என் மலர்
உலகம்
- குண்டு வெடிப்பின் போது அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளிலும் தீ பற்றியது.
- குண்டு வெடிப்பில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தாஷ்கண்ட்:
உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகர் தாஷ்கண்ட்டில் விமான நிலையம் உள்ளது. இதன் அருகே உள்ள சுங்க கிடங்கில் நள்ளிரவு சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டார்கள்.
இந்த குண்டு வெடிப்பில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த குண்டு வெடிப்பின் போது அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளிலும் தீ பற்றியது. இதில் காயமடைந்தவர்களுக்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.
- வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்பு படை ஊழியரை நாய் கடித்துள்ளது.
- வெள்ளை மாளிகைக்கு நாய் வந்தது முதல் 2022-ம் ஆண்டு நவம்பர் வரை 10 முறை பாதுகாவலர்களை கடித்துள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் அதிபர், துணை அதிபர், முன்னாள் அதிபர் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியை அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் ஜெர்மன் ஷெப்பர்டு இனத்தை சேர்ந்த நாய் ஒன்றை வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்பு படை ஊழியரை நாய் கடித்துள்ளது. உடனடியாக அந்த பாதுகாவலருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் தற்போது நலமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெள்ளை மாளிகைக்கு இந்த நாய் வந்தது முதல் 2022-ம் ஆண்டு நவம்பர் வரை 10 முறை இது போன்று பாதுகாவலர்களை கடித்துள்ளது. இந்நிலையில் 11-வது முறையாக நேற்றும் ஒரு பாதுகாப்பு ஊழியரை கடித்துள்ளது.
- நல்ல ஊழியரை பணிநீக்கம் செய்வதற்கு பதில் நான் சிறை சென்றிருப்பேன்
- மூன்றாவது டோஸ் செலுத்தி கொண்ட பின் மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது
2019 வருட இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா எனும் வைரஸ் தொற்று, 2020ல் உலகம் முழுவதும் பரவி, உலக நாடுகளை அச்சுறுத்தி, உலக பொருளாதாரத்தை நலிவடைய செய்து லட்சகணக்கானவர்களை பலி வாங்கியது. இதனை எதிர்கொள்ள இந்தியா உட்பட பல நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடித்து அவற்றை அந்தந்த நாட்டு மக்கள் கட்டாயமாக செலுத்தி கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தின. விருப்பமில்லையென்றாலும் அரசாங்கங்கள் கட்டாயமாக்கியதால் மக்கள் சில மாதகால இடைவெளிகளில் ஒன்றன் பின் ஓன்றாக செலுத்தி கொண்டனர்.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசியின் பயன்பாடு குறைந்து வருவதாகவும் சில நாடுகள் அதனை உபயோகிப்பதையே நிறுத்தி விட்டதாகவும் எக்ஸ் வலைதளத்தில் ஒரு பயனர் கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிலளித்த எக்ஸ் நிறுவனத்தின் அதிபரும், உலகின் நம்பர் 1 கோடீசுவரருமான எலான் மஸ்க் தெரிவித்திருப்பதாவது:
மக்கள் கட்டாயமாக தடுப்பூசிகளையும் பூஸ்டர்களையும் செலுத்தி கொள்ள வேண்டும் என அரசாங்கங்கள் கட்டாயபடுத்தியதை நான் நாகரிகமற்ற அத்துமீறலாக கருதுகிறேன். அதிலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதில் எனக்கு விருப்பமில்லை. தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்பதால் ஒரு நல்ல ஊழியரை பணி நீக்கம் செய்வதற்கு பதிலாக நானே சிறைக்கு சென்றிருப்பேன்.
அது மட்டுமல்ல; நானும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.
நோயினால் ஏற்பட்ட உடல்ரீதியான சிக்கலை விட தடுப்பூசி செலுத்தி கொண்ட பிறகு பலருக்கு அதிக சிக்கல்கள் ஏற்பட்டன. நோய் தடுப்புக்கான தடுப்பூசி, நோயை விட கடுமையான விளைவுகளை தர கூடாது.
இவ்வாறு மஸ்க் தெரிவித்துள்ளார்.
- நிற வெறிக்கு எதிராக போராடிய தலைவர்களில் முக்கியமானவராக திகழ்ந்தார்.
- புற்று நோயால் உயிர் இழந்த ஜோலேசா மண்டேலா ஒரு சிறந்த எழுத்தாளராக திகழ்ந்தார்.
ஜோகன்ஸ்பர்க்:
தென் ஆப்பிரிக்கா நாட்டில் ஜனநாயக முறைப்படி முதல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நெல்சன் மண்டேலா. நிற வெறிக்கு எதிராக போராடிய தலைவர்களில் முக்கியமானவராக திகழ்ந்தார். இவரது பேத்தி ஜோலேகா மண்டேலா (வயது 43).
இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவருக்கு கல்லீரல், நுரையீரல், முதுகுதண்டு போன்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மரணம் அடைந்து விட்டதாக நெல்சன் மண்டேலா அறக்கட்டளை தெரிவித்து உள்ளது. அவரது குடும்பத்தினருக்கு அறக்கட்டளை இரங்கலும் தெரிவித்தது.
புற்று நோயால் உயிர் இழந்த ஜோலேசா மண்டேலா ஒரு சிறந்த எழுத்தாளராக திகழ்ந்தார். தன் வாழ்நாள் முழுவதும் சுகாதாரம் மற்றும் நீதிக்காக உழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தீ விபத்து வேகமாக பரவி வெளிப்பட்ட புகையால் மூச்சு திணறலில் பலர் உயிரிழந்தனர்
- நினெவே மற்றும் குர்திஸ்தான் மருத்துவமனைகளில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
மத்திய கிழக்கு அரபு நாடுகளில் ஒன்றான ஈராக்கின் வடக்கே உள்ளது நினெவே (Nineveh) பிராந்தியம். இங்குள்ள ஹம்தனியா (Hamdaniyah) மாவட்டத்தில், அல்-ஹைதம் கூடம் (al-Haitham Hall) எனும் பெரிய திருமண மண்டபத்தில் நேற்று மாலை ஒரு திருமண விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று முன்னிரவு சுமார் 10:45 மணியளவில் அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் விருந்தில் கலந்து கொள்ள வந்த பெரியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அனைவரும் அலறியடித்து கொண்டு ஓடினர். தீ விபத்தினால் ஏற்பட்ட புகையில் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் வருவதற்குள் தீ மளமளவென பரவியதால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
மூச்சு திணறல், பலமான தீக்காயங்கள் உட்பட்ட காரணங்களால் தற்போது வரை 113 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 150க்கும் மேற்பட்டோருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டு அவர்கள் அனைவரும் நினெவே மற்றும் குர்திஸ்தான் பகுதி மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்னமும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என நினெவே பிராந்திய கவர்னர் நஜிம் அல்-ஜுபோரி தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையில் விருந்து நிகழ்ச்சியின் போது நடைபெற்ற கொண்டாட்டத்தில் சிலர் பட்டாசுகளை கொளுத்தியதாகவும், அதனால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிகிறது. இருந்தாலும், இது தற்போது வரை உறுதிபடுத்தபடவில்லை. தீயணைப்புக்கான உபகரணங்கள் அந்த அரங்கில் முறையானபடி இல்லாததால், தீ பரவுதலை தடுக்க முடியாமல் போனதாக தெரிகிறது.
இதையடுத்து, அந்த திருமண அரங்கத்தின் உரிமையாளரை கைது செய்து விசாரிக்கும் நடவடிக்கையில் காவல் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மகிழ்ச்சியான திருமண கொண்டாட்டம் விபத்தில் முடிந்தது, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- வவ்வால்கள் மூலம் இந்த பெருந்தொற்று வேகமாக பரவும் என தொற்று நோய் நிபுணர் எச்சரித்து உள்ளார்.
- ஆய்வில் 40 வகையான கொரோனா வைரஸ் மறு உருவாக்கம் பெற்று இருப்பதாக கண்டறிப்பட்டு உள்ளது.
பீஜிங்:
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் உருவான கொரோனா என்ற கொடூர நோய் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்கள் உயிரை பறித்தது. தொடர்ந்து அந்த கொரோனா அரக்கன் உருமாறி பொதுமக்களை பாடாய் படுத்தியது.
இந்த தொற்றில் இருந்து உலக நாடுகள் கொஞ்சம், கொஞ்சமாக மீண்டு தற்போது தான் சகஜ நிலைக்கு திரும்பி உள்ளது. இருந்த போதிலும் கொரோனா முழுமையாக நம்மை விட்டு அகலவில்லை என்று நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்த சூழ்நிலையில் சீனாவை அச்சுறுத்தும் வகையில் கொரோனா போன்ற கொடூர தொற்று நோய் மீண்டும் பரவ வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டின் தொற்று நோய் நிபுணர் ஹி சென்க்ஸ் தெரிவித்துள்ளார். வவ்வால்கள் மூலம் இந்த பெருந்தொற்று வேகமாக பரவும் என அவர் எச்சரித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தலைமையிலான தொற்று நோய் நிபுணர்கள் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் 40 வகையான கொரோனா வைரஸ் மறு உருவாக்கம் பெற்று இருப்பதாகவும், இதில் பாதிக்கு மேல் மிகவும் ஆபத்தானது எனவும் கண்டறிப்பட்டு உள்ளது.
இந்த தொற்றில் 3 வகை மீண்டும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்றும் கொரோனா போன்ற தொற்று பரவும் வாய்ப்புகள் அதிகம் என்றும் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
ஆனால் சில தொற்று நோய் நிபுணர்கள் இதை மறுத்து உள்ளனர். 3 ஆண்டுகளுக்கு பிறகு மறுபடியும் வைரஸ் பரவும் என்பதை ஏற்க முடியாது. பொதுமக்களின் பாதுகாப்பு உணர்வே எதிர்காலத்தில் இது போன்ற வைரஸ் பரவலை தடுத்து விடும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
- சீனாவின் எச்சரிக்கையை மீறி ஆஸ்திரேலியாவில் இருந்து 6 எம்.பி.க்கள் கொண்ட ஒரு குழுவினர் தைவான் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
- கொரோனா வைரஸ் தோற்றம் குறித்த சர்ச்சையால் சீனா-ஆஸ்திரேலியா உறவில் ஏற்கனவே விரிசல் ஏற்பட்டது.
தைபே நகரம்:
சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் கடந்த 1949-ம் ஆண்டு தனிநாடாக பிரிந்தது. எனினும் சமீபகாலமாக தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதி என சீனா கருதுகின்றது. மேலும் தைவானுடன் மற்ற நாடுகள் தூதரக உறவு வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தநிலையில் சீனாவின் எச்சரிக்கையை மீறி ஆஸ்திரேலியாவில் இருந்து 6 எம்.பி.க்கள் கொண்ட ஒரு குழுவினர் தைவான் பயணம் மேற்கொண்டுள்ளனர். தைவானுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, எரிசக்தி மற்றும் செமி-கண்டக்டர் துறை போன்றவை குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த சீனா, ஆஸ்திரேலியாவின் பார்லி போன்ற ஏற்றுமதி பொருட்களுக்கு கூடுதலாக வரி விதித்துள்ளது.
கொரோனா வைரஸ் தோற்றம் குறித்த சர்ச்சையால் சீனா-ஆஸ்திரேலியா உறவில் ஏற்கனவே விரிசல் ஏற்பட்டது. அதனை மறுசீரமைக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது எம்.பி.க்களின் இந்த பயணத்தால் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
- அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தை மீறியதாக அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.
- விசாரணை செய்வதற்காக இவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது தூதரகம் அனுப்பிய ரகசிய தகவலை அமெரிக்காவுக்கு அனுப்பியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தை மீறியதாக அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இதற்கிடையே தோஷகானா வழக்கில் கடந்த மாதம் (ஆகஸ்டு) மாதம் 5-ந் தேதி இம்ரான்கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதேசமயம் இந்த அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தை மீறிய வழக்கில் இவரை விசாரணை செய்வதற்காக இவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது 3-வது முறையாக இந்த 14 நாள் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த மாதம் (அக்டோபர்) மாதம் 10-ந் தேதி வரை அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்படுவார். இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் வெளியுறவு மந்திரி முகமது குரேஷிக்கும் நீதிமன்ற காவலை நீட்டித்து சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.
- புறநகர் பகுதியில் வெட்டவெளி விருந்தில் ஜேலி கலந்து கொண்டார்
- காவல்துறை அதிகாரி நெருங்கி வந்ததும் ஜேலி துப்பாக்கியை எடுத்தார்
அமெரிக்காவின் மத்தியமேற்கு மாநிலம் கன்சாஸ் (Kansas). இதன் தலைநகரம் டொபேகா (Topeka).
இங்குள்ள க்ளவுட் கவுன்டி பிராந்தியத்தில் வசித்து வந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த ஜேலி சில்ஸன் (Jaylee Chillson) எனும் 14 வயது சிறுமி, சில தினங்களுக்கு முன் வீட்டை விட்டு ஓடி விட்டாள். இத்தகவல் க்ளவுட் கவுன்டி காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.
ஜேலி தனது நண்பர்களுடன் ஊருக்கு வெளியே உள்ள அரோரா எனும் புறநகர் பகுதியில் ஒரு வெட்டவெளி விருந்தில் கலந்து கொண்டிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவளை வீட்டிற்கு வருமாறு அழைத்தனர். அப்போது ஒரு காவல்துறை அதிகாரி அவள் தப்பி செல்லாதவாறு இருக்க அவளை பிடித்து கொள்ள முயன்றார்.
ஆனால், அதிகாரிகள் என்ன சொல்லியும் கேட்க மறுத்த அச்சிறுமி, ஒரு கட்டத்தில் திடீரென ஒரு துப்பாக்கியை எடுத்து தன்னை தானே சுட்டு கொண்டார். அதிர்ச்சியடைந்த அங்கிருந்த காவல்துறை அதிகாரியும், தீயணைப்பு அதிகாரிகளும் அச்சிறுமிக்கு உயிர்காக்கும் முதலுதவிகளை செய்தனர். ஆனால் இந்த முயற்சிகள் பலனளிக்காததால் அச்சிறுமி உயிரிழந்தார்.
விருந்துக்கு வந்திருந்த பலரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
தனது மகளை பறி கொடுத்த ஜேலியின் தந்தை உருக்கமாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
- நகோர்னோ-கராபாக் பிராந்தியத்திற்காக இரு நாடுகளும் சண்டையிட்டு வருகின்றன
- 2020ல் 6 வாரங்கள் நடைபெற்ற போரில் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர்
ஐரோப்பாவிலிருந்து ஆசிய கண்டம் வரை ஐக்கிய சோவியத் சோஷலிஸ குடியரசு எனும் பெயரில் ஒருங்கிணைந்த பல நாடுகளுடன் 1922ல் இருந்த வந்த கூட்டமைப்பு, 1991ல் 15 நாடுகளாக உடைந்தது.
இவற்றில் அஜர்பைஜான் மற்றும் அர்மேனியா ஆகிய இரு நாடுகளுக்கிடையே கருங்கடலுக்கும் கேஸ்பியன் கடலுக்குமிடையே உள்ள தெற்கு காகஸஸ் மலைப்பகுதியையொட்டி உள்ள நகோர்னோ-கராபாக் பிராந்தியத்திற்கு உரிமை கொண்டாடி போர் நடைபெற்று வருகிறது.
2020ல் 6 வாரங்களாக நடைபெற்ற மிக பெரிய போரில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் இப்பகுதியில் வசித்து வந்த 1 லட்சத்து 20 ஆயிரம் மக்களில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இப்பகுதியிலிருந்து அர்மேனியாவிற்குள் அகதிகளாக நுழைந்திருக்கின்றனர். கடந்த வாரம், இப்பகுதியை அஜர்பைஜான் கைப்பற்றியதிலிருந்து உயிருக்கு ஆபத்து ஏற்படும் அச்சத்தில் தங்கள் உடைமைகளை விட்டு விட்டு அர்மேனியாவிற்குள் நுழைந்திருக்கிறார்கள். அப்பகுதியில் காலங்காலமாக வசித்து வந்த அர்மேனியர்களை அஜர்பைஜான்வாசிகளாக மாற்ற போவதாக அஜர்பைஜான் எச்சரித்திருந்தது.
இவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்து தர அர்மேனியா முன் வந்திருக்கிறது.
- 13 பேர் சம்பவ இடத்திலும், ஏழு பேர் சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்துள்ளனர்.
- 290க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அஜர்பைஜனில் உள்ள ஸ்டெபனகெர்ட் பகுதி வெளியே எரிவாயு நிலையம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று பிற்பகுதியில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர். இதில், சம்பவ இடத்தில் இருந்து 13 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், ஏழு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், 290க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் பிராந்தியத்தின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மூன்று தசாப்த கால பிரிவினைவாத ஆட்சிக்குப் பின்னர் அஜர்பைஜானின் பிராந்தியத்தை முழுமையாக மீட்பதற்காக கடந்த வாரம் இராணுவம் நடவடிக்கை மேற்கொண்டது. இதன் பிறகு, நாகோர்னோ-கராபாக்கின் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் ஆர்மீனியாவிற்கு இப்பகுதியை விட்டு வெளியேறினர்.
அப்போது இந்த வெடி விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
- சீனா வைத்திருக்கும் அதி நவீன உளவு கப்பல்களில் ஒன்றான ஷீ யான்-6 என்ற கப்பல் கடந்த வாரம் இந்திய பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்தது.
- கப்பல் மூலம் தென் இந்தியாவின் பல பகுதிகளை இலங்கையால் மிக எளிதாக உளவு பார்க்க முடியும் அபாயம் இருந்தது.
இந்தியாவுக்கு பல்வேறு வகைகளிலும் சவாலாக திகழும் சீனா தனது அதிநவீன படைகள் மூலம் இந்தியாவை உளவு பார்க்கும் பணிகளை அடிக்கடி மேற்கொள்கிறது.
குறிப்பாக இந்திய பெருங்கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதில் சீனா தீவிரமாக உள்ளது. இதற்காக அடிக்கடி தனது உளவு கப்பல்களை இந்திய பெருங்கடல் பகுதிக்கு அனுப்பி வருகிறது.
கடந்த ஆண்டு இலங்கையின் உளவு கப்பலான இவான்வாங்-5 என்ற அதிநவீன கப்பல் இலங்கை துறைமுகத்துக்கு வந்தது. அந்த கப்பலில் உள்ள அதிநவீன கருவிகள் மூலம் அது தென் இந்தியாவின் பல பகுதிகளை உளவு பார்த்ததாக கருதப்பட்டது.
சீன கப்பலை அனுமதித்தற்காக இலங்கையிடம் இந்தியா தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்து இருந்தது. இந்த நிலையில் இலங்கைக்கு சீனாவின் மற்றொரு ஆராய்ச்சி உளவு கப்பல் சமீபத்தில் புறப்பட்டு வந்தது.
சீனா வைத்திருக்கும் அதி நவீன உளவு கப்பல்களில் ஒன்றான ஷீ யான்-6 என்ற அந்த கப்பல் கடந்த வாரம் இந்திய பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்தது. அடுத்த மாதம் அந்த கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வர திட்டமிட்டு இருந்தது.
அந்த கப்பல் மூலம் தென் இந்தியாவின் பல பகுதிகளை இலங்கையால் மிக எளிதாக உளவு பார்க்க முடியும் அபாயம் இருந்தது. குறிப்பாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள முக்கிய ராணுவ நிலைகளை அந்த கப்பலால் மிக எளிதாக படம் பிடித்து ஆய்வு செய்து விட முடியும் என்ற நிலை உள்ளது.
தமிழகத்தின் அருகே வரும் இந்த அபாயத்தை உணர்ந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இலங்கையுடன் தொடர்பு கொண்டு பேசியது. இதையடுத்து சீன உளவு கப்பல் வருகை பற்றி இலங்கை ஆய்வு செய்தது.
இந்த நிலையில் சீன கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று இலங்கை தற்போது அறிவித்துள்ளது. இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலிசப்ரி இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.
இந்தியாவின் பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியமானது. எனவே சீன கப்பலுக்கு அனுமதி வழங்கவில்லை. எங்கள் கடல் பகுதி அமைதியான சூழ்நிலையில் இருக்க வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
இலங்கை துறைமுகத்துக்கு வர திட்டமிட்டு இருந்த சீன உளவு கப்பல் இலங்கையின் தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டு இருந்தது. தற்போது அந்த ஆராய்ச்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி அலிசப்ரி சமீபத்தில் ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்க சென்று இருந்தார். அப்போது அமெரிக்க மந்திரியை அவர் சந்தித்து பேசினார். அந்த சமயத்தில் சீன உளவு கப்பல் வருகைக்கு அதிருப்தி தெரிவித்து அமெரிக்காவும் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.






