என் மலர்
உலகம்
- கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது
- ஆக்கபூர்வமான உறவை வளர்க்க தீவிரமாக உள்ளதாக ஜஸ்டின் தெரிவித்தார்
இந்தியாவால் பயங்கரவாதி என பிரகடனப்படுத்தப்பட்ட காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த பிரிவினைவாதி ஹர்திப் சிங் நிஜ்ஜார், கடந்த ஜூன் 18 அன்று கனடா நாட்டில் உள்ள வேன்கூவர் நகரில் சுட்டு கொல்லப்பட்டான்.
இந்த கொலையை தீவிரமாக கனடா விசாரித்து வந்த நிலையில், இம்மாதம் 18 அன்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அந்நாட்டு பாராளுமன்றத்தில் இக்கொலை சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசாங்கம் உள்ளது என பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இதனை திட்டவட்டமாக இந்தியா மறுத்தது. இரு நாடுகளும் பரஸ்பரம் தூதர்களை வெளியேற்றும் அளவிற்கு உறவு சீர்கெட்டது. இதன் தொடர்ச்சியாக, இந்தியா கனடாவிலிருந்து இந்தியாவிற்கு வர விரும்புபவர்களுக்கு 'விசா' வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில், கனடாவின் க்யூபெக் பிராந்தியத்தில் உள்ள மான்ட்ரியல் பகுதியில் நேற்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேட்டியளித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
உலக அரங்கில் இந்தியாவின் முக்கியத்துவம் வளர்ந்து வருவதை உணர்கிறோம். கனடாவும் அதன் நட்பு நாடுகளும் இந்தியாவுடன் ஆக்கபூர்வமாகவும் தீவிரமாகவும் நல்லுறவு வளர்க்க வேண்டியது மிக அவசியம். கடந்த வருடம் நாங்கள் வெளியிட்டிருந்த இந்தோ-பசிபிக் திட்டப்படி, இந்தியாவுடன் நெருங்கிய உறவினை வளர்க்க நாங்கள் தீவிரமாக உள்ளோம். அதே சமயம், ஹர்திப் விவகாரத்தில் சட்டப்படி நடக்க விரும்பும் நாடான எங்களுடன் இணைந்து பணியாற்றி உண்மையை வெளிக்கொண்டு வர இந்தியா உதவ வேண்டும்.
இவ்வாறு ஜஸ்டின் தெரிவித்தார்.
ஹர்திப் சிங் கொலையில் இந்தியாவிற்கு உள்ள தொடர்புகள் குறித்து கனடாவிடம் இந்தியா ஆதாரங்களை கேட்டிருந்தது. இதுவரை தங்களின் குற்றச்சாட்டுகளுக்கு கனடா அரசாங்கம் ஆதாரங்கள் எதுவும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த இரு வாரங்களுக்கு முன் கிம் ஜாங் உன் ரஷிய சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
- அமெரிக்காவை எதிர்கொள்ளும் கூட்டணியில் வடகொரியா முக்கிய பங்கை வகிக்க வேண்டும்
பியாங்யாங்:
வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகளால் கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் நிலவுகிறது. குறிப்பாக தென்கொரியா மற்றும் ஜப்பான் கடற்பகுதியில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை நடத்தி உள்ளது.
இதனால் தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் கருதுகின்றன. இதனால் இந்த இரு நாடுகளும் அமெரிக்காவுடன் இணைந்து போர்ப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
இப்போர்ப்பயிற்சியானது அந்த நாடுகளிடையே ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்தி வருகிறது. எனவே இதனை நேட்டோவின் ஆசிய பதிப்பை இவர்கள் உருவாக்கி வருவதாக வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் குற்றம்சாட்டினார்.
தங்களுக்கு எதிராக வளர்ந்து வரும் இந்த அச்சுறுத்தலை கைவிட வேண்டும் என கிம் ஜாங் உன் கூறினார். இருப்பினும் இந்த போர்ப்பயிற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே கடந்த இரு வாரங்களுக்கு முன் கிம் ஜாங் உன் ரஷிய சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு ராணுவ தளங்களை பார்வையிட்ட அவர் அதிபர் புதின் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினார். இதனால் இரு நாடுகளிடையே ஆயுத ஒப்பந்தம் நடைபெற்று இருக்கலாம் என தென்கொரியா குற்றம்சாட்டியது.
இந்தநிலையில் வடகொரியாவில் பாராளுமன்றம் கூடியது. இதில் கிம் ஜாங் உன் கலந்து கொண்டு பேசுகையில், `உலகம் புதியதொரு பனிப்போரில் நுழைகிறது. இதில் அமெரிக்காவை எதிர்கொள்ளும் கூட்டணியில் வடகொரியா முக்கிய பங்கை வகிக்க வேண்டும். எனவே அணு ஆயுத உற்பத்தியை அதிகரிப்பது காலத்தின் கட்டாயம் என கூறினார். இதனால் அங்கு மேலும் போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளது.
- சீனாவுக்கு பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக தைவானும் கூறி உள்ளது.
- நீர்மூழ்கி போர்க்கப்பல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது.
தைபே நகரம்:
சீனாவின் ஒரு பகுதியாக இருந்த தைவான் 1949-ம் ஆண்டு தனிநாடாக பிரிந்தது. ஆனால் சமீப காலமாக அதனை தன்னுடன் மீண்டும் இணைத்துக்கொள்ள சீனா துடிக்கிறது. இதனால் தைவான் எல்லையில் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி சீனா போர்ப்பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அதேசமயம் சீனாவுக்கு பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக தைவானும் கூறி உள்ளது.
இந்தநிலையில் தைவானில் முதன் முறையாக நர்வால் என்ற நீர்மூழ்கி போர்க்கப்பல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இதனை அறிமுகம் செய்து வைக்கும் விழா அங்குள்ள காஹ்சியுங் நகரில் நடைபெற்றது. இதில் அதிபர் சாய்-இங்-வென் கலந்து கொண்டு பேசுகையில், தைவான் வரலாற்றில் இது முக்கியமான நாள் ஆகும் என கூறினார்.
இந்த நீர்மூழ்கி கப்பலானது 229.6 அடி நீளம், 26.2 அடி அகலம் மற்றும் 59 அடி உயரம் கொண்டது. இதில் 3 ஆயிரம் டன் எடை வரையிலான பொருட்களை சுமந்து செல்லலாம். ஒருசில சோதனைகளுக்கு பின்னர் இந்த கப்பல் அடுத்த ஆண்டு நாட்டின் கடற்படையில் சேர்க்கப்படும் என தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- வீட்டில் பெண் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் இறந்து கிடந்தது தெரிய வந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
ஜெருசலேம்:
வடக்கு இஸ்ரேலின் அரபு நகரில் உள்ள ஒரு வீட்டில் மா்ம நபர்கள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது அந்த வீட்டில் பெண் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
- விவேக் ராமசாமி ஆதரவு கோரி பிரச்சாரம் செய்து வருகிறார்
- 14-வது சட்ட திருத்தத்தை நான் நன்றாக படித்து புரிந்து கொண்டுள்ளேன் என்றார் விவேக்
அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் அதிபர் பதவிக்கு தீவிரமாக போட்டியிடுகின்றனர். டொனால்ட் டிரம்ப் மீது பல மாநிலங்களில் வழக்குகள் உள்ளதால் அவர் பதவிக்கு வருவதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் அக்கட்சியில் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமி தேர்தல் களத்தில் தீவிரமாக உள்ளார். பல ஊர்களுக்கு சென்று தனக்கு ஆதரவு கோரி பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சிமி வேலி பகுதியில் அமைய பெற்ற ரொனால்ட் ரீகன் நூலகம் மற்றும் அருங்காட்சியகத்தில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் அனைத்து வேட்பாளர்களும் தங்களது திட்டங்கள் குறித்து விளக்கி விவாதம் செய்யும் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த விவாதத்தில் விவேக் ராமசாமி அகதிகள் குடியுரிமை குறித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
சட்ட விரோதமாக இந்நாட்டில் குடியேறிய பெற்றோர்களின் குழந்தைகள் இந்நாட்டில் பிறந்தால் அக்குழந்தைகளுக்கு வழங்கப்படும் "பர்த்ரைட் சிடிசன்ஷிப்" (birthright citizenship) எனப்படும் பிறப்புரிமை குடியுரிமை முறையை நான் ரத்து செய்து விடுவேன். அரசியலமைப்பு சட்டத்தின் 14-வது திருத்தம் குறித்து எதிர்ப்பாளர்கள் வாதிடலாம். ஆனால், நான் அந்த திருத்தத்தை படித்திருக்கிறேன். அதன்படி நாட்டில் சட்ட விரோதமாக குடியேறி, அதன் பின்பு இங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குவதை தடை செய்வது அரசியலமைப்பு சட்டப்படி சரியானதுதான்.
இவ்வாறு அவர் கூறினார்.
"இதுவரை 14-வது சட்ட திருத்தம் சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை" என கூறும் மற்றொரு குடியரசு கட்சியின் போட்டியாளரான டிம் ஸ்காட், விவேக்கின் கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.
சில தினங்களுக்கு முன்பாக இந்திய மென்பொருள் மற்றும் உயர் தொழில்நுட்ப பணிகளில் உள்ளவர்கள் பலரும் அடைய துடிக்கும் ஹெச்-1பி விசா எனப்படும் அந்நாட்டில் குடியேறி பணி செய்ய அனுமதிக்கும் வழிமுறையை விவேக் ராமசாமி ரத்து செய்து விடுவதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- உலகின் பெரிய பெருங்கடலான பசிபிக் பெருங்கடலில் ஏற்கனவே பல மர்மங்கள் உள்ளன.
- புதிய கண்டத்தின் 94 சதவீத பகுதி நீருக்கு அடியில் மூழ்கியுள்ளது
உலகில் தற்போது வரை ஆசியா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, அண்டார்டிகா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 7 கண்டங்கள் உள்ளன. ஆனால், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கண்டங்கள் எப்படி இருந்தன என்பது புரியாத புதிரான நிலையில் தற்போது உலகின் 8-வது கண்டத்தை புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.
இந்த கண்டத்திற்கு விஞ்ஞானிகள் ஜீலந்தியா என்று பெயரிட்டுள்ளனர். கடல் தளத்தில் இருந்து மீட்கப்பட்ட பாறை மாதிரிகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களை பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் புதிய கண்டத்தை கண்டு பிடித்துள்ளனர்.
இந்த கண்டம் 375 ஆண்டுகள் மறைந்திருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இது நியூசிலாந்துக்கு அருகே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பசிபிக் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் சுமார் 3500 அடி ஆழத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த புதிய கண்டத்தின் 94 சதவீத பகுதி நீருக்கு அடியில் மூழ்கியுள்ளது. ஒட்டுமொத்தமாக 49 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாக இந்த கண்டம் அமைந்துள்ளது. இதில் நியூசிலாந்தை போல சில தீவுகள் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இது மடகாஸ்கர் தீவை காட்டிலும் 6 மடங்கு பெரியது என தெரிவித்துள்ளனர்.
உலகின் பெரிய பெருங்கடலான பசிபிக் பெருங்கடலில் ஏற்கனவே பல மர்மங்கள் உள்ளன. இப்போது அதில் ஒரு கண்டமே ஒளிந்திருப்பதாக கூறுகின்றனர். ஜீலந்தியா கண்டத்தைப் பற்றி இன்னும் பல விஷயங்கள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதாக புவியியலாளர்கள் கூறுகின்றனர். இது எப்போது நீருக்கடியில் சென்றது? என்பது குறித்த ஆய்வில் அறிவியலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இக்கண்டமானது விரைவில் அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம் வழங்கப்பட்டு உலகின் 8-வது கண்டமாக அறிவிக்கப்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தென் தமிழகத்தில் இந்திய பெருங்கடலில் லெமூரியா கண்டம் கடலுக்குள் மூழ்கி இருப்பதாகவும், தமிழர்கள் இங்குதான் தோன்றினர் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர். அதன் அடிப்படையில் பார்த்தால் இப்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ள ஜீலந்தியா 9-வது கண்டமா? என்ற கேள்வியையும் அறிவியலாளர்கள் எழுப்பி உள்ளனர்.
- 'உம்ரா விசா' பெற்று உள்ளே நுழைந்து பிச்சையெடுப்பதில் ஈடுபடுகின்றனர்
- பாகிஸ்தானிலிருந்து அரபு நாடுகளுக்கு செல்லும் விமானங்களில் பிச்சைக்காரர்கள் நிரம்பி வழிகின்றனர்
பல வருடங்களாக இந்தியாவிற்கெதிரான பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த பாகிஸ்தான், தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. வரலாறு காணாத விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பெட்ரோல் விலையேற்றம் மற்றும் மின்சார தட்டுப்பாடு ஆகியவற்றால் அங்கு வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விட்டது.
சொந்த நாட்டில் பிழைக்க வழியில்லாததால் பலர் அங்கு பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக அந்த பாகிஸ்தானிய பிச்சைக்காரர்கள் கும்பல் கும்பலாக ஈராக், சவுதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளில் சட்டவிரோதமாகவும் சட்டரீதியாகவும் உள்ளே நுழைந்து அங்கேயும் பிச்சை எடுப்பதில் ஈடுபடுகின்றனர்.
அரபு நாடுகள் பலவற்றில் பிச்சை எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. பிச்சை எடுப்பவர்களுக்கு சிறை தண்டனை வழங்குவது அங்கு வழக்கம். அவ்வாறு சிறையிலடைக்கபட்ட பிச்சைக்காரர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் என ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. பாகிஸ்தானிலிருந்து அந்நாடுகளுக்கு செல்லும் விமானங்களில் பிச்சைக்காரர்களே அதிகம் பயணம் செய்கின்றனர்.
இவர்கள் வருகையை தடுக்க நடவடிக்கை எடுக்க சவுதி அரேபியாவும், ஈராக்கும் பாகிஸ்தானிடம் கோரிக்கை வைத்துள்ளன. புத்திசாலித்தனமான வழிமுறையை அவர்கள் கையாண்டு உள்ளே வருவதால் தடுப்பதற்கு அந்த நாடுகள் திணறுகின்றன. சட்ட ரீதியாக அங்கு நுழைய முயல்பவர்கள், இஸ்லாமியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் 'உம்ரா விசா' எனும் அனுமதியை பெற்று அங்கு நுழைகிறார்கள். வந்தவுடன் சாலைகளில் பிச்சையெடுக்கும் தொழிலில் ஈடுபடுகின்றனர்.
இது தவிர இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்கா இருக்கும் சாலைகளில் பிக்பாக்கெட் குற்றத்தில் ஈடுபடும் பெரும்பகுதியினரும் பாகிஸ்தானியர்களே எனவும் அந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
உலக அரங்கில் பாகிஸ்தானை இது தலைகுனிய செய்திருக்கிறது.
ஒரு காலத்தில் பயங்கரவாதிகளை ஏற்றுமதி செய்து வந்த பாகிஸ்தான், தற்போது பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்வதாக சமூக வலைதளங்களில் பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
- குடியேறும் நாட்டு கலாச்சாரத்தோடு இணைய கட்டாயமில்லாதது தவறு
- நாட்டின் பாதுகாப்பு, சமூக அமைதி ஆகியவை கேள்விக்குறியாகிறது
இங்கிலாந்து நாட்டின் உள்துறை செயலாளராக பணிபுரிபவர் சுவெல்லா பிரேவர்மேன் (Suella Braverman). அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள அமெரிக்கன் என்டர்பிரைஸ் எனப்படும் நிறுவனம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:
பன்முக கலாச்சாரம் தோல்வியடைந்து விட்டது. பன்முக கலாச்சாரம் என்பது தற்காலத்திற்கு ஒவ்வாத சித்தாந்தம். இந்த தவறான சித்தாந்தத்தால் இங்கிலாந்திற்குள் அகதிகளாக பலர் வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சித்தாந்தத்தின்படி ஒரு நாட்டிற்குள் அகதிகளாக வருபவர்களுக்கு அந்த நாட்டு மக்களோடு இணைந்து வாழ வேண்டும் எனும் கட்டாயம் இல்லாத நிலை உள்ளது. இதனால் பல சிக்கல்கள் ஏற்படுகிறது. அவர்கள் குடியேறும் நாட்டு மக்களோடு இணைந்து வாழாமல் தங்கள் கலாச்சாரத்தையே பின்பற்றி தனியாக வாழ்கிறார்கள். ஒரு சில சமயம், நாட்டின் பாதுகாப்பிற்கும், சமூக அமைதிக்கும் கேடு விளைவிக்கும் செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். ஐரோப்பாவின் அனைத்து நகரங்களின் தெருக்களிலும் பன்முக கலாச்சாரம் தோல்வியடைந்ததற்கான அடையாளங்கள் தெரிகின்றன. இங்கிலாந்தில் லெய்சஸ்டர் பகுதியில் கடந்த வருடம் நடந்த மோதல்களும் இதில் அடங்கும். ஒரு நாட்டின் கலாச்சாரத்தில் பெரும் வேகத்தில், பெரும் திரளாக வேறொரு கலாச்சாரத்தை சேர்ந்தவர்கள் உள்ளே நுழையும் போது, அந்நாட்டில் ஏற்கெனவே இருந்த கலாச்சாரம் நீர்த்து போகிறது.
இவ்வாறு சுவெல்லா தெரிவித்தார்.
ஆனால், ஐ.நா. கூட்டமைப்பின் அகதிகளுக்கான அமைப்பு, சுவெல்லாவின் கருத்துக்களுக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில், எதிர்கட்சியான லேபர் கட்சியை சேர்ந்தவர்கள் இவரது கருத்துக்களை எதிர்க்கின்றனர். ஆனால் சுவெல்லா சார்ந்திருக்கும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்தவர்கள் இதனை ஆதரித்து "உலகில் உள்ளவர்களுக்கெல்லாம் இங்கிலாந்து அகதிகள் முகாமாக இருக்க முடியாது" என கூறி வருகின்றனர்.
- கனடாவில் இருந்து இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புகள், அதன் தலைவர்கள் குறித்த தகவல்களையும் அளித்துள்ளோம்.
- இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பயங்கரவாதிகளுக்கு கனடா புகலிடம் அளித்து வருகிறது.
நியூயார்க் நகரில், வெளியுறவுக்கான கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. இதில், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உள்பட பல நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் இந்தியா - கனடா பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து ஜெய்சங்கர் கூறியதாவது:-
கனடா பிரதமர் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு ஏற்கனவே நாங்கள் பதிலளித்து விட்டோம். இது போன்று கொலை செய்வது இந்தியாவின் கொள்கை அல்ல. இதில் இந்திய அரசுக்கு தொடர்பு உள்ளதாக ஏதாவது குறிப்பிட்ட சிறிய ஆதாரம் இருந்தாலும் அதை கொடுக்கலாம். அதை, இந்தியா உரிய முறையில் கவனிக்கும் என தெரிவித்துள்ளோம்.
எந்த ஒரு முகாந்திரமும், ஆதாரமும் இல்லாமல் இது போன்ற புகார் கூறப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் சில முக்கியமான அம்சங்களை பார்க்க வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாக கனடாவில், பிரிவினைவாத அமைப்புகளால் திட்டமிட்டு குற்றங்கள், வன்முறைகள், பயங்கரவாத சம்பவங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக குறிப்பிட்ட தகவல்கள், ஆதாரங்கள், முன்னெச்சரிக்கைகளை கனடாவுக்கு நாங்கள் வழங்கி உள்ளோம்.
கனடாவில் இருந்து இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புகள், அதன் தலைவர்கள் குறித்த தகவல்களையும் அளித்துள்ளோம். அவர்களை நாடு கடத்துவதற்கான கோரிக்கைகளையும் அளித்துள்ளோம். கனடாவில் உள்ள நிலவரங்களை முழுமையாக பார்க்க வேண்டும். அங்கு சில அரசியல் நிர்ப்பந்தங்கள் உள்ளன. பயங்கரவாத அமைப்புகள் குறித்து நாம் குறிப்பிட்டால் தங்கள் தரப்பை நியாயப்படுத்தி கனடா பேசுகிறது.
இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பயங்கரவாதிகளுக்கு கனடா புகலிடம் அளித்து வருகிறது. அவர்கள் இது தொடர்பான எந்த நடவடிக்கையையும் எடுக்காதது ஏன்?
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜெலன்ஸ்கியுடன் வந்திருந்த 98 வயதான போர் வீரர் யாரோஸ்லாவ் ஹூன்கா கனடா பாராளுமன்றத்தில் கவுரவிக்கப்பட்டார்.
- கனடா பாராளுமன்றத்தை முழுவதுமாக தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது.
ஒட்டாவா:
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த 22-ந்தேதி கனடா வந்திருந்தார். அவருடன் வந்திருந்த 98 வயதான போர் வீரர் யாரோஸ்லாவ் ஹூன்கா கனடா பாராளுமன்றத்தில் கவுரவிக்கப்பட்டார்.
இதனிடையே அவர் 2-ம் உலகப்போரின்போது ஹிட்லரின் நாஜிப் படையில் முக்கிய பொறுப்பு வகித்தவர் என்றும் லட்சக்கணக்கான யூத மக்கள் உயிரிழக்க காரணமானவர் எனவும் தகவல் பரவியது.
இதற்கு அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மன்னிப்பு கோரியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், இந்த விவகாரம் கனடா பாராளுமன்றத்தை முழுவதுமாக தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த நிகழ்வுக்கு வருந்துகிறேன்.
அப்போதைய சூழலை அறியாமல் யூத மக்களின் நினைவுகளை மீறியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
- குண்டு வெடிப்பின் போது அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளிலும் தீ பற்றியது.
- குண்டு வெடிப்பில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தாஷ்கண்ட்:
உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகர் தாஷ்கண்ட்டில் விமான நிலையம் உள்ளது. இதன் அருகே உள்ள சுங்க கிடங்கில் நள்ளிரவு சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டார்கள்.
இந்த குண்டு வெடிப்பில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த குண்டு வெடிப்பின் போது அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளிலும் தீ பற்றியது. இதில் காயமடைந்தவர்களுக்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.
- வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்பு படை ஊழியரை நாய் கடித்துள்ளது.
- வெள்ளை மாளிகைக்கு நாய் வந்தது முதல் 2022-ம் ஆண்டு நவம்பர் வரை 10 முறை பாதுகாவலர்களை கடித்துள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் அதிபர், துணை அதிபர், முன்னாள் அதிபர் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியை அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் ஜெர்மன் ஷெப்பர்டு இனத்தை சேர்ந்த நாய் ஒன்றை வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்பு படை ஊழியரை நாய் கடித்துள்ளது. உடனடியாக அந்த பாதுகாவலருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் தற்போது நலமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெள்ளை மாளிகைக்கு இந்த நாய் வந்தது முதல் 2022-ம் ஆண்டு நவம்பர் வரை 10 முறை இது போன்று பாதுகாவலர்களை கடித்துள்ளது. இந்நிலையில் 11-வது முறையாக நேற்றும் ஒரு பாதுகாப்பு ஊழியரை கடித்துள்ளது.






