சமூக வலைதளங்களில் அப்பகுதி மக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

    • தகுதியுடையவர்களை இந்நிறுவனத்தின் 50 பேராசிரியர்களை கொண்ட குழு தேர்வு செய்யும்
    • விருது பெறும் இருவருமே 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

    சுவீடன் நாட்டு தலைநகரான ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள சோல்னா (Solna) எனும் பகுதியில் உள்ளது 'கரோலின்ஸ்கா இன்ஸ்டிட்யூட்' எனப்படும் புகழ்பெற்ற மருத்துவ கல்வி நிறுவனம்.

    இக்கல்வி நிறுவனத்தின் 50 பேராசியர்களை கொண்ட 'நோபல் அசெம்பிளி' (Nobel Assembly) எனும் குழு ஒவ்வொரு வருடமும் மருத்துவ துறையில் மனித இனத்திற்கு பலனளிக்கும் வகையில் கண்டுபிடிப்புகளை செய்த நிபுணர்களுக்கு நோபல் பரிசு எனப்படும் உலகப்புகழ் வாய்ந்த விருதிற்கு தகுதியானவர்களை தேர்வு செய்கிறது.

    இந்த வருட மருத்துவ துறைக்கான நோபல் பரிசு, கட்டாலின் கரிக்கோ (Katalin Kariko) மற்றும் ட்ரூ வைஸ்மேன் (Drew Weissman) ஆகியோருக்கு வழங்கப்படுவதாக இந்த குழு அறிவித்துள்ளது.

    இது குறித்து அக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாவது:

    மனிதர்களின் மரபணு கூறுகள், மனிதர்களின் எதிர்ப்பு சக்தியில் ஆற்றும் பங்கினை கண்டறிய இந்த இருவரும் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவுகள் பெரிதும் உதவியது. அதன் மூலம் உலகையே அச்சுறுத்தி வந்த கோவிட்-19 பெருந்தொற்றிற்கு எதிரான தடுப்பூசியை பெருமளவு தயாரிப்பது எளிதாக அமைந்தது.

    இவ்வாறு நோபல் அசெம்பிளி அறிவித்துள்ளது.

    விருது பெறும் இருவருமே 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    உயிர்வேதியியல் துறையை சேர்ந்த 68 வயதான ஹங்கேரிய அமெரிக்க விஞ்ஞானியான கட்டாலின் கரிக்கோ, அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார்.

    அமெரிக்க வேதியியல் விஞ்ஞானியான 64 வயதான ட்ரூ வைஸ்மேன், மரபணு ஆராய்ச்சிக்கான பென் இன்ஸ்டிட்யூட் (Penn Institute) நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார்.

    மருத்துவ துறைக்கு இவ்விருதுகள் வழங்கப்பட தொடங்கிய 1901 வருடத்திலிருந்து இதுவரை 113 பேருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதும், அவற்றில் 12 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • பூங்காவிற்கு வருபவர்களில் பலர் தற்காலிக கூடாரம் அமைத்து தங்குவது வழக்கம்
    • சார்லோட் கடைசியாக ஆரஞ்சு நிற சட்டை, கருநீல பேண்ட், கருப்பு நிற க்ராக் காலணி அணிந்திருந்தாள்

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ளது சரடோகா கவுன்டி பகுதி.

    இங்கு சுமார் 6250 ஏக்கர் பரப்பளவில் உள்ளது மோரு ஏரி மாநில பூங்கா (Moreau Lake State Park) எனப்படும் இயற்கை எழில் மிகுந்த சிறிய வனப்பகுதி. இயற்கை காட்சிகளும், பெரிய ஏரியும், அழகான மரங்களை கொண்ட அடர்ந்த காடுகளும் உள்ளதால் இப்பகுதிக்கு பொழுதுபோக்கவும், அங்கேயே தற்காலிக கூடாரம் அமைத்து சுற்றி பார்க்கவும் மக்கள் வருவது வழக்கம்.

    அவ்வாறு சில தினங்களுக்கு முன் பொழுது போக்க ஒரு குடும்பத்தினர் தங்கள் மகளுடன் வந்திருந்தனர். சார்லோட் சேனா எனும் அவர்களின் 9 வயது மகள் நேற்று முன் தினம் தனது சைக்கிளில் சுற்றி வர கிளம்பினார். கிளம்பி சென்றும் நீண்ட நேரம் திரும்பி வராததால் அவள் பெற்றோர் கவலையடைந்தனர்.

    அச்சிறுமியின் தாய் த்ரிஷா, அவசர சேவை எண் 911-ஐ தொடர்பு கொண்டு தெரிவித்ததின் பேரில் காவல்துறையினர் விரைந்து வந்து தேடுதல் வேட்டையினை தொடங்கினர்.

    விசாரணையில் அச்சிறுமியை அங்குள்ள லூப் ஏ (Loop A) பகுதியில் கடைசியாக அவள் அணிந்திருந்த ஆரஞ்சு நிற சட்டை, கருநீல பேண்ட், கருப்பு நிற க்ராக் (Croc) காலணியுடன் கண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதற்கு பிறகு என்னவானார் என தெரியவில்லை.

    இது குறித்து நியூயார்க் நகர கவர்னர் கேதி ஹோசல் தெரிவித்ததாவது:

    அச்சிறுமியை தேடும் பணியில் 75 காவல்துறை அதிகாரிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 18 மணி நேரத்திற்கும் மேலாக நியூயார்க் காவல்துறை அதிகாரிகள், மோப்ப நாய்கள், விமான சேவை, வேட்டை நாய்கள் என அனைத்துவிதமான வளத்தையும் இந்த தேடுதலில் ஈடுபடுத்தியுள்ளோம். பல்வேறு சிறப்பு அதிகாரிகளும் இதில் பங்கு பெற்றுள்ளனர். டிரோன் சேவை, மற்றும் நீருக்கடியில் சென்று மீட்கும் படை சேவை உட்பட எல்லாவித வளங்களையும் உபயோகபடுத்தியுள்ளோம். பூங்காவில் அச்சிறுமி காணாமல் போன போது பரிமாறி கொள்ளப்பட்ட செய்திகள் குறித்தும் ஆராய நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். எந்த சிறு விஷயத்தையும் அலட்சியப்படுத்தாமல் தேடி வருகிறோம்.

    இவ்வாறு கவர்னர் தெரிவித்தார்.

    5 அடி 1 அங்குலம் உயரமும் 40 கிலோ எடையும் உள்ள அச்சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட காவல்துறை, பொது மக்களின் ஒத்துழைப்பையும் கோரியுள்ளது. அப்பகுதி முழுவதும் ஆம்பர் எச்சரிக்கை (Amber Alert) எனப்படும் குழந்தைகள் கடத்தல் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • ஒரு சில இடங்களில் வெப்பம் 102 டிகிரி ஃபேரன்ஹீட் அளவை தொட்டது
    • பரப்பளவில் அமேசான் காடு ஆஸ்திரேலியா அளவிற்கு பரந்து விரிந்துள்ளது

    பிரேசில் நாட்டின் வடமேற்கில் தொடங்கி கொலம்பியா, பெரு உட்பட பல தென் அமெரிக்க நாடுகள் வரை பரவியுள்ளது அமேசான் மழைக்காடு.

    வடக்கு பிரேசிலில் அமேசோனாஸ் (Amazonas) மாநிலத்தின் தலைநகரமான மனோஸ் (Manaus) நகருக்கருகே உள்ளது டெஃப் (Tefe) பிராந்தியம். இப்பகுதியிலும் அமேசான் காடுகள் பரவியுள்ளது. இப்பகுதி முழுவதிலும் சமீப காலமாக பெரும் வறட்சி ஏற்பட்டுள்ளது. நீர் நிலைகளில் வெப்பம் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒரு சில இடங்களில் வெப்பம் 102 டிகிரி ஃபேரன்ஹீட் அளவை தொட்டு விட்டது.

    இதன் காரணமாக இங்குள்ள டெஃப் ஏரியில் நூற்றுக்கணக்கான டால்பின்கள் உயிரிழந்து மிதக்கின்றன.

    "இத்தகைய சம்பவம் இதற்கு முன்பு நடைபெறாதது. டால்பின் மீன்கள் இறந்ததற்கும் அதிகளவு வெப்பத்திற்கும் உறுதியான தொடர்புள்ளது. ஆனால், வெப்பநிலை அதிகரிப்பதற்கான காரணத்தை இதுவரை கண்டறிய முடியவில்லை" என பிரேசில் அறிவியல் துறையின் ஆதரவில் இயங்கும் மமிரவா நிறுவனம் (Mamiraua Institute) தெரிவித்துள்ளது.

    உயர்ந்து வரும் வெப்ப நிலை காரணமாக அமேசான் காடுகளில் உள்ள நீர்மட்டமும் குறைந்து கொண்டே வருகிறது. பரப்பளவில் கிட்டத்தட்ட ஆஸ்திரேலியாவின் அளவிற்கு பரந்து விரிந்துள்ள இக்காடுகளில் இது போன்ற வானிலை நிகழ்வுகள் நடைபெறுவதால் 1 லட்சம் பேருக்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    இயற்கைக்கு எதிரான பல நடவடிக்கைகளில் மனிதர்கள் ஈடுபட்டு வருவதால் இது போன்ற விசித்திரமான பருவநிலை மாற்றங்கள் ஏற்படலாம் என சுற்றுச்சூழல் நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வந்தனர். இந்த நிகழ்வு அதனை உறுதிப்படுத்துவதாக உள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்து நிலவுகிறது.

    • நவம்பர் 28 வரை ஆணையம் காலக்கெடு நிர்ணயித்துள்ளது
    • எழுத்தாளர் கிரீன்வால்டின் கருத்தை ஆமோதித்தார் மஸ்க்

    "இணையதள ஸ்ட்ரீமிங் சட்டம்" எனும் புது சட்டத்தின் மூலம் 10 மில்லியன் டாலருக்கு மேல் வருமானம் ஈட்டும் இணையதள சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், தங்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை அரசாங்கத்திடம் பதிவு செய்து அரசு விதிக்கும் ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என கனடா அரசாங்கத்தின் வானொலி-தொலைக்காட்சி மற்றும் தொலைதொடர்பு ஆணையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அவ்வாறு பதிவு செய்ய நவம்பர் 28 வரை காலக்கெடுவும் நிர்ணயித்துள்ளது. இந்த உத்தரவு, ஆடியோ-வீடியோ சேவைகளை வழங்கும் பல வலைதளங்கள் உட்பட சமூக வலைதளங்களுக்கும், இணையவழி சந்தாதாரர் தொலைக்காட்சி சேவைகள் ஆகியவற்றுக்கும் பொருந்தும்.

    "உலகத்திலேயே கனடா அரசாங்கம்தான் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான பிற்போக்கு வழிமுறைகளை கையாண்டு வருகிறது" என இதனை குறித்து கெல்ன் கிரீன்வால்ட் எனும் அமெரிக்க எழுத்தாளர் தனது எக்ஸ் கணக்கில் பதிவிட்டிருந்தார்.

    "ட்ரூடோ கருத்து சுதந்திரத்தை நசுக்க முயற்சிக்கிறார். வெட்கக்கேடு" என குறிப்பிட்டு, கிரீன்வால்டின் கருத்தினை ஆமோதிக்கும் வகையில் எக்ஸ் நிறுவனத்தின் தற்போதைய நிறுவனரும் உலகின் நம்பர் 1. பணக்காரரான அமெரிக்கர் எலான் மஸ்க் தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

    கனடா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு உலகளவில் பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    • நைஜீரியா நாட்டின் தென்மேற்கு மாகாணமான ஒட்டோவில் இறுதிச்சடங்கு ஊர்வலம் நடைபெற்றது.
    • துப்பாக்கி முனையில் சுமார் 25 பேரை அவர்கள் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

    அபுஜா:

    நைஜீரியா நாட்டின் தென்மேற்கு மாகாணமான ஒட்டோவில் இறுதிச்சடங்கு ஊர்வலம் நடைபெற்றது. இதில் உயிரிழந்தவரின் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது திடீரென பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் அவர்களை சுற்றி வளைத்தனர்.

    இதனையடுத்து துப்பாக்கி முனையில் சுமார் 25 பேரை அவர்கள் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் யார்? எதற்காக கடத்தினார்கள்? என்பது இன்னும் தெரியவில்லை. எனவே போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஸ்பெயின் நாட்டின் தென்கிழக்கு நகரமான முர்சியாவில் இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்று செயல்படுகிறது.
    • தீ மளமளவென அருகில் இருந்த கட்டிடங்களுக்கும் வேகமாக பரவியது.

    மாட்ரிட்:

    ஸ்பெயின் நாட்டின் தென்கிழக்கு நகரமான முர்சியாவில் இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்று செயல்படுகிறது. வார இறுதியை முன்னிட்டு இங்கு பலர் கூடியிருந்தனர். அப்போது அந்த விடுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மளமளவென அருகில் இருந்த கட்டிடங்களுக்கும் வேகமாக பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

    இதுகுறித்த தகவலின்பேரில் அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க தண்ணீரை பீய்ச்சியடித்தனர். சில மணி நேர போராட்டத்துக்கு பின்னர் இந்த தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் இந்த தீ விபத்தில் 13 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    • சைபர் வழக்கு என அறியப்படும் இந்த வழக்கு விசாரணை பாகிஸ்தானின் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது.
    • இம்ரான்கான் ஏற்கனவே தோஷகானா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவரது உதவியாளர் முகமது குரேஷி ஆகியோர் மீது அரசு ரகசியங்களை வெளிப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. சைபர் வழக்கு என அறியப்படும் இந்த வழக்கு விசாரணை பாகிஸ்தானின் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது.

    இதில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் இருவரையும் குற்றவாளிகள் என கோர்ட்டு அறிவித்தது. இம்ரான்கான் ஏற்கனவே தோஷகானா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இரண்டு தற்கொலைப்படை தாக்குதல்களில் 65 பேர் உயிரிழந்தனர்
    • இஸ்லாமுடன் எந்த தொடர்பும் இல்லாதவர்கள் தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர்

    பாகிஸ்தானில் உள்ள பலோசிஸ்தான் பிராந்தியத்தின் மஸ்டங் பகுதியில், நேற்று முன் தினம் நடைபெற்ற மிலாடி நபி பண்டிகை கொண்டாட்டத்தின் போது அங்குள்ள மதினா மஸ்ஜித் வழிபாட்டு தலத்தில் ஒரு பயங்கரவாத தற்கொலை படை தாக்குதல் நடைபெற்றது. இதில் 60 பேர் உயிரிழந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    கைபர் பக்டுங்க்வா பகுதியில் உள்ள ஹங்கு எனும் இடத்தில் ஒரு காவல் நிலையம் அருகே உள்ள மசூதிக்கருகே மற்றொரு குண்டு வெடிப்பு நடைபெற்றது. இதில் 5 பேர் கொல்லப்பட்டனர்; 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    தொடரும் தீவிரவாத தாக்குதல்களை கையாள முடியாமல் திணறுவதாக பாகிஸ்தான் அரசாங்கம் விமர்சிக்கப்பட்ட நிலையில், அந்நாட்டின் ராணுவ தளபதி ஜெனரல். சையத் அசிம் முனிர் இது குறித்து அறிக்கை வெளியிட்டார்.

    அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    இஸ்லாமுடன் எந்த தொடர்பும் இல்லாத ஒரு சிலர், பயங்கரவாதத்திற்கு ஆதரவு தரும் ஒரு சிலரின் துணையுடன், இத்தகைய தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இவர்கள் பாகிஸ்தான் எதிரிகளின் பிரதிநிதிகள். மன உறுதி மிக்க மக்களை கொண்ட ஒரு நாட்டின் பாதுகாப்பு படையின் முழு சீற்றத்தையும் இந்த தீயசக்திகள் இனிமேல்தான் காண தொடங்குவார்கள். ஓய்வு ஒழிச்சலின்றி இடைநிறுத்தம் இல்லாத ராணுவ நடவடிக்கைகள் மூலம் தீவிரவாத அச்சுறுத்தல்கள் இனி முற்றிலுமாக ஒழிக்கப்படும்.

    இவ்வாறு முனிர் உறுதியளித்துள்ளார்.

    பாகிஸ்தான் முழுவதும் வன்முறை சம்பவங்கள் 57 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும், இவ்வருட ஆரம்பம் முதல் சுமார் 386 பாதுகாப்பு படையினர் பயங்கரவாத தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர் என்றும் ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

    சுமார் 30 ஆண்டுகளாக தனது அண்டை நாடான இந்தியாவிற்கு பயங்கரவாதத்தை 'ஏற்றுமதி' செய்து வந்த நாடான பாகிஸ்தான், இப்போதுதான் தன் நாட்டிலேயே அதன் தீமையை உணர தொடங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

    • காலிஸ்தான் ஆதரவாளர்கள் சமீப காலமாக இந்தியாவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
    • பின்னணியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் உள்ளதாக ஹர்மன் சிங் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

    லண்டன்:

    இங்கிலாந்து மற்றும் கனடா நாடுகளில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் சமீப காலமாக இந்தியாவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இங்கிலாந்தில் காலிஸ்தான் அமைப்புக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்த சீக்கியர் ஒருவருக்கு சொந்தமான கார்கள் சேதப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இங்கிலாந்தில் உணவகம் நடத்தி வருபவர் ஹர்மன் சிங். சம்பவத்தன்று இரவு இவர் தனது வீட்டு முன்பு 2 கார்களை நிறுத்தி வைத்து இருந்தார். இந்த கார்களை சிலர் அடித்து உடைத்து சேதப்படுத்தினார்கள். கண்ணாடிகளும் உடைக்கப்பட்டது. மேலும் கார்களின் முன்புறத்தில் எச்சரிக்கை விடுக்கும் வகையில் சிகப்பு நிற பெயிண்டும் அடிக்கப்பட்டு இருந்தது. இந்த செயலின் பின்னணியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் உள்ளதாக ஹர்மன் சிங் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    காலிஸ்தான் அமைப்புக்கு எதிராக சமூகவலைதளத்தில் வீடியா பதிவிட்டு வந்ததால் கடந்த 6 மாதங்களாக எனக்கு 100-க்கும் மேற்பட்ட கொலை மிரட்டல் வந்தது. 8 மாதங்களில் 4 முறை நான் தாக்கப்பட்டு உள்ளேன். எனது மனைவி மற்றும் மகளுக்கு பாலியல் தொடர்பாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர் பாக உள்ளூர் போலீசில் புகார் கொடுத்தேன். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது குடும்பத்தினருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வருகிறது. போலீசார் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார். 

    • அதிபர் முகமது சோலியும், சீன ஆதரவாளராக கருதப்படும் முக்கிய எதிர்க்கட்சி தலைவரான முகமது மூயிசும் நேரடியாக மோதினார்கள்.
    • 54.6 சதவீத ஓட்டுகள் பெற்று முகமது மூயிஸ் வெற்றி பெற்றார்.

    மாலத்தீவு:

    இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு கூட்ட நாடான மாலத்தீவில் அதிபர் தேர்தல் நடை பெற்றது. இந்த தேர்தலில் இந்திய ஆதரவு நிலைப்பாட்டை கொண்டவராக அறியப்படும் அதிபர் முகமது சோலியும், சீன ஆதரவாளராக கருதப்படும் முக்கிய எதிர்க்கட்சி தலைவரான முகமது மூயிசும் நேரடியாக மோதினார்கள்.

    கடந்த 9-ந்தேதி அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. இதில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை யாரும் பெறவில்லை. அந்நாட்டை பொறுத்தவரை அதிபராக 50 சதவீதம் ஓட்டுகளை பெற வேண்டும்.

    இதையடுத்து இறுதிகட்ட வாக்குப்பதிவு நடந்தது. இதில் மொத்தம் 85 சதவீத ஓட்டுகள் பதிவானது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில் 54.6 சதவீத ஓட்டுகள் பெற்று முகமது மூயிஸ் வெற்றி பெற்றார். அதிபர் முகமது சோலி தோல்வியை தழுவினார். அவர் தான் வெளியிட்ட எக்ஸ் வலைதளத்தில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது மூயிசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். 61 வயதான முகமது சோலி நவம்பர் மாதம் 17-ந்தேதி வரை புதிய அதிபர் பதவியேற்கும் வரை தற்காலிக அதிபராக பதவி வகிப்பார்.

    சீன ஆதரவு நிலைப்பாட்டை கொண்ட முகமது மூயிஸ் மாலத்தீவு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதால் இந்தியாவுடனான உறவில் பாதிப்பு ஏற்படலாம் என கூறப்படுகிறது.

    ஏனென்றால் தேர்தல் பிரசாரத்தின் போது அவர் அதிபர் சோலி மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். தனது ஆட்சியில் இந்தியாவுக்கு அளவுக்கு அதிகமாக இடமளிப்பதாகவும், மாலத்தீவில் இந்திய ராணுவத்தினர் இருப்பது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என அவர் தெரிவித்தார்.

    மேலும் தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்திய ராணுவத்தினரை மாலத்தீவில் இருந்து திருப்பி அனுப்பப் போவதாக அறிவித்தார்.

    இந்த குற்றச்சாட்டை அதிபர் முகமது சோலி மறுத்தார். மாலத்தீவில் நடந்து வரும் கட்டமைப்பு பணிகளுக்காக இந்திய ராணுவம் வந்துள்ளதாகவும், இதனால் நாட்டின் இறையாண்மைக்கு எந்த பாதிப்பும் இல்லை என அவர் தெரிவித்தார்.

    • மசூதிகளில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து தற்கொலை படை தாக்குதல் நடந்தது.
    • பலியானவர்கள் எண்ணிக்கை 65-ஆக உயர்ந்துள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பலுசிஸ்கான் மாகாணம் மற்றும் கைபர் பக்துன்சலா மாகாணத்தில் உள்ள மசூதிகளில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து தற்கொலை படை தாக்குதல் நடந்தது. இந்த 2 சம்பவங்களிலும் பலியானவர்கள் எண்ணிக்கை 65-ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவத்துக்கு இந்தியா தான் காரணம் என பாகிஸ்தான் குற்றம்சாட்டி உள்ளது.

    இது தொடர்பாக அந்நாட்டு உள்துறை மந்திரி சர்பராஸ் புக்டி கூறும் போது பாகிஸ்தானில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குலுக்கு இந்தியாவின் உளவு நிறுவனமே காரணமாகும் என தெரிவித்துள்ளார்.

    ×