என் மலர்
உலகம்
- சீனா வைத்திருக்கும் அதி நவீன உளவு கப்பல்களில் ஒன்றான ஷீ யான்-6 என்ற கப்பல் கடந்த வாரம் இந்திய பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்தது.
- கப்பல் மூலம் தென் இந்தியாவின் பல பகுதிகளை இலங்கையால் மிக எளிதாக உளவு பார்க்க முடியும் அபாயம் இருந்தது.
இந்தியாவுக்கு பல்வேறு வகைகளிலும் சவாலாக திகழும் சீனா தனது அதிநவீன படைகள் மூலம் இந்தியாவை உளவு பார்க்கும் பணிகளை அடிக்கடி மேற்கொள்கிறது.
குறிப்பாக இந்திய பெருங்கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதில் சீனா தீவிரமாக உள்ளது. இதற்காக அடிக்கடி தனது உளவு கப்பல்களை இந்திய பெருங்கடல் பகுதிக்கு அனுப்பி வருகிறது.
கடந்த ஆண்டு இலங்கையின் உளவு கப்பலான இவான்வாங்-5 என்ற அதிநவீன கப்பல் இலங்கை துறைமுகத்துக்கு வந்தது. அந்த கப்பலில் உள்ள அதிநவீன கருவிகள் மூலம் அது தென் இந்தியாவின் பல பகுதிகளை உளவு பார்த்ததாக கருதப்பட்டது.
சீன கப்பலை அனுமதித்தற்காக இலங்கையிடம் இந்தியா தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்து இருந்தது. இந்த நிலையில் இலங்கைக்கு சீனாவின் மற்றொரு ஆராய்ச்சி உளவு கப்பல் சமீபத்தில் புறப்பட்டு வந்தது.
சீனா வைத்திருக்கும் அதி நவீன உளவு கப்பல்களில் ஒன்றான ஷீ யான்-6 என்ற அந்த கப்பல் கடந்த வாரம் இந்திய பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்தது. அடுத்த மாதம் அந்த கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வர திட்டமிட்டு இருந்தது.
அந்த கப்பல் மூலம் தென் இந்தியாவின் பல பகுதிகளை இலங்கையால் மிக எளிதாக உளவு பார்க்க முடியும் அபாயம் இருந்தது. குறிப்பாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள முக்கிய ராணுவ நிலைகளை அந்த கப்பலால் மிக எளிதாக படம் பிடித்து ஆய்வு செய்து விட முடியும் என்ற நிலை உள்ளது.
தமிழகத்தின் அருகே வரும் இந்த அபாயத்தை உணர்ந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இலங்கையுடன் தொடர்பு கொண்டு பேசியது. இதையடுத்து சீன உளவு கப்பல் வருகை பற்றி இலங்கை ஆய்வு செய்தது.
இந்த நிலையில் சீன கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று இலங்கை தற்போது அறிவித்துள்ளது. இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலிசப்ரி இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.
இந்தியாவின் பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியமானது. எனவே சீன கப்பலுக்கு அனுமதி வழங்கவில்லை. எங்கள் கடல் பகுதி அமைதியான சூழ்நிலையில் இருக்க வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
இலங்கை துறைமுகத்துக்கு வர திட்டமிட்டு இருந்த சீன உளவு கப்பல் இலங்கையின் தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டு இருந்தது. தற்போது அந்த ஆராய்ச்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி அலிசப்ரி சமீபத்தில் ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்க சென்று இருந்தார். அப்போது அமெரிக்க மந்திரியை அவர் சந்தித்து பேசினார். அந்த சமயத்தில் சீன உளவு கப்பல் வருகைக்கு அதிருப்தி தெரிவித்து அமெரிக்காவும் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
- கப்பலில் இருந்து 10-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை உக்ரைன் படை வீசியது.
- விக்டர் சோகோலோவ் மற்றும் 33 அதிகாரிகள் கொல்லப்பட்டதாக உக்ரைன் படை தெரிவித்து உள்ளது.
கிவ்:
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் தொடங்கி 1½ ஆண்டுகளை தாண்டிவிட்டது. ஆனாலும் இன்னும் இந்த சண்டை முடிவுக்கு வந்தபாடில்லை. உக்ரைனுக்கு அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகள் செய்து வருவதால் ரஷிய படையை எதிர்த்து உக்ரைன் வீரர்கள் ஆக்ரோஷத்துடன் போரிட்டு வருகின்றனர். உக்ரைனின் சில நகரங்களை ரஷியபடையினர் கைப்பற்றி உள்ளனர்.
அவற்றை உக்ரைன் வீரர்கள் பேராடி மீட்டு வருகின்றனர். ரஷியாவின் ராணுவ நிலைகளை குறிவைத்து உக்ரைன் வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியா பகுதியில் உள்ள வெடிமருந்து குடோனில் ஆளில்லா விமானம் (டிரோன்) மூலம் வெடி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் பலத்த சேதம் ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இம்மாத தொடக்கத்தில் கிரீமியா தலைநகர் செவஸ்டோ போல் துறைமுகத்தில் உள்ள கருங்கடல் ரஷியா கடற்படை தலைமையகத்தில் உக்ரைன் ஏவுகணை வீசி தாக்குதலை நடத்தியது. கப்பலில் இருந்து 10-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை உக்ரைன் படை வீசியது.
இந்த தாக்குதலில் கருங்கடல் கடற்படை தளபதியும், ரஷ்யாவின் மூத்த கடற்படை அதிகாரிகளுள் ஒருவரான விக்டர் சோகோலோவ் மற்றும் 33 அதிகாரிகள் கொல்லப்பட்டதாக உக்ரைன் படை தெரிவித்து உள்ளது. ஆனால் இந்த தகவலை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இதுவரை உறுதிபடுத்தவில்லை. இதனால் இந்த ஏவுகணை தாக்குதலில் கடற்படை தளபதி இறந்தாரா? என்பதில் மர்மம் நீடித்து வருகிறது.
தாக்குதல் நடத்தப்பட்ட கிரீமியா பகுதியை உக்ரைனிடம் இருந்து ரஷியா கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
- அதிபர் பதவியில் இருந்து முகமது பாசுவை அகற்றி விட்டு நைஜரில் ராணுவ ஆட்சி வந்தது.
- அறிவிப்புக்கு நைஜர் ராணுவ ஆட்சியாளர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
நைஜர்:
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜர் இதற்கு முன்பு பிரான்ஸ் கட்டுப்பாட்டில் இருந்தது. கடந்த 1960-ம் ஆண்டுக்கு பிறகு நைஜர் சுதந்திர நாடாக உருவெடுத்தது.
இருந்தபோதிலும் நைஜர் நாட்டில் பிரான்ஸ் தனது ஆதிக்கத்தை காட்டி வந்தது. தனது நாட்டின் ராணுவ வீரர்கள் 1500 பேரை பிரான்ஸ் நைஜரில் நிலை நிறுத்தி இருந்தது. பிரான்சுக்கு ஆதரவாக அந்நாட்டு அதிபர் முகமது பாசும் இருந்து வந்தார். இந்நிலையில் அவருக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் திரும்பியது. அதிபர் பதவியில் இருந்து முகமது பாசுவை அகற்றி விட்டு நைஜரில் ராணுவ ஆட்சி வந்தது.
இந்நிலையில் அந்த நாட்டில் நிறுத்தப்பட்டு இருந்த 1500 வீரர்கள் வெளியேற்றப்படுவார்கள் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்து உள்ளார். அவரின் இந்த அறிவிப்புக்கு நைஜர் ராணுவ ஆட்சியாளர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
- கனடாவில் இந்தியாவை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
- இரு நாட்டுக்கும் இடையே பகை உருவாகி இருப்பதால் இந்தியாவில் உள்ள அவர்களது பெற்றோர்கள் கவலை அடைந்து இருக்கிறார்கள்.
கனடா நாட்டில் கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜார் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் இந்தியா- கனடா நாடுகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்தி உள்ளது.
ஹர்தீப் சிங் நிஜார் கொலையில் இந்தியாவின் ஏஜெண்டுகள் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சுமத்தினார். இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்தது.
இந்த சம்பவத்தையொட்டி கனடாவில் உள்ள இந்திய தூதரக மூத்த அதிகாரி ஒருவரை அந்நாடு வெளியேற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அரசும் டெல்லியில் உள்ள கனடா தூதரக அதிகாரியை வெளியேறுமாறு உத்தரவிட்டது. இரு நாடுகள் இடையே இந்த நடவடிக்கை மேலும் மோதலை அதிகரித்து வருகிறது.
கனடாவில் ஏராளமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இங்குள்ள சிறுபான்மை இந்துக்களை கனடாவை விட்டு வெளியேறும் படி காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் வெளிப்படையாக மிரட்டல் விடுத்தனர்.
மேலும் கனடா டொராண்டோ மற்றும் வான்கூவர் நகரில் உள்ள இந்திய தூதரகம் முன்பும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலிஸ்தான் கொடியுடன் போராட்டம் நடத்திய அவர்கள் இந்தியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். அங்குள்ள இந்து கோவில்களும் சேதப்படுத்தப்பட்டன. இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
கனடாவில் இந்தியாவை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இரு நாட்டுக்கும் இடையே பகை உருவாகி இருப்பதால் இந்தியாவில் உள்ள அவர்களது பெற்றோர்கள் கவலை அடைந்து இருக்கிறார்கள். அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவிலும் பல்வேறு இடங்களில் கனடா நாட்டை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இங்கு பாதுகாப்பாக இருந்து வந்தாலும் கனடா அரசு அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் வசிக்கும் கனடா நாட்டினர் விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறு கனடா அரசு சமூகவலைதளம் மூலம் அறிவுறுத்தி இருக்கிறது.
- வெள்ளத்தில் சிக்கி 11 ஆயிரம் பேர் வரை பலியாகிவிட்டனர்.
- அலட்சியத்தால் இந்த சம்பவம் நடந்ததாக கூறி 8 பேரும் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு சட்ட மந்திரி தெரிவித்துள்ளார்.
டொர்னா:
லிபியா நாட்டில் சமீபத்தில் புயல் , மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. டெர்னாவில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு இருந்த 2 அணைகள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இந்த வெள்ளத்தில் சிக்கி 11 ஆயிரம் பேர் வரை பலியாகி விட்டனர்.
இந்த நிலையில் இந்த 2 அணைகள் உடைந்தது தொடர்பாக நீர் வளத்துறையை சேர்ந்த 8 அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் 7 பேர் முன்னாள் அதிகாரிகள். ஒருவர் தற்போது பணியாற்றி வருகிறார். இவர்களின் அலட்சியத்தால் இந்த சம்பவம் நடந்ததாக கூறி 8 பேரும் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு சட்ட மந்திரி தெரிவித்துள்ளார்.
- கடந்த மாதம் 5-ந்தேதி அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
- வழக்கு விசாரணை இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 70) மீது ஊழல் குற்றச்சாட்டு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் தோஷகானா ஊழல் வழக்கில் கடந்த மாதம் 5-ந்தேதி அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனவே பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டாக் சிறையில் அவர் சிறைதண்டனை அனுபவித்து வருகிறார்.
இதனையடுத்து அவரது உடல்நலம், சமூக மற்றும் அரசியல் நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஏ-வகுப்பு வசதிகள் கொண்ட சிறைக்கு மாற்றும்படி இம்ரான்கான் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதுகுறித்த வழக்கு விசாரணை இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் அவரை ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைக்கு மாற்றுவதற்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- ரஷியா மேற்கொண்டு வரும் கொடுமைகளால், மக்கள் உயிரிழப்பு.
- ரஷிய கொடுமைகள் தொடர்பான ஆதாரங்கள் சேகரிக்கப்பு.
ரஷியா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில், ரஷியா உக்ரைன் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனும் தன் பங்கிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷிய தாக்குதலை எதிர்த்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், உக்ரைனின் சில பகுதிகள் ரஷிய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவ்வாறு ரஷியா கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ரஷியா மேற்கொண்டு வரும் கொடுமைகளால், மக்கள் உயிரிழப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரிவு கண்காணிப்பு அமைப்பு தெரிவித்து இருக்கிறது.
போர் நடைபெற்று வரும் உக்ரைனில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் சார்பில் அமைக்கப்பட்டு இருக்கும் விசாரணை ஆணையத்திற்கு எரிக் மோஸ் தலைமை வகிக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக ரஷிய ஆயுதப்படை மேற்கொண்டு வரும் கொடுமைகள் தொடர்பான ஆதாரங்களை சேகரித்து வருவதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.
சில பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கொடுமைகளால் உயிர்பலி ஏற்படுகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார். எரிக் மோஸ் தலைமையிலான குழு ரஷியா ஆக்கிரமித்த உக்ரைன் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வந்தது. இந்த ஆய்வுகளில் ரஷிய அதிகாரிகளால் நடத்தப்படும் காவல் மையங்களில் கொடுமைப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.
இது பற்றிய குற்றச்சாட்டுகளை ரஷியா முழுமையாக மறுத்து இருக்கிறது. இது தொடர்பாக ஆணையத்தில் பதில் அளிக்க ரஷியாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது. எனினும், ரஷியா தரப்பு அதிகாரி யாரும் ஆணையத்தில் ஆஜராகவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
- 2016ல் நாஸா விண்வெளிக்கு ஓசிரிஸ்-ஆர்ஈஎக்ஸ் விண்கலனை அனுப்பியது
- 2020ல் ஓசிரிஸ் பென்னு குறுங்கோளில் தனது கேப்ஸ்யூலை தரையிறக்கியது
ஆஸ்டிராய்ட் எனப்படும் சூரியனை சுற்றி வரும் குறுங்கோள்களை ஆராய்ச்சி செய்வதில் அமெரிக்காவின் மத்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா (NASA) பல வருடங்களாக ஈடுபட்டு வருகிறது.
2016 செப்டம்பர் மாதம், அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலிருந்து ஓசிரிஸ்-ஆர்ஈஎக்ஸ் (OSIRIS-REx) எனும் விண்கலனை பூமியிலிருந்து 200 மில்லியன் மைல்களுக்கு அப்பால் உள்ள பென்னு எனும் குறுங்கோளை ஆராய்ச்சி செய்ய அமெரிக்காவின் மத்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாஸா அனுப்பியிருந்தது. அந்த குறுங்கோளிலிருந்து ஆராய்ச்சிகளுக்காக மாதிரி படிவங்களை பூமிக்கு கொண்டு வரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பென்னுவின் மேற்பரப்பில் ஆராய்ச்சி செய்ய அந்த விண்கலனிலிருந்து அனுப்பப்பட்ட ஆய்வு சாதனம் (probe) 2020ல் பென்னுவை அடைந்தது. பாறைகள் நிறைந்த அந்த குறுங்கோளின் மேற்பரப்பிலிருந்து 250 கிராம் மண்துகள்களை அந்த சாதனம் எடுத்தது.
இந்நிலையில் ஓசிரிஸ் விண்கலனிலிருந்து கேப்ஸ்யூல் எனப்படும் மிக சிறிய மற்றொரு விண்கலன் மூலம் பென்னுவின் மண்துகள் மாதிரிகள் ஓசிரிஸ்-ஆர்ஈஎக்ஸ் விண்கலனால் பூமியிலிருந்து 1,07,826 உயரத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டது.
அந்த கேப்ஸ்யூல் 6.21 பில்லியன் கிலோமீட்டர் பயணத்தை நேற்று நிறைவு செய்தது. பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து அமெரிக்காவின் உடா மாநிலத்தில் பாலைவனத்தில் வந்திறங்கியது. இதனை நாஸா அதிகாரிகள் பத்திரமாக மீட்டெடுத்தனர். விண்கலனிலிருந்து வெகு வேகமாக பூமியை நோக்கி வந்த கேப்ஸ்யூல், வளிமண்டலத்தை தாண்டி, அதில் இணைக்கப்பட்ட பாராசூட் மூலம் மெதுவாக பூமியை தொட்டது.
"விஞ்ஞானிகளின் சூரிய மண்டல ஆராய்ச்சிக்கு ஒரு புதிய பார்வை கிடைக்க இந்த ஆராய்ச்சி வழி செய்யும்" என நாஸாவின் இந்த முயற்சி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அதன் தலைவர் பில் நெல்சன் தெரிவித்தார்.
- யுரேனியன் வம்சாவளியினர் இந்தியர்கள் போல தோற்றம் கொண்டவர்கள்.
- கால் டாக்சி டிரைவர் இனவெறியுடன் பேசியதை ஜனெல்லா தனது செல்போனில் பதிவு செய்தார்.
சிங்கப்பூர்:
சிங்கப்பூரை சேர்ந்தவர் ஜனெல்லா ஹோடன் (வயது 47) சம்பவத்தன்று இவர் தனது 9 வயது மகளுடன் வெளியில் செல்வதற்காக கால் டாக்சிக்கு முன்பதிவு செய்து இருந்தார்.
அதன்படி கால் டாக்சி நிறுவனத்தில் இருந்து காரும் அனுப்பப்பட்டது. அந்த காரில் ஜனெல்லா ஹோடன் தனது மகளுடன் பயணம் செய்தார். சிறிது தூரம் சென்றதும் மெட்ரோ ரெயில் பணிக்காக சாலையில் தடுப்பு அமைக்கப்பட்டு வாகனங்கள் திருப்பி விடப்பட்டது தெரிய வந்தது.
இதனால் காரை ஓட்டி வந்த டிரைவர் திடீரென ஜனெல்லா ஹோடனை பார்த்து கத்த ஆரம்பித்தார். செல்லும் இடம் குறித்து தவறான தகவல் கொடுத்ததாகவும், இதனால் தவறான வழியில் வந்து விட்டதாகவும் கூறி திட்டினார்.
மேலும் ஜனெல்லா ஹோடனை இந்திய வம்சாவளியினர் என கருதி நீங்கள் இந்தியர்கள், நான் சீனாவை சேர்ந்தவன். நீங்கள் ஒரு முட்டாள், நீங்கள் மிகவும் மோசமானவர்கள் என சத்தம் போட்டு கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜனெல்லா நான் இந்தியாவை சேர்ந்தவர் கிடையாது. சிங்கப்பூரை சேர்ந்த யுரேனியன் வம்சாவளி என்று கூறினார்.
யுரேனியன் வம்சாவளியினர் இந்தியர்கள் போல தோற்றம் கொண்டவர்கள். இதை பார்த்து தான் கால் டாக்சி டிரைவர் இன வெறியுடன் ஆவேசமாக திட்டி தீர்த்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த டிரைவர் ஜனெல்லாவை பார்த்து உங்கள் மகள் 1.35 மீட்டர் உயரம் கொண்டவர் என்றும் கூறினார். அதற்கு அவர் தனது மகளின் உயரம் 1.37 மீட்டர் ஆகும் என்று பதில் கூறினார். சிங்கப்பூரை பொறுத்தவரை பாதுகாப்பு காரணங்களுக்காக அனைத்து வாகனங்களிலும் 1.35 மீட்டர் உயரத்துக்கு குறைவான உயரம் கொண்டவர்களுக்காக பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய இருக்கை அமைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
கால் டாக்கி டிரைவர் இனவெறியுடன் பேசியதை ஜனெல்லா தனது செல்போனில் பதிவு செய்தார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டார். இது சிங்கப்பூரில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக அந்த கால் டாக்சி நிறுவனம் கூறும்போது இன வேறுபாடுகள் குறித்த கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
- கொலையில் இந்திய ஏஜெண்டுகள் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டி உள்ளார்.
- கனடாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஏராளமான இந்திய மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
ஒட்டாவா:
கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப்சிங் நிஜார் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் இந்தியா-கனடா இடையே மோதல் போக்கை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலையில் இந்திய ஏஜெண்டுகள் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டி உள்ளார். இந்த குற்றச்சாட்டை இந்தியா மறுத்து உள்ளது.
இந்த பிரச்சினையில் இரு நாடுகளுக்கு இடையே மோதல் வெடித்துள்ளதால் அங்குள்ள இந்திய வம்சாவளியினர் மத்தியில் பதற்றத்தை உருவாக்கி இருக்கிறது.
கனடாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஏராளமான இந்திய மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இரு நாடுகளுக்கு இடையே பகை அதிகரித்து வருவதால் சில மாணவர்கள் இனியும் கனடாவில் படிப்பை தொடரலாமா? என யோசித்து வருகின்றனர். இது இந்தியாவில் வசித்து வரும் அவர்களது பெற்றோர்களுக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
இது தொடர்பாக பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பல்விந்தர் சிங் கூறும்போது என்னுடைய மகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் கனடாவுக்கு படிக்க சென்றார்.
தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை அவளுக்கு கவலை அளித்து இருக்கிறது. படிப்பில் அவளால் சரிவர கவனம் செலுத்த முடியவில்லை என்று கூறினார்.
மற்றொரு மாணவியின் தந்தை குல்தீப்கவுர் கூறும்போது என்னுடைய 2 மகள்கள் கனடாவில் படித்து வருகிறார்கள்.அவர்களுக்கு ஏதாவது ஆகி விடுமோ? என்ற பதற்றத்தில் உள்ளேன். இந்த பிரச்சினைக்கு இருநாட்டு அரசும் உடனடியாக தீர்வு காண வேண்டும். அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.
பஞ்சாப் மாநில பா.ஜனதா தலைவர் சுனில் ஜக்காரி மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு அனுப்பியுள்ள மனுவில் கனடாவில் படித்து வரும் இந்திய மாணவர்கள் அங்குள்ள இந்திய தூதரகத்தை எளிதில் தொடர்பு கொள்ள உதவி மையம் அமைத்து அதற்கான தொலைபேசி எண்ணையும், வெளிநாடு செல்ல திட்டமிடும் மாணவர்கள் தேவைப்படும் பட்சத்தில் அதிகாரிகளை தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண்ணையும் வெளியிட வேண்டும் என தெரிவித்து உள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ரவ்னீத் சிங் பிட்டு இந்த பிரச்சினையில் பிரதமர் மோடி தலையிட்டு மாணவர்களின் நலனை பாதுகாப்பதில் உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
- ஆஸ்திரேலியாவை சேர்ந்த தீவு மாநிலம் டஸ்மேனியா
- இப்பகுதிக்கு "உலகின் முனை" எனும் மற்றொரு பெயரும் உள்ளது
சுத்தமான காற்று, நல்ல குடிநீர், ஆரோக்கியமான உணவு மற்றும் வசிப்பதற்கு இருப்பிடம் ஆகியவைதான் மனிதனின் முதல் தேவைகள்.
வளங்களை குவித்து முன்னேற துடிப்பதால், பல்வேறு காரணங்களால் மனிதர்கள் இயற்கை வளங்களை அழித்து வருகின்றனர். இதனால் சுத்தமான காற்றை சுவாசிப்பது அரிதாகி வருகிறது. தூய்மையான காற்றுள்ள இடங்களை தேடி அலையும் மனிதர்களுக்கு உலகில் சில இடங்களே மிஞ்சியுள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த தீவு மாநிலம், டஸ்மேனியா. இம்மாநிலத்தின் வடமேற்கு முனையில் உள்ள தீபகற்ப பகுதி, கேப் க்ரிம். இது "உலகின் முனை" (Edge of World) எனவும் அழைக்கப்படுகிறது.
அன்டார்டிகாவிலிருந்து எவ்விதத்திலும் அசுத்தமாகாத வேகமான காற்று, மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் இங்கு வந்து சேருகிறது. உலகின் பிற பகுதிகளிலிருந்து தொலைதூரம் இருப்பதாலும், சுற்றுலா பயணிகள் அறவே செல்லாத இடமென்பதாலும், பனிமலைகள் நிறைந்த தெற்கு கடற்பகுதியின் மீது பயணித்து வரும் காற்று இங்கு வந்தடைவதாலும், இங்குள்ள காற்று உலகிலேயே தூய்மையானது என காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சி விஞ்ஞானி டாக்டர். ஆன் ஸ்டேவர்ட் தெரிவித்துள்ளார்.
இதே போன்று உலகெங்கிலும் உள்ள பிற சுத்தமான காற்று உள்ள தளங்கள், அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள தீவு மாநிலமான ஹவாயில் உள்ள மௌனா லோவா, பசிபிக் கடற்பகுதியின் தென்மேற்கு பகுதியில் உள்ள மக்குவாரி தீவு, அண்டார்டிகாவில் உள்ள கேசி நிலையம் மற்றும் நார்வே நாட்டின் ஸ்வால்பார்ட் பகுதியில் ஸ்பிட்ஸ்பர்கன் தீவில் உள்ள நை-அலெசுண்ட் ஆகியவையாகும்.
சுத்தமான காற்று உடலாரோக்கியத்திற்கு அவசியமானது என்பதால் இத்தீவிலிருந்து கொள்முதல் செய்த காற்று என் விளம்பரம் செய்து "டஸ்மேனிய காற்று" என பெயரிட்டு பாட்டில்களில் இக்காற்றினை அடைத்து வியாபாரம் செய்ய தொடங்கியுள்ளனர்.
- 183 ஏக்கர் நிலப்பரப்பில் இத்திருக்கோவில் கட்டப்பட்டுள்ளது
- திருப்பணியில் அமெரிக்காவிலிருந்து 12,500க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர்
இந்தியாவிலுள்ள போசசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருசோத்தம் சுவாமிநாராயன் சன்ஸ்தா (BAPS) எனும் இந்து மத அமைப்பினால் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு வரும் அந்நாட்டிலேயே மிக பெரிய இந்து கோயில், வரும் அக்டோபர் 8ம் தேதி திறக்கப்பட இருக்கிறது. பிறகு 10 நாட்களுக்கு பிறகு பொது மக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
ஏற்கெனவே இந்த அமைப்பினால் 100 ஏக்கரில் உருவாக்கப்பட்ட கோவில் இந்திய தலைநகர் புது டெல்லியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அட்லாண்டிக் கடற்பகுதியிலிருந்து சுமார் 210 கிலோமீட்டர் தொலைவில் அமெரிக்காவில் உள்ள வடகிழக்கு மாநிலம் நியூ ஜெர்சி. இத்திருக்கோவில் இம்மாநிலத்தின் பிரபலமான டைம்ஸ் சதுக்கத்திலிருந்து தெற்கே 90 கிலோமீட்டர் தொலைவில் கட்டப்பட்டுள்ளது. சுமார் 183 ஏக்கர் நிலபரப்பில் கட்டப்பட்டுள்ள இத்திருக்கோவிலை கட்டி முடிக்க சுமார் 12 ஆண்டு காலம் ஆனது.
இதன் கட்டுமான பணியில் அமெரிக்கா முழுவதிலுமிருந்து 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.
உலக பாரம்பரிய தளமாக ஐ.நா. கூட்டமைப்பின் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்ட தென்மேற்கு ஆசியாவில் உள்ள கம்போடியா நாட்டின் அங்கோர் வாட் திருக்கோவில், 500 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டது. நியூ ஜெர்சியின் ராபின்ஸ்வில்லே டவுன்ஷிப் பகுதியில் உருவாக்கப்பட்டு வரும் இந்த அக்ஷர்தாம் திருக்கோவில், அங்கோர் வாட் கோவிலுக்கு அடுத்தபடியாக இரண்டாவது உலகிலேயே மிக பெரிய இந்து கோவிலாகும்.
அமெரிக்காவில் உள்ள சுவாமிநாரயன் அக்ஷர்தாம் கோவில், பண்டைய இந்திய கலாச்சார முறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோவிலில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள், இந்திய இசைக்கருவிகள் மற்றும் நடன வடிவங்களின் செதுக்கல்கள் ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்து மதத்தில் மூலவர் எனப்படும் முக்கிய தெய்வத்தின் விக்கிரகத்தை தவிர, இத்திருக்கோவிலில் 12 விக்கிரகங்கள் உள்ளன. இக்கோவிலில் 9 சுழல் வடிவ கோபுரங்கள் மற்றும் 9 பிரமிடு வடிவ கோபுரங்கள் உள்ளன. இது பாரம்பரிய கட்டிடக்கலைகளின் சிறப்பம்சங்களை பிரதிபலிக்கும் மிகப்பெரிய நீள்வட்ட குவிமாடத்தையும் (elliptical dome) கொண்டுள்ளது.
சுண்ணாம்பு, கிரானைட், இளஞ்சிவப்பு மணற்கல் மற்றும் பளிங்கு உள்ளிட்ட கிட்டத்தட்ட 20 லட்சம் (2 மில்லியன்) கன அடி கற்கள் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்டது. இந்தியா, துருக்கி, கிரீஸ், இத்தாலி மற்றும் சீனா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து இவை வரவழைக்கப்பட்டன.
இக்கோவிலில், 'பிரம்ம குண்ட்' என அழைக்கப்படும் ஒரு பாரம்பரிய இந்திய படிக்கிணறு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உலகம் முழுவதிலுமிருந்து 300-க்கும் மேற்பட்ட புனித நீர்நிலைகளில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 18 முதல் பொதுமக்களின் தரிசனத்திற்காக இத்திருக்கோயில் திறக்கப்படும். அக்ஷர்தாம் என்றால் இறைவனின் புனிதமான இருப்பிடம் என பொருள்படும்.






