என் மலர்tooltip icon

    உலகம்

    • மசூதிகளில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து தற்கொலை படை தாக்குதல் நடந்தது.
    • பலியானவர்கள் எண்ணிக்கை 65-ஆக உயர்ந்துள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பலுசிஸ்கான் மாகாணம் மற்றும் கைபர் பக்துன்சலா மாகாணத்தில் உள்ள மசூதிகளில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து தற்கொலை படை தாக்குதல் நடந்தது. இந்த 2 சம்பவங்களிலும் பலியானவர்கள் எண்ணிக்கை 65-ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவத்துக்கு இந்தியா தான் காரணம் என பாகிஸ்தான் குற்றம்சாட்டி உள்ளது.

    இது தொடர்பாக அந்நாட்டு உள்துறை மந்திரி சர்பராஸ் புக்டி கூறும் போது பாகிஸ்தானில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குலுக்கு இந்தியாவின் உளவு நிறுவனமே காரணமாகும் என தெரிவித்துள்ளார்.

    • சீக்கிய வாலிபர்கள் சிலர் விக்ரம் துரைசாமியை குருத்வாராவுக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர்.
    • விக்ரம் துரைசாமி அங்கிருந்து திரும்பி சென்றார்.

    இங்கிலாந்து நாட்டுக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக அவர் முன்தினம் கிளாஸ்கோ நகரில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான குருத்வாராவுக்கு சென்றார். ஆனால் அங்கு திரண்டிருந்த சீக்கிய வாலிபர்கள் சிலர் விக்ரம் துரைசாமியை குருத்வாராவுக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர்.

    அந்த வாலிபர்கள் விக்ரம் துரைசாமியின் காரை சூழ்ந்துகொண்டு, திரும்பி செல்லும்படி கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து விக்ரம் துரைசாமி அங்கிருந்து திரும்பி சென்றார்.

    இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம், இது தொடர்பாக ஸ்காட்லாந்து அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து வருவதாக தெரிவித்துள்ளது.

    • இரு நாடுகளும் அடிக்கடி டிரோன் தாக்குதல் நடத்துகின்றனர்.
    • உக்ரைன் ராணுவம் சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது.

    ரஷியா-உக்ரைன் போர் 20 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் உக்ரைன் பெரும் தோல்வியை சந்தித்தது. பின்னர் ஐரோப்பிய நாடுகளின் ஆயுதம் சப்ளை மற்றும் பொருளாதார உதவிகளால் உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. அதிலும் சமீப காலமாக இரு நாடுகளும் அடிக்கடி டிரோன் தாக்குதல் நடத்துகின்றனர்.

    அந்தவகையில் ரஷியாவின் பெல்கொரோட் பிராந்தியத்தை குறிவைத்து உக்ரைன் ராணுவம் சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் 9 உராகன் எம்.எல்.ஆர்.எஸ். டிரோன்களை ரஷிய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். இதன்மூலம் உக்ரைனின் தாக்குதல் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

    • ரஷியா வெற்றி பெற்றதாக கூறிய தேர்தலை உக்ரைன் புறக்கணித்தது
    • எந்த சர்வதேச சட்டங்களும் மீறப்படவில்லை என்றார் புதின்

    கடந்த 2022 பிப்ரவரி மாதம் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை 'சிறப்பு ராணுவ நடவடிக்கை' எனும் பெயரில் ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் துணையுடன் உக்ரைன் போரிட்டு வருகிறது. இரு தரப்பிலும் எண்ணிலடங்கா உயிர் பலிகளும், பெருமளவு கட்டிட சேதங்களும் ஏற்பட்டும் போர் முடிவுக்கு வராமல் 580 நாட்களுக்கும் மேலாக தொடர்கிறது.

    கடந்த ஆண்டு, உக்ரைனின் டோனெட்ஸ்க் (Donetsk), லுஹான்ஸ்க் (Luhansk), சப்போரிழியா (Zaporizhzhia) மற்றும் கெர்சன் (Kherson) ஆகிய பகுதிகளை ரஷியா தங்கள் நாட்டுடன் ஒவ்வொன்றாக இணைத்து கொண்டது. இணைக்கப்பட்ட இந்த 4 பகுதிகளில் சில நாட்களுக்கு முன் ரஷியாவின் மத்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தி, அத்தேர்தலில் ரஷிய பிரதிநிதிகள் வெற்றி பெற்றதாகவும் அறிவித்தது. ஆனால், உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் இந்த தேர்தலை ஒப்பு கொள்ளாமல் புறக்கணித்தன.

    இந்த தேர்தல் வெற்றியை கொண்டாடும் விதமாக நாட்டு மக்களுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் வீடியோ மூலமாக உரையாற்றினார். இந்த உரை அரசாங்கத்தின் அதிகாரபூர்வ வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

    அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    ரஷியா தனது இறையாண்மையையும், ஆன்மிக மதிப்பையும் காத்து கொள்ளவே போராடி வருகிறது. இதனால்தான் இந்த ரஷிய உக்ரைன் போரே ஏற்பட்டது. நாம் நமது தாயகத்திற்காக போராடுகிறோம்; நமது ஒற்றுமைக்காகவும், வெற்றிக்காகவும் நாம் சண்டையிடுகிறோம். இதில் எந்த சர்வதேச சட்டங்களோ, வழிமுறைகளோ மீறப்படவில்லை. ரஷியாவுடன் தற்போது இணைக்கப்பட்ட உக்ரைனின் 4 பகுதியை சேர்ந்த மக்களும் ரஷியாவுடன் இணையவே விரும்பினார்கள்.

    இவ்வாறு புதின் அறிவித்துள்ளார்.

    இதற்கிடையே, உக்ரைன் தலைநகர் கீவ் சென்றுள்ள நேட்டோ (NATO) கூட்டமைப்பின் பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க் (Jens Stoltenberg), "ரஷியாவிற்கு எதிரான போரில் உக்ரைன் மெதுவாக முன்னேறி வருகிறது. உக்ரைன் மீண்டும் கையகப்படுத்தும் ஒவ்வொரு மீட்டர் இடமும் ரஷியா இழக்கும் இடமாக கருத வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

    • பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள், ஊழியர்கள் ரெயில் போக்குவரத்தை தான் முழுமையாக நம்பி உள்ளனர்.
    • நியூயார்க் நகர சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரவு முழுவதும் இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்தது. இதனால் அந்நகரமே முடங்கி போய்விட்டது. மழையால் சாலைகளில் வெள்ளம் ஆறு போல ஓடியது. விமான நிலையம் மற்றும் ரெயில் நிலைய சுரங்க பாதைகளை வெள்ளம் சூழ்ந்தது.

    நியூயார்க் நகரை பொறுத்தவரை ரெயில் போக்குவரத்து மிக முக்கியமாக உள்ளது. சுமார் 420 ரெயில் நிலையங்களுடன் உலகின் மிகப்பெரிய வழித்தடங்களில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள், ஊழியர்கள் ரெயில் போக்குவரத்தை தான் முழுமையாக நம்பி உள்ளனர்.

    இந்த ரெயில் நிலையங்களில் பயணிகள் செல்வதற்காக சுரங்கபாதைகள் உள்ளன. பலத்த மழையால் இந்த சுரங்க பாதைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த வெள்ளநீரில் பயணிகள் நடந்து சென்றனர். ரெயில் நிலையங்களில் உள்ள நகரும் படிக்கட்டு மற்றும் மேற்கூரைகளில் இருந்து அருவி போல தண்ணீர் கொட்டியது. இதனால் ரெயில் நிலைய சுரங்கபாதைகள் அனைத்தும் மூடப்பட்டன. ரெயில்களும் ரத்து செய்யப்பட்டதால் பல மணி நேரம் பயணிகள் தவிப்புக்கு உள்ளானார்கள். விமான நிலையமும் மூடப்பட்டதால் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தார்கள்.

    நியூயார்க் நகர சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினார்கள்.பொது மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காலிஸ்தான் பிரிவினைவாதி கொல்லப்பட்ட விவகாரம் இந்தியா-கனடா இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தி உள்ளது.
    • கருத்து சுதந்திரம் வன்முறையை தூண்டும் வகையில் இருக்க கூடாது.

    வாஷிங்டன்:

    கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப்சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரம் இந்தியா-கனடா இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று வாஷிங்டனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நம் நாடு ஒரு ஜனநாயக நாடு. பேச்சு சுதந்திரம் என்ன என்பதை நாம் மற்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. கருத்து சுதந்திரம் வன்முறையை தூண்டும் வகையில் இருக்க கூடாது. அது சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துவது ஆகும். அது சுதந்திரத்தை பாதுகாப்பது அல்ல.

    கனடா விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஆகியோருடன் விவாதித்தோம். நாங்கள் இதைப்பற்றி விவாதித்தோம் என்பதை சொல்வதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் மற்ற விஷயங்கள் குறித்தும் விவாதித்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 42 ஆண்டுகளாக நடந்து வரும் மதம் பிரச்சினை சார்ந்த குருந்தூர்மலை தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.
    • தான் விரும்பி செய்த நீதிபதி பதவியை விட்டு விலகுவதாக அவர் தெரிவித்தார்.

    முல்லைத்தீவு:

    இலங்கையில் வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக பதவி வகித்தவர் சரவணராஜா. இலங்கை தமிழரான இவர் மிகவும் சர்ச்சைக்குரிய குருந்தூர்மலை, விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர் தீலிபன் தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்தார்.

    சமீபத்தில் 42 ஆண்டுகளாக நடந்து வரும் மதம் பிரச்சினை சார்ந்த குருந்தூர்மலை தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.

    இந்த தீர்ப்புக்கு பிறகு அவருக்கு பல வகைகளில் நெருக்கடி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தீர்ப்பை மறுபரிசீலனை செய்து மாற்றி அமைக்குமாறு அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. மேலும் மிரட்டல்களும் வந்தது.

    இதையடுத்து நீதிபதி சரவணராஜா தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், மன அழுத்தம் காரணமாக தான் வகித்து வந்த நீதிபதி பொறுப்புகள் அனைத்தையும் ராஜினாமா செய்வதாகவும் அறிவித்தார். தான் விரும்பி செய்த நீதிபதி பதவியை விட்டு விலகுவதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பாக தனது ராஜினாமா கடிதத்தை அவர் நிதிச்சேவை ஆணைக்குழு செயலாளருக்கு அனுப்பி வைத்தார்.

    இதையடுத்து நீதிபதி சரவணராஜா இலங்கையை விட்டு வெளியேறி தப்பி ஓடி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இலங்கை வரலாற்றில் முதல் முறையாக உயிருக்கு பயந்து நீதிபதி ஒருவர் நாட்டை விட்டு ஓடிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • குவாங் பிங் உள்ளிட்ட சில மாகாணங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • கனமழையால் பல இடங்களில் அங்கு நிலச்சரிவு உருவானது.

    ஹனோய்:

    வியட்நாமின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள தன் ஹோவா, குவாங் பிங் உள்ளிட்ட சில மாகாணங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

    மேலும் இந்த கனமழையால் பல இடங்களில் அங்கு நிலச்சரிவு உருவானது. இந்த நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்த 9 பேரை மீட்பு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அங்கு பணி நடைபெற்று வருகிறது.

    • முதன்முறையாக அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
    • அதிபர் சல்வா கீர் ரஷியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடான் கடந்த 2011-ம் ஆண்டு சூடானில் இருந்து சுதந்திரம் பெற்று தனிநாடாக பிரிந்தது. அதுமுதல் அங்கு அதிபர் சல்வா கீர் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதன்முறையாக அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்தநிலையில் அதிபர் சல்வா கீர் ரஷியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அதிபர் புதின் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தெற்கு சூடானின் உள்நாட்ட அரசியல் சூழ்நிலையை கையாளுதல் மற்றும் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய ரஷியா உதவும் என புதின் கூறினார். மேலும் எரிசக்தி, வர்த்தகம் மற்றும் பிற துறைகளில் இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவது குறித்தும் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கப்பல்களுக்காக திறந்து மூடும் வகையில் இது கட்டப்பட்டது
    • மூடி கொள்ளாமல் இருப்பதை கண்டு பார்வையாளர்கள் கூடி விட்டனர்

    இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் உள்ளது புகழ் பெற்ற டவர் பிரிட்ஜ் (Tower Bridge).

    பாஸ்க்யூல் முறையில் அமைக்கப்பட்ட இந்த தொங்கு பாலம் 1894ல் கட்டி முடிக்கப்பட்டது. லண்டனில் உள்ள புகழ் பெற்ற லண்டன் டவர் சுற்றுலா தலத்திற்கு அருகே தேம்ஸ் நதியின் குறுக்கே டவர்

    ஹாம்லெட்ஸ் மற்றும் சவுத்வார்க் ஆகிய இரு பகுதிகளை இணைக்கும் வகையில் கட்டப்பட்டது. நதியில் சிறு கப்பல்கள் வரும் போது இது திறந்து மூடும் வகையில் கட்டப்பட்டுள்ளதால், இங்கிலாந்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் காண விரும்பும் இடங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.

    நேற்று மாலை 01:15 மணியளவில் அதன் கீழ் ஒரு படகு சென்றது. அது சென்றவுடன் வழக்கம் போல் திறந்த அந்த பாலம் மூடி கொள்ளவில்லை. இதனை கண்ட அங்கிருந்த பார்வையாளர்கள் ஆச்சரியமடைந்து நடப்பதை பார்த்து கொண்டிருந்தனர்.

    சுமார் அரை மணி நேரம் கழித்துத்தான் அது மீண்டும் மூடி கொண்டது. அந்த பாலத்தின் ஹைட்ராலிக் அமைப்பில் ஏற்பட்ட கோளாறினால் அதனால் சிறிது நேரம் மூடி கொள்ள இயலாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.

    தமிழ்நாட்டின் பிரபலமான பாம்பன் பாலமும் இதை போலவே வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்காவில் சுமார் 45 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர்
    • நான்கு மத மக்களுக்கு எழும் பிரச்சனை குறித்து குரலெழுப்ப முடியும் என்கிறார் ஸ்ரீதானேதர்

    அமெரிக்க பாராளுமன்றத்திற்கு மிச்சிகன் மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஸ்ரீதானேதர் (68). அமெரிக்காவின் ஜனநாயக கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியினரான இவர் ஒரு முன்னணி தொழிலதிபராகவும், எழுத்தாளராகவும் உள்ளார்.

    90களில் தொடங்கி அமெரிக்காவிற்கு மென்பொருள் மற்றும் உயர் தொழில்நுட்பங்களில் கல்வி பயிலவும் பணிகளுக்காகவும் இந்தியாவிலிருந்து பலர் சென்றுள்ளனர். அவ்வாறு செல்பவர்களில் 95 சதவீதம் பேர் அங்கேயே தங்கி விடுகின்றனர். அவர்களில் பல மதத்தை சேர்ந்தவர்களும் உள்ளனர். சுமார் 45 லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவில் வாழ்வதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது.

    இந்நிலையில், அமெரிக்காவில் வாழும் இந்துக்கள், பவுத்தர்கள், சீக்கியர்கள் மற்றும் ஜைனர்கள் (HBSJ) ஆகியோருக்காக ஒரு தனித்துவமான அரசியல் அமைப்பு ஒன்றை ஸ்ரீதானேதர் தொடங்குகிறார். இதற்கு இருபதிற்கும் மேற்பட்ட சட்ட வல்லுனர்களின் ஆதரவும் உள்ளது.

    நான்கு மதங்களின் மக்களுக்கிடையே பரஸ்பர புரிதலை வளர்க்கவும், இந்த மதங்களில் உள்ள மக்களின் தனித்துவ சிக்கல்கள் மற்றும் தேவைகள் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கவும் இந்த அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அமைப்பின் மூலம் 4 மதங்களை சேர்ந்தவர்களுக்கான உரிமைகளை பெறவும், மத ரீதியில் அவர்கள் பாகுபாடு செய்யப்பட்டால் அதனை எதிர்க்கவும், இந்த மதங்களை குறித்த தவறான புரிதல்களை நீக்கவும் முடியும் என ஸ்ரீதானேதர் கருதுகிறார்.

    அனைவரையும் ஒன்றிணைத்து வாழும் அமெரிக்கா பலமான அமெரிக்காவாக திகழும் என ஸ்ரீதானேதர் தெரிவித்துள்ளார்.

    • மக்கள் மிலாடி நபி கொண்டாட்டத்திற்காக ஊர்வலமாக செல்ல கூடியிருந்தனர்
    • குண்டு வெடிப்பில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பலியானார்

    இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் தென்மேற்கில் உள்ளது பலுசிஸ்தான் பிராந்தியம். இதற்கு வடமேற்கே உள்ளது மஸ்டங் மாவட்டம்.

    இன்று, உலகெங்கும் இஸ்லாமியர்கள் கொண்டாடும் மிலாது நபி பண்டிகை என்பதால் இங்குள்ள மதினா மசூதிக்கு அருகே இப்பண்டிகையை கொண்டாடவும், பிறகு ஒரு ஊர்வலமாக செல்லவும் மக்கள் திட்டமிட்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக திடீரென ஒரு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.

    இதில் 52 பேர் கொல்லப்பட்டனர்; 130 பேருக்கும் மேல் காயமடைந்துள்ளனர். இது ஒரு தற்கொலைப்படை தாக்குதல் என தெரிய வந்துள்ளது.

    இந்த குண்டு வெடிப்பில் அங்கு காவல்துறை பணியின் காரணமாக வந்திருந்த மஸ்டங் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் நவாஸ் கஷ்கோரியும் பலியானார். கஷ்கோரியின் காருக்கு அருகே அந்த தற்கொலை படை தாக்குதல் நடைபெற்றதாக நகர காவல்துறை அதிகாரி மொஹம்மத் ஜாவெத் லெஹ்ரி தெரிவித்துள்ளார்.

    காயமடைந்தவரகள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. பலத்த காயமடைந்துள்ளவர்கள் க்வெட்டா (Quetta) பகுதி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

    பலுசிஸ்தான் மாநிலத்தின் இடைக்கால செய்தித்துறை அமைச்சர ஜன் அசக்சாய், "மத சகிப்புதன்மையையும் அமைதியையும் அன்னிய நாட்டு சக்திகளின் உதவியுடன் அழிக்க எதிரிகள் நினைக்கின்றனர். தாக்குதலுக்கு பின்னணியில் உள்ள அனைவரும் கைது செய்யப்படுவார்கள்" என தெரிவித்துள்ளார்.

    இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பாகிஸ்தானில் முக்கிய அரசியல் தலைவர்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    ×